ஞாயிறு, 21 மார்ச், 2021

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம் 

இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்கள். இவர் இல்லுமினாட்டி என்கிற உலகை ஆண்டு கொண்டிருக்கும் ஒரு ரகசியக் குழுவின் உறுப்பினர் என்றும் கிறிஸ்துவ மத மாற்றக் குழுக்களுக்கு உதவி செய்ய இறக்கி விடப்பட்டிருக்கிறார் என்றும் பேச்சு. இதற்கு பதிலாக எதிர் கோஷ்டியினர் இவர் பாஜகவின் பி டீம் என்று கழுவி ஊற்றுகிறார்கள். திரைப்பட நடிகர் கமலஹாசன் குணாதிசயக் கூறுகளை உன்னிப்பாக கவனிக்கும் எவரும் அவற்றில் காணப்படும் முரண்கள் இது போன்ற சந்தேகங்களுக்கு இடம் கொடுப்பதாகவே புரிந்து கொள்வார்கள். அவர் இயல்பு. 'உதயநிதியை சந்தித்தீர்களா?' என்று நிருபர் கேட்டதற்கு இவர் அளித்த பதில் இவரை எல்லோரும் பயங்கரமாக நையாண்டி செய்யக் காரணமாய் அமைந்து விட்டது.

நல்ல நடிகர், நடனம் ஆடுபவர், சினிமாவின் சகல துறைகளையும் நுணுக்கமாக அறிந்தவர், பாடக்  கூடியவர், பல மொழிகளிலும் உரையாடும் ஆற்றல் பெற்றவர், கடும் உழைப்பாளி போன்ற பல திறமைகளுக்கு சொந்தக்காரர். அரசியலில் இறங்கித்தான் பிரபல்யம் தேட வேண்டும் என்கிற தேவை இல்லாதவர் என்னும் போது இவர் எதற்கு அரசியலுக்கு வருகிறார் என்கிற கேள்வி வருகிறது.

மற்றவர்களுக்கு இல்லாத எந்தத் தகுதி கமலஹாசனுக்கு  இருக்கிறது? அவர் சினிமா நடிகர் என்கிற ஒரே தகுதி தான். 'கரிஷ்மா' உள்ள நடிகர் அதுவும். இது இருந்து விட்டால் ஜாதி, மொழி, மத, குழு, இன வாதங்கள் எல்லாம் அடி பட்டுப் போகின்றன. இது தமிழ் நாட்டின் பிரத்யேக நிலை. இதன் உளவியல் காரணங்களை நாம் மன்னன் மீதுள்ள பிரேமையால் தன் தலையை வெட்டி பலி பீடத்தில் வைக்கும் தொல்குடி இளைஞனின் மரபில் தான் தேட வேண்டும்.

 பாடுவதற்கு இரவல் குரல், ஆடுவதற்கு டான்ஸ் மாஸ்டரின் பயிற்சி, சண்டை போட ஸ்டண்ட் மாஸ்டரின் பயிற்சி, தவிர சினிமாவுக்குள் பறந்து பறந்து அடிப்பது போன்ற தந்திரங்கள் இவை மூலம் ஒரு சூப்பர் மனிதனை சினிமா ஸ்ருஷ்டிக்கிறது. இதை வைத்து இவர்கள் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாது மக்களின் வாழ்க்கையிலும் அரசிலும் கோலோச்ச முயலுகிறார்கள். காரணம் நாளாக நாளாக சினிமா தன்னைப்  பற்றி கட்டமைத்திருக்கிற பிம்பம் உண்மை என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள். இப்படிப் பார்க்கும் போது இவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று தான் தோன்றுகிறது. 

இதையும் மீறி கமலஹாசன் அரசியலுக்கு வருவதற்கான ஒரு முக்கியமான காரணம் ஒன்று உண்டு. இவர் திறமைகளை விட்டு விடுவோம். வீட்டில் கடைசியாகப் பிறந்த இவர் உண்மையில் அன்னையின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு வாயில் விர ல் சூப்பிக் கொண்டு எப்போதும் கவனிப்பு வேண்டி நிற்கும் சவலைப் பிள்ளை. வயது அறுபதைக் கடந்த பின்னும் இன்னமும் பெண் துணையை இவர் இன்றளவும்  நாடி வருவது இதற்காகத் தான் என்று தோன்றுகிறது. இவர் தன்னைப் பெரியாரின் சீடர் என்று சொல்லிக் கொள்வதும் இந்து மத இழிவுப் பேச்சுக்களை உதிர்த்து வருவதும் இதன் பாற்பட்டே என்று தோன்றுகிறது. இது போன்ற ஒரு கவனிப்பை அரசியலில் காண இவர் விழைகிறார் என்று தோன்றுகிறது.

இவரிடம் மேற்கூறிய விஷயங்கள் தவிர இன்னம் சில நல்ல விஷயங்களும் உண்டு. இவர் ஒழுங்காக வருமான வரி கட்டுகிறவர் என்கிறார்கள். இறந்த பிறகு உடலை மருத்துவ மனைக்கு தானம் செய்யப் பதிவு செய்திருக்கிறார். தேர்தல் அறிக்கையில் கூடிய மட்டும் தேசிய நிலைப் பாட்டைக் கொண்டு வரைந்திருக்கிறார்.

இவரை நாம் ஏன் நிராகரிக்க வேண்டும்?

மாநில முதல்வரை சாதாரண மனிதன் சந்திக்க முடியாத நிலை நிலவும். மாட்சிமை இல்லாத அதிகார மையங்கள்  கோலோச்சிக் கொண்டிருக்கும். கடைக் கோடி மனிதனின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது.

இப்படிப் பார்க்கும் போது மக்கள் நீதி மய்யம் நம் தேர்தல் கவுண்ட் டவுனில் ஒன்பதாம் இடத்தில் இருக்கிறது.


பின் குறிப்பு: பழ.கருப்பையாவைக் கூட சேர்த்துக் கொண்டிருக்கிறார். 'தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீர இடும்பை தரும்' என்கிற குறள் நினைவுக்கு வருகிறது. வேலியில்  போகிற ஓணானை மடியில் விட்டுக் கொண்டு பின் 'குத்துதே குடையுதே' என்று கத்திப் புண்ணியமில்லை.


சனி, 20 மார்ச், 2021

வாய்ப்பில்லை ராஜா!

 

தேர்தலுக்குப் பதினைந்து நாட்கள் இருக்கிற நிலையில் கட்சிகள் கவுண்ட் டௌனை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் நாம் தமிழர் கட்சி. 

இந்தக் கட்சி சீமான் என்கிற ஒற்றைப் படைத் தலைமையை நம்பி உருவாக்கப் பட்ட இயக்கம். சினிமா, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் துதி, தமிழ் தேசியம், கிட்டத்தட்ட காந்தியத்தைக் காப்பி அடிக்கும் அரைகுறை பொருளாதார அறிவு, வெகு ஜன மந்தை மனப்பான்மையை கவர்ந்து எடுக்கும் விதமான வெற்று கோஷங்கள், இந்திய இறையாண்மைக்கு வெற்று சவால்கள் விடுத்துக் கொண்டிருப்பது இவை போன்ற கோளாறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஹிட்லரின் மெய்ன் காம்ப் புத்தகத்தைப் படிக்கும் எவரும் சீமான் ஹிட்லரின் வெகு ஜனத்தைக் கவர்ந்து இழுக்கும் ஹிட்லரின்  உத்திகளைக் கூசாமல் பின் பற்றுகிறார் என்று எளிதாகச் சொல்ல முடியும்.

இவரின் நல்ல விஷயங்கள் என்ன?

1. மிகவும் கவர்ச்சிகரமான ஆக்ரோஷமான பேச்சாளர். இவர் பேச்சைக் கேட்கும் எவரும் இவரை விரும்பாமல் இருக்க முடியாது. என்ன  அபத்தமாகப் பேசினாலும் அதை வசீகரமாக மாற்றுகிற உடல் மொழி.

2. ஊழல் குற்றச்சாட்டு கிடையாது. ஏன் என்றால் இவர் ஆட்சியில் இல்லை.

3. 234 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் போட்டி இடும் அசாத்தியத் துணிச்சல்.

4. தேர்தல் போட்டியில் உண்மையாகப் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்தது. எந்த அரசியல் கட்சியும் செய்யத் துணியாதது இது.


இவரை நாம் நிராகரிப்பதற்கான காரணங்கள்:


1. வெளிநாட்டைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆதரவாளர் என்று சொல்லிக் கொள்கிறார். பிரபாகரன் கருத்து வேறுபாடுகளை சமாளிக்கக்  கையாண்ட ஒரே வழி தீர்த்துக் கட்டுவது. ராஜீவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தங்கத்  தாம்பாளத்தில் வைத்து நீட்டினார். அதை எட்டி உதைத்து ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தனர் புலிகள். அவர்களை போற்றுகிற சீமானை நாம் ஆதரிக்க முடியாது.

2. மத்திய மாநில அரசுகளை, இந்திய இறையாண்மையை வெறுப்பது. இது எந்த அளவுக்கு என்றால் 'தடுப்பூசி முதலில் மோடியும் எடப்பாடியும் போட்டுக் கொள்ளட்டும்; பின் நான் போட்டுக் கொள்கிறேன்' என்பது. இப்போது இருவரும் போட்டுக் கொண்டு விட்டார்கள். இவர் என்ன செய்யப் போகிறார்?

3. வன்முறைப் பேச்சு. 'வாழை மட்டையை வைத்து அடிப்பேன்; திருக்கை வாலை  வைத்து அடிப்பேன்' என்கிறார். இவர் ஆட்சிக்கு வந்தால் அரசு நடக்குமா கசாப்புக் கடை நடக்குமா?

4. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது; நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக் கொள்வது. ஈவேரா, நாத்திகம், இந்து மதக் கடவுள்கள், நம்பிக்கைகள், ஊழல் இவை எல்லாவற்றையும்  பற்றி வெவ்வேறான கருத்துக்கள். முரண் பேச்சுக்கள்.

5. ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசிக்கொண்டு உட்கட்சி சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துவது. அவர் கட்சியில் சமீபத்தில் நடந்த ராஜிநாமாக்களை உற்று கவனிக்கும் எவரும் இதை உணர்ந்து கொள்ள முடியும்.

6. தமிழன் தான் ஆள  வேண்டும் என்கிறார். தமிழன் யார் என்பதற்கான வரையறையை யார் வைத்திருக்கிறார்கள்? தமிழ் சரித்திரத்தில் பேரரசுகளை நிறுவ அரசர்கள் கொண்ட மண  உறவுகளில் சுத்த தமிழ் இனம் என்பது என்றோ அழிந்து விட்டது. அப்படிப் பார்க்கும் போது கடை ஏழு வள்ளல்கள் காலம் மட்டுமே தமிழர் காலம் என்று நாம் கொண்டாட முடியும்.

7. இந்தியக் கலப்புப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ளாது வேளாண்மை, கல்வி, மருத்துவம் போன்றவை பற்றி வெற்றுத் திட்டங்களை சாத்தியமா என்று யோசிக்காமல் அடித்து விடுவது.


மேற்கூறியவற்றால் நாம் இவரை நிராகரிக்க வேண்டி இருக்கிறது. இவருக்கு இந்தத் தேர்தலில் பெரிய வெற்றி வாய்ப்பு இல்லை தான். ஆனால் இவருக்கு கிராமப்புற  இளைஞர்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவு கவலை அளிக்கக் கூடியது.


இந்த விதத்தில் பார்க்கும் போது இவர் நம் கவுண்ட் டவுனில் பத்தாம் இடத்தில் இருக்கிறார்.



புதன், 28 அக்டோபர், 2020

மதுரா விஜயம்

மதுரா விஜயம் வெளியே “ஜெய விஜயீ பவ!” என்கிற கோஷம் விண்ணைப் பிளந்தது. கங்காதேவிக்கு ஒரு ஆச்சர்யமும் எதிர்பார்ப்பும் இல்லை. படை வீட்டில் அமர்ந்து கொண்டு தான் சற்று முன் பூஜை செய்திருந்த பவானி அன்னையின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சங்கம குலகுருவான கிரியா சக்திப் பண்டிதர் வயது முதிர்ந்த பிராயத்தில் அவளுக்கு அளித்த பிரதிமை அது. நல்ல சிற்பியின் கை வேலைப்பாடு அந்தச் சிலையில் மிளிர்ந்தது. அமர்ந்த நிலையில் இருந்த அந்த ஐம்பொன்னால் ஆன சிலை தவழ்ந்த புன்முறுவலுடன் திருத்தமாக அமைக்கப்பட்டிருந்தது. கையில் வில்லும் பாசங்குசமும் அபய ஹஸ்தமும் கொண்டிருந்த அருமையான சிலை. கிரியா சக்திப் பண்டிதர் குருநாதர் விஸ்வநாதனிடம் சொல்லி அனுப்பினாராம்: “பிராண பிரதிஷ்டை செய்து விட்டேன். என் யோக சக்தி எல்லாம் இதில் இறக்க விட்டேன். வீட்டுக்கு விலக்கான நேரம் தவிர மற்ற காலங்களில் தவறாமல் பூஜை செய்யச் சொல்லு. கங்கா போகின்ற இடங்கள் எல்லாம் ஜயமாகவே இருக்கும். கங்காவின் பணி இன்னும் நிறைய வருடங்கள் இருக்கின்றன. எல்லாம் நல்லபடியாக முடியும்” என்று வாழ்த்தியிருக்கிறார். விஸ்வநாதன் பிரதிமையைக் கொடுத்தபோது. கங்காவின் இள நெஞ்சு ஒருமுறை விம்மிதத்தால் விம்மித் தாழ்ந்தது. அதை மார்போடு அணைத்துக் கொண்டாள். குலகுரு அகஸ்தியரையும் தன் குரு விஸ்வநாதனையும் ஒருமுறை நன்றியுடன் நினைத்துக் கொண்டாள். இன்னும் சற்று நேரத்தில் அரசர் படை வீட்டுக்குள் வந்துவிடுவார். வெளியே ஆரவாரம் அதிகரித்துக் கொண்டே வந்தது. சேடிப் பெண்களை ஆரத்தி எடுப்பதற்காக அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகப் பணித்தாள். அதற்குமுன் கங்கா தேவி அவசர அவசரமாக எழுத்தாணியையும் ஓலை நறுக்கையும் எடுத்தாள். பரபரவென்று சமஸ்கிருதத்தில் எழுத ஆரம்பித்தாள். “கல்ப விருக்ஷம் போன்று அனைவருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்பவரான யானை முகத்தோனாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை சரணடைகிறேன்.” வெளியே குரல் கேட்டது. ‘அரசி! மன்னரும் பரிவாரங்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆரத்தி கரைத்துத் தயாராக இருக்கிறது. நீங்கள் உடனடியாக வரவேண்டும்” “இதோ வருகிறேன்” ஓலை நறுக்கையும் எழுத்தாணியையும் வைத்து விட்டு முக்காட்டைச் சரி செய்து கொண்டே எழுந்து கிளம்பினாள். வழியெங்கும் ஜனங்கள் சாரி சாரியாக நின்று பூவை இறைத்திருந்தார்கள். மணம் ஆளைத் தூக்கிற்று. ரோஜா சம்பங்கி இருவாட்சி மல்லிகை முல்லை தாமரை மற்றும் ஜவ்வந்தி எங்கும் ஒரே ‘ஜெய விஜயீபவ’ கோஷம். அது ஆஞ்சநேயர் இலங்கையிலிருந்து வானமார்க்கமாக திரும்பி வந்து கொண்டிருந்தபோது குரங்குகள் மரங்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு கிளைகளைக் கையில் ஆட்டிக் கொண்டு ‘கிலகில’ என்று சப்தமிட்டது போல் கண்ணனூரில் அன்று ஒரே ஆரவாரமாக இருந்தது. வெளியே மன்னனை வரவேற்பதற்காகப் பூர்ண கும்பத்துடன் கோபணார்யன் வேதியர்களுடன் நின்று கொண்டிருந்தார். கூடவே மந்திரி சாளுவமங்குவும் முகமலர்ச்சியுடன் கையில் மாலையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். கங்காதேவி உற்று நோக்கினாள். மாலை மயங்கும் நேரம். மேற்குத் திசையில் வான் செக்கர் நிறமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. அன்று நினைத்தே பார்க்க முடியாத வெற்றியைத் தட்டிப் பறித்த மன்னன் குமார கம்பண்ணனும் மேற்கே மறையும் ஆதவனுக்கிணையான ஒளிப்பிழம்பு போல் நடந்து வந்து கொண்டிருந்தான். கூடவே சேநாதிபதி சோமபப்ப நாயக்கரும் உபசேநாதிபதிகளும் மண்டலாதிகாரிகளும் வந்து கொண்டிருந்தனர். மன்னன் கம்பீரமாக வந்து கொண்டிருந்த இடத்தில் காச்மீர ரத்தின கம்பளத்தால் நெய்யப்பட்ட நடை பாவாடை விரிக்கப்பட்டிருந்தது. கங்காதேவி உற்று நோக்கினாள். ராஜா ஏற்கெனவே நல்ல உயரமும் அகலமான மார்பும் வாளைப் பிடித்துப் பிடித்துக் காய்த்துப் போன கைகளும் கொண்டவன். இப்போது மார்புக் கவசமும் கையுறையும் அணிந்திருந்ததில் இன்னமும் ஆகிருதி பெரியவனாய்க் காணப்பட்டான். நெருங்கி வந்ததும் கோபணார்யரும் வேதியர்களும் பூர்ண கும்பம் அளித்து ஸ்வஸ்திஸ்ரீ சொல்ல ஆரம்பித்தார்கள். மன்னன் பூர்ண கும்பத்தை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். அது முடிந்தவுடன் கங்காதேவியும் உடனிருந்த முதிய தாதி ஒருத்தியும் ஆரத்தி எடுக்க முன் வந்து குனிந்தனர். கம்பண்ணன் ஆரத்தியை ஏற்றுக் கொள்ளும் போது முகம்கொள்ளாத சிரிப்புடன்,“கமலே கமலோத் பத்தி ஸ்ருயதே நதுத்ருயஸே” என்றான். ராணி புன்னகை புரிந்து விட்டுப் பேசாமல் இருந்தாள். “சொல் கங்கா. தாமரையில் தாமரை மலர்வது கேள்விப்படுவது மட்டுமே. எங்கும் கண்டதில்லையே” என்று அந்த ஸ்லோகத்தின் மொழியாக்கத்தைச் சொன்னான். அதற்கும் கங்கா அசரவில்லை. குமார கம்பண்ணன் பொறுத்துப் பார்த்து விட்டு, “பாலே தவமுகாம்போஜே கதமிந்தி வரத்வயம்” என்று சொல்லிவிட்டு ஓ பெண்ணே! உன் தாமரை முகத்தில் எப்படி இரண்டு தாமரைகள் உள்ளன?” என்றுகேட்டுப் பெரிதாக நகைத்தான். கங்காதேவியும் பெரிதாகப் புன்னகைத்து “குமாரரே! உங்கள் அளவிற்கு என்னிடம் சமஸ்கிருதப் புலமையை எதிர்பார்க்காதீர்கள். நான் உங்கள் மனைவியாக இருக்கலாம். ஆனால் உங்களையே சார்ந்திருக்கும் அபலை” என்றாள். மன்னன் அவளை மீண்டும் உற்று நோக்கினாள். “வாருங்கள்; வேடிக்கைப் பேச்சு போதும்” என்று படை வீட்டுக்குள் நுழைந்தாள். மற்றவர்கள் நின்று கொண்டார்கள். தாதிப் பெண் ஆரத்தியைக் கொட்டுவதற்காக எடுத்துச் சென்றாள். இப்போது மந்திரி பிரதானிகள் வெளியில் நிற்க ராணியும் மன்னனும் படை வீட்டுக்குள் நுழைந்தார்கள். அரசன் கைகால்களை சுத்தம் செய்து கொண்டு தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த பூக்களில் கொஞ்சம் எடுத்து இரண்டு கைகளாலும் சற்று கண்ணை மூடி தியானித்த பின் பவானி சிலைக்கு அர்ப்பணித்தான். மன்னனும் அரசியும் பவானி முன் நமஸ்காரம் செய்து எழுந்தனர். “கங்கா! மூன்றாம் வீர வல்லாளன் எங்கள் குல எதிரியாக ஒரு காலத்தில் இருந்தவன் இதே கண்ணனூரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். அவனைக் கொன்ற மதுரை சுல்தான் அவன் உடலைக் கீறி அதில் வைக்கோலைத் திணித்து மதுரைக் கோட்டை வாயிலில் தொங்க விட்டான். அதற்கு இவ்வளவு வருடங்கள் கழித்து - முப்பத்து ஒரு வருடங்கள் கழித்து நான் பழி வாங்கினேன். இன்னும் பவானியின் ஆணைகளில் பாக்கி என்னென்ன இருக்கின்றன சொல்” என்றான் குமார கம்பண்ணன். “அரசே! நாம் இவையெல்லாம் பல முறை பேசிக் கொண்டது தான். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் மதுரை சுல்தான்களுக்கும் டெல்லி சுல்தான்களுக்கும் துணை போன தொண்டை மண்டல அரசர்கள் ராஜநாராயணனையும் அவன் மகன் இரண்டாம் வென்று மண்கொண்டானையும் வெற்றி கொண்டிருந்தீர்கள். வெற்றிக்குப் பெரிதும் வித்திட்ட உங்கள் ஒன்று விட்ட சகோதரர் வீரசவண்ணனும் படைத் தளபதியான சாளுவ மங்குவும் செய்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமா? அவர்களைக் கொல்லாமல் விட்ட தங்களின் பெருந்தன்மையும் சாதாரணமா?” “அவர்கள் உயிர் பிழைத்ததற்கு நீ தானே காரணம்? நீ மட்டும் அன்று என்னைத் தடுத்திருக்காவிட்டால் இருவர் தலைகளும் மண்ணில் உருண்டிருக்கும். நம் விஜய நகர அரசுக்கு உட்பட்ட பகுதியாகத் தொண்டை மண்டலத்தை மாற்றி அவர்களையே அப்பகுதிகளை ஆண்டு வர அனுமதித்தது எவ்வளவு பெரிய சாமர்த்தியம்? அதனாலேயே இன்று நாம் இந்தப் போரில் வெல்ல முடிந்தது.” “அரசே! அவர்களிடம் ராஜ்யத்தைத் திருப்பிக் கொடுக்க நீங்கள் ஆணையிட்ட போது வீர சவண்ணரும் சாளுவ மங்குவும் புற்றில் இருக்கும் கருநாகம் போல் சீறினார்கள். நீங்கள் தான் சம்புவரையனுக்கு மீண்டும் முடிசூட்ட அவர்களையே நியமித்து அவர்களுக்கு ‘சம்புவராய ஸ்தாபனா சார்யர்’ என்கிற பட்டத்தையும் வழங்கினீர்கள்.” “காரணம் என்னவென்றால் வென்று மண் கொண்டான் மக்களின் மனம் கவர்ந்தவன். அவன் சந்ததியரான ராஜ நாராயணனும் இரண்டாம் வென்று மண்கொண்டானும் மக்கள் மனமகிழ ஆட்சி நடத்தியவர்கள். அவர்கள் செய்த தவறுகள் ஒன்றிரண்டு உண்டு. குறிப்பாக மாலிக்கபூர் படையெடுப்பின் போது அவர்கள் நம் நாட்டில் நிகழ்ந்த கொள்ளைகளையும் கொலைகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பயம் தான் காரணம். ஆனால் பின்னர் நடந்த உலூக்கானின் படையெடுப்பின் போது தொண்டை மண்டலம் அவன் வசமான போது சம்புவரையர்கள் விழித்து எழுந்தனர். மீண்டும் தொண்டை மண்டலத்தைப் பதிநான்கு ஆண்டுகள் கழித்து வென்று மண் கொண்டான் கைப்பற்றினான். அப்போது முகம்மதியர்கள் படையெடுப்பில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். கோயில்கள் மீண்டும் மீண்டும் கொள்ளை அடிக்கப்பட்டன. மக்கள் கிராமம் கிராமமாக வெளியேறி சம்புவரையர் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களுக்குப் பெயர்ந்தனர். அப்போது தேடி வந்தோர்க்கு இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை, குடிநீர் போன்றவற்றை அஞ்சினான் புகலிடங்களில்’ செய்து தந்தான். அதனால் நமக்கு சம்புவரையர்கள் மேல் பரிவு உண்டானதில் ஒரு வியப்பும் இல்லை.” “கங்கா! நன்றாகக் கவனி. நீ எங்கள் குல எதிரிகளாக இருந்த காகதீய மன்னன் பிரதாபருத்ரனின் வம்சாவளியில் வந்தவள். பிரதாப ருத்ரன் முப்பிடி நாயக்கன் தலைமையில் வென்ற காஞ்சியை மீண்டும் ஏகாம்பரநாதன் சம்புவரையன் கைப்பற்றியதால் அவன் வென்று மண் கொண்டான் என்று அழைக்கப்பட்டான். அவர்கள் சந்ததியிடமிருந்து நாம் தொண்டை மண்டலத்தை இப்போது கைப்பற்றியதில் உங்கள் குலப் பழியும் இப்போது தீர்ந்ததல்லவா?” கங்கா பூரிப்புடன் மன்னனை அணைத்துக் கொண்டாள். “குமாரரே! உங்களுக்கு நினைவு இருக்கிறதா? கோலாரில் தாங்கள் சேநாதிபதியாய் இருந்த போது குதிரையில் வந்து கொண்டிருந்த தாங்கள் என்னைப் பற்றி விசாரித்து வர அனுப்பினீர்கள். அப்போது நான் காகதீய வம்ச வாரிசு என்று தெரிந்து கோபத்துடன் என்னைத் தூக்கி வர ஆளனுப்பினீர்கள்...” கம்பண்ணன் புன்னகைத்தான். “நன்றாக நினைவிருக்கிறது தேவி. அப்போதுதான் நீ ஓலை நறுக்கில் “தாமரையில் தாமரை மலர் மலர்வது கேள்விப்படுவது மட்டுமே; எங்கும் கண்டதில்லையே” என்கிற காளிதாசன் தொடர்புடைய ஸ்லோகத்தை எழுதி என்னிடம் மறுமொழி கேட்டிருந்தாய். அப்போது எனக்கு சமஸ்கிருத இலக்கியங்களில் பரிச்சயம் இல்லாதிருந்ததால் விழித்தேன். அதற்கு மறுமொழி சொன்னால் மட்டுமே நீ எனக்குச் சொந்தமாவாய் என்கிற நிபந்தனையையும் விதித்திருந்தாய். நான் செய்வதறியாது திகைத்துப் போய் எங்கள் குலகுரு கிரியா சக்திப் பண்டிதரை அழைத்து அதைக் காண்பித்தேன். அவர் பெரிதாக நகைத்து விட்டுக் “குமாரா! நான் உன்னிடம் பலமுறை சொன்னேன். நீ கேட்கவில்லை. சமஸ்கிருத இலக்கியங்களையும் சரித்திரங்களையும் நீ அவசியம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறினேன். நீ ‘வாளும் கேடயமும் இருந்தால் போதும். திக்கெட்டும் உள்ள சாம்ராஜ்யங்களை வெல்வேன்’ என்று மார் தட்டினாய். கடைசியில் ஒரு பெண்ணை உன்னால் வெல்ல முடியவில்லை. பரவாயில்லை. நான் சொல்கிற இந்தப் பிரதி வசனத்தை ஓலையில் எழுதி அனுப்பு. “ஓ பெண்ணே! உன் தாமரை முகத்தில் எப்படி இரண்டு தாமரைகள் உள்ளன?” என்று எழுதி அனுப்பு என்றார்...” கங்கா தேவி பெரிதாக நகைத்தாள். “அரசே! நீங்கள் அதை மட்டுமா எழுதியிருந்தீர்கள்? போர்த் தொழிலிலேயே கவனம் செலுத்தியதால் படிப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் உங்களுக்குத் தகுந்த குரு ஒருவரைச் சிபாரிசு செய்தால் இரண்டு வருடங்கள் கற்றுத் தேர்ந்து விடுவதாகவும் அச்செய்தியில் தெரிவித்திருந்தீர்கள்...” “அதற்கு நீ எங்கள் குலகுரு கிரியா சக்திப் பண்டிதரே அதற்குப் பொருத்தமானவர் என்றும் இரண்டு வருடங்கள் நீ காத்திருக்கத் தயார் என்றும் எனக்கு மறுமொழி அனுப்பியிருந்தாய். அதிலிருந்து தான் நீயும் என்மீது காதல் கொண்டிருக்கிறாய் என்று மறைமுகமாக உணர்த்தியதைப் புரிந்து கொள்ள முடிந்தது.” “அரசே நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியில் மந்திரி பிரதானிகள் காத்திருக்கிறார்கள். அவர்கள் செய்ய வேண்டியதைத் தாங்கள் உத்தரவுகளாகப் பிறப்பிக்க வேண்டும்.” “ஆணை தேவி!” என்று மன்னன் போலியாக சிரம் தாழ்த்தி வணங்கி விட்டு வாயிற் காவலர்களை அழைத்து மந்திரி பிரதானிகளை உள்ளே அழைக்கச் செய்தான். கோபணாச்சார்யனும் சாளுவ மங்குவும் சேநாதிபதி சோமப்ப நாயக்கரும் உள்ளே வந்து மன்னன் ஆசனத்தில் அமர்ந்த பின் அமர்ந்து கொண்டார்கள். இதர மந்திரி பிரதானிகள் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தார்கள். கங்காதேவி வந்தவர்களை வரவேற்கும் முகமாக வணங்கி விட்டு மறைப்பில் சற்று உள்ளடங்கிய அறையில் சென்று அமர்ந்து கொண்டாள். “கோபணாச்சார்யரே! மதுரைப் படையெடுப்புக்கு முன்னர் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏதாவது பாக்கி இருக்கிறதா?” என்றான் குமார கம்பண்ணன். “இரண்டே இரண்டு பணிகள் இருக்கின்றன குமாரா! கண்ணனூரில் ஹொய்சள மன்னனான் வீர சோமேஸ்வரனால் நிர்மாணிக்கப்பட்ட ஹொய்சலேஸ்வரர் கோயில் முகம்மதியர்களால் இடிக்கப்பட்டு மசூதியாக மாற்றம் செய்யப்பட்டது. அக்கோயிலை புனருத்தாரணம் செய்து குடமுழுக்கு நடத்திட வேண்டும்.” “சரி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் ஆச்சாரியரே! அந்தக் கோவிலுக்கான நிவந்தமாக சுற்றுப்புற நிலங்களை இறையிலி நிலங்களாக மாற்றி அவற்றில் அந்தணர் மற்றும் இதர சமூகத்தினர் குடியிருப்புக்களை ஏற்படுத்துங்கள். அதற்கான ஏற்பாடு இன்றே தொடங்கப்படட்டும். அந்த இடத்தை நாம் கண்ணனூரில் வெற்றி கொண்டதன் நினைவாகக் ‘கம்பரசன் பேட்டை’ என்று பெயரிடுங்கள். என் குல முன்னோன் வீரகம்பண்ணன் பெயரால் அது அழைக்கப்படட்டும். இரண்டாம் பணி என்ன?” “ஸ்ரீரங்கம் அழகிய மணவாளனையும் உபய நாச்சிமார்களையும் மீண்டும் ஸ்ரீரங்கம் கோயிலில் எழுந்தருளப் பண்ணுவது” என்றார் கோபாணாச்சார்யன். குமாரகம்பண்ணன் துள்ளி எழுந்து, “என்ன? இந்தப் பாவிகள் அழகிய மணவாளனையுமா விட்டு வைக்கவில்லை? திருமேனிகள் தற்போது எங்கேயிருக்கின்றன என்கிற தகவல் உண்டா?” என்று கர்ஜித்தான். அவன் கை தன்னிச்சையாக அரையில் வைத்திருந்த உடைவாளிடம் சென்றது. கோபணாச்சார்யன் சாந்தமாக “அரசே! சாந்தம் கொள்ளுங்கள். தற்போது தான் நம் ஒற்றர்களிடமிருந்து செய்தி வந்துள்ளது. ஆனைக்கா என்கிற ஊருக்குப் பக்கத்தில் அழகிய சிங்கர் எழுந்தருளியிருக்கும் காட்டில் அழகிய மணவாளனையும் உபய நாச்சியார்களையும் எழுந்தருளப் பண்ணியிருக்கிறார்கள்.” “இத்தனை நாட்களும் எங்கேயிருந்து சேவை சாதித்துக் கொண்டிருந்தார்கள்? இதைக் கேட்க எனக்குக் குலை நடுங்குகிறது. என் வாள் இரத்தம் ‘கொண்டா கொண்டா’ என்கிறது. அரங்கத்து வள்ளலையும் உபய நாச்சியரையும் காக்காத வாள் என்ன வாள்?” “குமாரரே! இன்றைக்கு சுமார் நாற்பத்தெட்டு வருடங்களுக்கு முன் உலுக்கான் படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளரையும் உபய நாச்சியார்களைக் காப்பாற்றுவதற்காக அரங்கத்திலிருந்து அவர்களைப் பிள்ளை லோகாச்சாரியர் எனும் ஆன்றோர் தலைமையில் எடுத்துச் சென்றார்கள். பிள்ளை லோகாச்சாரியர் எனும் முதிர்ந்த ஞானி பழம் பழுத்து மரத்திலிருந்து விழுவது போல் ஜ்யோதிஷ்குடி எனும் ஊரில் பரம பதம் எய்தினார். அதிலிருந்து பெருமாளும் நாச்சிமாரும் அழகர் கோயில் வழியாக மாவார் சென்று விட்டனர். அங்கே திருக்கணாம் என்கிற ஊரில் சேவை சாதித்து வந்தனர். வீர வல்லாளர் இன்றைக்கு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் வீர மரணம் எய்திய பின் திருமலைக் காடுகளுக்குச் சென்று விட்டார் பெருமான். அவரையும் பரிவாரங்களையும் அவரைக் காத்து நின்றவர்கள் திருத்தாழ்வரைத்தாசர் என்கிற மகானும் வேறு இருவரும் மட்டுமே.” “நான் தொண்டை மண்டலத்தை வெற்றி கொண்ட பின் செஞ்சியில் சிறிது காலம் எழுந்தருளியிருந்து இப்போது நம்மையெல்லாம் ஆட்கொள்ள வந்திருக்கிறார்.” “தற்போது திருவரங்கத்தின் நிலையென்ன கோபணாச்சார்யரே?” “கோயில் இடிந்துபோய்ப் பாழடைந்து கிடக்கிறது. திருக்கோயிலின் கதவுகளைப் பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கின்றன. மறை ஓதும் ஓசையும் வேள்விகளில் எழும் புகையும் மிகுந்திருந்த அரங்கத்து வீதிகளில் மாமிசத்தை வாட்டுவதால் எழும் புகையும் முகம்மதியர்ப் படை வீரர் குடித்துக் கும்மாளமிடும் ஒலியுமே நிறைந்திருக்கின்றன.” “அரங்கனின் நிலை...?” “அவர் எப்போதும் போல் இந்த அலங்கோலங்களைப் பார்த்துக் கொண்டு புன்னகையுடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கிறார். அவர் உறக்கம் கலையாதிருக்குமாறு மேலிருந்து விழும் கற்களை ஆதிசேஷன் தன் தலை மீது வாங்கி நிற்கிறார்...” “இதை இனியும் பொறுக்க இயலாது. இதற்கெல்லாம் மதுரைப் போரில் சுல்தான்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். இப்போதைக்கு நான் செய்ய வேண்டிய இரண்டாம் பணி புரிந்து விட்டது. உடனடியாக அரங்கத்தில் அழகிய மணவாளரும் உபய நாச்சியார்களும் எழுந்தருளப் பண்ண வேண்டும். நாள் குறியுங்கள்.” சாளுவ மங்கு எழுந்திருந்தார். “தங்கள் எண்ணவோட்டத்தை ஆசாரியர் முன்பே கணித்து நாள் குறித்திருக்கிறார் பிரபு. அத்துடன் இடிக்கப்பட்ட கொடிக்கம்பம் மற்றும் பலி பீடங்களை மீண்டும் ஸ்தாபனம் செய்ய வேண்டும் பிரபு. அதற்கு பரிதாப வருடம் வைகாசி மாதம் பதினேழாம் நாள் குறித்திருக்கிறது.” “நல்லது. கோபணாச்சார்யரே! இதற்குண்டான ஏற்பாடுகளைத் துரிமாய் செய்ய உங்களை மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கிறேன். சாளுவ மங்கு உங்களுக்கு உண்டான அனைத்து உதவிகளையும் செய்வார். உள் வீதிகளில் இருக்கின்ற அன்னிய மதஸ்தரை வெளியேற்றி அங்கே வேதியரை குடியமர்த்த ஏற்பாடு செய்யுங்கள். அதற்கான பொருளை நம் பொக்கிஷ சாலையிலிருந்து பெற்றுக் கொள்ளத் திருச்சீட்டு நான் தருகிறேன். அன்னிய மதஸ்தரின் பெண்களை நம் பெண்கள் போல் நடத்த வேண்டுமென்று நம் படை வீரர்களுக்குச் சொல்லுங்கள். ஆசார்யரும் சாளுவ மங்குவும் அரங்கத்தில் புனருத்தாரணம் ஆகி முன் போல் வழிபாடு ஆரம்பிக்கும் வரை ஹொய்சலேஸ்வரர் கோயிலும் நம் வழிபாடுகளுடன் பழையபடி ஆகும்வரை இங்கேயே இருந்து அதை மேற்பார்வை இட உத்தரவு இடுகிறேன். இப்போதைக்கு இக்கூட்டம் கலையலாம்” என்று கூற எல்லோரும் வணங்கி எழுந்திருந்தனர். மன்னன் “சோமப்ப நாயக்கரே! மதுரைப் போருக்கான ஆயத்தங்கள் எந்த அளவில் இருக்கின்றன?” என்றான். சேநாதிபதி சோமப்ப நாயக்கர், “எல்லாம் சித்தமாய் இருக்கிறது மன்னனா! விடியற்காலை புறப்படுகிறோம். தாங்கள் அதற்கு முன் சற்று ஓய்வெடுத்தால் நல்லது. மிகவும் களைத்திருக்கிறீர்கள்” என்றார். அப்போதுதான் மன்னன் தன் உடலில் இருந்த தாளமுடியாத சோர்வையும் வலியையும் உணர்ந்தான். “நன்றி சோமப்பரே!” என்றவுடன் சேநாதிபதி விடை பெற்றுக் கொண்டார். மன்னன் உள் அறைக்குச் சென்றான். அங்கே கங்காதேவி ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரிப்பது போல் முகம் விகசிக்க ஓலை நறுக்கையும் எழுத்தாணியையும் மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மன்னனைக் கண்டதும் சடாரென்று எழுந்திருந்தாள். ஓலையும் எழுத்தாணியும் எழுந்த அவசரத்தில் மடியிலிருந்து விழுந்தன. மன்னன் புன்சிரிப்புடன் அவற்றை எடுத்து அவள் கையில் கொடுத்துவிட்டு, “என்ன சிந்தனை?” என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” “மன்னரே! பெரிய பணி ஒன்றை ஆரம்பித்திருக்கிறேன். தங்களை நான் கரம் பிடித்த போது தாங்கள் ஒரு வாக்குறுதி ஒன்றை வாங்கிக் கொண்டீர்கள். நினைவிருக்கிறதா?” குமாரன் புன்னகைத்தான். “நினைவு இல்லாமல் என்ன? நீ எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும். நான் போர் முனையில் இருந்தாலும் என் கூடவே தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அதை நீ இன்று வரைக் காப்பாற்றிக் வருகிறாய்.” “குமாரரே! நீங்களும் என் நலனுக்குப் பழுது படாமல் இத்துணை நாளும் நம் கனவத்தனையும் நிறைவேற்றி வருகிறீர்கள். எம் முன்னோரின் வீர சோமேஸ்வரன் நிர்மாணித்த ஆலயத்தை இன்று மீட்டு புனர் நிர்மாணம் செய்ய உத்தரவிட்டுள்ளீர்கள். அதற்கான நன்றியை நான் இன்னும் எத்துணை ஜென்மம் எடுத்துத் தங்களுக்குப் பணி செய்தாலும் தீராது.” குமார கம்பண்ணன் பெருமூச்சைறிந்தான். “அப்போ நான் உனக்குப் பட்ட கடனுக்கு இன்னமும் எவ்வளவு ஜென்மம் எடுக்க வேண்டும் கங்கா சொல். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று நினைத்தபடி வாழ்ந்தேன். பல பெண்களை மணந்தேன். என் வேட்கை தீரவில்லை. அப்படியிருந்தவனை மடை மாற்றம் செய்தவள் நீ?” “போதும் அரகே போதும். நீங்கள் என்றுமே வீரப் பிழம்பு. உங்களிடம் கனன்று கொண்டிருந்த நெருப்பை ஊதிய சிறு பணியைச் செய்தவள் மட்டுமே நான். அதுவுமே என்னால் நடந்ததன்று என் குருநாதர் விஸ்வநாதன் போட்ட பிச்சை அது. தங்கள் குல குரு கிரியா சக்திப் பண்டிதர் தங்களுக்கு அளித்த ஞானமும் கூட. “கங்கா தேவியின் கண்கள் பளித்தன. குமார கம்பண்ணன் தன் குருநாதரை மானசீகமாக வணங்கினான். “இன்று நான் பெற்ற வெற்றிக்கு என் தந்தை புக்கரும் குருநாதரும் தான் காரணம். அவர்களே இதற்கு வித்திட்டவர்கள். ஆனால் மூல காரணம் நீதான். முதன் முதலில் நம்மிடைய இருக்கும் சிறுசிறு பிணக்குகளால் எப்படி அன்னியன் உள்ளே வந்து புகுந்தான் என்பதைப் படிப்படியாக எடுத்துரைத்தாய்.” “நாளை நான் மதுரை செல்கிறேன் தேவி. ஆனால் நான் மதுரையை வெற்றி கொண்ட இக்கணம் இன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது. நான் மதுரை சுல்தானின் தலைக் கொய்த கணத்தில் அது முடிவாகி விடும். அறுபது ஆண்டுகளுக்கு முன் எழுந்த வஞ்சத்துக்கு இன்று கணக்குத் தீர்க்கப்பட்டு விட்டது. மாறவர்மன் குலசேகரனுடைய பிள்ளைகள் சுந்தர பாண்டியனும், வீர பாண்டியனும் அரியணைக்காக அடித்துக் கொண்டு போரிட்டுக் கொண்டனர். சுந்தரபாண்டியன் தந்தையைக் கொன்று அரியணையை வென்றான். வீர பாண்டியன் டெல்லி பாதுஷா அலாவுதீன் கில்ஜியிடம் சரண் அடைந்தான். கில்ஜியின் ஆணைப்படி டெல்லியிலிருந்து புறப்பட்ட மாலிக்காபூர் முதலில் தேவகிரியைத் தாக்கினான். அவனுக்கு உதவிகள் செய்தவன் உன் குல முன்னோன் மூன்றாம் வீர வல்லாளன். எப்பேர்ப்பட்ட விபரீதம்? அவனுக்கு ராமதேவனுடன் இருந்த விரோதத்தை இப்படிப்பழி தீர்த்துக் கொண்டான். மாலிகாப்பூர் சென்ற இடங்களில் கோயில்களில் புகுந்து விக்ரஹங்களை உடைத்து செல்வத்தைக் கொள்ளையிட்டுக் கொண்டு போனான். மிகவும் உக்ரமாகப் போர் புரிந்த வீர பாண்டியன் தோற்றுக் காடுகளில் பதுங்கிப் பிழைக்க நேர்ந்தது. பின்னர் வந்த உலுக்கான் டெல்லி ஆட்சியின் கீழ் மதுரையைக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாது கடவுள் நம்பிக்கை உள்ள இந்துக்களை முள்வேலியில் அடைத்துத் தீப்பந்தங்களை எறிந்து கொன்றான்.” “ப்ரும்மபுரியில் மாலிக்காபூர் கோயிலைத் தரைமட்டம் ஆக்கி அங்கிருந்த அந்தணர்களைக் கொன்றான். கருவறையில் இருந்த மகாதேவரின் சிலையை பின்னமாக்கி நாராயணர் விக்ரஹத்தை இடித்துத் தள்ளினான். இதே கண்ணனூரில் ஹொய்சளேஸ்வரர் கோயில் மசூதியாய் மாறியது. என்ன காலக் கொடுமை!” “மதுரையைச் சூழ்ந்திருந்த காடுகள் அழிக்கப்பட்டு நீண்ட இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டு அவற்றில் கொல்லப்பட்ட மனிதர்களின் தலைகள் பொருத்தப்பட்டன.” “இன்றைக்கு நாற்பதாண்டுகளுக்கு முன் இதே கண்ணனூரில் மதுரை சுல்தானை வெற்றி கொண்ட உன் முன்னோன் வீர வல்லாளன் வஞ்சகமாகக் கொல்லப்பட்டான்.” மன்னன் பெருமூச்சு விட்டான். “கம்பிலா நாட்டை உலுக்கான் வெற்றி கொண்ட போது என் தந்தை புக்கரும் பெரிய தந்தை ஹரிஹரரும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டு முஸ்லீம்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் அன்னை பவானியின் அருளால் திரும்பி வந்து வித்யாரண்யரின் ஆசியோடு விஜயநகர சாம்ராஜ்யத்தை நிர்மாணம் செய்தார்கள்.” “பெண்களுடன் காலம் கழித்துக் கொண்டிருந்த என் கவனத்தை மேற்கண்ட சரித்திரங்களைச் சொல்லி நீயும் உன் குருநாதர் விஸ்வநாதனும் என்குல குரு கிரியா சக்திப் பண்டிதரும் திரும்பியிருக்காவிட்டால் நான் பெற்ற வெற்றிகளை இதுபோல் பெற்றிருக்க முடியாது.” “கம்பண்ணரே! தங்கள் வீரத்தைக் கேள்வியுற்றிருந்த நான் தங்கள் மீது தீராக் காதல் கொண்டிருந்தேன். இது எப்படி நடக்கும் என்கிற ஆயாசம் என் மனதில் எழுந்ததில் விரக்தியுடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன். பாட்டி வீட்டிற்கு வந்திருந்த நான் கோலாரில் மட்டும் உங்களைச் சந்தித்திருக்கா விட்டால்...? ஆனால் என் குரு விஸ்வநாதன் மட்டும் என் கையில் திரிசூலம் இருப்பதாகவும் நான் ஒரு பெரிய வீரனுக்குத் தான் வாழ்க்கைப்படுவேன் என்றும் கூறிக் கொண்டிருந்தார்.” “அதேபோல் என் கையில் மீன் சின்னம் இருப்பதாகவும் அதன் பொருள் நான் அங்கயற்கண்ணி அரசாளும் மீனாக்ஷி தேவியின் மதுரையை வெற்றி கொள்வேன் என்றும் கூறினாய்.” கம்பண்ணன் “என் பணி பெரிது தேவி. என் உள்ளம் சோர்வடைகிறது அதை நினைக்கும் போது. நா உலர்கிறது. விரிந்து பரந்திருக்கும் இந்த பாரத தேசத்தை அன்னியர்கள் ஆக்ரமித்து நம் கோயில்களையும் கலாச்சார விழுமியங்களையும் சிதைத்து வருகிறார்கள். இவர்களை என்னால் தடுக்க முடியுமா...” இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கங்காதேவியின் மீது சாய்ந்திருந்த மன்னன் களைப்பினால் அயர்ந்து விட்டான். கங்காதேவி நளினமாக அவனை விலக்கி விட்டு உடைகள் உறைகளைத் தளர்த்தி படுக்கை விரிப்புகளை ஒழுங்கு செய்து நன்றாக மன்னனை உறங்க விட்டாள். அவளும் எழுந்திருந்து பவானி அன்னையை மீண்டும் ஒருமுறை வணங்கி விட்டு ஒருக்களித்தாற்போல் மன்னன் காலடியில் படுத்துக் கொண்டு கண்ணயர்ந்தாள். இரண்டாம் ஜாமத்தில் உறக்கமும் விழிப்பும் அற்ற நிலையில் இருந்த குமாரண கம்பண்ணன் சடாரென்று எழுந்து கொண்டான். தன்னை எழுப்பியது யார் என்று அனுமானிக்க இயலவில்லை. அவர்கள் இருந்த அறையில் ஒரு அமானுஷ்ய ஒளி பரவியிருந்தது. காலடியில் வாடிய மலர் மாலை போல் கங்காதேவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அவன் முன்னர் பத்து கரங்களுடன் அன்னை பவானி காட்சியளிப்பது போல் தோன்றியது. பத்து கரங்களுடன் காட்சியளித்த அன்னை வலது கையில் மின்னல் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த வாள் ஒன்றை கம்பண்ணன் கையில் கொடுப்பதாய்த் தோன்றியது. “மகனே! இந்த வாளைப் பெற்றுக் கொள். இந்த வாள் உன்னிடம் இருக்கும் வரை உன்னை வெற்றி கொள்ள யாராலும் முடியாது. இதை எடுத்துக் கொண்டு தென்மதுரை நோக்கிச் செல்வாயாக. கொடுங்கோலர்களை வீழ்த்தி நம் ஜனங்களைக் காப்பாய். என் ஆணை.” மன்னன் அப்படியே உறங்கிப் போனான். விடியற்காலை கங்காதேவி மன்னனை எழுப்பினாள். எழுந்திருந்த குமாரன் தான் கண்ட கனவினை நினைத்து பிரமித்த வண்ணம் மலங்க மலங்க விழித்தான். “அரசே! என்ன ஆயிற்று?” என்று கங்காதேவி மன்னனை உலுக்கினாள். “ஒன்றுமில்லை தேவி. களைப்புடன் மதுரையைப் பற்றி உன்னிடம் பேசிக்கொண்டே உறங்கினேனா? ஏதோ கனவு. கனவில் நம் குலதேவதை வந்து ஒரு....” கங்காதேவி குறுக்கிட்டாள். “என்ன பொருத்தம் பாருங்கள் அரசே. என் கனவிலும் அன்னை வந்தாள். தான் இதே இடத்தில் குடியிருக்க விரும்புவதாகவும் கூறி நான் உங்கள் வீர வரலாற்றை எழுதவும் பணித்திருக்கிறாள்.” “என்ன? என் கனவில் வந்து ஒரு வீரவாளைக் கொடுத்து மதுரையை வெற்றி கொள்ள ஆணையிட்டாள் அன்னை” என்றான் கம்பண்ணன் பிரமிப்பு நீங்காமலேயே. அப்போது ஏதோ தோன்ற கங்காதேவி பவானி அன்னை சிலையைப் பார்த்தாள். பீடத்திற்கு அருகில் மின்னும் வாள் ஒன்றும் கங்காதேவி விட்டுப்போன ஒலை நறுக்கும் எழுத்தாணியும் கிடந்தன. மன்னன் பாய்ந்தெழுந்து அந்த வாளைக் கைப்பற்றி முன்னும் பின்னும் ஆராய்ந்து கொண்டிருந்தான். அரசியிடமும் காண்பித்தான். இருவரும் திக் பிரமித்துப் போய் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தார்களோ? தெரியாது. வெளியே ‘ஜெய விஜயீ பவ’ என்கிற ஆரவாரங்கள் கேட்டன. கங்காதேவி எழுத்தாணியை எடுத்து ஓலை நறுக்கில் பின்வருமாறு எழுதினாள்: ‘மதுரா விஜயம் என்கிற வீரகம்பண்ணராய சரிதம்’ கல்ப விருக்ஷம் போன்று அனைவருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்பவரான யானை முகத்தோனாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரணடைகிறேன்.” பின்னுரை: நீண்ட நாட்களுக்கு முன் பரமாச்சாரியர் அருளிய தெய்வத்தின் குரல் முதல் பாகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது கங்காதேவி பற்றியும் அவர் குமார கம்பண்ணன் வெற்றிகளைக் குறித்து எழுதிய ‘மதுரா விஜயம்’ என்கிற சமஸ்கிருதக் கவிதைகள் குறித்த குறிப்பை வாசித்தேன். பரமாச்சாரியர் அந்த நூலைப் பற்றியும் கம்பண்ண உடையாரைப் பற்றியும் கம்பரசன் பேட்டையைப் பற்றியும் ‘ஹொய்சலேஸ்வரர்’ கோயிலைப் பற்றியும் குறிப்பிட்டிருந்ததையும் மிகவும் சுவாரஸ்யத்துடன் வாசித்தேன். பின்னர் அதை மறந்தே போனேன் என்றாலும் அதன் நினைவு எச்சம் என் நினைவில் எப்போதும் இருந்தது. பின்னர் பரிசு பெற்ற ஒரு நீள நாவலை வாசித்தேன். மதுரையின் வரலாறு குறித்த நூல் அது. அதில் மாலிக்காபூரைப் பற்றியோ உலுக்கான் படையெடுப்பைப் பற்றியோ பெரிதாகக் குறிப்புகள் இல்லையென்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். சரித்திரம் என்றால் சார்பு நிலையல்லாது இருக்க வேண்டுமல்லவா? அதில் அந்த நிலை இல்லாததால் ஸ்வாரஸ்யம் குறைந்து போய் அதைப் படிப்பதைப் பாதியிலேயே நிறுத்தி விட்டேன். இப்படியிருக்கும் போது ஸ்ரீரங்கம் வைஷ்ணவஸ்ரீ வெளியிட்டுள்ள கங்காதேவியின் மதுரா விஜயம் மொழி பெயர்ப்பு நூலை வாங்கினேன். உபய வேதாந்தி அ.கிருஷ்ணமாச்சாரியர் எழுதி வெளியிட்ட இப்புத்தகத்தில் ஆசிரியர் மொழி பெயர்ப்பு மட்டும் செய்து நிறுத்திவிடாமல் அதில் அது சம்பந்தப்பட்ட நூறு வருட சரித்திரத்தை ஆராய்ந்துள்ளார். இதற்காக அவர் மொராக்கோவிலிருந்து வந்த யாத்ரீகர் இபன் படுடா அமீர் குஸ்ரு போன்றவர்களின் குறிப்புகளையும் ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகையும் மற்றும் பல்வேறு சரித்திர ஆவணங்களையும் கல்வெட்டுகளையும் அலசி ஆராய்ந்துள்ளார். நான் எழுதியுள்ள கதை முற்றிலும் இந்நூலை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. என் விவரிப்பில் பிழை இருந்தால் அது என்னைச் சேர்ந்தது. நிறையிருந்தால் அது ஆசாரியரைச் சேர்ந்தது. என் எதிர்காலத் திட்டத்தில் மதுரை குறித்தும் கம்பண்ணன் குறித்தும் நாவல் எழுதும் திட்டம் இருக்கிறது. அது காலம் பிடிக்கும். பல்வேறு நூல்களைப் படித்து ஆராய வேண்டும். என் வருத்தம் எல்லாம் நம் சரித்திரத்தைப் பற்றி எத்துணை பிரக்ஞை இல்லாமல் இருக்கிறோம் நாம் என்பது தான். அதை நிவர்த்தி செய்ய வயதும் அறிவும் உள்ள தமிழ் அறிஞர்கள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். இக்கதை எழுத என்னைத் தூண்டிய பரமாச்சாரியார் பாதம் பணிகிறேன். உபய வேதாந்தி அ.கிருஷ்ணமாச்சாரியார் அவர்களையும் பாராட்டி நமஸ்கரிக்கிறேன். அன்னை பவானி வெல்க! ஓம்! ஓம்!

அன்புடன்,

 அஸ்வத் 


நன்றி: சொல்வனம் 233 ஆம் இதழ் 
 


செவ்வாய், 3 ஜூலை, 2018

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை தொடர் குறித்து சொல்வனத்தின் மதிப்புரை

அஸ்வத் எழுதிய ‘தொல்வெளியிலிருந்து ஓர் இசை’ – கட்டுரைத் தொடர் முடிவு குறித்து:
தமிழிலக்கியத்தில் முற்றிலும் புது வகைக் கருத்துகள், சிந்தனைகளைக் கொடுக்கும் பல கட்டுரைத் தொடர்களைச் சொல்வனம் வெளியிட்டு இருக்கிறது. இவை எவை போலவும் இல்லாத ஒரு அபூர்வமான கட்டுரைத் தொடர் அஸ்வத் நாராயணன் எழுதிய  ‘தொல்வெளியிலிருந்து ஓர் இசை’ என்பது.  இதை எப்படி வகை பிரிப்பது என்று துவக்கத்திலிருந்து இறுதி வரை எங்களுக்கு ஓர் முடிவின்மைதான் இருந்திருக்கிறது. இது கர்நாடக இசை பற்றியது, ஒரு இளம் மேதை பற்றியது, சிறுவனாக இருந்ததிலிருந்து இளைஞனாக வளர்ந்த நிலை வரை ஓர் இளம் ஜீவன் என்னென்ன பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தது, இன்னும் சிறிது அவலச் சுவை வேண்டுமெனில் நம் கலைப் பரப்பில் என்னென்ன விதமான கசப்புகள் நிலவுகின்றன  என்றும் சுட்டுவதாகவும்  இதை நாம் பார்க்கலாம்.
ஒரே நேரம் பண்டை உலகத்தின் சுவடுகளை இன்றும் சுமந்திருக்கும் நம் பண்பாடு, கலை, சிந்தனை வெளியிலும் சஞ்சரித்து, இன்றைய பெருநகரங்களின் கடுமை நிறைந்த வெளியிலும் உலவி, அரூபமான கலையின் நுட்பங்களிலும் திளைத்து வந்திருக்கிற கட்டுரை இது.
கட்டுரையாளர் நம் அனைவருக்கும், தமக்கும், தம் குடும்பத்தினருக்கும் கடைசியில் வேண்டுவது அமைதிதான். அதுவும் ஒலியில்லாத அமைதி அல்ல, அனைத்து மனிதருக்கு வர வேண்டிய சாந்தியைக் கேட்டு முடித்திருக்கிறார்.
இத்தனை மாதங்கள் இக்கட்டுரைத் தொடரை காலக் கெடு தப்பாமலும், துல்லியமான பிரதியாகவும் அனுப்பி முடித்துக் கொடுத்த அஸ்வத் அவர்களுக்கு எங்கள் நன்றி. இளைஞர் ஆதித்யா தன் இசைப் பயணத்தில் மேன்மேலும் சிகரங்களைத் தொடட்டும், நாம் கேட்டு மகிழலாம்.

நன்றி: சொல்வனம் 

https://solvanam.com/2018/07/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3/


திங்கள், 2 ஜூலை, 2018

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை XIII

அத்தியாயம் 34

என் தந்தை 92 வருடங்கள் வாழ்ந்தார். ஒழுக்கத்தாலும் கட்டுப்பாட்டினாலும் இளைஞனைப் போல் வாழ்ந்து மறைந்தார். சுகமோ துக்கமோ எல்லாவற்றையும் விழுங்கியவர். அதிகம் பேசுகிறவர் அன்று. அளவாகத் தான் பேசுவார். கடைசியில் 92 ஆம் வயதில் வந்த சிறுநீர் அடைப்பு அவரைக் கிட்டத்தட்ட ஒரு மாதம் படுக்கையில் தள்ளியது. நாங்கள் அருகில் இருந்து கவனித்து வந்தோம். காலையில் செய்தித்தாள் வந்து விட்டதா என்று வினவுவார். வந்தால் மூக்குக் கண்ணாடியை அணிவித்து பேப்பரைப் பிடித்துக் கொள்வோம். அவர் படுத்த மேனியிலேயே தலைப்புச் செய்திகளாய் மேய்ந்து விட்டுப் போதும் என்பார். இறப்பதற்கு கொஞ்ச நாள் முன்னர் அவர் நினைவு எப்படி இருக்கிறது என்று பரிசோதிப்பதற்காகக் காதில் ‘அப்பா! ‘ஹைனஸ்’ (எங்கள் ஊர் மன்னர்) இருக்காரா?’ என்று வினவினேன். ‘இல்லை போயிட்டான்; மூணு மாசம் ஆய்டுத்து’ என்றார். அவர் நினைவு கடைசி வரையிலும் அவ்வளவு துல்லியமாக இருந்தது.
என் அன்னை விருத்தாப்பியத்தில் இருந்த போது என் வீட்டிற்கு ஒரு நண்பர் வந்திருந்தார். நாஸ்திகர். பிராமணர்கள் மீது காழ்ப்புணர்ச்சி உண்டு. ஜெயகாந்தனைக் கொண்டாடுவார். ஜெயகாந்தன் எழுத்துக்கள் அனைத்தையும் படித்திருப்பதால் ஜெயகாந்தனில் தான் பெரிய அதாரிடி என்கிற எண்ணம் அவருக்கு. அவர் வீட்டிற்கு வந்தபோது என் அன்னையிடம் அவரை அறிமுகப் படுத்தி வைத்தேன். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு குறிப்பிட்ட குடும்பம் குறித்துப் பேச்சு வந்தது. அப்போது என் அன்னை,  “அவர்கள்ல்லாம் ஜெயகாந்தன் ஒரு கதை எழுதியிருக்கிறார் ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’ என்று அதில் வரும் கதாபாத்திரங்கள் போன்றவர்கள்’ என்று பேச்சுவாக்கில் சொன்னார். இதைக் கேட்ட நண்பர் விதிர்விதிர்த்துப் போனார். மடிசார் கட்டிக்கொண்டிருந்த மாமியிடம் சத்தியமாக அவர் இதை எதிர்பார்க்கவில்லை.
பதவி உயர்வு பெற்று மும்பாய் மாறுதல் வந்த போது என் அன்னையிடம் போய்க் கையைப் பிசைந்து கொண்டு நின்றேன். வயதான காலத்தில் அவர்களை விட்டுச் செல்கிறோமோ என்கிற குற்றவுணர்வு அரித்தெடுத்தது என்னை. அப்போது என் அன்னை என்னிடம் புன்னகையுடன், “நான் பழுத்த இலைடா. எப்ப வேணா மரத்திலிருந்து விழுந்துடுவேன். உன் வாழ்க்கையைப் பாருடா” என்று தெம்பூட்டும் குரலில் கூறினார். பதினான்கு வயதில் என் தந்தையைத் திருமணம் புரிந்து கொண்டு வந்தவர். வாழ்வில் துன்பத்தைத் தவிர வேறொன்றும் அறியாதவர். அவருடைய ஏழாவது பிள்ளையாக நான் பிறந்தேன். வயதான காலத்தில் காலை ஒடித்துக் கொண்டு நடை உடை இல்லாமல் இருந்தார். இறப்பதற்கு முன் ‘ஆதித்யஹ்ருதயம்’ ஸ்லோகத்தை முணு முணுத்து விட்டு ‘வாசுதேவா!’ என்றார். பிராணன் போய் விட்டது. அவர் வாழ்நாள் பூரா எதையாவது கற்றுக் கொண்டே இருந்தார். அவர் இறந்த பின் அவர் டைரியைப் புரட்டிப் பார்த்தேன். வானொலியில் வரும் இசைப் பயிற்சிப்  பாடல்களுக்கான இசைக் குறிப்புகள் இருந்தன.
என் பெரியப்பா சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தவர். நான் பார்த்ததில்லை. நான் பிறக்கு முன்னரே காலமாகி விட்டார். எங்கள் ஊர் நீதிமன்றத்தில் சிரஸ்தாராகப் பணி புரிந்தவர். இலுப்பூர் பொன்னுசாமிப் பிள்ளை என்கிற வயலின் வித்வானிடம் சங்கீதம் கற்றுக் கொண்டவர். அவருக்கு இசையில் தான் பெரிதாகச் சாதிக்க இயலவில்லை என்கிற குறை இருந்தது. அவரைப் பற்றி ஒரு நாள் என் தந்தையிடம் கேட்டேன். “அவனுக்கு நெஞ்சு வேகலைடா!” என்றார் என் தந்தை. பெரியப்பா இறந்த மறுநாள் ஞ்சயனத்துக்கு இடுகாட்டுக்குச் சென்ற என் தந்தை இதைக் கண்ணுற்றிருக்கிறார்.
என் தந்தை யானை போன்ற நினைவாற்றல் கொண்ட சான்றோர். என் அன்னை அன்பும் இலக்கிய நுகர்வும் கொண்டவர். இது போன்ற பெற்றோர் சங்கீதத்தில் தோய்ந்த உறவினரும். இவற்றிலிருந்து கிளைத்தெடுத்த நான் இவற்றில் எவைகளை ஸ்வீகரித்தேன் என்பது விளங்காத விஷயம் தான். தவிர என் தந்தையை முந்தைய தலைமுறை எவ்வெவற்றைக் கொண்டிருந்தார்கள் என்று அனுமானிக்கிற நிலையில் நான் (அவர்களையெல்லாம் பிரத்யட்சமாய்ப் பார்க்காததால்) இல்லை. இப்படியிருக்கும் போது ஆதித்யா யாரிடமிருந்து எவ்வெவற்றை ஸ்வீகரித்தான் என்று எப்படி அநுமானிக்கவியலும்? தவிரவும் நான் ஏற்கெனவே கூறியிருந்தபடி என்னில் ஆதித்யாவின் குணாதிசயக் கூறுகள் இல்லாமல் இருந்தாலும் நான் என் வழியே அவற்றைக் கடத்தியிருக்க வாய்ப்பு உண்டு. விஞ்ஞானமும் சரி நம் பாரம்பரிய மத நம்பிக்கைகளும் சரி இதைத்தான் போதிக்கின்றன.
 ஆதித்யாவிடம் இயற்கையாக இருந்த வாழ்வியல் வித்தை ஒரு புறம் என்றால் என் மனைவியின் முயற்சி மறுபுறமாக இருந்தது. நடுத்தர நகரத்திலிருந்து வந்த எனக்கு இருந்த முயற்சியையும் நம்பிக்கையையும் விடப் பெரு நகரத்திலிருந்து வந்த அவளுக்கு அதெல்லாம் பன் மடங்கு இருந்தது. அது வழிவழியாக இந்தியக் குடும்பங்களில் வந்த பாரம்பரியமா, கலாச்சாரத் தோய்வா, இந்து மத நம்பிக்கையா இன்னதென்று சொல்லத் தெரியவில்லை. சிறு சிறு பொறிகளைப் பிடித்துக் கொண்டு அவற்றையே முன் இலக்காகக் கொண்டு மாடு மாதிரி உழைக்கத் தயாராக இருந்தாள் அவள். விரக்தி ஏற்படும் சமயங்களில் நாங்கள் ஒருவரையொருவர் தேற்றிக் கொண்டு முன்னகர்ந்திருக்கிறோம். இத்தனை வருடங்களில் எங்களில் ஒருவர் ஏதாவது விபரீதமான முடிவைத் தேடியிருக்கலாம்; மண முறிவு செய்து கொண்டிருக்கலாம். நாங்கள் இது போன்ற எந்தவிதமான அபத்தமான முடிவையும் எடுக்காததற்குக் காரணம் எங்கள் ரத்தத்தில் ஊறியிருக்கும் பாரம்பரியக் கூறுகளும் இறை நம்பிக்கையும் மட்டுமே. உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் எள்ளல், அவமானங்கள், அநுதாபங்கள் – ஆனால் ஆதரவின்மை- அந்தஸ்து இறக்கம் இவையெல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிறோம். பாதி தூரம் தான் கடந்திருக்கிறது என்பதால் ஒரு சிறு ஆயாசம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவே. வயதானதினாலும் முன் போல் ஓட முடியாததனாலும் தான்.
ஆதித்யாவைப் பொறுத்தவரை அவன் ஸ்திதப்ரக்ஞன். எதுவும் பொருட்டு கிடையாது. அவன் உண்டு; அவன் சங்கீதம் உண்டு. கர்நாடக சங்கீதம் அப்படியே இருக்கிறது. அவற்றுடன் கடந்த சில வருடங்களாக ஹிந்துஸ்தானியில் அவன் கவனம் திரும்பியிருக்கிறது. ஆனால் தன்னைப் பொறுத்தவரை கர்நாடக சங்கீதக்காரன் தான் என்கிற தீர்மானமும் அவனுக்கு இருக்கிறது. ஹிந்துஸ்தானியில் பெரிய வாத்யக் கலைஞர்களுடன் ஜுகல் பந்தி செய்ய வேண்டும் என்று அவனுக்கு அவா இருக்கிறது. தான் ‘ஹவாயன் கிடாரிலும்’ ஹிந்துஸ்தானி வித்வான் தன் தந்தி வாத்தியத்திலும் வாசித்து ஜுகல் பந்தி செய்ய வேண்டுமென்று அவன் ஆசைப் படுகிறான். ஹிந்துஸ்தானி ராகங்களையும் கர்நாடக சங்கீத ராகங்களையும் எப்போதும் ஒப்புமை செய்து கொண்டேயிருக்கிறான்.
ஆதித்யாவைப் பார்த்த இசைக்கலைஞர்கள் அவனைக் கவர்ந்து கொள்ள நினைத்தார்களே ஏன்? எனக்குத் தெரியாது. ஷட் கால கோவிந்த மாரார் பிறந்ததிலிருந்து சங்கீத நினைவுடனேயே இருந்திருக்கிறார். மேலேயும் கீழேயும் நடந்து கொண்டு பாடிக்கொண்டே இருந்திருக்கிறார். தியாகராஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கத் திருவையாறு சென்றிருக்கிறார்.  ஏழு தந்திகள் உள்ள தம்புராவை வலது கையிலும் டக்கா என்கிற கஞ்சிராவை இடது கையிலும் வாசித்துக் கொண்டே பாடுவாராம். இப்படி அவர் மிகவும் சவுக்கமாக ஒன்றாம் காலத்தில் பாடலை எடுத்து இரண்டு மூன்று என்று அதிகரித்து அதிதுரித காலமான ஆறாம் காலத்தில் தியாகராஜர் முன் பாடினாராம். தியாகராஜர் பிரமித்துப் போய் “எந்தரோ மகாநுபாவுலு அந்தரிக்கி  வந்தனமு” என்று அப்போது தான் பாடினார் என்பார்கள் அன்னமாச்சார்யா சிறுவனாக இருந்த போதே வீதியில் பாடிக் கொண்டு வந்த பஜனை கோஷ்டியின் பின்னலேயே போய் விட்டார் என்பார்கள்.  ஆதித்யா இவர்களைப் போலவா எனக்குத் தெரியாது.
என் பெரியப்பா சங்கீத வித்வானாக ஆக விரும்பி ஆசை நிறைவேறாமல் மரணித்தாரே அவரே மறுபடியும் விட்ட குறை தொட்ட குறையாகப் பிறந்திருக்கிறாரா எனக்குத் தெரியாது. அல்லது நினைத்த நேரங்களில் நினைத்த இடங்களில் தோன்றி மறைந்து கொண்டிருந்ததே சதாஸிவ பிரம்மம் அவரைப் போலவா இவன்? எனக்குத் தெரியாது. பின்னாளில் சோதனையான தருணத்தில் நான் சந்தித்த மனநல மருத்துவர், ‘உங்கள் பிள்ளை பகவான் ஸ்ரீ ரமணர் மாதிரி. இவனைப் போல் உலகில் மொத்தமே இருபது பேர் தான் இருக்கிறார்கள்’ என்றாரே அது உண்மையா? எனக்குத் தெரியவில்லை. நடனப் பள்ளிக்கு ஆதித்யா சென்று கொண்டிருந்தபோது அவனை மகான் என்று பாமர ஜனங்கள் பேசிக் கொண்டார்களே அது உண்மையா? எனக்குத் தெரியாது. பல சமயங்களில் நம் எண்ணங்களைப் படித்து அதற்குத் தகுந்தாற் போல் ஆதித்யா எதிர்வினை செய்கி றான் என்று கூறுவாள் என் மனைவி. அது உண்மையா? எனக்குத் தெரியாது. (எனக்கே நடந்திருக்கிறது. ஒரு முறை “நான் திடீரென்று இறந்து விட்டால் இவன் கதியென்ன?” என்று நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். ஆதித்யா என் முகத்தை உற்று நோக்கிக் கொண்டு “அப்பா! நத்திங் வில் ஹாப்பன் டு யூ” என்றான்! அவன் என் எண்ணத்தைப் படித்தானா? எனக்குத் தெரியாது.)

ஆதித்யாவை ஆராய முயன்றவர்கள் பலர். என் மனைவியின் உறவினர் “அஸ்பர்கர் சிண்ட்ரோம்” என்றார். அது உண்மையா? எனக்குத் தெரியாது. ஆரம்ப நாட்களில் சந்தித்த மனநல மருத்துவர் ‘ஹி இஸ் நாட் ஆட்டிஸ்டிக் பட் இஸ் ஆர்ட்டிஸ்டிக்” என்றாரே அது உண்மையா எனக்குத் தெரியாது. பின்னாளில் அவன்  ரமணரைப் போல் என்று கூறிய மருத்துவர். “ம்யூஸிக் சாவண்ட்” என்றாரே அது உண்மையா? எனக்குத் தெரியாது.
இருவர் காதலிக்கும் போது அவர்கள் காதலிக்கும் விஷயம் ஊருக்கே தெரியும். பெற்றோருக்கு மட்டும் கடைசியில் தான் தெரியும். அது போல் ஆதித்யாவைப் பற்றி வெளியில் எல்லோரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. பத்திரிகைக்கு பேட்டி என்று வந்தவர்கள் நாங்கள் சொல்லாமலேயே கொட்டை எழுத்துக்களில் ‘ஆட்டிஸ்டிக்’ என்று போட்டார்களே அவர்கள் எதை வைத்து அதைத் தீர்மானித்தார்கள்? எங்களுக்குத் தெரியாது.
நான் குறிப்பிடுகின்ற இசைவாணர்கள் ஆதித்யாவை எப்போதும் பாராட்டிக் கொண்டே ஒன்றும் செய்யாமல் ‘சாடிஸ்ட்’ போல் இருந்தார்களே அது ஏன்? எங்களுக்குத் தெரியாது. ஆதித்யா இருக்கட்டும் ; எங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தார்கள்? எங்களுக்குத் தெரியாது. அவர்கள் எங்களிடம் என்ன எதிர்பார்த்தார்கள்? எங்களுக்குத் தெரியாது.
ஆதித்யா என்னவாகிலும் இருந்து விட்டுப் போகட்டும். எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல் எந்த ராகத்திலும் தோன்றியபடிப் பழுது இல்லாமல் பாடல்களையும் கற்பனாஸ்வரங்களையும் பாடுகிறானே எப்படி? எனக்குத் தெரியவில்லை. ராகம் மட்டுமல்லாது லயம் பிரமாணமும் பிரத்யட்சமாக அவனிடம் சித்தியாகி இருக்கிறதே இது எப்படி? எனக்குத் தெரியாது. (அவன் தாளம் போட ஆரம்பித்தால் கை பறக்கும். சொற் கட்டுகளை அவன் வாசிப்புக்கு உச்சரிக்க முடியுமா சந்தேகமே)
பல குழந்தைகளில் ஒருவராய்ப் பிறந்த எஸ் ஜி கிட்டப்பா சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக் கொள்ளவில்லை. “இவன் சங்கீதத்துக்குக் கிட்டயே நாம போக முடியாது போலயிருக்கே!” என்றாராம் கிட்டப்பா நாடகத்துக்குச் சென்ற விஸ்வநாத ஐயர். காம்போதியில் ‘அன்றொரு நாள் குட்டி’ என்றொரு விருத்தம் பாடியிருக்கிறார். அதில் இடையில் ராகபேதம் வருகிறது என்று திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை காவிரிக் கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது சொன்னாராம். கிட்டப்பாவுக்கு மனக்லேசம் வந்து விட்டதால் உடனே எழுந்து விட்டாராம். ஆறுமாதங்கள் அவர் ராஜரத்தினம் பிள்ளையுடன் பேசவில்லையாம். பின்னர் கிட்டப்பா ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரிடம் ‘அது போன்ற பேதங்களில் தவறில்லை’ என்று தெளிவு படுத்திக் கொண்ட பிறகே மனச் சமாதானம் அடைந்தாராம். ராஜரத்தினம் பிள்ளைதான் எப்பேர்ப்பட்ட கலைஞர்! ஒரு கல்யாணக் கச்சேரியில் இரவு பதினொரு மணிக்கு நடபைரவியை வாசிக்க ஆரம்பித்தவர் விடியற்காலை மூன்று மணி வரை வாசித்துக் கொண்டிருந்தாராம். குழந்தை போன்றவர். சென்னையில் வீட்டில் குடியிருந்த போது கரண்ட் பில் கட்டாமல் ஃப்யூஸைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்களாம். அது கூடத் தெரியாமல் இருட்டில் உட்கார்ந்து கொண்டிருந்திருக்கிறார். ரசிகர் ஒருவர் வந்து கரண்ட் பில்லைக் கட்டினாராம்.
டி ஆர் மகாலிங்கம் புல்லாங்குழல் வாசிப்பதில் அவர் தந்தைக்கு ஆரம்பத்தில் விருப்பம் இல்லை என்பார்கள். உறவினர் ஒருவர் தான் புல்லாங்குழலில் மாலிக்கு ஸரிகமபதநி மட்டும் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தாராம். மற்றபடி அவர் வாசித்த குழல் – இசையுலகத்தையே ஸ்தம்பிக்க வைத்த நாதம்- எங்கிருந்து வந்தது? யாருக்கும் தெரியாது. இறக்கும் வரையிலும் புதிர் போல் தான் நடந்து கொண்டார் அவர்.
எஸ் பாலசந்தர் என்று இன்னொரு மகாமேதை. எல்லா வாத்யங்களையும் முயன்று விட்டுக் கடைசியில் வீணையில் அமைந்தார். அவர் வகுப்பு நடத்தும் முறை நூதனமானது என்பார்கள். மேளகர்த்தா ராகங்கள் அனைத்திலும் அலங்காரங்களைப் பல வருடங்கள் கற்றுக் கொடுத்து மாணவர் அதில் கரதலையாகப் பயிற்சி பெற்ற பின்னரே கீர்த்தனத்திற்குப் போவார் என்பார்கள். அவர் வாழ்நாள் பூராவும் யாருடனாவது பொருது கொண்டேயிருந்தார்.
மேற்கூறிய இசை மேதைகளில் யார் போலவும் ஆதித்யா இல்லை. இந்த இசை மேதைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருந்தது போலவே ஆதித்யாவும் வேறு விதமாக இருக்கிறான் என்பது தான் நான் இவர்கள் மத்தியில் காணும் ஒற்றுமை. அவன் இசை மேதையாக இருக்கலாம்; அல்லது பலர் நினைப்பது போல் விசேடக் குழந்தையாகவும் இருக்கலாம்.
எனக்கு- எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவன் எங்கள் பிள்ளை. இன்று அல்லது நாளை பிரபலமாகட்டும். அல்லது இப்போதைப் போலவே அவன் சங்கீதம் வீட்டிற்குள் முடங்கட்டும். சபாக்கள் அவன் திறமையை அங்கீகரிக்கட்டும் அல்லது உதாசீனம் செய்யட்டும். நான் குறிப்பிடுகிற இசைவாணர்கள் மேலும் மேலும் அங்கீகாரங்களைப் பெறட்டும்; எதுவாயினும் பொருட்டு இல்லை. எங்கள் பிள்ளை ஒரு இசை மேதை என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆரம்ப நாட்களில் இருந்த  கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தற்போது கிஞ்சிற்றும் இல்லை.
இந்தத் தொடர் எழுதும் போது எங்கள் முன் மூன்று தெரிவுகள் இருந்தன:
  1. நான் குறிப்பிடுகிற இசைவாணர்கள் வீட்டின் முன் நின்று கொண்டு மண்ணை வாரித் தூற்றுவது
  2. குடும்பமாக விபரீதமான முடிவைத் தேடிக் கொள்வது.
  3. நடந்ததை நடந்தபடி உலகிற்கு எடுத்துச் சொல்வது. ‘தன் நெஞ்சறிவது பொய்யற்க’ என்கிறாரே வள்ளுவர் அதன் படி அந்தரங்க சுத்தியுடன் உள்ளதை உள்ளபடி எடுத்துரைப்பது.
புத்தியுள்ள மனிதன் எடுத்த முடிவாக நான் இந்த மூன்றாவது முடிவைத் தேர்ந்தெடுத்தேன். என் மனைவுக்கும் மகளுக்கும் இதில் விருப்பமில்லை. எங்களின் பாதுகாப்பிற்காகவும் தான் நான் ரட்சையாக இதைச் செய்திருக்கிறேன். நான் இதை எழுதவில்லையென்றால் மேலும் மேலும் அப்பாவிகள் இது போன்ற சுழல்களில் மாட்டிய வண்ணாம் இருந்திருப்பார்கள். அதைத் தடுக்க வேண்டி என்னால் ஆன சிறு முயற்சியாக இதைச் செய்திருக்கிறேன்.
இதை ஒரு வழிகாட்டி நூலாக உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது. காரணம் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். அதனால் அவரவர் சூழ்நிலைக்குத் தக்கவாறே அவரவர் யுக்திகளை வகுத்துக் கொள்ள வேண்டுமென்று கருதுகிறேன். ஆனால் ஒன்றைப் பற்றி நான் மிகவும் தீர்மானமாக இருக்கிறேன். குழந்தைகள் செடிகள் மரங்கள் போன்றவைதாம். அவர்கள் வளர்ந்து கிளை பரப்ப நாம் வசதிகள் வழிகள் செய்து கொடுப்பதில் தவறில்லை. மரங்களை அறுத்துத் தான் மேசைகளும் நாற்காலிகளும் செய்கிறார்கள். அவற்றின் ஒழுங்கும் வடிவமைப்பும் நேர்த்தியும் மரங்களில் இருக்காது தான். ஆனால் மரங்கள் உயிருள்ளவை; மர சாமான்கள் உயிரற்றவை. இதை நாம் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்,
ஆதித்யா விஷயத்தில் ஒரு தெய்வீகக் குறுக்கீடு தேவையா அது நடக்குமா நடக்காமலே போகுமா எனக்குத் தெரியவில்லை. அவன் மிகுந்த பிஸியாய் செயலுள்ள கலைஞனாகப்  இன்னமும் பெரிய அளவில் பரிமளிக்காததற்கு இதைத் தவிர என்னால் வேறு எந்தக் காரணமும் கற்பிக்க முடியவில்லை.
இந்தத் தொடர் ஆரம்பிக்கும் போது தோற்றுவாயாக கீழ்க் கண்ட வரிகளை எழுதியிருந்தேன்.
இடையூறுகளை நீக்குகிற யானை முகத்தோனுக்கு நமஸ்காரம். ஞான யோகி சுப்ரமணியனுக்கு நமஸ்காரம். பிரபஞ்சத்தின் தாய் தந்தை பார்வதி பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம். வேங்கட மலையில் நெருப்பென வீற்றிருக்கும் வேங்கடவனுக்கு நமஸ்காரம். கிராமத்து தேவதைகளுக்கும் ஆபத்சகாயத்துக்கும்  அமராவதிக்கும் நமஸ்காரம். வானில் நின்று நல்ல தீய வார்த்தைகளை ஆமோதிக்கிற அத்ரி, ப்ருகு ருத்ஸ, வசிஷ்ட கௌதம, காஸ்யப ஆங்கிரஸ எனும் சப்த ரிஷிகளுக்கு நமஸ்காரம்.உலகின் கருத்துலக முதல் ஸ்ருஷ்டி கர்த்தா மஹா வியாசனுக்கு நமஸ்காரம். உயிரையும் ஒளியையும் இயக்கத்தையும் உலகிற்கு அள்ளித்  தருகிற ஆதித்யனுக்கும் கர்ம வினைகளுக்கேற்ப பலன்களைத் தருகிற நவக்ரஹங்களுக்கும் நமஸ்காரம்.
என் குல முன்னோன் பரத்வாஜனுக்கு நமஸ்காரம். என் பிதாமஹர்களுக்கும் பிரபிதாமஹர்களுக்கும் அவர் தம் தர்ம பத்னிக்களுக்கும் நமஸ்காரம். என் தாய் தந்தையர்க்கும் மறைந்த என் சகோதர சகோதரிக்கும் நமஸ்காரம்.
தெய்வ வசத்தால் தூண்டப் பெற்று என் பிள்ளை வளர்ந்த கதையை எழுத மேற்கொள்ளும் என்னை தீய சக்திகளிலிருந்தும், வார்த்தைகளிலிருந்தும், தீய நடத்தைகளிலிருந்தும், பொறாமை வஞ்சம் சூது கர்வம் காமம் போன்ற தீமைகளிலிருந்தும் முப்பத்து முக்கோடி தேவர்களும் காக்கட்டும்.
மஹா வியாசன் பாரதம் தடையின்றி எழுத கணபதி உதவியது போல் என் கரங்களிலும் அவர் புகுந்து இந்த வியாசத்தை எழுதட்டும் ஓம்! ஓம்! ஓம்!
இத்தொடர் முடியும் தருவாயில் மீண்டும் இத் தெய்வங்களை வணங்கி அவர்கள் ஆசிகளை எனக்கும் என் மகனுக்கும் என் குடும்பத்திற்கும் வழங்க இறைஞ்சுகிறேன். ஆதித்யா இதோ எனக்குப் பாடல்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறான். காமவர்த்தனி வர்ணத்தில் ஆரம்பித்து, ஓரங்கசாயி காம்போதி, துளஸி பில்வ கேதார கௌளை என்று ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருக்கிறோம். நரஹரி என்று ஹாடகாம்பரியில் ஒரு பாடல் கற்றுத் தருகிறான். இந்த ராகத்தையே இப்போது தான் கேள்விப் படுகிறேன். இதை முடித்து முத்தாய்ப்பாக பஸந்த் பஹாரில் மகாராஜபுரம் சந்தானத்தின் தில்லானாவைப் பாடிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தில்லானாவில் நான் என் வசமிழந்து நெடுங்காலம் இருந்தேன். மும்பையில் இருந்த காலங்கள் அந்தப் பாடல் தந்த நெட்டுயிர்ப்பிலேயே ஆயிரம் பக்க நாவலை எழுதினேன். அதன் சரணத்தில் வரும் வரிகள்:
கலியுகம் தன்னில் கண்கண்ட தெய்வம்
கலி தீர்க்கும் காஞ்சி மாமுனியே
சலிக்கும் மனதை ஒரு நிலைக்குள் நிறுத்த
உந்தன் சந்நிதியை நான் நாடி வந்தேன்
கடைக்கண் பார்வையால் கடையன் என்னையே
காத்தருள் செய்யும் கருணை தெய்வமே
அடைக்கலம் என்று உந்தன் திருவடி தனில்
மகாராஜன் பாடி நிதம் பணிந்திடுவேன்…
தொடரின் ஆரம்பத்தில் ஆதித்யா பிறக்குமுன் சங்கராச்சாரியாரைப் போய் பார்த்ததைப் பற்றி எழுதியிருந்தேன். அவரிடம் இன்றும் தினம் தினம் ஆதித்யாவிற்கு உன் தெய்வீக அருள் எப்போது சித்திக்கும் என்று வினவிக் கொண்டேயிருக்கிறேன். அவர் அருளில் பிறந்த குழந்தைகள் உலகில் நிறைய பேர் மேன்மை அடைந்திருக்கிறார்கள் என்று தினம் தினம் புதுப் புதுக் கதைகளாகக் கேள்விப் பட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் ஆதித்யாவையும் உயர்த்தி விட வேண்டும் என்கிற நம்பிக்கை இன்னமும் எனக்கு இருக்கிறது. அவர் தானே குல குரு?
சாந்தி பஞ்சகத்தின் முத்தாய்ப்பாகப் பின் வரும் மந்திரங்கள் வரும்:
தச்சம் யோரா வ்ருணி மஹே.
காதும் யக்நாய                                                                           .
காதும் யக்ஞ பதயே
தைவி ஸ்வஸ்தி ரஸ்துனஹ
ஸ்வஸ்திர் மானு ஷேப்யஹ
ஊர்த்வம் ஜிகாது பேஷஜம்
ஸந்நோ அஸ்து த்விபதே
ஸம் சதுஷ் பதே
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
இதன் பொருளாவது:
நாங்கள் எல்லா உயிர்களின் நலனுக்காகவும் பரம் பொருளை இறைஞ்சுகிறோம். ஹோமங்களின் போது பரம்பொருளை நாங்கள் பாடுவதற்கேற்ப துன்பங்களும் தடைகளும் அகலட்டும். எல்லா மூலிகைகளும் பெருகி சகல வியாதிகளும் அகலட்டும். தெய்வங்கள் எங்கள் மீது அமைதியைப் பொழியட்டும். இரண்டு கால் இனங்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். நான்கு கால் இனங்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். எல்லா உள்ளங்களிலும் அமைதி நிலவட்டும் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
(முற்றிற்று)

நன்றி: சொல்வனம் 

https://solvanam.com/2018/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-13/

வெள்ளி, 15 ஜூன், 2018

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை XII

அத்தியாயம் 32


இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் போது தற்செயலாக ஒரு நீண்ட நாள் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் தொடர்பு கொண்ட வேறு இரு நண்பர்களிடமும் இவரிடமும் இந்தத் தொடர் பற்றிப் பேச்சு வாக்கில் தெரிவித்திருந்தேன். மூவரும் படித்துவிட்டு ஒரே குரலில் என்னிடம், “ஏன் இவ்வளவு வெறுப்பு?” என்று வினவினார்கள். என்னை நீண்ட நாளாகத் தெரிந்திருப்பதால் – இது – இத்தொடரின் தென்படும் துவேஷம் அவர்களுக்கு என் இயல்புக்கு மாறான முரணாகத் தோன்றியிருக்க வேண்டும். மூன்று பேரும் ஒரு மித்த குரலில் சொல்லியிருப்பதால் அது உண்மையாகவே இருக்க வேண்டும். இதைத் தவிர வேறோர் நண்பரும் தானாகப் படித்து விட்டு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வெறுப்பை நான் பார்க்கவில்லைபிள்ளையைப் பற்றித் தகப்பன் வெளிப் படுத்தும் ஆதங்கத்தையும் ஆற்றாமையையும் நான் பார்த்தேன்” என்றார். இவர் கூறுவதும் உண்மையாக இருக்கலாம்.
நான் மேற்கூறிய ஒரு நண்பரிடம், “தொடர் எழுதப் போகிறேன்” என்று முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். அவர் என்னிடம், “ஆதித்யாவோட சங்கீதத் திறமையை மட்டும் எழுதினாப் போறாது. அவன்ட்ட இருக்கற குறைபாடுகளையும் நீ எழுதணும்” என்று கேட்டுக் கொண்டார். சற்று ஊன்றிப் பார்க்கும் போது – இவர் கூறியதைக் கட்டுடைத்துப் பார்க்கும் போது – இவர் ஆதித்யா ஒரு சங்கீத விற்பன்னன் என்று விளம்பரப் படுத்தப் படுவதை விரும்பாமலும் மாற்றுத் திறனாளி என்கிற வகையில் தான் விளம்பரப் படுத்தப் படவேண்டும் என்று நினைப்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் இயல்பில் உள்ள கூறு என்னவென்றால் அறிவுத் திறனுக்கும் மேதைமைக்கும் தானும் தன் குடும்பமும் வம்சாவளியினரும் தான் மொத்த குத்தகை என்று நினைப்பது தான். அதனால் அவர் வார்த்தைகளில் நான் ஆச்சரியம் அடையவில்லை. 
இன்னொரு நண்பர் என்னிடம் நீங்கள் எழுதுவது எல்லாம் அவனுக்குப் புரிகிறதா?” என்று கேட்டார். அவர் சினிமாப் பாடல்களில் பெரிய காதல் கொண்டவர். இந்த நண்பருக்குப் பல முறை ஏற்கெனவே நான் ஆதித்யாவின் ஒலிப் பேழைகளையும் கச்சேரியின் வலைக் கண்ணிகளையும் அனுப்பியதுண்டு. அவர் நான் அனுப்பியவற்றைக் கேட்க வேண்டாம் – பொருட்படுத்தக் கூடத் தயாராக இல்லை. இத்தனைக்கும் இவருக்கு கர்நாடக சங்கீதத்தில் மிகப் பெரிய தோய்வு என்று சொல்ல முடியாது. கேட்பார் – அவ்வளவு தான் – கண் முன்னே ஒரு திறமை பளிச்சிடுவதை அங்கீகரிக்க இவருடைய அகங்காரம் இடங்கொடுக்கவில்லை. அதே சமயம் நான் எழுதுவது ஆதித்யாவிற்குப் புரிகிறதா?’ என்கிறார்! ஆரம்ப நாட்களில் ஆதித்யா பல் வலி என்று அழுத போது எங்களிடம் ஒரு மாமி உனக்கெப்படித் தெரியும்அவன் சொன்னானா?” என்று கேட்ட மாதிரித் தான் இதுவும். இப்படிக் கேட்டதன் மூலம் என்னைப் புண்படுத்துகிறோம் என்கிற பிரக்ஞை கூட அந்த நண்பருக்கு இல்லாதது தான் விநோதம். 
இன்னும் சில வகையினர் ஆதித்யாவை பிடித்து ஒரு விஷேடப் பள்ளி அல்லது அரங்கில் தள்ளுவதிலேயே குறியாக இருப்பார்கள். கடலூர்ல ஒரு லேடி பள்ளிக் கூடம் நடத்தறா. உன் பையனை அங்க போட்டா அவன் இஷ்டத்துக்குப் பாடிக்கலாம்இருந்துக்கலாம்” என்பார்கள். இவர்கள் ஆதித்யா பாடுவதை அரங்கேற்றத்திலோ கச்சேரிகளிலோ நேரடியாகக் கேட்டிருப்பவர்கள். அதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. இது போன்ற ஒரு வட்டத்துக்குள் தான் ஆதித்யா மாதிரிக் குழந்தைகள் அடைபட்டுக் கிடக்க வேண்டும். ஆதித்யாவுக்காக நான் மாட்டிக் கொண்ட பல குருநாதர்களில் ஒரு குருநாதருக்கு ஆல் இந்தியா ரேடியோவில் நண்பர்கள் உண்டு. அவரிடம் ஆதித்யாவுக்கு ஆடிஷனுக்கு’ ஏற்பாடு செய்ய முடியுமாஎன்று கேட்டேன். அவர் நன்னா இருக்கறவாளுக்கே நடக்க மாட்டேங்கறது….” என்றார். இவர் வந்த புதிதில் யாரும் நினைத்தே பார்க்க முடியாத ஒரு தொகையைப் ஃபீஸாகக் கேட்டு வாங்கிக் கொண்டு டெவலப் பண்ண முயற்சி பண்றேன்” என்றவர். நாலு வகுப்பு போனவுடன் என்னிடம், “சார் ஊத்து மாதிரி ஸ்வரம் கொட்றது சார். எப்படி சார்?” என்று வியந்து போனார். இவர் தான் நன்னா இருக்கறவாளுக்கே நடக்க மாட்டேங்கறது…….” என்கிறார்!
எங்கே தவறுவேண்டுமென்றெ செய்கிறார்களாஅல்லது எங்கள் இயலாமையைப் புரிந்து கொண்டு தலைமேல் ஏறி உட்காருகிறார்களாநான் குறிப்பிடும் குருநாதர் ஆதித்யா ஸ்வரங்களில் போடும் கணக்குகளை மீண்டும் மீண்டும் தாளக் கட்டுகளில் சொல்லச் சொல்லிக் குறிப்பெடுத்துக் கொண்டு தன் கைபேசியில் பதிவு செய்வார். அதை எங்கே உபயோகப் படுத்திக் கொள்கிறார் என்பது இன்று வரை எனக்குப் புரியாத மர்மமே. அடுத்த முறை ஆதித்யா அதே ராகத்தில் அதே கீர்த்தனையில் ஸ்வரம் பாடினால் தாளக் கணக்குகள் சுத்தமாக மாறியிருக்கும். இதே குருநாதர் என்னிடம் ஒரு மனநல மருத்துவமனையைக் குறிப்பிட்டு அங்கே முயற்சி செய்யுங்களேன்’ என்று சொன்னார். ஆதித்யா அவதார புருஷன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்!
குருநாதர்கள் எல்லோரும் தியாகராஜ ஸ்வாமிகள் என்று தம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தியாகராஜ ஸ்வாமி லோகாயதமாகப் பணம் சம்பாதிக்காமல் உஞ்சவிருத்தி எடுத்து ஜீவனம் செய்து வந்தவர். சரபோஜி மகாராஜா தனம் சமர்ப்பித்துச் சபையில் வந்து பாட அழைத்த போது நிதி சால சுகமா’ என்று பாடியவர். இவருடைய மேன்மையை இன்றிருக்கும் குருநாதர்களுடன் எந்த வகையில் ஒப்பிட முடியும்மனமெல்லாம் பணம் புகழ் செல்வாக்குவாயில் மட்டும் ஆன்மீகம் தெய்வீகம்! ஜானகி ராமன் எழுதுவாரே நடன் விடன் காயகன்’ என்று அது போல் தான் பெரும்பாலானவர்கள் நடந்து கொள்கிறார்கள். இதனால் தானோ என்னவோ காந்தர்வ வேதம் என்று புகழப் பட்டாலும் சங்கீதத்தை வேத அத்யயனத்துக்கு ஒரு படி தாழ்த்தித் தான் வைத்திருக்கிறார்கள்.
 இந்தியாவைப் பொறுத்தவரை அமைப்பில்லாத துறைகளில் இது தான் நிலை. மத்திய அரசு வேலை அல்லது மாநில அரசு வேலை என்றால் ஒரு அமைப்பு இருக்கிறதுசீரான இடைவெளியில் சம்பளம் வருகிறது. குறிப்பிட்ட மணிநேர வேலை. வருடா வருடம் சம்பள உயர்வு பதவி உயர்வுக்கான தீர்மானமான சட்ட திட்டங்கள். இவற்றில் திருப்தி அடையவில்லை என்றால் குறைகளைத் தெரிவிக்கத் தெரிந்தெடுக்கப் பட்ட அமைப்புகள். அதுவும் திருப்தி தராத  பட்சத்தில் குழுவாகப் போராடக் களம். இவை எதுவுமே கர்நாடக சங்கீத வல்லினங்களிலோ சினிமா போன்ற மெல்லினங்களிலோ கிடையாது. ஆங்காங்கே இருக்கும் குருபீடங்கள் வைத்தது தான் சட்டம். தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் சிலவற்றில் சில சினிமா நடன இயக்குநர்கள் வருகிறார்கள். அவர் என்ன பந்தா பண்ணுகிறார்கள்அவர்களை பார்த்து நடன உதவியாளர்கள் பயந்து நடுங்குகிறார்கள்! பத்திரகிரியார் தனக்கு முன் முக்தி அடைந்ததைப் பட்டினத்தார் அதிர்ச்சியுடன் உள் வாங்கினாலும் அதன் பிறகு தன் முக்திக்கான வழிமுறைகளை மாற்றிக் கொண்டார்மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அது போல் இப்போது நடக்குமா என்றால் சந்தேகம் தான்.
ஆதித்யா போன்ற குழந்தைகளுக்கு ஒரு துறையில் திறமை அதீத வளர்ச்சி அடைந்திருப்பதால் வேறு சில துறைகளில் கொஞ்சம் குறை இருப்பது தவிர்க்க முடியாது தான். அப்போது குடும்பமும் சமூகமும் என்ன செய்ய வேண்டுமென்றால் ஒத்துழைத்து அவர்களை பொது வெளியில் தான் இழுத்து விட வேண்டும். இதற்காகத் தான் விஷேடப் பள்ளிகள் சில வருடங்கள் பயிற்சி அளித்த பின் எல்லோருக்குமான பள்ளியில் அவர்களை கோத்து விட்டு விட வேண்டும் என்கிறார்கள். அது நடக்கிறதா என்றால் சந்தேகமே. ஒரு முறை விஷேடப் பள்ளி என்றால் வாழ் நாள் பூரா அங்கே தான் காலம் கழிக்க வேண்டும் என்று சமூகம் நினைப்பது எவ்வளவு பெரிய சாபக்கேடு?.
இந்த விசேடப் பள்ளிகளுக்கு நான் சென்றிருக்கிறேன். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்வாய் குழறி நடக்க முடியாத குழந்தைகள்கட்டுப்பாடு இல்லாமல் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகள்மங்கோலாய்ட் இந்தக் குழந்தைகளுக்குமான பள்ளிகள் இவற்றில் டிஸ்லெக்ஸியா ஆடிஸத்தின் ரேகைகள் உள்ள குழந்தைகளுக்குத் தனிப் பள்ளி கிடையாது. நான் முதலில் குறிப்பிடும் குழந்தைகள் தங்களின் வேலைகளைத் தாங்களே செய்து கொள்ள நீண்ட வருடங்கள் பிடிக்கும். இவற்றுடன் சுயசார்புள்ள ஆனால் சிறு சிறு குறைபாடுள்ள குழந்தைகளை எப்படிச் சேர்க்க முடியும்?
இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. இந்த விஷேடப் பள்ளிகளிலிருந்து விஷேப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்க வீட்டிற்கு வருவார்கள். இவர்கள் என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் மாணவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதற்கெல்லாம் வரை முறை கேள்வி கேட்பாடு ஒன்றும் கிடையாது. ஃபீஸ் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என்று வாங்கிக் கொள்வார்கள். அவர்களுக்குள் நிலவும் போட்டியால் அந்தப் பள்ளியில் வேலை பார்க்கும் எழுத்தர் தட்டச்சர் எல்லோரும் ஆசிரியர்கள் என்கிற போர்வையில் வந்து விடுவார்கள். நாம் கண்டு பிடிப்பதற்குள் நாளாகி விடும்.
ஆதித்யாவை ஓரிரு முறைகள் இது போன்ற பள்ளிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன். அங்கிருக்கும் குழந்தைகள் போடும் சத்தத்தில் ஆதித்யா அவர்களை உஷ் உஷ்” என்று அடக்கிக் கொண்டிருந்தான். முதலுக்கே மோசம் ஆகி விடும் போல் ஆகிவிட்டது. எங்களுக்குப் பரிந்துரைத்திருந்த நண்பரும் இதையெல்லாம் பார்த்து விட்டுத் தீர்மானமாக எங்களிடம் இது போன்ற இடங்கள் ஆதித்யாவிற்கு சரிப்படாதுதேவையும் இல்லை. நீங்கள் வீட்டிலேயே பார்த்துக் கொள்வது தான் நல்லது’ என்று சொல்லி விட்டார்.
வீட்டிற்கு வழக்கமாய் வரும் ஒரு ஆசிரியர் பரிட்சையில் ஆதித்யாவிற்கு உதவ முடியும் என்பதைச் சூசகமாக உணர்த்தினார். பின்னர் மெதுவாக என்னிடம் அவர் அன்னைக்கு வீட்டின் பேரில் மூன்று லட்சம் ரூபாய் கடனிருப்பதாகவும் தெரிவித்தார். எனக்கு முதலில் புரியவில்லை. அந்த அன்பர் அந்த மூன்று லட்சம் ரூபாயை நான் கொடுக்க வற்புறுத்தியிருக்கிறார். அந்த வருட முடிவில் ஆதித்யாவைத் தவிர மற்ற எல்லா மாணவர்களும் பரீட்சையில் தேறியிருந்தார்கள். ஆதித்யா பரிட்சையில் தேறுவதற்கான விலை ரூபாய் மூன்று லட்சம். அதை நான் கொடுக்காததால் அந்த முறை ஆதித்யா பரீட்சையில் தேறும் வாய்ப்பினை இழந்தான்.
ஹெலன் கெல்லருக்கு ஒரு அருமையான கவர்னஸ்’ அமைந்தார். குடும்ப உறுப்பினர்களைத் தவிர வாழ்வியல் முறைகளைக் கற்றுக் கொடுக்க அந்த நாட்களில் பிரபுக் குடும்பங்களில் கவர்னஸ்ஸை அமர்த்துவது உண்டு. சுய சரித்திரம் எழுதும் பிரபலங்களில் ஒன்றிரண்டு பேர் அவர்கள் ஆரம்ப நாட்களில் உருப்பெறுவதில் கவர்னஸ்’ மாதர்கள் எப்படிப் பெரும் பங்கு ஆற்றியிருக்கிறார்கள் என்று விவரித்திருக்கிறார்கள்.
 அரசில்லா நிறுவனம் நடத்தும் ஒரு நண்பரிடம் ஆதித்யாவின் உரையாடல் திறமையை மேம்படுத்த ஒரு நபர் கேட்டிருந்தேன். அவரும் ஒரு பெண்ணை அனுப்பி வைத்தார். அந்தப் பெண் வந்தவுடனே ஆதித்யா அவளுக்குப் பாட்டு கற்றுக் கொடுப்பது என்று ஆரம்பித்தான். ஏதாவது ஒரு புத்தகத்தின் ஏதாவது பக்கத்தை எடுத்து வைத்துக் கொண்டு பாட்டைப் பாடுவான். இந்தப் பெண் ஆதித்யாவிற்கு எல்லோரும் சாப்பிடும் உணவைக் கொடுக்கக் கூடாதுகுறிப்பாகப் பால் சம்பந்தப் படும் ஒன்றையுமே கண்ணில் காண்பிக்கக் கூடாது என்று ஆரம்பித்தது. இந்தப் பெண்ணே உணவு சரி விகித நிபுணர் ஒருவரையும் சிபார்சு செய்தது. நாங்களும் நண்பர் சொல்லித் தான் இந்தப் பெண் இது போல் நடந்து கொள்கிறது போலிருக்கிறது என்று நினைத்து அந்த நிபுணரைச் சந்தித்தோம். அவர் பால் வெண்ணெய் நெய் இதெல்லாம் தவிர்க்கச் சொன்னார். கோதுமைப் பொருட்களும் கூடாதென்றார். பாலுக்கு பதிலாக சோயா பால் உபயோகித்துக் கொள்ளலாம் என்றார். இதைக் கொஞ்ச நாள் முயன்று பார்த்ததில் ஆதித்யாவிற்கு நூல் நூற்றாற் போல் ஆகி விட்டது. சீக்கிரமே களைப்படைய ஆரம்பித்தான். எங்களுக்குக் கவலை பிடித்ததில் எங்களிடம் இந்தப் பெண்ணை அறிமுகப் படுத்திய நண்பரைத் தொடர்பு கொண்டு நடந்ததைத் தெரிவித்தோம். அவர் திடுக்கிட்டுப் போனார். அவளைக் கான்வர்சேஷன்‘ டெவலப் பண்ணச் சொல்லித் தானே அனுப்சேன்” என்றார். என்ன நடந்ததென்றால் அந்தப் பெண் குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டுப் பெண்மணியின் குழந்தை விஷேடக் குழந்தை என்பதால் அதற்கு இது போன்ற வைத்தியங்கள் நடந்திருக்கின்றன. அதை ஏதோ அரைகுறையாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு அந்தப் பெண் எங்களிடம் அதைக் கிளிப் பிள்ளை மாதிரி வந்து ஓதியிருக்கிறது. அந்த உணவு முறைஅந்தப் பெண் வகுப்புகள் இரண்டையும் ஒரு சேர ஒழித்துக் கட்டினோம்.
ஆதித்யா அருமையாகப் பாட்டு சொல்லிக் கொடுப்பான். மற்ற சமயங்களில் பொறுமை இல்லாமல் நடந்து கொள்கிறவன் பாடல் கற்பிக்கும் போது அளவு கடந்த நிதானத்தையும் பொறுமையையும் கடைப் பிடிப்பான். நாம் எவ்வளவு முறை தப்பு செய்தாலும் அவ்வளவு முறை மீண்டும் மீண்டும் பாடித் திருத்துவான். சலிப்படையவே மாட்டான். இது போல் நான் அவனிடம் ஐம்பது கீர்த்தனங்கள் கற்றுக் கொண்டிருக்கிறேன். சில அரிதான கீர்த்தனைகளும் அடக்கம். நெனருஞ்சரா” என்று ஒரு தியாகராஜ கீர்த்தனை. இதை சுமார் முப்பது வருடங்களுக்கு முன் கான சரஸ்வதி பாடிக் கேட்டிருக்கிறேன். அதைக் கேட்டதிலிருந்து அது எங்காவது கிடைக்குமா என்று அலைந்தேன். நீண்ட வருடங்களூக்குப் பிறகு மாண்டலின் ஸ்ரீநிவாஸ் வாசிப்பைக் கேட்டு மெய் மறந்தேன். (இப்போது நிறைய பேர் பாடுகிறார்கள்). இது சாருகேசி என்று நினைத்திருந்தேன். ஒரு நாள் ஆதித்யாவிடம் கேட்ட போது அவன் சிரித்துக் கொண்டே சிம்ம வாஹினி’ என்றான். சரஸாங்கியின் ஜன்யமாம். சரஸாங்கி 27 ஆம் மேளம். சாருகேசி 26 ஆம் மேளம். தங்கை பெண்ணை அக்காள் என்று அவ்வளவு நாள் நினைத்திருக்கிறேன்!
அதை அவனிடம் கற்றுக் கொண்டேன். பின்னொரு நாள் தியாகராய நகரில் ஒரு சபாவில் ஒரு வளரும் கலைஞர் பாடிக் கொண்டிருந்தார். நானும் ஆதித்யாவும் கேட்டுக் கொண்டிருந்தோம். பக்கத்தில் ஒரு மனிதரும் அவர் பையனும் வந்து உட்கார்ந்தார்கள். அந்த மனிதரை எனக்கு முன்பே சற்று அறிமுகம்.
மின்னணு ஹார்மோனியம் வாசிப்பில் அந்தப் பையனை பிரபலமாக்க முயன்று கொண்டிருந்தார் அவன் தந்தை. மழலை மேதை என்று எங்கு பார்த்தாலும் விளம்பரம். தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக அந்த சமயத்தில் பெரிய பெரிய புகைப் படங்களுடன் பையனை விளம்பரப்படுத்தி மாநகராட்சிக் கழிப்பிடம் கூட விடாமல் போஸ்டர் ஓட்டியிருந்தார்கள். பையன் வாசிப்பில் பெரிதாகப் பழுது சொல்ல முடியாது தான். அவனின் தந்தை குதிரைக்குக் கடிவாளம் கட்டியது போல் பையனை முன்னுக்குக் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார்.
அவன் அன்னை பெரிய இசைவாணரிடம் ஒரு நாள் வகுப்புகளைப் பற்றிக் கேட்பதற்காகச் சென்றிருக்கிறார். அன்று பெரிய இசைவாணரிடமிருந்து என் மனைவிக்கு ஆதித்யாவை உடனடியாகக் கூட்டி வரும்படி அழைப்பு வந்தது. என் மனைவியும் ஆதித்யாவைக் கூட்டிக் கொண்டு சென்றிருக்கிறாள். யாராவது இசை மேதை என்று மார்தட்ட  வந்தால் அவர்களை அடக்க ஆதித்யாவைப் பெரிய இசைவாணர் உபயோகித்துக் கொள்வதைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். அந்தப் பிள்ளை அப்போதெல்லாம் மழலை  மேதை என்று அறியப் பட்ட இன்னொரு இசைவாணரிடம் வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்திருக்கிறான். அதைப் பற்றியெல்லாம் அவன் அன்னை குறிப்பிட்டுக் கொண்டிருந்தாராம். பையனைப் பற்றிக் குறிப்பிடும் போது ராத்திரி தூங்கிண்டிருப்பேன் சார். வந்து எழுப்புவான். ரமணி சார் புல்லாங்குழல் கேக்கணும்மா’ அப்படிம்பான் சார். சிடியை எடுத்துப் ப்ளேயர்ல போட்டுக் குடுப்பேன். கேட்டிண்டிருப்பான்…………” என்று கூறியிருக்கிறார். பையனின் குருநாதர் சரியாக வகுப்புகள் எடுப்பதில்லை என்று அவர் வருத்தப் பட்டிருக்கிறார். (எல்லா இடங்களிலும் இதே கதை தான் போலிருக்கிறது!) பெரிய இசைவாணர் சிரித்துக் கொண்டே ஏன் ஊர்ல தான இருக்கார்?” என்று கேட்டிருக்கிறார்.
இந்தப் பின்னணியில் நான் பணியாற்றும் வங்கியில் இந்தப் பையனுக்கு சுதந்திர தினத்தன்று ஒரு கச்சேரி ஏற்பாடு செய்து கொடுத்தேன். குடும்பமாக வந்து கச்சேரியை வழங்கி விட்டுப் போனார்கள். இந்தப் பையனின் தந்தையிடம் தன் மகனை சங்கீத உலகத்துக்குள் செலுத்த ஒரு மூர்க்கத்தைப் பார்த்தேன். அதே மூர்க்கத்துடம் இவர் எல்லா இடங்களிலும் கையில் பையனின் திறமை விபரங்களுடன் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு முறை வீதியில் சென்று கொண்டிருந்த என்னிடமே ஒரு நோட்டீஸை நீட்டினார். நான் ஏற்கெனவே இருந்த  அறிமுகத்தை வைத்து அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பேச முயன்றேன். ஒன்றும் நடக்கவில்லை. கவனமேயில்லாமல் ஓ அப்படியா?” என்று கேட்டுக் கொண்டு என் பையனை மறந்திடாதீங்கோ சார். கச்சேரிக்கு அவசியம் வந்துடுங்கோ” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
நான் குறிப்பிட்டிருந்த கச்சேரியில் இவரும் பையனும் எங்கள் பக்கத்தில் உட்கார்ந்த போது வித்வான் சதாமதிம்” என்கிற கீர்த்தனையை ஆரம்பித்தார். பையனின் தந்தை என்னைப் பெருமை பொங்கப் பார்த்துக் கொண்டே பையனிடம் என்ன ராகம்?’ என்று கேட்டார். பையன் விகல்பமில்லாமல் எங்களைப் பார்த்துக் கொண்டே அப்பா! ஆதித்யா!” என்றான். அவர் அதைக் கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் ராகம் என்ன என்று துளைத்தெடுத்தார். பையன் பதில் சொல்கிற வழியாக இல்லை. ஆதித்யா பொறுத்துப் பார்த்து விட்டுப் புன்னகையுடன் கம்பீர வாணி” என்றான். பையனின் தந்தை பையனைக் கூட்டிக் கொண்டு அவசரமாகக் கிளம்பிப் போனார். அன்றைக்குப் பையனுக்குப் போதாத நாளாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன்.
இந்தக் கீர்த்தனையை அப்போது தான் கேட்கிறேன். அதற்குப் பின் இக் கீர்த்தனையை ஆதித்யாவிடம் கற்றுக் கொண்டேன். இக் கீர்த்தனையை நான் பாடும் போதெல்லாம் தந்தை பையனை இழுத்துக் கொண்டு அவசர அவசரமாக ஓடியது நினைவுக்கு வந்து நகைப்பை விளைக்கிறது!
அத்தியாயம் 33
ஆதித்யாவின் குரல் நன்கு அமர்ந்து இப்போது உச்சத்தில் இருக்கிறது. இப்போது இவனுக்கு நியாயமாகப் பார்த்தால் கச்சேரிகள் நிறைய செய்ய வேண்டிய காலம். 12.03.2017 அரங்கேற்றம் முடிந்து ஒரு வருடத்திற்கும் மேலாக ஆகியும் யாரும் கதறிக் கொண்டு வாய்ப்புத் தர முன் வரவில்லை. பெரிய அளவில் அதைப் பெரிய வேலையாக எடுத்துக் கொண்டு சிபாரிசு செய்ய குருமார்கள் தயாராக இல்லை. இவனுடன் ஆரம்பித்த பலர் இன்று ஓரளவுக்காவது பிரபல்யம் ஆகிச் செயலாக இருக்கிறார்கள். ஆதித்யா மட்டும் ஆரம்பித்த இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறான்.
எங்கள் ஊரில் மாமூண்டியா சேர்வை என்று ஒரு பாராக் காவல்காரர் அரண்மனைச் சேவகம் செய்து கொண்டிருந்தார். சங்கீதத்தில் குறிப்பாக லய வாத்யத்தில் பெரிய ஈடுபாடு. சங்கீத்தையே உபாசிக்க வேண்டும் என்று மாரியப்பத் தவில்காரர் என்பவரிடம் போனார். மாரியப்பத் தவில்காரர் தவில் உனக்கு சரிப் படாதுஅது எங்கள் ஜாதிக்காரர்கள் தனிச் சொத்து என்பதால் உன்னை விட மாட்டார்கள். நீயே ஒரு வாத்யத்தை கண்டு பிடித்து அப்யாஸம் செய்” என்று அறிவுறுத்தினார். அதன் பிறகு தான் மாமூண்டியா சேர்வை உடும்புத் தோலைக் கட்டிக் கஞ்சிரா என்று புதிதாக ஒரு வாத்தியத்தை உண்டாக்கி  அதில் அப்யாஸம்  செய்து மகா லய வித்வானாக உயர்ந்தார். அவரைப் பெரிதும் பாராட்டி ஊக்குவித்தவர் தஞ்சாவூரைச் சேர்ந்த நாராயணசாமி அப்பா என்கிற லய வித்வான். ஆதித்யாவைப் பொறுத்தவரை மாரியப்பத் தவில்காரர் போன்றோ நாராயணசாமி அப்பா போன்றோ குருநாதர்கள் அமையவில்லை என்பது தான் சோகம். இது போன்ற குருநாதர்கள் இல்லாவிட்டாலும் உயர்த்துவதற்காவது சந்தையில் சில ஆர்வலர்கள் வேண்டும். இந்தியச் சூழலில் இதற்கான வாய்ப்புகள் கம்மி. எங்கு சென்றாலும் குருநாதர் யார் என்கிறார்கள். குருநாதர் பெயரைச் சொன்னால் அவரிடம் நேரடியாகவோ மறைமுகவோ தொடர்பு கொள்கிறார்கள். அப்போது குருநாதரின் வார்த்தை தான் சிஷ்யனின் எதிர்காலத்தையே  தீர்மானிக்கிறது. பெரிய இசைவாணர்கள் போன்ற செல்வாக்கானவர்கள் சொன்னால் இசையுலகமே ஸ்தம்பிக்கிறது எனும் போது என்ன திறமை இருந்து என்ன நடந்து விடப் போகிறது என்கிற ஆயாசம் தான் ஏற்படுகிறது.
டிகே கோவிந்த ராவிற்கு இது நடந்தது என்பார்கள். ஜிஎன்பியின் ஒலிப் பதிவுகளை சங்கீத உலகின் முடிசூடா மன்னராகிய ஒரு வித்வான் ஒழித்துக் கட்டினார் என்பார்கள். மதுரை மணியின் சிஷ்யர் திருவெண்காடு ஜெயராமன் கச்சேரிக்காக யாரிடமும் போய் நிற்க மாட்டார் என்பார்கள். கூப்பிட்ட இடத்தில் மட்டும் பாடுவார் என்பார்கள். புதுக்கோட்டையில் நரசிம்ம ஜயந்தியில் வந்து பாடுவார். கொண்டை ஊசி நாமமும் பஞ்சகச்சமுமாக வந்து ஆத்மார்த்தமாகப் பாடுவார். அப்படியே பாடிக் கொண்டு மூன்றாம் பேர் அறியாமல் போய்ச் சேர்ந்து விட்டார்.
கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு நபரிடம் தொடர்பு கொண்டேன். இந்த நண்பர் ரமணரின் பெயரால் விளங்கி வரும் தியான மையத்தில் இசைக் கச்சேரிகளைத் தெரிவு செய்து ஏற்பாடு செய்பவராக இருக்கிறார். இவர்களின் அரங்கத்தில் ஆதித்யாவைப் பாட வைக்கலாமே என்று நினைத்துத் தொடர்பு கொண்டேன். வயதானவர். இனிமையாகப் பேசிக் கொண்டிருந்தார். சள சள‘ வென்று பேசிக் கொண்டிருந்தவர் பாடவும் செய்தார். அந்தக் காலத்தில் பாட்டு  கற்றுக் கொண்டாராம். பேச்சு வாக்கில் யார் குருநாதர்?’ என்று கேட்டார். நான் பெரிய இசைவாணரின் பெயரைச் சொன்னேன். ஓ எனக்கு நன்னாத் தெரியுமே!’ என்று கூறியவர் அதற்குப் பின் நான் சில நாட்களுக்குப் பிறகு அவருடன் பேச முயன்ற போது பல முறை நிராகரித்த அழைப்புகளுக்குப் பிறகு என் மீது வள்ளென்று விழுந்தார். எப்போ வேணா சான்ஸ் குடுப்போம்பத்து வருஷம் கூட ஆகலாம். சும்மா சும்மா ஃபோன் பண்ணித் தொந்தரவு பண்ணக் கூடாது’ என்று. எப்படி! நான் பணம் கேட்கவில்லை பக்க வாத்தியங்கள் நானே ஏற்பாடு செய்து கொள்கிறேன். இடம் மட்டும் தான் அவர்கள் தருகிறார்கள். அதற்கே இப்படி! அதுவும் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் பகவத் ஸ்வரூபமாகவே மதித்து உயிர் வாழ்ந்த ரமணரின் பேரால் நடத்தப் படும் மன்றத்தில்! என்னுடன் பேசிய பிறகு இந்த மனிதர் பெரிய இசைவாணரைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அவர் தான் அவர்கள் ஆதித்யா பாட அனுமதிப்பதைக் கலைத்திருக்க வேண்டும்.
கொஞ்ச நாட்களுக்கு முன் எல்லா சபாக்களுக்கும் ஆதித்யாவின் பயோ டேட்டாவையும் யுட்யூப் கண்ணிகளையும் மின்னஞ்சலில் அனுப்பி வாய்ப்பு கேட்டிருந்தேன். யாரும் லட்சியமே செய்யவில்ல. ஒரே ஒரு சபாக்காரர் மட்டும் ஆஸ்திரேலியாவிலிருந்து பதில் போட்டிருந்தார். ஆதித்யாவின் முன்னேற்றத்தை நாங்கள் ஸ்வாரஸ்யத்துடன் கண்காணிக்கிறோம்,’ என்று. இதற்கு என்ன அர்த்தம்கச்சேரி செய்ய அழைப்பாராமா மாட்டாராமாயார் கேட்பதுஇந்தப் பல்வேறு சபாக்களின் முகவரிகளை ஒரு அட்டவணைப் புத்தகத்திலிருந்து எடுத்திருந்தேன், இது உபயோகமாக இருக்கும் என்று. போன டிசம்பர் ஸீஸனில் இதை விலைகொடுத்து வாங்கினேன். தங்குமிடம் முதற்கொண்டு மைக் செட் வரை விபரங்கள் பல்வேறு வித்வான்கள் சபாக்கள் சங்கீதப் பள்ளிகள் அரங்கங்கள் போன்று விரிவாக விபரங்கள் அடங்கிய இந்தப் புத்தகம் வருடா வருடம் வெளியிட்ட உடனே விற்றுத் தீர்ந்து விடுகிறது. கச்சேரி செய்ய வேண்டாம், இது போல் ஒரு புத்தகம் போட்டாலே போதும் என்று தோன்றுமளவிற்கு இதில் பணம் உள்ளது என்று நம்பும் படிக்குத் தான் இந்தப் புத்தக விற்பனை அமைந்துள்ளது. இதில் ஆதித்யாவின் பெயரைப் போடலாமே என்று தொடர்பு கொண்டேன். அதற்கு ஒரு சிறிய தொகையை கட்டணமாக அந்தப் புத்தகத்திலேயே குறிப்பிட்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து வந்த பதில் புத்தகத்தில் இடம் பெற வேண்டுமென்றால் சென்ற வருடத்தில் சென்னையின் பிரதான சபாக்களில் எட்டு கச்சேரிகளாவது செய்திருக்க வேண்டும்’ என்பது தான். நான் அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த போது அதிகம் கேள்விப் படாத பெயர்களே இருந்தன. ஒரு கச்சேரியாவது செய்திருப்பார்களா சந்தேகமே. நான் அமைப்பாளருக்கு, ‘புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் உங்கள் விதியின் கீழ் வருகிறார்கள் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்’ என்று எழுதினேன். அதற்கு அவர் சென்ற வருடங்களில் எல்லா பெயர்களையும் போட்டுக் கொண்டு தான் இருந்தோம். ஏற்கெனவே இடம் பெற்ற பெயர்களை நீக்க முடியாது. நான்கு வருடங்களாக இந்த விதியைப் பின்பற்றி வருகிறோம்,‘ என்று பதில் போட்டிருந்தார்.
எப்போதாவது அபூர்வமாக விநோதமான கச்சேரிகள் வரும். ஒரு முறை நண்பர் ஒருவர் மூலமாகச் சென்னை  புறநகரில் பெரிய ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும் சாமியார் ஒருவரின் அழைப்பிற்காக ஆசிரமம் சென்றிருந்தோம். சென்னையிலிருந்து சுமார் 30-35 கி.மீ இருக்கலாம். நல்ல வெயிலில் மதியம் சுமார் மூன்று மணிக்குக் கச்சேரி. நாங்கள் போனபோது சாமியார் ஒரு பெரிய ஹாலில் குடும்பம் குடும்பமாகச் சந்தித்துக் கொண்டிருந்தார். இந்த சாமியாரும் இன்னொரு சாமியாரும் தொலைக் காட்சி விவாதம் ஒன்றில் பங்கு பெற்று ஒருவருடன் ஒருவர் அடித்துக் கொண்டு அது பல வருடங்களுக்கு முன் பெரிய களேபரமாக இருந்தது.
நான் போன போது எங்களை வழிகாட்டிச் சென்ற அமைப்பாளர் சாமியார் குடும்பம் குடும்பமாகக் குறை கேட்ட பின்னரே கச்சேரி செய்ய அநுமதிப்பார் என்றும் அது வரை நாங்கள் காத்திருக்க வேண்டியது தான் என்றும் கூறினார். அப்போது சாமியார் பேச ஆரம்பித்திருந்தார் மைக்கில். எப்படி தான் யாருக்கும் குருவாக முடியாதென்றும் எல்லோருக்கும் நண்பனாக வழி நடத்துபவராகவே அமைய முடியும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு இவர் என்ன இப்படிப் பெரிதாக ஆரம்பிக்கிறாரேஇது முடிந்து குறை கேட்பு முடிந்த பின் கச்சேரி ஆரம்பிக்க வேண்டுமென்றால் நீண்ட நேரம் ஆகுமேஅதுவரை ஆதித்யா பொறுமையாக இருக்க வேண்டுமே’ என்றிருந்தது. அந்த உரை முடிந்தவுடன் அமைப்பாளர் நாங்கள் வந்திருக்கும் செய்தியை அவரிடம் தெரிவிக்கச் சென்றார். என்ன ஆச்சர்யம்! நான் மனதில் கொண்டிருந்த கவலையை அவர் படித்து விட்டார் போலிருக்கிறது. அமைப்பாளரிடம் கச்சேரியை உடனே ஆரம்பித்து விடக் கூறி விட்டார். குறை கேட்பைக் கச்சேரி நடக்கும் போதே வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்.
சென்ற அத்யாயத்தில் நான் குறிப்பிட்டிருந்த சதாமதிம்’ என்கிற கீர்த்தனையை  ஆதித்யா அந்தக் கச்சேரியில் சவுக்க காலத்தில் பாடினான். மிகவும் சௌக்யமாக அமைந்தது. கச்சேரி நடக்கும் போது வந்திருந்த பல குடும்பத்தினர் ( சுமார் 100 குடும்பங்கள் இருக்கலாம்) அவரிடம் சாக்லேட்களை வழங்கிக் குறை தெரிவித்து ஆசி பெற்றுக் கொண்டிருந்தனர். அவரும் அவர்களுக்குச் சாக்லேட்டுகளும் ஆசிகளும் வழங்கிக் கொண்டிருந்தார். கச்சேரி முடிந்தவுடன் நாங்கள் எல்லோரும் அவர் காலில் விழுந்து வணங்கினோம். அவர் ஆதித்யாவின் கையில் ஒரு கவரைத் திணித்தார். அதில் மூவாயிரம் ரூபாய் பணம் இருந்தது! வழிகாட்ட வந்தவர் எங்களை சாப்பிட வற்புறுத்தி ஏற்பாடு செய்து சாப்பிட்டவுடன் தான் விடைபெற்றார். இந்த ஒரு கச்சேரியில் தான் ஆதித்யா தன் ஊதியமாக ஒரு சேர ஒரு பெரிய தொகை பெற்றான்.
பெரிய இசைவாணர் நல்ல மூடில்’ இருக்கும் போது நல்லவிதமாய்ப் பேசிக் கொண்டிருப்பார். அப்போது ஒரு முறை எங்களிடம் கச்சேரி எப்படிச் செய்யணுமோ அப்படிக் கரெக்டா செய்யறான் ஆதித்யா. ஒரு குத்தம் சொல்ல முடியாது. ப்ரமோட் பண்ண வேண்டியது தான் பாக்கி” என்றார். மற்ற மாணவர்களிடம், “இவ்வளவு ப்ராக்டிஸ்’ பண்றேள். எவ்வளவு தப்பு வர்றதுஆதித்யா எப்பவாவது கச்சேரி பண்றான். ஒரு மிஸ்டேக்’ இருக்கா பாரு,” என்பார். கடைசி வரையிலும் என் கூடவே இருக்கப் போறவன் ஆதித்யா மட்டும் தான்,” என்பார். நீங்க நினைக்கிற மாதிரி அவன் ஒண்ணும் அப்பாவி கிடையாது. ஏதாவது விஷயத்தை வெளியில விடறானா பாருங்கோ. எங்களையெல்லாம் போட்டுப் பாக்கறான்,” என்பார். ஆதித்யாவை எப்படிக் கையாள வேண்டும் என்பது அவருக்குத் துல்லியமாகத் தெரிந்திருந்தது. எ ப்யூட்டிஃபுல் மைண்ட்” அப்படீன்னு ஒரு புஸ்தம் இருக்கு. படிச்சுப் பாருங்கோ,” என்பார். நோபல் பரிசு வாங்கிய ஜான்நாஷ் என்கிற பெரிய பொருளாதார கணித மேதையைப் பற்றிய புத்தகம் அது. இவ்வளவெல்லாம் தெரிந்தவர் எங்களை ஏன் அப்படிப் படாத பாடு படுத்தினார் என்கிற விஷயம் மட்டும் இன்று வரை புரியவில்லை. ஆதித்யா பற்றிப் புரியாத விஷயங்களும் அவருக்கு உண்டு என்று தான் கருதுகிறேன். அவனை அப்படியே தானே கற்றுக் கொள்ள  விடுவது நல்லதா அல்லது பிடித்து உரைத்துப் புகட்ட வேண்டுமா என்கிற சந்தேகம் அவருக்கே இருந்தது என்று நினைக்கிறேன். ஆதித்யா கற்றுக் கொள்ளும் முறைகளும் கணக்குப் போடும் முறைகளும் எப்படி வருகின்றன என்று பெரிய இசைவாணர் முதற் கொண்டு சங்கீத விற்பன்னர்கள் அனைவரும் புரிந்து கொள்ளத் திணறினார்கள் என்று தான் கருத இடம் இருக்கிறது. மிகவும் பெருந்தன்மையாகவும் முதிர்ச்சியுடனும் எதிர் கொண்டவர்களும் இருக்கிறார்கள். பாண்டிச்சேரியில் இருந்தபோது அவனுக்குக் கற்பித்த வைணிகர்நடனப் பள்ளியில் சில நாட்களே இருந்த குழிக்கரை வில்வலிங்கம் போன்றோர் பிரமிப்புடன் எதிர் கொண்டார்கள் என்றாலும் ஆதித்யாவின் மேதைமையை வாழ்க்கையின் போக்கிலேயே தான் எதிர் கொண்டார்கள்.
ஆதித்யா கச்சேரி செய்வதே ஒரு புதிரான அனுபவம் தான். கச்சேரி என்று சொல்லி விட்டால் முதலில் ஜாபிதா தயார் செய்வான். அந்த ஜாபிதாவில் இத்தனை பாட்டுக்கள் என்று சொல்வதுடன் நம் வேலை முடிந்தது. என்னென்ன பாட்டுக்கள் என்பதிலிருந்து எதில் ஆலாபனைஎதில் நிரவல் கற்பனாஸ்வரம் தனியாவர்த்தனம் என்பதை மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பான். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் கச்சேரி அமைப்பாளர்கள் அவன் குறிப்பிட்டதற்கு மேல் பாடச் சொன்னால் பாட மாட்டான். பாட வைக்க முடியாது. அதே போல் பாதியில் யாராவது நிறுத்தச் சொன்னாலும் நடக்காது. முழுவதும் பாடி விட்டுத் தான் எழுந்திருப்பான். ஒன்றிரண்டு இடங்களில் இதனால் பிரச்னைகள் முளைத்திருக்கின்றன. குறிப்பாக ஆதித்யா கச்சேரிக்குப் பின் வேறு நிகழ்ச்சி அல்லது கச்சேரி இருந்தால் அவர்கள் அவசரப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆதித்யா கச்சேரியை முடிக்கட்டும் என்கிற பொறுமை இருக்காது.
கச்சேரிக்கு ஒத்திகை என்று கஸரத் வாங்க முடியாதுகூடாது. ஏனென்றால் அவன் கச்சேரியில் விஸ்தாரமாகப் பாட உத்தேசித்திருக்கும் சங்கதிகளை ஒத்திகையில் பாடி விட்டான் என்றால் அவனுக்குக் கச்சேரியில் ஸ்வாரஸ்யம்  போய் விடும். ஏனோ தானோ என்று பாடிவிட்டு எழுந்து விடுவான். நான் எப்போதுமே அவன் பாடிவிடுவான்கவலைப் படாதே’ என்று என் மனைவியிடம் சொல்லுவேன். அவள் கச்சேரி அன்று மிகவும் பதட்டமாக ஆகி விடுவாள். பாடல்களை அவனை வற்புறுத்தித் தொகையறாவாகச் சொல்லச் சொல்லுவாள். அவன் சொல்லி முடித்தபின் தான் ஓய்வாள். பாடச் சொல்லுவதும் உண்டு. பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு ஸ்டாப் வாட்சை’ வைத்துக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க முடிகிறதா என்று பார்த்துக் கொண்டே இருப்பாள்.
ஒரு முறை ஆதித்யா ஜாபிதா தயார் செய்து விட்டால் அதில் குறைக்கவோ கூட்டவோ முடியாது வேறெந்த மாற்றமும் செய்ய அநுமதிக்கமாட்டான். நாம் மிகவும் வற்புறுத்தினால் ஜாபிதாவையே மாற்றி விடுவான். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த  பாடல்களுக்கு பதிலாக முற்றிலுமே புதிய பாடல்களாக இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு முறை ஜாபிதாவில் இடம் பெறும் பாடல்கள் புதிது புதிதாக இருப்பதால் மண்டையைப் பிய்த்துக் கொள்கிற நிலை தான். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் சொந்த சாகித்யங்களையும் நுழைத்து விடுவான். கண்டு பிடிக்க முடியாது. தெலுங்கில் அல்லது சமஸ்க்ருதத்தில் இருக்கும். முத்திரையை எப்போதுமே தியாகராஜ  என்று போட்டுக் கொள்கிறான். ஒருமுறை டெல்லியில் சாடிலேனி கணபதி’ என்று ஒரு தெலுங்குக் கீர்த்தனையைப் பாடினான். பெரிய பஞ்சாயத்துக்குப் பிறகு பாடிக் கொள்ள அநுமதித்தோம். 
கச்சேரி முடிந்து நாங்கள் கிளம்பும் போது ஒரு அன்பர் தயக்கத்துடன் என்னை நெருங்கினார். சாடிலேனி கணபதின்னு ஒரு கீர்த்தனை பாடினானே யாரோடது? என்றார். ரொம்பப் பிடித்துப் போய் கேட்கிறார்’ என்று நினைத்துக் கொண்டு அவனோட சொந்த சாகித்யம்” என்றேன். அவர் விடாமல் தியாகராஜன்னு முத்திரை வர்றதே? என்றார். “அவனுக்கு தியாகராஜர்ன்னா ரொம்பப் பிடிக்கும். அதனால தியாகராஜர்  பேரைப் போட்டுண்டிருக்கான்” என்றேன். அவர் நம்பாமல் என்னை சற்று நேரம் பார்த்து விட்டு நகர்ந்தார்!
இதே போல் கச்சேரியில் எந்தப் பாட்டிலும் அங்கே தோன்றியபடி சிட்டாஸ்வரம் பாடுவான். இது வயலின்காரர்களுக்குப் பெரிய பாடு. தயார் நிலையிலேயே இருந்து சமாளித்து வாசிக்க வேண்டும். ஆனால் பக்கவாத்ய வாசிப்பில் ஏதாவது தவறு நேர்ந்தால் அதைச் சமன் செய்து விடுவான். ராகத்தை மாற்றுவது மட்டும் ஒத்து வராது. ஒரு முறை வரமுவில் ஒரு கீர்த்தனை பாடினான். வயலின்காரர் இந்தோளத்தில் தொடர்ந்து கொண்டிருந்தார். அவனுக்குப் பொறுக்கவில்லை. நிறுத்தி விட்டு வரமு ஸ்வரஸ்தானத்தைக் கூறினான். நல்ல வேளையாக வயலின் காரர் – நல்ல சீனியர்- பெரிதாகப் பொருட்படுத்தாமல் மேலே சென்றார்.
பல வருடங்களுக்கு முன் பிரேஸிலில் மருத்துவம் பார்த்த ஸே அரிகோ’ என்கிற மருத்துவரின் கதை நினைவுக்கு வருகிறது. இவர் படித்தது பள்ளிப் படிப்பு மட்டுமே. இவர் சுரங்கங்களில் வேலை பார்த்து வந்தார். தாங்க முடியாத் தலைவலிதூக்கமின்மை இவற்றால் தவித்த இவருக்கு ஒரு நாள் டாக்டர் 'ஃபிரிட்ஸ்’ என்கிற மருத்துவரின் தரிசனம் மனக் கண்ணில் தோன்றியது. அந்த மருத்துவர் இவர் உடம்பில் இறங்கியதாகப் பேச்சு. அன்றிலிருந்து அரிகோ மருத்துவம் செய்ய ஆரம்பித்தார். சாதாரண சமையலறைக் கத்திகள் ஊசிகள் இவற்றைக் கொண்டு இவர் கான்ஸர்  கட்டிகளை அகற்றுவது போன்ற சிக்கலான  அறுவை சிகிச்சைகளையும் செய்ய ஆரம்பித்தார். இவர் மருத்துவத்தில் ஏராளம் பேரை குணப்படுத்தி இருக்கிறார்.
இவர் மருத்துவம் செய்யும் போது உடல் மொழியே மாறி விடுமாம். ஒரு மருத்துவருக்கே உள்ள தீவிரமும் கர்வமும் இவரிடம் தென்படுமாம். பேசுகிற மொழியும் அவர் உடலில் புகுந்த மருத்துவர் பேசிய மொழியாகவே மாறி விடுமாம். ஆதித்யாவும் கிட்டத்தட்ட இப்படித் தான். மற்ற சமயங்களில் குழந்தை போல் நடந்து கொள்வான் சங்கீதம் என்று வந்து விட்டால் இருபது வருடங்கள் செயலாக இருந்த ஒரு சங்கீத வித்வான் போல் தான் நடந்து கொள்வான். அப்போது அவனிடம் தெரியும் தீர்மானமும் கம்பீரமும் கர்வமும் ஒரு தேர்ந்தெடுத்த வித்வானின் குணக் கூறு போல் தான் இருக்கும்.
மறு ஜென்மம் என்று ஒரு வேளை இதைத் தான் சொல்லுகிறார்களோ என்று தோன்றுகிறது. திருவள்ளுவர், ‘இருவேறு உலகத்து இயற்கை  திரு வேறு தெள்ளியராதல் வேறு’ என்று கூறுகிறாரே இதைத் தான் குறிப்பிடுகிறார் போலும்!
***

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...