இந்தப் புத்தகத்தை இன்று காலை ஆரம்பித்தேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். வழக்கமாக ஆண்களுக்கு உள்ள ஆர்வம்தான். அந்தக்காலத்தில் சாவியில் ‘என் பெயர் கமலா’ என்று புஷ்பா தங்கதுரை தொடர்ச்சியாக எழுதினார். அது அதிர்வலைகளை எழுப்பிதோ என்னவோ நிறைபேர் (பெண்கள் உட்பட) அதைப் படிப்பதில் ஆர்வம் காட்டினர். அதற்குக் கிடைத்த வரவேற்பை புஷ்பா தங்கதுரையும் சாவியும் நன்கு பயன்படுத்திக் கொண்டனர். அதை நிறைய புனைவுகள் சேர்த்து எவ்வளவு நீட்ட முடியுமோ அவ்வளவு நீட்டினார்கள். போதாதென்று தொடர் முடிந்த கையுடன் புஷ்பா தங்கதுரை ‘மீண்டும் கமலா’ என்று வேறொரு தொடரை ஆரம்பித்து விட்டார். சமூகப் பணிக்கு சமூகப் பணியுமாச்சு; சர்குலேஷனுக்கு சர்குலேஷனுமாச்சு என்கிற நிலைமை.
அதில் இருந்த அநுதாபத்திலும் சமூகப் பொறுப்புணர்விலும் பொதிந்திருந்தது பாலியல் வக்கிரங்களுக்குத் தீனி போடும் முயற்சி ஒன்றுதான்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் தமிழில் ஏற்கனவே நூல்கள் வந்திருக்கிறதா தெரியவில்லை. வந்திருந்து நான் படிக்காமல் இருந்திருக்கக்கூடும். இந்தப் புத்தகத்தில் நளினி என்கிற ஜமீலா கிட்டத்தட்ட தன் பிறப்பிலிருந்து நாளது வரை தன் வரலாற்றையே பதிவு செய்திருக்கிறார். ஏழ்மையான ஈழவக் குடும்பம், குடி, குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பெற்றோர் அல்லது வீட்டுப் பெரியவர்களின் முறை பிறழ்ந்த உறவுகள் எல்லாமே இதில் இருக்கின்றன. மூன்றாம் வகுப்போடு படிப்பை வீட்டில் நிறுத்திவிடுகிறார்கள். தந்தை ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவுடன் அவர்கள் பெற்று வந்த வளமையும் ஓய்வு பெற்றுவிடுகிறது.
நளினி கூலி வேலைக்குப் போக ஆரம்பிக்கிறாள். அந்த இடங்களில் பாலியல் தொல்லைகளும் அவர் அவற்றை எவ்வாறாகக் கையாண்டார் என்பதைப் பற்றியும் விவரிக்கிறார். தந்தையாருடன் ஒரு கட்டத்தில் பிணக்கு வந்து விடுகிறது. 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
ஏற்கனவே திருமணமான ஒருவருடன் கட்டாயத் திருமணம். இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. வீட்டில் மாமியார்க் கொடுமையை அனுபவிக்கிறார். அகப்பையால் மாமியார் தாக்கியதில் மண்டை உடைந்ததைக் குறித்து எழுதுகிறார். கணவன் காச நோயில் இறக்க, மூத்த பையனும் இறந்து விடுகிறான். பெண்ணை மாமியாரிடமே விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
மெல்ல மெல்லப் பாலியல் தொழில் ஈர்க்கிறது அவரை. பெரிய காரணம் எல்லாம் ஒன்றுமில்லை. கை நிறையப் பணம். வேலைக் கம்மி. அதன்பின்னர் அந்தத் தொழிலுக்கே உரித்தான பலவிதக் கஷ்டங்களுக்கும் ஆளாகிறார். ஏற்கெனவே கணவருடன் சேர்ந்து சாராயம் விற்றபோது குடிவேறு பழக்கமாகி இருக்கிறது.
இப்படி நாடறிந்த வேசியாகிறார். பலதரப்பட்ட மனிதர்களுக்கு வடிகாலாக உபயோகப்படுகிறார். இரண்டாம் கணவனுக்குப் பிறந்த பெண்ணை வேறு கட்டிக் காக்க வேண்டிய கட்டாயம். வியாதிகள் தொற்றுகின்றன. பள்ளிவாசல்களில் தஞ்சமடைகிறார். தெரிந்த வாழ்ந்த மனிதர்களின் உறவுகளுடைய வீடு வீடாகப் போகிறார். கடைசியில் ஜ்வாலா முகி என்கிற தன்னார்வ அமைப்பில் சேர்ந்து பாலியல் தொழிலாளிகளுக்காகக் குரல் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஏஷியாநெட்டிலும், விஜய் டிவியிலும் அவருடைய பேட்டிகள் வருகின்றன.
மிகவும் வசீகரமாக இந்தப் புத்தகத்தில் நான் கருதுவது மிகவும் உணர்ச்சிவசப்படாத, யாரையும் தேவையில்லாமல் வசைபாடாத, குற்றவுணர்வு இல்லாத நளினியின் நேரடியான விவரிப்புத்தான், உள்ளது உள்ளபடிச் சொல்லும் இந்தச் சரிதையில் கொக்கோக வருணனைகள் இல்லை. தன்னுடைய செயல்களை நியாயப்படுத்த முயலவில்லை. அதேசமயம் அது குறித்து அவருக்குக் குற்றவுணர்வும் இருந்ததாகத் தெரியவில்லை.
இந்த சமயத்தில் இது போன்ற விலக்கப்பட்ட செயல்களில் ஈடுபடுபவர்களைப் பற்றி சமுதாயம் என்ன நினைக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. “மூடா! மூடா!” என்று திட்டி சுப்ரமணிய பாரதியார் எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. “பெண்கள் ஒழுக்கமாக இருக்க வற்புறுத்துகிறாயே, உன் போன்ற ஆண்கள் அதற்கு முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டாமா?” என்று கேட்டிருப்பார் பாரதியார் அந்தக் கட்டுரையில்...
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சமுதாயத்தின் மீது வைப்பவர்கள்தான் நிறைய. அதில் உண்மை இல்லாமல் இல்லை. விரும்பி பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் கம்மிதான். தவறுசெய்கிறவர்கள், அபலைகள் சோற்றுக்கு வழியில்லாதவர்கள் தாம் பல சமயங்களில் அதில் தள்ளப் படுகிறார்கள். அதன்பிறகு அதிலிருந்து மீள்வதற்கு வழி தெரியாமல் தான் அதிலேயே அமிழ்ந்து போகிறார்கள். அவர்களை அநுதாபத்துடன் நோக்கி அவர்களின் புனர் வாழ்வுக்கான அடிப்படையை அமைத்துத் தருவதுடன் அந்த அவலத்துக்கான சமூகக் காரணிகளை ஆராய்ந்து களைவதே சமுதாயத்தின் பணி என்று சொல்வதுதான் இன்றைக்கும் என்றைக்கும் பிரபலமான வாதமாக இருந்து வருகிறது.
சற்று உற்று நோக்கும் போது வேறொரு சிறுபான்மை கருத்தும் நிலவுகிறது. இதுபோன்றவர்கள் கர்மவினைப் பயனால்தான் இது போன்ற தொழில்களில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் அதில் ஏதோ ஒன்றை விரும்பி ஏற்றுத்தான் - ஒரு மன ஒப்புதலுடன்தான்- அவற்றில் ஈடுபடுகிறார்கள் என்று நிலவும் கருத்தும் உண்டு.
மேலோட்டமாகச் சமுதாயத் தாக்கத்துடன் பேசும் சமூகம் சற்று உற்று நோக்கினால் இதுபோன்ற கருத்தைத்தான் கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் வருகிறது. இதுபோன்ற அவலங்களைக் கண்டிக்கும் எவரும் அவர்களுடன் கலந்து பழக முன்வருவதில்லை. தங்களையும் தங்களின் குடும்பத்தையும் இவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ளவே விழைகிறார்கள்.
இப்படிப் பார்க்கும்போது உலகில் பிறக்கும் மனிதர் அனைவரும் எப்படித் தங்களை அறியாமல் கருமத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று எண்ண வேண்டியிருக்கிறது. பிச்சைக்காரர்களில் எவ்வளவு வகை, குற்றம் புரிபவர்களில் எத்தனை விதம் இவர்கள் எல்லோரும் தத்தமது தனிப்பட்ட கருமங்களில் அதை மாற்றிக் கொள்ள விழையாது தன்னிச்சையாக ஈடுபட்டுள்ளது ஏன் என்று நினைக்கத் தோன்றும்.
அடுத்ததாக மனப்பிறழ்வு மனநிலை உள்ளவர்கள் சமுதாயத்தின் மன ஆரோக்கியத்தைச் சமனப் படுத்துகிறவர்களாக உள்ளார்கள் என்று நான் நினைத்துக் கொள்வதுண்டு. இதே போல் பாலியல் தொழிலாளிகளும் ஏதோ ஒரு விதத்தில் சமுதாயத்தின் கற்பு சமநிலையைப் பேணுகிறார்கள். இவர்களைப் போல விளிம்பு நிலை மனிதர்கள் அவ்வளவு பேரும் சமூகச் சமநிலையைப் பேணுவதற்கு ஏதோ ஒரு விதத்தில் கடமையாற்றுகிறார்கள் என்று தான் சொல்லவேண்டும.
இப்படிப் பார்க்கும் போது நளினி எழுதிய இந்தப் புத்தகம் பாலியல் தொழிலாளியின் உரிமைகளைப் பற்றிக் குற்றவுணர்வில்லாத தொனியில் பேசுகின்றது. இந்தவகையில் இது மிகவும் குறிப்பிடத்தகுந்த பதிவு என்றுதான் சொல்ல வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக