தொல்வெளியிலிருந்து தொடரும் இசை XII
அத்தியாயம் 32 இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கும் போது தற்செயலாக ஒரு நீண்ட நாள் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். பின்னர் தொடர்பு கொண்ட வேறு இரு நண்பர்களிடமும் இவரிடமும் இந்தத் தொடர் பற்றிப் பேச்சு வாக்கில் தெரிவித்திருந்தேன். மூவரும் படித்துவிட்டு ஒரே குரலில் என்னிடம் , “ ஏன் இவ்வளவு வெறுப்பு ?” என்று வினவினார்கள். என்னை நீண்ட நாளாகத் தெரிந்திருப்பதால் – இது – இத்தொடரின் தென்படும் துவேஷம் அவர்களுக்கு என் இயல்புக்கு மாறான முரணாகத் தோன்றியிருக்க வேண்டும். மூன்று பேரும் ஒரு மித்த குரலில் சொல்லியிருப்பதால் அது உண்மையாகவே இருக்க வேண்டும். இதைத் தவிர வேறோர் நண்பரும் தானாகப் படித்து விட்டு என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் “ வெறுப்பை நான் பார்க்கவில்லை ; பிள்ளையைப் பற்றித் தகப்பன் வெளிப் படுத்தும் ஆதங்கத்தையும் ஆற்றாமையையும் நான் பார்த்தேன் ” என்றார். இவர் கூறுவதும் உண்மையாக இருக்கலாம். நான் மேற்கூறிய ஒரு நண்பரிடம் , “ தொடர் எழுதப் போகிறேன் ” என்று முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். அவர் என்னிடம் , “ ஆதித்யாவோட சங்கீதத் திறமைய...