தொல்வெளியிலிருந்து தொடரும் இசை X
அத்தியாயம் 28 மும்பைக்கு குடிபெயர்ந்த போது எனக்கிருந்த பிரமிப்பும் திகைப்பும் டெல்லி வந்த போது எனக்கில்லை. வயதும் கூடி இளமையின் மயக்கங்கள் உதிர ஆரம்பித்திருந்த சமயம். குடும்பக் கவலைகளில் ஆழ்ந்திருந்தேன். பணம் படிப்பிற்கோ, பெண் திருமணத்திற்கோ போதாது என்று தோன்றிக் கொண்டிருந்தது. பையன் கவலை வேறு அரித்துக் கொண்டிருந்தது. பொதுத் துறையில் 29 வருடங்கள் பணியாற்றியிருந்த போதும் பெரிய அளவில் வேலை முன்னேற்றமோ பணப் பெருக்கமோ கிட்டவில்லை. பணத் தேவைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. அதற்கு ஏற்றாற் போல் ஊதிய உயர்வுகள் இல்லை. வருகின்ற வருமானத்துக்குத் தகுந்த அளவில் செலவுகளைச் சுருக்கிக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லை. டெல்லி மிகப் பெரிய ஊர். மும்பையை விட நிலப் பரப்பில் மிகப் பெரியது. தேசத் தலைநகர் வேறு. பாலங்களுக்கும் சாலைகளுக்கும் அரசு பணத்தைக் கொட்டுகிறது. விசாலமான சாலைகள். ஆங்காங்கே பெரிய பெரிய பூங்காக்கள். ஊர் பூரா சரித்திர இடிபாடுகள். இந்தியக் கட்டிடக் கலை பாரசீகக் கட்டிடக் கலை இணைந்த கலவையுடன் அற்புதமான சரித்திரச் சின்னங்கள். இந்த சமயத்தில் என் பெண் பத்தாம் வகுப்பு முடிந்து பதினோராம் வகுப்ப...