வியாழன், 15 ஆகஸ்ட், 2013

காலச்சுவடு இதழில் கிருஷ்ணன் என்பவர் பெரியார் பற்றி ஒரு திறனாய்வு எழுதி இருந்தார் . அதற்கு என் பதிலாக நான் எழுதிய எதிர் வினையை அவர்கள் வெளியிடவில்லை. அதனால் என்ன? அந்த எதிர் வினை இதோ :

அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். கடந்த மார்ச் இதழில் வெளிவந்த கிருஷ்ணன் அவர்களின் கட்டுரையையும் அதற்கான எதிர் வினையாக ஏப்ரல்  இதழில் வந்த கடிதங்களையும் கண்டேன். என்னுடைய எதிர்வினைகளை இங்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்:
1. பெரியார் குறித்த கிருஷ்ணனின் பார்வை, விஸ்வரூபம் திரைப்படம் பற்றிய கட்டுரை மற்றும் சேரன்மாதேவி குருகுலம் குறித்த  நூல் மதிப்பீடு இலங்கையில் முஸ்லிம்கள் நிலை பற்றிய கட்டுரை  எல்லாமே என் பார்வையில் ஒரு விஷயத்தையே குறிப்பதாய்த் தோன்றுவது நகை முரணே.
2. கிருஷ்ணன் என்னதான் புரட்சிகரமாகப் பூணூலை அவிழ்த்து ஏறிய முயன்றாலும் அதை மீண்டும் மாட்டுவதற்குத்தான் ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர் உணர வேண்டும். கமலஹாசனுக்கு இது தான் நடந்தது. பெரியாரின் சிஷ்யகோடிக்களுடன் தன்னையும் வலிந்து இணைத்துக்கொள்ள முயன்ற அவரை, 'முஸ்லிம் சகோதரர்கள் படம் பார்த்த பின் அண்டா அண்டாவாக எனக்கு பிரியாணி போட வேண்டும்; பசியுடன் காத்திருப்பேன்' என்று கூறியவரை, பிரச்சினையின் போது தன் வீட்டில் தொழுகை நடத்த அனுமதித்தவரை 'முற்போக்கு பேசும் வைதீகன் ஆபத்தானவன்' என்கிற பெரியாரின் வார்த்தைகளைக் கூறி நிராகரித்தார்கள் படத்தை எதிர்த்த அமைப்பினர். அப்போது ஹாசன் நிழல் தேடிய எந்த அமைப்பும் அவருக்குத் துணை நிற்கவில்லை.
3. விவேகானந்தரில் இருந்து ஜோதிபா பூலே வரை வைதீகம்/சமஸ்க்ருதம் அல்லாது  இந்து மத அமைப்பைக் கட்டமைக்க முயன்று பலர் பல இடங்களில் வெற்றி கண்டிருக்கிறார்கள். யாருமே தெய்வ நிந்தனை புரியவில்லை. இதனால் பல பிரதேசங்களில் ஜாதிக் கலப்பு நடந்தது. சரஸ்வத் பிராமணன், காயஸ்த பிராமணன்,கொன்கனச்த பிராமணன் இவர்கள் எல்லாருமே சரித்திரத்தில் பிராமணர்களாகவும் க்ஷத்ரியர்களாகவும் சமயத்துக்குத் தகுந்தபடி செயல் பட்டிருக்கிறார்கள்.
4. தமிழகத்தைப் பொறுத்த வரை வைதீகத்துக்குப் பின் வந்த பக்தி இயக்கம் தன்  அளவில் நின்று விட்டது. அது நியாயமாகப் பார்த்தால் கீழ் வரை ஊடுருவி இருக்கவேண்டும். அவ்வாறு நடக்காமல் போனதற்குக்  காரணம் சமயக் குரவர்களுள் மூவர் பிராமணர் ஆக இருந்ததால் இருக்க வேண்டும்.
5. இக்குறையைப் பெருமளவு நீக்க முயன்று மாபெரும் புரட்சிக்காரராக விளங்கியவர் உடையவர் என்றழைக்கப்படும் ராமானுஜர். அவர் காலத்துக்குப் பிறகு ஆதரவு இல்லாமல் அந்த இயக்கம் நசித்துப் போயிற்று. என்றாலும் அவர் காலம் வரை சாதிக்கலப்பு நடந்தது உண்மையே.
6. இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் வைதீக சமஸ்க்ருதம் தவிர்த்த சமூக இயக்கம் தேவைப்பட்டபோது அதை நிறைவு செய்தவர் பெரியார் என்பதில் ஐயமில்லை. ஆனால்  வைதீக பிராமணர்களின் மேலாண்மையை மட்டும்  தீர்த்துக்கட்ட விரும்பிய ஆதிக்க சாதியினருக்குப் பெரிய வடிகால் ஆகத் தன்னை அறியாமலேயே ஒப்புக் கொடுத்தவர் பெரியார் என்பதையும் நாம் ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கிறது..
7. அவருடைய இயக்கத்தையும் சமூகப் பணிகளையும் பிராமண ஜாதியின் மேலாதிக்கத்தை ஒழிப்பதற்காக மட்டுமே ஆதிக்க ஜாதியின் பயன் படுத்திக் கொண்டனர். தெய்வ மறுப்பு, ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, போன்ற பலவற்றைப் பெரும்பான்மையினர் கழற்றி விட்டனர்.
8. இது எப்படி ஆயிற்று என்றால் 'கண்ணகி முட்டாள் பொம்பிளை' என்று பெரியார் சொன்னது அவரின் வழிவந்து அதிகாரப் பீடங்களை அடைந்து குடும்ப நலன்களை மட்டும் பேணுகின்ற இந்த 'நியோ பிராமணர்களுக்கு' தர்ம சங்கடமாக இருக்கிறது இன்று. அன்று தகப்பனும் மகளும் உடலுறவு கொள்வது போல் சிறுகதை  எழுதிய புரட்சிக்காரர்கள் இவர்கள்!
9. பெரியாரின் சமூக இயக்கம் இப்படி அறிவியல் சாராது போனதால் தான் இன்றைக்கும் 'இரட்டைக் குவளை' முறையும் காதல் திருமணத்துக்கு எதிரான வன்முறையும் பல இடங்களில் வெகு ஆதிக்க ஜாதியினர் ஆதரவுடன்  கோலோச்சுகின்றன.
10. இது போன்ற வெகு ஜனஆதரவுடன் பன்னெடுங்காலமாக நடந்து வந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை ஆவணப் படுத்தியவர்கள்/சட்ட புத்தகத்தை உருவாக்கியவர்கள் என்ற முறையில் பலர் பிராமணர் மீது  காழ்ப்புணர்வு கொள்வது புரிந்து கொள்ளக்கூடியதே. ஆனால் பெருவாரியானவர்கள் ஆதரவுடன் நடந்த இவை  எல்லாவற்றிற்கும் பிராமணர்களை மட்டும் ஒட்டு மொத்தப் பொறுப்பாக்கியது தான் பெரியாரின் சாமர்த்தியம்.
இல்லை என்றால் பிராமணர்களை எல்லா விதமான சமூகப் பங்கெடுப்பிலும் விலக்கி வைத்த பின்னும் ஏன் இவ்வளவு சமூக முரண்கள்?
11. பெரியாரின் இயக்கத்தால் தமிழ் நாட்டில் நன்மை அடைந்தவர்கள் ஆதிக்க சாதியினருக்குப் பின் முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களுமே. அவரின் இந்து மத எதிர்ப்பு முனைப்பு மற்ற மதங்களுக்கும் பரவாமல் மிகவும் ஜாக்ரதையாகப் பார்த்துக்கொண்டார். இதை அவர்கள் தத்தம் மதத்தைப் பரப்பவும் மாற்றம் செய்யவும் நன்கு உபயோகித்துக் கொண்டனர். வேறெங்கிலும் இல்லாத அளவு ஊடகங்களில் இன்று தமிழ் நாட்டில்  நடக்கும் மதப் பிரச்சாரமே இதற்கு சாட்சி.
12. இதில் முஸ்லிம்கள் எதிர்பாராத ஒன்று அவர்களின் இந்த நிலைப்பாடு அவர்களுக்கு எதிராகத் திரும்பும் என்பது தான். இந்து மத வாதிகளை முற்போக்காளர்கள் எதிர்த்தபோது அதை மௌனமாய் ரசித்தவர்கள் இன்று அதே காரணங்களுக்காக முற்போக்காளர்கள் விஸ்வரூபம்  விஷயத்தில் எதிர்த்தால் அதிர்ச்சி அடைகிறார்கள்.
13. இலங்கையில் ஒரு காலத்தில் முஸ்லிம்களை புலிகள் எதிர்த்தார்கள்; அப்போது முஸ்லிம்கள் ஒற்றுமை கருதி சிங்கள ஆதரவு நிலைப்பாடினை எடுத்தார்கள். இப்போது சிங்களர்கள் முஸ்லிம்களை ஒழிப்பதென்று கிளம்பி விட்டார்கள். மேற்கூறிய குழப்பம் தான் இதிலும் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.
14. ஒரு அன்பர் கம்ப ராமாயணத்தையும் சமஸ்க்ருதத்தையும் தமிழைப் பாராட்டுவதாக நினைத்துக்கொண்டு அவதூறு செய்திருக்கிறார். அவருக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் என் தாய் மொழி தமிழ் போன்று சம்ஸ்க்ருதமும் தொன்மையும்  மேன்மையும் கொண்ட மொழி. தமிழ் என் தாய் மொழி என்றால் சமஸ்க்ருதம் என் மதத்தின் மறைநூல்களைக்  கொண்ட மொழி; இரண்டுமே எனக்கு வேண்டும்; எப்படி முஸ்லிம்களுக்கு அராபி மொழியோ கிறிஸ்துவர்களுக்கு கிரேக்கமும் இலத்தினுமோ அது போன்று.
15. முதிய சிங்கமான பெரியாரை வைத்துக் கொண்டே 24 வயதான வாலிப சிங்கம் ஒன்று (ஜெயகாந்தன்) 1960 ஆம் ஆண்டு திருச்சி தேவர் ஹாலில் கர்ஜித்தது. நமது நாட்டின் தொன்மையையும் உன்னதத்தையும் அவரைப்போல் பறை சாற்றியவர் ஒருவரும் இல்லை .
16. 'சோ' என்று பதுங்கினார்? எமர்ஜென்சியின் பொது தூய தமிழில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு ஜெயிலில் இருந்து வந்தவர் மத்தியில் துணிச்சலாய்ப் பத்திரிகை நடத்தியவர் அவர். அதே எமர்ஜென்சியின் போது பாராளுமன்றத்தில் புகுந்து உரை நிகழ்த்திவிட்டுத் தப்பியவர் சுப்ரமணிய சாமி.
17. யார் யாரையோ மென்று துப்பியதாக சிலர் கூறும் பெரியாரின் இயக்கத்தையும் அவரின் வழித்தோன்றல் இயக்கங்களையும் இந்து மதமும் ஜாதியக் கட்டுமானமும் மென்று துப்பியதே வரலாற்று உண்மை.

அன்பன்,
அஸ்வத் 
6.4.2013

ஞாயிறு, 13 ஜனவரி, 2013

சமீபத்திய கற்பழிப்பு சம்பவங்களுக்கான காரணங்களாக நான் நினைப்பவை :

1. பெண்களை போகப்பொருளாகச் சித்தரிக்கும் திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள்.
2. குடி.
3. மாநகரங்களுக்குக் குடிபெயரும் வேலையில்லா வாலிபர்கள்.
4. பொதுமக்களைக் காப்பதற்குத் திராணியற்ற போலீஸ்.
5. 'எவன் எக்கேடு கேட்டால் நமக்கு என்ன; எதாவது உதவி செய்யப்போய் நாம் போய் வம்பில் மாட்டிக்கொள்வானேன்' என்று நினைத்து ஒதுங்கும் பொது ஜன மனோபாவம்.

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...