வியாழன், 14 ஏப்ரல், 2016

மடிமாமி-சிறுகதை-அஸ்வத்

மடிமாமி பார்ப்பதற்கு சற்று மாநிறமாக இருப்பாள். கறுப்பு என்று சொல்லமுடியாவிட்டாலும் கொஞ்சம் சாம்பல் பூத்த நிறம்தான். முகம் நன்றாகப் பளிச்சென்று அழகாக லட்சணமாக இருக்கும். தாட்டி என்றும் ஒல்லி என்றும் சொல்ல முடியாத உடல்வாகு.
எங்கள் வீட்டில் சமையல் வேலை செய்து கொண்டிருந்த விசாலம் மாமிக்கு பெரிய தோழி - தூரத்து உறவும் கூட. இருவரையும் இணைக்கும் பந்தம் என்னவென்று பார்த்தால் ஆச்சரியம்தான். விசாலம் மாமி பெரிய மடி ஆசாரம் என்று சொல்ல முடியாது. மடி மாமியைப் பார்த்தால் சற்று எள்ளல்கூட. ஆனால் விசாலம் மாமி ஒன்றும் பார்க்கவிட்டாலும் சடங்கு ஆசாரங்கள் அனைத்தும் அத்துப்படி என்பதால் மடிமாமிக்கு விசாலம் மாமிமேல் ஒரு பெரிய பிரமிப்பும் மரியாதையும் உண்டு.

எனக்கு நினைவு தெரிந்த நாளாக மாமி மடிதான். மடியென்றால் தீட்டு துடைப்பு என்று பார்க்கிறவர் என்ற சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது. காலையில் குளித்து விட்டால் தீர்ந்தது என்கிற ரகம் கிடையாது. காலில் செருப்பில்லாம் (செருப்பு விழுப்பு) ரோடில் நடந்து போவாள். வீட்டிற்குத் திரும்பியவுடன் குளியல். உடுத்திக் கொண்டிருந்த துணி அத்தனையும் நனைத்து விடுவாள். அவர்கள் வீட்டுக் கொடியில் ஈரத்துணி தொங்கிக் கொண்டேயிருக்கும். தவிரவும் யாராவது குடும்ப உறுப்பினர் வந்தால் கொல்லைப் பக்கமாகக் கிணற்றடிக்குப் போய்க் குளித்துவிட்டுத்தான் வீட்டில் நுழைய முடியும். வந்தவர் கிளம்பினால், உடனே வீட்டை அலம்பிவிட்டு வருவாள்.
உப்பு சர்க்கரை அரிசி என்றும் தப்பிக்க முடியாது. ஒரு கழுவு கழுவினால் தான் வீட்டில் நுழைய முடியும். இவையெல்லாம் எப்போதும் வெய்யிலில் உலர்த்தப்பட்டிருக்கும். பின்னர்தான் சமையலுக்கே உபயோகிக்க முடியும். வீட்டில் தலையணை போர்வை ஒன்றும் உபயோகிப்பது கிடையாது எல்லாம் விழுப்பு என்பதால். யாரோ சொன்னார்கள் என்று. மாமியின் மாமனார் கல்யாண சுந்தரமைய்யர் பிளாஸ்டிக் ஷீட் வைத்துத் தைத்த தலையணையை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அன்று வீடே ரணகளமாகிவிட்டது. அதிலிருந்து எல்லோருமே ஜாக்ரதையாக இருப்பார்கள். 
மாமி என் அன்னைக்கு நெருங்கிய தோழியாம். என் அன்னை மீது மிகுந்த பிரேமையும் என் தந்தை மீது அளவற்ற மரியாதையும் உடையவள். அவளுக்குக் கல்யாணம் ஆகி வந்த புதிதில் நான் மூன்று வயதுக் குழந்தையாம். “வாடி... வாடி...” என்று கூப்பிடுவாளாம். நான் என் அன்னையின் பின் ஒளிந்து கொண்டு வரமாட்டேனாம். அதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாள். என் அன்னை மேலிருந்த பிரேமையால் எனக்கு மாமியிடம் கொஞ்சம் சலுகை உண்டு. என் அன்னை உயிருடன் இருந்திருந்தால் இது நீடித்திருக்குமா சந்தேகம்தான்.
மாமியின் கணவர் பட்டாபட்டி ‘அண்டர்வேரு’டன் தாழ்வாரத்தில் மூங்கில் ப்ளாச்சுக்குப் பின் உட்கார்ந்திருப்பார். கௌரவமான வேலை. தாலுக்கா ஆஃபீஸில் எழுத்தர் வேலை. கொஞ்சம் சித்தம் ஸ்வாதீனம் கம்மி. முழுப் பைத்தியம் கிடையாது. அவ்வப்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்துவிடுவார். மடிமாமி போய் யாரையெல்லாமோ பார்த்துவிட்டு தலைகீழாக நின்று ராஜினாமாவை திருப்பி வாங்கிக் கொண்டு வருவாள். வரும்போதே ‘லபோ திபோ’ என்ற கத்திக் கொண்டே வருவாள். மாமனார் கல்யாண சுந்தமையர்  பட்டுக்கொள்ளவே மாட்டார். தலையில் குடுமியுடன் காதில் சிவப்புக் கல் கடுக்கனுடன் தாழ்வாரத்துக்கு வெளியில் போட்டிருக்கும் கீற்று சார்ப்பில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருப்பார். கிராமத்தில் முன்சீப் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் வேலையைச் செய்ய அசக்தம் ஏற்பட்டுப் பையன் வீட்டோடு வந்துவிட்டார்.
மாமியின் கணவருக்குக் கல்யாணத்துக்கு முன்னாலே வியாதி உண்டு என்றம் ஏமாற்றிக் கல்யாணம் பண்ணிவிட்டார்கள் என்றும் பேச்சு உண்டு. மாமிக்குப் பிள்ளை பிறந்தபின்தான் வெளியில் அவர் மனநிலை எல்லோருக்கும் தெரிந்தது. "பிச்சம்மா ஒருத்தர் கண்ணிலப் பிள்ளையைக் காண்பிக்கலையே - அவ்வளவு அமெரிகையாய் பாத்துண்டா. இல்லாட்டா இந்த அழிச்சாட்டியம் கல்யாண சுந்தரமையனோட லட்சணத்துக்கு நாறிப் போயிருக்கும்” என்றாள் விசாலம் மாமி ஒருநாள். விசாலம் மாமியிடம்  “மாமி, இந்த மடி மாமி ஏன் இப்படி தீட்டு துடைப்புன்னு அலையறா?” என்று கேட்டேன் ஆவல் தாங்க முடியாமல்.
“நன்னாத்தாண்டி இருந்தா கல்யாணத்தும்போது, காரியம் செஞ்சான்னு அப்படி ஒரு நறுவிசு. சமையல் பண்ணா சுவடே தெரியாது. பிச்சம்மாளா பிள்ளைகிட்ட அவளை அண்டவிடாத படுத்தினா. இவளுக்கு மூஞ்சில சிரிப்பு மாறாது. ‘அம்மா அம்மா’ன்னு அவகிட்ட அப்படி வாஞ்சையா இருந்தா. பிச்சம்மாளுக்கு அவ அருமை புரியவேயில்லை. பிள்ளை அருமை! ஊர் உலகத்தில இல்லாத பிள்ளை. பயமா ஆதிக்கமா இவளைப் புருஷன் கிட்ட விடாத படுத்தினா. பிள்ளை பிறந்ததே அதிசயம். கொல்லைப்பக்கம் போனவ காலை ஒடைச்சிண்டப்பறம்தான் மாட்டுப் பொண்யோட அருமை அவளுக்குத் தெரிஞ்சது. அப்பெல்லாம் காரியம் மிஞ்சிப் போயிடுத்து. புருஷன் பைத்தியம் - மாமனார் அடாவடி - மாமியார் அழிச்சாட்டியம். பிச்சம்மா சாகற வரையிலும் இவளும் பொறுமையா இருந்தா, அப்புறம் என்ன ஆச்சோ ஏது ஆச்சோ இப்படி ஆரம்பிச்சுட்டா” என்றாள் விசாலம் மாமி.
பின்னர் குசுகுசுவென்ற குரலில் “பிச்சம்மாட்டயே கேட்டேன்... ‘ஏண்டி உன் மாட்டுப் பொண்ணை இப்படிப் படுத்தறே?’ன்னு. ‘அவனுக்கு மருந்து வெச்சுட்டாடி கேட்டயோ? அவனை வசியம் பண்றத்துக்கின்னு. அதிலதான் அவன் இப்படியாயிட்டான். எப்படியிருந்த பிள்ளை; இப்படியாயிட்டான்’ அப்படீன்னா. ‘போடி போடி இந்த புள்ளைப் பூச்சியா அதெல்லாம பண்றவ? உன் நல்ல காலம் - இது வந்து மாட்டுப் பெண்ணா வந்து வாச்சுது. புண்ணியம் பண்ணிருக்கேன்னு நெனைச்சுக்கோ” என்ற சொல்லிட்டேன்” என்றார் விசாலம் மாமி.
“அது சரி. இந்த மருந்து வெக்கறதுன்னா என்ன?” என்றேன்.
“சரிதான் போ; நல்ல ஆளப் பாக்கற இதைக் கேட்க. நான் என்னமோ பரம்பரை பரம்பரையா இதைப் பண்ணிண்ருந்த மாதிரி. ஏதோ வசிய மருந்தும்பா. இந்த மருந்து மாயம் இதெல்லாம் யாரு கண்டா?” என்றாள்.
எனக்கென்னவோ மடி மாமியின் கணவரின் மனநிலைக்கும் மடி மாமியின் தீட்டு துடைப்புக்கும் சம்பந்தம் இருப்பதாய்த் தோன்றவில்லை. ஏதாவது புருஷனுக்கு நேராகட்டும் என்பதற்கான நோன்போ என்னவோ - அதற்காக இப்படியா? எனக்கென்னவோ காரணம் போதவில்லை.
மடி மாமிக்கு என் குடும்பத்தின் மீது அளவற்ற பரிவு உண்டு. என் அன்னை இறந்தபோது மூர்ச்சை போட்டு விழுந்து விட்டாளாம். அப்பா மீது பெரும் மதிப்பு. என் மீது அளவற்ற வாஞ்சை. விசாலம் மாமி மாதிரி நெகிழ்ந்த வாஞ்சை இல்லை. உணர்ச்சிகளை வெளிக்காட்டாத திடமான உணர்ச்சிவசப்படாத வாஞ்சை.
ஒருநாள் பெரிய கலாட்டா ஆகிவிட்டது. மடி மாமியின் கணவர் கையில் அரிவாளுடன் மாமியைத் துரத்திக் கொண்டு வர, மாமி தலைவிரி கோலத்துடன் என் வீட்டை நோக்கி ஒடி வந்தாள். அப்பா வாசலில் நின்று கொண்டிருந்தாள். மாமி அப்பா காலில் ஓடி வந்து விழுந்தாள். 
“மாமா! என்னைக் கொல்ல வர்றது மாமா. காப்பாத்துங்கோ” என்று கதறினாள். அப்பா, “விசாலம்.... விசாலம்...” என்று கத்தினார். “நீ உள்ளே போ... விசாலம் இவளை அழைச்சுண்டு உள்ளே போ” என்று சொல்லிவிட்டு மடிமாமியின் கணவரைக் கையைக் கட்டிக் கொண்டு எதிர்கொள்ளத் தயாரானார்.
ஓடிவந்த மாமியின் புருஷன், அப்பா பக்கத்தில் வந்து நின்றுகொண்டு மூச்சிரைக்க, “டேய்! நீ யாருடா அவளை உன் வீட்டிலே வெச்சுக்க..  நீ என்ன அவ புருஷனடானு” என்று கத்திவிட்டு, “அவளை விடுடா வெளியிலே; அவளைப் பொலி போட்டுட்டுத்தான் போவேன்” என்றார். அவர் நின்ற கோலமும் ஆத்திரமும் எங்கள் எல்லோருக்கும் பெரிய கிலியை ஏற்படுத்தி விட்டது. அப்பாவை எதாவது செய்துவிடப்போகிறதே என்று திக்பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்பாவின் ஒருமுடி கூட அசையவில்லை. கல்லாட்டம் நின்று கொண்டிருந்தவர், “போடா வெளியிலே; வீட்டுக்குள்ள காலை வெச்சியோ தெரியும் தேதி” என்று மட்டும் சொல்லிவிட்டு திண்ணையில் உட்கார்ந்து கொண்டுவிட்டார் சாவகாசமாக. அதற்குள் வீதியில் கூடியிருந்த கூட்டம் ஸ்வாரஸ்யம் குறைந்து கலைந்து போக, மாமியின் புருஷன் மட்டும் வீதியில் என் வீட்டிற்கு எதிர்த்தாற்போல் மேலும் கீழுமாக அரிவாளுடன் நடந்து கொண்டிருந்தார்.
மாமி கதவின் பின் நின்று கொண்டு தேம்பிக் கொண்டிருந்தாள். நல்ல நாட்களில அப்பா முன்னாடி வர மாட்டாள் அவ்வளவு விஸ்வாசம்.
“நீ ஏண்டி அழற? அவன் கெடக்கான் குலைக்கிற நாய். அவனால் என்ன ஆகும்? நீ இங்கியே ஒரு நாலு நாள் இரு. அவன் வெறி அடங்கட்டும்” என்று சொல்லிவிட்டு, “விலாசம், அவளுக்கு நம்மாத்து மடி ஆசாரம் சரிப்படாது. கொல்லைத் தாழ்வாரத்தை ஒழிச்சுக் குடுத்துடு. அவ பாடடுக்கு அங்கியே சமச்சு சாப்டுக்கட்டும். குமுட்டி ஒண்ணப் பரண்லேருந்து எடுத்துக் கொடு” என்று சொல்லி விட்டார் அப்பா. அதற்குப்பின் மடி மாமியின் மடி ராஜ்யம் கொல்லைத் தாழ்வாரத்தில் ஆரம்பித்துவிட்டது. பெரிய தொந்தரவு இல்லை. நாங்கள் கிட்டே செல்ல முடியாது. சமையலை தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருப்பேன். காப்பிப் பொடியை துணியில் வடிகட்டி கடுங்காப்பி போட்டுக் கொள்வாள். ஒருநாள் பலாச்சக்கையை வேக வைத்துக் கொண்டிருந்தாள். அதில் என்ன செய்து, என்ன சாப்பிட முடியும் என்று தெரியவில்லை.
பத்துநாள் இப்படிப் போயிற்று. பிள்ளை மட்டும் காலையில் ஒருதடவை சாய்ந்திரம் ஒருதடவை எட்டிப் பார்க்கும். அவனிடம் வீட்டு நடப்புகளைத் தெரிந்து கொள்வாள் மாமி. பததாம்நாள் மாமியின் மாமனார் கல்யாண சுந்தரமையர் அப்பாவிடம் வந்து நின்றார்.
அப்பா, “என்ன?” என்றார் சிடுசிடுவென்று. 
“ஏதோ அவனுக்கு புத்தி பிசகிடுத்து ராகவா. ராஜம் (மடிமாமி) இல்லாம ரொம்பக் கஷ்டமா இருக்கு. அவகிட்ட சொல்லி திரும்பி வரச்சொல்லு”
“உம்பிள்ளை என்ன பெரிய ரௌடியா? என்னவோ அரிவாளை எடுத்துண்டு வந்து மெரட்டறான்? நீர் என்ன பண்ணிண்ட்ருந்தீர்? என்னவோ பெரிய முன்சீப்புன்னு எட்டு ஊருக்குப் பஞ்சாயத்து பண்ணுவீரே?” என்றார் அப்பா எகத்தாளமாக.
“ராகவா! என் விருத்தாப்பியம் - என்னால அவனை அடக்க முடியலை. இப்ப கொஞ்சம் நல்ல வார்த்தையாச் சொல்லி வெச்சிருக்கேன். கொஞ்சம் அடங்கியிருக்கான். நான் பாத்துக்கறேன். கொஞ்சம் அவளை அனுப்பி வை. வெளியிலே தலை காட்ட முடியலை” என்றார் கல்யாண சுந்தரமையர்.
அப்பா மாமியைக் கூப்பிட்டார். மாமி மாமனார் வந்திருப்பது தெரிந்து, தன் மடிசஞ்சியை ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு வந்து தயாராக நின்றாள்.
“உன் மாமனார் கூப்பிடறார். இப்ப போ. அந்தப் பய வாலாட்டினான்னா சொல்லு. உண்டு இல்லைன்னு தீர்த்துடறேன்” என்றார் அப்பா.
மாமிக்கு மாமனார் வந்து கூப்பிட்டதில் மகிழ்ச்சி என்று தெரிந்தது. முகத்தில் புன்னகையுடன் என் தாவாங்கட்டைப் பிடித்து கொஞ்சிக் கொண்டே நகர்ந்தாள். நான் திடுக்குற்று “ஐயோ மாமி, மடி!” என்றேன்.
“கவலைப்படாதே. ஆத்தில போய்க் குளிச்சிட்டுத்தான் போவேன்” என்றாள். 
“மாமி மடி எதுக்குன்னு சொல்லவேயில்லை நீங்க” என்றேன் குற்றச்சாட்டும் பாவனையுடன். அதற்குமுன் பல முறை எதற்கு மடி என்று என் வீட்டில் இருந்த போது பன்னிப் பன்னிக் கேட்தற்கு பதில் பேசாமல் புன்னகையுடன் நின்றிருப்பாள்.
“போடி. போய் படிக்கிற வழியைப் பாரு. தத்துப் பித்துன்னு பேசிண்டு” என்றவாறு நகர்ந்து விட்டாள். எனக்கு ஏமாற்றம்தான். இதற்குமேல் மாமி நெகிழும் சந்தர்ப்பம் ஒன்றிற்காக நான் காத்திருந்தேன். 
எனக்கும் குமாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் அவர்கள் வீட்டில் நடந்தது. மடி மாமி வருவது சந்தேகம் என்றார் விசாலம் மாமி. மாமியின் மாமனார் கல்யாண சுந்தமையர் காலமாமி இருந்த புதிது. பாக்கு வெற்றிலை மாற்றிக் கொண்ட பிறகு வைத்தி கனபாடிகள் “போய் இந்தப் புடவையை மாத்திண்டு வாம்மா!” என்றார். விசாலம் மாமி சமிக்ஞையைப் புரிந்து கொண்ட எழுந்து என் பின்னார் வந்தார். நான் புடவை கட்டிக் கொண்டு வரும்போது என்னைப் பிடித்து அழைத்து வந்தார். எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணி உட்கார்ந்து கொண்டேன். எல்லாம் முடிந்து குமார் பக்கத்தில் அமர்ந்து கொண்டேன். ஆரத்தி எடுக்கிற நேரம், “யாராவது பாடுங்கோ” என்றார் வைத்தி கனபாடிகள்.
அப்போதுதான் பார்த்தேன். முகம் விகசிக்க மடி மாமி உட்கார்ந்திருந்தவள், “நிருபம சுந்தரராங்கரா” என்று ஆரம்பித்தாள். மடி மாமி பாடுவாளா? பந்துவராளியில் பாடல். கிருஷ்ணரின் அழகைப் பாடுவது. எனக்கென்னவோ சிவன் பாம்புகளுடன் ருத்ரதாண்டவம் ஆடுவது போலிருந்தது. “குமார்!” என்றேன் தீனமாக. 
“பாரதி! கண்ட்ரோல் பண்ணிக்கோ. ஓவர்வெல்ம் ஆய்டாதே” என்றான் குமார் பயத்துடன். ஏற்கனவே பஜனையில் பாட்டுக் கேட்கும்போது மயக்கம் போட்டு கலாட்டா செய்திருக்கிறேன். சிவன் என்றா சொன்னேன்? சிவன் இல்லை. சுப்ரமண்யஸ்வாமி! பாம்புகளுடன் வேலுடன் கையில் புல்லாங்குழலுடன் நடனம் ஆடிக் கொண்டிருந்தது குழந்தை.
‘ராதிகா குஸும நந்தினி’ என்று சரணத்துக்கு மாமி வந்தபோது மாமியின் குரல் கம்ம ஆரம்பித்துவிட்டது. அப்போதுதான் ஞாபகம் வந்தது. இது ஊத்துக்காடு வெங்கட கவியின் சாகித்தியம். அவர் இடுகாட்டில் போய் உட்காந்து கொண்டு பாடல் இயற்றினார் என்பார்கள். அதுதான் சற்று திருப்புகழ் போல் நெருடலாக தாளக் கோர்வையில் இருக்கிறது போலிருக்கிறது. கிருஷ்ணன் குழந்தைதான். சற்று முரட்டுக் குழந்தை. பாம்புகளை வைத்துக் கொண்டு விளையாடுகிற குழந்தை. காளிங்கன் மேல் நின்று கொண்டு நர்த்தனம் செய்த குழந்தை.
பாட்டு முடிந்தவுடன் மடிமாமி அழுது கொண்டிருந்தாள். விசாலம் மாமிகிட்டே போய் “என்னடியிது குழந்தைகள் கல்யாணத்தும்போது நாளும் கிழமையுமா மாய்மாலம்?” என்று அதட்டினார். “ஒண்ணுமில்ல மாமி; ஏதோ பழைய ஞாபகம்” என்றாள் மடிமாடி கண்ணைத் துடைத்தவாறே.
“நன்னாத்தாண்டி இருக்கு; நான் பொண்ணாப் பொறந்த லட்சணமாட்டமா” என்று முகவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக் கொண்டு நகர்ந்தாள்.
சற்று அந்தரங்க சந்தர்ப்பம் கிடைத்தபோது, “என்னாச்சு மாமி” என்றேன்.
“என்னமோ போடி; பிள்ளை ஒரு வயசுக்குழந்தை. புருஷன் சித்தம் நிலையில்லை. பக்கத்தாத்துல கோவிந்த ராவாத்தில பஜனை. இந்தப் பாட்டு கேட்டிண்டுருந்தது. விசு சார் பாடிண்டிருந்தது. நானும் கூடவே பாடிண்டு கேட்டுண்டிருந்தேன். சமையல் உள்ளில என்னவோ விறகு அடுப்பில சமைச்சிண்டிருந்தேன். அப்போ பார்த்து இநத் மாமனார் கிழம் என் பக்கத்திலே வந்து நின்னது. ஏதாவது தூத்தம் கேக்கறதான்னு பார்த்தேன். தாபத்தோட அசடு வழிஞ்சிண்டே என் மேல கையை வெச்சுது. ஒரு நிமிஷம் திக்பிரமிச்சு நின்னுட்டேன். பாட்டு “ராதிகா குஸும நந்தினி’ன்னு சரணத்துக்கு வந்தது. எனக்கு என்னவோ அப்படி ஒரு வேகம் வந்துடுத்து. அடுப்பிலேந்து எரியற விறகை எடுத்துண்டு பத்ர காளியாட்டமா நின்னேன்.
“யாருன்னு நினைச்சீர், நான் பத்தினி. புருஷன் கிறுக்கு கேக்கறதுக்கு ஆளில்லைன்னு நெனைச்சிண்டு கிட்ட வந்தீரோ பொசுக்கிப் புடுவேன்” என்ற கத்தினேன்.
“மரியாதையா வாசலோட இருந்தா ஒரு கவளம் சோறு கெடைக்கும். உம்ம பிள்ளை தாலி கட்டின பாவத்துக்கு வேற காலித்தனமா ஏதாவது நெனைச்சா சுட்டுப் பொசுக்கிடுவேன்” அப்படீன்னேன். தகதகன்னு வெறகு எரிஞ்சு, ‘சடசட’ன்னுது. எனக்கு ஆமாம் போடற மாதிரி. நம்ம சுத்தமா இருந்தா எவன் என்ன செய்ய முடியும்? ஒரு பயல் கிட்ட வரக்கூடாது. ஆமாம்; மடிதான்; ஆசாரம்தான். நெருப்பு கிட்ட யாராவது போவாளோ! தூரக்க நின்னு பார்த்துக்க வேண்டியதான்” என்றாள். 
எனக்குச் ‘சொரேர்’ என்றது. ஏதோ புரிந்த மாதிரி இருந்தது.
இரண்டு நாட்களில் நாங்கள் எல்லோரும் வீட்டைக் காலி பண்ணிக் கொண்டு நல்லூரிலிருந்து பட்டணம் கிளம்பி விட்டோம். மடி மாமி கண்ணீராகப் பெருக்கித் தள்ளி விட்டாள்.
அன்றுதான் நான் அவளைக் கடைசியாகப் பார்த்தது.

லேடீஸ் ஸ்பெஷல், தீபாவளி மலர், 2015

https://www.youtube.com/watch?v=2_PHFVyajUY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...