சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதம்
நீண்ட நாட்களாக இந்த எழுத்தாளரின் எழுத்தைத் தேடிக் கொண்டிருந்தேன் . நான் படித்த மணிக்கொடி எழுத்தாளர்களில் விடுபட்ட கண்ணி இவர் . மற்ற எல்லோரையும் படித்திருக்கிறேன் . தவிரவும் இந்த நாவல் சங்கீதத்தைப் பற்றி என்று பிரபலமாகப் பேசிக் கொண்டார்கள் . ஜானகிராமன் நாவல்களில் சங்கீதம் அடிநாதமாக ஓடிக் கொண்டிருக்கும் . ‘ மோகமுள் ’ கிட்டதட்ட சங்கீதக்காரன் பற்றியது தான் . அதனுடைய உட்கருத்து வேறாக இருந்த போதும் . இந்த சமயத்தில் தமிழர்களுக்கு சங்கீதம் குறித்த ' வீக்னஸ்' எனக்கு நினைவுக்கு வருகிறது . தமிழ் மரபு என்பது சங்கீதத்துக்கு அடிமையான மரபு என்றுதான் தோன்றுகிறது . ' பாணர்' ‘ விறலி ’ என்கிற சங்ககால மரபைப் பற்றி எவ்வளவோ கேள்விப் படுகிறோமே ஒழிய அது எத்தகைய வடிவம் கொண்டிருந்தது என்று கூற முடியவில்லை . இப்போது இருக்கும் சங்கீத வடிவத்திற்குப் பெரிய தொன்மை கிடையாது . நாயக்க மராட்டிய மன்னர்கள் காலத்தில்தான் தற்போதைய வடிவம் உருக்கொண்டு எழுச்சி பெற்றது எனலாம் . அப்படிப் பார்க்கும்போது தமிழர்கள் சங்கீதத்தின்...