புதன், 28 அக்டோபர், 2020

மதுரா விஜயம்

மதுரா விஜயம் வெளியே “ஜெய விஜயீ பவ!” என்கிற கோஷம் விண்ணைப் பிளந்தது. கங்காதேவிக்கு ஒரு ஆச்சர்யமும் எதிர்பார்ப்பும் இல்லை. படை வீட்டில் அமர்ந்து கொண்டு தான் சற்று முன் பூஜை செய்திருந்த பவானி அன்னையின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சங்கம குலகுருவான கிரியா சக்திப் பண்டிதர் வயது முதிர்ந்த பிராயத்தில் அவளுக்கு அளித்த பிரதிமை அது. நல்ல சிற்பியின் கை வேலைப்பாடு அந்தச் சிலையில் மிளிர்ந்தது. அமர்ந்த நிலையில் இருந்த அந்த ஐம்பொன்னால் ஆன சிலை தவழ்ந்த புன்முறுவலுடன் திருத்தமாக அமைக்கப்பட்டிருந்தது. கையில் வில்லும் பாசங்குசமும் அபய ஹஸ்தமும் கொண்டிருந்த அருமையான சிலை. கிரியா சக்திப் பண்டிதர் குருநாதர் விஸ்வநாதனிடம் சொல்லி அனுப்பினாராம்: “பிராண பிரதிஷ்டை செய்து விட்டேன். என் யோக சக்தி எல்லாம் இதில் இறக்க விட்டேன். வீட்டுக்கு விலக்கான நேரம் தவிர மற்ற காலங்களில் தவறாமல் பூஜை செய்யச் சொல்லு. கங்கா போகின்ற இடங்கள் எல்லாம் ஜயமாகவே இருக்கும். கங்காவின் பணி இன்னும் நிறைய வருடங்கள் இருக்கின்றன. எல்லாம் நல்லபடியாக முடியும்” என்று வாழ்த்தியிருக்கிறார். விஸ்வநாதன் பிரதிமையைக் கொடுத்தபோது. கங்காவின் இள நெஞ்சு ஒருமுறை விம்மிதத்தால் விம்மித் தாழ்ந்தது. அதை மார்போடு அணைத்துக் கொண்டாள். குலகுரு அகஸ்தியரையும் தன் குரு விஸ்வநாதனையும் ஒருமுறை நன்றியுடன் நினைத்துக் கொண்டாள். இன்னும் சற்று நேரத்தில் அரசர் படை வீட்டுக்குள் வந்துவிடுவார். வெளியே ஆரவாரம் அதிகரித்துக் கொண்டே வந்தது. சேடிப் பெண்களை ஆரத்தி எடுப்பதற்காக அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகப் பணித்தாள். அதற்குமுன் கங்கா தேவி அவசர அவசரமாக எழுத்தாணியையும் ஓலை நறுக்கையும் எடுத்தாள். பரபரவென்று சமஸ்கிருதத்தில் எழுத ஆரம்பித்தாள். “கல்ப விருக்ஷம் போன்று அனைவருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்பவரான யானை முகத்தோனாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை சரணடைகிறேன்.” வெளியே குரல் கேட்டது. ‘அரசி! மன்னரும் பரிவாரங்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆரத்தி கரைத்துத் தயாராக இருக்கிறது. நீங்கள் உடனடியாக வரவேண்டும்” “இதோ வருகிறேன்” ஓலை நறுக்கையும் எழுத்தாணியையும் வைத்து விட்டு முக்காட்டைச் சரி செய்து கொண்டே எழுந்து கிளம்பினாள். வழியெங்கும் ஜனங்கள் சாரி சாரியாக நின்று பூவை இறைத்திருந்தார்கள். மணம் ஆளைத் தூக்கிற்று. ரோஜா சம்பங்கி இருவாட்சி மல்லிகை முல்லை தாமரை மற்றும் ஜவ்வந்தி எங்கும் ஒரே ‘ஜெய விஜயீபவ’ கோஷம். அது ஆஞ்சநேயர் இலங்கையிலிருந்து வானமார்க்கமாக திரும்பி வந்து கொண்டிருந்தபோது குரங்குகள் மரங்களில் ஏறி உட்கார்ந்து கொண்டு கிளைகளைக் கையில் ஆட்டிக் கொண்டு ‘கிலகில’ என்று சப்தமிட்டது போல் கண்ணனூரில் அன்று ஒரே ஆரவாரமாக இருந்தது. வெளியே மன்னனை வரவேற்பதற்காகப் பூர்ண கும்பத்துடன் கோபணார்யன் வேதியர்களுடன் நின்று கொண்டிருந்தார். கூடவே மந்திரி சாளுவமங்குவும் முகமலர்ச்சியுடன் கையில் மாலையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். கங்காதேவி உற்று நோக்கினாள். மாலை மயங்கும் நேரம். மேற்குத் திசையில் வான் செக்கர் நிறமாகக் காட்சி அளித்துக் கொண்டிருந்தது. அன்று நினைத்தே பார்க்க முடியாத வெற்றியைத் தட்டிப் பறித்த மன்னன் குமார கம்பண்ணனும் மேற்கே மறையும் ஆதவனுக்கிணையான ஒளிப்பிழம்பு போல் நடந்து வந்து கொண்டிருந்தான். கூடவே சேநாதிபதி சோமபப்ப நாயக்கரும் உபசேநாதிபதிகளும் மண்டலாதிகாரிகளும் வந்து கொண்டிருந்தனர். மன்னன் கம்பீரமாக வந்து கொண்டிருந்த இடத்தில் காச்மீர ரத்தின கம்பளத்தால் நெய்யப்பட்ட நடை பாவாடை விரிக்கப்பட்டிருந்தது. கங்காதேவி உற்று நோக்கினாள். ராஜா ஏற்கெனவே நல்ல உயரமும் அகலமான மார்பும் வாளைப் பிடித்துப் பிடித்துக் காய்த்துப் போன கைகளும் கொண்டவன். இப்போது மார்புக் கவசமும் கையுறையும் அணிந்திருந்ததில் இன்னமும் ஆகிருதி பெரியவனாய்க் காணப்பட்டான். நெருங்கி வந்ததும் கோபணார்யரும் வேதியர்களும் பூர்ண கும்பம் அளித்து ஸ்வஸ்திஸ்ரீ சொல்ல ஆரம்பித்தார்கள். மன்னன் பூர்ண கும்பத்தை முகமலர்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான். அது முடிந்தவுடன் கங்காதேவியும் உடனிருந்த முதிய தாதி ஒருத்தியும் ஆரத்தி எடுக்க முன் வந்து குனிந்தனர். கம்பண்ணன் ஆரத்தியை ஏற்றுக் கொள்ளும் போது முகம்கொள்ளாத சிரிப்புடன்,“கமலே கமலோத் பத்தி ஸ்ருயதே நதுத்ருயஸே” என்றான். ராணி புன்னகை புரிந்து விட்டுப் பேசாமல் இருந்தாள். “சொல் கங்கா. தாமரையில் தாமரை மலர்வது கேள்விப்படுவது மட்டுமே. எங்கும் கண்டதில்லையே” என்று அந்த ஸ்லோகத்தின் மொழியாக்கத்தைச் சொன்னான். அதற்கும் கங்கா அசரவில்லை. குமார கம்பண்ணன் பொறுத்துப் பார்த்து விட்டு, “பாலே தவமுகாம்போஜே கதமிந்தி வரத்வயம்” என்று சொல்லிவிட்டு ஓ பெண்ணே! உன் தாமரை முகத்தில் எப்படி இரண்டு தாமரைகள் உள்ளன?” என்றுகேட்டுப் பெரிதாக நகைத்தான். கங்காதேவியும் பெரிதாகப் புன்னகைத்து “குமாரரே! உங்கள் அளவிற்கு என்னிடம் சமஸ்கிருதப் புலமையை எதிர்பார்க்காதீர்கள். நான் உங்கள் மனைவியாக இருக்கலாம். ஆனால் உங்களையே சார்ந்திருக்கும் அபலை” என்றாள். மன்னன் அவளை மீண்டும் உற்று நோக்கினாள். “வாருங்கள்; வேடிக்கைப் பேச்சு போதும்” என்று படை வீட்டுக்குள் நுழைந்தாள். மற்றவர்கள் நின்று கொண்டார்கள். தாதிப் பெண் ஆரத்தியைக் கொட்டுவதற்காக எடுத்துச் சென்றாள். இப்போது மந்திரி பிரதானிகள் வெளியில் நிற்க ராணியும் மன்னனும் படை வீட்டுக்குள் நுழைந்தார்கள். அரசன் கைகால்களை சுத்தம் செய்து கொண்டு தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த பூக்களில் கொஞ்சம் எடுத்து இரண்டு கைகளாலும் சற்று கண்ணை மூடி தியானித்த பின் பவானி சிலைக்கு அர்ப்பணித்தான். மன்னனும் அரசியும் பவானி முன் நமஸ்காரம் செய்து எழுந்தனர். “கங்கா! மூன்றாம் வீர வல்லாளன் எங்கள் குல எதிரியாக ஒரு காலத்தில் இருந்தவன் இதே கண்ணனூரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். அவனைக் கொன்ற மதுரை சுல்தான் அவன் உடலைக் கீறி அதில் வைக்கோலைத் திணித்து மதுரைக் கோட்டை வாயிலில் தொங்க விட்டான். அதற்கு இவ்வளவு வருடங்கள் கழித்து - முப்பத்து ஒரு வருடங்கள் கழித்து நான் பழி வாங்கினேன். இன்னும் பவானியின் ஆணைகளில் பாக்கி என்னென்ன இருக்கின்றன சொல்” என்றான் குமார கம்பண்ணன். “அரசே! நாம் இவையெல்லாம் பல முறை பேசிக் கொண்டது தான். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் மதுரை சுல்தான்களுக்கும் டெல்லி சுல்தான்களுக்கும் துணை போன தொண்டை மண்டல அரசர்கள் ராஜநாராயணனையும் அவன் மகன் இரண்டாம் வென்று மண்கொண்டானையும் வெற்றி கொண்டிருந்தீர்கள். வெற்றிக்குப் பெரிதும் வித்திட்ட உங்கள் ஒன்று விட்ட சகோதரர் வீரசவண்ணனும் படைத் தளபதியான சாளுவ மங்குவும் செய்த சாதனைகள் கொஞ்ச நஞ்சமா? அவர்களைக் கொல்லாமல் விட்ட தங்களின் பெருந்தன்மையும் சாதாரணமா?” “அவர்கள் உயிர் பிழைத்ததற்கு நீ தானே காரணம்? நீ மட்டும் அன்று என்னைத் தடுத்திருக்காவிட்டால் இருவர் தலைகளும் மண்ணில் உருண்டிருக்கும். நம் விஜய நகர அரசுக்கு உட்பட்ட பகுதியாகத் தொண்டை மண்டலத்தை மாற்றி அவர்களையே அப்பகுதிகளை ஆண்டு வர அனுமதித்தது எவ்வளவு பெரிய சாமர்த்தியம்? அதனாலேயே இன்று நாம் இந்தப் போரில் வெல்ல முடிந்தது.” “அரசே! அவர்களிடம் ராஜ்யத்தைத் திருப்பிக் கொடுக்க நீங்கள் ஆணையிட்ட போது வீர சவண்ணரும் சாளுவ மங்குவும் புற்றில் இருக்கும் கருநாகம் போல் சீறினார்கள். நீங்கள் தான் சம்புவரையனுக்கு மீண்டும் முடிசூட்ட அவர்களையே நியமித்து அவர்களுக்கு ‘சம்புவராய ஸ்தாபனா சார்யர்’ என்கிற பட்டத்தையும் வழங்கினீர்கள்.” “காரணம் என்னவென்றால் வென்று மண் கொண்டான் மக்களின் மனம் கவர்ந்தவன். அவன் சந்ததியரான ராஜ நாராயணனும் இரண்டாம் வென்று மண்கொண்டானும் மக்கள் மனமகிழ ஆட்சி நடத்தியவர்கள். அவர்கள் செய்த தவறுகள் ஒன்றிரண்டு உண்டு. குறிப்பாக மாலிக்கபூர் படையெடுப்பின் போது அவர்கள் நம் நாட்டில் நிகழ்ந்த கொள்ளைகளையும் கொலைகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பயம் தான் காரணம். ஆனால் பின்னர் நடந்த உலூக்கானின் படையெடுப்பின் போது தொண்டை மண்டலம் அவன் வசமான போது சம்புவரையர்கள் விழித்து எழுந்தனர். மீண்டும் தொண்டை மண்டலத்தைப் பதிநான்கு ஆண்டுகள் கழித்து வென்று மண் கொண்டான் கைப்பற்றினான். அப்போது முகம்மதியர்கள் படையெடுப்பில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர். கோயில்கள் மீண்டும் மீண்டும் கொள்ளை அடிக்கப்பட்டன. மக்கள் கிராமம் கிராமமாக வெளியேறி சம்புவரையர் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களுக்குப் பெயர்ந்தனர். அப்போது தேடி வந்தோர்க்கு இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை, குடிநீர் போன்றவற்றை அஞ்சினான் புகலிடங்களில்’ செய்து தந்தான். அதனால் நமக்கு சம்புவரையர்கள் மேல் பரிவு உண்டானதில் ஒரு வியப்பும் இல்லை.” “கங்கா! நன்றாகக் கவனி. நீ எங்கள் குல எதிரிகளாக இருந்த காகதீய மன்னன் பிரதாபருத்ரனின் வம்சாவளியில் வந்தவள். பிரதாப ருத்ரன் முப்பிடி நாயக்கன் தலைமையில் வென்ற காஞ்சியை மீண்டும் ஏகாம்பரநாதன் சம்புவரையன் கைப்பற்றியதால் அவன் வென்று மண் கொண்டான் என்று அழைக்கப்பட்டான். அவர்கள் சந்ததியிடமிருந்து நாம் தொண்டை மண்டலத்தை இப்போது கைப்பற்றியதில் உங்கள் குலப் பழியும் இப்போது தீர்ந்ததல்லவா?” கங்கா பூரிப்புடன் மன்னனை அணைத்துக் கொண்டாள். “குமாரரே! உங்களுக்கு நினைவு இருக்கிறதா? கோலாரில் தாங்கள் சேநாதிபதியாய் இருந்த போது குதிரையில் வந்து கொண்டிருந்த தாங்கள் என்னைப் பற்றி விசாரித்து வர அனுப்பினீர்கள். அப்போது நான் காகதீய வம்ச வாரிசு என்று தெரிந்து கோபத்துடன் என்னைத் தூக்கி வர ஆளனுப்பினீர்கள்...” கம்பண்ணன் புன்னகைத்தான். “நன்றாக நினைவிருக்கிறது தேவி. அப்போதுதான் நீ ஓலை நறுக்கில் “தாமரையில் தாமரை மலர் மலர்வது கேள்விப்படுவது மட்டுமே; எங்கும் கண்டதில்லையே” என்கிற காளிதாசன் தொடர்புடைய ஸ்லோகத்தை எழுதி என்னிடம் மறுமொழி கேட்டிருந்தாய். அப்போது எனக்கு சமஸ்கிருத இலக்கியங்களில் பரிச்சயம் இல்லாதிருந்ததால் விழித்தேன். அதற்கு மறுமொழி சொன்னால் மட்டுமே நீ எனக்குச் சொந்தமாவாய் என்கிற நிபந்தனையையும் விதித்திருந்தாய். நான் செய்வதறியாது திகைத்துப் போய் எங்கள் குலகுரு கிரியா சக்திப் பண்டிதரை அழைத்து அதைக் காண்பித்தேன். அவர் பெரிதாக நகைத்து விட்டுக் “குமாரா! நான் உன்னிடம் பலமுறை சொன்னேன். நீ கேட்கவில்லை. சமஸ்கிருத இலக்கியங்களையும் சரித்திரங்களையும் நீ அவசியம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று கூறினேன். நீ ‘வாளும் கேடயமும் இருந்தால் போதும். திக்கெட்டும் உள்ள சாம்ராஜ்யங்களை வெல்வேன்’ என்று மார் தட்டினாய். கடைசியில் ஒரு பெண்ணை உன்னால் வெல்ல முடியவில்லை. பரவாயில்லை. நான் சொல்கிற இந்தப் பிரதி வசனத்தை ஓலையில் எழுதி அனுப்பு. “ஓ பெண்ணே! உன் தாமரை முகத்தில் எப்படி இரண்டு தாமரைகள் உள்ளன?” என்று எழுதி அனுப்பு என்றார்...” கங்கா தேவி பெரிதாக நகைத்தாள். “அரசே! நீங்கள் அதை மட்டுமா எழுதியிருந்தீர்கள்? போர்த் தொழிலிலேயே கவனம் செலுத்தியதால் படிப்புக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றும் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் உங்களுக்குத் தகுந்த குரு ஒருவரைச் சிபாரிசு செய்தால் இரண்டு வருடங்கள் கற்றுத் தேர்ந்து விடுவதாகவும் அச்செய்தியில் தெரிவித்திருந்தீர்கள்...” “அதற்கு நீ எங்கள் குலகுரு கிரியா சக்திப் பண்டிதரே அதற்குப் பொருத்தமானவர் என்றும் இரண்டு வருடங்கள் நீ காத்திருக்கத் தயார் என்றும் எனக்கு மறுமொழி அனுப்பியிருந்தாய். அதிலிருந்து தான் நீயும் என்மீது காதல் கொண்டிருக்கிறாய் என்று மறைமுகமாக உணர்த்தியதைப் புரிந்து கொள்ள முடிந்தது.” “அரசே நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. வெளியில் மந்திரி பிரதானிகள் காத்திருக்கிறார்கள். அவர்கள் செய்ய வேண்டியதைத் தாங்கள் உத்தரவுகளாகப் பிறப்பிக்க வேண்டும்.” “ஆணை தேவி!” என்று மன்னன் போலியாக சிரம் தாழ்த்தி வணங்கி விட்டு வாயிற் காவலர்களை அழைத்து மந்திரி பிரதானிகளை உள்ளே அழைக்கச் செய்தான். கோபணாச்சார்யனும் சாளுவ மங்குவும் சேநாதிபதி சோமப்ப நாயக்கரும் உள்ளே வந்து மன்னன் ஆசனத்தில் அமர்ந்த பின் அமர்ந்து கொண்டார்கள். இதர மந்திரி பிரதானிகள் சற்றுத் தள்ளி நின்று கொண்டிருந்தார்கள். கங்காதேவி வந்தவர்களை வரவேற்கும் முகமாக வணங்கி விட்டு மறைப்பில் சற்று உள்ளடங்கிய அறையில் சென்று அமர்ந்து கொண்டாள். “கோபணாச்சார்யரே! மதுரைப் படையெடுப்புக்கு முன்னர் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏதாவது பாக்கி இருக்கிறதா?” என்றான் குமார கம்பண்ணன். “இரண்டே இரண்டு பணிகள் இருக்கின்றன குமாரா! கண்ணனூரில் ஹொய்சள மன்னனான் வீர சோமேஸ்வரனால் நிர்மாணிக்கப்பட்ட ஹொய்சலேஸ்வரர் கோயில் முகம்மதியர்களால் இடிக்கப்பட்டு மசூதியாக மாற்றம் செய்யப்பட்டது. அக்கோயிலை புனருத்தாரணம் செய்து குடமுழுக்கு நடத்திட வேண்டும்.” “சரி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் ஆச்சாரியரே! அந்தக் கோவிலுக்கான நிவந்தமாக சுற்றுப்புற நிலங்களை இறையிலி நிலங்களாக மாற்றி அவற்றில் அந்தணர் மற்றும் இதர சமூகத்தினர் குடியிருப்புக்களை ஏற்படுத்துங்கள். அதற்கான ஏற்பாடு இன்றே தொடங்கப்படட்டும். அந்த இடத்தை நாம் கண்ணனூரில் வெற்றி கொண்டதன் நினைவாகக் ‘கம்பரசன் பேட்டை’ என்று பெயரிடுங்கள். என் குல முன்னோன் வீரகம்பண்ணன் பெயரால் அது அழைக்கப்படட்டும். இரண்டாம் பணி என்ன?” “ஸ்ரீரங்கம் அழகிய மணவாளனையும் உபய நாச்சிமார்களையும் மீண்டும் ஸ்ரீரங்கம் கோயிலில் எழுந்தருளப் பண்ணுவது” என்றார் கோபாணாச்சார்யன். குமாரகம்பண்ணன் துள்ளி எழுந்து, “என்ன? இந்தப் பாவிகள் அழகிய மணவாளனையுமா விட்டு வைக்கவில்லை? திருமேனிகள் தற்போது எங்கேயிருக்கின்றன என்கிற தகவல் உண்டா?” என்று கர்ஜித்தான். அவன் கை தன்னிச்சையாக அரையில் வைத்திருந்த உடைவாளிடம் சென்றது. கோபணாச்சார்யன் சாந்தமாக “அரசே! சாந்தம் கொள்ளுங்கள். தற்போது தான் நம் ஒற்றர்களிடமிருந்து செய்தி வந்துள்ளது. ஆனைக்கா என்கிற ஊருக்குப் பக்கத்தில் அழகிய சிங்கர் எழுந்தருளியிருக்கும் காட்டில் அழகிய மணவாளனையும் உபய நாச்சியார்களையும் எழுந்தருளப் பண்ணியிருக்கிறார்கள்.” “இத்தனை நாட்களும் எங்கேயிருந்து சேவை சாதித்துக் கொண்டிருந்தார்கள்? இதைக் கேட்க எனக்குக் குலை நடுங்குகிறது. என் வாள் இரத்தம் ‘கொண்டா கொண்டா’ என்கிறது. அரங்கத்து வள்ளலையும் உபய நாச்சியரையும் காக்காத வாள் என்ன வாள்?” “குமாரரே! இன்றைக்கு சுமார் நாற்பத்தெட்டு வருடங்களுக்கு முன் உலுக்கான் படையெடுப்பிலிருந்து அழகிய மணவாளரையும் உபய நாச்சியார்களைக் காப்பாற்றுவதற்காக அரங்கத்திலிருந்து அவர்களைப் பிள்ளை லோகாச்சாரியர் எனும் ஆன்றோர் தலைமையில் எடுத்துச் சென்றார்கள். பிள்ளை லோகாச்சாரியர் எனும் முதிர்ந்த ஞானி பழம் பழுத்து மரத்திலிருந்து விழுவது போல் ஜ்யோதிஷ்குடி எனும் ஊரில் பரம பதம் எய்தினார். அதிலிருந்து பெருமாளும் நாச்சிமாரும் அழகர் கோயில் வழியாக மாவார் சென்று விட்டனர். அங்கே திருக்கணாம் என்கிற ஊரில் சேவை சாதித்து வந்தனர். வீர வல்லாளர் இன்றைக்கு பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் வீர மரணம் எய்திய பின் திருமலைக் காடுகளுக்குச் சென்று விட்டார் பெருமான். அவரையும் பரிவாரங்களையும் அவரைக் காத்து நின்றவர்கள் திருத்தாழ்வரைத்தாசர் என்கிற மகானும் வேறு இருவரும் மட்டுமே.” “நான் தொண்டை மண்டலத்தை வெற்றி கொண்ட பின் செஞ்சியில் சிறிது காலம் எழுந்தருளியிருந்து இப்போது நம்மையெல்லாம் ஆட்கொள்ள வந்திருக்கிறார்.” “தற்போது திருவரங்கத்தின் நிலையென்ன கோபணாச்சார்யரே?” “கோயில் இடிந்துபோய்ப் பாழடைந்து கிடக்கிறது. திருக்கோயிலின் கதவுகளைப் பூச்சிகள் அரித்துக் கொண்டிருக்கின்றன. மறை ஓதும் ஓசையும் வேள்விகளில் எழும் புகையும் மிகுந்திருந்த அரங்கத்து வீதிகளில் மாமிசத்தை வாட்டுவதால் எழும் புகையும் முகம்மதியர்ப் படை வீரர் குடித்துக் கும்மாளமிடும் ஒலியுமே நிறைந்திருக்கின்றன.” “அரங்கனின் நிலை...?” “அவர் எப்போதும் போல் இந்த அலங்கோலங்களைப் பார்த்துக் கொண்டு புன்னகையுடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கிறார். அவர் உறக்கம் கலையாதிருக்குமாறு மேலிருந்து விழும் கற்களை ஆதிசேஷன் தன் தலை மீது வாங்கி நிற்கிறார்...” “இதை இனியும் பொறுக்க இயலாது. இதற்கெல்லாம் மதுரைப் போரில் சுல்தான்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். இப்போதைக்கு நான் செய்ய வேண்டிய இரண்டாம் பணி புரிந்து விட்டது. உடனடியாக அரங்கத்தில் அழகிய மணவாளரும் உபய நாச்சியார்களும் எழுந்தருளப் பண்ண வேண்டும். நாள் குறியுங்கள்.” சாளுவ மங்கு எழுந்திருந்தார். “தங்கள் எண்ணவோட்டத்தை ஆசாரியர் முன்பே கணித்து நாள் குறித்திருக்கிறார் பிரபு. அத்துடன் இடிக்கப்பட்ட கொடிக்கம்பம் மற்றும் பலி பீடங்களை மீண்டும் ஸ்தாபனம் செய்ய வேண்டும் பிரபு. அதற்கு பரிதாப வருடம் வைகாசி மாதம் பதினேழாம் நாள் குறித்திருக்கிறது.” “நல்லது. கோபணாச்சார்யரே! இதற்குண்டான ஏற்பாடுகளைத் துரிமாய் செய்ய உங்களை மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கிறேன். சாளுவ மங்கு உங்களுக்கு உண்டான அனைத்து உதவிகளையும் செய்வார். உள் வீதிகளில் இருக்கின்ற அன்னிய மதஸ்தரை வெளியேற்றி அங்கே வேதியரை குடியமர்த்த ஏற்பாடு செய்யுங்கள். அதற்கான பொருளை நம் பொக்கிஷ சாலையிலிருந்து பெற்றுக் கொள்ளத் திருச்சீட்டு நான் தருகிறேன். அன்னிய மதஸ்தரின் பெண்களை நம் பெண்கள் போல் நடத்த வேண்டுமென்று நம் படை வீரர்களுக்குச் சொல்லுங்கள். ஆசார்யரும் சாளுவ மங்குவும் அரங்கத்தில் புனருத்தாரணம் ஆகி முன் போல் வழிபாடு ஆரம்பிக்கும் வரை ஹொய்சலேஸ்வரர் கோயிலும் நம் வழிபாடுகளுடன் பழையபடி ஆகும்வரை இங்கேயே இருந்து அதை மேற்பார்வை இட உத்தரவு இடுகிறேன். இப்போதைக்கு இக்கூட்டம் கலையலாம்” என்று கூற எல்லோரும் வணங்கி எழுந்திருந்தனர். மன்னன் “சோமப்ப நாயக்கரே! மதுரைப் போருக்கான ஆயத்தங்கள் எந்த அளவில் இருக்கின்றன?” என்றான். சேநாதிபதி சோமப்ப நாயக்கர், “எல்லாம் சித்தமாய் இருக்கிறது மன்னனா! விடியற்காலை புறப்படுகிறோம். தாங்கள் அதற்கு முன் சற்று ஓய்வெடுத்தால் நல்லது. மிகவும் களைத்திருக்கிறீர்கள்” என்றார். அப்போதுதான் மன்னன் தன் உடலில் இருந்த தாளமுடியாத சோர்வையும் வலியையும் உணர்ந்தான். “நன்றி சோமப்பரே!” என்றவுடன் சேநாதிபதி விடை பெற்றுக் கொண்டார். மன்னன் உள் அறைக்குச் சென்றான். அங்கே கங்காதேவி ஏதோ ஒரு கனவுலகில் சஞ்சரிப்பது போல் முகம் விகசிக்க ஓலை நறுக்கையும் எழுத்தாணியையும் மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மன்னனைக் கண்டதும் சடாரென்று எழுந்திருந்தாள். ஓலையும் எழுத்தாணியும் எழுந்த அவசரத்தில் மடியிலிருந்து விழுந்தன. மன்னன் புன்சிரிப்புடன் அவற்றை எடுத்து அவள் கையில் கொடுத்துவிட்டு, “என்ன சிந்தனை?” என்ன எழுதிக் கொண்டிருக்கிறாய்?” “மன்னரே! பெரிய பணி ஒன்றை ஆரம்பித்திருக்கிறேன். தங்களை நான் கரம் பிடித்த போது தாங்கள் ஒரு வாக்குறுதி ஒன்றை வாங்கிக் கொண்டீர்கள். நினைவிருக்கிறதா?” குமாரன் புன்னகைத்தான். “நினைவு இல்லாமல் என்ன? நீ எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும். நான் போர் முனையில் இருந்தாலும் என் கூடவே தங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அதை நீ இன்று வரைக் காப்பாற்றிக் வருகிறாய்.” “குமாரரே! நீங்களும் என் நலனுக்குப் பழுது படாமல் இத்துணை நாளும் நம் கனவத்தனையும் நிறைவேற்றி வருகிறீர்கள். எம் முன்னோரின் வீர சோமேஸ்வரன் நிர்மாணித்த ஆலயத்தை இன்று மீட்டு புனர் நிர்மாணம் செய்ய உத்தரவிட்டுள்ளீர்கள். அதற்கான நன்றியை நான் இன்னும் எத்துணை ஜென்மம் எடுத்துத் தங்களுக்குப் பணி செய்தாலும் தீராது.” குமார கம்பண்ணன் பெருமூச்சைறிந்தான். “அப்போ நான் உனக்குப் பட்ட கடனுக்கு இன்னமும் எவ்வளவு ஜென்மம் எடுக்க வேண்டும் கங்கா சொல். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று நினைத்தபடி வாழ்ந்தேன். பல பெண்களை மணந்தேன். என் வேட்கை தீரவில்லை. அப்படியிருந்தவனை மடை மாற்றம் செய்தவள் நீ?” “போதும் அரகே போதும். நீங்கள் என்றுமே வீரப் பிழம்பு. உங்களிடம் கனன்று கொண்டிருந்த நெருப்பை ஊதிய சிறு பணியைச் செய்தவள் மட்டுமே நான். அதுவுமே என்னால் நடந்ததன்று என் குருநாதர் விஸ்வநாதன் போட்ட பிச்சை அது. தங்கள் குல குரு கிரியா சக்திப் பண்டிதர் தங்களுக்கு அளித்த ஞானமும் கூட. “கங்கா தேவியின் கண்கள் பளித்தன. குமார கம்பண்ணன் தன் குருநாதரை மானசீகமாக வணங்கினான். “இன்று நான் பெற்ற வெற்றிக்கு என் தந்தை புக்கரும் குருநாதரும் தான் காரணம். அவர்களே இதற்கு வித்திட்டவர்கள். ஆனால் மூல காரணம் நீதான். முதன் முதலில் நம்மிடைய இருக்கும் சிறுசிறு பிணக்குகளால் எப்படி அன்னியன் உள்ளே வந்து புகுந்தான் என்பதைப் படிப்படியாக எடுத்துரைத்தாய்.” “நாளை நான் மதுரை செல்கிறேன் தேவி. ஆனால் நான் மதுரையை வெற்றி கொண்ட இக்கணம் இன்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது. நான் மதுரை சுல்தானின் தலைக் கொய்த கணத்தில் அது முடிவாகி விடும். அறுபது ஆண்டுகளுக்கு முன் எழுந்த வஞ்சத்துக்கு இன்று கணக்குத் தீர்க்கப்பட்டு விட்டது. மாறவர்மன் குலசேகரனுடைய பிள்ளைகள் சுந்தர பாண்டியனும், வீர பாண்டியனும் அரியணைக்காக அடித்துக் கொண்டு போரிட்டுக் கொண்டனர். சுந்தரபாண்டியன் தந்தையைக் கொன்று அரியணையை வென்றான். வீர பாண்டியன் டெல்லி பாதுஷா அலாவுதீன் கில்ஜியிடம் சரண் அடைந்தான். கில்ஜியின் ஆணைப்படி டெல்லியிலிருந்து புறப்பட்ட மாலிக்காபூர் முதலில் தேவகிரியைத் தாக்கினான். அவனுக்கு உதவிகள் செய்தவன் உன் குல முன்னோன் மூன்றாம் வீர வல்லாளன். எப்பேர்ப்பட்ட விபரீதம்? அவனுக்கு ராமதேவனுடன் இருந்த விரோதத்தை இப்படிப்பழி தீர்த்துக் கொண்டான். மாலிகாப்பூர் சென்ற இடங்களில் கோயில்களில் புகுந்து விக்ரஹங்களை உடைத்து செல்வத்தைக் கொள்ளையிட்டுக் கொண்டு போனான். மிகவும் உக்ரமாகப் போர் புரிந்த வீர பாண்டியன் தோற்றுக் காடுகளில் பதுங்கிப் பிழைக்க நேர்ந்தது. பின்னர் வந்த உலுக்கான் டெல்லி ஆட்சியின் கீழ் மதுரையைக் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாது கடவுள் நம்பிக்கை உள்ள இந்துக்களை முள்வேலியில் அடைத்துத் தீப்பந்தங்களை எறிந்து கொன்றான்.” “ப்ரும்மபுரியில் மாலிக்காபூர் கோயிலைத் தரைமட்டம் ஆக்கி அங்கிருந்த அந்தணர்களைக் கொன்றான். கருவறையில் இருந்த மகாதேவரின் சிலையை பின்னமாக்கி நாராயணர் விக்ரஹத்தை இடித்துத் தள்ளினான். இதே கண்ணனூரில் ஹொய்சளேஸ்வரர் கோயில் மசூதியாய் மாறியது. என்ன காலக் கொடுமை!” “மதுரையைச் சூழ்ந்திருந்த காடுகள் அழிக்கப்பட்டு நீண்ட இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டு அவற்றில் கொல்லப்பட்ட மனிதர்களின் தலைகள் பொருத்தப்பட்டன.” “இன்றைக்கு நாற்பதாண்டுகளுக்கு முன் இதே கண்ணனூரில் மதுரை சுல்தானை வெற்றி கொண்ட உன் முன்னோன் வீர வல்லாளன் வஞ்சகமாகக் கொல்லப்பட்டான்.” மன்னன் பெருமூச்சு விட்டான். “கம்பிலா நாட்டை உலுக்கான் வெற்றி கொண்ட போது என் தந்தை புக்கரும் பெரிய தந்தை ஹரிஹரரும் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்பட்டு முஸ்லீம்களாக மத மாற்றம் செய்யப்பட்டனர். அவர்கள் அன்னை பவானியின் அருளால் திரும்பி வந்து வித்யாரண்யரின் ஆசியோடு விஜயநகர சாம்ராஜ்யத்தை நிர்மாணம் செய்தார்கள்.” “பெண்களுடன் காலம் கழித்துக் கொண்டிருந்த என் கவனத்தை மேற்கண்ட சரித்திரங்களைச் சொல்லி நீயும் உன் குருநாதர் விஸ்வநாதனும் என்குல குரு கிரியா சக்திப் பண்டிதரும் திரும்பியிருக்காவிட்டால் நான் பெற்ற வெற்றிகளை இதுபோல் பெற்றிருக்க முடியாது.” “கம்பண்ணரே! தங்கள் வீரத்தைக் கேள்வியுற்றிருந்த நான் தங்கள் மீது தீராக் காதல் கொண்டிருந்தேன். இது எப்படி நடக்கும் என்கிற ஆயாசம் என் மனதில் எழுந்ததில் விரக்தியுடன் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன். பாட்டி வீட்டிற்கு வந்திருந்த நான் கோலாரில் மட்டும் உங்களைச் சந்தித்திருக்கா விட்டால்...? ஆனால் என் குரு விஸ்வநாதன் மட்டும் என் கையில் திரிசூலம் இருப்பதாகவும் நான் ஒரு பெரிய வீரனுக்குத் தான் வாழ்க்கைப்படுவேன் என்றும் கூறிக் கொண்டிருந்தார்.” “அதேபோல் என் கையில் மீன் சின்னம் இருப்பதாகவும் அதன் பொருள் நான் அங்கயற்கண்ணி அரசாளும் மீனாக்ஷி தேவியின் மதுரையை வெற்றி கொள்வேன் என்றும் கூறினாய்.” கம்பண்ணன் “என் பணி பெரிது தேவி. என் உள்ளம் சோர்வடைகிறது அதை நினைக்கும் போது. நா உலர்கிறது. விரிந்து பரந்திருக்கும் இந்த பாரத தேசத்தை அன்னியர்கள் ஆக்ரமித்து நம் கோயில்களையும் கலாச்சார விழுமியங்களையும் சிதைத்து வருகிறார்கள். இவர்களை என்னால் தடுக்க முடியுமா...” இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கங்காதேவியின் மீது சாய்ந்திருந்த மன்னன் களைப்பினால் அயர்ந்து விட்டான். கங்காதேவி நளினமாக அவனை விலக்கி விட்டு உடைகள் உறைகளைத் தளர்த்தி படுக்கை விரிப்புகளை ஒழுங்கு செய்து நன்றாக மன்னனை உறங்க விட்டாள். அவளும் எழுந்திருந்து பவானி அன்னையை மீண்டும் ஒருமுறை வணங்கி விட்டு ஒருக்களித்தாற்போல் மன்னன் காலடியில் படுத்துக் கொண்டு கண்ணயர்ந்தாள். இரண்டாம் ஜாமத்தில் உறக்கமும் விழிப்பும் அற்ற நிலையில் இருந்த குமாரண கம்பண்ணன் சடாரென்று எழுந்து கொண்டான். தன்னை எழுப்பியது யார் என்று அனுமானிக்க இயலவில்லை. அவர்கள் இருந்த அறையில் ஒரு அமானுஷ்ய ஒளி பரவியிருந்தது. காலடியில் வாடிய மலர் மாலை போல் கங்காதேவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அப்போது அவன் முன்னர் பத்து கரங்களுடன் அன்னை பவானி காட்சியளிப்பது போல் தோன்றியது. பத்து கரங்களுடன் காட்சியளித்த அன்னை வலது கையில் மின்னல் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த வாள் ஒன்றை கம்பண்ணன் கையில் கொடுப்பதாய்த் தோன்றியது. “மகனே! இந்த வாளைப் பெற்றுக் கொள். இந்த வாள் உன்னிடம் இருக்கும் வரை உன்னை வெற்றி கொள்ள யாராலும் முடியாது. இதை எடுத்துக் கொண்டு தென்மதுரை நோக்கிச் செல்வாயாக. கொடுங்கோலர்களை வீழ்த்தி நம் ஜனங்களைக் காப்பாய். என் ஆணை.” மன்னன் அப்படியே உறங்கிப் போனான். விடியற்காலை கங்காதேவி மன்னனை எழுப்பினாள். எழுந்திருந்த குமாரன் தான் கண்ட கனவினை நினைத்து பிரமித்த வண்ணம் மலங்க மலங்க விழித்தான். “அரசே! என்ன ஆயிற்று?” என்று கங்காதேவி மன்னனை உலுக்கினாள். “ஒன்றுமில்லை தேவி. களைப்புடன் மதுரையைப் பற்றி உன்னிடம் பேசிக்கொண்டே உறங்கினேனா? ஏதோ கனவு. கனவில் நம் குலதேவதை வந்து ஒரு....” கங்காதேவி குறுக்கிட்டாள். “என்ன பொருத்தம் பாருங்கள் அரசே. என் கனவிலும் அன்னை வந்தாள். தான் இதே இடத்தில் குடியிருக்க விரும்புவதாகவும் கூறி நான் உங்கள் வீர வரலாற்றை எழுதவும் பணித்திருக்கிறாள்.” “என்ன? என் கனவில் வந்து ஒரு வீரவாளைக் கொடுத்து மதுரையை வெற்றி கொள்ள ஆணையிட்டாள் அன்னை” என்றான் கம்பண்ணன் பிரமிப்பு நீங்காமலேயே. அப்போது ஏதோ தோன்ற கங்காதேவி பவானி அன்னை சிலையைப் பார்த்தாள். பீடத்திற்கு அருகில் மின்னும் வாள் ஒன்றும் கங்காதேவி விட்டுப்போன ஒலை நறுக்கும் எழுத்தாணியும் கிடந்தன. மன்னன் பாய்ந்தெழுந்து அந்த வாளைக் கைப்பற்றி முன்னும் பின்னும் ஆராய்ந்து கொண்டிருந்தான். அரசியிடமும் காண்பித்தான். இருவரும் திக் பிரமித்துப் போய் எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தார்களோ? தெரியாது. வெளியே ‘ஜெய விஜயீ பவ’ என்கிற ஆரவாரங்கள் கேட்டன. கங்காதேவி எழுத்தாணியை எடுத்து ஓலை நறுக்கில் பின்வருமாறு எழுதினாள்: ‘மதுரா விஜயம் என்கிற வீரகம்பண்ணராய சரிதம்’ கல்ப விருக்ஷம் போன்று அனைவருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்பவரான யானை முகத்தோனாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளைச் சரணடைகிறேன்.” பின்னுரை: நீண்ட நாட்களுக்கு முன் பரமாச்சாரியர் அருளிய தெய்வத்தின் குரல் முதல் பாகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது கங்காதேவி பற்றியும் அவர் குமார கம்பண்ணன் வெற்றிகளைக் குறித்து எழுதிய ‘மதுரா விஜயம்’ என்கிற சமஸ்கிருதக் கவிதைகள் குறித்த குறிப்பை வாசித்தேன். பரமாச்சாரியர் அந்த நூலைப் பற்றியும் கம்பண்ண உடையாரைப் பற்றியும் கம்பரசன் பேட்டையைப் பற்றியும் ‘ஹொய்சலேஸ்வரர்’ கோயிலைப் பற்றியும் குறிப்பிட்டிருந்ததையும் மிகவும் சுவாரஸ்யத்துடன் வாசித்தேன். பின்னர் அதை மறந்தே போனேன் என்றாலும் அதன் நினைவு எச்சம் என் நினைவில் எப்போதும் இருந்தது. பின்னர் பரிசு பெற்ற ஒரு நீள நாவலை வாசித்தேன். மதுரையின் வரலாறு குறித்த நூல் அது. அதில் மாலிக்காபூரைப் பற்றியோ உலுக்கான் படையெடுப்பைப் பற்றியோ பெரிதாகக் குறிப்புகள் இல்லையென்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். சரித்திரம் என்றால் சார்பு நிலையல்லாது இருக்க வேண்டுமல்லவா? அதில் அந்த நிலை இல்லாததால் ஸ்வாரஸ்யம் குறைந்து போய் அதைப் படிப்பதைப் பாதியிலேயே நிறுத்தி விட்டேன். இப்படியிருக்கும் போது ஸ்ரீரங்கம் வைஷ்ணவஸ்ரீ வெளியிட்டுள்ள கங்காதேவியின் மதுரா விஜயம் மொழி பெயர்ப்பு நூலை வாங்கினேன். உபய வேதாந்தி அ.கிருஷ்ணமாச்சாரியர் எழுதி வெளியிட்ட இப்புத்தகத்தில் ஆசிரியர் மொழி பெயர்ப்பு மட்டும் செய்து நிறுத்திவிடாமல் அதில் அது சம்பந்தப்பட்ட நூறு வருட சரித்திரத்தை ஆராய்ந்துள்ளார். இதற்காக அவர் மொராக்கோவிலிருந்து வந்த யாத்ரீகர் இபன் படுடா அமீர் குஸ்ரு போன்றவர்களின் குறிப்புகளையும் ஸ்ரீரங்கம் கோயில் ஒழுகையும் மற்றும் பல்வேறு சரித்திர ஆவணங்களையும் கல்வெட்டுகளையும் அலசி ஆராய்ந்துள்ளார். நான் எழுதியுள்ள கதை முற்றிலும் இந்நூலை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. என் விவரிப்பில் பிழை இருந்தால் அது என்னைச் சேர்ந்தது. நிறையிருந்தால் அது ஆசாரியரைச் சேர்ந்தது. என் எதிர்காலத் திட்டத்தில் மதுரை குறித்தும் கம்பண்ணன் குறித்தும் நாவல் எழுதும் திட்டம் இருக்கிறது. அது காலம் பிடிக்கும். பல்வேறு நூல்களைப் படித்து ஆராய வேண்டும். என் வருத்தம் எல்லாம் நம் சரித்திரத்தைப் பற்றி எத்துணை பிரக்ஞை இல்லாமல் இருக்கிறோம் நாம் என்பது தான். அதை நிவர்த்தி செய்ய வயதும் அறிவும் உள்ள தமிழ் அறிஞர்கள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். இக்கதை எழுத என்னைத் தூண்டிய பரமாச்சாரியார் பாதம் பணிகிறேன். உபய வேதாந்தி அ.கிருஷ்ணமாச்சாரியார் அவர்களையும் பாராட்டி நமஸ்கரிக்கிறேன். அன்னை பவானி வெல்க! ஓம்! ஓம்!

அன்புடன்,

 அஸ்வத் 


நன்றி: சொல்வனம் 233 ஆம் இதழ் 
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...