பொழுது போகாமல் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை அவ்வப்போது பார்க்கிற வழக்கம். அதை நடத்துகிற அம்மை ஒரு போலீஸ்காரரின் நிமிர்வுடன் நடந்து கொள்கிறார். வருகிறவர்களை சாதுர்யமாகக் கேள்வி கேட்டு சாமர்த்தியமாக உண்மையை வரவழைக்க முயற்சிக்கிறார். மிகவும் சுவாரஸ்யமாக உரையாடல்களை நகர்த்திச் சென்று முடிவில் தீர்ப்பும் தீர்வும் வழங்குகிறார்.
வருபவர்கள் முக்காலே மூணு வீசம் பேர் கீழ்நிலை மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் கள்ள உறவு; குடி;காதல்; ஏமாற்றிவிட்டு ஓடுவது. இவைதான் பிரச்சனைகளாக முன் வைக்கப் படுகின்றன. இரு பாலைச் சேர்ந்தவர்களும் பேதமில்லாது குற்றம் இழைப்பவர்களாகவும் பாதிக்கப் படுகிறவர்களாகவும் இருக்கின்றனர். சில சமயங்களில் புகார் சொன்னவர்களே உண்மையில் தவறு செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இதில் நிறைய ஆச்சர்யங்கள் உண்டு:
தவறு செய்பவர்கள் பெரும்பாலும் குற்றத்தை பெருமளவில் மறுக்க முயற்சிக்காமல் அதற்கான நியாயங்களை நிறுவுவதில் முனைப்பு காட்டுகிறார்கள்.
நெறி ஆளுநர் பல சமயங்களில் தவறு செய்ததாகக் கருதுவர்களை கிட்டத்தட்ட மிரட்டுகிறார். இதற்கெல்லாம் சட்ட ஒப்புதல் இருக்கிறதா?
தவறு செய்ததாகக் கருதப் படுவோர் சில சமயங்களில் அதைத் தொடரவே விரும்புகிறார்கள். இதன் மூலமாக நான் அனுமானிப்பது அவர்கள் நிகழ்ச்சியில் சொல்ல விரும்பாத காரணம் பின்னணியில் இருக்கலாம் என்பது.
இவை எல்லவற்றையும் விட நான் கவலைப் படுவது ஒன்று உண்டு.வங்கி பயிற்சி அலுவலகத்தில் நான் பணியாற்றிய போது பயிற்சி மாணவர்களுக்கு 'உன்ன அறிந்து கொள்' என்று ஒரு தேர்வு வைப்பது உண்டு. அதில் உளவியல் ரீதியிலான பல கேள்விகளுக்கு மாணவர்கள் விடை அளிக்க வேண்டும். அதன் முடிவில் 'நீ இன்னார் தான்' என்று நிரூபிக்கிற வழக்கம். சற்று உற்று நோக்கினால் இது பொது அரங்கில் ஒரு மனிதனை நிர்வாணமாக்குகிறது என்று நான் நினைத்துக் கொள்வேன். இந்த விதத்தில் பார்த்தால் அந்தரங்கம் புனிதமானது தான்.
நிகழ்ச்சியால் விளைகிற நன்மைகள் இருக்கட்டும். இது போன்ற ஒரு நிர்வாணமாக்குகிற காரியத்தைத் தான் இது போன்ற நிகழ்ச்சிகள் செய்கின்றன. அதுவும் இவற்றையெல்லாம் எதிர்க்கத் திராணியற்றவர்களிடம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக