சனி, 2 ஜூன், 2012

ஜெயகாந்தன்


தமிழ் இலக்கிய உலகின் துருவ நட்சத்திரம்



    ‘’ என் பெண்டாட்டி ஒரு நாள் அந்தப் பழனியோட ஓடிப் போயிட்டா மகனே.’’
    ‘’யூமீன் யுவர் வொய்ப் அண்பரியாரி?’’
    ‘’ஆமாம் மகனே’’
    ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் ஹென்றிக்கும் அவன் தகப்பனாருக்கும் நடக்கும் உரையாடலாக வருபவை மேற்கூறிய வரிகள். இந்த நாவல் படித்த அனைவரும் மறக்க முடியாத வரிகள், ஷேக்ஸ்பியரின் யூ டூ  ப்ரூட்டஸ்? என்கிற வரிகள் அல்லது வேத வியாஸரின் அஸ்வத்தாமா ஹதக் குஞ்சரஹ போன்று மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு ரசிக்கத் தக்க வரிகள்.
    ஆரம்ப நாட்களிலிருந்து மேற் கூறிய நாவல் வரை ஜெயகாந்தனின் புனையுலகில் வளர்சிதை  மாற்றத்தை சற்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது சில சுவாரஸ்யமான  கூறுகள் நமக்குக் கிடைக்கின்றன.
    சிறுகதைகளின் இலக்கணத்தை வரைந்தவர் என்றாலும் சிறுகதைகளை செய்திகளைத் தெரிவிக்கும் ஊடகமாக மட்டும் பயன்படுத்தினார் என்று கருத வேண்டியிருக்கிறது. எதிர் மறையாக ஒரு கருத்திலிருந்து தான் சொல்ல வந்ததை நிறுவும் ஒரு வித்தை அவர் இயல்பான தன்மையிலிருந்தே வெளிப்படுவதை நாம் உணர முடிகிறது.
    சட்டை கதையில் பூந்தோட்டச் சாமியார் வாழ்க்கையைத் துறந்தவர் பூந்தோட்டமும் கோயிலுமே கதி என்று கிடக்கிறார். ஊரில் ராணுவத்தில் சேர்ந்து சண்டையில் உயிரைப் பறி கொடுத்தவனின் தகப்பன் அது பற்றிப் பெருமிதத்துடன் பேசுவதை சாமியார் கேட்கிறார். தகப்பனாரே ராணுவத் திலிருந்து ஓய்வு பெற்றவர்- இதன் பின் கோயிலில் பிரசங்கிக்கும் பௌரா ணிகர் ஒருவர், உடம்பு என்பது ஆத்மனுக்குச் சட்டை என்கிற ரீதியில் விளக் கம் அளிப்பதை சாமியார் கேட்டுவிட்டு ஓடிப்போய் பட்டாளத்தில் சேர்ந்து விடுகிறார். குருக்கள் கேட்கும் போது எல்லாமே சட்டைதானுங்களே என்கிறார் சாமியார். ஜெயகாந்தனின் தத்துவ தரிசனத்தால் சாமியார் ராணுவ வீரனாகும் ரஸவாதம் நிகழ்ந்து விடுகிறது.
    இது போன்ற எவ்வளவோ உதாரணங்களைக் கூற முடியும். சீசர் என்கிற சிறுகதையில் சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள். என்கிற  பழமொழி உண்மையில் சீசரின் பௌருஷத்தையும் ஆண்மையையும் ஆளு மையையும் குறிப்பதை நிறுவுகிறார் மகாபாரதத்தில் துரியோதனன் எடுக் கவோ கோர்க்கவோ என்று சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்கும் தன் மனைவியையும் கர்ணனையும் கேட்டது போல் அமைத்த சம்பவம் போல் தான் இதுவும்.
    குரு பீடத்தில் குரு என்கிற வார்த்தைக்குத் தகுதியில்லான ஒருவனை குரு என்று வரித்து அவனுக்குப் பணிவிடைகள் புரிகிறான் சிஷ்யன். குரு அபத்தமாக உளறும் வார்த்தைகளைக் கூட வேதவாக்காக எடுத்துக் கொள் கிறான். சிஷ்யன் திடீரென்று ஒரு நாள் காணாமற்போக குரு மாறிய மனித னாய் சிஷ்யனைத் தேடி அழுகிறான். பன்முகப் பரிமாணங்களைக் காட்டு கின்ற சிறுகதை இது. குருபீடம் என்பது குருவை விட உன்னதமானது என்பது ஒன்று. குருவுக்கு முன்னரே சிஷ்யன் சித்தியடைகிறதைப் பூடகமாக உணர்த் துவது மற்றொன்று (பட்டினத்தார் பத்திரகிரியார் போல) குரு பீடத்திற்கு குரு வைத் தயார் செய்யும் சிஷ்யன் குருவுக்கும் மேலாக உயர்ந்து விடும் சாத்தியக் கூற்றை உணர்த்துவது இன்னொன்று.
    இதுபோல எவ்வளவோ சிறுகதைகளைக் கூறலாம் சுயதரிசனத்தில் காயத்ரி மந்திரத்துக்கு அர்த்தம் தெரியாக சாஸ்திரிகள் ஒருவர் வீட்டை விட்டு ஓடிப்போய் சுயதேடலில் ஈடுபட ஆரம்பிக்கிறார். தன் பிள்ளைகளுக்கு கடிதம் எழுதுகிறார் எங்கிருந்தோ. இவர் வழக்கமாக அமாவாசைத் தர்ப்பணத்துக்குப் போகும் வீட்டில் மாப்பிள்ளை வந்திருக்கிறார் ஊரிலிருந்து. தர்ப்பணம் பண்ணி முடித்து விட்டு தட்டைப் பார்த்தால் தட்சிணை குறைந்திருக்கிறது. என்ன ஸ்வாமி தட்சிணை கொறையறதேன்னேன். அவர் சொன்னார் மந்திர மும் கொறையறதேன்னுட்டு. அப்புறம் தான் தெரிஞ்சுது. அவர் காசீலே சமஸ் கிருத புரபஸராம். ஏதோ உபயோகமில்லாத பிரகிருதி என்று தாங்கள் நினைத் திருக்கும் தகப்பனார் இவ்வளவு சிந்தனா சக்தியுள்ளவரா என்று ஆச்சரியமாக இருக்கிறது பிள்ளைகளுக்கு.
    இது போன்ற சிந்தனா சக்தி வீர்யம் தர்க்கம் தீர்மானமான முடிவுகள், எழுதும் போது சமாதி நிலையிலிருக்கும் ஒரு மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். அதுவும் எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்? சுதந்திரப் போர் சுதந்திரத்தைப் பற்றிய சிந்தனை என்று ஒரு தலைமுறை. அதன் பின்னர் சுதந்திரத்தைப் பேணுவதும் சமூக விடுதலையும் நோக்கமாகக் கொண்டு ஒருதலைமுறை. இதன் நீட்சியாகத் தான் ஜெயகாந்தன் தமிழில் உதயமானார் என்று நினைக்கத் தோன்றுகிறது. இவருக்கு முந்தைய தலைமுறையின் ஒரு சாரார் சமூகக் கட்டுமானத்தை உடைக்க விரும்ப வில்லை. இன்னொரு சாரார் மரபு சம்பந்தமான அனைத்தையும் உடைக்க விரும்பிச் செயல்பட்டு வந்தனர்.
    இந்தக் கால கட்டம் மிகுந்த சோதனையான கால கட்டம் கிட்டத் தட்ட மணிக்கொடி பரிசோதனை முயற்சிகள் முடிந்து திராவிட இலக்கியம் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். தேசீயமும் தமிழ் தேசீயமும் ஒன்றுக் கொன்று முரண் என்று பன்னிப் பன்னி எல்லோரும் உரத்த குரலில் சொல்ல ஆரம்பித்த காலம்.
    இந்த சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகள் ஆனந்த விகடனில் வெளியாக ஆரம்பித்தன. இவர் கையாண்ட உத்தி அனைத்துமே எல்லோருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலும் பிராமண வாசகர் வெகுஜனப் பத்திரிகைகளுக்கு இருந்த காலம். பிராமண வாசகர்கள் பெருவாரியாக இருந்த போது வாசகர் வட்டம் இதரர்களுக்கும் மெள்ள மெள்ள விரிவடைந்து கொண்டு வந்தது. ஜெயகாந்தன் எழுதுகின்ற நுணுக்கமான பிராமண பாஷையை நினைத்து பிராமணர்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள் என்றால், சாதாரண மாந்தர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்று நினைக்கும் படியாக அவர்கள் பேச்சு பழக்க வழக்கங்கள் சம்பிரதாயங்கள் அவற்றையும் அவர் நுட்பமாக எழுதியது ஏனையோரையும் அவர் பால் ஈர்த்தது.
    சந்நதம் வந்தது போல் எழுதினார் ஜெயகாந்தன். எல்லாவித முயற்சிகளையும் அவர் சிறுகதைகளில் செய்தார். தேவன் வருவாரில் இப்போது பிரபலமாக முழங்கும் மாஜிகல் ரியலிஸம்  நனவோடை உத்தி எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாகக் கையாண்டிருந்தார் நைவேத்யம் செய்கின்ற ஏழைக் கிழவியை விரட்டும் குருக்கள்  கோயிலில் மூல விக்ரகமாகிய கிருஷ்ணனின் கை இளைத்துப் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார். ஆடிக் களைத்த தர்ம பாலன் என்கிற பழம் பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர்? கடைசியில் ரிக்ஷாக்காரன் பராமரிப்பில் மரித்துப் போகிறார். அக்ரஹாரத்தில் பூனை, கோடுகளைத் தாண்டாத கோலங்கள், ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உத்தி  கொண்டு எழுதப்பட்டது.இன்னது தான் என்று முடிவு கட்டும் போதே சடாரென்று புது உத்தி ஒன்றைப் புகுத்துகிற ஆற்றல் ஜெயகாந்தனுக்கு இருத்தது. இவருடைய நாவல்களும்  அவற்றுக்கு இவர் அளித்த முன்னுரைகளும் அவ்வப்போது  கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி வந்தன. இப்போது மிகவும் பிரபலமாக வழங்கி வரும் ஃப்யூஷன் இசையை ஆதரித்து  இவர் எழுதிய பாரீசுக்குப் போ பல விதமான சர்ச்சைகளைக் கிளப்பியது என்றால் ஆண் பெண் உறவை மிகவும் துல் லியமாக எடுத்துக் காட்டியது கோகிலா என்ன செய்துவிட்டாள்? பிரும்மோ பதேசத்தில் ஓதுவார் பையனுக்குப் பூணூல் அணிவித்து அவனை பிராமணன் ஆக்குவார் அந்நாவலின் நாயகர் சர்மா. அவர் தோழர் ராயர் கேட்கிறார். (ஓடிப் போன சர்மாவின் பெண்) மைத்ரேயிக்கும் இந்தப் பையனுக்கும் கல்யாணம் செய்து வைத்திருக்கலாமே? என்று. அதற்கு சர்மா பதில் சொல்கிறார். ஏய். இவன் என் பையன் ஸ்தானம். என் பெண்ணுக்கு இவனை எப்படிக் கல்யாணம் பண்றது? என்று.
    நாவல் என்கிற தலையணையின் கட்டுமானத்தை உடைத்து குறுநாவல் என்பதைப் பிரபலமாக்கியவர் ஜெயகாந்தன் .மொழி பெயர்ப்புக் கதைகளை நினைவுறுத்துவது போல் இவர் நடையிருந்த போதிலும் வலிவான தர்க்கமும் மிகை தவிர்த்த உணர்வுகளும் கனமான உள்ளடக்கமும் நடையின் சலிப்பை மறக்கடித்து விட்டன.
    இந்த சந்தர்ப்பத்தில் தான் அக்னி பிரவேசம் சிறுகதையை எழுதினார் ஜெயகாந்தன். கெட்டுப் போன பெண்ணை நீரூற்றி அவள் அம்மா தூய்மைப் படுத்துவதாகக் காட்டியிருந்தார் சநாதனிகள் மத்தியில் பலத்த சர்ச்சையை யும் எதிர்ப்பையும் இச்சிறுகதை கிளப்பியது. இந்தக் கோபத்தில்  தான் ஜெய காந்தன் இப்படி நடக்காமலிருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்று கற்பனை செய்ததில் விரிவடைந்தது சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் நாவல் ஜெயகாந்தனுக்கு அளவற்ற பெயரையும் புகழையும் சாகித்ய அகாடமி பரிசை யும் பெற்றுத் தந்தது.
    அக்னிபிரவேசம் தவறான காரணங்களுக்காக சிலரால் பாராட்டப்பட்டும் சிலரால் விமர்சிக்கப் பட்டும் வந்தது. கெட்டுப்போனதை சுத்தப்படுத்தியதை சநாதனிகள் எதிர்த்தார்கள் என்றால் பிராமணப் பெண் கெட்டுப் போனது என்கிற இந்த நிகழ்வை வேறு யாராவது கெட்டுப் போயிருந்தால் எப்படி சாதாரணமாகப் பார்த்திருக்கக் கூடுமோ அது போலவே இதையும் பார்த்திருக்க வேண்டும் என்று நவீன வாதிகள் கருதினார்கள். ஜெயகாந்தன் இந்த நிகழ்வுக்குத் தந்த முக்கியத்துவம் அவர்களை எரிச்சல்படுத்தியது.
    இதே போல ரிஷிமூலம் என்கிற நாவல் இன்றளவும் பலராலும் ஜீரணிக்க முடியாத நிகழ்வுகளைக் கொண்ட நாவல். யூடிபஸ் காம்பளக்ஸ் என்கிற மனோ வியாதியை நுணுக்கமாக விவரிக்கும் இந்நாவலை மிதவாதிகள் ஒப்புக் கொண்ட போதிலும் இந்த நுட்பமான விஷயத்தை இவ்வளவு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கத் தேவையில்லை என்று முணு முணுத் தார்கள். சிலர் ஒரு படி மேலே போய் பிள்ளையாருக்கே யூடிபஸ்காம்ப்ளக்ஸ் தானே? நம் மதத்தில் இல்லாததையா சொல்லி விட்டார்? என்றார்கள்.
    இந்த சந்தர்ப்பத்தில் எல்லாம் ஜெயகாந்தன் யாருக்கும் வேண்டாதவர் ஆகிவிட்டார்.
    சிறுவயதிலிருந்து பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் ஊறித்திளைத்து பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்கள் பால் பரிவுடன் கதைகளைப் படைத்த ஜெயகாந்தன் மனிதர்களின் பல்வேறு குணாதிசயங்களையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எவ்வாறு மனிதர்கள் வெவ்வேறு விதமான மனப்பான்மைகளுடன் செயல்படுகிறார்கள் என்பதையும் உய்த்து உணர லானார். ஒரு படைப்பாளி எழுதிக் கொண்டு வரும்போதே செய்யும் பயணத் தின் பரிணாம வளர்ச்சி இது. வயிற்றுப் பிழைப்புக்காக விலைமாது தொழிலில் ஈடுபடுகிறாள் என்று எழுதும் போதே ஊடே ஊடே பொருளாதாரக் காரணங் களுக்கு மட்டும் அவள் தொழிலில்  ஈடுபடவில்லை அதற்கும் மேலாக ஏதோ ஒரு காரணம் கண்டறிந்தது பொதுவுடைமையாளர்களால் ரசிக்கப்பட வில்லை.
    இது இப்படியென்றால் பல சமயங்களில் விலைமாதர் இருப்பிடங்களில் புனிதமான சம்பாஷணைகள் நடந்து கொண்டிருந்ததை நூதனமாக ஏற்று ரசித்த சநாதனிகள் புனிதமான விஷயங்கள் பேசுவதற்கு விலைமாதர் வீட் டிற்குப் போனால்தான் முடியும் என்று ஜெயகாந்தன் நம்புவது போல் அவர் கதைகளில் சுட்டியிருந்த தொனியை நிராகரித்தார்கள்.
    இது போன்ற சந்தேகத்திற்கெல்லாம் இடம் கொடுத்துக் கொண்டிருந்ததற்கு ஜெயகாந்தனின் பொதுவுடைமைக் கருத்துக்களையும் மீறி அவர் மனதில் விழுந்திருந்த மரபு சார்ந்த படிமானங்கள் தான் காரணம்.
    அக்னிபிரவேசம் அவர் சநாதனிகளுக்குத் தான் எழுதினார்; எழுதியிருக்க வேண்டும். கங்கை நீர் சகல பாவங்களையும் சுத்திகரிக்கும் என்று எப்போதும் உரத்து மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அதை நீங்களே நம்பமாட்டேன் என்கிறீர்களே என்கிற ஆற்றாமை வெளிப்படுவதாகத் தான் தோன்றுகிறது ஜெயகாந்தனுக்கு - இதே காரணங் களுக்காகத் தான் திரு ஈ.வே.ரா. அவர்கள் திருச்சியில் ஆற்றிய உரைக்கு அவர் முன்னாலேயே மரபு சார்ந்த விஷயங்களுக்கு வக்காலத்து வாங்கினார் ஜெயகாந்தன். நாத்திகம் போன்ற பல விஷயங்களுக்கும் சநாதன மதத்தில் இடம் உண்டு. அவற்றை மரபு சார்ந்த விஷயங்களை உடைக்க முடியாது, கூடாது என்று திட்ட வட்ட மாக எடுத்துரைத்தார் ஜெயகாந்தன். பெரிய பெரிய படிப்பு படித்திருந்த சநாதனி கள் செய்யத் தயங்கிக் கொண்டிருந்த ஒரு துணிவு மிக்க செயலைச் செய்தது தமிழ் நாட்டில் ஜெயகாந்தனின் குற்றவுணர்வில்லாத படைப்புத் திறனும் ஆளுமையும்.
    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் இவர் கலியுகத்து மனிதர்களைப் பற்றி எழுதவில்லை. கிருத யுகத்து மனிதர்களைப் பற்றித்தான் எழுதினார். சாதாரண நாவல்களின் ஆசாபாசங்கள் இந்நாவலில் இடம் பெறவில்லை. விருப்பம் சார்ந்த செயல்களேயில்லாத நிலையில் புண்ணிய பாவங்கள் இவ் வுலகில் இல்லை. தன் எழுத்தின் நெடிய பயணத்தின் உச்சமாக ஜெயகாந்தன் எழுதிய இந்த நாவல் மனித சுய வெளிப்பாட்டின் உச்சமாக விளங்குகிறது. இதே போல் இவர் எழுதிய அதிகம் கவனிப்புப் பெறாத விழுதுகள் என்கிற குறு நாவலும் மனித மனத்தின் படைப்புத் திறனின் எல்லை என்று கூறவைக்கிறது.
    மரபு சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் உடைத்துப் போட்டார் தி. ஜானகிராமன் என்றால் மரபு சார்ந்த ஒழுக்க சிந்தனைக்கும் உண்மைகளுக்கும் மெய்யறிவிற்கும் வக்காலத்து வாங்கினார் ஜெயகாந்தன்.சநாதன விளிம்பில் நின்று கொண்டு தி. ஜானகிராமன் புதுமைக்குக் கொடி பிடித்தவர் என்றால் ஜெயகாந்தன் புரட்சியின் விளம்பில் நின்று கொண்டு மரபு சார்ந்த விஷயங்களுக்குக் குரல் கொடுத்தார்.
    புதுமை செய்கின்ற ஒவ்வொரு படைப்பாளியும் மரபு சார்ந்த விஷயங்களை அவ்வப்போது உள்வாங்கி அதில் தேவையான மாற்றங்களைச் செய்திருக் கிறார்கள். ராமானுஜரில் ஆரம்பித்து விவேகானந்தர் பாரதி எல்லோரும் இதைத் தான் செய்திருக்கிறார் கள் இது மட்டுமே காலத்தை வெல்லும் திறமை படைத்தது என்று தோன்றுகிறது.
    இப்படிப் பார்க்கும் போது ஜெயகாந்தனை நாம் தமிழ் இலக்கிய உலகின் துருவ நட்சத்திரம் என்று தான் சொல்லவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...