அசோகமித்ரன் மறைந்தார்
தமிழின் முது பெரும் எழுத்தாளர் அசோகமித்ரன் மறைந்தார். ஓடும் நதியைப் பார்த்துக்கொண்டே கை மணலை உதிர்த்துக் கொண்டிருக்கும் சிறுவனின் செயல் போன்றது தான் இலக்கியம் என்று நான் நினைத்துக் கொள்வது வழக்கம். இந்த உதாரணத்துக்கு மிகவும் பொருத்தமானவர் அசோகமித்திரன்.கிட்டத்தட்ட வாழ்க்கையின் சகல கூறுகளையும் பூடகத்தன்மையுன் அலசிய எழுத்து. கூர்ந்து நோக்கினால் மட்டுமே வேறு சில பரிமாணங்கள் தெரியக்கூடிய உரத்த குரலற்ற விருப்பு வெறுப்பற்ற நோக்கில் எழுதியவர். இவர் எழுதிய புதினங்களாகட்டும் சிறுகதைகளாகட்டும் எடுத்து கொண்ட விஷயம் ஒன்றாகவும் தொக்கி நிற்பது வேறொன்றாகவும் இருந்ததால் இவரை எந்த வகையில் சேர்ப்பது என்று பலரும் தடுமாறினார்கள். 'புலிக்கலைஞன்' என்கிற சிறுகதையை மட்டும் முற்போக்காளர்கள் பாராட்டுவார்கள். மற்ற படைப்புகளை எப்போதும் கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். எனக்கு அந்த நாட்களில் அன்புக்குரியவராக இருந்த ஒரு முற்போக்கு எழுத்தாளர் 'அவர் உடம்பு மிகவும் பூஞ்சை ; அவர் எழுத்தும் அப்படித்தான் இருக்கும்' என்றார் . ஒரு பெரிய கூட்டம் சுற்றி. எல்லோரும் சிரித்தார்கள். நான் சொன்னேன் : 'நீங்...