திங்கள், 11 டிசம்பர், 2017

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை II

அத்தியாயம் 6

சத்யஜித் ராயின் படங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒரு சிறிய ஊரிலிருந்து மிகப் பெரிய நகரம் ஒன்றிற்குக் குடிபெயர்கிறேன். என் மனைவிக்கு மும்பை புதிதல்ல. பிறந்து வளர்ந்து படித்து வேலை பார்த்த ஊர்எனக்குத்தான் அதன் பிரும்மாண்டத்தைப் பற்றிய வியப்பும் பிரமிப்பும் பயமும் அலுப்பும்அவளைப் பொறுத்தமட்டில் அது வீடு திரும்புதல் அவ்வளவே.
இப்போது என் மும்பை வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது ஏதோ புகைப்படலம் போலத்தான் நினைவு இருக்கிறது. சுண்ணாம்பட்டி என்கிற இடத்தில் அலுவலகக் குடியிருப்பில் குடியிருந்தேன். வரிசையாக என் அன்னை, பின்னர் என் சகோதரன், பின் என் தந்தைஒருவர் பின் ஒருவராக மறைந்தார்கள். சின்ன சம்பளம்செலவுகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினேன். அலுவலகம் என்னவோ நல்லவிதமாக அமைந்தது, என்றாலும் அதன் அன்றாட அலுவல்களில் உள்ள வழக்கமான டென்ஷன்கள். பையன் தன் பாட்டுக்கு வளர்ந்து கொண்டிருந்தான். வீட்டில் டிவி இருந்ததால் டிவியைப் பார்த்துக் கொண்டிருப்பான். அவ்வப்போது மாமனார் வீட்டுக்குச் சென்று திரும்புவோம்.
என் பையன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்து வந்தான் என்பதை விட நாளொரு ராகமும் பொழுதொரு கீர்த்தனமுமாக வளர்ந்து வந்தான் என்று கூறுவதுதான் பொருந்தும்வாய் ஏதாவது பாடலைத்தான் முணுமுணுத்துக் கொண்டிருக்கும். ஏதாவது கேள்வி கேட்டால் அதையே நம்மிடம் திருப்பிக் கேட்பான். அப்போது என் நண்பரொருவர் இலக்கியத்தில் ஆழமான தேடல் உள்ளவர், கிட்டத்தட்ட விளிம்பு நிலை மனிதர், ரிஸர்வ் வங்கியில் பணியாற்றி கொண்டிருந்தார். கல்லூரி நாட்கள் கரைந்து அவர் வேலைக்குப் போய்ப் பின்னர் நான் வேலைக்குப் போய் பல வருடங்கள் கடந்து கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பின் தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டோம். அவர் வீட்டிற்கு அடிக்கடிச் செல்வேன். அப்போதெல்லாம் என் பையனையும் அவர் வீட்டுக்குக் கூட்டிச் செல்வதுண்டு.
இந்த நண்பருக்கு இரவு ஏற ஏற அசுரபலம் வந்துவிடும். பேசிக் கொண்டேயிருப்பார். தூங்க விடமாட்டார். தூங்கி விழுந்ததோமென்றால் கோபம் வந்துவிடும். நல்ல பாடகர் கூட. ஏதாவது பாடவும் செய்வார். அப்போதெல்லாம் என் பையனும் எங்களுடன் விழித்திருப்பான். அவர் பெண்ணுக்காக அவர் ஸ்கேட்ஸ் உருளைகள் வாங்கி வைத்திருந்தார். அதில் என் பிள்ளை சலிப்பில்லாமல் முயன்று கொண்டேயிருப்பான். களைப்படையவே மாட்டான். நாங்கள் எல்லோரும் இதை ஸ்வாரஸ்யத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதுண்டு.
அப்போதெல்லாம் ஆதித்யா கையில் ஒரு குச்சியைப் பிடித்துக் கொண்டிருப்பான். கையில் தண்டம் மாதிரி ஒரு குச்சி கட்டாயம் இருந்தாக வேண்டும் அவனுக்கு. இதை வேறு நினைத்து நாங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். என் நண்பரின் மனைவி பத்திரிக்கையாளர். ஆங்கில சஞ்சிகை ஒன்றில் பணியாற்றி வந்தார். கொஞ்சம்அவுட் ஆஃப் பாக்ஸ்என்பார்களே, அது போன்ற நபர். நண்பரும் அவர் மனைவியும் வெவேறு பிரதேசத்தவர்கள், காதல் திருமணம் புரிந்து கொண்டவர்கள்.
நண்பரின் மனைவி என் பையன் கையில் எப்போதும் ஒரு குச்சியைப் பிடித்துக் கொண்டிருப்பதை எண்ணிக் கவலைப் படுவதைத் தெரிவிக்கும் போதுஇதில் கவலைப்பட ஒன்றுமில்லை; அது பாதுகாப்பற்ற உணர்வுதான்என்று கையில் எப்போதும் ஒரு பையைப் பறக்கவிட்டபடி அலைந்து கொண்டிருக்கும் கார்ட்டூன் கதாபாத்திரத்தைச் சுட்டிக்காட்டி எனக்குத் தேறுதல் அளிப்பதுண்டு.
என் தாயாருக்கு இடையில் உடல்நிலை மோசமாகி நான் திருச்சி செல்ல நேரிட்டது. குடும்பத்துடன் சென்றேன். என் அன்னைக்கு அவதாவஸ்தையாகிவிட்டது. அந்த நிலையிலும் என் பிள்ளையைப் பார்த்து அவர் திகைத்துப் போனார். குழந்தை பேசவே மாட்டேனென்கிறதே: பாடிக் கொண்டிருக்கிறதே என்று மிகவும் கவலைப்பட்டார். நாங்கள் கவலையில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தோம்.
ஆதித்யா பேசாமலும் இல்லை. பாடல்களின் வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருப்பான்வாய் ஓடிக் கொண்டேயிருக்கும்தனக்கென தேவை என்பது புரியும்அதற்குத் தேவையானவற்றைச் செய்து சாதித்துக் கொள்ளத் தெரிந்திருந்தது. ஆனால் கேள்வி கேட்டால் பதில் இருக்காது. வெற்றுப் பார்வையுடன் சரி. நடந்து கொண்டேயிருப்பான் . தேடுவதாகத் தோன்றும் நடையுடன் சிந்தனையுடன் நடந்து கொண்டிருப்பான்அணை போடுவது கொஞ்சம் கடினமான செயல்தான்நாம் பாடிக் கொண்டிருந்தால் அல்லது இசை எங்காவது கேட்டுக் கொண்டிருந்தால் இயக்கம் நிற்கும்; கவனம் திரும்பும்மற்றபடி கட்டற்ற நடைதான். இதைச் சமாளிப்பது கொஞ்சம் சிரமமாகத் தானிருந்தது. எவ்வளவு நேரம்தான் தூக்கி வைத்துக் கொள்ளமுடியும் சிறு குழந்தை என்றாலும்?
இத்துடனேயே சில நாட்களில் மும்பை திரும்பி விட்டோம். அப்போதும் கூட கவலை பிடிக்க ஆரம்பிக்கவில்லை. ஆதித்யாவைப்ளே ஸ்கூலில்போடுவதற்கு நாள் முதிர்ந்து வந்தவுடன் அருகில் ஒரு ப்ளே ஸ்கூலில் போட்டோம். ஒரு பார்ஸி பெண்மணி குழந்தைகளை வைத்துக் கொண்டு வகுப்புகள் நடத்திக் கொண்டிருந்தார். வாடியா என்று பெயர்.
என் மனைவி கொண்டு போய்விட்டு விட்டு வருவார். நான் பாடுகிற நேரம் தவிர ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டிருப்பேன். ஆதித்யா அவற்றையெல்லாம் சந்தை மாறாமல் சொல்லிக் கொண்டிருப்பான். குடும்ப உறவுகளின் மத்தியில் ஆதித்யா ஒரு பெரிய வேடிக்கை மட்டுமல்லாது ஆச்சரியம் கூட.
மனைவியின் நெருங்கிய உறவினர்கள் அவர்கள் பரம்பரையில் சங்கீத ரத்தம் ஓடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். என் வீட்டிலும் சங்கீத ரத்தம் உள்ளது என்று நான் பெரிதாகச் சொல்லிக் கொள்ளவில்லை. எந்தப் பரம்பரையாய் இருந்தால் என்ன? பெருமைதான்என் வீட்டில் எல்லோருமே பாடுவோம் ஒரே ஒரு சகோதரனைத் தவிர. என் தந்தையின் தலைமுறையிலும் சங்கீதம் இருந்தது.
என் அன்னை சிறுவயதில் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தார். அவர் இறக்கும் வரையிலும் கற்றுக் கொள்வதை நிறுத்தவில்லை. அவர் இறந்த பின்னர் அவரின் டைரியைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அவர் ஆல் இந்தியா ரேடியோவில் நடந்த இசைப்பயிற்சியைக் கேட்டு எழுதி வைத்திருந்த இசைக் குறிப்புகள்கண்ணில் பட்டன. என் பெரியப்பா அந்தக் காலத்தில் இலுப்பூர் பொன்னுசாமி பிள்ளையிடம் சங்கீதம் கற்றுக் கொண்டவர்.
ஆதித்யா சப்தத்தை எப்படி பார்க்கிறான் என்று சிலவேளைகளில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒருநாள் தொலைக்காட்சியில்மால்குடி டேஸ்தொடர் ஒலிபரப்ப ஆரம்பித்தபோது அதன் டைட்டில் பாட்டுதானேனனனாஎன்ற ஒலித்தவுடன் அதை இடுப்பில் இருந்த குழந்தை அப்படியே பாடிற்று. ஒருநாள் பழைய பாட்டில்களை வாங்கும் பெண்மணிபாட்லீ..’ என்று வீதியில் கூவிக்கொண்டு சென்றபோது அதை அப்படியேஸரிகமபதநீ…’ என்று என் பையன் ஸ்வரப்படுத்தி திருப்பிக் குரல் கொடுத்தான்.
ப்ளே ஸ்கூலில் ஆண்டு விழா. மாறுவேடப் போட்டி நடந்தது. ஆதித்யாவிற்கு சாஸ்திரிகள் மாதிரி வேஷம் போட்டிருந்தோம். அன்று அவனுக்கு ஜுரம் நகர்த்திற்று. அவன் வழக்கம்போல் ஜடபரதர் மாதிரி அதைப் பொருட்படுத்தாது விழாவில் கலந்து கொண்டு கற்பித்திருந்த ஸ்லோகத்தைச் சொல்லிவிட்டு வந்தான். அவனுக்கு பரிசு கிடைக்கவில்லை.
ஒருநாள் ப்ளே ஸ்கூல் ஆசிரியையுடன் பேசிக் கொண்டிருந்தபோது, தற்செயலாக பையன் வகுப்பில் எப்படியிருக்கிறான்? மற்ற மாணவர்களுடன் கலந்து பழகுகிறானா? என்று கேட்டோம். அவர் பையன் கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறான் என்றும் வேண்டுமென்றால் ஒரு உளவியல் நிபுணரிடம் காண்பிக்கலாமென்றும் கூறி அவருக்குத் தெரிந்த ஒரு நிபுணரிடம் சிபாரிசு செய்தார். நாங்களும் ஆதித்யாவை அவரிடம் கூட்டிக் கொண்டு போய் காண்பித்தோம்.
அவர் அவனைப் பரிசோதித்துவிட்டுப் பையனுக்கு ஒன்றிரண்டு குறைகள் இருப்பதாகவும்ஆட்டிஸத்தின்இரேகைகள் ஒன்றிரண்டு இருப்பதாகவும் பெற்றோர் விரும்பினால் உளவியல் மருத்துவரிடம் சிபாரிசு செய்வதாகவும் தெரிவித்தார்.
வழக்கில் புயல்என்பார்களே அதைப் போல் இந்த மருத்துவ அறிக்கையால் என் வாழ்வில் ஒரு பெரும் புயல் வீசிற்று.

அத்தியாயம் 7

உருமாற்றம்என்று காப்கா ஒரு நாவல் எழுதியிருக்கிறார். நன்றாக இருந்த ஒரு மனிதன் திடீரென்று ஓரிரவில் வெட்டுக்கிளி போன்ற ஒரு பூச்சியாக மாறி விடுகிறான். அத்துடன் அவனைச் சுற்றியுள்ள உலகமும் எப்படி மாறிவிடுகிறதென்று எழுதியிருப்பார். அதுபோல் என் உலகமும் மாறிவிட்டது.
வாடியா எங்களிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்களை அங்கு வருகின்ற என் குடியிருப்பில் வசிக்கின்ற ஏனைய பெற்றோரிடமும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதிலிருந்து நாங்கள் அந்தக் குடியிருப்பிலிருந்து கிளம்பும் வரை எங்களின் அந்தஸ்து முன்பிருந்தது போலல்லாது கீழே இறங்கிவிட்டது. மனிதர்கள் எங்களையும் எங்கள் பிள்ளையையும் பார்த்த பார்வை மாறிவிட்டது. கலந்து பழகியவர்கள் ஒதுங்கிப் போனார்கள். என் பிள்ளையுடன் தத்தமது பிள்கைளை கலந்து பழகத் தடை விதிக்கப்பட்டது. எங்களிடம் மிகவும் அப்பாவித்தனம் போல் தோன்றும் விசாரிப்புகள். பின்னாளில் என் வீட்டிற்கு வந்திருந்த அலுவலக நண்பர் பேசிக் கொண்டிருந்தபோது என்னிடம் கூறினார். (அவரும் விளிம்பு நிலை மனிதர்) “டேய்! உலகத்துக்கு ரெண்டுதான் தெரியும் ஒண்ணு சாதாரணமா இருக்கிறவனுங்க; இன்னொன்று சாதாரணமா இல்லாம இருக்கிறவனுங்க. சாதாரணமா இல்லைன்னா ஒரு மனுசன என்ன ஏதுன்னு உலகம் விசாரிக்காது. பசங்களுக்கும் அப்படித்தான். ‘மங்கலாய்ட்மூளை வளர்ச்சி குறைந்த குழந்தைகள். ‘டிஸ்லெக்ஸியாஎல்லாம் ஒண்ணுதான். உன் பையன் சங்கீதத்தில பெரிய ஜீனியஸ்ஸா இருக்கலாம். உலகம் அப்படிப் பார்க்காது. மேலே சொன்ன வகையில்தான் சேர்க்கும்,” என்றார் எவ்வளவு உண்மை!
சங்கீத ஞானம் என்று வரும்போது அதைத் தத்தமது பரம்பரைச் சொத்தாக்க முயன்ற உறவு பிரச்சனை என்ற வரும்போது அதை எதிர்ப் பரம்பரை மீது சுமத்த முயன்றது. இது உலக இயல்புதான். என் மனைவி கண்ணீராகப் பெருக்கித் தள்ளிவிட்டாள். வீட்டில் இசைக்குத் தற்காலிகத் தடை போடப்பட்டது. தொலைக்காட்சி நிறுத்தப்பட்டது. ஆதித்யாவிற்கு செறிவூட்ட அவன் சமூகப் பங்கெடுப்பை அதிகரிக்கத் திட்டங்கள் தீட்டப்பட்டன. மனைவிக்கு அன்னை வீடு அதே ஊரில் என்பதால் ஆரம்பத்தில் வசதியாக இருந்து வந்தது; நாளா வட்டத்தில்தான் அவளுக்கு அந்த வீட்டை விட்டு வெளியேறிய உடனேயே பாத்யதை அதில் கிடையாது என்பது புரிந்தது.
அதுகுறித்து அவளுக்கு இன்னும் ஏராளமான மனத்தாங்கல்கள். என் பிள்ளைக்கு எதைப் பற்றியும் கவலையில்லைஅவன் உலகத்தில் அவன். அவனுக்கு ஒன்று வேண்டுமென்றால் வேண்டும்வேண்டாம் என்றால் வேண்டாம்தான்அவனை யாரும் வற்புறுத்த முடியாது.
நாங்களே ஒதுங்க வேண்டி வந்தபோதுசுற்றியிருந்த மனிதர்கள் எங்களைச் சமூகப் பங்கெடுப்பில் ஒதுக்கிவைக்க ஆரம்பித்தபோதுஆதித்யாவிற்கு எத்தகைய வெளி வட்டாரத் தொடர்பை ஏற்படுத்தித் தர முடியும்? அவன் வழக்கமாகக் தரைத்தள குடியிருப்பில் இருந்த ஒரு தம்பதியின் வீட்டிற்குச் செல்வது வழக்கம். தென்னிந்தியத் தம்பதிகளாதலால் அவர்களுக்கும் எங்களுக்கும் ஒருவர்மீது ஒருவர் ஈர்ப்பு உண்டு. ஒருநாள் அவர்கள் வீட்டிலிருந்து எங்களை அவசர அவசரமாகக் கூப்பிட்டார்கள். ஆதித்யா அவர்கள் வீட்டிலிருந்த பொழுது. என்னவோ ஏதோ என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடினோம். ஆதித்யாவை எங்கும் காணாமல் திகைத்த போது அந்த வீட்டுப் பெண்மணி புன்சிரிப்புடன்மேலே பாருங்கோஎன்று எட்டடி உயர பீரோவைக் காட்டினார்அதன் மீது ஆதித்யா உட்கார்ந்து கொண்டிருந்தான். இது போன்ற ஆதித்யாவின்புதிர்நடவடிக்கைகள் மற்றவரின் பாராட்டைப் பெற்றுத் தந்தது மாறி, ஒரேநாளில் கோளாறு சொல்வதற்கு காரணமானதால் அவனை வீட்டிலேயே நிறுத்தி வைக்க வேண்டியதாயிற்று.
என் பிள்ளையைப் பற்றிய கவலையை வெளியில் காட்டிக் கொள்ளாது என் மனைவியை அவ்வப்போது தேற்றிக் கொண்டிருக்க வேண்டும். பிள்ளையுடனும் நிறைய நேரம் செலவழிக்க வேண்டும்எனக்கு சோர்வு ஏற்படும் சமயங்களில் அங்கிருந்த கல்லூரி நண்பரையே சார்ந்திருந்தேன் (ஏற்கெனவே விளிம்பு நிலை மனிதர் என்று குறிப்பிட்டிருக்கிறேனே அவர்). விடுமுறை நாட்களென்ற வந்துவிட்டால் போரிவிலி தேசியப் பூங்காவிற்குக் கிளம்பி விடுவார் காரைப் போட்டுக் கொண்டு. மும்பையின் நுரையீரல் போன்ற பகுதி அது எனலாம்காடும் வானந்திரமும் மழை நாட்களில் நீர் வீழ்ச்சியும் பச்சும், பசியும் என அந்தச் சூழலே மிகவும் ரம்யமாக இருக்கும். நானும் ஸ்கூட்டரில் ஆதித்யாவையும் கூட்டிக் கொண்டு கிளம்பி விடுவேன். நேரம் போவது தெரியாமல் நீரில் திளைப்போம்.
மாதுங்கா போகிற வழியில்கிங் சர்க்கிளில்ஒரு பெரிய பூங்கா உண்டு. குழந்தைகள் விளையாடுவதற்கு சறுக்கு மரங்கள் ஊஞ்சல் என்று அமர்க்களமாய் இருக்கும். அக்கம் பக்கத்தில் சிறு குழந்தைகளின் பெற்றோருக்குப் பெரிய வரபிரசாதம். காவற்காரர்கள் உண்டு. காதலர்களை அநுமதிக்க மாட்டார்கள். பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு மட்டும் அநுமதி உண்டு. கையெழுத்து மறையும் நேரத்தில் விசில் ஊதுவார்கள்அத்துடன் எல்லோரும் வெளியேறி விட வேண்டும். இராணுவ ஒழுங்குடன் பராமரிக்கப்படும் இந்த பூங்காவில் பெற்றோரும் அதே ஒழுங்குடன் நடந்து கொள்வார்கள். விடுமுறை நாட்களில் நிறைய கூட்டம் இருக்கும், ஆனால் பெற்றோர் குழந்தைகள் விளையாட்டில் பங்கு கொள்ள தத்தம் முறை வரும் வரை  காத்திருப்பார்கள். பெரிய நகரங்களில் எல்லோரும் எல்லாவற்றையும் பழுது சொல்லிக் கொண்டிருக்கும் போது இதுபோன்ற ஒன்றிரண்டு நல்ல விஷயங்களையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
அநேகமாக தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் ஆதித்யாவைக் கூட்டிச் செல்வேன் களைப்பே இல்லாமல் ஆதித்யா ஊஞ்சலில் ஆடுவான்; சறுக்கு மரத்தில் தலைகீழாக சறுக்கிக் கொண்டு வருவான். சீ-சாவில் சலிக்காமல் விளையாடுவான். இதைச் செய்ததில் இரண்டு நன்மைகள் விளைந்தன. ஒன்று அவனின் அலையும் தன்மையை ஒரு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது. இரண்டாவது எப்போதும் ஏதோ சிந்தனையில் தனிமையில் ஆழ்ந்திருக்கும் அவனை அதிலிருந்து வெளிக்கொணர முடிந்தது.
பாடல்கள் என்னைப் பொறுத்தவரை நின்றுவிட்டன. ஆதித்யாவைப் பொறுத்தவரை நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது. பேசவேயில்லை என்கிற குறை பூதாகரமாக வளர்ந்து கொண்டு வந்தது. என் மனைவியின் பிரலாபங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தன. அப்போது ஊரிலிருந்து வந்த என் அண்ணன் புத்தகக் கடைக்குப் போய் பெரிய படங்களுடனும் 1000 ஆங்கில வார்த்தைகளுடனும் கூடிய புத்தகத்தை வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனார். என் மனைவிக்கு வேலை ஆரம்பித்தது. ஆதித்யாவை உட்கார வைத்து வற்புறுத்தி வார்தைகளை ஒவ்வொன்றாகச் சொல்லப் பழக்கினாள். கொஞ்ச நாட்களில் ஆதித்யாவிற்கு அதில் ஒரு ருசி ஏற்பட்டாற் போலிருந்தது. அவனும் ஆர்வத்துடன் ஒவ்வொரு வார்தையாக உச்சரிக்க ஆரம்பித்தான்.
இப்படியெல்லாம் நடந்து வரும்போது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம் நிகழ்ந்தது. 1995இல் எனக்கொரு, எங்களுக்கொரு பெண் குழந்தை பிறந்தது.

அத்தியாயம் 8

எங்களையறியாமல் என் பிள்ளைக்கொரு தோழமை வளர்ந்து வந்தது எங்களின் பெண் மூலமாக. எங்களால் முடியாத தகவல் தொடர்பை பெரிதாக வார்த்தைப் பரிமாற்றம் இல்லாமலேயே அவளால் என் பிள்ளையுடன் வைத்துக் கொள்ள முடிந்தது. எங்கு சென்றாலும் நாங்கள் நாலு பேரும் ஒன்றாகச் செல்வோம். பெண் கொஞ்சம் வளர்ந்து வந்ததும் என் ஸ்கூட்டரில் பேபி இருக்கை ஒன்றை அமைத்துக் கொண்டேன். அதில் பெண்ணை உட்கார்த்தி வைத்துக் கொண்டு நான்கு பேரும் ஊர்வலம் வருவோம். நான் குறிப்பிட்டிருந்த விளிம்புநிலை நண்பர் அப்போது கோரேகான் என்கிற இடத்தில் தங்கியிருந்தார். சுண்ணாம்பட்டியிலிருந்து அவர் வீடு ஒரு 15 கிலோ மீட்டர் தொலைவு இருக்கலாம். அங்கு போய்விட்டு நள்ளிரவில் நான்கு பேரும் வீடு திரும்புவோம்.
பிள்ளையைப் பற்றிய கவலை கொஞ்சம் குறைந்திருந்தது. அவன் ஆங்கில எழுத்துக்கள் ஏபிஸிடியை இஸட்டிலிருந்து ஆரம்பித்து தலைகீழாகக் கோர்வையாகச் சொல்லுவான். அது எங்களுக்கெல்லாம் பெரிய வேடிக்கையல்லாது ஆச்சரியமும் கூட. குழந்தைகளின் பெருமையைக் காண்பிக்க வழக்கமாக எல்லோரும்ரைம் சொல்லு; பாட்டுப் பாடுஎன்று வற்புறுத்துவார்களே அதைப் போல் இவனிடம் அதைச் சொல்லச் சொல்லி வருபவர்களைத் திகைப்பில் ஆழ்த்திக் கொண்டிருப்போம்.
ஏற்கனவே நாங்கள் சந்தித்த உளவியல் நிபுணர் எங்களை மன நல மருத்துவரைப் பார்க்கச் சொல்லியிருந்ததை நிராகரித்திருந்தோம். என் மனைவிக்கு அதைப் போன்ற ஒரு விஷயத்தில் ஈடுபாடே இல்லை. மிகவும் வீம்புடன்-எல்லாத் தாய்மார்களுக்கும் உள்ளதுதான் இதுஅதையும் அவர்கள் பரிந்துரைக்கும் மருத்துவத்தையும் கடுமையாக எதிர்த்து வந்தாள்.
எனக்குமே இது பெரிதாகப் படவில்லை. ஏனென்றால் தன் தேவைகளைத் தானே பூர்த்தி செய்யுமளவிற்கு அவனுக்குச் சுயச் சார்புத் தன்மை வந்து கொண்டிருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. சாதாரணமாக நாம் கவனிக்கும் எல்லாவற்றையும் கவனிக்காமல் விடும் விஷயங்களையும் அவனால் துல்லியமாக கவனிக்க முடிகிறது. என்ன? கலகலவென்று பேச முடியவில்லை. ஆனால் தனக்குத் தேவை என்று வரும்போது மனிதர்கள் செய்யும் அனைத்தையும் செய்யத் தெரிகிறது. பின்னால் நடந்த வேடிக்கையான விஷயம் ஒன்றிரண்டு நினைவுக்கு வருகிறது.
அவனுக்குச் சாக்லேட் என்றால் உயிர். அப்படி விழுங்குவான். கடைக்குப் போனால் சாக்லேட் இல்லாமல் திரும்ப முடியாது. அப்படித் தின்று தின்று பல்வலி வந்துவிட்டது. கடுமையான பல்வலிகன்னத்தில் கை வைத்துக் கொண்டு பல்லை வலிக்கிறது என்று கத்திக் கொண்டிருந்தான். கீழ் வீட்டு வம்பு மாமிபையன் ஏன் பள்ளிக்கூடம் போகவில்லைஎன்று கேட்ட போது, “பல்லை வலிக்கிறதாம் மாமி; டாக்டர்ட்ட கூட்டிக் கொண்டு போகணும்என்றாள் என் மனைவி. அந்த வம்பு மாமி என் மனைவி வாயைக் கிண்ட வேண்டுமென்றுஅதெப்படி உனக்குத் தெரியும்? வாயைத் திறந்து சொன்னானா?” என்றார் ஆணித்தரமாக.
என் மனைவிஅவன்தான் சொன்னான் மாமி,” என்றாள் எரிச்சலுடன். ஏற்கெனவே இருப்பது போதாதென்று இதுபோன்ற விஷயங்களை வேறு சமாளிக்க வேண்டிருந்தது.
பின்னாளில் சென்னை திரும்பியபோது நெருங்கிய உறவினரின் வற்புறுத்தலால் சென்னையில் புகழ்பெற்ற மருத்துவமனையின் மன நல மருத்துவ நிபுணரைச் சந்திக்கப் பையனுடன் சென்றிருந்தோம். உறவினருக்கு இவனுக்குஆட்டிஸம்என்று நிரூபித்துவிட ஆசை. நாங்கள் சும்மா வீம்புக்காக இவனுக்கு ஒன்றும் கிடையாது என்ற சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தார்கள். அந்த உறவினரின் கணவர் புகுமுக வகுப்பு முடிந்த கையுடன் குடும்ப சூழ்நிலை காரணமாக அவர் மிகவும் கனவு கண்டு கொண்டிருந்த டாக்டர் படிப்பை எடுக்க வழியில்லாது வேலைக்குப் போக நிர்பந்திக்கப்பட்டார். அந்த மனக்குறையாலோ என்னவோ அவர் எப்போதும் மருத்துவ சம்பந்தமான சஞ்சிகைகளைப் படித்துக் கொண்டிருப்பார். அரை டாக்டர் ஆகுமளவிற்குத் தேர்ச்சி. அவர் கூகுளில் சென்று என்னவெல்லாமோ தேடி நிறையப் படித்து ஆதித்யாவிற்குஅஸ்பர்கர் ஸின்ட்ரோம்என்று கண்டு பிடித்து வேறு வைத்திருந்தார். எங்களுக்கில்லாவிட்டாலும் அவர்களுக்காகவேனும் நிரூபிப்பதற்காக நாங்கள் டாக்டரிடம் செல்ல வேண்டி வந்தது.
அந்த மருத்துவரை என்னால் மறக்க முடியவில்லை – ‘டெட்டி பேர்போன்றதொரு உருவத்துடன் தடிமனான கண்ணாடி அணிந்துபிரஸன்ன வதனம்என்பார்களே அதுபோல் சிரித்துக் கொண்டேயிருந்தார். கண்களும் சிரித்துக் கொண்டேயிருந்தன. உறவினர் அவருடன் ஏற்கனவே தொலைபேசியில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும் போது பையனைப் பற்றி விவரித்திருப்பார் போலிருக்கிறது. அவர் நேரடியாகப் பையனிடம்நான் கேக்கறதுக்கு நீ பதில் சொன்னேன்னா நான் உனக்கு சாக்லேட் தருவேன்என்றார்.
பையன் அவர் மேஜையில் இருக்கும் சாமான்களில் எதை எடுத்து உடைக்கலாம் என்பதுபோல் தொட்டுத் தொட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான். அவர் வற்புறுத்திக் கேட்கும் ஒன்றிரண்டு கேள்விகளுக்கு பதில் சொன்னான். சிரித்துக் கொண்டே இந்த அவர்
தேர் இஸ் நத்திங் ராங் வித் சைல்ட்என்றார் சிரித்துக் கொண்டே.
உறவினர் விடாமல்பையனுக்குஆட்டிஸம்இருக்கோல்யோ?” என்றார்.
டாக்டர் சிரித்துக் கொண்டே, நான்தான் சொன்னேனேதேர் இஸ் நத்திங் ராங்ஹி இஸ் நாட் ஆட்டிஸ்டிக், ஹி இஸ் ஒன்லி ஆர்ட்டிஸ்டிக்,” என்றார் தீர்மானமாகஇதற்கான பின் குறிப்பு ஒன்று உண்டு. எல்லோரும் கிளம்பும்போது பையயன் மருத்துவரைப் பார்த்து, “சாக்லேட்?” என்று நினைவுபடுத்தினான். அவர் பெரிதாகச் சிரித்து விட்டு பையில் இருந்த தடிமனான பர்ஸை எடுத்து உதவியாளரிடம் கொடுத்து சாக்லேட் வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். சாக்லெட்டை வாங்கிக் கொண்டுதான் நகர்ந்தான் ஆதித்யா.
உறவினருக்குத்தான் சற்று ஏமாற்றம்டாக்டர் சரியாகப் பார்க்கவில்லை என்று அபிப்ராயம்நாங்கள் வீடு திரும்பியவுடன் அதே மருத்துவரைத் தொலைபேசியில் அவர் அழைத்து மீண்டும் கேட்டிருக்கிறார்கள். அவர் மீண்டும் தீர்மானமாக ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
இவர்களும் விடாமல், “பேச மாட்டேங்கறானே?” என்றிருக்கிறார்கள். அதற்கு அவர், “ஹி இஸ் நாட் டாக்கிங். பிகாஸ் ஹிஸ் பேரண்ட்ஸ் ஹாவ் நாட் டாட் ஹிம் ஹௌ டு ஸ்பீக்என்றிருக்கிறார். அத்துடன் இவர்கள் மத்தியிலாவதுசந்தேகப் பிசாசைகார்க்போட்டு அடைக்க முடிந்தது. எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான்.
அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. நான் புதுக்கோட்டையிலிருந்து வந்தவன்தமிழ் மீடியத்தில் படித்தவன் ஆயினும் குடும்பப் பின்னணி காரணமாக சரளமாக ஆங்கிலத்தில் உரையாடக் கூடியவன்என் மனைவி மும்பையைச் சேர்ந்தவள்இரண்டு மூன்று தலைமுறைகளாக அங்கேயே வசித்து வந்த தமிழ்க் குடும்பம்தமிழ் கொஞ்சம் கொச்சையாகப் பேசுவாள்அங்கிருக்கும் பாலக்காட்டுக்காரர்களின் சம்பாஷணையை ஒத்திருக்கும் அவள் பேச்சு. தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. ஆங்கிலம் ஹிந்தி மராத்தியில் சரளமாக உரையாடக் கூடியவள். நாங்கள் திருமணம் செய்து கொண்ட விநோதம் போலவே எங்கள் பரஸ்பர தகவல் பரிமாற்றமும் சௌகரியத்தின் பாற்பட்டு ஆங்கிலத்தில்தான் நடந்து வந்தது. தமிழ், ஆங்கிலம் என்று மாறி மாறி பேசிக் கொண்டதில் பையன் குழம்பி விட்டானோ என்றால் பெண் நன்றாகத் தமிழ் பேசுகிறதே!
வார்த்தைகளை வைத்தா மொழி? வார்த்தைகளை வைத்து மட்டும் என்றால் ஆதித்யாவால் நாம் நினைத்தே பார்க்க முடியாத வார்த்தைகளைக் கொட்ட முடியும். வார்த்தைகளுக்கும், வாக்கியங்களுக்கும் இடையே உள்ள முக்கியமான கண்ணி ஒன்று அவனிடம் விட்டுப் போயிருக்கிறது என்றே இப்போது நினைக்கும்போது தோன்றுகிறது. பேச்சு வரவில்லை என்று சியாமளா தண்டகம் கொஞ்சநாள் படித்துக் கொண்டிருந்தேன். காளிதாசன் எழுதியது. அவனே பேச்சு வரலாமல் பின்னால் காளியின் அருளால் சியாமளா தண்டகத்திலிருந்து ஆரம்பித்தான் என்பார்கள்பையன் அதைக் கேட்டுக் கேட்டு அக்ஷரம் பிசகாமல் சொல்லக் கற்றுக் கொண்டான். எல்லாம் கேள்வி ஞானம்தான். சிலபேர்மூக பஞ்ச சதி படிஎன்றார்கள். அதை கொஞ்சநாள் முயன்று பார்த்தேன்அலுத்து வந்தது. நான் வழக்கமாகச் சொல்லும் சூக்தங்களும் விஷ்ணு சகஸ்ரநாமும் தொடந்து கொண்டிருந்தன. பையன் அவற்றையும் சந்தை மாறாமல் சொல்லுவான்.
எல்லாம் மும்பையில்தான். அங்கே உடம்பு சரியில்லை என்ற ஒருமுறை என் மனைவி ஹோமியோபதி மருத்துவர் ஒருவரைப் பார்க்கப் போயிடிருந்தாள்வயதானவர்எண்பதுக்கும் மேல் வயது. வழுக்கைத் தலையுடன் சுறுசுறுப்பாக இருப்பார். ‘பய்என்ற பெயர். அவரிடம் என் மனைவி ஆதித்யா பற்றி பிரஸ்தாபித்திருக்கிறாள். அவரும் கூட்டி வரச் சொல்லியிருக்கிறார். அலோபதி வைத்யரிடம் போய் சொஸ்தமாகாத அவள் வயிற்று வலியை அவர் இரண்டே நாட்களில் குணப்படுத்தியதில் என் மனைவிக்கு அவர் மீது மிகுந்த நம்பிக்கை. பையனுக்கு ஏதாவது அவர் மருந்து கொடுத்து பையன் எல்லோரிடமும் கலகலப்பாகப் பேச ஆரம்பிக்க மாட்டானா, என்கிற நப்பாசை அவளுக்கு.
பையனைக் கூட்டிக் கொண்டு போயிருக்கிறாள்பையன் அங்குமிங்கும் பார்த்து எதை எடுத்து ஆராயலாம் என்று நோண்டிக் கொண்டிருக்க, அவன் வாய் அநிச்சையாக விஷ்ணு சகஸ்ரநாமத்தைச் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறது. பையனைச் சில விநாடிகள் உற்றுப் பார்த்த வண்ணம் இருந்த அவர், “இவனுக்கு ஒரு மருந்தும் தேவையில்லை. நீங்கள் யாரும் இவனை வழி நடத்தத் தேவையில்லை. அவன் போகிற போக்கில் நீங்கள் செல்லுங்கள். அது போதும். இவன் பெரிய சமஸ்க்ருத அறிஞன் ஆவான்உலகப் புகழ் பெறுவான். நான் சொன்னது நடக்கும். அதைப் பார்க்கத்தான் நான் உயிரோடிருக்க மாட்டேன்என்றாராம். மேலும்இவனுக்கு நண்பர்கள் இருக்க மாட்டார்கள்; சக ஊழியர்கள்தான் இருப்பார்கள்,” என்று வேறு சொல்லியிருக்கிறார். பின்னர் அதற்குப்பின் அவரை வைத்தியத்திற்குப் பார்க்க வந்த பலரிடமும் அவைனப் பற்றியே சில நாட்கள் பேசிக் கொண்டிருக்கிறார்.
ஒன்று பைத்தியம் என்கிறார்கள்; இல்லாவிட்டால் ஞானி என்கிறார்கள். உலகத்திற்கு நடுவாந்திரமாக ஒன்றுமே இல்லை. ஒன்று போற்ற வேண்டியிருக்கிறது; இல்லாவிட்டால் தூற்ற வேண்டியிருக்கிறது. மொழி சிவபெருமானின் உடுக்கையில் எழுந்த சத்தத்திலிருந்து வந்தது என்று மகேஸ்வர சூத்ரம் கூறுகிறது. அந்த ஒலியைச் சொல்லும் ஸ்லோகத்துடன் இந்த அத்யாயத்தை முடிக்கிறேன்:
ஹரி: ஓம் அஇஉண்
ருலுக்ஏஓங் ஒளச்ஹயவரட்லண்
ஞமஙணநம்ஜபஞ்கடதஷ்ஜபகடதஸ்
கபக சடதசடதவ்கபய்ஸஷசர்ஹல்
இதி மஹேஸ்வராணி சூத்ராணிஹரி: ஓம்.”

அத்தியாயம் 9

ஆதித்யா பள்ளி செல்கிற நாளும் வந்தது. எஸ்ஐஇஎஸ் பள்ளி. தென்னிந்திய நிர்வாகத்தால் நடத்தப்படுவது. நம் ஊர்ப் பள்ளிகள் மாதிரிதான். பெரிய ஆடம்பரம் அலங்காரம் ஒன்றும் கிடையாது. தினமும் பிரார்த்தனை உண்டு. சரஸ்வதி பூஜை அன்றெல்லாம் நல்ல கொண்டாட்டமாக இருக்கும். சேர்க்கையில் தமிழர்களுக்கு முன்னுரிமை உண்டு என்று சொல்ல வேண்டியதில்லை. அங்கே சேரும் தமிழர் குழந்தைகள் இரண்டு வகைஎன் போன்று வேலை மாற்றமாகி வந்து குடியிருக்கும் மத்தியத் தரத் தமிழர் ஒருவகை. அங்கேயே தலைமுறைகளாக இருக்கும் தமிழர்களும் இதில் அடக்கம். தாராவியில் இருக்கும் குழந்தைகள் இன்னொரு வகை. என் போன்றவர்களுக்கும் தாராவித் தமிழர்களுக்கும் உகந்த பள்ளி.
ஆதித்யா சுண்ணாம்பட்டியிலிருந்து மாதுங்காவில் இருக்கும் பள்ளிக்குப் பள்ளிப் பேருந்தில் செல்வான். எங்களுக்குக் கொஞ்சம் பயம்தான் அப்படி அனுப்புவதில்எங்கள் குடும்பத்திற்கு அறிமுகமான சக குடியிருப்புக் குடும்பங்கள் ஆதித்யா தன்னிச்சையாகப் பள்ளி செல்வதை உன்னிப்பாகவும் ஆச்சரியத்துடனும் கவனித்துக் கொண்டிருந்தன. மும்பையில் மழை என்றால் பேய் மழை பெய்யும்வாகனங்கள் ஆங்காங்கே நின்றுவிடும். என்மனைவிக்கு உள்ளுணர்வா ஊர் பழகியதாலா தெரியவில்லை. கொஞ்சம் தூறல் போட்டாலே பையனுக்கு விடுமுறை அளித்து விடுவாள். அதனால் பெரிய பிரச்னை இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.
அதிலும் ஒருநாள் ஒரு சிறிய விபத்து நேர்ந்துவிட்டது. சம்பவம்தான்; எங்களைப் பொறுத்தவரை விபத்து. அலுவலகத்தில் நான் வேலை மும்முரத்தில் இருந்தபோது ஒருநாள் மூன்று மணி வாக்கில் என் மனைவியிடமிருந்து திடீரென்று தொலைபேசி அழைப்பு. பள்ளி சென்ற பையன் பஸ்ஸில் வீடு திரும்பவில்லை. என்ன ஆயிற்றோ? தினமும் பஸ்ஸிலிருந்து இறங்கும் பையன் அன்று இறங்கவில்லை. பள்ளியில் பல ஏரியாக்களுக்குச் செல்லும் வெவ்வேறு பேருந்துகள் உண்டு. தன் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக வேறு பேருந்தில் ஏறி விட்டானோ என்னவோ! ஏதோ உலகில் சஞ்சரிக்கின்ற குழந்தை. யாராவது ஏதாவது கேட்டால் கூட பதில் சொல்லத் தெரியாது.
அலமலந்து போய் என்ன செய்வதென்று தெரியால் போட்டது போட்டபடி மேலாளரிடம் சொல்லிவிட்டு அவசர அவசரமாகக் கிளம்பினேன். மின்சார ரயிலில் அரை மணி நேரப் பணம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிட்டது வீட்டிற்கு வர. வீட்டில் மனைவி மகன் மகள் பத்திரமாக இருப்பதைக் கண்ட பின் தான் நிம்மதிப் பெருமூச்சு விட முடிந்தது. நடந்தது இதுதான். பையன் பஸ்ஸில் தான் இருந்திருக்கிறான். ஏதோ கவனக் குறைவால் இறங்கவில்லை. பேருந்து ஊழியர்களும் கவனிக்கவில்லை. ஆரவாரம் செய்கின்ற குழந்தையாக இருந்தாலாவது அவர்கள் கவனித்திருப்பார்கள். அமைதியான குழந்தையாதலால் கவனம் பெறவில்லை. அப்படியே பேருந்தில் ஒரு ரவுண்ட் அடித்து விட்டு பஸ் திரும்பியிருக்கிறது. என் வீட்டு வழியாகத்தான் திரும்பிச் செல்லும் போலிருக்கிறது. அதற்குள் என் மனைவி மகாராஷ்ட்ரா முதல்வரைத் தவிர அனைத்துப் புள்ளிகளுக்கும் தொலைபேசியில் புகார் செய்துவிட்டு ஒரு டாக்ஸியைப் பிடித்துக் கொண்டு பள்ளி சென்றுவிட்டாள். பஸ் திரும்பியதும் பிள்ளையைப் பார்த்து கட்டிக்கொண்டு ஒரு பாட்டம் அழுதுவிட்டு வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டாள்.
அந்த நாட்களில் நான் மாதுங்காவிலிருந்து ஒரு சபாவில் சங்கீதம் கற்றுக் கொள்ளச் சென்று கொண்டிருந்தேன். அங்கு கற்று வரும் பாடல்களை வீட்டில் பாடிக் கொண்டிருப்பேன். மனநல நிபுணரிடம் கூட்டிச் செல்லுமுன்பு அங்கு ஒருநாள் ஆதித்யாவைக் கூட்டிக் கொண்டு சென்றிருந்தேன். தற்செயலாக இரண்டு ஆராய்ச்சி மாணவர்களுக்கு நடந்து கொண்டிருந்த வகுப்பறைக்குள் நுழைந்து விட்டோம். அங்கே பாடம் நடந்துக் கொண்டிருந்தது. ஆதித்யா சற்று உன்னிப்பாக கவனித்துவிட்டு, ‘பந்துவராளிஎன்றான். மாணவர்களும் ஆசிரியரும் பிரமிப்புடன் உற்று நோக்கினர். அவர்கள் சுயநிலை அடைவதற்கு முன்னரேயே பந்துவராளியின் ஸ்வரஸ்தானங்களில் விதம் விதமாகப் பாடிக் காட்டினான். அவர்கள் சுதாரிப்பதற்குள் அவனுக்கும் ஸ்வாரஸ்யம் போய்விட்டது. வீணையை நோண்டப் பாய்ந்து விட்டான். அவர்கள் கேட்கும் கேள்விகளையும் செவி மடுப்பதாக இல்லை. பதில் சொல்லும் மன நிலையிலும் இல்லை. அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது? வீணையை அவனிடமிருந்து காப்பாற்றினால் போதும் என்று அவனை இழுத்துக் கொண்டுதப்பித்தோம் பிழைத்தோம்என்று வெளியில் ஓடி வந்துவிட்டேன்.
யாராவது ஏதாவது கேட்டால் அதற்கு பதில் வராது: அவனாகவும் யாரிடமும் பேசுவதில்லை. பேசுவது தாய், தந்தை, தங்கை இவர்களுடன் மட்டுமே. அதுவும் தன் தேவைக்காக மட்டுமே பேசுவான். ‘துறுதுறுவென்று ஓடிக் கொண்டிருந்ததால் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவும் நாம் பார்க்காத சமயத்தல் ஓடி விடுவான். அதனால் எங்காவது வெளியில் சென்றால்கடை கண்ணிக்குச் சென்றால் முக்கால் கவனம் ஆதித்யா மீதும் கால் கவனம்தான் கடை மீதிருக்கும். இப்படி இருக்கும்போது யாரிடம் அழைத்துச் சென்று என்னவென்ற சொல்ல? நாட்கள் இப்படியே ஓடிக் கொண்டிருந்தன.
அவனுக்கு இசையைத் தவிரவும் கார்ட்டூன்கள் பார்ப்பதில் விதம் விதமான வடிவங்களை பிளாஸ்டிக் அச்சுகளை வைத்துச் செய்வதிலும் ஆர்வமிருந்தது. வெளியில் எங்காவது அழைத்துச் சென்றால் அது வெட்டவெளிப் பிரதேசம் அல்லது பெரிய நிலப்பரப்புள்ள புல்வெளி மரஞ்செடி கொடி என்றால் அவனுக்கு ஆர்வமிருந்தது. அங்கெல்லாம் அழைத்துச் செல்லும் போது கட்டின பசுப்போல வருவான். (கடையைப் பார்த்தால்சிப்ஸ் வாங்கிக் கொடுஎன்று பிராணனை வாங்குவான்; அது வேறு விஷயம்) சங்கீதத்தைப் பற்றி நாங்கள் அடக்கி வாசிக்கவே நினைத்தோம். உளவியல் நிபுணரைப் பார்த்தபிறகு, ‘காஸட்டுகளைஒலிக்க விடுவதில்லை. டிவியை நாங்கள்குறிப்பாக நான்- பார்த்துக் கொண்டிருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
டிவியில் கார்ட்டூன்களைப் பார்த்துக் கொண்டிருப்பான்அந்தக் கதாபாத்திரங்கள் கூறும் வார்த்தைகளைத் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருந்ததால் மறுபடி கவலை. கார்ட்டூன் சானலை மட்டும் ரிமோட்டை வைத்துடீட்யூன்செய்து வைத்தேன். அந்த அலைவரிசையை மட்டும் முடக்குகிற மாதிரி. அது இல்லையென்று கொஞ்சநாள் கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தான். கேபிள்காரரிடம் சரி செய்யச் சொல்லி இருக்கிறோம் என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தோம். ஒருநாள் அவனே ரிமோட்டை வைத்து என்னமோ பண்ணி கார்ட்டூன் சானலை வரவழைத்துஅம்மா கார்ட்டூன்என்று குதிக்க ஆரம்பித்து விட்டான். ஆரம்பித்தது பழைய ரோதனை.
1998இல் சென்னைக்கு விருப்ப மாறுதல் வாங்கிக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தோம். மயிலாப்பூரில் ஜாகை வைத்துக் கொண்டோம். மிகச்சிறிய வீட்டின் மாடிப் போர்ஷன்மயிலாப்பூரில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் ஆதித்யாவுக்குஅட்மிஷன்வாங்கிக் கொண்டேன். அட்மிஷனில் பெரிய பிரச்னை ஏதும் இல்லை. ஒன்றாம் வகுப்புத்தானே! ஒரு சிறிய தொகையை நன்கொடையாகக் கேட்டார்கள். கொடுத்தவுடன் அட்மிஷன் ஆகிவிட்டது. சித்திரக்குளம் பக்கத்தில் பள்ளி. நாங்கள் அபிராமபுரத்தில் குடியிருந்தோம். காலை நான் அலுவலகம் செல்லும் போது கொண்டு போய்விட்டு விடுவேன். மதியம் என் மனைவி சென்று அழைத்து வந்துவிடுவாள்.
1998 இறுதியில் சைதாப்பேட்டையில் ஒரு ஃப்ளாட் வாங்கினேன். சில காரணங்களால் புதுக்கோட்டையில் நான் கட்டிய வீட்டை விற்று விட்டுச் சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒரு தரைத்தள வீட்டை வாங்கினேன். பையனின் பள்ளி மைலாப்பூர்வருட நடுவில் வேறு பள்ளிக்கு மாற்றவும் முடியாது. நான் அலுவலகம் செல்லும் போது ஆதித்யாவைப் பள்ளியில் விட்டு விட்டுச் செல்வேன். என் மனைவி ஆட்டோவில் சென்று கூட்டிக் கொண்டு வந்து விடுவாள்.
2-3-1999 அன்று நான் ஆதித்யாவையும் கூட்டிக் கொண்டு ஸ்கூட்டரில் செல்லும்போது எனக்கு ஒரு மோசமான விபத்து நேர்ந்துவிட்டது. தலையில் அடிதோள்பட்டை எலும்பு முறிவுஆதித்யாவுக்கு கொஞ்சம் அடி. எப்போதெல்லாமோ நடந்த சம்பவங்கள் எனக்கு நினைவில் இருக்கின்றன. இந்த விபத்தை மட்டும் என்னால் இன்று வரை நினைவு கூற முடியவில்லை.
கண் விழித்தபோது கடுமையான தலைவலியுடன் நான் அப்போல்லோ மருத்துவமனையில் படுத்திருந்தேன். இருபத்தோரு நாட்கள் இருந்த பின்னர் டிஸ்சார்ஜ் ஆனேன். மூனையில் காயம் ஏற்பட்டு விட்டது. நல்ல வேளையாகப் பெரிய காயம் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
ஸ்கூட்டரில் செல்லும்போது பன்றி குறுக்கே வந்திருக்கிறது. ப்ரேக் அடித்ததில் சம நிலை தடுமாறி ஸ்கூட்டரையும் போட்டுக்கொண்டு கீழே விழுந்திருக்கிறேன். அங்கிருந்த பெரிய மீசை வைத்த போக்குவரத்துத்துறை காவலர் என்னையும் ஆதித்யாவையும் கூட்டுக் கொண்டு போய் பக்கத்திலிருந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்.
அங்கே மண்டைக் காயம் என்பதால் ஆம்புலன்ஸை வரவழைத்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அப்போல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறேன். அங்கே வாசலில் ஒரு மணிநேரம் காத்திருந்த பின் ரூமில் அட்மிட் செய்திருக்கிறார்கள்.
நான் கண் விழித்ததும் கேட்ட முதல் கேள்வி, “ஆதித்யா எங்கே?”. என் மனைவி ஆதித்யா பத்திரமாக இருப்பதாகவும் என் மைத்துனி வீட்டில் விட்டு வந்திருப்பதாகவும் சொன்னவுடன்தான் எனக்கு நிம்மதியாயிற்று. போலீஸ்காரர் என் பையிலிருந்த டைரியில் நான் எழுதி வைத்திருந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டிருந்திருக்கிறார். அது என் மைத்துனியின் தொலைபேசி எண். உறவுக்காரப் பையன்அங்கே இருந்தவன்தொலைபேசியை எடுத்திருக்கிறான். செய்தியைத் தெரிந்து கொண்டதும் என் மனைவிக்குத் தெரிவித்திருக்கிறான். அவள் கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நந்தனம் பொது மருத்துமனையில் போய்த் தேடிவிட்டு பின்னர் அப்போல்லோ வந்து சேர்ந்திருக்கிறாள்.
எனக்கு விபத்து நடந்தது சுமார் ஒன்பது மணி அளவில்அவள் என்னை மருத்துமனைவில் பார்த்தது சுமார் 11-30 மணி அளவில்இந்த இடைப்பட்ட காலத்தில் ஆதித்யா என் கூடவே இருந்திருந்திருக்கிறான். ஆறு வயதுக்குழந்தைகேட்டால் பதில் சொல்லத் தெரியாது. இதை இவ்வளவு விவரிக்கக் காரணம் பையனின் பொறுமையை விளக்குவதற்காகவே.
இப்பவும் நான் நடந்த நிகழ்ச்சியை நினைக்கும் போது அது தெய்வாதீனம் என்றுதான் தோன்றுகிறது. நான் விபத்திலிருந்து மீண்டு வந்ததல்ல. ஆதித்யா தொலையாமல் என்னுடனேயே இருந்ததுதான் அது. இதில் சம்பந்தப் பட்டிருந்த அந்த முகம் தெரியாத அந்நியர்களும்தாம்.

அத்தியாயம் 10

ஆதித்யா மைலாப்பூர் பள்ளியில் படிக்கும் போதே கணக்கு ஆங்கிலம் போன்ற பாடங்கள் ஆரம்பித்து விட்டன. என் மனைவி அவன் புத்தகங்களுடனும் அவனுடனும் மன்றாட ஆரம்பித்து விட்டிருந்தாள். மன்றாடல் என்றால் தொடர்ச்சியாக ஐந்து மணி நேரம் ஆறு மணி நேரம் மன்றாடல். அவ்வப்போது அவள் பொறுமை இழந்து கத்துவாள்அவன் பொறுமையாக விடாமல் கற்றுக் கொள்ளத் துடிப்புடன் காத்திருப்பான்வீட்டிற்கு இரண்டு கதவுகள். ஒன்று படிகளுக்கு. இன்னொன்று வெளியில் இருந்த பால்கனிக்கு. படிகள் கதவை மூடி வைத்தால் பால்கனிக் கதவைத் திறந்து குட்டிச் சுவரின் மேல் ஏறி படிகளில் குதித்துக் கீழே ஓடி விடுவான். கண் குத்திப் பாம்பாகக் கண்காணிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் எங்களுக்கு உள்ளூரப் பெருமைதான்முகம் கொடுத்துப் பேசுவதும் வந்துவிடும் என்றிருந்தோம்.
சைதாப்பேட்டை வந்தவுடன் சைக்கிள் வாங்கிக் கொடுத்தோம். மும்பையிலேயே அவனுக்குப் பக்கவாட்டில் உருளைகளை வைத்திருந்த சைக்கிள் ஓட்டுவதில் பயிற்சி இருந்தது. எனவே எப்படியே முயன்று பாலன்ஸ் செய்வதில் தேர்ந்து விட்டான். அதன் பின்னர் குடியிருப்புக் காம்பவுண்டில் ஓட்டிக் கொண்டிருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாகக் காலனிக்குள் ஓட்டி வர ஆரம்பித்து விட்டான். திடீர் திடீர் என்று காணாமல் போய்விடுவான். போய்க் கண்டுபிடித்து அழைத்து வர வேண்டும். இப்படி ஓடிற்று வருடங்கள். பள்ளியைப் பொறுத்தவரை பெரிய பிரச்னை ஒன்றும் இல்லை. அடையாரில் ஒரு பள்ளிக்கு இரண்டாம் வகுப்பிலிருந்து போய் வர ஆரம்பித்திருந்தான். விசேடப் பள்ளி என்கிறார்களே அதைவிட மிகச் சிறப்பான பள்ளி. இவன் தேர்வை வற்புறுத்தலின்றி எழுத மாட்டான் என்பதால் அவனுக்கென்று ஒரு தனி கண்காணிப்பாளரைப் போட்டு எழுத வைப்பார்கள். மதிப்பெண்கள் பெரிய பிரச்னை இல்லை. ஏனென்றால் வீட்டில் என் மனைவி உருவேற்றியிருப்பாள். பொதுத் தேர்வு என்றால் முன்கூட்டியே அறைக் கண்காணிப்பாளருக்குஆதித்யாவை வற்புறுத்தி எழுதச் சொல்பாடிக் கொண்டிருப்பான்; எழுதி முடித்தவுடன் டேபிளில் சாய்ந்து சப்தமில்லாமல் பாடிக் கொண்டிருக்கச் சொல்லுஎன்று அறிவுறுத்தி விடுவார்கள். மதிப்பெண்கள் 90க்கும் குறையாமல் தான் இருக்கும் இரண்டு மணிப் பேப்பரை அரை மணியில் முடித்துவிடுவான் என்ன? வரும் வழியில் கேள்வித் தாளைத் தின்று விடுவான்! இசை நீறு பூத்த நெருப்பு மாதிரிக் கனன்று  கொண்டிருந்தது.
2002ஆம் ஆண்டு குடியிருப்பு காம்பவுண்டில் ஆதித்யா சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவன் கீழே விழுந்து விட்டான்இடது கை எலும்பு முறிவு. அவனுடன் விளையாடிக் கொண்டிருந்த பையன் ஒருவன் தள்ளி விட்டிருப்பானோ என்கிற சந்தேகம்நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நாங்கள் யாருமே அவன் பக்கத்தில் இல்லை. பின்னர் எனக்கும் என் மனைவிக்கும் தகவல் தெரிந்து மருத்துவமனை அழைத்துப் போய் மாவுக்கட்டு கட்டு போட்டுக் கொஞ்ச நாளில் சரியாகி விட்டது. இந்த சம்பவம் இரண்டு முக்கியமான மாற்றங்களுக்கு வழி வகுத்தது. ஒன்று அவன் சைக்கிள் விளையாட்டு முடிவுக்கு வந்தது. இரண்டாவது அவன் இசை ஆர்வம் கொழுந்துவிட்டுப் பிரகாசித்தது.
ஏற்கெனவே அவன் காஸட்டுகளைக் கேட்டுக் கொண்டிருந்தான். அதில் குறிப்பாக பாலமுரளி கிருஷ்ணா பாடிய பஞ்சரத்ன கீர்த்தனைகளை திருப்பித் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தான். பால முரளி கிருஷ்ணா பாடுவது கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் என்பதால் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் வார்த்தைகளைப் பிரிப்பதில் பொருள் சிதையாது பாடுவதில் கவனம் செலுத்தியவர். கை ஒடிந்து ஒரு மாதம் வீட்டில் உட்கார்ந்திருக்கிறான், பொழுது போகட்டுமே என்று டி.எஸ்.பஞ்சாபகேச ஐயர் ஸ்வரப் படுத்திய பஞ்ச ரத்ன கீர்த்தனை புத்தகத்தை வாங்கி அவன் கையில் கொடுத்தேன்தூக்கிப் போட்டுவிட்டான். ஒரு வாரம் அது நாதியற்று சோபாவில் கிடந்தது.
அவன் கவனம் அந்த புத்தகம் மீது கொஞ்சம் கொஞ்சமாகச் சென்றது. அதிலிருந்து ஸ்வரக் கோர்வைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உள் வாங்க ஆரம்பித்தான். ஏற்கெனவே சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த போது கேட்டுப் பாடிக் கொண்டிருந்த பாடல்களோடு தற்போது இதுவும் சேர்ந்து கொண்டது. பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் அனைத்தையும் மீண்டும் ஸ்வரப்படுத்தி எழுத ஆரம்பித்தான். வார்த்தைகள் அவனுக்கு மனப் பாடமாகத் தெரிந்திருந்தன. பாடல்களை மனப்பாடம் செய்வதற்கு ஒரு பிரத்யேக பாணியைப் பின்பற்றி வந்தான். வேதங்களை ஓதும் சந்தைகள் போல் பாடல்களை வகுத்துக் கொண்டு அதை ஓதிக் கொண்டேயிருப்பான். அதன் மூலமாக பாடல்களின் வார்த்தைகள் அவனுக்குக் கரதலையாக மனப்பாடம் ஆகிக் கொண்டிருந்தன. கொஞ்சம் கொஞ்சமாக மூலப் பிரதிகளில் சில திருத்தங்களையும் அவ்வப்போது செய்து கொண்டிருந்தான். நான் இரவு படுக்கச் செல்லும் பொது அவனைப் பக்கத்தில் இருத்திக் கொண்டு ஏதாவது பாடிக் கொண்டிருப்பேன் படுத்துக்கொண்டு, அவன் அந்தந்தப் பாடல்களுக்கான ஸ்வரங்களைப் பாடிக் கொண்டே வருவான். என்னை அவற்றையெல்லாம் திருப்பிப் பாடச் சொல்ல அவன் வற்புறுத்துவதுண்டு. நான் செய்யும் தவறுகளைப் பெரிதாகச் சிரித்துக் கொண்டே திருத்துவான். அஷ்டாவக்ரர் அன்னை வயிற்றில் இருந்தபோது வேதம் ஓதுவதில் தந்தை செய்கின்ற தவறுகளைக் கேட்டு உடம்பைக் கோணிக் கொள்வராம். ஆதித்யா கோணிக் கொள்ளவில்லை அவ்வளவுதான். இப்படி ஒரு புத்தகத்தில் ஆரம்பித்து ஒவ்வொன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
எனக்குப் பெரிய ஆச்சர்யம்தான். பஞ்ச ரத்ன கீர்த்தனையில் எனக்குஜகதா நந்தகாரகாஎன்கிற பாடலில் முக்கால்வாசி பாடம். அதை மிகவும் கண்டிப்புடன் பாடம் நடத்திய ஒருவரிடம் கற்றுக் கொண்டேன். அவரின் கெடுபிடி தாங்க முடியாமல்தப்பித்தோம் பிழைத்தோம்என்று ஓடிவந்துவிட்டேன். அதில் இப்பவும் கடைசிச் சரணமானஅகணித குண கணதவிர்த்து மற்ற சரணங்கள் வரை பாடுவேன். புத்தகத்தைப் பார்த்துத்தான்இவன் இப்படி அநாயாசமாகப் பாடுகிறானே என்று ஆச்சர்யம்தான். மும்பையில் இருந்தபோது, பைரவி ராக அட தாள வர்ணம் ஒரு மாமியிடம் கற்றுக் கொண்டேன். அதுவும் அப்படித்தான். பாடலைப் புத்தகத்தைப் பார்த்துப் பாடி விடுவேன்தாளம் அங்கங்கே பிசிறு அடிக்கும்ஆதித்யா அதையும் மிக அநாயாசமாகப் பாடிக் கொண்டிருந்தான்என் வீட்டிற்குப் பக்கத்தில் பிள்ளையார் கோயில் உண்டு. அங்கே போய் உட்கார்ந்து கொண்டு பாடிக் கொண்டிருப்பான். காலனியில் எல்லோருக்கும் அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து வந்ததால் பெரிய வம்பு ஒன்றும் வரவில்லை. என் குடியிருப்பில் அவன் வயதை ஒத்த பையனிருந்த வீட்டார் பக்கத்திலேயே சொந்தமாகஃபிளாட்வாங்கிக் கொண்டு போனார்கள். ஆதித்யா அவர்கள் வீட்டிற்கு அந்தப் பையனைப் பார்ப்பதற்காக தினமும் செல்லுவான். சென்று அங்கு போய் உட்கார்ந்து கொண்டு பாடிக் கொண்டிருப்பான்.
இசை வகுப்புகளுக்கு அவ்வப்போது முயன்று கொண்டிருந்தோம். மைலாப்பூரில் வாடகை வீட்டில் இருந்தபோது, ஒரு சில வகுப்புகளுக்கு முயன்றோம். முதலில் சங்கீதப் புத்தகங்களை ஸ்வரப் படுத்திய டிஎஸ் பஞ்சாப கேச ஐயர் தலைமை ஏற்று நடத்திய ஒரு பள்ளிக்குக் கூட்டிச் சென்றோம். அவர் அப்போது இருந்தார்வயதானவர்ஆதித்யாவைபாட்டுப் பாடு ஏதாவதுஎன்றார். அவன் நீளமான எதையோ ஆரம்பித்துப் பாடிக் கொண்டிருந்தவன் அவர்போதும்என்ற போதும் நிறுத்தாமல் முழுப் பாடலையும் பாடிவிட்டுத்தான் நிறுத்தினான். அவர் பெரிதாகச் சிரித்துவிட்டு, “கொஞ்ச நாள் போகட்டும்’’ என்று சொல்லிவிட்டார். அதற்குப் பின் ஒரு வயதான மாமியிடம் போனோம் பற்கள் கிடையாது. கையில் நட்டுவனார்கள் வைத்திருக்கும் பிரம்பு ஒன்றை வைத்துக் கட்டையில் தாளம் போட்டுக் கொண்டே பாடி உருவேற்றபவர். ஒரு பிரபல வித்வானின் அத்தை. அவர் ஸ்வராவளியை ஆரம்பித்தார். ஆதித்யாவிற்கு வேடிக்கை தாங்க முடியவில்லை. ஆடிக் கொண்டே அவர் சொல்லச் சொல்ல பாடிக் கொண்டிருந்தபோது அவர்கள் வீட்டுக் குழந்தை தவழ்ந்து வந்து பார்த்துவிட்டு மீண்டும் தவழ்ந்து உள்சென்றது. இதைப் பார்த்த ஆதித்யா பாடிக் கொண்டிருந்தவன், இவனும் தவழ்ந்து கொண்டு குழந்தையின் பின்னால் சென்று விட்டான்.
அந்த மாமியின் சாளரக் கண்ணாடிக்குள் தெரிந்த கண்களின் திகைப்பை என்னால் மறக்க முடியவில்லை. “ஒருஸ்பார்க்தெரியறது; ஆனா கொஞ்சம்எக்ஸென்ட்ரிக்காஇருப்பான் போலிருக்கேஎன்றார் சந்தேகமாக. ஆக அந்த ஒரு வகுப்புடன் அது முடிவுக்கு வந்துவிட்டது.
பின்னர் அங்கே இங்கே விசாரித்து வேறொரு மாமியிடம் கூட்டிக் கொண்டு போனோம். வயதானவர்பாலக்காட்டுத் தமிழர்கள் போல் தமிழ் பேசுவார். ஃபீஸ் ஒன்றும் பிரமாதமாகக் கிடையாது. சிரித்த முகமும் கனிந்த சொற்களும் உள்ளவர்அநாவசியப் பேச்சு கிடையாது. யாராவது பிடிக்காத எதையாவது சொன்னால் பதில் சொல்லாமல் ஒரு புன்சிரிப்புடன் நகர்ந்துவிடுவார். ‘பாட்ச் பாட்சாகநடத்திக் கொண்டிருந்தார். எல்லாம் பெண் குழந்தைகள். பாவாடை சட்டையிலிருந்து தாவணி போட்ட குழந்தைகள் வரைக் கற்றுக் கொண்டு போகும். பெரியவர்கள் ஒன்றிரண்டு பேரும் கற்றும் கொண்டிருந்தார்கள். நல்ல வித்வத் உள்ளவர். பாடாந்தரம் தரம் வாய்ந்தது. மழுப்பல் இருக்காது. உதரணமாக கரகப்ரியாவில் ஒரு பாடல் ஆரம்பிக்கிறார் என்றால் முதலில் கரகரப்பிரியாவில் அலங்காரத்தைச் சொல்லிக் கொடுப்பார். ராக லட்சணங்கள் புரிபடுவதற்கும் ஸ்வர ஞானம் வருவதற்கும் அலங்காரம் ஒரு முக்கிய அம்சம் என்பார்கள். அது பாடம் ஆன பிறகுதான் பாடலையே ஆரம்பிப்பார். அவருக்குக் கச்சேரி எல்லாம் பொருட்டு கிடையாது. “நானும் என் குழந்தைகளும்என்பார். “எனக்குத் தெரிஞ்சதை நான் சொல்லிக் கொடுக்கறேன். கேட்டேளா?” என்பார். எல்லா மொழிப் பாடல்களையும் கற்றுத் தருவார். நாங்கள் குடும்பமாக ஸ்கூட்டரில் மாமியின் வகுப்புகளுக்குச் சென்று வருவோம். மைலாப்பூரில் கடற்கரையை ஒட்டிய இடம்எல்லாம் தனித்தனி பங்களாக்கள்நான் பார்த்தவரை அவர்தான் உண்மையாக உழைத்துப் பாடல்கள் கற்பித்தவர் எனக்குத் தெரிந்தவரை.
அவர் ஆதித்யாவின் திறமையைக் கணித்தாரே ஒழிய அதைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ‘குழந்தைதானேவளரட்டும் பார்க்கலாம்என்று தானிருந்தார். நாங்கள் ஏதாவது கேட்டால் கூட, “! பாடறானே!” என்று சொல்லிவிட்டு அதைப் பற்றிப் பெரிதாகப் பிரஸ்தாபிக்காமல் இருந்துவிடுவார். ‘புகழ்தலும் இலமே இகழ்தலும் இலமேபாணிஸ்வபாவம்!
நண்பரின் வீட்டிற்குச் செல்வான் என்று சொன்னேனே அந்த நண்பருக்கு எதிர் குடியிருப்பில் ஒரு நாளைக்கு ஆதித்யா நுழைந்திருக்கிறான். நுழைந்தவன் அவர்கள் எல்லோரும் திடுக்குற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்கள் வீட்டு ஊஞ்சலில் அமர்ந்தவாறு பாட ஆரம்பித்திருக்கிறான். அவர்கள் பிரமிப்பு அகலுவதற்குள் முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டான். பின்னர்தான் எங்களுக்கு அறிமுகமான எதிர் வீட்டுக்காரர்களிடம் விசாரித்திருக்கிறார்கள். ஆந்த வீட்டு அம்மையார், அவர் கணவர், மாமனார், மாமியார் எல்லோருமே சங்கீத நாட்டமுள்ளவர்கள். அந்த அம்மையார் வீணை வாசிப்பார்.
அவர் பின்னாளில் என்னிடம் கூறுவார்: “ஆதித்யா வருவான். எங்காத்துக்கு வர்றானா எதித்தாத்துக்குப் போறானான்னு பார்த்துண்டேயிருப்போம்பேசிட முடியாதுபேசினா ஓடிப் போயிடுவான்எல்லாம்கப்சிப்னு பாத்துண்டிருப்போம். உட்கார்ந்து பாட ஆரம்பிச்சான்னா அடுத்த அரை மணி கந்தர்வ கானம்தான். முடிச்சா உடனே ஓடிடுவான்.”
அவர் கணவர் இன்று என்னை பார்த்தாலும் என்னைக் கேட்கும் முதல் கேள்வி: “சார்! ஸ்வாமிகள் எப்படியிருக்கார்?”
இதைத் தவிர சங்கீதத்தில் பெரிய பிரேமையுள்ள வீணை வாசிக்கத் தெரிந்த இன்னொரு பெண்மணி வீட்டிற்கும் ஆதித்யா செல்வதுண்டு. எங்கள் குடியிருப்புத் தொகுப்பிற்கு எதித்தாற்போல் அவர்கள் குடியிருப்புத் தொகுப்பு. அவர் ஆதித்யா வந்தாலே வீணையும் கையுமாக உட்கார்ந்து விடுவார். சங்கீத சம்பாஷணை ஆரம்பித்து விடும். அவன் பாட்டிற்கு ஒன்றிரண்டு முறை அபிநயம் பிடித்ததாகக்கூடச் சொல்லியிருக்கிறார்.
அவர் பின்னாளில் ஆதித்யா அவர்கள் வீட்டிற்குச் செல்வது குறைந்தபோது, எங்களிடம் வருத்தமாக ஒருமுறை சொன்னார்:
அப்பெல்லாம் ஆதித்யா எங்காத்துக்கு வந்துண்டிருப்பான். அப்ப எங்காத்தில ஐஸ்வர்யம் பொங்கித்து…”
எனக்கு பாண்டிச்சேரி மாறுதல் வந்தது.

 நன்றி : சொல்வனம் 
https://solvanam.com/?p=50763

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை I

இதை உலகம் நம்பப் போகிறதா என்கிற நெட்டுயிர்ப்பு எழுந்து கொண்டேயிருந்ததால் இந்தக் கதையை நான் இத்தனை நாளும் எழுதப் புகவில்லை. அந்த நெட்டுயிர்ப்பையும் மீறி நான் இப்போது எழுத முனையக் காரணம் இந்தக் கதையையும் இதன் காரண கர்த்தனாகிய என் மகனையும் உலகம் தெரிந்து கொள்ளாமல் இருந்துவிடப் போகிறதே என்கிற ஆதங்கம்தான்.
இதை எழுதிக் கொண்டிருக்கும் போது தொலைக்காட்சிப் பெட்டியில் ஒரு அம்மையார் வாசிக்கின்ற வீணையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கல்யாணியில் ‘நிதி சால சுகமா’ வாசித்துவிட்டு மத்யமாவதியில்  “கற்பகமே” வாசித்துக் கொண்டிருக்கிறார் – என் மகன் ஆதித்யா பாடிய கல்யாணி நினைவுக்கு வருகிறது. அப்போது அவனுக்குப் பத்து வயதிருக்கலாம். “தல்லி நின்னு நேர” என்கிற கல்யாணி ராகப் பாட்டை அநாயாசமாகப் பாடினான். அப்போதுதான் அப்பாடலை முதன் முதலில் கேட்கிறேன். அவன் அந்தப் பாட்டை யார் பாடிக் கேட்டான் எப்போது கற்றுக் கொண்டான் என்பதெல்லாம் எனக்குப் புரியாத புதிர்தான் இன்று வரை. அந்தக் கச்சேரியில் அவன் பாடிய பாடல்களை அதற்கு முன் நான் கேட்டதில்லை. அப்போதெல்லாம் ‘அவன் பாடும்போது அந்தப் பாட்டு உண்மையிலேயே வாக்கேயக்காரர்களால் பாடல் பெற்றதா அல்லது இவன் இட்டுக் கட்டிப் பாடுகிறானா’ என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு.
இவனுடைய பாடல் தொகுப்பைச் சொல்ல வேண்டுமென்றால் இவன் எப்படி இவற்றைக் கற்றுக் கொண்டான் என்று சொல்ல வேண்டும். அதற்கு முன் இவன் வளர்ந்த விதத்தைச் சொல்ல வேண்டும். அதற்கு இவன் பிறந்த சூழ்நிலையைச் சொல்ல வேண்டும். அதற்கு என் மனைவியைப் பற்றிச் சொல்ல வேண்டும். அவளுடைய பெற்றோர் பற்றியும் சொல்ல வேண்டும். அதனூடே என்னைப் பற்றிச் சொல்ல வேண்டும். என்னைப் பற்றிச் சொல்வதென்றால் என் தாய் தந்தையரைப் பற்றியும் என் சகோதர சகோதரிகளைப் பற்றியும் சொல்லத்தான் வேண்டும்.
இதை இப்படிப் பார்க்கும்போது நான் யார் என்கிற கேள்வி எழுகிறது. ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்குத் தாங்களே எழுப்பிக் கொண்டிருக்கிற கேள்வி போன்றதல்ல இது. நான் என்றால் ஒரு நபரையும் தாண்டி ஒரு மகன் – ஒரு சகோதரன் – ஒரு கணவன் – ஒரு தகப்பன் – ஒரு உத்யோகஸ்தன் – ஒரு நண்பன் – ஒரு பகைவன் – ஒரு பொது ஜனம் – சமூகத்தில் அங்கம் வகிக்கின்ற ஒரு மனிதன் என்கிற எல்லாமும் கலந்ததுதான் நான். இதில் காமம், ஆசை, நட்பு, பெருந்தன்மை, பொறாமை, கோபம், ஆற்றாமை, இயலாமை, பகை, துரோகம், அன்பு, ஆளுமை, கல்வி, ஒழுக்கம், ஒழுக்கமீறல், பழியுணர்ச்சி, வஞ்சகம் எல்லாமும் கலந்திருக்கின்றன. எல்லாவற்றிலும் கலந்து கொண்டு அதே சமயத்தில் ஒரு பார்வையாளனாகவும் நாமெல்லோரும் வாழ்க்கையை அவதானிக்கிறோம் என்றுதான் தோன்றுகிறது.
இப்படிப் பார்க்கும் போது ஒரு மனிதனைக் கட்டமைக்கின்ற கூறுகள் அவனிடம் மட்டுமல்லாது அவனைச் சுற்றியுள்ள உறவு முறையும் குடும்பமும் சமூகம் சார்ந்த உலகமுமாகத்தான் இருக்கின்றன. ஜெயகாந்தன் பாணியில் இதைச் சொல்வதென்றால் ஒரு மனிதன் – வீடு – உலகம் என்றுதான் இதைச் சொல்ல வேண்டும்.

2

“டாக்டர்! இந்தப் பிள்ளை பேசவே மாட்டேங்கறது டாக்டர்!” தன்னைப் பரிசோதிக்க வந்தருந்த டாக்டரிடம் என் தாயார் பிரலாபித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ஆதித்யாவுக்கு வயது மூன்று முடிந்து நான்கு நடந்து கொண்டிருந்தது. மூன்று வயது முடிந்திருந்தாலும் இது எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பெரிய விஷயமாகப் படவே இல்லை. நான் அப்போதெல்லாம் பாடிக் கொண்டேயிருப்பேன். பாடிய வாய் மூடாது. நான் ஐந்து வருடங்கள் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்ததால் சுமார் நூறு கீர்த்தனைகள் போலப் பாடம் எனக்கு. என் மனைவி மும்பையைச் சேர்ந்தவள் – சில தலைமுறைக்கு முன் மும்பையில் குடியேறிய தமிழ்க் குடும்பம் – தெய்வ சங்கல்பத்தாலா – விதி வசத்தாலா – எங்கள் திருமணம் நிகழ்ந்தது.
ஆதித்யா பிறந்தது 1992ல். என் மனைவி பிரசவத்திற்காக மும்பை சென்று குழந்தை பிறந்து ஒரு எட்டு ஒன்பது மாதங்கள் கழித்துத்தான் என் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்தாள். அவள் வந்தபோது ஆதித்யா நல்ல அழகான குழந்தை. எல்லாவற்றையும் நிதானமாய் கவனித்துக் கொண்டிருப்பான் – வழக்கமாய் அந்த வயதுக் குழந்தைகளுக்கு இருக்கும் துள்ளலோ பெரிய விளையாட்டுத் தனங்களோ அவனிடம் இல்லை. “உன் பிள்ளை நிதானமாக இருப்பாண்டா!” என்பார் என் தந்தை.
குழந்தையை என் அன்னை முன் பாயில் கிடத்தியிருப்பாள் என் மனைவி. குழந்தையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பார் என் அன்னை. ஏழு குழந்தைகள் பெற்றவர். அதில் நிறைய பறி கொடுத்தவர் – வாழ்க்கையில் கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு நிறைய துன்பப்பட்டவர் – அனுபவப்பட்டவர். “உன் பிள்ளை பாயில் இருக்கிற வர்ணத்தையெல்லாம் கவனிக்கறதுடா” என்பார். வித்யாசமான குழந்தையாக இருக்கிறது என்பதை என் பெற்றோர் உணர்ந்தார்களே தவிர எந்த மாதிரிக் குழந்தை என்று புரிந்து கொள்ளத் தடுமாறினார்கள் என்றுதான் கூறவேண்டும்.
என் மனைவி ஆதித்யாவுக்கு ஃபீடிங் பாட்டிலில் பால் கொடுப்பாள். அதை அவன் கையில் கொடுத்துவிட்டால் போதும். அமைதியாகக் கால் மேல் கால் போட்டுப் படுத்துக் கொண்டு பாலைக் குடிப்பான். என் மனைவி அந்தப் பாலில் ஏலக்காயைப் பொடி செய்து கலப்பது வழக்கம். ஆதித்யா பாலைக் குடித்துக் கொண்டிருக்கும் போது வாயில் ஏலக்காய்த் தோல் தட்டுப்பட்டால் நிதானமாக பாட்டிலில் இருந்து உறிஞ்சுவதை நிறுத்தி வாயில் சிக்கியிருக்கும் தோலைக் கையால் எடுத்துத் தூக்கியெறிந்துவிட்டுப் பின்னர் பால் குடிப்பதைத் தொடருவான். இது மிகவும் வேடிக்கையாக இருக்கும் எங்களுக்கு. ஒரு வயது நிரம்பாத குழந்தைக்கு இவ்வளவு விபரம் தெரிகிறதே என்று வியப்பாக இருக்கும்.
இதுபோல் வளர்ந்த குழந்தை சாதாரணமாய் குழந்கைள் செய்வது போன்ற குப்புறுத்திக் கொள்வது தவழ்வது போன்றவற்றைச் செய்யவில்லை. அதது காலாகாலத்தில் நடக்க வேண்டுமென்பார்களே அது நடக்கவில்லை. இந்த சமயத்தில் என் மனைவியைப் பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். எப்போதும் வேலை செய்து கொண்டிருக்கும் குணம். ஒரு நிமிடம் கூடச் சும்மா இருக்க முடியாது அவளால். எப்போதும் மனக்குறைகள் – மனத் தாங்கல்கள் – தேவையில்லாத மனக்கிலேசங்கள். நடக்க ஆரம்பிக்கிற வயதில் குழந்தை படுத்துக் கொண்டிருக்கிறது – தவழக்கூட ஆரம்பிக்கவில்லை. சும்மா இருக்க முடியுமா அவளால்? பிரலாபித்துத் தள்ளி விட்டாள்.
எனக்கு இந்த சமயத்தில் இதெல்லாம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. அப்போதெல்லாம் பாட்டு பாட்டு பாட்டுத்தான். ஆதித்யாவிடம் எப்போதும் பாடிக் கொண்டிருப்பேன். ஆதித்யா தூங்குவது எப்போதும் என் பாட்டைக் கேட்டு விட்டுதான். ஒரு பாட்டு முடிந்தவுடன் அவன் வாயிலிருந்து “ம்…ம்…” என்று ஒரு சத்தம் கிளம்பும். அதன் பொருள் அடுத்த பாட்டைப் பாடு என்பதுதான். சில ராகங்களைப் பாடும்போது அவன் விக்கி விக்கி அழுவதுண்டு. அப்போதெல்லாம் எனக்கு பயமாய் இருக்கும். பாட்டை நிறுத்திவிடுவேன். அவனும் அழுகையை நிறுத்துவான்.
அவன் இப்படியாக வளர்ந்து வந்து முதல் வருடப் பூர்த்தியில் அவனுக்குக் காது குத்த முடிவு செய்தேன். காது குத்து வைபவத்தில் பிரமாதமாக ஒன்றும் நிகழவில்லை. என் மூத்த சகோதரன் காது குத்தும்போது ஆதித்யாவைத் தன் மடியில் இருத்திக் கொண்டார். காது குத்து எந்தக் குழந்தைக்குத்தான் பிடிக்கும்? வைபவம் முடிந்த பின்னும் ஆதித்யா என் அண்ணன் மடியில் இருந்ததை மறக்கவேயில்லை. அவர்தான் அதற்குக் காரணம் என்று நினைத்து விட்டான் போலிருக்கிறது. அவர் முகத்தை அதன் பின் அவன் பார்க்கவேயில்லை. “என் மேல விரோதம் வந்துடுத்துடா உன் பிள்ளைக்கு” என்றார் என் அண்ணன் சிறு புன்னகையுடன்.

3

குழந்தை தவழவில்லை எழுந்து நிற்கவில்லை என்கிற விஷயம் பூதாகாரமாக எழுந்து கொண்டிருந்தது. என் மனைவிக்கு ‘டென்ஷன்’ தாங்க முடியவில்லை. எனக்கா பிடுங்கல் தாங்க முடியவில்லை. அங்கே கேட்டு இங்கே கேட்டுக் கடைசியில் சைக்கிள் கடையில் போய் ‘வாக்கர்’ ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். அந்த வாக்கரைப் பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் குழந்தை. ஒருநாள் நடந்து கொண்டிருந்தவன் அப்படியே போய்ப் படியில் விழுந்துவிட்டான். வாயில் ரத்தம். நல்ல வேளையாக ஒன்றும் ஆகவில்லை.
அதிலிருந்து அவன் நடை பழகுவதைக் கண்காணிக்க வேண்டியிருந்தது. கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொள்கிறானோ என்று தோன்றியது. அவன் தன் போக்கில் இருந்து கொண்டு தனியுலகில் சஞ்சரிப்பதாய்த் தோன்றியது. அப்போதெல்லாம் அவனை ஓரளவு கட்டுக்குள் கொண்ட வந்தது இசையும் ஸ்லோகங்களும் மட்டுமே. இசை கேட்டால் மகுடி முன் நாகம் போல மயங்கி விடுவான். அவனுக்கு இசையிலும் ஸ்லோகங்களிலும் ஈர்ப்பு பிறந்த பின்தான் ஆரம்பித்தது என்று சொல்ல முடியாது என்றுதான் இப்போது எண்ணிப் பார்க்கையில் தோன்றுகிறது.
இதை விளக்குவதற்கு அவன் பிறந்த சூழ்நிலைகளையும் என் குடும்ப நிலவரங்களையும் ஓரளவு கூறுவது உதவும் என்று நினைக்கிறேன். எனக்குத் திருமணம் என் மனைவியுடன் நடந்ததே தற்செயலாகத்தான் – அது தற்செயலா தெய்வாதீனமா கூற முடியாது. என் மனைவி குடும்பத்தினர் மும்பையிலிருந்து க்ஷேத்ராடனம் சென்றுவிட்டுத் திருச்சியில் என் மனைவியின் அத்தை வீட்டில் தங்கியிருந்தனர். அவர்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருந்தவர் என் அண்ணனின் நண்பர் – அவர் அவர்களிடம் போய் என்னைப் பற்றிப் பிரஸ்தாபிக்க அவர்களும் வந்த இடத்தில் பையனைப் பார்த்து விட்டுப் போய்விடலாம் என்று தீர்மானமாகி பெண் பார்க்கும் படலம் ஏற்பாடாகியது. அப்போது என் தந்தைக்கும் தாய்க்கும் முதிர்ந்த வயது. சகலத்தையும் பார்த்து சுக துக்கங்களை அனுபவித்த அவர்கள் என்ன மாதிரி மனநிலையில் இருந்திருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.
இதை எழுதும்போது “என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை” என்கிற நீலமணியில் அமைந்த பாடல் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மதுரை சோமு இப்பாடலை மனமுருகப் பாடுவார். என் பெற்றோர் பாடுவதற்கு மிகவும் பொருத்தமான பாடல். உலகில் சாதாரண மனிதர்கள் பட்ட கஷ்டங்கைள விட அதிகக் கஷ்டங்கள் அனுவித்தவர்கள் அவர்கள். ஒரே பெண்ணை சாகக் கொடுத்துவிட்டு மனப் பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்ட என் சகோதரனுடன் வேதனையை அனுபவித்து வாழ்ந்து வருபவர்கள். அவர்களின் அந்த நிலையிலும் வயதிலும் என் திருமணம் முக்கியத்துவம் பெறாது இருந்தததில் பெரிய ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
கிட்டத்தட்ட இதே மனநிலையில் தான் அவர்கள் குடும்பமும் இருந்தது. மூத்த பெண் திருமணமாகி இரண்டாவது பெண் (என் மனைவி) திருமணத்துக்கு இருந்த நிலையில் என் மாமனார் ஓய்வு பெற்றிருந்த வேளை. பிள்ளை படித்துக் கொண்டிருந்தான். வேலைக்குப் போகவில்லை. என் மாமனாரும் தனியார் துறையில் பணியாற்றி வந்தவர் – ஓய்வூதியம் கிடையாது. இந்த சமயத்தில் இரண்டாவது பெண் திருமணச் சுமை அவரை அழுத்திக் கொண்டிருந்தது. எங்கள் திருமணம் நடந்தது. ஏதோ தானோவென்றுதான் நடந்தது. இது நடந்தபோது நடந்த ஒரு சோககரமான நிகழ்வைப் பின்னர் கூறலாம் என்று நினைக்கிறேன்.
வயதான பெற்றோருடன் கூட்டுக் குடும்பம். புதிதாக மணமாகிவரும் எந்தப் பெண்ணுக்கும் இது சவாலாகத்தான் அமையும். இது போதாதென்று மும்பை போன்ற பெரிய நகரத்திலிருந்து வந்து சிறிய ஊரில் வாழ்க்கைப் பட்டவள் என் மனைவி. காலை எழுந்திருந்ததிலிருந்து மாலை வரை ஓய்வில்லாத வேலை. என் அன்னை அச்சமயம் காலை உடைத்துக் கொண்டு விட்டார். படுத்த படுக்கையாகிவிட்டார். இது போன்ற சமயங்களில் பெண்களின் ஆகாத்தியத்திற்கு பலியாகிறவர்கள் அவர் தம் கணவர் தாமே! இது எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்துக் கொண்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
இந்த சமயத்தில் இருக்கின்ற பிரச்னைகள் போதாதென்று என் மனைவிக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. அதுவரை என் குடும்பத்தையும் என் வீட்டுச் சூழ்நிலையையும் சகிக்கப்பழகி வந்த அவள் மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டது. மிகவும் சோதனையான காலம். என்ன செய்வதென்று புரியாத நிலையில் திருப்பதி சென்று வரலாம் என்று கிளம்பினோம். திருப்பதி சென்று ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி காஞ்சிபுரம் சென்றோம். காமாட்சி அம்மனை தரிசனம் செய்துவிட்டு சங்கரமடம் சென்று பரமாச்சாரியாரைத் தரிசனம் செய்தோம்.

4

பரமாச்சாரியார் என்று அழைக்கப்பட்ட பெரிய சங்கராச்சாரியாரைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே அவரைப் பற்றி எப்படி எழுதப் போகிறேன் என்கிற மலைப்பும் ஆயாசமும் ஏற்படுகின்றன. என் தாய் மிகவும் பக்தியும் ஆன்மீகப் பற்றுதலும் உள்ளவர். ஆசார அநுஷ்டானங்களில் மிகவும் நம்பிக்கை உள்ளவர். என் தந்தைக்கு எதுவும் பொருட்டு கிடையாது. நம்பிக்கை கிடையாது என்று அர்த்தமில்லை. மரியாதை உண்டு. ஆனால் கட்டிக் கொண்டு அழுகிற வழக்கம் கிடையாது. ஆனால் மிகவும் ஒழுக்க சீலர். நேரான பேச்சும் சீரான அணுகுமுறையும் கொண்டவர்.
அதனால் என் அன்னைக்கு அதீத ஆர்வமிருந்தாலும் தந்தையார் முனைப்பு காட்டாததால் மிகவும் இதிலெல்லாம் இறங்க முடியாத நிலை. ஊருக்கு சங்கராச்சாரியார் வந்தால் போய்ப் பார்ப்பார். தேடிப் போயெல்லாம் பார்த்ததில்லை. மற்றபடி என் தந்தை இதற்கெல்லாம் பெரிய மறுப்பும் சொன்னதில்லை என்பதையும் சொல்லித்தானாக வேண்டும்.
இதைத் தவிர சங்கராச்சாரியார் சம்பந்தப்பட்ட என் குடும்ப நிகழ்ச்சி ஒன்றும் உண்டு. என் பாட்டி வழியில் உள்ள பெரிய தாத்தா பெரிய வேத விற்பன்னர் – திருவிசரநல்லூர் என்கிற ஊர்க்காரர் – ராமசுப்பா சாஸ்த்ரிகள் என்று பெயர் – இன்றைக்கு கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன மீமாம்ஸம் என்கிற ஒரு ஆன்மீக வழித் தேடலில் கரை கண்டவராம். அவர் ஒருமுறை சங்கராச்சாரியார் பல்லக்கில் வந்தபோது, “பல்லக்கில் ஏறிய சாமியாரைப் பார்க்க மாட்டேன்” என்று பிடிவாதமாக இருந்து விட்டாராம். எங்கள் குடும்ப வகைகளில் பெரிதாகப் பேசிக் கொள்வார்கள். இப்படிப்பட்ட பின்னணி இருந்த போதி£லும் எங்கள் குடும்பம் காஞ்சி மடத்துக்குக்  கட்டுப்பட்ட, சங்கராச்சாரியாரைக் குல குரு என்று ஏற்றுக் கொண்ட, குடும்பம்தான். திருமணப் பத்திரிக்கைகளில் “காஞ்சி சங்கராச்சாரியார் அநுக்ரஹத்துடனும்…” என்றுதான் அச்சடிக்கிற வழக்கம்.
மனப் பிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டிருந்த என் சகோதரன் அவர் அண்மையிலேயே காஞ்சி மடத்தில் கிட்டத்தட்ட இரண்டு மூன்று மாதங்கள் தங்கியிருந்தான். ஒரு நாளைக்கு திடீரென்று ‘பையனைக் கூட்டிக் கொண்டு போய் விடும்படித்’ தந்தி வந்தது என் தந்தைக்கு. என் தந்தை போய்க் கூட்டிக் கொண்டு வந்து விட்டார். அவன் வியாதி சொஸ்தமாகாமலேயே பின்னால் மிகப் பரிதாபமாய்  இறந்து போனான். அவன் கதையை விவரிப்பதென்றால் அதைத் தனியாகத் தான் எழுத வேண்டும்.
இதை சொல்லும் போது சங்கராச்சாரியார் மேலேயோ சங்கர மடத்தின் மேலேயோ எள்ளளவும் மரியாதை குறையவில்லை என் பெற்றோருக்கு. அவர்கள் படும் கஷ்டங்களுக்கு யார் மீதும் அவர்கள் பழி சுமத்த விரும்பவில்லை. தங்கள் வினைப் பயன் என்று இருந்து விட்டார்கள்.
என் வரையில் கூட சங்கராச்சாரியார் தொடர்பான சிறு நிகழ்ச்சி உண்டு. எனக்கு அப்போது மூன்று வயதிருக்கலாம். சங்கராச்சாரியார் வந்திருக்கிறார் என்று என்னையும் தூக்கிக் கொண்டு என் அன்னை போயிருக்கிறார். அந்த இடம் எங்களூர் பழைய அரண்மனை. என் வீட்டிலிருந்து சுமார் 3 கி.மீ. இருக்கலாம். அங்கு கூட்டத்தில் நான் காணாமல் போய் விட்டேனாம். தேடு தேடு என்று தேடிக் கொண்டிருந்திருக்கிறார்கள் – அகப்படவில்லை. அலமலந்து போய் என்ன செய்வதென்று அறியாது என் அன்னை வீடு திரும்பியதும் திகைத்துப் போனாராம். வீட்டில் நான் இருந்திருக்கிறேன். மூன்று வயதுக் குழந்தை எப்படித் தனியாக நடந்து வீடு திரும்பியது என்று எல்லோருக்கும் ஆச்சரியம். இதை ரொம்ப நாட்கள் என் குடும்பத்தினர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
நான் வளர்ந்து ஆளாகி படித்து வேலைக்குப் போன பின்தான் சங்கராச்சாரியாரைப் பார்க்கக் காஞ்சிபுரத்துக்குப் போனேன். அப்போதெல்லாம் அவர் யாருடனும் பேசாமல் மௌனத்திலேயே இருந்தார். ஒரு கண்ணில் பூ விழுந்துவிட்டது. தடுமாறிய படியே இரண்டு பேர் வழி நடத்த நடந்து வந்தார். எந்திரத் தனமாக கையை உயர்த்தி ஆசி வழங்கினார். கூட இருந்தவர்கள் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று விசாரித்து உரத்து அவரிடம் சொல்லிக் கொண்டே வந்தார்கள். அவர் ஏதோ மோனத்தில் இருந்ததாகத்தான் பட்டது. யாரையும் குறிப்பிட்டு கவனிப்பதாய்த் தெரியவில்லை. ஏதோ பொதுப் படையாகப் பார்த்துக் கொண்டிருந்தது போலதான் தெரிந்தது. தெய்வத்தின் குரல் உரைகளைச் செய்த ஞானப் பிழம்பு போலில்லாமல் சாதாரணமாய் நாம் வீடுகளில் பார்க்கும் வயதானவர்கள் போல்தான் இருந்தார். வெளியே அற்புதங்கள் அவர் நடத்துவதாய்க் கட்டமைத்திருந்த பிம்பத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாது தானிருந்தது அவர் தோற்றம்.
அதன்பின்னர் இப்போதுதான் குடும்பத்துடன் விஜயம் செய்கிறேன். அப்போது அவரை சந்நிதியில் கடவுளை வைத்திருப்பது போல் ஒரு சிறிய அறையில் பிரம்புச் சேரில் உட்கார்த்தி வைத்திருந்தார்கள். அவர் காலை குந்திட்டவாறு உட்கார்ந்திருந்தார். பெரிய பூதக் கண்ணாடி போன்ற சாளேஸ்வரக் கண்ணாடிகளை அணிந்திருந்தார். யாரையும் குறிப்பிட்டுப் பார்க்காமல் எங்கோ வெறித்தவாறு அமர்ந்திருந்தார். என் மனதில் என் பெற்றோரும் குடும்பத்தினரும் – பட்ட – படுகின்ற கஷ்டங்கள் நிழற்படமாய் ஓடிக் கொண்டிருந்தன. உலகில் எல்லோருக்கும் சுக துக்கங்கள் இருக்கின்றன. அவை சாதாரணமான சுகதுக்கங்கள். பணக்கஷ்டமாக இருக்கலாம்; அல்லது வியாதியாக இருக்கலாம். எல்லாக் குடும்பங்களும் ஒரு சந்தர்ப்பத்தில் இவற்றிலெல்லாம் மீண்டு எழுந்து விடுகின்றன. என் வீட்டைப் பொறுத்தமட்டில் இது நடக்கவில்லை.
ஏன் ஏன் என்று அவரிடம் மானசீகமாய்க் கேள்வி எழுப்பிக் கொண்டிருநத்து என் மனது. எல்லோரும் நன்றாக இருக்கிறார்களே என் பெற்றோர் மட்டும் இதுபோன்ற துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறார்களே என்ன காரணம் என்று அவரிடம தன்னிச்சையாக வினவிக் கொண்டிருந்தேன். அவரைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் உண்மையென்றால் என் கேள்விகள் அவரை நிச்சயம் சென்றடைந்திருக்க வேண்டும். எனக்குத் தெரியவில்லை; ஏனென்றால் அது அவரைச் சென்றடைந்ததா என்கிற சமிக்ஞை அவரிடமிருந்து மற்றவர்களுக்குக் கிடைத்தது போல் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் என் ஒரு வழிப்பாதை சம்பாஷனை அவருடன் நடந்து கொண்டிருந்தது. நான் மெதுவாக ‘முந்து வெனு காயிரு பிரக்கலதோடை’ என்கிற தர்பார் ராக தியாகராஜ கீர்த்தனையைப் பாட ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என் குரல் கனிந்து காற்றில் வியாபிக்க ஆரம்பித்தது. கொஞ்சம் கனமான பாடல் – கனமான ராகம்கூட. அடித்துப் பாட வேண்டும். தியாகராஜருக்கு ஒரு தனவந்தர், நிறையப் பொன்னும் பொருளும் பரிசளிக்கிறார். தியாகராஜர் அந்த செல்வத்துடன் திருவையாறை நோக்கிப் பல்லக்கில் வந்து கொண்டிருக்கும்போது கள்வர்கள் அச்செல்வத்தைக் கவரும் நோக்குடன் தியாகராஜரை அணுகுகிறார்கள். அணுகியவர்கள் பயந்து போய் தியாகராஜரின் காலில் விழுகிறார்கள். அவர் என்ன காரணம் என்று வினவியபோது ‘இரண்டு வீரர்கள் கையில் வில்லுடன் காவலுக்கு நடந்து வருகிறார்கள் என்றும் அவர்களிடமிருந்து காப்பாற்றும்படியும்’ கள்வர்கள் தியாகராஜரிடம் இறைஞ்சுகிறார்கள். அப்போது நெகிழ்ந்து போய் தியாகராஜர் “என்னைக் காக்க லட்சுமணனுடன் கையில் வில்லுடன் இரு பக்கமும் நடந்து வந்தாயா?” என்று பாடிய பாடல்தான் இப்பாடல்.
நான் சங்கராச்சாரியாரையே பார்த்துக் கொண்டு பாடிக் கொண்டிருந்தவன் சரணத்திற்கு வந்து விட்டேன். அப்போது அவரிடமிருந்து கையால் “போ! போ!” என்கிற சமிஞ்ஞை வந்தது. என்னை நிறுத்திவிட்டுக் கிளம்பச் சொன்னார் என்று நினைக்கிறேன். அவர் என்னைப் “போதும் உன் ரோதனை. நிறுத்திக் கொள்” என்று சொல்வதுபோலிருந்தது. அகலாத அதிர்ச்சியுடன் பாட்டை நிறுத்திவிட்டு அங்கிருந்து என் மனைவியைக் கூட்டிக் கொண்டு கிளம்பினேன். வரும்போது சங்கர மடத்தில் இருக்கும் ‘ப்ரோட்டோகால்’ பற்றிய சிந்தனை என் மனதில் ஓடிக் கொண்டிருநத்து. மற்ற மடங்கள் போலில்லாது சங்கர மடத்தில் யாரும் நம்மைச் சீந்த மாட்டார்கள். சங்கராச்சாரியார்களைப் பார்க்கலாம். அவ்வளவே. நெருங்க முடியாது. அவர்கள் பக்கத்தில் செல்லவோ அந்தரங்க ஆசி பெறவோ என்ன செய்ய வேண்டும் என்பது ஒரு புரியாத புதிர்தான்.
சில பிரபலங்களுக்கு விழுந்து விழுந்து சேவை சாதிப்பார்கள். அதற்காக சாதாரண மனிதர்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. வயதான சுமங்கலிகள் கையில் விளக்குடன் நின்றுகொண்டிருப்பார்கள் – அவர்கள் மாலை கோத்து எடுத்து வந்திருந்தால் அதைக் கழுத்தில் மாட்டிக் கொள்வார்கள். குடும்பப் பின்னணியா ஜாதியா அந்தஸ்தா பணமா பிரபலமா எது என்று சொல்ல முடியாது என்பதே உண்மை.
இந்த சிந்தனைகளுடன் என் ஊரில் இருந்த சில குடும்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன். ஒன்றிரண்டு குடும்பங்கள் சங்கர மடத்துடன் பின்னிப் பிணைந்தவை. அவர்கள் குடும்பத்துப் பெண்களின் கனவில் பெரிய சங்கராச்சாரியார் அடிக்கடி வருவார். ஒருமுறை ஒரு பெண் அவரிடம் வந்து பார்க்க வேண்டும் என்று மானசீகமாக வேண்டிக் கொண்டபோது, அவள் கனவில் சங்கராச்சாரியார் “இந்த முறை வேண்டாம்; வீட்டிற்கு விலக்காகி இருப்பாய்; அடுத்த முறை வா” என்று கட்டளையிட்டதாய்ப் பிரபலமாய்ப் பேசிக் கொள்வார்கள். இது போன்ற ஏராளமான சம்பவங்கள் அற்புதங்கள் ‘யூ ட்யூப்’ பூராக் கொட்டிக் கிடக்கின்றன. பரணீதரன், ராகணபதி உள்ளிட்ட பலர் இதுபற்றி வரிந்து கட்டிக்கொண்டு ஏராளமாய் எழுதிக் குவித்திருக்கிறார்கள். இதுபோன்றெல்லாம் என் குடும்பத்துக்கு ஏன் நடக்கவில்லை என்கிற கேள்வியுடன் நான் மனைவியுடன் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றேன். அங்கே காமாட்சியம்மன் சந்நிதியில் ‘பாலின்சு காமாட்சி’ என்கிற ச்யாமா சாஸ்த்ரிகளின் மத்யமாவதிப் பாடலைப் பாடினேன். என் குரலால் கவரப்பட்ட குருக்கள் உள்ளே அம்பாள் அருகாமையில் உள்ள வெளி மண்டபத்தில் அநுமதித்து மேலும் சில பாடல்களைப் பாடச் சொன்னார். அம்பாள் சந்நிதியில் இன்னும் சில பாடல்களை பாடிவிட்டு மன நிறைவுடன் புதுக்கோட்டை திரும்பினேன்.
புதுக்கோட்டை திரும்பிய சில நாட்களில் என் மனைவி கருத்தரித்தாள். அவள் கருத்தரித்தபோது நடந்த ஒரு விநோதமான அனுபவத்தை அவள் இன்றும் நினைவு கூறுகிறாள். அது….

5

என் மனைவி கூறுவதாவது…
“நான் புதுக்கோட்டையில் உங்கள் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தேன். உறக்கமும் விழிப்பும் இல்லாத நிலையில் என் மீது கருப்பாக யானை போன்றதொரு உருவம் இறங்குவதை உணர முடிந்தது. பயந்துபோன நான் திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தேன் – நீங்கள் பக்கத்தில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தீர்கள்”
இது பிரமையா உண்மையா கனவா என்னவென்று இதுநாள் வரை எனக்குப் புரியவில்லை. ஆனால் நான் படித்தவரை ராமகிருஷ்ண பரமஹமஸருக்கு இது நடந்ததாகப் படித்திருக்கிறேன் – அவரது அன்னை பரமஹம்ஸர் பிறக்குமுன்பு இதே போன்ற ஒரு அநுபவத்தைப் பெற்றதாகவும் அதன் பின்னர் ராமகிருஷ்ணனை ஈன்றெடுத்ததாகவும் அவர்தம் வரலாறு பகருகிறது.
இது போன்ற நிகழ்வுகள் அல்லது நிகழ்ந்ததாய் நம்புவது பல்வேறு கேள்விகளை நம் மனதில் எழுப்புவது தான் நிஜம். ஆன்மீகத் தேடலில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு அதில் பல வருடங்கள் விடா முயற்சி செய்பவர்களுக்கு ஒருவேளை இவை புரியலாம். மறுஜென்மம், பூர்வ ஜென்மம், முன்னோர் உலகம், ஆவி உலகம், தேவர்களின் உலகம், எதிர்காலம் பற்றி முன் கூட்டியே உய்த்துணரும் ஆற்றல், சித்த புருஷர்களின் சித்து விளையாட்டுகள், தெய்வம் தரிசனம் கொடுப்பது போன்றவைகள் என்போன்ற சாதாரணர்களுக்கு புத்தகங்களிலும் சொற்பொழிவுகளிலும் மற்றவர் சொல்பவைகளிலிருந்துமே காணக் கிடைக்கின்றன. நேரடியான அநுபவம் கிடையாது. அனதால் இதனை இப்படியே விட்டுவிட்டு மேலே தொடருவது சிறந்தது என்ற தோன்றுகிறது.
என் பிள்ளை நல்ல கோடையில் பிறந்தான். பிறந்தநாள் 5.5.1992. மிருகசீரிஷ நட்சத்திரம். அக்ஷய்ய திருதியை அன்று பிறந்தான். அன்று பரசுராமர் பிறந்த நாளாம். மிகவும் பெருமையுடன் பேசிக் கொண்டார்கள். என் ஒன்றுவிட்ட அண்ணனிடம் பிறந்த நேரம் கொடுத்து ஜாதகம் கணிக்கச் சொன்னதில் அவர் “நல்ல அருமையான ஜாதகம் – கவிபாடும் திறமை இருக்கும்“ என்று கணித்துச் சொன்னார்.
எல்லாம் விளையாட்டாகத்தான் இருந்தது. எங்களுக்கு அவ்வப்போதைய கவலைகள்தான் இன்று நாள் ஓட வேண்டும். பணக்கஷ்டம் இல்லாமல் இருக்க வேண்டும். பிரமோஷன் கிடைக்க வேண்டும் என்பது போன்ற சாதாரணப் பொருளாதாரக் காணரங்கள் தான் – பிள்ளையைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்
நான் எப்போதும் போல் பாடிக் கொண்டிருந்தேன். என் பிள்ளை கேட்டுக் கொண்டிருந்தான். அதைத் தவிர ஸ்லோக காஸட்டுகள் ஒன்றிரண்டு வைத்திருந்தேன். என் பிள்ளை அங்கும் இங்கும் நடந்து கொண்டு ஓடிக் கொண்டிருப்பவன் அந்த காஸட்டுகளை ஒலிக்க விட்டால் மகுடி ஊதியதைக் கேட்கும் பாம்பு போல மயங்கி நின்று விடுவான். நாளாக நாளாக அவனைச் சற்று உட்கார்த்தி வைக்க வேண்டுமென்றால் காஸட்டை ஒலிக்கவிட்டால் தான் முடியும் என்று ஆகிவிட்டது.
தவிரவும் என் மனைவியின் கர்ப்ப காலத்தின்போது விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் அவளை உட்கார்த்தி வைத்துச் சொல்லிக் கொண்டிருப்பேன். அவள் மனம்  சாந்தியாக இருக்கவும் குழந்தை நல்லபடியாகப் பிறக்கவுமாக யாரோ சொன்னார்கள் என்று இதைச் செய்து கொண்டிருந்தேன்.
என் பிள்ளை நடக்கவும் ஆரம்பித்து ஒரு வயது பூர்த்தி ஆனபின் எனக்குப் ப்ரமோஷனும் மும்பை மாறுதலும் வந்தன.
நன்றி : சொல்வனம் 
https://solvanam.com/?p=50622

வியாழன், 16 நவம்பர், 2017

தமிழ் நாட்டின் சிறு பத்திரிக்கைகளும் பெரிய சஞ்சிகைகளும்

தமிழ் நாட்டின் இலக்கிய போக்குகளை நாம் அவதானிப்பதற்கு சிறு பத்திரிக்கைகள் மற்றும் பெரிய சஞ்சிகைகள் என்கிற இரு பெரும் கால்வாய்களை புரிந்து கொண்டாக வேண்டும். சிறு பத்திரிக்கையை நடத்துகிறவர்களோ அல்லது அதில் எழுதுகிறவர்களோ என்னவோ தங்களின் தலைக்குப் பின் ஒளி வட்டம் தோன்றியது போல் பெரிய சஞ்சிகைகளையும்  அதன் ஸ்ருஷ்டி கர்த்தாக்களையும் இகழ்ச்சியாகப்  பார்ப்பதும் பேசுவதும் நடந்து வருகிறது. இதன் காரணங்கள் பல இருந்தாலும் எனக்குத் தோன்றும் பிரதான காரணம் ஒன்று உண்டு.
அந்தக் காலத்தில் பார்த்தால் பத்ராதிபர்கள் எல்லோரும் தஞ்சாவூர்க்காரர்களாக இருந்திருக்கிறார்கள். தஞ்சாவூர்க்காரர்கள் என்றால் தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து சென்னை வரை என்று பொருள் கொள்ளலாம். திருநெல்வேலிக்காரர்கள் பிரமாதமான எழுத்தாளர்களாக இருந்தபோதிலும் தஞ்சாவூர்க்காரர்களிடம் கை  கட்டி வேலை  செய்கிறவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இது போன்ற ஒரு போக்கு ஆழமான காழ்ப்புணர்ச்சியை திருநெல்வேலிக்காரர்களிடம் உண்டு பண்ணியிருப்பதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. ஒன்றிரண்டு கட்டுரைகளில் சுப்ரமணிய பாரதியாரே சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி சுப்ரமணிய ஐயரிடம் தாம் கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப் படுத்துகிறார்.
அதுவும் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் சுவீகரித்த ஒரு நடைமுறை ஒன்று உண்டு. ஒருவரை வேலையை விட்டுத் தள்ள வேண்டுமென்று நிர்வாகம் முடிவு செய்து விட்டால் குறிப்பிட்ட நாளில் அவர் அலுவலகம் வரு முன்பே அவர் மேசையின் டிராயர் பூட்டை உடைத்து இருக்கும் சாமான்களை பிரித்து வைத்து மறுபடி வேறு  பூட்டைப் போட்டுப் பூட்டி சீல் வைத்து விடுவார்கள். காலை பணிக்கு வரும் ஊழியர் திகைப்பார்; தாள முடியாத அதிர்ச்சியுடன் வேலை போன விஷயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உள்வாங்கி கொள்வார். இது வாராவுக்கு நடந்திருக்கிறது. ஸ்டாலின் ஸ்ரீனிவாசனின் வழித்தோன்றலாகிய மணிக்கொடியில் நடந்ததை பி எஸ் ராமையா விவரிக்கிறார். பின்னாளில் இது பி எஸ் ராமையாவிற்கே  நிகழ்ந்தது. இத்தனைக்கும் அந்நாளில் ஆசிரியர் பொறுப்பில் இருந்த டி எஸ் சொக்கலிங்கம் திருநெல்வேலிக்காரர். (ராமசாமி முதலியார் பதவியில் இருந்த போது தங்கத்துக்கு வரி கூட்டி விட்டார் என்பதற்காக 'தாலி அறுத்த முதலியார்' என்கிற தலைப்பில் தலையங்கம் தீட்டியவர்.) ஏ என் சிவராமன் தஞ்சாவூர்க்காரர்.
எனவே இது புதுமைப் பித்தன் கல்கி காழ்ப்புணர்ச்சிகளுக்கு முன்பே தொடங்கி விட்டது எனலாம். இப்படிப் பார்க்கும் போது சென்னையிலிருந்து மதுரை வரை உள்ள ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் என்றால் திருநெல்வேலிக்காரர்களுக்கு மட்டம். திருநெல்வேலி ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் என்றால் நாகர்கோயில்காரர்களுக்கு இளக்காரம். மலையாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். தமிழர்களே மட்டம் தான். இதில் அந்நாளில் சென்னையைத் தலைப்பிடமாகக் கொண்டு மதராஸ் ராஜதானி திகழ்ந்த வயிற்றெரிச்சல் வேறு! சென்ற ஆண்டுகளின் மிகச் சிறந்த உதாரணமாக சுந்தர ராமசாமியின் 'ஜெ ஜெ சில குறிப்புகளைச்' சொல்லலாம். அதில் அவர் சக தமிழ் எழுத்தாளர்களை சகட்டு மேனிக்குக்  கிண்டல் செய்திருக்கிறார். 'முல்லைக் கல் மாதவன் நாயர்' என்று அவர் குறிப்பிடுவது ஜெயகாந்தன் தான் என்று தோன்றுகிறது. இதே போல சிவசங்கரியையும் (போய் ஜமாய்டீ!) கிண்டல் செய்திருக்கிறார். இப்படிப் பார்க்கும்போது சுந்தர ராமசாமி ஜெயகாந்தனை விட பெரிய எழுத்தாளரா என்று நினைக்கத்  தோன்றுகிறது.
வெகு ஜனப் பத்திரிகை என்று பார்க்கும் போது அது வணிகம் மட்டுமே. வெகுஜனப் பத்திரிக்கைகளுக்குப் பெரிய இலக்கிய நோக்கங்கள் இருக்கின்றன என்று நாம் நம்ப எந்த முகாந்திரமும் இல்லை என்று தான் கூற வேண்டும். அதே சமயம் சிறு பத்திரிக்கைகளை பீடித்திருப்பது அல்பாயுசும் குழு மனப்பான்மைகளும் தான்.
இரண்டையும் சமன் செய்கிற விதத்தில் அந்தக் காலக்  கணையாழி முயன்றாலும் ஓரளவுக்கு ஈடு  கொடுத்து வந்தது சுபமங்களா. துரதிர்ஷ்டவசமாக அந்த முயற்சியும் கோமல் சாமிநாதனின் மறைவுக்குப் பின் முடிவுக்கு வந்தது. தற்போது உள்ள காலச்சுவடு கூட குழு மனப்பான்மையுடன் தான் செயல் படுவதாய்த் தோன்றுகிறது. ஏனைய பத்திரிக்கைகள் குழு மனப்பான்மையில் குறுகிக் கடைசியில் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரை உயர்த்திப் பிடிப்பதற்காகத்தான் செயல் படுவதாய்த் தோன்றுகிறது. சில வேளைகளில் இந்த எழுத்தாளர் தலைக்குப்பின் ஒளி வட்டம் தெரிவது போல்  ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரே அறிவுரை மயம். இணைய பத்திரிக்கைகளையோ கேட்கவே வேண்டாம். ஒன்றிரண்டைத் தவிர மீதம் ஒரே வசவு மயம்.
பரமபதத்தில் வரும் பாம்புகளும் நன்மையே செய்கின்றன என்று ஒரு நம்பிக்கை உண்டு. இப்படித்தான் நாம் வணிக சஞ்சிகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நான் ஜெயந்தனின் 'துப்பாக்கி நாயக்கரை' குமுதத்தில் தான் படித்தேன். ஜெயமோகன் 'டார்த்தனீயம்' என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். இதையே தமிழ் வாணனும் 'பேய் பேய் தான்' என்கிற தொடரில் ஒரு கிளைக் கதையாக அந்தக் காலத்திலேயே  எழுதியிருக்கிறார்.  ஆர் சூடாமணியை நான் முதலில் குங்குமத்தில் தான் படித்தேன். சுஜாதாவின் 'எல்டோராடோவை'க் குங்குமத்தில் படித்தேன். அனுராதா ரமணனின் 'கை' என்கிற கதையைக் குங்குமத்தில் படித்தேன். சிறு பத்திரிக்கைகளிலும் நல்ல கதைகளையும் மோசமான கதைகளையும் படித்திருக்கிறேன். ம.ந.ராமசாமியின் 'புழு' என்னும் கதையை சிவாஜியில் படித்தேன். கந்தர்வனின் 'பூவுக்குக்  கீழே' என்கிற கதையை இதயம் பேசுகிறது சிறுகதை பத்திரிகையில் படித்தேன். இன்னும் ஏகப் பட்ட கதைகள். முக்கால் வாசி வணிக சஞ்சிகைகளில் வந்தவையே.
சுருங்கக்  கூறின் வெகு ஜனப் பத்திரிக்கைகளும் தீவிர இலக்கியத்துக்குத் தாலி கட்டிக் கொள்ளவில்லை ஆயினும் அவைகளும் இலக்கிய சேவை புரிவதாகத்தான் நான் கருதுகிறேன்.

புதன், 6 செப்டம்பர், 2017

வாட்சப் III


இப்படிப் பட்ட சந்தர்ப்பத்தில் நானும் காதலாய் ஒரு குழுமத்தில் என்னை இணைத்துக் கொண்டேன்.எல்லாம் ஆருயிர் நண்பர்கள். பலதரப் பட்டவர்கள். இரண்டு  மூன்று கணக்காயர்கள். இரண்டு மூன்று வக்கீல்கள். பேராசிரியர் ஒருவர். விஞ்ஞானி ஒருவர். சர்வதேச விற்பனைத் தலைவர் ஒருவர். எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.
வழக்கமான வாழ்த்துச் செய்திகள், விடியோக்கள், சாமி படங்கள், கர்ப்பகிருஹத்தில் ஆசிர்வதிக்கும் நல்ல பாம்பு போன்ற வினோத சம்பவங்கள், வேலைக்காரியுடன் கள்ள உறவு மற்றும் மனைவி புடவையைத் தோய்ப்பது போன்ற சாகா வரம் பெற்ற ஜோக்குகள் இத்யாதி இத்யாதி.......
இதில் ஒரு குறிப்பிட்ட வகை  அடக்கம். அது ஒரு பொது எதிரியைக் கண்டு பிடிப்பது.பொது எதிரி குழுவுக்கு குழு மாறுபடும். ஒரே குழுமத்தில் கூட இரண்டு மூன்று எதிர் எதிர் நிலைகள் இருக்கலாம். அது ஆரம்பித்த கொஞ்ச நாட்களுக்குப் பின் புரிந்து விடுமாதலால் ஒருவருக்கொருவர் ரொம்ப சண்டையில்லாமல் மழுப்பி விடுவார்கள். இதையும் மீறி எல்லாருக்கும் பொது எதிரிகள் சிலர் உண்டு. அவர்கள் பட்டியல் வருமாறு:
1. அரசியல் வாதிகள்.
2. போலீஸ்காரர்கள்.
3. அரசு ஊழியர்கள்.
4. பொதுத் துறை ஊழியர்கள்.
5. சினிமாப் பிரபலங்கள்.
6. போலிச்   சாமியார்கள்.

இவர்களைப் பற்றி யாராவது செய்தி அல்லது விமர்சனம் போடுவது தான் தாமதம். எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு வந்து தர்ம அடி போட ஆரம்பிப்பார்கள். அந்த நபரை அல்லது பிரபலத்தை குற்றுயிரும் குலை உயிருமாக்கி விட்டுத் தான் ஓய்வார்கள். சவூதி அரேபியாவில் கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை  நினைவுக்கு வருகிறது. ஒரு முறை அதில் சம்பந்தமே இல்லாமல் வேடிக்கை பார்க்க வந்திருந்த வெள்ளைக் காரர்கள் ஓரிரண்டு  பேர் வெறியுடன் கல்லால் அடிக்க இணைந்து கொண்டதை பற்றிய சுஜாதாவின் குறிப்பு நினைவுக்கு வருகிறது.
ஒரு நண்பர் வங்கி ஊழியரைப் பற்றி எப்போதுமே மனத்தாங்கலாகப் பேசிக் கொண்டிருப்பார். அவரின் மனைவி
வங்கி ஊழியர். நண்பருக்கு அவர் மேல் இருந்த கோபம் அவர் சம்பந்தப் பட்ட எல்லார் மீதும் வந்தது. இன்னொருவர் ஆச்சரியப் படத்தக்க வகையில் வாழ்க்கையில் பெரும் வெற்றிகளை அடைந்தவர். அதனாலேயோ  என்னவோ சுமாரானவர்களைத் துச்சமாக எண்ணுபவர். வேறொரு நண்பர் இந்திய பொதுத் துறை வங்கியின் பெண்மணி ஒருவர் பணம் எண்ணும் பாங்கைப் போட்டு அத்துடன் சீனக்காரி ஒருத்தி பணம் என்னும் லாவகத்தையும் காண்பித்து நக்கல் அடித்திருந்தார். வந்தது வினை! ஆளாளுக்கு ஆரம்பித்து விட்டார்கள். கூடவே என் பெயரைப் போட்டு அவனைச் சொல்லவில்லை என்று துறப்பு அறிக்கை வேறு. நான் வங்கி ஊழியன் என்பதால் ஏற்கெனவே இது போன்ற ஒரு விவாதத்துக்கு எதிர் வினை ஆற்றி இருந்தேன். இவர்கள் கூறிய எல்லா வாதங்களுக்கும் என் மனதில் எதிர் வாதங்கள் எழுந்து கொண்டிருந்தன. ஆனால் தேவையா என்று யோசித்தேன். எல்லாரும் உயிர் நண்பர்கள்.என் மீது அன்பு செலுத்துகிறவர்கள். பதிலும் சொல்லக் கூடாது; சமயத்தில் என் தொழிலை பற்றிய தாழ்வான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருக்க இந்த வயதில் அவசியமும் இல்லை.
குழுவிலிருந்து சத்தம் போடாமல் வெளியேறி விட்டேன்.

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

வாட்சப் II

பொதுவான அம்சங்கள்:

1. பிறந்தநாள், நல்ல நாள், பெரிய நாள் என்றால் வாழ்த்துக்கள் குவிந்து விடும். கல்யாண நாள், பிள்ளை பரீட்சை பாஸ் பண்ணியது போன்றவற்றுக்கெல்லாம் பொதுவாக வாழ்த்துக்கள் வந்து விடும். இவற்றுக்கெல்லாம் நிறைய அட்டைகளுடன் கூடிய வலைத் தளங்கள்  இருக்கும் போலிருக்கிறது. வாணம் கொட்டுகிற மாதிரி அல்லது பிள்ளையாருக்கு பூப் போடுகிற மாதிரி சிறு விடியோக்கள்.
2. செயற்கரிய செயல்கள் செய்தோர் பற்றிய புகைப்படங்கள் மற்றும் விபரங்கள். உதாரணமாக லஞ்சம் வாங்காத போலீஸ்காரர் அல்லது உடற்குறையுடன் ஐஏஎஸ் பாஸ் செய்த மாணவி.
3. அரசியல்வாதிகளை பற்றிய கடுமையான விமர்சனங்கள். இதில் எல்லாருமே கலந்து கொள்வார்கள். கேவலமாகத் திட்டுவது இரு வகை. ஒன்று நேரடியாகத் திட்டி விடுவது. இன்னொன்று நகைச்சுவை நடிகர் படத்துடன் அரசியல்வாதி படத்தையும் போட்டு விட்டு 'அவனா நீயி' போன்று ஒரு கமெண்டைப் போடுவது.
4. அறிவுரை மழை. இதற்கென்று உண்டாக்கப் பட்ட கதைகள் சம்பவங்கள் அல்லது பொன்மொழிகள். எதையுமே யாருமே கடைப் பிடிக்காத உளுத்து போன அறிவுரைகள். எந்த ஒழுங்கையும் வன்மமாக மறுக்கும் நம்மிடம் ஏராளமான அறிவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நன்னெறி போதாதென்று இது வேறே.
5. நவராத்திரியில் மஞ்சள் குங்குமம் பெண்களுக்கு கொடுக்கும் போது அத்துடன் மிகக் கேவலமாக ஒரு பரிசு பொருளை வைத்துக் கொடுப்பார்கள். சீப்பு கண்ணாடி, பிளாஸ்டிக் டப்பா என்று ஏதாவது. அப்படி வாங்கி வந்ததைப் பெண்கள் வேறு யாருக்காவது வைத்துக் கொடுத்து விடுவார்கள். அது சில சமயம் முதன் முதலாக அதைக் கொடுத்தவர்க்கே போய்ச சேர்ந்து விடும். அது போலவே வந்த  படம் அல்லது விடியோவை நிறைய பேருக்கு அனுப்புகிறவர்களுக்கு அது ஒரு நாள் அவர்களுக்கே வந்து சேரும்.
6. சில பேர் ரொம்ப சுத்தம். காலையில் குட் மார்னிங் ; இரவில் குட் நைட்.
இனி விஷயத்துக்கு வரலாம் என்று நினைக்கிறேன்!

(தொடரும்) 

புதன், 23 ஆகஸ்ட், 2017

வாட்சப் I

சமீபத்தில் ஒரு வாட்சப் குழுவிலிருந்து நான் வெளியேற நேர்ந்தது. எல்லாம் என் கல்லூரி நண்பர்கள். ஒருவருக்கொருவர் பாசமும் நட்பும் பாராட்டி வருகிறவர்கள். ஒன்றிரண்டு பேர் மிகுந்த முன் முயற்சி எடுத்து குழுவை ஒருங்கிணைத்தார்கள். எல்லாம் நன்றாக ஓடிற்று ஒரு ஆறு மாதம். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதென்ன அன்பை வெளிப்படுத்திக் கொள்வதென்ன பாசப் பறவைகளாக வலம் வந்தோம்.

இதில் வலம் வந்தவர்கள் அளித்த இடுகைகள் வருமாறு:

1. காலம் கார்த்தாலை ஸ்வாமி படம் அல்லது வீடியோ போட்டுவிடுவார் ஒருவர். பக்திமான். இவரே பரமாச்சார்யரின் வாழ்க்கையில் நடந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களை விவரித்திருப்பார். சில சமயம் கோவில் படங்களும் ஸ்தல புராணமும் இருக்கும்.
2. காலை வணக்கத்துடன் பொன்மொழிகளை போட்டு விடுவார் அடுத்தவர். இவரே வாழ்க்கையில் எப்படியெல்லாம் கஷ்டப் பட்டவர்கள் எப்படி தங்களுடைய + அணுகு முறையால் பெரிய கோடீஸ்வரர் ஆனார்கள்  என்றெல்லாம் விவரிப்பார். சுய முன்னேற்ற ஆலோசகர். அநேகமாகத் தனக்கே முயற்சித்து பெரிய ஆதாயம் இல்லாமல் அதையே மற்றவர்களுக்கு கற்றுத் தருகிறவர். ஆசான்.
3. அடுத்தவர் லா பாயிண்ட் நாராயணசாமி ஜிஎஸ்டி வருமான வரி சொத்து வரி போன்ற சட்ட நுணுக்கங்களை அடுக்குவார்.
4. இவர் நாடோடி. பல ஊர்களுக்கும் அடிக்கடி சென்று வருபவர். போன இடங்களிலெல்லாம் அந்த ஊரின் முக்கியமான சரித்திரச் சான்றுகளுடன் தன் புகைப் படத்தையும் செல் ஃபீ  எடுத்துப்  போட்டு விடுவார்.
5. இந்துத்வா மற்றும் ப்ராமணத்துவா . நாத்திகர்களுக்கும் பிராமண அவிசுவாசிகளுக்கும் புற  மதத்தவர்க்கும் சவுக்கடி கொடுப்பார். இதற்காக திடுக்கிடும் தரவுகள் எல்லாம் கையில் வைத்திருப்பார். சிலசமயம் ஒரே பிரலாபமாக இருக்கும் 'இந்தியாவில் தான் இப்படி எல்லாம் நடக்கிறது' என்று.
6. ஜோக்குகள், குட்டிக் கதைகள் மற்றும் அறிவுரைகள். நீள  நீளமாக இருக்கும். படிக்கும் போதே அலுத்து வரும். ஜோக்குகள் பொதுவாக மனைவிமார்களை விமர்சிப்பதாக இருக்கும். இவரை நாம் பெரியப்பா என்று வைத்துக் கொள்ளலாம்.
7. இவர் பஞ்சாங்கம் . கடவுளை பற்றி நிரம்ப கவலைப் பட மாட்டார். அமாவாசை, சஷ்டி, பௌர்ணமி, பண்டிகை என்றால் வேரோடு பிடுங்க வேண்டும் என்று நினைப்பார். தவிர ராகு காலம், எம கண்டம், குளிகன் என்று போட்டுப் பந்தாடி விடுவார்.
8. டைப் ரைட்டர். எந்த நம்பரை கை பேசியில்  அழுத்தினால் கால்  காவல் நிலையத்துக்கு செல்லும் எந்த நம்பரை போட்டால் நமக்கு வந்த கால் உண்மையா போலியா தெரிந்து விடும் என்றெல்லாம் போட்டுக்  கொண்டே இருப்பார்.
9. நாட்டு வைத்தியர். மூட்டு வலிக்கு முடக்கித்தான், கை வலிக்கு கத்தாழை எண்ணெய், பல்வலிக்குப் பாடாவதி பல்பொடி என்று பின்னிவிடுவார். இவை எல்லாவற்றையும் இவர் முன் வைத்து 'சாப்பிடுடா!' என்று கத்த வேண்டும் போல் எரிச்சலாக வரும்.  
10. போஸ்ட் மாஸ்டர் . தனக்கு வருகிற எல்லாவற்றையும் குழுவில் சேர்த்தால் தான் தூக்கம் வரும். எது என்ன என்று பார்ப்பதில்லை. ஏற்கெனெவே வலம் வந்ததை எல்லாம் கர்ம சிரத்தையாக அனுப்பி விடுவார்.

(தொடரும்)

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...