வெள்ளி, 29 ஏப்ரல், 2016

சிதம்பர சுப்ரமணியனின் இதய நாதம்

நீண்ட நாட்களாக இந்த எழுத்தாளரின் எழுத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். நான் படித்த மணிக்கொடி எழுத்தாளர்களில் விடுபட்ட கண்ணி இவர். மற்ற எல்லோரையும் படித்திருக்கிறேன்.
தவிரவும் இந்த நாவல் சங்கீதத்தைப் பற்றி என்று பிரபலமாகப் பேசிக் கொண்டார்கள். ஜானகிராமன் நாவல்களில் சங்கீதம் அடிநாதமாக ஓடிக் கொண்டிருக்கும். மோகமுள் கிட்டதட்ட சங்கீதக்காரன் பற்றியது தான். அதனுடைய உட்கருத்து வேறாக இருந்த போதும்.
இந்த சமயத்தில் தமிழர்களுக்கு சங்கீதம் குறித்த 'வீக்னஸ்' எனக்கு நினைவுக்கு வருகிறது. தமிழ் மரபு என்பது சங்கீதத்துக்கு அடிமையான மரபு என்றுதான் தோன்றுகிறது. 'பாணர்' விறலி என்கிற சங்ககால மரபைப் பற்றி எவ்வளவோ கேள்விப் படுகிறோமே ஒழிய அது எத்தகைய வடிவம் கொண்டிருந்தது என்று கூற முடியவில்லை. இப்போது இருக்கும் சங்கீத வடிவத்திற்குப் பெரிய தொன்மை கிடையாது. நாயக்க மராட்டிய மன்னர்கள் காலத்தில்தான் தற்போதைய வடிவம் உருக்கொண்டு எழுச்சி பெற்றது எனலாம்.
அப்படிப் பார்க்கும்போது தமிழர்கள் சங்கீதத்தின் மேல் பைத்தியமாக இருந்திருக்கிறார்கள். எஸ்.ஜி. கிட்டப்பாவும், கே.பி. சுந்தராம்பாளும் இந்தப் புராதனக் கலையைக் கிட்டத்தட்ட நவீன பாணிக்கு மாற்றினார்கள் என்றே சொல்லலாம். இதில் சங்கரதாஸ் ஸ்வாமிகளின் பங்கும் பெரிது. இப்படித்தான் தியாகராஜ பாகவதர் சங்கீதத்திலும், பி.யு.சின்னப்பா சங்கீதத்திலும் கட்டுண்டு கிடந்தது தமிழ்ச்சமூகம்.
இந்தச் சூழ்நிலையில்தான் சிதம்பர சுப்ரமணியத்தின் இதயநாதம் வெளிவந்திருக்கிறது. சிதம்பர சுப்ரமணியன் மணிக்கொடி எழுத்தாளர்களிலேயே சற்று வித்தியாசமானவர். எழுத்தை ஜீவனோபாயமாக வைத்துக் கொண்டு மணிக்கொடி எழுத்தாளர்கள பலர் அல்லாடியதைப் போல இவர் அல்லாடவில்லை.
படித்துப் பட்டம் வாங்கியவர். நல்ல நிலையான உத்யோகம் செய்தவர். எழுத்தாளர்களுக்கே உரித்தான எந்த 'வீக்னஸூ'ம் இல்லாதவர். இவர் இந்த நாவலில் கிட்டண்ணா என்கிற சங்கீதக்காரனைப் பற்றி எழுதுகிறார்.
கிட்டண்ணாவின் தந்தையே பெரிய இசைக் கலைஞர். தாசி வீட்டில் பழியாகக் கிடந்து வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார். அவர் அகாலமாய் மரிக்க கிட்டண்ணாவின் அன்னை பிள்ளையை சங்கீத வாசனையே தெரியாமல் வளர்க்க முயலுகிறார். பையன் படிப்பில் சுமாராக இருப்பதால் வேத அத்யயனத்துக்கு அனுப்ப உத்தேசிக்கும்போது கிட்டண்ணா வீட்டைவிட்டு ஓடிப்போகிறார். விதி வசத்தால் ஒரு பெரிய சங்கீத வித்வானிடம் வந்து சேருகிறார். அவரிடம் குருகுல வாசமாய் சங்கீதம் கற்றுக் கொள்கிறார்.
பெரிய வித்வானாகும் கிட்டண்ணா சங்கீதத்தை ஜீவனோபாயமாகக் கொள்வதில்லை; ஆத்ம சமர்ப்பணமாக மட்டுமே பாடுவது என்று நிச்சயித்து அதன்படி வாழ்ந்து வருகிறார். சம்பாத்தியம் இல்லாததால் மனைவியிடம் பிணக்கு என்றாலும் அவர் தன் வழி முறைகளை மாற்றிக் கொள்வதில்லை.
பெரிய பாடகியான பாலாம்பாள் என்கிற தாசி அவர் மீதும் அவர் சங்கீதத்தின் மீதும் பெரிய மதிப்பு வைத்திருக்கிறாள். அவரிடம் சங்கீதம் கற்றுக் கொள்கிறாள். கிட்டண்ணா மீது பாலாம்பாள் வைத்திருந்த பிரேமை நாளாவட்டத்தில் காதலாக மாறுகிறது. கிட்டண்ணா வெறுத்துப் போய் அவளிடமிருந்து விலகுகிறார். பாடிக் கொண்டிருக்கும் கிட்டண்ணாவிற்குக் குரல் போய் விடுகிறது. குரல் போனாலும் இதயத்தில் ஒரு நாதம் செவிப் புனல்களை அடைந்த வண்ணம் இருக்கின்றது என்கிற ஞானத் தெளிவைக் கிட்டண்ணா பெறுவதுடன் நாவல் முடிவடைகிறது.
மிகவும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் வற்புறுத்தும் இந்த நாவலை செவ்வியல் வரிசையில் சேர்க்க முடியுமா தெரியவில்லை.
பின்னாளில் எழுதிய நா. பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களின் எழுத்துக்கு இந்நாவலை முன்னோடியாகச் சொல்லலாம். இந்நாவலின் மைய நோக்கு உயரியதாக இருந்தாலும் கதாபாத்திரங்கள் தரையில் நடப்பவர்களாக இருந்தார்களா என்பது சந்தேகம்தான். ஜானகிராமன் இப்படி எழுதவில்லை. சங்கீதத்தை அடிநாதமாக வைத்துக் கொண்டாலும் வாழ்க்கை அவலங்களை நகமும் சதையுமான மனிதர்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டு போனார். போகிற போக்கில் பெண் ஆராதனை என்கிற யட்சியிடமும் மாட்டிக் கொண்டார் ஜானகிராமன்.
சிதம்பர சுப்ரமணியனுக்கு இது போன்ற குழப்பங்கள் இருந்திருப்பதாய்த் தெரியவில்லை. புலனுகர்ச்சியைப் பற்றி எழுதும் போதும் வரம்பு மீறா ஜாக்ரதை உணர்ச்சியுடன் தான் எழுதியிருக்கிறார். சுதந்திரத்துக்குப்பின் வந்த சில தலைமுறைகளில் இப்படித்தான் படைப்பாளிகள் இருந்திருக்கிறார்கள்.
தமிழில் அல்லது எந்த மொழியிலும் செவ்வியல் நோக்கு என்று ஒன்று உண்டு. அதை உரித்துப் பார்த்தால் நல்லவன்; கெட்டவன் என்கிற பாகுபாடும் அவர்கள் இடையில் நடக்கும் சம்வாதமும்தான் இலக்கியம் என்கிற நோக்கு உண்டு. நல்லவன் துன்புறுவான், கெட்டவன் கொடுமைப் படுத்துவான். கடைசியில் நல்லவன் ஜெயிப்பான் - கெட்டவன் தோற்பான். மனித மனங்கள் மிகவும் எளிமையாகப் புரிந்து கொள்ளும் சூத்திரம் இது. இதன் பிரகாரம்தான் உலக இலக்கியங்கள் படைக்கப்பட்டுள்ளன. மகாபாரதம் ஒன்று மட்டுமே விதிவிலக்கு. மகாபாரதம் மட்டும்தான் ஸ்வதர்மத்தைப் பேசுகிறது.
செவ்வியல் கோட்பாடெல்லாம் மாறி நல்லவன் கெட்டவன் கருத்தெல்லாம் ஒழிந்து இலக்கியம் எங்கோ போய்விட்டது. குறிப்பிட்ட குணாதிசயங்களுடன்தான் மனிதர்கள் பிறக்கிறார்கள் என்கிற சித்தாந்தத்தின்படி இலக்கியம் படைத்த ஷேக்ஸ்பியர் போன்றோர் இன்று காயலாங்கடைக்குச் சென்று விட்டார்கள். என்றாலும் தற்கால இலக்கியங்களிலும் ஓதோ ஒரு சம்வாதம் கதாபாத்திரங்களுக்கிடையில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. புத்தகங்களில் புதினங்களில் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் பொருது செய்து சொண்டுதான் இருக்கிறார்கள்.
இதுபோன்ற சம்வாதம் இல்லாதது ஒன்றுதான் இதய நாதத்தின் பெரிய குறை என்று தோன்றுகிறது



சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...