ஆங்கிலக் கல்வி மோகம் தலைவிரித்தாடுகிறதே.... தமிழ் ஆசான் தி.வே. கோபாலய்யருடன் ஒரு நேர்காணல் ஆசிரியர் அழகப்பன் பெயரால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது பெற்ற திரு.தி.வே.கோபாலய்யர். கடந்த நாற்பத்தேழு வருடங்களாகத் தமிழ் தொண்டாற்றி வரும் ஆசான். எண்பது வயதிலும் தளராது உழைத்து வரும் இவ்விளைஞர் 23 நூல்களைப் படைத்தவர். ஆறு புத்தகங்கள் அச்சேறக் காத்திருக்கின்றன. தமிழ் இலக்கண மரபுச் சொல் அகரவரிசை அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. கூர்மையான நினைவாற்றல், தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய திடமான கருத்துக்கள், வயதைப்பொருட்படுத்தாது உழைத்துக் கொண்டிருக்கிற முனைப்பு, தம் சாதனைகளைப் பற்றிய பெருமித உணர்வு இல்லாத அடக்கம் இவைதான் தி.வே.கோபாலய்யர். 15 ஆண்டுகள் தஞ்சையில் தமிழ் ஆசிரியராகவும், 15 ஆண்டுகள் திருவையாறு தமிழ்க் கல்லூரிப் பேராசியர் ஆகவும் பணியாற்றிய இவர் 1979ம் ஆண்டிலிருந்து புதுச்சேரி வாசி. பிரஞ்சுக் கலை நிறுவனத்துக்காகத் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார். மருந்துக்குக் கூடத் தற்கால அலங்காரம் பிரதிபல...