அரிய நாச்சி-சிறுகதை- அஸ்வத்
“என்ன?” என்றார் ராமையா சாஸ்திரி முன்னால் வைக்கப்பட்டிருந்த சட்டியில் இருந்த சோற்றை அளைந்து கொண்டே. கதவுக்குப் பின் நின்ற கொண்டிருந்த லட்சுமி இன்னும் இழுத்துப் போர்த்தியவாறு “மகாளயமா இருக்கு; இந்தப் பழையதை இப்பவாவது சாப்பிடாம இருக்கலாமே?” என்றாள் பயத்துடன்... "அதெல்லாம் பரவாயில்லைன்னா” என்றார் ராமையா சாஸ்திரி - முகம் பார்த்துப் பேச மாட்டார். வெட்கமா, மனைவிக்கு இடம் கொடுத்துவிட்டால் பின்னால் மிகவும் கஷ்டமாக ஆகிவிடும் என்றா தெரியாது. பல நாட்களுக்குப் பேச்சே கிடையாது. ‘இன்றைக்கு சுபதினம்; ஒரு வார்த்தை உதிர்ந்திருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டே நகர்ந்தாள் லட்சுமி. ஒரு குழந்தை இருந்திருந்தாலாவது அதைச் சாக்காக வைத்து ஏதாவது பேசிக் கொள்ளலாம். அதற்கும் கொடுப்பினை இல்லாது போய்விட்டது. ராமையா சோற்றை அள்ளி வாயில் போட்டார். தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயம். சுளீரென்று தலைக்கு ஏறியது. தண்ணீரை எடுத்து விழுங்கினார். மகாளயமாவது ஒன்றாவது? நாற்பது வருடங்களாக இந்த ஊளைச்சோறுதான். பஞ்ச பட்ச பரிமானமெல்லாம் அப்பா வைசூரியில் போனவுடன் போய்விட்டது. பத்தாம் நாள் காரியம் ஆனவுடனேயே அம்மா மாமா வீட்டிற்...