ஞாயிறு, 22 ஜனவரி, 2017

பம்மாத்து பண்ணிக்கொண்டிருந்தவர்களை ஆட்டங்காண வைத்திருக்கிறார்கள் மாணவர்கள்!

மாணவர்கள் போராட்டங்கள் ஐந்து நாட்கள் கடந்து பின்னும் தளராமல் ஓடிக் கொண்டிருக்கிறது. மிகவும் தன்வயமான இந்த எழுச்சி உள் நோக்கத்துடன் சுயநல நோக்குடன் இருந்திருந்தால் எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். ஏதாவது விலைக்கு ஒப்புக்கொண்டு இந்நேரம் கூடியிருக்கும் மக்கள் கலைந்திருப்பார்கள். அவர்கள் தளராமல் போராடிக் கொண்டிருப்பதிலிருந்தே மாணவர்களின் - மக்களின் - சுயநல அபிலாஷைஅற்ற பொது நோக்கு வெளிப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகள் உள்ளிட்ட மொத்த இந்தியாவும் - ஏன்? - உலகமே இதை பிரமிப்புடன் கவனித்து வருகிறது. மகாத்மா காந்தி இதைத்தான் விரும்பினார். வன்முறையற்ற கட்டுப்பாடான அகிம்சைப் பேராட்டம் சுதந்திர இயக்கத்திற்குப் பிறகு இன்றுதான் முழுமையாக வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. என்ன ஒழுக்கம்! என்ன ஒழுங்கு! என்ன கட்டுப்பாடு!
மறைந்த ஐ ஜி அருளை ஒருமுறை “அன்றைக்கும் இன்றைக்கும் என்ன வேறுபாடு?” என்று கேட்டபோது சொன்னார்... “அன்றைக்குப் பேராட்டத்தில் கடைசி ஆயுதம்தான் வன்முறை; இன்று போராட்டத்தில் அது தான் முதல் தகவல் தொடர்பு சாதனம்” இப்போது பேராட்டம் என்றால் நான்கு பஸ் எரிய வேண்டும்: பத்து பேர் சாகவேண்டும். பொதுச் சொத்துக்களை நாசப் படுத்தவேண்டும். கடைகளைச் சூறையாட வேண்டும். இவை அனைத்தையும் தவிர்த்து அகிம்சைப் போராட்டம் என்றால் என்ன என்று ஒரு புது அத்யாயத்தை எழுதியிருக்கிறார்கள் மாணவர்கள்.
இந்தப் போராட்டம் என்பது ஜல்லிக்கட்டு என்ற ஒரே விஷயத்தைப் பற்றி என்று நினைக்க முடியவில்லை. அரசியல்வாதிகளின் ஊழல்கள், பன்னாட்டு நிறுவனங்கள், மூன்றாம் உலக நாடுகளைக் கபளீகரம் செய்யும் போக்கு, வழிவழியாக நடந்து வந்த பாராம்பரிய பாசன முறைகள், மண்ணுக்கேற்ற பயிர்கள், உரங்கள், உயிரினங்கள் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் காவு கொடுத்துக் கொண்டிருப்பது, அரசே நடத்தும் சாராயக் கடைகள், கட்டுமானங்கள் இல்லாமல் கிராமங்கள் சிதைந்து கொண்டிருப்பது இவையெல்லாமே திரண்டு வந்ததன் திரட்சியாகத்தான் இந்தப் போராட்டம் வெடித்திருக்கிறது எனலாம்.
பொதுவாக இதுபோன்ற போராட்டங்களின் தர்க்க முடிவு ஒன்றிருக்கிறது. இதில் கொஞ்சம் பேர் தலைவர்களாக எழுந்து நாட்டை ஆளும் உரிமை பெறுகிறவர்களாக இருப்பார்கள். அண்ணா ஹசாரே இயக்கத்தைக் கேஜரிவால் கபளீகரம் செய்த மாதிரி. ஆட்சி மாறும் பின்னர் எல்லாமே வழக்கம்போலதான் நடக்கும். ஒருமாற்றமும் இருக்காது. இதற்குக் காரணம் சுயநல நோக்கில் செயல்படுகின்ற சிலர் இதுபோன்ற இயக்கங்களை உபயோகித்துக் கொள்வது மட்டுமன்று. ஊழலைப் பொறுத்தமட்டில் பெருமளவு கவனிப்புப் பெறுகின்ற அரசியல்வாதிகள் போலல்லாது எப்போதும் மாறாமல் இருக்கின்ற அதிகார வர்க்கமும் கூடத்தான் - இந்த இயக்கங்களைப் பொறுத்தமட்டில் என்ன நடக்கின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நம் எதிர்பார்ப்பெல்லாம் அஸாம் கன பரிஷத்போல அது நீர்த்துப் போய் விடக்கூடாது என்பதே.
இவை ஒருபுறம் இருக்க, நம் மனதில் சில ஐயங்கள் எழுகின்றன:
1. மேகதாது அணையின் அடிப்படைக் கட்டுமானத்திற்கு நாமக்கல் மாவட்டத்திலிருந்து மணல் போயிருக்கிறது என்கிறார்கள். தவிர மணலை வெட்டி மைசூருக்கும் நாம் அனுப்பிக் கொண்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். கர்நாடகம் காவிரி நீரை இன்றுவரை மறுத்துக் கொண்டிருக்கிறது.
2. கேரளாவில் மருத்துவக் கழிவுகளை லாரிகளில் அள்ளிக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் கொட்டிவிட்டுப் போகிறார்கள். இதற்குப் பிரதிபலனாக நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? நம் மாடுகளை வண்டி வண்டியாக அவர்களுக்கு இறைச்சிக்காக அனுப்பிக் கொண்டிருக்கிறோம். அவர்களின் தினத் தேவையாக 8000 டன் இறைச்சியைப் பெருமளவு நம் மாடுகள்தாம் பூர்த்தி செய்கின்றன.
3. தெலுங்கு கங்கையின் நீர்வரத்துக்கு நாம் கோடி கோடியாகச் செலவு செய்தோம். அந்த வரத்து நீரை ராயலசீமாவின் பாசனத்திற்காக ஆந்திரர்கள் உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள். அதுபோய் கழிகள் கலந்த மிச்ச நீர்தான் நமக்குக் கிடைக்கிறது.
4. விவசாய நிலங்கள் வேகமாக மறைந்து வீடுகள் முளைக்கின்றன. நீர் ஆதாரங்களை முற்றிலுமாகச் சிதைத்திருக்கிறோம் - மேலும் சிதைத்து வருகிறோம். பெருமழை வரும்போது தங்குவதற்கான நீராதாரங்கள் சிதைந்து போய்வீடுகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன.
5. கவுன்ஸிலரிலிருந்து அமைச்சர் வரை அங்கிங்கனாதபடி எங்கும் விரவியிருக்கும் ஊழல் - ஆட்சி மாறினாலும் மாறாமல் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கும் அதிகார வர்க்கம் -
இதுபோன்ற விஷயங்களுக்காகச் சேமிக்க வேண்டிய வெடி மருந்தை ஜல்லிக்கட்டு போன்ற சற்றுக் குறைவான முக்கியத்துவமுள்ள விஷயங்களால் நீர்வார்த்து நமுத்துப் போகச் செய்வானேன்?
அடுத்ததாக வழக்கு உச்ச நீதிமன்றத்திலிருக்கும்போது இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருப்பது சரியான சமயத்தில்தானா என்று சந்தேகமாக இருக்கிறது. இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக ஒரு வேளை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்குமானால் அதற்குண்டான சட்டத்திருத்தத்தை நிறைவேற்றப் பாராளுமன்றம் சம்மதிக்கும் என்று எதிர் பார்க்கலாமென்றாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்வது உசிதம்தானா? இப்போதே உச்சநீதிமன்றத் தற்காலிகத் தடை அல்லது வழக்கினால் நாம் நம் உரிமையை நிலைநாட்டும் போராட்டத்தில் ஈடுபட இதனாலேயே காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்யும் கர்நாடகத்தை வற்புறுத்துவதன் தார்மீக உரிமையை நாம் இழந்து விட்டோம் என்று சிலர் கூறும் சந்தர்ப்பத்தை நாமே ஏற்படுத்திக் கொடுப்பானேன்?
அடுத்ததாகத் தமிழன் என்று ‘போலரைஸ்’ செய்வது உசிதமா? இது எதிர்மறையான விளைவுகளைச் சில சமயம் ஏற்படுத்தி விடுகிறது. உதாரணத்திற்குச் சொல்ல நிறைய இருக்கின்றன. தமிழ்மொழி மற்ற திராவிட மொழிகளுக்கான ஆணிவேர். இதை நாம் உரத்துச் சொல்லச் சொல்ல மற்ற தென் மாநிலங்கள் நம்மிடமிருந்து விலகிச் செல்கிறார்கள். காரணம் வட இந்திய மொழிகளின் வேராக சமஸ்கிருதத்தை அவர்கள் உணர்ந்த போதும், தமிழ் திராவிட மொழிகள் மத்தியில் இன்றுவரை அந்த அந்தஸ்த்தைப் பெறவில்லை. காரணம் வட மொழிகள் சமஸ்கிருத இலக்கண நூலான அஷ்டஅத்யாயியைப் பின்பற்றுவதுதான். தமிழ் தவிர்த்த ஏனைய திராவிட மொழிகளும் தொல்காப்பியத்தைப் பின்பற்றாது அஷ்ட அத்யாயியையே பின்பற்றகின்றன. சமஸ்கிருதத்திலிருந்து  பாலி , பாலியிலிருந்து பிராகிருதம் அதிலிருந்து தமிழ் சேர்ந்தது கன்னடம், மலையாளத்தின் 40% சமஸ்க்ருதம் - கன்னடர்கள் நம் தொன்மையான யட்சகானத்தை உயிர்ப்பித்திருக்கிறார்கள். மலையாளிகள் நம் தொன்மமான கதகளியை அப்படியே பேணுகிறார்கள். நாம் எந்தத் தொன்மத்தைப் பேணுகிறோம்? ஜல்லிக்கட்டுக்கு மட்டும் கிளர்ந்து எழும் நம் தமிழ் உணர்வு திராவிட மொழிகளுக்கு எல்லாம் தொன்மையானது நம் தமிழ் என்பதை நிரூபிக்க முடியவில்லை. இதனாலேயே தனிச் செம்மொழி அந்தஸ்து நம் மொழி பெறாது, மற்ற மொழிளுடன் அதைப் பெற்றது.
‘போலரைஸ்’ செய்வதில் இன்னொரு ஆபத்தும் உண்டு. பீட்டா நிதி உதவி வெளிநாட்டிலிருந்து பெறுகிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அது உண்மையாகவும் இருக்கலாம். இதுபோன்ற பல போராட்ட இயக்கங்களை அமெரிக்கா போன்ற தேசங்கள் ஊக்குவிப்பதாகப் பேச்சு. இந்தப் பட்டியலில் சில இடதுசாரி இயக்கங்களும் அடக்கம். இதே போன்றதொரு குற்றச்சாட்டை  பீட்டாவின் மேல் வைப்பது போல் இந்த இயக்கத்தை முன்னெடுத்தவர்கள் மீது மற்றவர் வைக்க வாய்ப்பு உண்டு என்பதை மறுக்கவியலாது. தவிர, மாணவர்கள் இதுபோன்ற பேராட்டங்களின் ஈடுபடுவது உசிதமா? கூட்டத்தப் பார்த்து உணர்ச்சிவசப்படுகின்ற எல்லோருமே மாணவர்களின் நடவடிக்கை சரிதான் என்கிறார்கள் - இருக்கலாம் - ஆனால் மாணவர்களின் வேலை படிப்பதுதான் இதுவல்ல என்று தோன்றுகிறது.
தற்போது அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு ஒன்றிரண்டு இடங்களில் நடந்து வருகிறது. இதை இத்துடன் முடித்துக் கொள்வதுதான் மாணவர்களுக்கு நல்லது.
ரயில் மறியல்களை விமர்சித்து ஆங்காங்கே விமர்சனக் குரல்கள் எழுந்து வருகின்றன. இவை வலுப்பெறுமுன் மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக் கொள்வது நலம்.
எது எப்படி இருப்பினும் பம்மாத்து பண்ணிக் கொண்டிருந்த அரசியல்வாதிகளை ஆட்டங்காண வைத்திருக்கிறார்கள் மாணவர்கள். அந்த விதத்தில் அவர்களின் இமாலயச் சாதனை குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியதே

வியாழன், 5 ஜனவரி, 2017

ஜல்லிக் கட்டு

எங்கள் ஊரில் இதை மஞ்சு விரட்டு என்பார்கள். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் நிறைய மாடுகள் இருந்தன. மேய்ச்சலுக்கு ஓட்டிப் போவதற்கு அஞ்சலை என்று ஒரு பெண்மணி வருவார். பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக இருப்பார். ஒரு முறை தன்  சேமிப்பில் வாங்கியிருந்த ஒரு மோதிரத்தை என் அன்னையிடம் காண்பித்துக் கொண்டிருந்தார். இவர் கணவர் வீரன் பிளம்பர். எங்கள் வீட்டு பைப் வேலையெல்லாம் செய்வார். ஒரு நாள் அஞ்சலை அகாலமாய் இறந்து போனார். குழந்தை வேண்டாம் என்று கருச்சிதைவு யாரோ போலி டாக்டரிடம் செயது கொண்டதில் ரத்தப் போக்கு நிற்காமல் இறந்தார். 
வெங்கடாச்சலம் பால் கறக்கும் கோனார். அவரின் மனைவி பாப்பா. பாப்பாவின் தங்கை சின்னப் பொண்ணையும் அவரே மணந்து கொண்டார். இந்த வெங்கடாச்சலம் வைத்தது தான் என் வீட்டில் சட்டம். ஒரே தர்பார் தான். வரும்போதே 'ஜானகி அம்மா' (என் அன்னையின் பெயர்) என்று கத்திக் கொண்டே வருவார். பயந்து வரும். வெங்கடாச்சலம் பாப்பா இருவரும் டிபி வந்து இறந்து போனார்கள்.
இனி விஷயத்துக்கு வருகிறேன்.
மஞ்சு விரட்டு என்பது ஏதாவது திடலில் தானே நடக்க வேண்டும்? எங்கள் ஊரில் மாட்டுப் பொங்கல் அன்று வீதியிலேயே நடக்கும். இதற்கு முன் சிலாக்  குத்து நடனம் என்று ஒன்று நடக்கும். வீடுகளில் மாடு கறப்பவர்கள் எல்லோரும் இப்போது பிரபலமாக உள்ள 'லெக்கிங்ஸ்' பனியன் துணியில் போட்டுக் கொண்டு பனியன் போட்டுக் கொண்டு ஆடுவார்கள். இரண்டு விலாவிலும் நீண்ட கம்பிகளைக் குத்திக்கொண்டு கையில் உருமாலை வீசி வீசி ஆடுவார்கள். ஒயிலாட்டம் மாதிரி. அதே சீருடையுடன் காலில் சலங்கையுடன்  ரத்தம் காய்ந்த விலாவுடன் நடமாடுவார்கள். ஒவ்வொரு வீடும் ஆடும் போது காசு கொடுத்தால் தான் நகர்வார்கள். மஞ்சு வீட்டில் ஒரு ஒழுங்கும் கட்டுப் பாடும் இருக்காது. மாடுகள் கண் மூடித்தனமாக ஓட அதை ஒரு பத்து பேர் துரத்த இன்னும் பத்து பேர் பயந்து ஓடிக் கொண்டிருப்பார்கள். பயமாகவும் பரிதாபவுமாகத்தான்  இருக்கும்.

1. நான் குறிப்பிட்டிருந்த மேய்ச்சலில் தான் மாடுகள் சினை  கொள்ளும். இதற்கென்றே காளை  மாடுகளைக் கோயிலுக்கு நேர்ந்து விட்டிருப்பார்கள். என் வீட்டுக்குப் பக்கத்தில் தடி கொண்ட அய்யனார் கோயில் உண்டு. அதற்கு நேர்ந்து விடுவார்கள் . அந்த மாடு வயிற்றில் தடி என்கிற வார்த்தையுடன் கம்பீரமாக வலம் வரும். இதெல்லாம் போய் இப்போது செயற்கையான சினை ஊட்டுதல் வந்து விட்டது. இவைகள் சந்தைப் பொருள் ஆனதால் வந்த கோளாறு.
2. ஜல்லிக் கட்டு பிராணி வதையா? அப்படி என்றால் ஊர்வன பறப்பன எல்லாவற்றையும் கொன்று தின்பது எதில் சேர்த்தி? கன்றுக்குட்டி வயிற்றிலிருந்து வரும் ரென்னட்டை இனிப்புகளை அலங்கரிப்பதற்கு உபயோகிப்பது, மிருகக் கொழுப்பை சோப்பு தயாரிக்க உபயோகிப்பது, காலணிகள். தோற்  பைகள் அனைத்திலும் மிருக வதை தான்.
3. செயற்கை சினை  ஊட்டுதல் வந்த போதும் ஜல்லிக் கட்டைப் பொறுத்த மட்டில் நம் புராதன வழி முறைகளை நாம் மாற்றிக் கொள்ள வில்லை என்பது தான் குறை.
4. பாரம்பரிய வழி முறைகளை தீர்த்து கட்டுவதில் நமக்கு நிகர் நாம் தான். அல்லோபதி வந்ததா சித்த வைத்தியத்தை ஒழித்துக் கட்டு. சிமெண்ட் வந்ததா காரையைக் கை விடு. லாரி பேக்கர் ஒரு முறை சொன்னார் : 'எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாததால்தான் இரும்பையும் சிமெண்டையும் கட்டிக் கொண்டு அழுதோம்; இதை விட மேலான நிபுணத்துவத்தை வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் இதற்கு வந்தீர்கள்?'
5. எத்தனை மாடு வகைகளை நாம் கொன்றிருக்கிறோம்? எத்தனை நாட்டு நாய்களை நாம் கொன்றிருக்கிறோம்? எத்தனை பாரம்பரிய நெல் வகைகளையும் பாசன முறைகளையும் ஒழித்துக் கட்டியிருக்கிறோம்? ஜல்லிக் கட்டு இருந்து விட்டுப் போகட்டுமே! மிச்சம்  இருக்கிற நம் நாட்டு வகை மாடுகளாவது பிழைத்துப் போகட்டுமே?
6. இன்றும் ஸ்பெயினில் மாட்டை அடக்குவது தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. அது மாட்டுக் கொலை தான். அதைப்  பார்க்கும்போது ஜல்லிக்கட்டில் பிராணி வதை கம்மி தான்.
எனவே கடுமையான கட்டுப் பாடுகளுடனும் ஒழுங்கு படுத்தலுடனும் ஜல்லிக் கட்டை அனுமதிப்பது தான் நியாயம் என்று தோன்றுகிறது.

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...