வியாழன், 5 ஜனவரி, 2017

ஜல்லிக் கட்டு

எங்கள் ஊரில் இதை மஞ்சு விரட்டு என்பார்கள். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் நிறைய மாடுகள் இருந்தன. மேய்ச்சலுக்கு ஓட்டிப் போவதற்கு அஞ்சலை என்று ஒரு பெண்மணி வருவார். பார்ப்பதற்கு மிகவும் லட்சணமாக இருப்பார். ஒரு முறை தன்  சேமிப்பில் வாங்கியிருந்த ஒரு மோதிரத்தை என் அன்னையிடம் காண்பித்துக் கொண்டிருந்தார். இவர் கணவர் வீரன் பிளம்பர். எங்கள் வீட்டு பைப் வேலையெல்லாம் செய்வார். ஒரு நாள் அஞ்சலை அகாலமாய் இறந்து போனார். குழந்தை வேண்டாம் என்று கருச்சிதைவு யாரோ போலி டாக்டரிடம் செயது கொண்டதில் ரத்தப் போக்கு நிற்காமல் இறந்தார். 
வெங்கடாச்சலம் பால் கறக்கும் கோனார். அவரின் மனைவி பாப்பா. பாப்பாவின் தங்கை சின்னப் பொண்ணையும் அவரே மணந்து கொண்டார். இந்த வெங்கடாச்சலம் வைத்தது தான் என் வீட்டில் சட்டம். ஒரே தர்பார் தான். வரும்போதே 'ஜானகி அம்மா' (என் அன்னையின் பெயர்) என்று கத்திக் கொண்டே வருவார். பயந்து வரும். வெங்கடாச்சலம் பாப்பா இருவரும் டிபி வந்து இறந்து போனார்கள்.
இனி விஷயத்துக்கு வருகிறேன்.
மஞ்சு விரட்டு என்பது ஏதாவது திடலில் தானே நடக்க வேண்டும்? எங்கள் ஊரில் மாட்டுப் பொங்கல் அன்று வீதியிலேயே நடக்கும். இதற்கு முன் சிலாக்  குத்து நடனம் என்று ஒன்று நடக்கும். வீடுகளில் மாடு கறப்பவர்கள் எல்லோரும் இப்போது பிரபலமாக உள்ள 'லெக்கிங்ஸ்' பனியன் துணியில் போட்டுக் கொண்டு பனியன் போட்டுக் கொண்டு ஆடுவார்கள். இரண்டு விலாவிலும் நீண்ட கம்பிகளைக் குத்திக்கொண்டு கையில் உருமாலை வீசி வீசி ஆடுவார்கள். ஒயிலாட்டம் மாதிரி. அதே சீருடையுடன் காலில் சலங்கையுடன்  ரத்தம் காய்ந்த விலாவுடன் நடமாடுவார்கள். ஒவ்வொரு வீடும் ஆடும் போது காசு கொடுத்தால் தான் நகர்வார்கள். மஞ்சு வீட்டில் ஒரு ஒழுங்கும் கட்டுப் பாடும் இருக்காது. மாடுகள் கண் மூடித்தனமாக ஓட அதை ஒரு பத்து பேர் துரத்த இன்னும் பத்து பேர் பயந்து ஓடிக் கொண்டிருப்பார்கள். பயமாகவும் பரிதாபவுமாகத்தான்  இருக்கும்.

1. நான் குறிப்பிட்டிருந்த மேய்ச்சலில் தான் மாடுகள் சினை  கொள்ளும். இதற்கென்றே காளை  மாடுகளைக் கோயிலுக்கு நேர்ந்து விட்டிருப்பார்கள். என் வீட்டுக்குப் பக்கத்தில் தடி கொண்ட அய்யனார் கோயில் உண்டு. அதற்கு நேர்ந்து விடுவார்கள் . அந்த மாடு வயிற்றில் தடி என்கிற வார்த்தையுடன் கம்பீரமாக வலம் வரும். இதெல்லாம் போய் இப்போது செயற்கையான சினை ஊட்டுதல் வந்து விட்டது. இவைகள் சந்தைப் பொருள் ஆனதால் வந்த கோளாறு.
2. ஜல்லிக் கட்டு பிராணி வதையா? அப்படி என்றால் ஊர்வன பறப்பன எல்லாவற்றையும் கொன்று தின்பது எதில் சேர்த்தி? கன்றுக்குட்டி வயிற்றிலிருந்து வரும் ரென்னட்டை இனிப்புகளை அலங்கரிப்பதற்கு உபயோகிப்பது, மிருகக் கொழுப்பை சோப்பு தயாரிக்க உபயோகிப்பது, காலணிகள். தோற்  பைகள் அனைத்திலும் மிருக வதை தான்.
3. செயற்கை சினை  ஊட்டுதல் வந்த போதும் ஜல்லிக் கட்டைப் பொறுத்த மட்டில் நம் புராதன வழி முறைகளை நாம் மாற்றிக் கொள்ள வில்லை என்பது தான் குறை.
4. பாரம்பரிய வழி முறைகளை தீர்த்து கட்டுவதில் நமக்கு நிகர் நாம் தான். அல்லோபதி வந்ததா சித்த வைத்தியத்தை ஒழித்துக் கட்டு. சிமெண்ட் வந்ததா காரையைக் கை விடு. லாரி பேக்கர் ஒரு முறை சொன்னார் : 'எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாததால்தான் இரும்பையும் சிமெண்டையும் கட்டிக் கொண்டு அழுதோம்; இதை விட மேலான நிபுணத்துவத்தை வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் இதற்கு வந்தீர்கள்?'
5. எத்தனை மாடு வகைகளை நாம் கொன்றிருக்கிறோம்? எத்தனை நாட்டு நாய்களை நாம் கொன்றிருக்கிறோம்? எத்தனை பாரம்பரிய நெல் வகைகளையும் பாசன முறைகளையும் ஒழித்துக் கட்டியிருக்கிறோம்? ஜல்லிக் கட்டு இருந்து விட்டுப் போகட்டுமே! மிச்சம்  இருக்கிற நம் நாட்டு வகை மாடுகளாவது பிழைத்துப் போகட்டுமே?
6. இன்றும் ஸ்பெயினில் மாட்டை அடக்குவது தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. அது மாட்டுக் கொலை தான். அதைப்  பார்க்கும்போது ஜல்லிக்கட்டில் பிராணி வதை கம்மி தான்.
எனவே கடுமையான கட்டுப் பாடுகளுடனும் ஒழுங்கு படுத்தலுடனும் ஜல்லிக் கட்டை அனுமதிப்பது தான் நியாயம் என்று தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...