“என்ன?” என்றார் ராமையா சாஸ்திரி முன்னால் வைக்கப்பட்டிருந்த சட்டியில் இருந்த சோற்றை அளைந்து கொண்டே.
கதவுக்குப் பின் நின்ற கொண்டிருந்த லட்சுமி இன்னும் இழுத்துப் போர்த்தியவாறு “மகாளயமா இருக்கு; இந்தப் பழையதை இப்பவாவது சாப்பிடாம இருக்கலாமே?” என்றாள் பயத்துடன்...
"அதெல்லாம் பரவாயில்லைன்னா” என்றார் ராமையா சாஸ்திரி - முகம் பார்த்துப் பேச மாட்டார். வெட்கமா, மனைவிக்கு இடம் கொடுத்துவிட்டால் பின்னால் மிகவும் கஷ்டமாக ஆகிவிடும் என்றா தெரியாது. பல நாட்களுக்குப் பேச்சே கிடையாது. ‘இன்றைக்கு சுபதினம்; ஒரு வார்த்தை உதிர்ந்திருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டே நகர்ந்தாள் லட்சுமி. ஒரு குழந்தை இருந்திருந்தாலாவது அதைச் சாக்காக வைத்து ஏதாவது பேசிக் கொள்ளலாம். அதற்கும் கொடுப்பினை இல்லாது போய்விட்டது.
ராமையா சோற்றை அள்ளி வாயில் போட்டார். தொட்டுக் கொள்ள சின்ன வெங்காயம். சுளீரென்று தலைக்கு ஏறியது. தண்ணீரை எடுத்து விழுங்கினார். மகாளயமாவது ஒன்றாவது? நாற்பது வருடங்களாக இந்த ஊளைச்சோறுதான். பஞ்ச பட்ச பரிமானமெல்லாம் அப்பா வைசூரியில் போனவுடன் போய்விட்டது. பத்தாம் நாள் காரியம் ஆனவுடனேயே அம்மா மாமா வீட்டிற்கு அழைத்துப் போய் விட்டாள். வாத்திமராஜபுரத்தில் மாமா நிலம் நீச்சு என்று செயலாக இருந்தார். யார் செயலாக இருந்தால்தான் என்ன? உழைக்கிற மாடு உழைத்தால்தான் உண்டு. அம்மாவும் பிள்ளையும் சம்பளமில்லாத வேலைக்காரர்களாக மாமா வீட்டில் காலந்தள்ளி வந்தார்கள். ஒரு நாள் கிடையாது; கிழமை கிடையாது. ஜலதோஷமா ஜுரமா ஒன்றும் பேசக்கூடாது. பழைய சோறும் வெங்காயமும்தான்.
கையை உதறிக்கொண்டு சிரமத்துடன் எழுந்திருந்தார் ராமையா. தொப்பையைக் குறைக்க முடியவில்லை. உட்கார்ந்தால் எழுந்திருக்க முடிகிறதில்லை. எழுந்திருந்தால் உட்கார முடிவதில்லை. என்னவோ தேகாப்பியாசம் செய்ய வேண்டுமென்கிறார்கள். யாரால் ஆகிறது? உள்ள வேலைக்கே நேரம் போதமாட்டேன்கிறது. ராஜா உத்யோகமென்றால் எல்லாவற்றையும் கண் கொத்திப் பாம்பாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. வெள்ளைக்காரன் 'வசூல் போதவில்லை. கொண்டா கொண்டா' என்கிறான். பைரவத் தேவனுக்கு ஒரு மரியாதையுமில்லை. என்றாலும் நல்லூர் ராஜா என்கிற வீம்பு. அவனையும் ‘ஹைனஸ் ஹைனஸ்’ என்று அநுசரித்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
வாயைக் கொப்பளித்து அங்கவஸ்திரத்தில் கையைத் துடைத்துக் கொண்டேபோது மாமா வீட்டில் மாடு மாதிரி வேலை பார்த்துக் கொண்டே படிப்பிலும் கவனம் பிசகாமல் இருந்ததில் நன்மைதான் விளைந்தது என்று நினைத்துக் கொண்டார். என்ன கெட்டுவிட்டது? மலையாள தேசத்தில் மாதவன் சிபார்சில் வேலை பார்த்த போதும் எல்லோரும் பயப்பட்டான்கள்; பின்னர் மாகாணக் கௌன்ஸில் மெம்பராக இரண்டு வருடம் - நல்லூர் திவான் பதவி மடியில் வந்து விழுந்தது. வெள்ளைக்காரன் மரியாதையுடன் இருக்கிறான். நல்லூர் ராஜா இளம் பிராயத்துப் பையன். பயப்படுகிறான். மறுபடியும் மாமாவை நினைத்துக் கொண்டார் . மாமாவிடம் பட்ட நன்றிக் கடனுக்காக அவர் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். மாமாவுக்கு அப்போதெல்லாம் க்ஷீண தசையாதலால் வேறு வழியிருக்க வில்லை.
காரியஸ்தன் சிகாமணிப்பிள்ளை தயாராக ரேழியில் நின்று கொண்டிருந்தார் கையைக் கட்டிக் கொண்டு.
“என்ன வண்டி தயாரா?” என்றார் சாஸ்திரி.
“தயாராக இருக்கு சாமி. பத்து மணிக்குத்தான் ரெஸிடென்சியிலே மீட்டிங் - இன்னும் மணி ஆவலிங்களே...?"
பதில் பேசாமல் சாரட்டில் போய் ஏறிக்கொண்டு “மூக்கா! வீடு வண்டியை” என்றார். போகிற இடத்தைச் சொல்லக்கூடாது என்பது பாலபாடம். போவதற்குள் அங்கு செய்தி போய் விடும். உஷாராகி விடுவான்கள். ‘படித்துப் படித்துச் சொன்னேன் மாதவனிடம்; கேட்கவேயில்லை’ என்று நினைத்துக் கொண்டார். மாதவன் இப்படித்தான் ஒளிவு மறைவு இல்லாமல் போய் மாட்டிக் கொண்டான். தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று ஆகிவிட்டது.
“நேரே மன்னவன் குளத்துக்கு போ” என்றார் மூக்கனிடம் - நாணஸ்தன் - ராஜாங்க விசுவாசி. அதுவும் திவான் என்றால் தெய்வம் மாதிரி அவனுக்கு. தேவைப்படும்போது அரவணைத்தும் கடுமை காட்டியும் குதிரைகளை எவ்வளவு அழகாக நிர்வாகம் செய்கிறான் நான் நல்லூரை நிர்வாகம் பண்ணுகிற மாதிரி. ராமையா சாஸ்திரி தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். வழியில் மனிதர்கள் நின்று கொண்டு முகமன் செய்வதை ஆளுக்குத் தகுந்த மாதிரி அங்கீகரித்துக் கொண்டு வந்தார். ஆட்டு மந்தைக் கூட்டம்! அதனால்தான் வெள்ளைக்காரன் ஐயாயிரம் பேர் கோடிக்கணக்கான ஜனங்களைக் கட்டி ஆளுகிறான்கள்.
வண்டி நின்றதும் நிதானமாக இறங்கினார். மேலக்கரை காவல்காரன் ஓடோடி வந்து சலாம் வைத்தான். “என்னப்பா வேலையெல்லாம் நடக்கிறதா? நடக்கக் கல்லு பாவச் சொல்லியிருந்தேனே!” என்று கேட்டுவிட்டு “உன் பிள்ளை எப்படியிருக்கிறான்?” என்றார் அருங்குளவனிடம்.
“வேலை ஆரம்பிச்சாச்சுங்க சாமி. பையன் உங்க புண்ணியத்துல நல்லாயிருக்கான் சாமி” என்றான் அருங்குளவன். மூன்றாம் வருடம் ஊர் பூரா வைசூரி வாரிக் கொட்டியிருந்தது. ராமையா எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஊர் ஜனங்களுக்கு ஊசி போடப்பட்டு, கொள்ளை நோய் பரவாமல் தடுக்கப்பட்டது. அதற்காக வெள்ளைக்கார ராஜ்யம் சாஸ்திரிக்கு பாராட்டுப் பத்திரம் கொடுத்திருந்தார்கள்.
நிதானமாகப் படிகளில் ஏறி சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டார். காற்று மேலோட்டமாக அடித்துக் குளத்தில் சிறு அலைகளை உண்டாக்கிய வண்ணம் இருந்தது. தண்ணென்று ஒரு குளிர்ச்சி பரவியது. கண்களைக் குளம் பூரா ஓடவிட்டார். கொஞ்சம் பெருமிதத்தால் மார்பு விம்மித் தாழ்ந்தது. ஒருசுற்று வந்தால் மூன்று மைல். சமுத்திரம் என்று கூடச் சொல்லலாம். நடுவில் நீராழி மண்டபம் - ஆறேழு மாதத்தில் வெட்டிக் கட்டி முடிக்கப்பட்டது. அத்துடன் நல்லூரின் குடிநீர்ப் பிரச்னையும் தீர்ந்தது.
மெல்ல நடைபோட்டார். எத்தனை பேரைக் கரைத்திருப்பேன்! சமணப் பள்ளியிலிருந்து வந்த போதே ரீஜண்டிடம் தனக்கு சர்வ சுதந்திரம் கொடுத்தால் தான் வேலை செய்ய முடியும் என்கிற நிபந்தனையுடன் தான் வந்தார். ரீஜண்ட் அநுபவஸ்தர். சாஸ்திரியைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறார். ‘வெள்ளைக்கார ராஜாங்கத்துக்கு வரும்படி குறைந்தால்தான் கேட்போம்; மற்றபடி தலையிட மாட்டோம்! என்று தெளிவாகச் சொல்லி விட்டார். அதை இன்றுவரை கடைப்பிடித்து வருகிறார்.
இரைத்தது. சற்று நின்றார். முதலில் சிறு சிறு வாய்க்கால்களை அந்தந்த இடங்களில் குளங்களுடன் இணைக்க வேண்டியிருந்தது. அந்தந்த குளங்களின் உபரி நீரை வேறு வாய்க்கால்கள் வழியாக அடுத்தடுத்து பெரிய குளங்களில் இணைத்து அவற்றின் உபரியை வாய்க்கால் மூலமாக மன்னவன் குளத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. எவ்வளவு தடைகள்! நாள் சரியில்லை. சாமி குத்தம்; உத்தரவு ஆகவில்லை; உதைப்பேன். எங்க ஜாதி இடத்தைத் தோண்ட விட மாட்டோம். திவான் என்ன பிராமணனா? சுத்த பாஷண்டனாக இருக்கிறானே! இத்யாதி இத்யாதி... நாளாவது கிழமையாவது - சாமியாவது பூதமாவது! மாமா வீட்டில் சோற்றுக்குச் சிங்கி அடித்துக் கொண்டிருந்தபோது எந்த சாமி வந்து சோறு போட்டது? எல்லாம் என் முனைப்பும் உழைப்பும் தான் -
அம்மா மட்டும் கடைசி வரை மனசாட்சி மாதிரி இடித்துக் கொண்டேயிருப்பாள். கல் பெஞ்சில் சற்று சாவகாசமாக உட்கார்ந்து கொண்டார். அதென்னவோ வாழ்க்கையில் அடிபட்டதினாலோ என்னவோ ஒன்றின் மீதும் பிடிப்பு இல்லாமல் போய்விட்டது. சந்தி கிடையாது; பூஜை கிடையாது; புனஸ்காரம் கிடையாது. வேலை வேலை வேலை என்று இருந்தாகி விட்டது. வேலையென்றால் கட்டி மேய்க்கிற வேலைதான். ஆடுகிற மாட்டை ஆடிக் கறப்பது; பாடுகிற மாட்டைப் பாடிக் கறப்பது. சாம பேத தான தண்டம்தான். எல்லோருக்கும் பலஹீனம் இருக்கிறது. அது புரிந்துவிட்டால் போதும்.
ஒரு கணம் அம்மாவின் முகம் கண்ணில் நிழலாடியது. “அத்து வேணும்டா ராமையா” என்பாள் அடிக்கடி. நல்லூர் வேலை வந்த போது துள்ளிக் குதித்தாள். “உனக்கு அஞ்சு வயசு வரையிலும் பேச்சு வரலை; யாரோ சொ ன்னான்னு அந்த நாள்ல வாத்திம ராஜபுரத்திலேருந்து வண்டி கட்டிண்டு வந்தேன். நல்லூர் அரிய நாச்சி கோயில்ல வேண்டிண்டு பிரஸாதத்த உன் வாயில போட்ட அப்புறம்தான் உனக்கும் பேச்சு வர ஆரம்பிச்சது. இது எதோ பூர்வ ஜெனம் சுகிர்தம்டா ராமையா. உடனே சரின்னு சொல்லிடு” என்றாள் . கூடவே இருந்தாள். இரண்டாம் வருடம் “மாரை வலிக்கறதுடா ராமையா... ராமையா... " என்றாள். பிராணன் போய் விட்டது. அநாயாச மரணம். “கண் வழியா உயிர் போயிருக்கு; மறு ஜென்மா கெடையாது” என்றார் சர்ம ஸ்லோகத்திற்காக வந்திருந்த கல்யாண சுந்தர ஜடாவல்லபர்.
மெதுவாக எழுந்திருந்தார். என் சுபாவமே பேசாமல் இருப்பதுதான். அதற்குப் போய் கவலைப்பட்டுக் கொண்டு வேண்டாத சாமிக்கெல்லாம் நேர்ந்து கொண்டு... மெல்ல நடந்த படிகளில் இறங்கினார். அரிய நாச்சியாவது ஒன் றாவது... அந்தக் கோயில் சம்பந்தமான வியாஜ்யத்துக்குத் தான் இன்று ரெஸிடென்ஸியில் மீட்டிங் என்பது அவருக்கு நினைவுக்கு வந்ததில் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.
குளம் கட்டுகிறபோது இப்படித்தான் சாமியாடினான்கள். வீட்டிற்கு முன் ஒரு பூசாரி வந்து உண்மையிலேயே சாமி ஆடினான். லட்சுமிதான் பயந்து போனாள். சாபம் விடாத குறை. முனியன் குடி கிராமத்தில் சட்டி பானை செய்கிறவன். பரம்பரையாய் அவர்கள்தான் கோயிலுக்குப் பூசாரி. மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தார் ராமையா. வாய்க்கால் வரத்துக்காக ஒரு மரத்தை வெட்ட வேண்டியிருந்தது. ஊர்க்காரர்கள் பிராது பண்ணிக் கொண்டிருந்தார்கள். “பரிகாரம் என்ன?” என்று கேட்டார் சாஸ்திரி அவன் சாமியாடி முடிந்த பிறகு. முழ நீளத்துக்குப் பரிகாரம் சொன்னான். அனைத்தையும் ஒப்புக் கொண்டு பில்லைப் போட்டு பணத்தைக் கொடுத்து விட்டார். தீர்ந்தது பிரச்சனை.
அதே மாதிரி போன மாதம் நடந்ததை நினைத்துக் கொண்டார். வீதிகளுக்கு இடைஞ்சலாய் இருந்த கோயில்களை இடமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. மொத்தமாக ஐம்பது கோயில் இருக்கும். எங்கு போனாலும் எதிர்ப்பு - கம்பு கடப்பாரை என்று தூக்கிக் கொண்டு வந்து நின்றான்கள். ஜெயில் வார்டன் கணபதி சேர்வை தான் தலைமை. அவனை ஒன்றும் செய்ய முடியாது. ஆள் கட்டுமானம் ஜாஸ்தி. அவன் பழக்க வழக்கங்களை துப்பு அறிந்ததில் வேலை சுளுவாக முடிந்தது.
கணபதி சேர்வை தாசி சொர்ணத்திடம் தொடுப்பு என்று தெரிந்தது. சொர்ணத்துக்கு ஆள் அனுப்பி சேர்வை மேல் பிராது கொடுக்கச் செய்தார். கதறிக் கொண்டு வந்து சேர்ந்தான் கணபதி. கோயிலாது குளமாவது. எல்லா கோயிலிலும் அந்த சாமியின் பெயரைக் குறிப்பிட்டு ‘நாங்கள் வீதியை அகலப்படுத்த வேண்டிய இக்கோயிலை எதிர்வரும்.......... தேதியன்று இடிக்கப் போகிறோம். எனவே இங்கு குடியிருக்கும் நீங்கள் நாங்கள் ஏற்கனவே தீர்மானித்த இந்த இடத்தில் குடிபுக வேண்டியது - திவான்” என்று நோட்டீஸ் அடித்து ஒட்டினார்கள் நகராட்சி ஆட்கள். அந்த எற்பாட்டின்படி எல்லா சாமிகளும் இடம் மாற்றம் செய்யப்பட்டது. பாக்கி அரிய நாச்சி கோயில் ஒன்றுதான். வண்டியில் ஏறிக் கொண்டார். “வீட்டுக்குத்தானே சாமிகளே” என்றான் மூக்கன்.
“வேண்டாம்; நேரே ஆபிஸுக்கு போய்விடு. விட்டுட்டு அம்மாவிடம் போய் மத்யான சாப்பாடு அனுப்ப வேண்டாம்; வீட்டிற்கே வந்து விடுகிறேன் என்று சொல்லி விடு” என்றார்.
அரிய நாச்சி கோயிலைப் பெயர்ப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அந்தக் கோயிலைப் பேட்டையார்கள் பராமரித்து வந்தார்கள். தலைவர் வெங்கட்ராமன் செட்டி காசுக்கடை வைத்திருந்தார்; பெரிய தனவந்தர். நவராத்திரி வந்துவிட்டால் அரிய நாச்சியின் உற்சவத்தை பெரிய அளவில் செய்வார். ஒன்பது நாளும் வருகிறவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சாப்பாடு; வேஷ்டி அங்கவஸ்திரம்; தவிர வருகிற பிராமணர்களுக்கு ஒரு பவுனில் அம்மன்காசு என்று அமர்க்களப்படும். அவர் தன் வரை கோயிலை இடிக்கக்கூடாது என்று முயற்சிகள் எடுத்துப் பார்த்தார். ராமையா சாஸ்திரி அசைந்து கொடுக்கவில்லை. கல்யாண சுந்தர ஜடால்லபரை வேறு ராமையாவிடம் தூது அனுப்பினார். ஒன்றும் நடக்கவில்லை. நேரே பைரவத் தேவனிடம் போய் பிராது வைத்து விட்டார். அதற்குத்தான் இன்று பஞ்சாயத்துக்கு ரீஜண்ட் வரச் சொல்லியிருக்கிறார்.
அலுவலகத்தில் இறங்கிக் கொண்டார். சலாமிட்டவர்களை அங்கீகரித்தவாறே அறைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டு கேதரினைக் கூப்பிட்டார். நல்ல வேளை! சற்று சீக்கிரமாகவே வந்து விட்டாள். நோட்டும் பென்சிலுமாக முன் நின்றாள். படபடவென்று ஆங்கிலத்தில் வாசகத்தைச் சொன்னார். அவள் முகத்தில் வியப்புக் குறியும் கேள்விக் குறியும் தொக்கி நின்றன. என்றாலும் ஒன்றும் கேட்கவில்லை. அவள் சுபாவம்.
லெட்டரை டைப் செய்து கொண்டு வந்து கொடுத்தவுடன் வாங்கி மடித்து சட்டைப் பையில் வைத்துக் கொண்டே “கிளம்புகிறேன். மத்யானம் வர மாட்டேன். ஏதாவது அவசர அலுவல் இருந்தால் மட்டும் ஆளனுப்பு” என்று கொல்லிவிட்டு போய் சாரட்டில் ஏறிக் கொண்டு நேரே ரெஸிடென்ஸிக்கு விடச் சொன்னார்.
போய்க் காத்திருந்தார். ரீஜண்ட் வரவில்லை. பைரவத் தேவன் வந்து உர்ரென்று உட்கார்ந்திருந்தது. வந்தபோது எழுந்திருக்கிற மாதிரி பாவலா பண்ணி விட்டு முகமன் கூறி விட்டு உட்கார்ந்து விட்டார் ராமையா சாஸ்திரி. 'நீ ராஜா என்றால் நான் திவான். நீயென்ன ராஜா? பல்லுப் போன ராஜா... இனிமேல் வெள்ளைக்காரன்தான் ராஜா'
காரசாரமாக விவாதம் ரீஜண்ட் வந்த பிறகு, பைரவனால் சேர்ந்தார்ப்போல் நாலு வார்த்தை பேச முடியாது. அதற்காகத்தான் துபாஷ் நாராயணனைக் கூட்டி வந்திருக்கிறான். என்றாலும் தன் வாதங்களை - ஏன் கோயிலை இடிக்க கூடாது என்கிற காரணங்களை நன்றாக எடுத்துக் வைத்துக் கொண்டிருந்தான். ரீஜண்ட் இருவரையும் சுவாரஸ்யமாக கவனித்துக் கொண்டிருந்தார். அவருக்கு ராமையாவிற்கும் பைரவனுக்கும் பேதமில்லை. எல்லாம் சுதேசி அடிமைகள்.
ஒரு கட்டத்தல் ராமையா தன் பிரம்மாஸ்திரத்தை எடுத்து வீசினார். பையில் வைத்திருந்த கடிதத்தை எடுத்து ரீஜண்டிடம் கொடுத்து, “இந்த ஏற்பாட்டுக்கு நீங்களோ ராஜாவோ சம்மதிக்கவில்லை என்றால் நான் ராஜினாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்று சொல்லி விட்டு திகைத்த இருவரிடமும் அவசரமாய் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார்.
மலையாள ராஜ்யத்திலும் இதுதான் நடந்தது. வண்டியில் ஏறும்போது தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாமோ என்று தோன்றியது. ஒரு கணம்தான். மறுபடி வீம்பு தலைதூக்கியது. எவ்வளவு செய்திருக்கிறேன்! மலையாள ராஜ்யத்திலும் நிறைய செய்தேன். பங்காளி சண்டையில் மாட்டிக் கொண்டேன். ஒரு உறவுக்காரன் ராஜாவைக் கொலை செய்ய ஏற்பாடு செய்யச் சொல்வதாக அவன் கையெழுத்தில் போலிக் கடிதம் தயாரித்து அதை அந்த ஊர் ராஜா கையில் கிடைக்கும்படிச் செய்தபின் தான் அங்கிருந்து தப்ப முடிந்தது.
நேரே வீட்டுக்குப் போனார். “லட்சுமி இலையைப் போடு” என்றர் லட்சுமி ஆச்சரியமாக அவர் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள். இன்றைய இரண்டாவது அதிர்ஷ்டம் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறதே பிராமணன்! வழக்கத்தை விடக் கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டார். நல்ல திருப்தியாக உட்கார்ந்த போது ரெஸிடென்ஸியிலிருந்து ஆள் வந்து விட்டது. அவர் கிளம்பிய பின் ரீஜண்டும் ராஜாவும் மறுபடி பிரச்னையை அலசியதாகவும் திவானின் முடிவுக்குச் சம்மதிப்பதாகவும் ராஜினாமாவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படிக்கும் தகவல் வந்துவிட்டது. எதிர்பார்த்ததுதான்.
சட்டையைக் கழற்றி விட்டு மேல் அங்கவஸ்திரத்தைத் தோளில் போட்டுக் கொண்டு பாக்கை மென்றார். நாதவிந்து கலாதி.... சற்று உல்லாசமாகக் கூட இருந்தது. இந்தப் பிடிவாதம் இல்லையென்றால் கிளார்க்காக இருந்து தாசில்தாராக உயர்ந்து திவான் ஆகியிருக்க முடியுமா? வெள்ளைக்காரனிடம் நற்சான்றுதான் வாங்கியிருக்க முடியுமா?
கண்ணைக் சொக்கிக் கொண்டு வந்தது. போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டார். எண்ணத்தில் அப்படியே அமிழ்ந்து அமிழ்ந்து உறங்கிப் போனார்.
மாமா சிவப்புக்கல் கடுக்கனுடன் விழித்துப் பார்த்தார் “தோலை உரிச்சுப்பிடுவேன் படவா” மாமி நிஷ்டூரமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள். அம்மா பயத்துடன் ‘நம்ம லட்சுமியை..........’ அதைவிட பயத்துடன் லட்சுமி நின்று கொண்டிருந்தாள். சின்னப் பெண் - பாவடை சட்டை போட்டுக் கொண்டு.
“அய்யா ராமையா!” யாரோ கட்டிலை உலுக்கினாற் போல் திடுக்கிட்டு எழுந்திருந்தார் ராமையா. சின்னப் பெண் அரக்குக் கலரில் பாவாடை சட்டை; காதில் ஜிமிக்கி காலில் கொலுசு முகம் பூரா மஞ்சள் பூசிக்கொண்டு நெற்றிக்கு இட்டுக் கொண்டு தகதகவென்று நின்று கொண்டிருந்தாள் சிரித்தவாறே. லட்சுமி கனவில் வந்ததனால் ஏதோ பிரமை போலிருக்கிறது என்ற மறுபடி கண்ணைக் கசக்கியவாறே உற்றுப் பார்த்தார் ராமையா. இது லட்சுமி இல்லை; வேறு யாரோ. நவராத்திரியின் போது லட்சுமி இது மாதிரி ருதுவாகாத குட்டிகளை வைத்துக் கொண்டு கன்யா பூஜை என்ற ஏதோ செய்வாள்; குழந்தை இல்லாத ஏக்கம். அந்த மாதிரி ஏதோ ஒரு பெண் வந்திருக்கிறதோ? நவராத்திரிக்கு இன்னும் நாளிருக்கிறதே? மறுபடி மறுபடி உறுத்துப் பார்த்தார். கனவுமில்லை பிரத்யட்சமாக ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறது.
கை வளையல்களை வைத்து ஓசை செய்துவிட்டு கலகலவென்று சிரித்தது. காலில் கொலுசு சத்தத்துடன் பாண்டி ஆடுகிற மாதிரி மேலேயும் கீழேயும் நடந்து விட்டுக் கெக்கலி கொட்டிச் சிரித்தது.
“ராமையா! நான் அரியவள் வந்திருக்கேண்டா. நீ என் குஞ்சுடா; என் எச்சிலை உன் வாயில துப்பினேன்டா; அதுல தான் இந்த மட்டில வந்திருக்க. என்னை, என் இடத்தை விட்டு உன்னால கிளம்ப முடியாதுடா. அதை இத்தோட விட்டுடு”
ராமையா குழம்பிப் போனார். ஆட்களைக் கூப்பிட, வாயைத் திறந்தார். பேச்சு எழும்பவில்லை. எழுந்திருக்க முயன்றார் முடியவில்லை. இது கனவா? சொப்பனஸ்தை என்கிறார்களே அதுவா?
“இப்பவும் நம்பிக்கைப் பட மாட்டேங்கறியே நிறுத்துடா உன் தந்திரத்தையெல்லாம்; உன் பெண்டாட்டி வயத்தில அப்பதான் நானே வருவேன். தத்தித் தரிகிட தித்தித் திரிகிட தித்தித் திரிகிட தித்தோம்...” என்று பாடிக் கொண்டே மீண்டும் கலகலவென்று சிரித்தது குழந்தை.
எழுந்திருக்க முயன்று தடாலென்று கட்டிலில் இருந்து கீழே விழுந்தார் ராமையா சாஸ்திரி. லட்சுமி உக்ராண அறையிலிருந்து ஓடி வந்தாள். “அய்யோ! என்னன்னா ஆச்சு?” என்று பதறினாள். ராமையாவால் பேச முடியவில்லை. மலங்க மலங்க விழித்துக் கொண்டே தண்ணீர் வேண்டுமென்று சைகை செய்தார். ஒரு மடக்கு குடித்துவிட்டு சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டு ‘ஒன்றுமில்லை கவலைப்பட’ என்று சைகை காண்பித்தார்.
அன்றைக்கே ‘கோயில் அதே இடத்தில் இருக்கலாம்; மாற்றம் செய்ய வேண்டியதில்லை’ என்று ரீஜண்டுக்கும் ராஜாவிற்கும் அலுவலர்களுக்கும் தாக்கீது அனுப்பி விட்டார்.
நன்றி:லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2016