தற்போதைய அரசியல் நிகழ்வுகளும் நாமும்
உலகின் பண்டைய இலக்கியங்களுக்கும் மகாபாரதத்துக்கும் அணுகுமுறையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. மற்ற இலக்கியங்கள் மனிதனைக் ‘கெட்டவன்’ என்றும் ‘நல்லவன்’ என்றும் வேறுபடுத்திப் பாகுபாடு செய்துதான் இலக்கிய ஆக்கங்களைச் செய்துள்ளன. மகாபாரதம் மட்டும்தான் மனிதர்கள் எவ்வாறு வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. தர்மர் செய்த தீங்குகளையும், துரியோதனன் செய்த நல்ல செயல்களையும் வியாசர் சுட்டத் தவறவில்லை. உப பாண்டவர்களைக் கொல்வதற்கு முன் நடக்கும் சம்வாதத்தில் காகங்களைத் தாக்கும் கூகைகளை அஸ்வத்தாமன் சூசகமாக ஏற்றுக் கொள்கிறான். அவனைப் பற்றிக் குறிப்பிடும் போதும் வியாசர் மகாத்மா என்றே குறிப்பிடுகிறார். நம் அணுகுமுறையில் உள்ள கோளாறு என்னவென்றால் எல்லா மனிதர்களையும் நல்லவன் கெட்டவன் என்று பாகுபடுத்தப் பார்ப்பதே. இப்படிப் புரிந்து கொண்டு உறவுகளைக் கட்டமைப்பது நமக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. தவிரவும் நமக்கு எப்போதும் ஒரு பொது எதிரி வேண்டியிருக்கிறது. அதற்கான இலக்குப் புள்ளிகளை சிலர் விதி வசத்தாலோ வேறு செய்கைகளாலே நம்மிடம் காண்பிக்கும்போது நமக்கு வேலை இன்னும் எள...