வியாழன், 28 ஏப்ரல், 2016

நளினி ஜமிலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை

இந்தப் புத்தகத்தை இன்று காலை ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். வழக்கமாக ஆண்களுக்கு உள்ள ஆர்வம்தான். அந்தக்காலத்தில் சாவியில் என் பெயர் கமலா என்று புஷ்பா தங்கதுரை தொடர்ச்சியாக எழுதினார். அது அதிர்வலைகளை எழுப்பிதோ என்னவோ நிறைபேர் (பெண்கள் உட்பட) அதைப் படிப்பதில் ஆர்வம் காட்டினர். அதற்குக் கிடைத்த வரவேற்பை புஷ்பா தங்கதுரையும் சாவியும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதை நிறைய புனைவுகள் சேர்த்து எவ்வளவு நீட்ட முடியுமோ அவ்வளவு நீட்டினார்கள். போதாதென்று தொடர் முடிந்த கையுடன் புஷ்பா தங்கதுரை மீண்டும் கமலா என்று வேறொரு தொடரை ஆரம்பித்து விட்டார். சமூகப் பணிக்கு சமூகப் பணியுமாச்சு; சர்குலேஷனுக்கு சர்குலேஷனுமாச்சு என்கிற நிலைமை.
அதில் இருந்த அநுதாபத்திலும் சமூகப் பொறுப்புணர்விலும் பொதிந்திருந்தது பாலியல் வக்கிரங்களுக்குத் தீனி போடும் முயற்சி ஒன்றுதான்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழில் ஏற்கனவே நூல்கள் வந்திருக்கிறதா தெரியவில்லை. வந்திருந்து நான் படிக்காமல் இருந்திருக்கக்கூடும். இந்தப் புத்தகத்தில் நளினி என்கிற ஜமீலா கிட்டத்தட்ட தன் பிறப்பிலிருந்து நாளது வரை தன் வரலாற்றையே பதிவு செய்திருக்கிறார். ஏழ்மையான ஈழவக் குடும்பம், குடி, குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பெற்றோர் அல்லது வீட்டுப் பெரியவர்களின் முறை பிறழ்ந்த உறவுகள் எல்லாமே இதில் இருக்கின்றன. மூன்றாம் வகுப்போடு படிப்பை வீட்டில் நிறுத்திவிடுகிறார்கள். தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவுடன் அவர்கள் பெற்று வந்த வளமையும் ஓய்வு பெற்றுவிடுகிறது.
நளினி கூலி வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள். அந்த இடங்களில் பாலியல் தொல்லைகளும் அவர் அவற்றை எவ்வாறாகக் கையாண்டார் என்பதைப் பற்றியும் விவரிக்கிறார். தந்தையாருடன் ஒரு கட்டத்தில் பிணக்கு வந்து விடுகிறது. 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
ஏற்கனவே திருமணமான ஒருவருடன் கட்டாயத் திருமணம். இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. வீட்டில் மாமியார்க் கொடுமையை அனுபவிக்கிறார். அகப்பையால் மாமியார் தாக்கியதில் மண்டை உடைந்ததைக் குறித்து எழுதுகிறார். கணவன் காச நோயில் இறக்க, மூத்த பையனும் இறந்து விடுகிறான். பெண்ணை மாமியாரிடமே விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
மெல்ல மெல்லப் பாலியல் தொழில் ஈர்க்கிறது அவரை. பெரிய காரணம் எல்லாம் ஒன்றுமில்லை. கை நிறையப் பணம். வேலைக் கம்மி. அதன்பின்னர் அந்தத் தொழிலுக்கே உரித்தான பலவிதக் கஷ்டங்களுக்கும் ஆளாகிறார். ஏற்கெனவே கணவருடன் சேர்ந்து சாராயம் விற்றபோது குடிவேறு பழக்கமாகி இருக்கிறது.
இப்படி நாடறிந்த வேசியாகிறார். பலதரப்பட்ட மனிதர்களுக்கு வடிகாலாக உபயோகப்படுகிறார். இரண்டாம் கணவனுக்குப் பிறந்த பெண்ணை வேறு கட்டிக் காக்க வேண்டிய கட்டாயம். வியாதிகள் தொற்றுகின்றன. பள்ளிவாசல்களில் தஞ்சமடைகிறார். தெரிந்த வாழ்ந்த மனிதர்களின் உறவுகளுடைய வீடு வீடாகப் போகிறார். கடைசியில் ஜ்வாலா முகி என்கிற தன்னார்வ அமைப்பில் சேர்ந்து பாலியல் தொழிலாளிகளுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஏஷியாநெட்டிலும், விஜய் டிவியிலும் அவருடைய பேட்டிகள் வருகின்றன.
மிகவும் வசீகரமாக இந்தப் புத்தகத்தில் நான் கருதுவது மிகவும் உணர்ச்சிவசப்படாத, யாரையும் தேவையில்லாமல் வசைபாடாத, குற்றவுணர்வு இல்லாத நளினியின் நேரடியான விவரிப்புத்தான், உள்ளது உள்ளபடிச் சொல்லும் இந்தச் சரிதையில் கொக்கோக வருணனைகள் இல்லை. தன்னுடைய செயல்களை நியாயப்படுத்த முயலவில்லை. அதேசமயம் அது குறித்து அவருக்குக் குற்றவுணர்வும் இருந்ததாகத் தெரியவில்லை.
இந்த சமயத்தில் இது போன்ற விலக்கப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றி சமுதாயம் என்ன நினைக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. மூடா! மூடா! என்று திட்டி சுப்ரமணிய பாரதியார் எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. பெண்கள் ஒழுக்கமாக இருக்க வற்புறுத்துகிறாயே, உன் போன்ற ஆண்கள் அதற்கு முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டாமா? என்று கேட்டிருப்பார் பாரதியார் அந்தக் கட்டுரையில்...
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சமுதாயத்தின் மீது வைப்பவர்கள்தான் நிறைய. அதில் உண்மை இல்லாமல் இல்லை. விரும்பி பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் கம்மிதான். தவறுசெய்கிறவர்கள், அபலைகள் சோற்றுக்கு வழியில்லாதவர்கள் தாம் பல சமயங்களில் அதில் தள்ளப் படுகிறார்கள். அதன்பிறகு அதிலிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் தான் அதிலேயே அமிழ்ந்து போகிறார்கள். அவர்களை அநுதாபத்துடன் நோக்கி அவர்களின் புனர் வாழ்வுக்கான அடிப்படையை அமைத்துத் தருவதுடன் அந்த அவலத்துக்கான சமூகக் காரணிகளை ஆராய்ந்து களைவதே சமுதாயத்தின் பணி என்று சொல்வதுதான் இன்றைக்கும் என்றைக்கும் பிரபலமான வாதமாக இருந்து வருகிறது.
சற்று உற்று நோக்கும் போது வேறொரு சிறுபான்மை கருத்தும் நிலவுகிறது. இதுபோன்றவர்கள் கர்மவினைப் பயனால்தான் இது போன்ற தொழில்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அதில் ஏதோ ஒன்றை விரும்பி ஏற்றுத்தான் - ஒரு மன ஒப்புதலுடன்தான்- அவற்றில் ஈடுபடுகிறார்கள் என்று நிலவும் கருத்தும் உண்டு.
மேலோட்டமாகச் சமுதாயத் தாக்கத்துடன் பேசும் சமூகம் சற்று உற்று நோக்கினால் இதுபோன்ற கருத்தைத்தான் கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் வருகிறது. இதுபோன்ற அவலங்களைக் கண்டிக்கும் எவரும் அவர்களுடன் கலந்து பழக முன்வருவதில்லை. தங்களையும் தங்களின் குடும்பத்தையும் இவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவே விழைகிறார்கள்.
இப்படிப் பார்க்கும்போது உலகில் பிறக்கும் மனிதர் அனைவரும் எப்படித் தங்களை அறியாமல் கருமத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று எண்ண வேண்டியிருக்கிறது. பிச்சைக்காரர்களில் எவ்வளவு வகை, குற்றம் புரிபவர்களில் எத்தனை விதம் இவர்கள் எல்லோரும் தத்தமது தனிப்பட்ட கருமங்களில் அதை மாற்றிக் கொள்ள விழையாது தன்னிச்சையாக ஈடுபட்டுள்ளது ஏன் என்று நினைக்கத் தோன்றும்.
அடுத்ததாக மனப்பிறழ்வு மனநிலை உள்ளவர்கள் சமுதாயத்தின் மன ஆரோக்கியத்தைச் சமனப் படுத்துகிறவர்களாக உள்ளார்கள் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு. இதே போல் பாலியல் தொழிலாளிகளும் ஏதோ ஒரு விதத்தில் சமுதாயத்தின் கற்பு சமநிலையைப் பேணுகிறார்கள். இவர்களைப் போல விளிம்பு நிலை மனிதர்கள் அவ்வளவு பேரும் சமூகச் சமநிலையைப் பேணுவதற்கு ஏதோ ஒரு விதத்தில் கடமையாற்றுகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும.
இப்படிப் பார்க்கும் போது நளினி எழுதிய இந்தப் புத்தகம் பாலியல் தொழிலாளியின் உரிமைகளைப் பற்றிக் குற்றவுணர்வில்லாத தொனியில் பேசுகின்றது. இந்தவகையில் இது மிகவும் குறிப்பிடத்தகுந்த பதிவு என்றுதான் சொல்ல வேண்டும்.


வியாழன், 14 ஏப்ரல், 2016

மடிமாமி-சிறுகதை-அஸ்வத்

மடிமாமி பார்ப்பதற்கு சற்று மாநிறமாக இருப்பாள். கறுப்பு என்று சொல்லமுடியாவிட்டாலும் கொஞ்சம் சாம்பல் பூத்த நிறம்தான். முகம் நன்றாகப் பளிச்சென்று அழகாக லட்சணமாக இருக்கும். தாட்டி என்றும் ஒல்லி என்றும் சொல்ல முடியாத உடல்வாகு.
எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த விசாலம் மாமிக்கு பெரிய தோழி - தூரத்து உறவும் கூட. இருவரையும் இணைக்கும் பந்தம் என்னவென்று பார்த்தால் ஆச்சரியம்தான். விசாலம் மாமி பெரிய மடி ஆசாரம் என்று சொல்ல முடியாது. மடி மாமியைப் பார்த்தால் சற்று எள்ளல்கூட. ஆனால் விசாலம் மாமி ஒன்றும் பார்க்கவிட்டாலும் சடங்கு ஆசாரங்கள் அனைத்தும் அத்துப்படி என்பதால் மடிமாமிக்கு விசாலம் மாமிமேல் ஒரு பெரிய பிரமிப்பும் மரியாதையும் உண்டு.

எனக்கு நினைவு தெரிந்த நாளாக மாமி மடிதான். மடியென்றால் தீட்டு துடைப்பு என்று பார்க்கிறவர் என்ற சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. காலையில் குளித்து விட்டால் தீர்ந்தது என்கிற ரகம் கிடையாது. காலில் செருப்பில்லாம் (செருப்பு விழுப்பு) ரோடில் நடந்து போவாள். வீட்டிற்குத் திரும்பியவுடன் குளியல். உடுத்திக் கொண்டிருந்த துணி அத்தனையும் நனைத்து விடுவாள். அவர்கள் வீட்டுக் கொடியில் ஈரத்துணி தொங்கிக் கொண்டேயிருக்கும். தவிரவும் யாராவது குடும்ப உறுப்பினர் வந்தால் கொல்லைப் பக்கமாகக் கிணற்றடிக்குப் போய்க் குளித்துவிட்டுத்தான் வீட்டில் நுழைய முடியும். வந்தவர் கிளம்பினால், உடனே வீட்டை அலம்பிவிட்டு வருவாள்.
உப்பு சர்க்கரை அரிசி என்றும் தப்பிக்க முடியாது. ஒரு கழுவு கழுவினால் தான் வீட்டில் நுழைய முடியும். இவையெல்லாம் எப்போதும் வெய்யிலில் உலர்த்தப்பட்டிருக்கும். பின்னர்தான் சமையலுக்கே உபயோகிக்க முடியும். வீட்டில் தலையணை போர்வை ஒன்றும் உபயோகிப்பது கிடையாது எல்லாம் விழுப்பு என்பதால். யாரோ சொன்னார்கள் என்று. மாமியின் மாமனார் கல்யாண சுந்தரமைய்யர் பிளாஸ்டிக் ஷீட் வைத்துத் தைத்த தலையணையை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அன்று வீடே ரணகளமாகிவிட்டது. அதிலிருந்து எல்லோருமே ஜாக்ரதையாக இருப்பார்கள். 
மாமி என் அன்னைக்கு நெருங்கிய தோழியாம். என் அன்னை மீது மிகுந்த பிரேமையும் என் தந்தை மீது அளவற்ற மரியாதையும் உடையவள். அவளுக்குக் கல்யாணம் ஆகி வந்த புதிதில் நான் மூன்று வயதுக் குழந்தையாம். “வாடி... வாடி...” என்று கூப்பிடுவாளாம். நான் என் அன்னையின் பின் ஒளிந்து கொண்டு வரமாட்டேனாம். அதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாள். என் அன்னை மேலிருந்த பிரேமையால் எனக்கு மாமியிடம் கொஞ்சம் சலுகை உண்டு. என் அன்னை உயிருடன் இருந்திருந்தால் இது நீடித்திருக்குமா சந்தேகம்தான்.
மாமியின் கணவர் பட்டாபட்டி ‘அண்டர்வேரு’டன் தாழ்வாரத்தில் மூங்கில் ப்ளாச்சுக்குப் பின் உட்கார்ந்திருப்பார். கௌரவமான வேலை. தாலுக்கா ஆஃபீஸில் எழுத்தர் வேலை. கொஞ்சம் சித்தம் ஸ்வாதீனம் கம்மி. முழுப் பைத்தியம் கிடையாது. அவ்வப்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்துவிடுவார். மடிமாமி போய் யாரையெல்லாமோ பார்த்துவிட்டு தலைகீழாக நின்று ராஜினாமாவை திருப்பி வாங்கிக் கொண்டு வருவாள். வரும்போதே ‘லபோ திபோ’ என்ற கத்திக் கொண்டே வருவாள். மாமனார் கல்யாண சுந்தமையர்  பட்டுக்கொள்ளவே மாட்டார். தலையில் குடுமியுடன் காதில் சிவப்புக் கல் கடுக்கனுடன் தாழ்வாரத்துக்கு வெளியில் போட்டிருக்கும் கீற்று சார்ப்பில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருப்பார். கிராமத்தில் முன்சீப் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் வேலையைச் செய்ய அசக்தம் ஏற்பட்டுப் பையன் வீட்டோடு வந்துவிட்டார்.
மாமியின் கணவருக்குக் கல்யாணத்துக்கு முன்னாலே வியாதி உண்டு என்றம் ஏமாற்றிக் கல்யாணம் பண்ணிவிட்டார்கள் என்றும் பேச்சு உண்டு. மாமிக்குப் பிள்ளை பிறந்தபின்தான் வெளியில் அவர் மனநிலை எல்லோருக்கும் தெரிந்தது. "பிச்சம்மா ஒருத்தர் கண்ணிலப் பிள்ளையைக் காண்பிக்கலையே - அவ்வளவு அமெரிகையாய் பாத்துண்டா. இல்லாட்டா இந்த அழிச்சாட்டியம் கல்யாண சுந்தரமையனோட லட்சணத்துக்கு நாறிப் போயிருக்கும்” என்றாள் விசாலம் மாமி ஒருநாள். விசாலம் மாமியிடம்  “மாமி, இந்த மடி மாமி ஏன் இப்படி தீட்டு துடைப்புன்னு அலையறா?” என்று கேட்டேன் ஆவல் தாங்க முடியாமல்.
“நன்னாத்தாண்டி இருந்தா கல்யாணத்தும்போது, காரியம் செஞ்சான்னு அப்படி ஒரு நறுவிசு. சமையல் பண்ணா சுவடே தெரியாது. பிச்சம்மாளா பிள்ளைகிட்ட அவளை அண்டவிடாத படுத்தினா. இவளுக்கு மூஞ்சில சிரிப்பு மாறாது. ‘அம்மா அம்மா’ன்னு அவகிட்ட அப்படி வாஞ்சையா இருந்தா. பிச்சம்மாளுக்கு அவ அருமை புரியவேயில்லை. பிள்ளை அருமை! ஊர் உலகத்தில இல்லாத பிள்ளை. பயமா ஆதிக்கமா இவளைப் புருஷன் கிட்ட விடாத படுத்தினா. பிள்ளை பிறந்ததே அதிசயம். கொல்லைப்பக்கம் போனவ காலை ஒடைச்சிண்டப்பறம்தான் மாட்டுப் பொண்யோட அருமை அவளுக்குத் தெரிஞ்சது. அப்பெல்லாம் காரியம் மிஞ்சிப் போயிடுத்து. புருஷன் பைத்தியம் - மாமனார் அடாவடி - மாமியார் அழிச்சாட்டியம். பிச்சம்மா சாகற வரையிலும் இவளும் பொறுமையா இருந்தா, அப்புறம் என்ன ஆச்சோ ஏது ஆச்சோ இப்படி ஆரம்பிச்சுட்டா” என்றாள் விசாலம் மாமி.
பின்னர் குசுகுசுவென்ற குரலில் “பிச்சம்மாட்டயே கேட்டேன்... ‘ஏண்டி உன் மாட்டுப் பொண்ணை இப்படிப் படுத்தறே?’ன்னு. ‘அவனுக்கு மருந்து வெச்சுட்டாடி கேட்டயோ? அவனை வசியம் பண்றத்துக்கின்னு. அதிலதான் அவன் இப்படியாயிட்டான். எப்படியிருந்த பிள்ளை; இப்படியாயிட்டான்’ அப்படீன்னா. ‘போடி போடி இந்த புள்ளைப் பூச்சியா அதெல்லாம பண்றவ? உன் நல்ல காலம் - இது வந்து மாட்டுப் பெண்ணா வந்து வாச்சுது. புண்ணியம் பண்ணிருக்கேன்னு நெனைச்சுக்கோ” என்ற சொல்லிட்டேன்” என்றார் விசாலம் மாமி.
“அது சரி. இந்த மருந்து வெக்கறதுன்னா என்ன?” என்றேன்.
“சரிதான் போ; நல்ல ஆளப் பாக்கற இதைக் கேட்க. நான் என்னமோ பரம்பரை பரம்பரையா இதைப் பண்ணிண்ருந்த மாதிரி. ஏதோ வசிய மருந்தும்பா. இந்த மருந்து மாயம் இதெல்லாம் யாரு கண்டா?” என்றாள்.
எனக்கென்னவோ மடி மாமியின் கணவரின் மனநிலைக்கும் மடி மாமியின் தீட்டு துடைப்புக்கும் சம்பந்தம் இருப்பதாய்த் தோன்றவில்லை. ஏதாவது புருஷனுக்கு நேராகட்டும் என்பதற்கான நோன்போ என்னவோ - அதற்காக இப்படியா? எனக்கென்னவோ காரணம் போதவில்லை.
மடி மாமிக்கு என் குடும்பத்தின் மீது அளவற்ற பரிவு உண்டு. என் அன்னை இறந்தபோது மூர்ச்சை போட்டு விழுந்து விட்டாளாம். அப்பா மீது பெரும் மதிப்பு. என் மீது அளவற்ற வாஞ்சை. விசாலம் மாமி மாதிரி நெகிழ்ந்த வாஞ்சை இல்லை. உணர்ச்சிகளை வெளிக்காட்டாத திடமான உணர்ச்சிவசப்படாத வாஞ்சை.
ஒருநாள் பெரிய கலாட்டா ஆகிவிட்டது. மடி மாமியின் கணவர் கையில் அரிவாளுடன் மாமியைத் துரத்திக் கொண்டு வர, மாமி தலைவிரி கோலத்துடன் என் வீட்டை நோக்கி ஒடி வந்தாள். அப்பா வாசலில் நின்று கொண்டிருந்தாள். மாமி அப்பா காலில் ஓடி வந்து விழுந்தாள். 
“மாமா! என்னைக் கொல்ல வர்றது மாமா. காப்பாத்துங்கோ” என்று கதறினாள். அப்பா, “விசாலம்.... விசாலம்...” என்று கத்தினார். “நீ உள்ளே போ... விசாலம் இவளை அழைச்சுண்டு உள்ளே போ” என்று சொல்லிவிட்டு மடிமாமியின் கணவரைக் கையைக் கட்டிக் கொண்டு எதிர்கொள்ளத் தயாரானார்.
ஓடிவந்த மாமியின் புருஷன், அப்பா பக்கத்தில் வந்து நின்றுகொண்டு மூச்சிரைக்க, “டேய்! நீ யாருடா அவளை உன் வீட்டிலே வெச்சுக்க..  நீ என்ன அவ புருஷனடானு” என்று கத்திவிட்டு, “அவளை விடுடா வெளியிலே; அவளைப் பொலி போட்டுட்டுத்தான் போவேன்” என்றார். அவர் நின்ற கோலமும் ஆத்திரமும் எங்கள் எல்லோருக்கும் பெரிய கிலியை ஏற்படுத்தி விட்டது. அப்பாவை எதாவது செய்துவிடப்போகிறதே என்று திக்பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்பாவின் ஒருமுடி கூட அசையவில்லை. கல்லாட்டம் நின்று கொண்டிருந்தவர், “போடா வெளியிலே; வீட்டுக்குள்ள காலை வெச்சியோ தெரியும் தேதி” என்று மட்டும் சொல்லிவிட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டுவிட்டார் சாவகாசமாக. அதற்குள் வீதியில் கூடியிருந்த கூட்டம் ஸ்வாரஸ்யம் குறைந்து கலைந்து போக, மாமியின் புருஷன் மட்டும் வீதியில் என் வீட்டிற்கு எதிர்த்தாற்போல் மேலும் கீழுமாக அரிவாளுடன் நடந்து கொண்டிருந்தார்.
மாமி கதவின் பின் நின்று கொண்டு தேம்பிக் கொண்டிருந்தாள். நல்ல நாட்களில அப்பா முன்னாடி வர மாட்டாள் அவ்வளவு விஸ்வாசம்.
“நீ ஏண்டி அழற? அவன் கெடக்கான் குலைக்கிற நாய். அவனால் என்ன ஆகும்? நீ இங்கியே ஒரு நாலு நாள் இரு. அவன் வெறி அடங்கட்டும்” என்று சொல்லிவிட்டு, “விலாசம், அவளுக்கு நம்மாத்து மடி ஆசாரம் சரிப்படாது. கொல்லைத் தாழ்வாரத்தை ஒழிச்சுக் குடுத்துடு. அவ பாடடுக்கு அங்கியே சமச்சு சாப்டுக்கட்டும். குமுட்டி ஒண்ணப் பரண்லேருந்து எடுத்துக் கொடு” என்று சொல்லி விட்டார் அப்பா. அதற்குப்பின் மடி மாமியின் மடி ராஜ்யம் கொல்லைத் தாழ்வாரத்தில் ஆரம்பித்துவிட்டது. பெரிய தொந்தரவு இல்லை. நாங்கள் கிட்டே செல்ல முடியாது. சமையலை தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருப்பேன். காப்பிப் பொடியை துணியில் வடிகட்டி கடுங்காப்பி போட்டுக் கொள்வாள். ஒருநாள் பலாச்சக்கையை வேக வைத்துக் கொண்டிருந்தாள். அதில் என்ன செய்து, என்ன சாப்பிட முடியும் என்று தெரியவில்லை.
பத்துநாள் இப்படிப் போயிற்று. பிள்ளை மட்டும் காலையில் ஒருதடவை சாய்ந்திரம் ஒருதடவை எட்டிப் பார்க்கும். அவனிடம் வீட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வாள் மாமி. பததாம்நாள் மாமியின் மாமனார் கல்யாண சுந்தரமையர் அப்பாவிடம் வந்து நின்றார்.
அப்பா, “என்ன?” என்றார் சிடுசிடுவென்று. 
“ஏதோ அவனுக்கு புத்தி பிசகிடுத்து ராகவா. ராஜம் (மடிமாமி) இல்லாம ரொம்பக் கஷ்டமா இருக்கு. அவகிட்ட சொல்லி திரும்பி வரச்சொல்லு”
“உம்பிள்ளை என்ன பெரிய ரௌடியா? என்னவோ அரிவாளை எடுத்துண்டு வந்து மெரட்டறான்? நீர் என்ன பண்ணிண்ட்ருந்தீர்? என்னவோ பெரிய முன்சீப்புன்னு எட்டு ஊருக்குப் பஞ்சாயத்து பண்ணுவீரே?” என்றார் அப்பா எகத்தாளமாக.
“ராகவா! என் விருத்தாப்பியம் - என்னால அவனை அடக்க முடியலை. இப்ப கொஞ்சம் நல்ல வார்த்தையாச் சொல்லி வெச்சிருக்கேன். கொஞ்சம் அடங்கியிருக்கான். நான் பாத்துக்கறேன். கொஞ்சம் அவளை அனுப்பி வை. வெளியிலே தலை காட்ட முடியலை” என்றார் கல்யாண சுந்தரமையர்.
அப்பா மாமியைக் கூப்பிட்டார். மாமி மாமனார் வந்திருப்பது தெரிந்து, தன் மடிசஞ்சியை ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து தயாராக நின்றாள்.
“உன் மாமனார் கூப்பிடறார். இப்ப போ. அந்தப் பய வாலாட்டினான்னா சொல்லு. உண்டு இல்லைன்னு தீர்த்துடறேன்” என்றார் அப்பா.
மாமிக்கு மாமனார் வந்து கூப்பிட்டதில் மகிழ்ச்சி என்று தெரிந்தது. முகத்தில் புன்னகையுடன் என் தாவாங்கட்டைப் பிடித்து கொஞ்சிக் கொண்டே நகர்ந்தாள். நான் திடுக்குற்று “ஐயோ மாமி, மடி!” என்றேன்.
“கவலைப்படாதே. ஆத்தில போய்க் குளிச்சிட்டுத்தான் போவேன்” என்றாள். 
“மாமி மடி எதுக்குன்னு சொல்லவேயில்லை நீங்க” என்றேன் குற்றச்சாட்டும் பாவனையுடன். அதற்குமுன் பல முறை எதற்கு மடி என்று என் வீட்டில் இருந்த போது பன்னிப் பன்னிக் கேட்தற்கு பதில் பேசாமல் புன்னகையுடன் நின்றிருப்பாள்.
“போடி. போய் படிக்கிற வழியைப் பாரு. தத்துப் பித்துன்னு பேசிண்டு” என்றவாறு நகர்ந்து விட்டாள். எனக்கு ஏமாற்றம்தான். இதற்குமேல் மாமி நெகிழும் சந்தர்ப்பம் ஒன்றிற்காக நான் காத்திருந்தேன். 
எனக்கும் குமாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் அவர்கள் வீட்டில் நடந்தது. மடி மாமி வருவது சந்தேகம் என்றார் விசாலம் மாமி. மாமியின் மாமனார் கல்யாண சுந்தமையர் காலமாமி இருந்த புதிது. பாக்கு வெற்றிலை மாற்றிக் கொண்ட பிறகு வைத்தி கனபாடிகள் “போய் இந்தப் புடவையை மாத்திண்டு வாம்மா!” என்றார். விசாலம் மாமி சமிக்ஞையைப் புரிந்து கொண்ட எழுந்து என் பின்னார் வந்தார். நான் புடவை கட்டிக் கொண்டு வரும்போது என்னைப் பிடித்து அழைத்து வந்தார். எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணி உட்கார்ந்து கொண்டேன். எல்லாம் முடிந்து குமார் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். ஆரத்தி எடுக்கிற நேரம், “யாராவது பாடுங்கோ” என்றார் வைத்தி கனபாடிகள்.
அப்போதுதான் பார்த்தேன். முகம் விகசிக்க மடி மாமி உட்கார்ந்திருந்தவள், “நிருபம சுந்தரராங்கரா” என்று ஆரம்பித்தாள். மடி மாமி பாடுவாளா? பந்துவராளியில் பாடல். கிருஷ்ணரின் அழகைப் பாடுவது. எனக்கென்னவோ சிவன் பாம்புகளுடன் ருத்ரதாண்டவம் ஆடுவது போலிருந்தது. “குமார்!” என்றேன் தீனமாக. 
“பாரதி! கண்ட்ரோல் பண்ணிக்கோ. ஓவர்வெல்ம் ஆய்டாதே” என்றான் குமார் பயத்துடன். ஏற்கனவே பஜனையில் பாட்டுக் கேட்கும்போது மயக்கம் போட்டு கலாட்டா செய்திருக்கிறேன். சிவன் என்றா சொன்னேன்? சிவன் இல்லை. சுப்ரமண்யஸ்வாமி! பாம்புகளுடன் வேலுடன் கையில் புல்லாங்குழலுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தது குழந்தை.
‘ராதிகா குஸும நந்தினி’ என்று சரணத்துக்கு மாமி வந்தபோது மாமியின் குரல் கம்ம ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. இது ஊத்துக்காடு வெங்கட கவியின் சாகித்தியம். அவர் இடுகாட்டில் போய் உட்காந்து கொண்டு பாடல் இயற்றினார் என்பார்கள். அதுதான் சற்று திருப்புகழ் போல் நெருடலாக தாளக் கோர்வையில் இருக்கிறது போலிருக்கிறது. கிருஷ்ணன் குழந்தைதான். சற்று முரட்டுக் குழந்தை. பாம்புகளை வைத்துக் கொண்டு விளையாடுகிற குழந்தை. காளிங்கன் மேல் நின்று கொண்டு நர்த்தனம் செய்த குழந்தை.
பாட்டு முடிந்தவுடன் மடிமாமி அழுது கொண்டிருந்தாள். விசாலம் மாமிகிட்டே போய் “என்னடியிது குழந்தைகள் கல்யாணத்தும்போது நாளும் கிழமையுமா மாய்மாலம்?” என்று அதட்டினார். “ஒண்ணுமில்ல மாமி; ஏதோ பழைய ஞாபகம்” என்றாள் மடிமாடி கண்ணைத் துடைத்தவாறே.
“நன்னாத்தாண்டி இருக்கு; நான் பொண்ணாப் பொறந்த லட்சணமாட்டமா” என்று முகவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டு நகர்ந்தாள்.
சற்று அந்தரங்க சந்தர்ப்பம் கிடைத்தபோது, “என்னாச்சு மாமி” என்றேன்.
“என்னமோ போடி; பிள்ளை ஒரு வயசுக்குழந்தை. புருஷன் சித்தம் நிலையில்லை. பக்கத்தாத்துல கோவிந்த ராவாத்தில பஜனை. இந்தப் பாட்டு கேட்டிண்டுருந்தது. விசு சார் பாடிண்டிருந்தது. நானும் கூடவே பாடிண்டு கேட்டுண்டிருந்தேன். சமையல் உள்ளில என்னவோ விறகு அடுப்பில சமைச்சிண்டிருந்தேன். அப்போ பார்த்து இநத் மாமனார் கிழம் என் பக்கத்திலே வந்து நின்னது. ஏதாவது தூத்தம் கேக்கறதான்னு பார்த்தேன். தாபத்தோட அசடு வழிஞ்சிண்டே என் மேல கையை வெச்சுது. ஒரு நிமிஷம் திக்பிரமிச்சு நின்னுட்டேன். பாட்டு “ராதிகா குஸும நந்தினி’ன்னு சரணத்துக்கு வந்தது. எனக்கு என்னவோ அப்படி ஒரு வேகம் வந்துடுத்து. அடுப்பிலேந்து எரியற விறகை எடுத்துண்டு பத்ர காளியாட்டமா நின்னேன்.
“யாருன்னு நினைச்சீர், நான் பத்தினி. புருஷன் கிறுக்கு கேக்கறதுக்கு ஆளில்லைன்னு நெனைச்சிண்டு கிட்ட வந்தீரோ பொசுக்கிப் புடுவேன்” என்ற கத்தினேன்.
“மரியாதையா வாசலோட இருந்தா ஒரு கவளம் சோறு கெடைக்கும். உம்ம பிள்ளை தாலி கட்டின பாவத்துக்கு வேற காலித்தனமா ஏதாவது நெனைச்சா சுட்டுப் பொசுக்கிடுவேன்” அப்படீன்னேன். தகதகன்னு வெறகு எரிஞ்சு, ‘சடசட’ன்னுது. எனக்கு ஆமாம் போடற மாதிரி. நம்ம சுத்தமா இருந்தா எவன் என்ன செய்ய முடியும்? ஒரு பயல் கிட்ட வரக்கூடாது. ஆமாம்; மடிதான்; ஆசாரம்தான். நெருப்பு கிட்ட யாராவது போவாளோ! தூரக்க நின்னு பார்த்துக்க வேண்டியதான்” என்றாள். 
எனக்குச் ‘சொரேர்’ என்றது. ஏதோ புரிந்த மாதிரி இருந்தது.
இரண்டு நாட்களில் நாங்கள் எல்லோரும் வீட்டைக் காலி பண்ணிக் கொண்டு நல்லூரிலிருந்து பட்டணம் கிளம்பி விட்டோம். மடி மாமி கண்ணீராகப் பெருக்கித் தள்ளி விட்டாள்.
அன்றுதான் நான் அவளைக் கடைசியாகப் பார்த்தது.

லேடீஸ் ஸ்பெஷல், தீபாவளி மலர், 2015

https://www.youtube.com/watch?v=2_PHFVyajUY

சனி, 5 மார்ச், 2016

யுவன் சந்திரசேகரின் வெளியேற்றம்

இந்த எழுத்தாளரின் படைப்பை இப்போது தான் முதன் முதலாகப் படிக்கிறேன். இதற்காக ஜெயமோகனுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.அவருடைய நெருங்கிய நண்பர். யுவனின் குணாதிசயக் கூறுகளை விவரித்து அல்லது நகையாடி ஜெயமோகன் எழுதிய கட்டுரைகளைப் படித்ததில் ஓரளவுக்கு முன் அபிப்ராயத்துடன் தான் யுவனை நான் அணுகினேன். இது எந்த அளவில் என் விமர்சனத்தை பாதிக்கப் போகிறது என்பதை இக்கட்டுரையை படிப்பவர்கள் தான் அனுமானிக்க இயலும்.
பல ஊர்கள். பல மனிதர்கள். பல தரப்பு. எல்லோரும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஊரை விட்டு ஓடுகிறார்கள் அல்லது வெளியேறுகிறார்கள். முதலில் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் போக்குகள் விவரிக்கப் படுகின்றன. கூட்டுக் குடும்பம், யானைத்தீ பசிகொண்ட ஒருவர், கோபத்தில் கையை வெட்டுபவர், விலை மாதுக்குப் பிறந்தவர், வறுமையில் வீட்டை விட்டு ஓடுகிறவர் என்று ஏகப்பட்ட பேர்களின் விவரணைகள்; அவர்களின் விரக்திகள் அல்லது வாழ்க்கைப் போராட்டங்கள்.  எல்லோரும் வேதமூர்த்தி என்னும் சாமியாருக்கு சிஷ்யர் ஆகி விடுகிறார்கள்.இதை முதலில் சொல்லிவிட்டுப் பின்னர் சந்தானம் என்கிற கதா பாத்திரம் இவர்கள் எல்லோரையும் சந்திப்பதின் மூலமாக அவரவர்கள் வாழ்க்கையை எப்படி சாமியார் மாற்றினார் என்று சொல்லுகிறார். யுக்தி என்று பார்த்தால் புதுமை ஒன்றும் இல்லை. 'எல்லாம் அலங்கோலம்; பின்னர் ஒரு கதா பாத்திரம் நுழைந்தவுடன் எல்லாம் கோலாகலம்' என்பது எதற்கும் பொருந்தக் கூடிய பழைய யுக்தி.
கொஞ்சம் திஜா, கொஞ்சம் லாசரா, கொஞ்சம் அசோகமித்ரன் கொஞ்சம் சுந்தர ராமசாமி என்று கலந்து கட்டியான எழுத்து வகை யுவனுடையது. குறிப்பாக கதையில் வரும் சாமியார் அசோகமித்ரனின் மானசரோவரில் வரும் சாமியாரை நினைவு படுத்துகிறார். அசோகமித்ரனின் நாவல் அவரின் வாழ்க்கை அனுபவங்களால் ஆனது. அதில் வரும் 'ஹீரோ' திலிப் குமார் என்கிறார்கள் சிலபேர். இதே போல் லாசராவும் சாமியார் ஒருவரைப் பற்றி நாவல் எழுதி  இருக்கிறார்.(நாவல் முடிவில் அவர் போலீஸ் கேசில் மாட்டிக்கொள்வார்.) இவை போலவே யுவனின் நாவலுக்கு அவர் பெற்ற அனுபவப் பதிவுகள் காரணமாக இருக்கலாம். இந்த உத்தி -இந்த நாவலின் பாணி- நனவோடை உத்தி என்று சொல்லமுடியும் என்று தோன்றவில்லை. எழுத ஆரம்பித்து விட்டு போகிற போக்கில் எழுதி விட்டுத் தொடர்பைப் பின்னர் யோசித்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பதாகத் தோன்றுகிறது . இதைக் கொஞ்சம் லேட்டாக உணர்ந்த இவர் எல்லாவற்றையும் கோத்து ஒரு மாலையாகக் கட்ட முயன்றிருக்கிறார். தொடர்பில்லாத பல்வேறு குணசித்திரங்கள் என்பதால் மீண்டும் ஒவ்வொரு கதா பாத்திரமும் இவன் யார் இவன் முதலில் எங்கே வந்தான் என்கிற ஆயாசம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை. படிப்பவர்களுக்குப் பெரிய சோர்வை இது ஏற்படுத்துகிறது. ஒரு கதை முடிந்த கையுடன் சம்பந்தமில்லாத வேறு ஒருவன் வருவதால் கிட்டத்தட்ட ஒரு பிலிமை எடுத்துவிட்டு மறு பிலிமைப் போட்டுப் பார்க்கிற பயாஸ்கோப்பின் நிலை . தொடர்ச்சியாக ஒரு படம் பார்ப்பது போலில்லை. (நான் கூட நல்லூர் மனிதர்களை அப்படித்தான் எழுதினேன்; அனால் அதில் ஒரே ஊரைச் சேர்ந்த பலரைப் பற்றி விவரித்ததால் அது சூழலுடன் பொருந்திப் போயிற்று தற்செயலாக!)
சாமியார்களைப் பற்றி நிறைய பேர் எழுதி ஓய்ந்து விட்டார்கள். இந்த வரிசையில் யுவனும்.
அமானுஷ்யங்களை எழுத வரும் இவர்கள் விவரிக்கும் சம்பவங்கள்  உண்மையில் அவற்றைப் பிரதிபலிக்கின்றனவா என்கிற சந்தேகம் எழுவது நம் போன்ற சாதாரணர்களுக்கு இயற்கை தான் என்னதான் இவர்கள் சுய அனுபவங்கள் மூலமாய் இவற்றை எழுதும்போதும். காரணம் பூடகத்தன்மையிலும் உலக .வழக்கத்துக்கு மாறாக உள்ள அவர்களின் விவரணைகளிலும்  இவர்கள் சொல்ல வருகிற அமானுஷ்யத்தையும் ஆன்மிகத்தையும் நிறுவுவதற்கு பதிலாக ஒரு புரியாத் தன்மையை உண்டாக்கி  விடுகிறார்கள். புரிந்த உண்மை சுட்டும் புரியாத புதிர் என்பதற்கு பதிலாக புரிந்த  புதிர் புரியாத உண்மை என்றாகி விடுகிறது.
இதற்கு பதிலாக ஞானிகளின் உண்மை வரலாற்றைப் படித்துவிட்டுப் போகலாமே என்று யோசிக்கத் தோன்றுகிறது. எப்போது நினைத்தாலும் 'கூப்டீங்களா நைனா?' என்று ஆஜராகி விடுவாராம் பாடகச்சேரி ஸ்வாமிகள். மேகா என்கிற அணுக்கத் தொண்டன் இறந்த போது கண்ணீர் விட்டு அழுதாராம் ஷீர்டி சாய்பாபா . இதே போல் ரமணரும் ஒரு சிறுமி இறந்த போது கண்ணீர் விட்டு அழுதாராம். காவ்ய கண்ட கணபதி இறந்த செய்தி வந்த போது 'நாய்னா போயிட்டாராம் ; எங்கே போய்ட்டார்?' என்றாராம் ரமணர். அன்னை இறந்தவுடன்  'வாருங்கள் சாப்பிடலாம்; நாமெல்லாம் சன்யாசிகள்; நமக்கு துக்கம் கிடையாது' என்றாராம் அதே ரமணர்! அவர்கள் சாதாரண மனிதர்கள் போலவே இருந்திருக்கிறார்கள்; அசாதாரண ஞான ஒளியையும் பார்த்து அதைச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். அவர்கள் சுட்டிக் காடும் திசையை நோக்காது அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு நின்று விடுகிறது உலகம்.  யுவன் நாவலைப் படிக்கும்போது எனக்கு இப்படித்தான் தோன்றியது.
சாமியார்களைச் சர்வரோக நிவாரணியாகக் கொள்ள முடியுமா? ஜே கிருஷ்ணமுர்த்தி 'அது வழியில்லா  நிலம்' என்றார். அவரே ஒரு முறை சித்து ஒன்றைச் செய்து குணப்படுத்திய ஒருவன் பின்னர் லண்டனில் ஒரு வீ திச் சண்டையில் மாட்டிக் கொண்டானாம். நம் சுமைகளை யார் மீதாவது இறக்கி விட்டால் தேவலைதான். அது அவ்வளவு எளிதாக நிகழ்ந்து விடுமா என்ன? அதற்கு நாம் முதலில் மழை நீர் நிரம்பும் மண் பாத்திரமாக உருவெடுக்க வேண்டாமா?
ஜெயகாந்தன் 'விழுதுகளை' எழுதும்போது இவ்வளவு விவரணைகளைச் சொல்லவில்லை. 'அழுக்குன்னா என்னா சாமி?' என்று சாமியார் கேட்பதாக எழுதும் ஒரே விவரிப்பில் சொல்ல வந்ததைத் தீர்மானமாகச் சொல்லி விட்டார். இது வரை அந்த குறுநாவலை நூறு முறை படித்திருப்பேன். இப்போதும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் ஆனந்தமாகப் படிப்பேன். இதே போல் இன்னொரு வாய்ப்பில் 'வெளியேற்றத்தை' மீண்டும் படிப்பதற்கான உந்துதல் எனக்கு   இல்லை என்று குறிப்பிட வேண்டி இருக்கிறது.. இது ஏன் என்று யுவன் யோசிப்பது  அவர் அடுத்த நாவல் எழுதும் போது உபயோகமாக இருக்கும்.

திங்கள், 18 ஜனவரி, 2016

ம வே சிவகுமார்

ம வே சிவகுமார்

ம வே சிவகுமார் மறைந்து விட்டார் என்று கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்தேன் . முதன் முதலில் அவரின் 'பிறிதொரு இன்டலக்சுவல் ' என்கிற சிறுகதையால் கவரப்பட்டு அவரை கவனிக்க ஆரம்பித்தேன் . தொடர்ச்சியாக நிறைய சிறுகதைகள் எழுதினார். வேடந்தாங்கல் என்று ஒரு தொடர்கதையும் எழுதினார் . வாழ்க்கையை உண்மையாகவும் அங்கத நோக்கிலும் விவரிக்கும் பாணி. கிட்டத் தட்ட ஆதவனை ஒப்பிடக்கூடிய உணர்ச்சி மிகை தவிர்த்த எழுத்து. பின்னர் கல்கியில் கிட்டத்தட்ட சுய சரிதை போன்று  ஒரு தொடர்கதை எழுதினார். அதில் சுவாரஸ்யம் போய் விட்டது. வெளியில் பார்ப்பதைக் கம்மி பண்ணிக்கொண்டதன் கோளாறு என்று நினைக்கிறேன்.
பின்னர் பூர்ணம் விஸ்வநாதனை வைத்து அவரே நடித்து ஒரு தொலைக்காட்சி தொடரைப் பார்த்தேன். சினிமா என்கிற ஊடகம் அவருக்குப் பிடி படவில்லை என்று நினைக்கிறேன். பின்னர் ஒரு பிரபல நடிகர் நடித்த திரைப் படத்திற்கு அவர் வசனம் எழுதியதாகவும் அவர் பெயர் இருட்டடிப்பு செய்யப் பட்டதால் அந்த நடிகர் முன் சவால் விட்டு வந்ததாகவும் கேள்விப்படுகிறேன். அந்த நடிகர் எனக்கெனவே ஐ ஐ டியில் நடந்த நாடகத்தைக் காப்பி அடித்துத் திரைப் படம் எடுத்து அதைத் தன் பெயரில் போட்டுக் கொண்டார் என்று சொல்வார்கள்.
வெகு ஜனப் பத்திரிக்கையில் எழுதிய நல்ல எழுத்தாளர். இன்னும் பெரிய உயரத்திற்குப் போயிருக்க வேண்டியவர். விதி வசமா, தன் அறிவு ஜீவனத்தை தாங்கிக் கொள்ள இயலாமலா, பணக்கஷ்டமா, வியாதியா  அகாலமாய் மரணம் அடைந்து விட்டார்.
அவரின் ஆத்மா சாந்தி பெறட்டும். அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல்.

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...