திங்கள், 26 செப்டம்பர், 2016

சொல்வதெல்லாம் ....


பொழுது போகாமல் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை அவ்வப்போது பார்க்கிற வழக்கம். அதை நடத்துகிற அம்மை ஒரு போலீஸ்காரரின் நிமிர்வுடன் நடந்து கொள்கிறார். வருகிறவர்களை சாதுர்யமாகக்  கேள்வி கேட்டு சாமர்த்தியமாக உண்மையை வரவழைக்க முயற்சிக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக உரையாடல்களை நகர்த்திச்  சென்று முடிவில் தீர்ப்பும் தீர்வும் வழங்குகிறார்.
வருபவர்கள் முக்காலே மூணு வீசம் பேர் கீழ்நிலை மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் கள்ள உறவு; குடி;காதல்; ஏமாற்றிவிட்டு ஓடுவது. இவைதான் பிரச்சனைகளாக முன் வைக்கப் படுகின்றன. இரு பாலைச் சேர்ந்தவர்களும் பேதமில்லாது குற்றம் இழைப்பவர்களாகவும் பாதிக்கப் படுகிறவர்களாகவும் இருக்கின்றனர். சில சமயங்களில் புகார் சொன்னவர்களே உண்மையில் தவறு செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இதில் நிறைய ஆச்சர்யங்கள் உண்டு:
தவறு செய்பவர்கள் பெரும்பாலும் குற்றத்தை பெருமளவில் மறுக்க முயற்சிக்காமல் அதற்கான நியாயங்களை நிறுவுவதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
நெறி ஆளுநர் பல சமயங்களில் தவறு செய்ததாகக் கருதுவர்களை கிட்டத்தட்ட மிரட்டுகிறார். இதற்கெல்லாம் சட்ட ஒப்புதல் இருக்கிறதா?
தவறு செய்ததாகக் கருதப் படுவோர் சில  சமயங்களில் அதைத் தொடரவே விரும்புகிறார்கள். இதன் மூலமாக நான் அனுமானிப்பது அவர்கள் நிகழ்ச்சியில் சொல்ல விரும்பாத காரணம் பின்னணியில் இருக்கலாம் என்பது.
இவை எல்லவற்றையும் விட நான் கவலைப் படுவது ஒன்று உண்டு.வங்கி பயிற்சி அலுவலகத்தில் நான் பணியாற்றிய போது பயிற்சி மாணவர்களுக்கு 'உன்ன அறிந்து கொள்' என்று ஒரு தேர்வு வைப்பது உண்டு. அதில் உளவியல் ரீதியிலான பல கேள்விகளுக்கு மாணவர்கள் விடை அளிக்க வேண்டும். அதன் முடிவில் 'நீ இன்னார் தான்' என்று நிரூபிக்கிற வழக்கம். சற்று உற்று நோக்கினால் இது பொது அரங்கில் ஒரு மனிதனை நிர்வாணமாக்குகிறது என்று நான் நினைத்துக் கொள்வேன். இந்த விதத்தில் பார்த்தால் அந்தரங்கம் புனிதமானது தான்.
நிகழ்ச்சியால் விளைகிற நன்மைகள் இருக்கட்டும். இது போன்ற ஒரு நிர்வாணமாக்குகிற காரியத்தைத் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் செய்கின்றன. அதுவும் இவற்றையெல்லாம் எதிர்க்கத் திராணியற்றவர்களிடம்...

வியாழன், 1 செப்டம்பர், 2016

வைரமுத்துவின் சிறுகதைகள்-அஸ்வத்

கவிஞர்கள் கதைகளை எழுதுவதை நான் சற்று விநோதமாக உணர்வதுண்டு. எப்படி கவிஞர்கள் கதைகள் எழுத முடியாதோ அதேபோல கதைஞர்களும் கவிதைகள் எழுத  முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. கதையென்பது நிலக்களனை விவரிப்பதுடன் முடிகிறது. கவிதை என்பது எப்போதும் மையப் புள்ளியை நேரடியாகச் சுட்டுவது. இரண்டின் விளையும் ஒன்றே. கவிதை என்றாலும் கதை என்றாலும் சொல்ல வந்த கருப்பொருளை வார்த்தைகள் அல்லது விவரிப்பையும் மீறி மறை பொருளாகவும் பூடகமாகவும் சுட்டுவதே காலத்தை வென்று நிற்கும் என்று தோன்றுகிறது.

தவிரவும் வைரமுத்துவின் எழுத்தைப் பற்றி எனக்குச் சந்தேகங்கள் உண்டு. வார்த்தைச் சிறைகளில் மாட்டிக் கொண்டு வெளிவர முடியாதவர் என்கிற அபிப்ராயம் என் மனதில் ஆழமாக வேரூன்றி விட்டதால் அவரின் கவிதைகள் பக்கம்  அவ்வளவாகப் போனதில்லை. இவர் வார்த்தைக் குவியல்களுக்குள் சொல்ல முடியாத விஷயத்தைக் கண்ணதாசன் எளிய நடையில் சர்வ சாதாரணமாக சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் இவரின் சிறுகதைகள் பக்கம் எப்படி ஈர்க்கப் பட்டேன் என்று நினைத்துப் பார்க்கிறேன். இவரின் சிறுகதைகளைக் குமுதம் விளம்பரப்படுத்தியபோது சுயநினைவில்லாத ஜெயகாந்தனின் ஒப்புதல் பெறப்பட்டு அவரின் எப்போதோ போடப்பட்ட கையெழுத்து இதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்கிற சர்ச்சை கிளப்பிய ஆர்வத்தால் இப்புத்தகத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டேன் என்று நினைக்கிறேன்.

இந்தத் தொகுப்பில் மொத்தம் 40 சிறுகதைகள். பதினொறு  பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் பல பதிப்புகள் காணக்கூடும். வைரமுத்துவின் கியாதி அப்படிப்பட்டது. கிராமத்துக் கதைகள், உள்நாட்டுக் கதைகள், மத்திய வர்க்கக் கதைகள், பெண்ணியக் கதைகள், ஆணியக் கதைகள் என்று பரந்துபட்டு இருக்க வேண்டுமென்கிற முனைப்பு பதிப்பில் பளிச்சென்று தெரிகிறது.

குறிப்பாக கிராமத்துக் கதைகளை மிகவும் தத்ரூபமாகச் சொல்ல வேண்டும் என்று மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் - ஆனால்... அவற்றில் வெளிப்படும் ஒரு ஒட்டாத தன்மையால் அவர் அவற்றைக் கதை சொல்லிகளின் உதவியுடன் எழுதியிருப்பாரோ என்கிற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. இதே உணர்வுதான் எனக்கு ஏற்கனவே அவர் எழுதிய நாவல்களைப் படித்த போது ஏற்பட்டது. வைரமுத்துவின் கிராம எழுத்துகளில் மு.சுயம்புலிங்கம் எழுத்து போலல்லாத ஒரு ஒட்டாத தன்மையை எப்போதுமே கண்டிருக்கிறேன். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் இவர் மாநகரவாசியாக இன்றுவரை அப்படியே நீடித்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இதில் வரும் கதாபாத்திரங்கள் வசனங்கள் எல்லாமே 'க்ளீஷே'க்கள். இவர் தன் மனநிலையை அப்படித்தான் கட்டுப்  பெட்டித்தனமாக வைத்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பதைப் பல உதாரணங்கள் மூலம் விளக்கமுடியும்.

அடுத்ததாக இவரின் நடை. அவர் நடையிலேயே சொல்லுவதென்றால் 'தடதடக்கும் பல் சக்கர வண்டியில் தேர்தலுக்கு முன்னிருந்த தார் ரோட்டில் பயணிப்பது' போன்றிருக்கிறது இவரின் நடை. 'எப்போதும் கட்டுக்குள் கிடக்கும் அவள் வெள்ளை முடிகள் எல்லைதாண்டிய பயங்கரவாதம் பேசின' என்கிறார் ஒரு கிழவியை விவரிக்கும்போது. இதற்கு பதிலாக 'வயதைச் சுட்டும் ஒன்றிரண்டு நரைமுடிகள்' என்றால் என்ன? 'காரணங்கள் துருப்பிடித்து உதிரும்வரை அவை அற்பமெனத் தெரிவதில்லை' என்கிறார். இப்படி எழுதக்கூடாது என்று சொல்ல வரவில்லை. இவர் எழுத்தின் உள்ளுணர்வைக்  கண்டு கொள்வதற்கு இந்த மொழி தடையாக இருக்கிறது என்றே தோன்றுகிறது.

(லாசராமமிர்தம் இதைவிட பயங்கர வார்தை ஜாலமெல்லாம் செய்யக் கூடியவர். என்ன இப்படி ஏதோ சிலம்பம் ஆடுகிறாரே என்று தோன்றும்; அப்படிப் படித்து வரும் போதே ஒரு அற்புத கணத்தில் அவரின் வார்த்தைகள் காலத்தை அப்படியே புரட்டிப் போடும் - பச்சைக்கனவு என்றோர் சிறுகதை எழுதியிருக்கிறார். அடாடா! அதில் தெரிகின்ற நுட்பமான பரிமாணங்கள் தமிழில் மிகவும் அரிதாகவே காணக்கிடைப்பவை.) 
தொகுப்பு தூரத்து உறவு என்று ஒரு கதையில் தொடங்குகிறது. அமெரிக்கப் பிள்ளை தகப்பன் இறந்தவுடன் வீட்டை விற்று விட்டுத் தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்தவுடன் தாயும் மரித்து விடுகிறார். இதுபோன்ற கதைகள் ஏற்கெனவே நிறைய வந்துவிட்டன.

தாஜ்மகாலைப் பற்றி ஒரு கதை. ஷாஜஹான் காதலியைப் பறி கொடுத்து பைத்தியமாகும் இளைஞனுக்காக கருப்பு தாஜ்மஹால் கட்டுவதைக் கைவிடுகிறான் என்று ஒரு கதை. அதைக் குறித்து எழுதியதற்கு  பதில் வேறொருவன் மனைவியை அபகரித்து அவள் மூலம் ஏராளமான குழந்தைகளைப் பெற்ற பின் பிள்ளை பேற்றில் மும்தாஜைப் பறிகொடுத்த கதையை எழுதியிருக்கலாம். ஷாஜஹானின் பெண் ஜஹானாரா பேகம் பற்றிய ஒரு வரிக்குறிப்பு வருகிறது. வாழ்க்கை பூராவும் கன்னியாகக் காலம் கழித்து ஷாஜஹான் சிறை வைக்கப்பட்டபோது அவருக்குப் பெரிய ஆறுதலாக இருந்த அவளைப் பற்றியாவது எழுதியிருக்கலாம்

புத்தர் பற்றி ஒரு கதை. மனதில் ஒரு சிறு களங்கம் உண்டானதால் அவர் தங்கக் கட்டியாக மாற்றிய கல் கல்லாக மாறிவிட்டது என்று 'திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டவன்தான் உண்மை புத்தன், நான் புத்தன் இல்லை' என்று வருந்துகிறார். சரித்திரம் இருக்கட்டும்; இதுபோன்ற ஒப்பற்ற கருத்துச் சிதறலுக்கு தம்ம பதத்திலாவது வேறெங்காவது ஏதாவது ஆதாரம் அல்லது கருப்பொருள் இருக்கிறதா?

இவையுமல்லாது சுற்றுச்சூழல் சமுதாயத் தாக்கம் பொதுவுடைமைக் கருத்துகள் என்ற புகுந்து விளையாடி இருக்கிறார். இறந்த பூனைக்குச் சமாதி கட்டும் ஆஸ்திரேலியப் பெண்மணி இறக்கும்போது அவர் மறைவை துக்கிக்க நாதியில்லை என்கிற தத்துவ விசாரத்தில் வேறு ஒரு கதை.

சினிமாக்காரர்களைப் பற்றியும் எழுதுகிறார். நாகேஷ் சந்திரபாபு கலந்த கலவையாகத் தோன்றுவது போல் தெரியும் ஒரு நகைச்சுவை நடிகரைப் பற்றியும் அவரின் சித்த ஸ்வாதீனமிழந்த மகள் பற்றியும் எழுதுகிறார் - வைரமுத்துவின் குணாதிசய கூற்றில் உள்ள ஒரு விநோதமான பாங்கு இதில் வெளிப்படுகிறது. நெகடிவ் ஆகவும் விமர்சித்தும்  பேசுகிற மனிதர்கள் தத்தம் வாழ்க்கையின் வெற்றியையே அதற்கு ஒப்புக் கொடுக்கிறார்கள் என்கிற தொனி அதில் தென்படுகிறது. இது உண்மையாபிஜிஉடோஸ், குஷ்வந்சிங், ஆர்.கே. லக்ஷ்மண், சோ.ராமசாமி போன்றோரின் வெற்றியைப் பின் எப்படிப் புரிந்து கொள்வது? ஆர்கே. லக்ஷ்மண் வெளிப்படையாகவே 'என் வெற்றிக்குச் செறிவூட்டி வளர்க்கப்பட்ட விமர்சனப் பாங்குதான் காரணம்' என்கிறார்
 பாடலாசிரியர் பற்றி ஒரு கதை. ஏற்கனவே அவர் எழுதிய திரைப்பாடலை மீண்டும் உபயோகித்துக் கொள்ளத் தயாரிப்பாளரும் இயக்குநரும் விழைகிறார்கள், அதற்குப் பணம் கொடுக்க எத்தனிக்கும்போது முஸ்லீம் கவிஞர் அதை "இதற்கு ஏற்கெனவே பணம் வாங்கிவிட்டேன். இப்போது வாங்க அல்லா அநுமதிக்க மாட்டார்" என்று மறுத்துவிட்டு பாடலை உபயோகிக்க ஒப்புதல் அளிக்கிறார். இந்தக் கதையின் ஆதர்சம் கவிஞர் காமூ ஷெரிபாக இருத்தல் கூடும். 'பாட்டும் நானே பாவமும் நானே' என்கிற பாடல் இவர் எழுதிக் கண்ணதாசன் பெயரில் வெளிவந்தது என்கிறார்கள். இதை  ஜெயகாந்தன் மிகவும் ஆத்திரத்துடன் கேட்ட போது கா.மு.ஷெரிப், "யார் பேர்ல வந்தா என்ன? கேக்க நல்லாத்தானே இருக்கு" என்றாராம் சிரித்துக் கொண்டே. ஜெயகாந்தன் உள்ளதை உள்ளபடியே விவரித்தபோது காமூ ஷெரிப் பால் நமக்கு எழுந்த வியப்பும் மரியாதையும் வைரமுத்துவின் கதையைப் படிக்கும் போது தோன்றவில்லை. நகாசு செய்கிறேன் என்று தேவையில்லாமல் அல்லாவை இழுத்தது காரணமாக இருக்கலாம். வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைச் சமமாகப் பாவிக்கிற ஒரு பெரிய மனிதரை அவர் மிகப்பெரிய குண நலனை உண்மையான முஸ்லீம் என்று வழக்கமாகப் பிரதிநிதித்துவப்படுத்த முயன்றதன் மூலம் குறைத்துச் சொல்ல முயன்றிருக்கிறார் வைரமுத்து என்று தோன்றுகிறது.
வயிறு ஊதி இளைத்தவள் வயிற்றில் வரி வரியாகக் கோடு விழ, அதைக் காட்டி அவள் கன்னித்தன்மையைக் கேள்விக் குறியாக்குகிறது சமூகம் என்று ஒரு கதை. கன்னித்திரை கிழிந்திருப்பதைப் பற்றி இன்னொரு கதை. 'மணி அடிக்கும் முன்பே திரை விலகிவிட்டது' என்கிற ஆபாச வர்ணனை வேறு. இவையெல்லாம் ஒளிவு மறைவு இருந்த காலங்களில் ஒரு முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் தேவையாக இருந்திருக்கக்கூடும் என்றாலும் அப்போதும் அவை பாலியல் வக்கிரங்களுக்குத் துணை போகத்தான் பயன்பட்டிருக்கின்றன என்பதே உண்மை.

டைகர் ராமானுஜம் என்றொரு வக்கீல் அமெரிக்கப் பையனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருக்க மகன் ஒரு நைஜீரியப் பெண்ணை மணந்து கொண்டு வந்து நிற்கிறான். அதை அவர் எப்படி ஏற்றுக் கொள்கிறார் என்று ஒரு கதை. அவருக்கு நேர்ந்த 'அவமானத்தை அவரவர்கள் ஆண்டு வருமானத்துக்கும் வசதிக்கும் ஏற்க கொண்டாடினார்கள் வசதி படைத்த மனிதர்கள்' என்று எழுதுகிறார். பின்னர் டைகர் ராமானுஜம் மனம் மாறி மருமகளை ஏற்றுக் கொள்வதுடன் முடிகிறது கதை. ஜெயகாந்தனின் யுகசந்தி மாதிரி ஒரு கதை. அதில் இருந்த தோய்வு இதில் இருக்கிறதா சந்தேகம்தான்.

உடல்நிலை சரியில்லாத பெண்மணியின் கணவர் மனமொத்த பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள முதல் மனைவி விலகுகிறார். முதல் மனைவி இறந்ததற்கு கணவன் மட்டும் ரகசியமாகப் போய்த் திரும்ப மனைவியும் தன் பிள்ளைகளுடன் சாவுக்குப் போய் விட்டு அவர்களுக்கு மொட்டையடித்துக் கூட்டி வருகிறார். பாரதி கிருஷ்ணகுமார் இதேபோல் ஒரு கதையை எழுதியிருக்கிறார். இந்தக் கதையில் ஒரு கிறிஸ்துவப் பெண் மிகவும் உன்னதமாக உயர்கிறார். கிருஷ்ணகுமார் கதையில் ஹிந்துக் குடும்பத்தைச் சேர்ந்த வேறோர் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் உயர்கிறார். ஏற்கெனவே நான் குறிப்பிட்ட 'க்ளீஷே' வகையைச் சேர்ந்தது இக்கதை. ஒரு முஸ்லீமை அல்லது கிறிஸ்துவரை விவரிப்பதில் ஐம்பது வருட அரசியலும் பொதிந்திருக்கிறது.

ராணுவத்தில் சேர்ந்து விடுமுறைக்கு வரும் கணவன் மனைவிக்கு அம்மை போட்டிருப்பதைப் பார்த்து ஏமாற்றம் அடைகிறான். துபாயில் ஒட்டகம் மேய்க்கும் ஒருவன் குழந்தை அவன்தான் தந்தை என்ற நம்ப மறுக்கிறது. வேலை செய்யும் வீட்டின் குழந்தைகள் அப்பா... அப்பா என்று வாஞ்சையாக இருக்கின்றன. இப்படி இரண்டு கதைகள்.

டிஐஜியிடம் வேலை பார்த்து ஓய்வு பெற்ற ஒருவன் பற்றி ஒரு கதை. அவனைப் பிழிந்து வேலை வாங்குகிறார்கள் டிஐஜியும், அவரது மனைவியும். இரண்டு பேரும் - டிஐஜியும் ப்யூனும்- ஓய்வு பெற்ற பின்பு ஒரு இடத்தில் சந்திக்கிறார்கள். ப்யூன் மிகவும் பெருமிதமாக அவரிடம் 'நாம் இருவருமே செல்லாக் காசு என்று கூறிப் பழி வாங்குவதாக முடிகிறது கதை. இதே விஷயத்தைப் பற்றி உளவியல் சிக்கல்களை நுணுக்கமாக ஆராய்ந்து  முனுசாமி என்று ஜெயந்தன் ஒரு கதை எழுதியிருக்கிறார். வைரமுத்து நேரம் கிடைத்தால் படித்துப் பார்க்கலாம்.

கோயில் மாடு என்று ஒரு கதை. கோயிலுக்கு நேர்ந்துவிட்ட மாட்டை அடிமாட்டுக்கு விற்று விடுகிறார்கள் பஞ்சாயத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுத்தால் மாட்டைத் திருப்பிக் கொடுத்து விடுவதாய் சொல்ல பஞ்சாயத்தார் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். அய்யனாருக்குச் சேர வேண்டிய காசுக்கு என்ன செய்வது என்று பஞ்சாயத்து யோசிக்கப்  பணத்திற்கு பதிலாகக் கை மோதிரத்தைக் கழற்றி உண்டியலில் போடுகிறார் கீரித்தேவர். அவர்தான் மாட்டைத் திரும்பிப் பெறப் போராடியவர். இதுபோல் நடக்குமா? கீரித்தேவர் தியாகம் கிடக்கட்டும்; கோயிலுக்கு நேர்ந்து விட்ட மாட்டை யாராவது அடிமாட்டுக்கு விற்பார்களா?

வேதங்கள் சொல்லாதது என்கிற கதையில் ஐயர் ஒருவர் தென்னந்தோப்பை விற்கும்போது உள்ளேயிருந்த வீட்டில் சங்கராச்சாரியார் தங்கியிருந்ததால் அதில் தினசரி விளக்குப் போட்டுப் புனிதமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனை போட, வாங்குபவர் அதை ஒப்புக்கொள்கிறார். தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் வாங்கியவர் தோப்பைப் பராமரித்துவரும் குடியானவத் தம்பதியினரை வைத்து விளக்குப் போடச் சொல்வதை தற்செயலாகக் காணும் ஐயர் கொதிக்கிறார். பின்னர் சூறைக் காற்றும் மழையும் வீசத் தோப்பை வாங்கியவர் குடியானவத் தம்பதிகளை வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதிப்பதுடன் முடிகிறது கதை. என் முடிவை மகா பெரியவர் ஏற்றுக் கொள்வார்; ஐயர் போகப் போகப் புரிந்து கொள்வார் என்று தத்துவார்த்தமாக முடிக்கிறார் கதையை.

இந்தக் கதையில் தென்படும் உளவியல் பாங்கு சிக்கலானது; ஆனால் மிகவும் ஆர்வமூட்டக் கூடியது. கடந்த ஐம்பது நூறு வருடங்களில் வேரூன்றிய இடைநிலை ஜாதிகளின் பிராமணர் குறித்த எள்ளலும் இகழ்ச்சியும் இக்கதையில் வெளிப்படுகின்றன. அதைப்புரிந்து கொள்ளலாம். ஆனால் அதை அரைகுறைத் தகவல்களுடன் மேலோட்டமாக எழுதி நிறுவ முடியுமா என்ன? அய்யர் சங்கராச்சாரியார் தங்கிய இடத்தைக் காண்பித்து பிரம்ம யக்ஞம், பிதுர் யக்ஞம், வேத யக்ஞம், பூத யக்ஞம், மானுட யக்ஞம்ன்னு அஞ்சு யக்ஞம் பண்ணின இடமோ இல்லியோ இது என்கிறாராம். இதெல்லாம் சங்கராச்சாரியார் செய்தாராமா? இதெல்லாம் கிருஹஸ்தர்களுக்கு விதிக்கப்பட்ட கடமையன்றோ? எழுதும்போது அது என்னவென்று கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டாமா?

ஜெயகாந்தன் ஜெய ஜெய சங்கரவில் ஒரு நுணுக்கமான மரபு ஒன்றை விவரித்திருப்பார். அதை என் அன்னை படித்துவிட்டு, எப்படிடா அவருக்கு இது தெரிந்தது? என்று ஆச்சரியப்பட்டுப் போனார். அதுபோன்ற நுண்மாண் நுழைபுலம் வேண்டாம். அடிப்படை விஷயங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? பாதரஷையைக் கழட்டிண்டு வாங்கோ என்கிறாராம் ஐயர். பாதரக்ஷை என்று எழுதவேண்டாம். பாதரட்சை என்றாவது எழுத வேண்டாமா? தமிழ் ஆசிரியராக இருந்தவர் வேறு!

இந்தக் கதை வைரமுத்துவின் சொந்த அநுபவமாக இருக்கக்கூடும் தன்னிலை ஒருமையிலேயே விவரிப்பதால். தவிரவும் பிராமணர்கள் கிராமங்களில் இருக்க முடியாத நிலை உருவாகி வருவதால் சொத்துக்களை வயதான காலத்தில் விற்பது வழக்கம். அடுத்தவர் அநுபவத்தில் ஏறி நின்று அதைத் தத்ரூபமாக விவரிப்பது இருக்கட்டும்; இது அவர் அநுபவம் என்றால் அதில் இருக்கின்ற அதீத இகழ்ச்சியும் அலட்சியமும் அதன் நிரூபணத் தன்மையைக் குலைத்து விடுகின்றன  என்பதே உண்மை.

வைரமுத்து தன் முன்னுரையில் பல ஜாம்பவான்களைக் குறிப்பிடுகிறார். தொல்காப்பியரிலிருந்து ஆரம்பித்து வவேசு ஐயர், குபரா, பிஎஸ்.ராமையா, மௌனி, திஜர, ஜெயகாந்தன் போன்ற தமிழ் எழுத்தாளர்கள்; கார்க்கி செக்காவ், ஓஹென்றி மாப்பசான் போன்ற சர்வதேச எழுத்தாளர்கள், தாகூர் போன்ற பிறமொழி இந்திய எழுத்தாளர்கள் மற்றும் எட்கர்  ஆலன் போ  போன்றவர்கள் வரை குறிப்பிடுகிறார். கநாசுவையும் ஊறுகாய் போல் தொட்டிருக்கிறார். (அன்றைய துக்ளக்கில் கநாசு வைரமுத்துவை விமர்சித்து எழுத, கல்கியில் பழங்களை விட்டு விட்டு முட்களைச் சுவைக்கும் கிழ ஒட்டகம் என்று அவரை விமர்சித்து வைரமுத்து எழுதியது நினைவுக்கு வருகிறது). முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளை இவர் படித்திருக்கிறாரா தெரியவில்லை.
இவர் கதைகளில் உள்ளீடாகப் பதிந்திருப்பது இவரையே அறியாமல் வெளிப்படுத்தியிருக்கும் நிலப்ரபுத்வம், ஜாதி அரசியல், பாலியல் வக்கிரம் மற்றும் உதாசீனம் போன்றவையே. இதெல்லாம் வழி வழியாக வரும் நம்பிக்கைகள் அவ்வளவே.

சிறுகதை அல்லது நாவல் என்பது வார்த்தையில்  விவரிக்கவொண்ணாதது. நதி ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை மாதிரி. சிறுவன் ஒருவன் ஆற்றைப் பார்த்துக்கொண்டே கை மணலை உதிர்த்துக் கொண்டிருக்கிறான். உதிரும் மணல்தான் சிறுகதை அல்லது நாவல்.

இது கைவர இரண்டு முக்கியமான தேவை; ஒன்று வாசிப்பனுபவம். இது படிப்பறிவிலிருந்து வேறானது. மற்றொன்று மனிதர்களைப் பார்க்கக் கற்றுக் கொள்வது. மனிதர்களைப் பார்க்க சிலர் ஊர் ஊராக அலைந்திருக்கிறார்கள் - சுகமாக விமானத்தில் போய் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்குவதல்ல அது. அடுத்த வேளை சோற்றக்குக் கூட காசில்லாமல் மக்களோடு மக்களாகக் கலந்து அவர்கள் அநுபவங்களைத் தத்தம் அனுபவங்களாய் உட்கிரகிக்கின்ற மோன நிலை அது.
இன்னமுமே வைரமுத்துவிற்குக் காலம் நிறைய இருக்கிறது; முயற்சிக்கலாம்.  

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...