ஞாயிறு, 25 டிசம்பர், 2016

சமீபத்திய நான்கு நிகழ்வுகள்-சில பதிவுகள் IV


வர்தா புயல் தந்த செல்வம்  பன்னீர் செல்வம்!

பெரிய ஆல மரத்தின் கீழ் செடி கொடிகள் வளராது என்பார்கள். பெரிய ஆலமரம் வேரற்றுச் சாயும் போது அடியில் சில செடிகள் துளிர் விடும் போலும்.
சென்ற வருடப் பெரு மழையின் போது விளைந்த கோர தாண்டவத்தை தொலைக் காட்சி  ஊடகங்களுடன் சேர்ந்து அரசும் வேடிக்கை பார்த்தது. அதன் வீச்சை எதிர் கொள்ள முடியாது அரசு எந்திரம் ஸ்தம்பித்தது. கட்சிக்காரர்கள் விளம்பரத்திலும் வாக்கு வாதங்களிலும் காட்டிய முனைப்பை நிவாரணப் பணிகளில் காட்டவில்லை. இரண்டு காரணங்கள் இருந்திருக்க முடியும். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலையில் சுதந்திரம் கொடுக்கப் படவில்லை என்று நினைக்கும் அளவிற்கு இருந்த மேலிடக்  கட்டுப்பாடுகள். என்ன செயலின்மை இருந்தாலும் அம்மாவின் செல்வாக்கு அதனை ஈடு செய்து விடும் என்கிற மெத்தனம்.
இதை  மீறி முதன் முதலாகத் தனக்கு கிடைத்த வாய்ப்பை  இந்த முறை பன்னீர் நன்கு பயன் படுத்திக்க கொண்டார் என்றே சொல்லவேண்டும். கச்சிதமான முன்னேற்பாடுகளுடன் ஆரவாரமில்லாமல் புயலைத் தமிழகம் எதிர் கொண்டதற்கு திரு.ஓ பன்னீர் செல்வம் முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும்.
அனாவசிய தோரணை இல்லை; சத்தம் இல்லை;போகின்ற இடங்களில் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டு சாமானியனின் தோளில் கை போட்டுக் குறைகளை செவி மடுத்த சினேக பாவம்.
இவர்  கடந்த காலத்தில் அம்மையாரின் அடி பணிந்திருக்கலாம். சுய சிந்தனை இல்லாதவர் என்கிற தோற்றத்தைக்  கொடுத்திருக்கலாம். ஒரு நெருக்கடி என்று வரும் போது சுதந்திரமாகச் செயல் பட அனுமதிக்கப் பட்டால் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் பன்னீர்.
இந்த எளிமையையும் காரியமாற்றும் திறமையையும் மேலும் வளர்த்துக் கொண்டு நேர்மையையும் கடைப் பிடித்தார் என்றால் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு நாம் வேறு முதல்வரைத் தேட வேண்டிய அவசியம் இல்லை.

புதன், 21 டிசம்பர், 2016

சமீபத்திய நான்கு நிகழ்வுகள் -சில பதிவுகள் III ஆ


இந்தியாவின் தனி நபர் எதிர்க் கட்சியின் மறைவு 

இதன் பின்னர் சோவின் அம்மையார் எதிர்ப்பு அவர் முதலாம் ஆட்சி முடிவுக்கு வரும் வரை நீடித்தது. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் உறவை முறிக்க மறுத்த கையோடு தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானதும் அதன் திமுக தொகுதி உடன்பாட்டுக்குச் சோ பெரும் பங்காற்றினார். அத்துடன் அவரின் ஜெயலலிதா எதிர்ப்பு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் வந்த காலங்களில் அவரின் மறைவு வரைக்கும்  அவர் ஏதோ காரணங்களால் அம்மையாரின் பெரிய ஆதரவாளராக மாறிப் போனார். கடுமையாகவோ கிண்டலாகவோ அம்மையாரை அவர் விமர்சிக்கத் தயங்கியது ஏன் என்பது இன்று வரை துலங்காத மர்மமே.
சோ முக்கியமான தருணங்களில் தீர்மானமான நிலைப் பாட்டை  எடுத்தார். அவையாவன:
1. துக்ளக் திரைப்படம் வெளியாவதில் கடும் நெருக்கடிகளை சந்தித்த போது அதைத் துணிவுடன் எதிர்த்தார்.
2. நெருக்கடி நிலையைத் துணிவுடன் எதிர்த்தார்.
3. திமுகவின் ஒழுங்கீனங்களைச் சாடியவாறே இருந்தார். காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் அதிமுக கிட்டத்தட்ட திமுகவின் வழிகளையே கொண்டிருந்த நிலையில் விமர்சிக்கும் தேவையை அவர் எதிர்க்கட்சி நிலையில் நின்று பூர்த்தி செய்தார். கலைஞரை வாழ் நாள் முழுதும் கிண்டல் செயது கொண்டே இருந்தார். ஆனால் இருவரும் அந்தரங்க நட்பைக் கடைசிவரை பேணினர். இருவருள் யார் பெரியவர்?
4. சட்ட மன்றத்தில் ஆனந்த விகடன் ஆசிரியர் தண்டிக்கப் பட்ட போது அதைத் துணிவுடன் எதிர்த்தார். 
5. ஆந்திராவில் என்டியார் அரசை கவிழ்த்து பாஸ்கரராவ் முதல்வரான சூழ்நிலையில் அதை எதிர்க்க அனைத்திந்திய பத்திரிக்கையாளர்களை ஒன்றிணைப்பதில் மிகுந்த ஊக்கம் காட்டினார்.
6. விடுதலைப் புலிகளை ஆரம்பத்திலேயே எதிர்த்தார். அவரை ராஜீவ் காந்தியின் படு கொலைக்குப் பின்னர் தான் தமிழகம் உணர்ந்து கொண்டது.
7. ராஜ்ய சபா நிதியை இப்படிக்கூடப் பயன் படுத்த முடியும் என்பதை பள்ளிக்கூடக்  கட்டிடங்களைப்  பல இடங்களில் கட்டுவதற்கு ஒதுக்கியதன் மூலம் நிரூபித்தார்.
8. ஒரு தனியார் வங்கியின் உரிமை யாருடயது என்கிற சிக்கல் எழுந்த போது அதை சம்பந்தப் பட்டவர்களு டன் பேசிக் சுமுகமாக முடித்து வைத்தார் என்பார்கள்.
9. திரை மறைவில் நிறைய உதவி செய்திருக்கிறார்கள் என்கிறார்கள். நடிகர் நெப்போலியன் அவருக்கு கொடுத்த இரங்கலைப் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது.
10. மகாபாரதத்தின் ஒரிஜினலைப் படித்து அதை விரிவாக அலசினார். இதன் தொடர்ச்சியாக இந்து மகா சமுத்திரம் என்று இந்து மதத்தையும் பற்றி எழுதினார். இரன்டுமே நம் பொக்கிஷங்களை அறிந்து கொள்ளச் சரியான முன்னுரையாக அமையும். நாத்திக வாதம் உரத்த குரலில் தமிழ் நாட்டில் உச்சரிக்க படும் சென்ற 50 வருடங்களில் ஏற்படுத்திய கோளாறுகளைக் கணக்கில் கொண்டால் இதன் முக்கியத்துவம் விளங்கும்.

(தொடரும்)

திங்கள், 19 டிசம்பர், 2016

சமீபத்திய நான்கு நிகழ்வுகள் -சில பதிவுகள் III அ

இந்தியாவின் தனி நபர் எதிர்க் கட்சியின் மறைவு 

துக்ளக் ஆசிரியர் சோ மறைந்தார். அம்மையார் இறந்ததனால் சோவின் மறைவு பெருமளவில் கவனிப்பு பெறாமல் பொய் விட்டது. ஊடகங்கள் பெருமளவில் அதை ஈடு செய்தாலும் வெகு ஜனத் தலைவராக அவர் இல்லாததனால் பெரிதாகப் பொருட்படுத்தப் படவில்லை.
இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போல் புனைந்த கார்ட்டூனை அட்டைப் படத்தில் தாங்கி  வெளியான அவரின் முதல் இதழிலிருந்து அவரின் வாசகனான நான் பல்வேறு சமயங்களில் அரசியல் கலாசார சமூக பொருளாதாரப் போக்குகளையும் நோக்குகளையும் தெளிவு படுத்திக்கொள்ள அவரைச் சார்ந்திருந்தேன் என்பதை இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். குறிப்பாகக் கலைஞரின் அரசியலுக்கு எப்போதுமே அவர் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்தார். அதில் பெருமளவு நியாயமும் இருந்தது. இந்திரா காந்தியை மோசமாக எதிர்த்தார். நெருக்கடி நிலையின் போது மிகவும் சாதுர்யமாகவும் துணிச்சலுடனும் பத்திரிக்கையை நடத்தினார். (இந்திரா காந்தி யார்? என்கிற கேள்விக்கு சஞ்சய் காந்தியின் தாய் என்று அவர் அளித்த பதில் தணிக்கை செய்யப் பட்டது!)
ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்களை (ஜெயகாந்தன்) முதலில் நான் துக்ளக்கில் தான் படித்தேன்.மொரார்ஜி தேசாயின் மேன்மை, காமராஜரின் அப்பழுக்கற்ற நேர்மை, ராஜாஜியின் தொலை நோக்கு, 1967க்குப் பிறகு தமிழ் நாட்டில் ஆட்சி செய்தவர்களின், நேர்மையற்ற அரசியல்வாதிகளின்  ஒழுங்கீனங்கள்  எல்லாமே ஆரம்பத்தில் இவரால்தான் வெளிச்சத்துக்கு வந்தன. இவர் பத்திரிகை ஆரம்பித்த போது அண்ணா மறைந்து கலைஞர் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்  பெருமளவில் பரவலாகப் பட்டதாகக் கூறப் பட்ட  ஊழலாலும் அதிகார துஷ் பிரயோகத்தாலும் மக்கள் வெறுப்புற்றிருந்த சமயம் . இவர் துணிவுடன் எதிர்   வினையாற்றிய பதிவுகளின் பலன்கள் சற்று பின்னர் கட்சி ஆரம்பித்த எம்ஜியாருக்குப் போய்ச்சேர்ந்ததென்றால் அவரையும் சோ கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கினார். 
சினிமாவில் சற்று நலிவுற்று அம்மையார் ஏதோ ஒரு விரக்தியில் தனிமை பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவரைத் தன் பத்திரிகையில் கட்டுரை  எழுத வைத்ததன் மூலம் வெளிக் கொணர்ந்தார். ஆனால் அம்மையார் அதிமுகவில் கொள்கைப் பரப்புச் செயலர் ஆன போது 'இந்தக் காட்சி தமிழகத்தின் தாழ்வுக்குச் சாட்சி' என்று கடுமையாக விமர்சித்து எழுதினார். அவரின் ஒரு கார்ட்டூனால் அப்போதைய அமைச்சர் சோமசுந்தரம் கட்சியை விட்டு விலக நேர்ந்தது.
(தொடரும்)

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சமீபத்திய நிகழ்வுகள்-சில பதிவுகள் II

அம்மா!
ஜெயலலிதா மறைந்து விட்டார். நான் ஒன்றும் அவரது பெரிய விசிறி இல்லை ஆயினும் மிகவும் வருத்தமாக இருந்தது. அவருடைய துன்ப வாழ்க்கை முடிவுக்கு வந்தது. எல்லோரும் பேசிக்கொள்வது போல் பொது வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு மேலே வந்தாராயினும் அந்தரங்க வாழ்க்கையில் மிகவும் தனியாகவும் உண்மையான பாசத்துக்கு ஏங்கும் முரட்டுக் குழந்தையாகவுமே மரிக்கும் வரையிலும் விளங்கினார். கலைஞர், கண்ணதாசன் மறைந்த போது 'கை நீட்டுவோர் பக்கமெல்லாம் கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ ' என்று எழுதினார். இது அம்மையாருக்கும் பொருந்தும். அந்த பலவீனத்தை எல்லோரும் பயன் படுத்திக் கொண்டார்களே தவிர அவர் மீது உண்மையான அக்கறை யாராவது காட்டினார்களா சந்தேகம் தான். சற்று உற்று நோக்கினால் எம்ஜியாருக்கும் என்டியாருக்கும் இது தான் நடந்தது. அவர்கள் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டார்கள்.
அம்மையார் முதலில் அன்னையின் வற்புறுத்தலுக்காகப் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது. இதை அந்த நாளில் குமுதத்தில் எழுதிப் பாதியில் நிறுத்திய சுய சரிதையில் குறிப்பிடுகிறார். பின்னர் எம்ஜியாரின் ஆளுமையின் நிழலில் வாழ நேர்ந்தது. எம்ஜியார் மறைந்த போது அவர் அளித்த முதல் நாளிதழ் அறிக்கையில் இதை 'நான் விடுதலை பெற்று விட்டேன்' என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் எம்ஜியாரின் பூத உடல் வைக்கப் பட்டிருந்த வண்டியிலிருந்து தள்ளி விடப்பட்டதிலிருந்து ஆட்சி மன்றத்தில் அவமானப் பட்டதிலிருந்து குன்ஹா தீர்ப்பினால் சிறை சென்றது வரை பல ஏற்ற இறக்கங்களை பார்த்தார். எல்லாமே அவர் தன்னிச்சையாய் எடுத்த முடிவுகளின் விளைவுகள் தான் என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. விடுதலைப் புலிகளிலிருந்து கூடங்குளம் வரை நிலைப் பாடுகளை நிறைய மாற்றிக் கொண்டார். ஆடம்பரத் திருமணம். ஏகப் பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள்.சாராயக் கடைகளை மூடுவதில் அக்கறை காட்டவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிய பொருளாதாரத் திட்டங்களை கொணராது இலவசங்களில் தான் அக்கறை செலுத்தினார். ஆனாலும் மக்கள் அவரின் ஆளுமையால் கவரப்பட்டு மீண்டும் மீண்டும் வாக்களித்துக் காத்திருந்தார்கள். அவரும் கனிந்து கனிந்து மக்கள் முதல்வராக உருவெடுத்தார். காலம் காத்திருக்கவில்லை.
காவேரிப் பிரச்சினையில் அவருக்கு முந்தையவர்கள் கெஞ்சிக் கொண்டிருந்ததை மாற்றி மிகவும் போர்க் குணத்துடன் வாதிட்டுக் 'காவேரியில் தமிழர்களுக்கும் உரிமை உண்டு' என்று உச்ச நீதி மன்றம் சொல்ல வைத்ததை வேண்டுமானால் அவரின் சாதனை என்று சொல்ல முடியும்.
அவர் வாழ்நாள் பூராவும் ஏங்கிய பாசத்தையும் நிம்மதியையும் அவரின் முடிவாவது அவருக்கு வழங்கட்டும்

சனி, 17 டிசம்பர், 2016

சமீபத்திய நான்கு நிகழ்வுகள்-சில பதிவுகள் I

பண மதிப்பின்மை அறிவிப்பு வந்த போது பர்ஸைத் திறந்து பார்த்தேன். 140 ருபாய் இருந்தது. பின்னர் தான் எல்லா செலவுகளையும் இத்தனை நாளாக அட்டையையும் ஆன்லைன் பண மாற்றங்களையும் வைத்தே சமாளித்து வந்திருக்கிறேன் என்று புரிந்தது. என்னிடம் கறுப்புப் பணமும் இல்லை. கையில் பெரும் பணம் வைக்க வேண்டிய தேவையும் இல்லை.
ஆனால்..... கறுப்புப் பண முதலைகள் அரசின் இந்த மிரட்டல்களுக்கு ஈடு கொடுத்தே வருகிறார்கள். பெருமளவில் பாதிக்கப் படுவது ஒழுங்கு முறைத் தொழில் சாரா வெகு மக்கள் தாம். அல்லாடுகிறாரகள். ஏற்கெனவே அன்றாடக் கூலி+அரை வயிற்றுக் கஞ்சி. இந்த லட்சணத்தில் சொந்தப் பணத்தை எடுக்கப் பிச்சை எடுக்க வேண்டிய நிலை. ஆன்லைன் வர்த்தகம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று வெந்த புண்ணில் வேலைப்  பாய்ச்சுவது போல் அரசின் அறிவுரை வேறு. அனா ஆவன்னா தெரியாதவனை திருப்புகழ் படிக்கச் சொன்னது போலிருக்கிறது. வேறு இடங்களில் புது நோட்டுகளைக் கொத்துக் கொத்தாக அள்ளுகிறார்கள். இவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தும் இது எப்படி நடக்கிறது என்கிற கேள்வி எழுகிறது. 
அதிகார/பண வர்க்கத்தின் மேலிருந்து கீழ் வரை நேர்மையின்மை கோலோச்சிக் கொண்டிருக்கிற இத்தனை பெரிய தேசத்தில் அதிலும் முக்கால் பேர் சோற்றுக்கு அலைகிற தேசத்தில் ஆளுகிறவர்கள் கடைக் கோடி மனிதர்களைக் கணக்கில் எடுத்துத் தான் தேச நலனை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
மிக முக்கியமாக கடைக் கோடி மனிதன் காட்டும் அளவற்ற பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையையும் ('கஷ்டமாத்தானிருக்கு; ஆனா நல்லதுக்குத் தான செய்யறாங்க!') பொறுத்து தான் இது போன்ற முடிவுகள் வெற்றியடைகின்றன; அவர்களின் அதிகாரம் இதை சாதிக்கவில்லை என்பதை ஆளுபவர்கள் உணர்ந்து செயல் படுவது நம் தேசத்தின் எதிர்காலத்துக்கு நல்லது.
சுருங்கக் கூறின் கடைக் கோடி மனிதனின் வழி மகாத்மா காண்பித்த வழி என்பதை ஆளுகிறவர்கள் மறக்கக் கூடாது.

புதன், 9 நவம்பர், 2016

முக நூலர்களின் முகவரிகள் III


பதிவுகள் செய்யப் பத்து கட்டளைகள்:

1. மொழி: பண்டிதத் தமிழில் எழுத கூடாது. யாரும் படிக்க மாட்டார்கள். மொக்கை, மெர்சல், தரியல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். சொன்னார்கள் என்பதை 'சொல்லிட்டாங்கேய்' என்றால் தான் மரியாதை. புது வார்த்தைகளுக்கு அகராதிகளை புரட்ட வேண்டிய அவசியம் இல்லை. நான்கைந்து திரைப்படங்களை பார்த்தாலே போதும்.
2. கூடிய மட்டில் சுருக்கமாகப் பதிவுகள் இருக்க வேண்டும். ஒரு வரி அல்லது ஒற்றை வாக்கியம் போதுமானது. அது கூடிய மட்டில் சினிமாவில் வருகிற 'பன்ச் டயலாக்' மாதிரி இருந்தால் நல்லது. இளம் பெண்களாக இருந்தால் 'வானத்தில் சிட்டுக் குருவியைப் பார்த்தால் றெக்கை கட்டி பறக்குது மனசு' என்று சந்தேகாஸ்பதமாக சொல்லிவிட்டால் போதும். போகிற வருகிறவர்கள் 'லைக்குகளை' அள்ளி விடும்.
3. நல்ல சமுதாயத் தாக்கத்துடன் இருக்க வேண்டும். லஞ்சம், ஊழல்,எதேச்சாதிகாரம் போன்றவைகளுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டும். (அந்தரங்கத்தில் நாம் சற்று முன்னே பின்னே இருந்தால் பரவாயில்லை).
4. அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபலங்களைத் திட்ட வேண்டும். (கொஞ்சம் ஆபத்தான வழி; திருப்பி கேவலமாகத் திட்டுவார்கள் அந்தந்த பிரபலங்களின் அபிமானிகள் . பொறுத்துக் கொள்ளத்  திராணி வேண்டும்.
5. மனைவிகள் கூடிய மட்டில் சம உரிமை பேச வேண்டும். (பெண்ணியம் பேசிய மாதிரியும் ஆயிற்று; வீட்டில் படுத்தும் கணவனை இடித்த மாதிரியும் ஆயிற்று.)
6. அடுத்தவர் போடும் பதிவுகளை பகிருவது. மிகவும் பாதுகாப்பான வழி. நாம் என்ன நினைக்கிறோம் என்பதைக் கடைசி வரையில் சொல்லவேண்டாம். இது இரண்டு மூன்று வகை. அப்துல் கலாம் அய்யா அல்லது பெருந்தலைவர் காமராஜர் படங்களை பகிர்ந்து கொண்டால் வம்புக்கே வேலையில்லை. எல்லோரும் அங்கீகரிக்கும் தலைவர்கள் இவர்கள்.
7. செயற்கரிய செயல்களை செய்பவர்களை பற்றிய செய்திகளை பாதுகாப்பாகப் பகிரலாம். விளையாட்டில் பதக்கம் வாங்குகிறவர்கள், ஏழ்மை நிலையிலிருந்து முன்னுக்கு வருகிறவர்கள்,  விட்டுச் சென்ற சாமானை நேர்மையுடன் திருப்பிக் கொடுத்த ஆட்டோ டிரைவர், நேர்மையான போலீஸ் அதிகாரி போன்றோர் பற்றிய பதிவுகள் இதில் சேரும்.
8. வைத்தியத்துக்கான ஆலோசனைகள். இதற்குச் சில குழுக்கள் உண்டு. அவற்றின் பதிவுகளை பகிரலாம். அல்லது நாமே தெரிந்ததைச் சொல்லலாம். யாரும் முயற்சி செய்யப் போவதில்லை என்பதால் பக்க விளைவுகள் பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.
9. பதில் போடுவதற்கு சில வழி முறைகள் உண்டு. ஒரு நகைச்சுவை நடிகர் படம் போட்டு 'கெளம்பிட்டாங்கைய்யா கெளம்பிட்டாங்கெய்' அல்லது 'வெச்சுட்டான்யா ஆப்பு' என்று போடுவது இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கான தகுதியை உண்டு பண்ணும். இல்லாவிட்டால் ஒரு பெரிய 'ஸ்மைலியைப்' போடலாம். 'பின்னிட்டே தலீவா' அல்லது 'கொன்னுட்டீங்க மேடம்' என்பதுடன் நிறுத்திக் கொள்வது நல்லது.
10. நம் படங்களை அடிக்கடி மாற்றுவது; அல்லது புதிது புதிதாகப் போட்டுக் கொண்டிருப்பது. பெண்களாக இருந்தால் இதற்குப் பெரிய வாசகர் வட்டம் உண்டு.

செவ்வாய், 8 நவம்பர், 2016

முக நூலர்களின் முகவரிகள் II

முக நூல் ஒரு பரந்து பட்ட தளத்தைத் தருகிறது. இதை உபயோகிப்பவர்கள் வருமாறு:
1. பொதுவாக சுய விளம்பரத்தில் மோகம் கொண்டவர்கள். இதில் யாருமே விதி விலக்குக் கிடையாது (நான் உள்பட). பெரிய தகுதி இல்லாமல் என்னால் இதைத் தேடிக் கொள்ள முடிகிறது. காரணம் என்னுடைய இலக்கு ரசிகர்களை நானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடிகிறது. என் நண்பர் எனக்கு 'லைக்' போட்டால் நான் அவருக்கு 'லைக்' போடுகிறேன். நீ எனக்கு சொறிந்து விடு; நான் உனக்கு சொறிந்து விடுகிறேன்' பாணியில்.
2. முக்கியத்துவத்துக்காக ஏங்கும் சாதாரணர்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் கடை நிலை ஊழியர் சபரி மலைக்கு குருசாமியாக இருப்பது போன்றது தான் இதுவும். மேலதிகாரியாகப் பணியாற்றுபவர் கன்னி சாமியாக வந்து குருசாமி காலில் விழுந்தால் அதில் ஒரு குரூர திருப்தி.
3. ஒழுங்கு படுத்தப் படாத துறைகளில் இருப்பவர்களுக்கு இது போன்ற விளம்பரங்கள் உறு துணையாக இருக்கின்றன. பாடகர்கள், ஆக முயற்சிப்பவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் படைப்புகளுக்கு இலவச விளம்பரங்கள் முக நூல் தருகிறது. இதில் அரசியல்வாதிகளும் விதி விலக்கல்ல.
4. யுவ யுவதிகளும் அவர்களின் அவதிகளும். முக்கால் புகைப் படம் காலே அரைக்கால் கார்ட்டூன் முகம், மீதி என்ன மொழி என்று புரிந்து கொள்ள முடியாத ஒற்றை வரி விமர்சனம்... யாருக்கோ மறைமுகமாக ஏதோ தெரிவிக்க விழைவது போன்ற ஒரு தோற்றம்.
5. முதிர் மக்கள். குறிப்பாக முதிர் கன்னியர். விருப்ப ஓய்வு வாங்கி வீட்டில் இருப்பவர்கள் 'இது நாள் வரையிலும் வாணாளை வீணாக்கி விட்டதாக' பிரலாபித்துக் கொண்டிருப்பார்கள். உடற் பிணி பற்றிய குறிப்புகள் இருக்கும். பெரிய தொந்தரவு இல்லை. முதிர் ஆண்களை பொறுத்தவரை சாமி படங்களாக இருக்கும். தாம்பத்திய விரக்தி!
6. வெள்ளைக்காரர்கள். என்ன சொல்கிறார்கள் என்றே புரியாது.
7. இன மொழி மத ஜாதி செயற்பாட்டாளர்கள். தள்ளி இருப்பதே நல்லது.
8. பொழுது போகாதவர்கள்.

திங்கள், 7 நவம்பர், 2016

முக நூலர்களின் முகவரிகள் I


சமீபத்தில் என்னைச் சந்திக்க வந்த நண்பர் நான் கைபேசியுடன் அவ்வப்போது மும்முரமாய் இருப்பதை ஸ்வாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதுமே அவர் சளசளவென்று பேசிக்கொண்டிருப்பார். நான் கேட்டுக் கொண்டிருப்பேன்;அல்லது அவர் வாயைப் பார்த்துக் கொண்டிருப்பேன். வழக்கத்திற்கு மாறாக அவ்வப்போது நான் இடைவெளி விட்டு கைபேசியை நோண்டிக் கொண்டிருந்ததைப் பார்த்த  அவரை நான் உதாசீனப் படுத்துகிறேன் என்று அவர் நினைக்க இருந்த வாய்ப்பை நான் பொருட்படுத்தாமல் இருந்தது அவரை மிகவும் ஆச்சர்யப் படுத்தியது. எனக்கும் சற்று வியப்புத் தான். இதில் எப்படி இறங்கினேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். மேஜைக் கணினி வரையில் சற்று சுமாராகப் போய்க் கொண்டிருந்தது. ஆண்ட்ராய்டு கைபேசி வந்தவுடன் தான் சற்று அதீதமாகப் போய் விட்டது. முக நூல் அல்லது வாட்ஸ் அப்; ஒழிந்த நேரங்களில் யு ட்யூப்.
பாராயணம் செய்து கொண்டிருந்த அபிதான சிந்தாமணியை அவ்வப்போது புரட்டுகிறேன். ராமாநுஜாசார்யாரின் மஹாபாரதம் அப்படியே இருக்கிறது. பவர் என்னும் புத்தகம், மார்கோ போலோவின் பயணக்  குறிப்புகள், நூலகத்திலிருந்து கொண்டு வந்த புயலில் ஒரு தோணி, உபநிடத சாரம், சாமி சிதம்பரனார் குறித்த புத்தகம், குற்றாலக் குறவஞ்சி, சம்பிரதாய பஜனை, ஜூலியஸ் சீசர், சித்தர் பாடல்கள், எ  பியூட்டிபுல் மைண்ட், சமஸ்க்ருத பாடங்கள், பகவத் கீதை ............... படிக்க வேண்டியது சேர்ந்து கொண்டே போகிறது.
போதும் போதாததற்கு சன் டிவியில் குஷ்பூவின் பஞ்சாயத்து வேறு...
ஹூம் ....!

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

அரிய நாச்சி-சிறுகதை- அஸ்வத்


“என்ன?” என்றார் ராமையா சாஸ்திரி முன்னால் வைக்கப்பட்டிருந்த சட்டியில் இருந்த சோற்றை அளைந்து கொண்டே.
கதவுக்குப் பின் நின்ற கொண்டிருந்த லட்சுமி இன்னும் இழுத்துப் போர்த்தியவாறு “மகாளயமா இருக்கு; இந்தப் பழையதை இப்பவாவது சாப்பிடாம இருக்கலாமே?” என்றாள் பயத்துடன்...
"அதெல்லாம் பரவாயில்லைன்னா” என்றார் ராமையா சாஸ்திரி - முகம் பார்த்துப் பேச மாட்டார். வெட்கமா, மனைவிக்கு இடம் கொடுத்துவிட்டால் பின்னால் மிகவும் கஷ்டமாக ஆகிவிடும் என்றா தெரியாது. பல நாட்களுக்குப் பேச்சே கிடையாது. ‘இன்றைக்கு சுபதினம்; ஒரு வார்த்தை உதிர்ந்திருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டே நகர்ந்தாள் லட்சுமி. ஒரு குழந்தை இருந்திருந்தாலாவது அதைச் சாக்காக வைத்து ஏதாவது பேசிக் கொள்ளலாம். அதற்கும் கொடுப்பினை இல்லாது போய்விட்டது.
ராமையா சோற்றை அள்ளி வாயில் போட்டார். தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயம். சுளீரென்று தலைக்கு ஏறியது. தண்ணீரை எடுத்து விழுங்கினார். மகாளயமாவது ஒன்றாவது? நாற்பது வருடங்களாக இந்த ஊளைச்சோறுதான். பஞ்ச பட்ச பரிமானமெல்லாம் அப்பா வைசூரியில் போனவுடன் போய்விட்டது. பத்தாம் நாள் காரியம் ஆனவுடனேயே அம்மா மாமா வீட்டிற்கு அழைத்துப் போய் விட்டாள். வாத்திமராஜபுரத்தில் மாமா நிலம் நீச்சு என்று செயலாக இருந்தார். யார் செயலாக இருந்தால்தான் என்ன? உழைக்கிற மாடு உழைத்தால்தான் உண்டு. அம்மாவும் பிள்ளையும் சம்பளமில்லாத வேலைக்காரர்களாக மாமா வீட்டில் காலந்தள்ளி வந்தார்கள். ஒரு நாள் கிடையாது; கிழமை கிடையாது. ஜலதோஷமா ஜுரமா ஒன்றும் பேசக்கூடாது. பழைய சோறும் வெங்காயமும்தான்.
கையை உதறிக்கொண்டு சிரமத்துடன் எழுந்திருந்தார் ராமையா. தொப்பையைக் குறைக்க முடியவில்லை. உட்கார்ந்தால் எழுந்திருக்க முடிகிறதில்லை. எழுந்திருந்தால் உட்கார முடிவதில்லை. என்னவோ தேகாப்பியாசம் செய்ய வேண்டுமென்கிறார்கள். யாரால் ஆகிறது? உள்ள வேலைக்கே நேரம் போதமாட்டேன்கிறது. ராஜா உத்யோகமென்றால் எல்லாவற்றையும் கண் கொத்திப் பாம்பாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. வெள்ளைக்காரன் 'வசூல் போதவில்லை. கொண்டா கொண்டா' என்கிறான். பைரவத் தேவனுக்கு ஒரு மரியாதையுமில்லை. என்றாலும் நல்லூர் ராஜா என்கிற வீம்பு. அவனையும் ‘ஹைனஸ் ஹைனஸ்’ என்று அநுசரித்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
வாயைக் கொப்பளித்து அங்கவஸ்திரத்தில் கையைத் துடைத்துக் கொண்டேபோது மாமா வீட்டில் மாடு மாதிரி வேலை பார்த்துக் கொண்டே படிப்பிலும் கவனம் பிசகாமல் இருந்ததில் நன்மைதான் விளைந்தது என்று நினைத்துக் கொண்டார். என்ன கெட்டுவிட்டது? மலையாள தேசத்தில் மாதவன் சிபார்சில் வேலை பார்த்த போதும் எல்லோரும் பயப்பட்டான்கள்; பின்னர் மாகாணக் கௌன்ஸில் மெம்பராக இரண்டு வருடம் - நல்லூர் திவான் பதவி மடியில் வந்து விழுந்தது. வெள்ளைக்காரன் மரியாதையுடன் இருக்கிறான். நல்லூர் ராஜா இளம் பிராயத்துப் பையன். பயப்படுகிறான். மறுபடியும் மாமாவை நினைத்துக் கொண்டார் . மாமாவிடம் பட்ட நன்றிக் கடனுக்காக அவர் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். மாமாவுக்கு அப்போதெல்லாம் க்ஷீண தசையாதலால் வேறு வழியிருக்க வில்லை.
காரியஸ்தன் சிகாமணிப்பிள்ளை தயாராக ரேழியில் நின்று கொண்டிருந்தார் கையைக் கட்டிக் கொண்டு.
“என்ன வண்டி தயாரா?” என்றார் சாஸ்திரி.
“தயாராக இருக்கு சாமி. பத்து மணிக்குத்தான் ரெஸிடென்சியிலே மீட்டிங் - இன்னும் மணி ஆவலிங்களே...?"
பதில் பேசாமல் சாரட்டில் போய் ஏறிக்கொண்டு “மூக்கா! வீடு வண்டியை” என்றார். போகிற இடத்தைச் சொல்லக்கூடாது என்பது பாலபாடம். போவதற்குள் அங்கு செய்தி போய் விடும். உஷாராகி விடுவான்கள். ‘படித்துப் படித்துச் சொன்னேன் மாதவனிடம்; கேட்கவேயில்லை’ என்று நினைத்துக் கொண்டார். மாதவன் இப்படித்தான் ஒளிவு மறைவு இல்லாமல் போய் மாட்டிக் கொண்டான். தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று ஆகிவிட்டது.
“நேரே மன்னவன் குளத்துக்கு போ” என்றார் மூக்கனிடம் - நாணஸ்தன் - ராஜாங்க விசுவாசி. அதுவும் திவான் என்றால் தெய்வம் மாதிரி அவனுக்கு. தேவைப்படும்போது அரவணைத்தும் கடுமை காட்டியும் குதிரைகளை எவ்வளவு அழகாக நிர்வாகம் செய்கிறான் நான் நல்லூரை நிர்வாகம் பண்ணுகிற மாதிரி. ராமையா சாஸ்திரி தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். வழியில் மனிதர்கள் நின்று கொண்டு முகமன் செய்வதை ஆளுக்குத் தகுந்த மாதிரி அங்கீகரித்துக் கொண்டு வந்தார். ஆட்டு மந்தைக் கூட்டம்! அதனால்தான் வெள்ளைக்காரன் ஐயாயிரம் பேர் கோடிக்கணக்கான ஜனங்களைக் கட்டி ஆளுகிறான்கள்.
வண்டி நின்றதும் நிதானமாக இறங்கினார். மேலக்கரை காவல்காரன் ஓடோடி வந்து சலாம் வைத்தான். “என்னப்பா வேலையெல்லாம் நடக்கிறதா? நடக்கக் கல்லு பாவச் சொல்லியிருந்தேனே!” என்று கேட்டுவிட்டு “உன் பிள்ளை எப்படியிருக்கிறான்?” என்றார் அருங்குளவனிடம். 
“வேலை ஆரம்பிச்சாச்சுங்க சாமி. பையன் உங்க புண்ணியத்துல நல்லாயிருக்கான் சாமி”  என்றான் அருங்குளவன். மூன்றாம் வருடம் ஊர் பூரா வைசூரி வாரிக் கொட்டியிருந்தது. ராமையா எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஊர் ஜனங்களுக்கு ஊசி போடப்பட்டு, கொள்ளை நோய் பரவாமல் தடுக்கப்பட்டது. அதற்காக வெள்ளைக்கார  ராஜ்யம் சாஸ்திரிக்கு பாராட்டுப் பத்திரம் கொடுத்திருந்தார்கள்.
நிதானமாகப் படிகளில் ஏறி சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டார். காற்று மேலோட்டமாக அடித்துக் குளத்தில் சிறு அலைகளை உண்டாக்கிய வண்ணம் இருந்தது. தண்ணென்று ஒரு குளிர்ச்சி பரவியது. கண்களைக் குளம் பூரா ஓடவிட்டார். கொஞ்சம் பெருமிதத்தால் மார்பு விம்மித் தாழ்ந்தது. ஒருசுற்று வந்தால் மூன்று மைல். சமுத்திரம் என்று கூடச் சொல்லலாம். நடுவில் நீராழி மண்டபம் - ஆறேழு மாதத்தில் வெட்டிக் கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் நல்லூரின் குடிநீர்ப் பிரச்னையும் தீர்ந்தது.
மெல்ல நடைபோட்டார். எத்தனை பேரைக் கரைத்திருப்பேன்! சமணப் பள்ளியிலிருந்து வந்த போதே ரீஜண்டிடம் தனக்கு சர்வ சுதந்திரம் கொடுத்தால் தான் வேலை செய்ய முடியும் என்கிற நிபந்தனையுடன் தான் வந்தார். ரீஜண்ட் அநுபவஸ்தர். சாஸ்திரியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார். ‘வெள்ளைக்கார ராஜாங்கத்துக்கு வரும்படி குறைந்தால்தான் கேட்போம்; மற்றபடி தலையிட மாட்டோம்! என்று தெளிவாகச் சொல்லி விட்டார். அதை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்.
இரைத்தது. சற்று நின்றார். முதலில் சிறு சிறு வாய்க்கால்களை அந்தந்த இடங்களில் குளங்களுடன் இணைக்க வேண்டியிருந்தது. அந்தந்த குளங்களின் உபரி நீரை வேறு வாய்க்கால்கள் வழியாக அடுத்தடுத்து பெரிய குளங்களில் இணைத்து அவற்றின் உபரியை வாய்க்கால் மூலமாக மன்னவன் குளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. எவ்வளவு தடைகள்!  நாள் சரியில்லை. சாமி குத்தம்; உத்தரவு ஆகவில்லை; உதைப்பேன். எங்க ஜாதி இடத்தைத் தோண்ட விட மாட்டோம். திவான் என்ன பிராமணனா? சுத்த பாஷண்டனாக இருக்கிறானே! இத்யாதி இத்யாதி... நாளாவது கிழமையாவது - சாமியாவது பூதமாவது! மாமா வீட்டில் சோற்றுக்குச் சிங்கி அடித்துக் கொண்டிருந்தபோது எந்த சாமி வந்து சோறு போட்டது? எல்லாம் என் முனைப்பும் உழைப்பும் தான் - 
அம்மா மட்டும் கடைசி வரை மனசாட்சி மாதிரி இடித்துக் கொண்டேயிருப்பாள். கல் பெஞ்சில் சற்று சாவகாசமாக உட்கார்ந்து கொண்டார். அதென்னவோ வாழ்க்கையில் அடிபட்டதினாலோ என்னவோ ஒன்றின் மீதும் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. சந்தி கிடையாது; பூஜை கிடையாது; புனஸ்காரம் கிடையாது. வேலை வேலை வேலை என்று இருந்தாகி விட்டது. வேலையென்றால் கட்டி மேய்க்கிற வேலைதான். ஆடுகிற மாட்டை ஆடிக் கறப்பது; பாடுகிற மாட்டைப் பாடிக் கறப்பது. சாம பேத தான தண்டம்தான். எல்லோருக்கும் பலஹீனம் இருக்கிறது. அது புரிந்துவிட்டால் போதும்.
ஒரு கணம் அம்மாவின் முகம் கண்ணில் நிழலாடியது. “அத்து வேணும்டா ராமையா” என்பாள் அடிக்கடி. நல்லூர் வேலை வந்த போது துள்ளிக் குதித்தாள். “உனக்கு அஞ்சு வயசு வரையிலும் பேச்சு வரலை; யாரோ சொ ன்னான்னு அந்த நாள்ல வாத்திம ராஜபுரத்திலேருந்து வண்டி கட்டிண்டு வந்தேன். நல்லூர் அரிய நாச்சி கோயில்ல வேண்டிண்டு பிரஸாதத்த  உன் வாயில போட்ட அப்புறம்தான் உனக்கும் பேச்சு வர ஆரம்பிச்சது. இது எதோ பூர்வ ஜெனம் சுகிர்தம்டா  ராமையா. உடனே சரின்னு சொல்லிடு” என்றாள் . கூடவே இருந்தாள். இரண்டாம் வருடம் “மாரை வலிக்கறதுடா ராமையா... ராமையா... " என்றாள். பிராணன் போய் விட்டது. அநாயாச மரணம். “கண் வழியா உயிர் போயிருக்கு; மறு ஜென்மா கெடையாது” என்றார் சர்ம ஸ்லோகத்திற்காக  வந்திருந்த கல்யாண சுந்தர ஜடாவல்லபர்.
மெதுவாக எழுந்திருந்தார். என் சுபாவமே பேசாமல் இருப்பதுதான். அதற்குப் போய் கவலைப்பட்டுக் கொண்டு வேண்டாத சாமிக்கெல்லாம் நேர்ந்து கொண்டு... மெல்ல நடந்த படிகளில் இறங்கினார். அரிய நாச்சியாவது ஒன் றாவது... அந்தக் கோயில் சம்பந்தமான வியாஜ்யத்துக்குத் தான் இன்று ரெஸிடென்ஸியில் மீட்டிங் என்பது அவருக்கு நினைவுக்கு வந்ததில் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.
குளம் கட்டுகிறபோது இப்படித்தான் சாமியாடினான்கள். வீட்டிற்கு முன் ஒரு பூசாரி வந்து உண்மையிலேயே சாமி ஆடினான். லட்சுமிதான் பயந்து போனாள். சாபம் விடாத குறை. முனியன் குடி கிராமத்தில் சட்டி பானை செய்கிறவன். பரம்பரையாய் அவர்கள்தான் கோயிலுக்குப் பூசாரி. மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தார் ராமையா. வாய்க்கால் வரத்துக்காக ஒரு மரத்தை வெட்ட வேண்டியிருந்தது. ஊர்க்காரர்கள் பிராது பண்ணிக் கொண்டிருந்தார்கள். “பரிகாரம் என்ன?” என்று கேட்டார் சாஸ்திரி அவன் சாமியாடி முடிந்த பிறகு. முழ நீளத்துக்குப் பரிகாரம் சொன்னான். அனைத்தையும் ஒப்புக் கொண்டு பில்லைப் போட்டு பணத்தைக் கொடுத்து விட்டார். தீர்ந்தது பிரச்சனை.
அதே மாதிரி போன மாதம் நடந்ததை நினைத்துக் கொண்டார். வீதிகளுக்கு இடைஞ்சலாய் இருந்த கோயில்களை இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. மொத்தமாக ஐம்பது கோயில் இருக்கும். எங்கு போனாலும் எதிர்ப்பு - கம்பு கடப்பாரை என்று தூக்கிக் கொண்டு வந்து நின்றான்கள். ஜெயில் வார்டன் கணபதி சேர்வை தான் தலைமை. அவனை ஒன்றும் செய்ய முடியாது. ஆள் கட்டுமானம் ஜாஸ்தி. அவன் பழக்க வழக்கங்களை துப்பு அறிந்ததில் வேலை சுளுவாக முடிந்தது.
கணபதி சேர்வை தாசி சொர்ணத்திடம் தொடுப்பு என்று தெரிந்தது. சொர்ணத்துக்கு ஆள் அனுப்பி சேர்வை மேல் பிராது கொடுக்கச் செய்தார். கதறிக் கொண்டு வந்து சேர்ந்தான் கணபதி. கோயிலாது குளமாவது. எல்லா கோயிலிலும் அந்த சாமியின் பெயரைக் குறிப்பிட்டு ‘நாங்கள் வீதியை அகலப்படுத்த வேண்டிய இக்கோயிலை எதிர்வரும்.......... தேதியன்று இடிக்கப் போகிறோம். எனவே இங்கு குடியிருக்கும் நீங்கள் நாங்கள் ஏற்கனவே தீர்மானித்த இந்த இடத்தில் குடிபுக வேண்டியது - திவான்” என்று நோட்டீஸ் அடித்து ஒட்டினார்கள் நகராட்சி ஆட்கள். அந்த எற்பாட்டின்படி எல்லா சாமிகளும் இடம் மாற்றம் செய்யப்பட்டது. பாக்கி அரிய நாச்சி கோயில் ஒன்றுதான். வண்டியில் ஏறிக் கொண்டார். “வீட்டுக்குத்தானே சாமிகளே” என்றான் மூக்கன்.
“வேண்டாம்; நேரே ஆபிஸுக்கு போய்விடு. விட்டுட்டு அம்மாவிடம் போய் மத்யான சாப்பாடு அனுப்ப வேண்டாம்; வீட்டிற்கே வந்து விடுகிறேன் என்று சொல்லி விடு” என்றார்.
அரிய நாச்சி கோயிலைப் பெயர்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அந்தக் கோயிலைப் பேட்டையார்கள் பராமரித்து வந்தார்கள். தலைவர் வெங்கட்ராமன் செட்டி காசுக்கடை வைத்திருந்தார்; பெரிய தனவந்தர். நவராத்திரி வந்துவிட்டால் அரிய நாச்சியின் உற்சவத்தை பெரிய அளவில் செய்வார். ஒன்பது நாளும் வருகிறவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சாப்பாடு; வேஷ்டி அங்கவஸ்திரம்; தவிர வருகிற பிராமணர்களுக்கு ஒரு பவுனில் அம்மன்காசு என்று அமர்க்களப்படும். அவர் தன் வரை கோயிலை இடிக்கக்கூடாது என்று முயற்சிகள் எடுத்துப் பார்த்தார். ராமையா சாஸ்திரி அசைந்து கொடுக்கவில்லை. கல்யாண சுந்தர ஜடால்லபரை வேறு ராமையாவிடம் தூது அனுப்பினார். ஒன்றும் நடக்கவில்லை. நேரே பைரவத் தேவனிடம் போய் பிராது வைத்து விட்டார். அதற்குத்தான் இன்று பஞ்சாயத்துக்கு ரீஜண்ட் வரச் சொல்லியிருக்கிறார்.
அலுவலகத்தில் இறங்கிக் கொண்டார். சலாமிட்டவர்களை அங்கீகரித்தவாறே அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டு கேதரினைக் கூப்பிட்டார். நல்ல வேளை! சற்று சீக்கிரமாகவே வந்து விட்டாள். நோட்டும் பென்சிலுமாக முன் நின்றாள். படபடவென்று ஆங்கிலத்தில் வாசகத்தைச் சொன்னார். அவள் முகத்தில் வியப்புக் குறியும் கேள்விக் குறியும் தொக்கி நின்றன. என்றாலும் ஒன்றும் கேட்கவில்லை. அவள் சுபாவம்.
லெட்டரை டைப் செய்து கொண்டு வந்து கொடுத்தவுடன் வாங்கி மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டே “கிளம்புகிறேன். மத்யானம் வர மாட்டேன். ஏதாவது அவசர அலுவல் இருந்தால் மட்டும் ஆளனுப்பு” என்று கொல்லிவிட்டு போய் சாரட்டில் ஏறிக் கொண்டு நேரே ரெஸிடென்ஸிக்கு விடச் சொன்னார்.
போய்க் காத்திருந்தார். ரீஜண்ட் வரவில்லை. பைரவத் தேவன் வந்து உர்ரென்று உட்கார்ந்திருந்தது. வந்தபோது எழுந்திருக்கிற மாதிரி பாவலா பண்ணி விட்டு முகமன் கூறி விட்டு உட்கார்ந்து விட்டார் ராமையா சாஸ்திரி. 'நீ ராஜா என்றால் நான் திவான். நீயென்ன ராஜா? பல்லுப் போன ராஜா... இனிமேல் வெள்ளைக்காரன்தான் ராஜா'
காரசாரமாக விவாதம் ரீஜண்ட் வந்த பிறகு, பைரவனால் சேர்ந்தார்ப்போல் நாலு வார்த்தை பேச முடியாது. அதற்காகத்தான் துபாஷ் நாராயணனைக் கூட்டி வந்திருக்கிறான். என்றாலும் தன் வாதங்களை - ஏன் கோயிலை இடிக்க கூடாது என்கிற காரணங்களை நன்றாக எடுத்துக் வைத்துக் கொண்டிருந்தான். ரீஜண்ட் இருவரையும் சுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ராமையாவிற்கும் பைரவனுக்கும் பேதமில்லை. எல்லாம் சுதேசி அடிமைகள்.
ஒரு கட்டத்தல் ராமையா தன் பிரம்மாஸ்திரத்தை எடுத்து வீசினார். பையில் வைத்திருந்த கடிதத்தை எடுத்து ரீஜண்டிடம் கொடுத்து, “இந்த ஏற்பாட்டுக்கு நீங்களோ ராஜாவோ சம்மதிக்கவில்லை என்றால் நான் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி விட்டு திகைத்த இருவரிடமும் அவசரமாய் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார். 
மலையாள ராஜ்யத்திலும் இதுதான் நடந்தது. வண்டியில் ஏறும்போது தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாமோ என்று தோன்றியது. ஒரு கணம்தான். மறுபடி வீம்பு தலைதூக்கியது. எவ்வளவு செய்திருக்கிறேன்! மலையாள ராஜ்யத்திலும் நிறைய செய்தேன். பங்காளி சண்டையில் மாட்டிக் கொண்டேன். ஒரு உறவுக்காரன் ராஜாவைக் கொலை செய்ய ஏற்பாடு செய்யச் சொல்வதாக அவன் கையெழுத்தில் போலிக் கடிதம் தயாரித்து அதை அந்த ஊர் ராஜா கையில் கிடைக்கும்படிச் செய்தபின் தான் அங்கிருந்து தப்ப முடிந்தது. 
நேரே வீட்டுக்குப் போனார். “லட்சுமி இலையைப் போடு” என்றர் லட்சுமி ஆச்சரியமாக அவர் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள். இன்றைய இரண்டாவது அதிர்ஷ்டம் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறதே பிராமணன்! வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டார். நல்ல திருப்தியாக உட்கார்ந்த போது ரெஸிடென்ஸியிலிருந்து ஆள் வந்து விட்டது. அவர் கிளம்பிய பின் ரீஜண்டும் ராஜாவும் மறுபடி பிரச்னையை அலசியதாகவும் திவானின் முடிவுக்குச் சம்மதிப்பதாகவும் ராஜினாமாவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படிக்கும் தகவல் வந்துவிட்டது. எதிர்பார்த்ததுதான்.
சட்டையைக் கழற்றி விட்டு மேல் அங்கவஸ்திரத்தைத் தோளில் போட்டுக் கொண்டு பாக்கை மென்றார். நாதவிந்து கலாதி.... சற்று உல்லாசமாகக் கூட இருந்தது. இந்தப் பிடிவாதம் இல்லையென்றால் கிளார்க்காக இருந்து தாசில்தாராக உயர்ந்து திவான் ஆகியிருக்க முடியுமா? வெள்ளைக்காரனிடம் நற்சான்றுதான் வாங்கியிருக்க முடியுமா? 
கண்ணைக் சொக்கிக் கொண்டு வந்தது. போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டார். எண்ணத்தில் அப்படியே அமிழ்ந்து அமிழ்ந்து உறங்கிப் போனார்.
மாமா சிவப்புக்கல் கடுக்கனுடன் விழித்துப் பார்த்தார் “தோலை உரிச்சுப்பிடுவேன் படவா” மாமி நிஷ்டூரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா பயத்துடன் ‘நம்ம லட்சுமியை..........’ அதைவிட பயத்துடன் லட்சுமி நின்று கொண்டிருந்தாள். சின்னப் பெண் - பாவடை சட்டை போட்டுக் கொண்டு.
“அய்யா ராமையா!” யாரோ கட்டிலை உலுக்கினாற் போல் திடுக்கிட்டு எழுந்திருந்தார் ராமையா. சின்னப் பெண் அரக்குக் கலரில் பாவாடை சட்டை; காதில் ஜிமிக்கி காலில் கொலுசு முகம் பூரா மஞ்சள் பூசிக்கொண்டு நெற்றிக்கு இட்டுக் கொண்டு தகதகவென்று நின்று கொண்டிருந்தாள் சிரித்தவாறே. லட்சுமி கனவில் வந்ததனால் ஏதோ பிரமை போலிருக்கிறது என்ற மறுபடி கண்ணைக் கசக்கியவாறே உற்றுப் பார்த்தார் ராமையா. இது லட்சுமி இல்லை; வேறு யாரோ. நவராத்திரியின் போது லட்சுமி இது மாதிரி ருதுவாகாத குட்டிகளை வைத்துக் கொண்டு கன்யா பூஜை என்ற ஏதோ செய்வாள்; குழந்தை இல்லாத ஏக்கம். அந்த மாதிரி ஏதோ ஒரு பெண் வந்திருக்கிறதோ? நவராத்திரிக்கு இன்னும் நாளிருக்கிறதே? மறுபடி மறுபடி உறுத்துப் பார்த்தார். கனவுமில்லை பிரத்யட்சமாக  ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறது.
கை வளையல்களை வைத்து ஓசை செய்துவிட்டு கலகலவென்று சிரித்தது. காலில் கொலுசு சத்தத்துடன் பாண்டி ஆடுகிற மாதிரி மேலேயும் கீழேயும் நடந்து விட்டுக் கெக்கலி கொட்டிச் சிரித்தது.
“ராமையா! நான் அரியவள் வந்திருக்கேண்டா. நீ என் குஞ்சுடா; என் எச்சிலை உன் வாயில துப்பினேன்டா; அதுல தான் இந்த மட்டில வந்திருக்க. என்னை, என் இடத்தை விட்டு உன்னால கிளம்ப முடியாதுடா. அதை இத்தோட விட்டுடு”
ராமையா குழம்பிப் போனார். ஆட்களைக் கூப்பிட, வாயைத் திறந்தார். பேச்சு எழும்பவில்லை. எழுந்திருக்க முயன்றார் முடியவில்லை. இது கனவா? சொப்பனஸ்தை என்கிறார்களே அதுவா?
“இப்பவும் நம்பிக்கைப் பட மாட்டேங்கறியே நிறுத்துடா உன் தந்திரத்தையெல்லாம்; உன் பெண்டாட்டி வயத்தில அப்பதான் நானே வருவேன். தத்தித் தரிகிட தித்தித் திரிகிட தித்தித் திரிகிட தித்தோம்...” என்று பாடிக் கொண்டே மீண்டும் கலகலவென்று சிரித்தது குழந்தை.
எழுந்திருக்க முயன்று தடாலென்று கட்டிலில் இருந்து கீழே விழுந்தார் ராமையா சாஸ்திரி. லட்சுமி உக்ராண அறையிலிருந்து ஓடி வந்தாள். “அய்யோ! என்னன்னா ஆச்சு?” என்று பதறினாள். ராமையாவால் பேச முடியவில்லை. மலங்க மலங்க விழித்துக் கொண்டே தண்ணீர் வேண்டுமென்று சைகை செய்தார். ஒரு மடக்கு குடித்துவிட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு ‘ஒன்றுமில்லை கவலைப்பட’ என்று சைகை காண்பித்தார்.
அன்றைக்கே ‘கோயில் அதே இடத்தில் இருக்கலாம்; மாற்றம் செய்ய வேண்டியதில்லை’ என்று ரீஜண்டுக்கும் ராஜாவிற்கும் அலுவலர்களுக்கும் தாக்கீது அனுப்பி விட்டார்.

நன்றி:லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2016

திங்கள், 26 செப்டம்பர், 2016

சொல்வதெல்லாம் ....


பொழுது போகாமல் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை அவ்வப்போது பார்க்கிற வழக்கம். அதை நடத்துகிற அம்மை ஒரு போலீஸ்காரரின் நிமிர்வுடன் நடந்து கொள்கிறார். வருகிறவர்களை சாதுர்யமாகக்  கேள்வி கேட்டு சாமர்த்தியமாக உண்மையை வரவழைக்க முயற்சிக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக உரையாடல்களை நகர்த்திச்  சென்று முடிவில் தீர்ப்பும் தீர்வும் வழங்குகிறார்.
வருபவர்கள் முக்காலே மூணு வீசம் பேர் கீழ்நிலை மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் கள்ள உறவு; குடி;காதல்; ஏமாற்றிவிட்டு ஓடுவது. இவைதான் பிரச்சனைகளாக முன் வைக்கப் படுகின்றன. இரு பாலைச் சேர்ந்தவர்களும் பேதமில்லாது குற்றம் இழைப்பவர்களாகவும் பாதிக்கப் படுகிறவர்களாகவும் இருக்கின்றனர். சில சமயங்களில் புகார் சொன்னவர்களே உண்மையில் தவறு செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இதில் நிறைய ஆச்சர்யங்கள் உண்டு:
தவறு செய்பவர்கள் பெரும்பாலும் குற்றத்தை பெருமளவில் மறுக்க முயற்சிக்காமல் அதற்கான நியாயங்களை நிறுவுவதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
நெறி ஆளுநர் பல சமயங்களில் தவறு செய்ததாகக் கருதுவர்களை கிட்டத்தட்ட மிரட்டுகிறார். இதற்கெல்லாம் சட்ட ஒப்புதல் இருக்கிறதா?
தவறு செய்ததாகக் கருதப் படுவோர் சில  சமயங்களில் அதைத் தொடரவே விரும்புகிறார்கள். இதன் மூலமாக நான் அனுமானிப்பது அவர்கள் நிகழ்ச்சியில் சொல்ல விரும்பாத காரணம் பின்னணியில் இருக்கலாம் என்பது.
இவை எல்லவற்றையும் விட நான் கவலைப் படுவது ஒன்று உண்டு.வங்கி பயிற்சி அலுவலகத்தில் நான் பணியாற்றிய போது பயிற்சி மாணவர்களுக்கு 'உன்ன அறிந்து கொள்' என்று ஒரு தேர்வு வைப்பது உண்டு. அதில் உளவியல் ரீதியிலான பல கேள்விகளுக்கு மாணவர்கள் விடை அளிக்க வேண்டும். அதன் முடிவில் 'நீ இன்னார் தான்' என்று நிரூபிக்கிற வழக்கம். சற்று உற்று நோக்கினால் இது பொது அரங்கில் ஒரு மனிதனை நிர்வாணமாக்குகிறது என்று நான் நினைத்துக் கொள்வேன். இந்த விதத்தில் பார்த்தால் அந்தரங்கம் புனிதமானது தான்.
நிகழ்ச்சியால் விளைகிற நன்மைகள் இருக்கட்டும். இது போன்ற ஒரு நிர்வாணமாக்குகிற காரியத்தைத் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் செய்கின்றன. அதுவும் இவற்றையெல்லாம் எதிர்க்கத் திராணியற்றவர்களிடம்...

சனி, 27 ஆகஸ்ட், 2016

Aditya Mohan Thillana Hindolam

Aditya Mohan-Petra thai-Charukesi- Ramalinga Swami

Aditya Mohan Ennalo Darbar Thyagarja Swami

Aditya Mohan Ennalo Sivapanthuvarali

Aditya Mohan Yochana Darbhar

Aditya Mohan Vinaayaka Chakravaagam

ஞாயிறு, 29 மே, 2016

கவிதைகள்-கணேஷ் கிருஷ்ணமூர்த்தி



முருகா!
சுயசுதந்திரம் சிறைப்படுத்துகிறது.

பாதிக்கப்பட்டவர் எல்லோரும்
என் மனத்தின் சபையில் ஒன்று கூடி
என்னைச் சாடுகிறார்கள்;
நியாயமான முழக்கங்கள் அவர்களுடையது;
நான் சுய மன்னிப்பைத் தேடுகிறேன்.
இப்படியா, செய்வான் ஒரு மனிதன்!
என்கிறார் ஒருவர் தேநீர் அருந்திக் கொண்டே...

நீங்கள் சொல்லும் அம்மனிதன் நானில்லை.
என்னைத் தெரிந்தவர்கள் திடீரென்று
மொத்தமாகக் காணாமல் போகிறார்கள்.

நான் அப்படிப் பட்டவன் இல்லை.

பாவத்தின் சம்பளம் சுதந்திரம்
நான் சற்று விரைவாக
நான் அப்படியில்லை என்கிறேன்
எவனோ மாட்டிக் கொண்டான்
அவர்கள் சொல்லும் அம்மனிதர்கள்
நாம் யாவரும் இல்லை.

முருகா என்ற சொல் ஆழமானதொன்று
என்றறிகிறேன்.

குருவி சர்ச்சை!
குருவியே!
வா, வந்து இக்கிளையின் மேல் உட்காரு
நீ யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
(அல்லது எது நீ என்று),
உன் சிறகைப் பற்றி,
உன் உருண்டை வாஷர் கண்களைப் பற்றி,
உன் துள்ளும் தலையைப் பற்றி,
நகத்தால் ஆனது போல் உள்ள
உன் அலகினைப் பற்றி;
பாடு
நீ படும் பாட்டை -
எனினும், என்னால்
ஊகிக்கத்தான் முடிகிறது
உன் மனத்தைப் பற்றி -
மனம் என்று ஒன்று
உனக்கிருந்தால்.

உறங்கும் பூனை
பூனைக்குட்டியே,
அடுத்து என்ன செய்யப் போகிறாய்?
அல்லது என் பார்வையில்
தூங்கிக் கொண்டே இருக்க உத்தேசமோ?
வேறு எதாவது செய்யேன்,
இந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் மேல்
உன் உறக்கத்திற்கு
சீதோஷ்ண நிலை
கச்சிதமாக இருப்பினும்.

உன் பேராசை மூஞ்சுறுகள்
தாவட்டும்;

பக்கத்துக் கட்டிடத்துக்குத்
தாண்டு பார்க்கலாம்;
சரி போகட்டும்; படுத்தவாறு
ஏதாவது அசிங்கமாகவாவது
செய்யேன்;
உதாரணமக, நாக்கைக் கொண்டு நீயே
உன் ரகசிய உறுப்புகளை...
உன் மொத்த ப்ராபல்யமான
திருட்டுத்தனமும்

இப்படியா
சாதாரணமாக,
மனித வகையில்,
தூங்க வேண்டும்.

திகிலூட்டாத,
அலுப்பூட்டும்,
பாதகமற்ற,
நன் நடத்தை கொண்ட,
கொடிய ஜந்துவே,
உன் பூனைத்தனம் என்னவாயிற்று?

எனினும் -
சாந்தி உன் முக்கிய குணாதிசயம்,
நட்சத்திரங்கள் போல் நீ
பகலில் தேய்ந்து
மறைக் கூடியவன்,
எல்லாவற்றிற்கும மேலாக,
மன நிறைவு கொண்டவன் நீ,
குற்றவுணர்வு அறவே அற்றவன்,
என்ற தகவல்களையெல்லாம்
நான் சற்றே நினைவு கொள்வேனாயின்,
உறங்கும் உன்னைக் கண்டு வியப்படைவேன்
விவேகத்துடன்...

கிளி ஞாபகம்!
பச்சைக் கிளியே
உனக்கு நான் பட்ட கடன் எத்தனை -
குழந்தை அன்னம் உண்ணும் படலத்தில் உதவிட
அம்மாவால் அழைக்கப்பட்டு,
நீ அந்நாடகத்தில் முக்கிய பங்கேற்று
உன் பாத்திரத்தை
என் சாதப் பாத்திரம் காலி ஆகும் வரை
எவ்வளவு அழகாச் செய்து கொடுத்தாய் -

என் வயிறு நிறைய உன் நினைவுகள்
உன் கிறீச்சிடும் இலைகள்
உன் அழகு நங்கையான சிறகடிப்பு
மஞ்சள் வட்டத்திற்குள் உன் கண் வழிகள்
மாமரத்தின் நாக்கு நீ.

அன்றைய தோட்டத்தில் நீ
எனக்கு நல்கிய சாந்தி
என்று குலைந்தது?
அன்று தொலைத்த உன்னை எந்நாள்
எக்கானத்தில் மறுபடி காண்பேன் நான்.

உடமைகள்!
சுள் என்ற வெய்யிலில்
காய்ந்த நான்,
வியர்வை கொட்ட,
அகம் அடைந்து,
ஆடை களைகிறேன்.
(கோடை மாதங்களில் நிர்வாணம்தான் நிம்மதி)

அனேக பொருட்கள்
அவிழ்கின்றன,
கவிழ்கின்றன
என் சரீரத்திலிருந்து -
கைக் கடிகாரம்
குண்டாக பர்ஸ்
(அநேக காகிதக் குறப்புகள் அதனுள்)

கைக்குட்டை,
கருப்புக் கண்ணாடி,
சிகரெட்டுகள்,
தீப்பெட்டி,
சில்லரைகள்,
மாத்திரைகள்,
ஸ்கூட்டர் சாவி,
வீட்டுச்சாவி,
ஆபிஸ் அலமாரிச் சாவிகள்;
பேனா,
சட்டைப் பை விலாசப் புத்தகம்,
இன்று நான் வாங்கிய பென்சில் பேட்டரிகள்...

ஒரு சாதாரண நாளில்
நான் லாவகமாக, மேலும் கீழும்
சுமந்து செல்பவ¬ இவை;
என் சின்னஞ்சிறு உடமைகள்;
வெற்றுப் பொக்கிஷங்கள்,
அன்றாட என் அடையாளங்கள்,
என் குருட்டு சிசுக்கள் -
இவ்விநாடி தாங்க முடியாத சுமைகளாகின்றன;
வியர்வை கொட்டுகிறது,

உடம்பு வேகிறது
சட்டையை அவிழ்க்கிறேன்;
முடிவில், நாம் அனைவரும்
நம் உடமைகைளைக் கழற்றி எரிய நேரிடுகிறது.
வெறுமனே தகனம் செய்யப்படுகிறோம்.
அச்சுதந்திரத்திற்கு மனம் சற்று முன்னரே
ஆயத்தம் செய்து கொண்டால் என்ன
என்று எனக்குத் தோன்றுகிறது இந்நிமிடம்.

அப்பா!
அப்பா நீலாங்கரை வீட்டில் இல்லை,
என்னுடன் பம்பாயில் இல்லை,
லதாவுடன் டெல்லியில் இல்லை,
பூனாவில் கௌரிவுடன் இல்லை.
அமெரிக்காவில் உஷாவுடனோ, ஸ்ரீதருடனோ
அல்லது கனடாவில் ப்ரியாவுடனும் இல்லை;
அப்பா எந்த விமானத்திலோ, காரிலோ
பிரயாணம் செய்த நிலையில் இல்லை
அப்பாவைக் காணவில்லை, எங்கும் காணவில்லை;
அப்பா இறந்து போய்விட்டார்!

அப்பாவுக்கு இவ்வுலகம் பிடித்திருக்கிறது
இவ்வுலகின் சௌகரியங்கள் அவருக்குப் பிடிக்கும்;
சிந்தனை எனும் கவலை, வாழ்வு நமக்களிக்கும் கனி;
சொர்க்கங்கள் இக்கவலையின் பரிசுகள்;
இச்சௌகரியங்கள் செய்யும் சிபாரிகளின் பேரில்
நமக்கு ஆன்மிகம் கிடைக்கப் பெறுகிறது -
நூல் பந்தும் பூனையும், நாங்களும் அப்பாவும்
யமுனா நதியை எனக்குப் பிடிக்கவில்லை,
தண்ணீர் மண்ணீராய் இருக்கிறது

குழிவிட்டு விரைந்தபோதும்,
அச்செப்டம்பர் மாதத்தில்
துர்நாற்றம் ஒன்று கல்பிள்ளையார் போல்
அந்நதியில் அமர்ந்து கொண்டிருந்தது;
யமுனையின் ஒரே சமீபப் புனிதம்
அப்பாவின் சாம்பலைத் தாங்கிக் கொண்டிருந்தது:
கிருஷ்ணர்கள் கைவிட்ட யமுனை -
அப்பாவின் அஸ்தி, நதியைப் புனிதப்படுத்தட்டும்!

அப்பா எரிந்தாகி விட்டது,
அவர் சாம்பல் யமுனையில் அமிழ்ந்தாகி விட்டது,
இனி தாஸ்தாவேஜ்களிலும், புகைப்பட ஆல்பங்களிலும்தான்
அப்பாவின் நினைவு.

(நம் நினைவில் அவர் வாழ்கிறார்
என்று சொல்லி வைக்கலாம்;
ஆனால் நினைவு ஓட்டைப் பெட்டியாயிருக்கிறது)
பல நாட்டுப் பயங்கொள்ளிகள்
ஒன்று சேர்ந்து ஒரு நினைவைச் செய்தார்கள்;
ஒரு சுவர்க்கத்தையும், மறுபிறப்பையும், சமூகத்தையும்
தத்துவத்தையும், தவங்களையும் சித்தரித்தார்கள்
அவ்வுலகத்தின் சமஸ்க்ருத நெடியில் அப்பாவா?
அப்போலி சுவர்க்கம் என்னுடைய அப்பாவிற்கா?

நாம் தனிமையில், இவ்வுலகம் எனும்
திறந்த வெளியினை
கவலைகளால் பேணப்பட்டும், விடுவிக்கப்பட்டும் -
அப்பா இந்த சுவர்க்கத்தை விட்டுப் போய்விட்டார்
அவர் இருப்பது இப்பொழுது இல்லாமையில்,
ஒன்றுமில்லாமையில், உணர்வற்றறு உலோகமாய்;
அவர் விடடுப் போன வாழ்வையும் சேர்த்து
அவரை மதித்த, காதலித்த நான் வாழவிரும்புகிறேன்.

ஐஸ் கட்டி!

கண் சுவைக்கிறது,
நக்குகிறது
ஐஸ் கட்டியின்
அடிப்படையில் இருண்ட
இதயத்தை;
அதன் குகைகளில்
நிழல்கள் -
துல்லியமாக
வருவல்
பல்புகளுக்கடியில்,
ஆழ்ந்து, கருத்த
ஐஸ் கட்டியின்
உடல்
அதன் கர்ப்பக்கிருஹத்தினுள்
நிர்வாணத்திலும்
தன் கற்பை
நேர்த்தியாகக்
கட்டிப் பிடித்துக் கொண்டு
ஐஸ் கட்டி
கருமையில்
இறுக்கமாகப்
போர்த்திய தன்
அந்தரங்கத்தில்
இறப்பில்லாமல்
இன்று;
கண்ணீர் வடிக்கும்
எனினும், கடினமான
சற்றே விரல் பிடி நழுவும்,
அதனின் அதனுள்
சுய அரவணைப்பு;
சதுரத்தின்
உருண்டைக் குணம்,
கண்ணை
அபகரித்து
அபரிமிதத்தில்
அழிக்கவல்ல
தன்னிச்சையற்ற
பெண்ணின்
யௌவனத்துடன்
அதன் நெரிசல் ஆழங்கள்
கடலினுடையதாய்,
அதன் குழுமியுள்ள சேறு
வானினுடையதாய்,
அதன் இருண்ட கரையின் குளுமை
குழந்தைக் கண்களுடையதாய்,

ஒரு நகரம்,
ஒரு விண்,
ஒரு உயிர்.
கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸுக்கு முன்தினம்
யேசுவை யோசிப்பதில்,
வெண் சர்க்கரைத் துகள்கள்
அன்ன நீர் வீழ்ச்சியாகிறது,
ஓர் குழந்தை உள்ளங்கையிலிருந்தும்.

புறநகர் மின்சார ரயில்
அலுப்புக் காட்சிகளைத் துடைத்து
விரைய
இதுவரைத் துவண்டவை
அழிக்கப்பட்டு (பார்வைப் பலகையிலிருந்து)
அந்த விநாடியன் முடிவில், ஜன்னல்
புல்லின் பச்சை போகங்களில்
படுத்திருக்கும் சூரியனைக் கொண்டு
நிரம்புகிறது.

சுவர்க்கத்திற்கு நம் விடுமுறை
பிரயாணங்கள் துவங்கட்டும்;

மனித வாசனை
நான் அன்று அக்சா கடற்கரையில்
சந்தித்த யேசுவிடமிருந்து திரவியமாக
ஒழுகுகிறது;
மண் தீவில்
மீன் அவனுடைய சுவாசம்;
மூழ்கிச் சாகிற என் கால்களைப்
பற்றும், காப்பாற்றும் அன்பாற்றல் அவனுடையது -
யேசு என் மனைவி.

ஆழ்கடலின் கீழ்
உறங்கும் திட மணல்,
ஆழ்க்கடலில் திறந்த கண்களுடன்
தூங்கும் மீன்களுக்கடியிலும் உறங்கும்
திட மணல்;
எது எப்படியென்றாலும், சுழலும் நம் உலகிற்கு
எந்த துர்முடிவு நேர்ந்தாலும்,
கிறிஸ்துமஸ் வர உள்ளது
நெஞ்சத்தில் அகல் ஏற்றி
நாம் மகிழ்தற்கு.

பதில்!
நான் நிறைய பேசுபவன்,
அவள் கொஞ்சம் சொல்பவள்

ஒருமுறை, காதலெச்சிலைக் கொண்டு
ஒட்டப்பட்ட
கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன் -
பதில் இல்லை;
மற்றுமொரு கடிதம் எழுதினேன்
மறுபடி ஒன்று .
(சிவப்புத் தபால்பெட்டி
அவள் செவ்துட்டு நிறம்) -
மற்றும் ஒருமுறை எழுதி,
அக்கடிதத்தை அஞ்சல்பெட்டியில்
சேர்ப்பிக்கவில்லை.

(தபால் பெட்டியில் நமக்கு
நம்பிக்கை போகுமெனில்
அனைத்து நம்பிக்கைகளும் தளர்கின்றன)

வெகுநாள் கழித்து
ஒருநாள், அவள் வந்தாள்
(என்னுடைய படிப்பறையிலிருந்து என்று ஞாபகம்)
நான் எழுதிய அத்தனைக் கடிதங்களையும்
மடித்து அவள் தன் கூந்தலில் செருகியிருந்தாள் -
ஏய், உன் கடிதங்களுக்கு
பதிலாகத்தான் நான் வந்திருக்கிறேன் என்றாள்

நான் நிறைய பேசுபவன்
அவள் கொஞ்சம் சொல்பவள்

மும்பாய் காலை
காலை ஏழு மணி,
நகரத்தின் காதோரங்களில்
நரை விழுகிறது.
அதன் விரல்கள்
சிமெண்ட் விறைபிபில்;
அகண்ட கண்கள் கொண்ட
புறநகர் ரயில், ஏற்கனவே
பலமணி நேரங்களாகத்
தனது பருத்த இடைகளை அசைத்து
நகர்ந்து கொண்டிருந்திருக்கிறது;
பள்ளிக் குழந்தைகளின் படுக்கைகளின்மேல்
சூரியக் கதிர்களின் மிருதுவான குளம்புகள்;
கடற்கரைத் தொட்டிலில்
உயிரில்லா அழுக்குகள்
இன்னும் தாலாட்டப்படுகின்றன;

சந்தையின் மத்தியில் தனது
விமோசனத்தை மறுபடி
தேடத் துவங்கும் நகரத்துடன்
நானும் சேர்ந்து கொள்கிறேன்!

கையெழுத்து
எங்கள் தீர்ப்பின் நிழலிற்குள்
உன்னைக் கொண்டு வருகிறோம்.
உன் நோட்டுப புத்தகத்தைக் காண்கிறேன்,
அசுத்தம் - குழந்தைத் தெளிவுடன்
எழுதப்பட்டிருக்கும் உன் மிஸ்ஸின் தீர்ப்பு -
உன் உதிரத்தின் மூலமும்
பங்காளியுமாக நான்
(உன் அசுத்தத்தையும் சேர்த்துத்தான்) -
உதிரம் அந்தரங்கமானது -
பிறப்பு, காயம், தீட்டு, ஆற்றுதல், வெள்ளைப்படுதல்
சம்பந்தப்பட்டது -
உன் ஆசிரியை சரிதான்
ஆனால், முழுவதும் தவறு.
வளர்ந்த மனிதன் மற்றொரு வளர்ந்தவரைப் பறி
இப்படித் தீர்ப்பளிக்கிறேன்,
நிதானமாக...

உன் கையெழுத்தின் வெளி வழிதலையும்
உழுதலையும், தளும்பல்களையும்
நான் வேறொரு
விளக்கில் காண்கிறேன்...

நீ எங்கள் ஒழுங்கு முறையை
எவ்வளவு தூரம் அனுசரித்திருக்கிறாய் -
அழித்தலும் திருத்தலும் கொண்டு,
உன் ஆசிரியையின் உலக நோக்கிற்காக உன்னையே
விட்டுக் கொடுத்திருக்கிறாய் -
நாங்கள் உனக்குப் படிதது வைத்த பாதையில்
நீ ஏற்கனவே பயணம் செய்யத் தொடங்கிவிட்டாய்!

உன்னை நீயே நிர்மூலமாகக் கருதவும்
எங்களை ஒழுக்கம் என்று கருதவும்
தொடங்கியிருக்கிறாய் -

உன் கையெழுத்து
தன் கரைகளை மீற முயன்று,
அலைகளாக மேலெழும்பி, நேச்சுவர்களைத்
தாண்டிக் குதித்துக் குமுறும் கடலாக
நான் பார்க்கிறேன்.

காடாக வளர்ந்த புல்லாக,
இரண்டு அத்துமீறக் கூடாத எங்கள்
கோடுகளை மீறிய உன் கையெழுத்து
எங்கள் உணர்வுகளுக்கு நிர்மூலம் -
நிர்மூலத்தை நிர்மாணித்த
நாங்கள் நிர்மூலத்தை நிராகரிக்கிறோம்.
எங்கள் தத்துவ சுத்தியல் கொண்டு
உன்னை ஓர் இடத்தில் அறைகிறோம்.
எங்களை மன்னித்து விடுதல் அவசியம் என் கண்மணி
ஏனெனில், நாங்கள் செய்வதறிபவர்.
முத்துக்காடு
நடப்பட்ட ஒரு முதலையாக ஈச்சமரம்
தன் முகவாயைத்திறந்து
தனது கூர்மையான பற்கைளக் காட்டி,
காற்றைப் பரிகசிக்க,
கடற்பறவைக்குத் தன்னிச்சை
தன் சிறகுகளைப் புறக்கணிப்பது தெரிகிறது.

மழை என் முகத்தில் சிற்றறம்மை
வார்க்கிறது.
கார் ஒன்று தனித்த மிருகமாகி,
கரையின் மண் மடிப்புகளினூடே,
மண்டியிட்டு முன்னேறுகிறது.
இப்படிப்பட்ட நாள் ஒன்றின் விடுதிகளில்தாம்
நாம் வசித்திருந்தோம்.
மழையை ஈரப்படுத்தி கடலுக்குள் விரட்டினோம்;
ஆயினும், கதாநாயகப் பாசாங்கு தெரிந்தே நடந்ததில்லை
உப்பின் மிரட்டலில் -
திக்கறற் நமது ஆத்மன், இளமையின்
ப்ராத்தனை தரும் வீரம் கொண்டு,
கடலின் அகோர தாடியையும் உசுப்பிப் பார்த்தது;
நல்விதியால் ஆக்கிரமிக்கப்பட்டும்,
அந்தக் கரையின் ஈர நிலையங்களால் தேற்றப்பட்டும்,
நாம் இருவர் நின்றிருந்தோம் என்று நினைவு.
தேகாலயம்
மனக் கயிறுகள்
சற்றே முடிச்சவிழ்க்கப்பட்டு
மனதே ணிஜி ஐப்போல் வேட்டையாடப்பட்டாலும்
அது அவ்விரவை ஆட்சி செய்கிறது;
சிறு வேதனைகள்
மகத்தான வெளிப்போதலையும் துன்புறுத்துகின்றன;
ஆனாலும், இதுமட்டுமே பூர்ண உண்மை ஆகாதுதான்.
நிறைய காதலும், பாடலும் வெறுமையும்
நடந்தேறி விட்டபோதும்.
நிஜத்தில்
எதுவுமே நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.
அவ்வெவ்வேறு கணக்கிலடங்கா இரவுகள் -
ஆடிய மனம், வாழ்வின் லாவக தேஜஸ் அனைத்தும்
அவ்வளவு தூரத்தில்...
இந்த மடக்குப் படுக்கையில்,
புண்ணற்று முடிவுறுகின்றன.

(விதையின் குணம் தெரியாமல் போவது
தொல்லைகளில் ஒன்று மட்டுமே)

அவ்வப்போது இருதயப் பரிசோதனைக் கருவிக்குமேல்
அதைச் சுற்றும் கிரணங்கள் போல்
வட்டமிடுவோரிடமிருந்து
நாம் என்ன பெற்றுக் கொண்டோம்,
அவர்களுக்கு நமது எவற்றை விட்டுச் செல்கிறோம்?

சின்னஞ்சிறு வினாடிகள் வெளியோடுகின்றன
பற்றிக் கொஞ்சப்படாத குழந்தை விரல்களைப்போல்...

தொலைவோ, வெறுப்போ, நம் மூச்சின் துர்நெடியோ,
உணர்வுப் பரிமாற்றம் தரும் மோக்ஷத்தை வரவிடாமல்
தடுத்துவிட்டன;

பீங்கான் பேசின்கள்,
படுக்கையறைக் கழிப்பு ஏனங்கள்
மிக்ஷி பாட்டில்களின் வௌவால் தொங்குதல்,
கடிதங்கள் - அனைத்தையும்
நம்மை அறியாத, தெரியாத ஊர் ஒன்றின்
யானையளவு ஒன்றுமின்மை விழுங்குகிறது
எத்தனை பேர் தொடமுடியாத தூரத்தில் -

பதைப்புடன், நம் நினைவை மீட்கக் கூடிய
ஏதோ ஒரு முகத்திற்குத் தேடுகிறோம்,
நாளை இரவும் எட்டு மணிக்கு நான் உன்னைச்
சந்திக்கிறேன் எனச் சொல்லத் துணியும் உதடுகளுக்காக
சாதாரண மற்றுமொரு காலை போதும்;

இறைவன் தனது தேகாலயம் காக்கட்டும்
என்ற இறுமாப்புடன்...
புனரபி ஜனனம் புனரபி மரணம்!

மகளின் மழை!
பெண் குழந்தை, எனது -
மழை கொணர்ந்திருக்கிறாள்.
வங்கக் கடல், இமாலயம்
அரபிக்கடல், விண்
இவையெல்லாம் என் பெண்ணின்
சேவகர்களாம்;

அங்குமிங்கும், சஞ்சலத்துடன்
உருண்டிருந்த மேகங்களை
ஒருங்கிணைத்து
தனது கரும்பார்வை கொண்டு
ஆழம் போதித்து,
இதோ நமது மாடிகளில், கோயில்களில்,
வீதிகளில், ரயில் பாதைகளில்,
குழுமிய மழை

விழுகிறபடிச் செய்துவிட்டாள்.

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...