ஞாயிறு, 27 மே, 2018

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை XI

அத்தியாயம் 30
“போகாதே; இங்கியே நான் அவனுக்கு நல்ல ஒரு காரியர் அமைச்சுத் தரேன்னு சொல்றேன். சென்னையிலேயும் என்னால அவனுக்கு ஏற்பாடு பண்ணித் தர முடியும்,” என்று சொல்லிக் கொண்டிருந்தார் இசை ஆசிரியை. என் மனைவி அதைப் பொருட்படுத்தத் தயாராக இல்லை. சீரான வகுப்புகள் இல்லை. காரணம் என்னவென்றால் ஏற்கெனவே ஒரு இசையாசிரியர் சொன்னபடி இசையில் – குறிப்பாகக் கர்நாடக இசையில்- மொத்தம் ஏழு படி நிலைகள் இருந்தால் ஆதித்யா ஏற்கெனவே அதில் ஆறாம் படியில் இருக்கிறான். வாய்க்கின்ற இசை ஆசிரியர்கள் ஐந்தாம் படியில் தான் இருக்கிறார்கள் எனும் போது அவர்களால் என்ன பெரிய பாடத்தைப் படிப்பித்து வைக்க முடியும்?
சென்னைக் கல்லூரியில் பெண்ணிற்கு சேர்க்கை கிடைத்தவுடன் வேறு தெரிவும் இல்லாது போயிற்று. எங்கள் முன் இருந்த தெரிவுகள்: 1. பெண்ணை புது டெல்லியிலேயே படிக்க வைப்பது. 2. சென்னையில் விடுதியில் தங்கிக் கொண்டு படிக்க ஏற்பாடு செய்வது. 3. என்னைத் தவிர்த்த குடும்பத்தையே சென்னைக்குப் பெயர்ப்பது. இதில் மூன்றாவது வாய்ப்பையே என் மனைவி தேர்ந்தெடுத்தாள். ஆதித்யாவின் இசையையும் கொஞ்சம் கவனிக்கலாம் என்கிற எண்ணம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதை விட விசேஷமாகப் பெரிய  இசைவாணரிடம் திரும்பப் போவது என்று தீர்மானித்தாள். இதற்குப் பெரிய சிந்தனை ஒன்றும் வேண்டியிருக்கவில்லை. அவரின் தொடர்பை முற்றிலுமாகக் கத்தரித்துக் கொள்ளவில்லை. ஏற்கெனவே கூறியிருந்தபடி மாதா மாதம் அவருக்குப் பணம் வேறு போய்க் கொண்டிருந்தது. டெல்லியில் ஒன்றும் வேலைக்காகவில்லை. எனவே இதற்குப் பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவைப் படவில்லை. என்னைப் பொறுத்தவரை பெரிய இசைவாணரிடம் செல்வதை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன். முதன் முதலில் விட்ட போதே தொலைத்துத் தலைமுழுகி இருக்க வேண்டும். என் மனைவி என் பேச்சைப் பொருட்படுத்தினாலும் வழக்கமான மனைவியர் போலவே அவளுக்கும், எனக்கு லோகாயத விஷய ஞானம் கிடையாது என்கிற எண்ணம்.
இசை ஆசிரியை மட்டும், “போகாதே. நான் சொல்றதைக் கேக்காம போற. அவன் ஒண்ணும் செய்ய மாட்டான். எங்க அப்பாகிட்ட சங்கீதப் பிதாமகர் விஷயத்தை வாங்கிண்டு அமுக்கி வெச்ச மாதிரி இவனும் உன் பிள்ளையை வெளியில் காமிக்காம அமுக்குவான். நீ அழுதுண்டே திரும்பப் போறே,” என்று கிட்டத் தட்ட சாபம் விடுவது போல் என் மனைவியும் குழந்தைகளும் கிளம்பும் வரை கூறிக் கொண்டேயிருந்தார். இது போதாதென்று என் மனைவி குழந்தைகள் கிளம்பிய பின் ஒரு நாள் தன்  கணவரை விட்டு என் குடும்பத்தினர் உண்மையிலேயே கிளம்பி விட்டார்களா என்று விசாரித்து வேறு வரச் சொன்னார்!
பெரிய இசைவாணர் வீட்டில் பெரிய வரவேற்பு. ஏதோ இழந்த பொருளை மீட்டுவிட்ட கோலாகலம் அவர்களின் நடத்தையில் தெரிந்திருக்கிறது. ஆதித்யாவைப் பொறுத்த வரை எப்போதும் எங்கேயும் யாரைப் பற்றியும் மனத் தடங்கல்கள் இருந்ததில்லை.பானக நரசிம்மர் மாதிரி. உள்ளே போகும் அவன் உய்த்துணரும் விஷயங்கள் எங்கே போகிறது யாருக்கும் தெரியாது. எனவே பெரிய பிரச்னைகள் இல்லை.

நான்கு வருடங்கள். இந்த நான்கு வருடங்களில் ஆதித்யாவின் தந்தி வாத்யத்துக்காக என் மனைவி கடுமையாக உழைத்தாள். பெரிய இசைவாணரிடம் ஒன்றும் நடக்காதென்கிற பட்டறிவு ஏற்கெனவே இருந்ததால் தினமும் ஐந்து அல்லது பத்து பாடல்கள் என்று நிர்பந்தப் படுத்தி ஆதித்யாவை வாசிக்க வைத்தாள். ஆதித்யா குளித்து விட்டு வரும் போது ஸ்வாமிக்கு விளக்கேற்றி நைவேத்யம் செய்து விட்டு தந்தி வாத்யத்தைத் தயார் செய்து  பாயையும் போட்டு வைத்திருப்பாள். பக்கத்திலேயே நான்கு முக்கியமான புத்தகங்கள் டி கே கோவிந்தராவ் ஸ்வரப் படுத்தி எழுதிய தியாகராஜர் முத்துஸ்வாமி தீக்ஷீதர் மற்றும் ஸ்யாமா சாஸ்திரி கீர்த்தனங்கள் அடங்கிய புத்தகங்கள் தயாராக இருக்கும். டி கே கோவிந்த ராவ் ஸ்வரப்படுத்திய வர்ண சாகரம் என்கிற புத்தகமும் இருந்தது. மற்ற வாக்கேயக்காரர்கள் புத்தகங்களிலிருந்தும் ஆதித்யா பாடல்களை எடுத்துக் கையாளுவான். 
ஆதித்யாவிடம் ஒரு பழக்கம். அவன் ஒரு பாட்டை வாசிப்பது என்று முடிவு செய்து விட்டானென்றால் நான் குறிப்பிட்டிருக்கும் இந்தப் புத்தகங்களில் அந்தப் பாடல் எந்தப் பக்கத்தில் இருக்கிறதோ அதைச் சரியாகப் பிரிப்பான். சரியாக அந்தப் பக்கத்தை உடனே எடுப்பான். புரட்டுவது என்கிற பேச்சு கிடையாது. அதை எடுத்து வைத்துக் கொண்டு பாடுவான். கிட்டத்தட்ட மூவாயிரம் கீர்த்தனைகளுக்கும் மேல். (இதில் மீண்டும் மீண்டும் வாசிப்பவையும் அடங்கும்). இது போல நான்கு வருடங்கள் வாத்யத்திலும் வாய்ப்பாட்டிலும் தனித்தனியாக அப்யாஸம் செய்தான் ஆதித்யா.
இந்த சமயத்தில் என் மனைவியும் மகளும் மிகவும் மகிழ்ச்சிகரமான எப்போதும் மலர்ச்சியாகப் பேசிக் கொண்டிருக்கிற மகளும் அன்னையுமாக இருந்து வந்தனர். என் மகளுக்கும் சங்கீதம் கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம். ஏற்கெனவே ஒரு வயலின் ஆசிரியரை வீட்டில் வந்து சொல்லிக் கொடுக்க அமர்த்தியிருந்தோம். அவள் வாசிக்கும் போதெல்லாம் ஆதித்யா அவள்  வாசிப்பதை உன்னிப்பாக கவனித்து அவள் தவறு செய்யும் போதெல்லாம் திருத்திக் கொண்டிருப்பான். அவளுக்குக் கோபமாக வரும். ஆதித்யா அதைப் பொருட்படுத்த மாட்டான். மகளுக்குமாய்ப் பாட்டிலும் பயிற்சி இருந்தால் தேவலை என்று நினைத்து அவளையும் பெரிய இசைவாணர் வகுப்புகளில் போட்டோம். அதற்கு தனி ஃபீஸ். ஓரிரு வகுப்புகளும் நடந்தன.
அந்த சமயத்தில் முகநூல் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருந்தது. நான் அதில் கொஞ்சம் செயலாக இருந்தேன். நிறைய நண்பர்களை சேர்த்துக் கொண்டேன். எனக்குத் தெரிந்தவர் ஒரு பத்து அல்லது பதினைந்து சதம். மிச்சம் எல்லாமே கர்நாடக சங்கீத சம்பந்தப் பட்டவர்கள். எவரெவர் தொடர்பெல்லாம் ஆதித்யாவிற்கு உபயோகமாக இருக்குமோ அவரவர் தொடர்பை  எல்லாம் ஏற்படுத்திக் கொண்டேன். சங்கீதம் மட்டுமல்லாது என் இலக்கிய முயற்சிகளை வெளிப்படுத்திக் கொள்ளவும் இதை ஒரு வடிகாலாக உபயோகப் படுத்திக் கொண்டிருந்தேன். இதில் என் மனைவியும் மகளும் கூட அவ்வப்போது பங்கு கொண்டிருந்தார்கள். அவர்கள் அதில் பெரிதாக ஒன்றும் பங்கு கொள்வதில்லை. ஏதாவது சாமி படம் போடுவார்கள்; அல்லது தெரிந்தவர் யார் பிறந்த நாளுக்காவது பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிப்பார்கள்.
இதில் பெரிய இசைவாணர் அவ்வப்போது ஏதாவது அள்ளித் தெளித்தாற் போல் ஏதாவது போடுவார். அல்லக்கைகளிடமிருந்து பாராட்டு மழை கொட்டும். இதைத் தவிர அவர் தன் வகுப்பு ஒலிப் பேழைகளை விற்று வந்தார். அது சம்பந்தமான அறிவிப்புகள் ஆன்லைனில் வாங்குவது சம்பந்தமான விபரங்கள் குறிப்பிடப் பட்டு வெளியாகும். இப்படி இருந்த போது ஒரு நாள் அவர் வர்க்க மூலம் கண்டு பிடிப்பதற்கான ஒரு சுருக்கு வழிக்கான சூத்திரத்தை விவரித்திருந்தார். அதற்கு ஒரே பாராட்டு மழை. கல்லூரியிலிருந்து திரும்பிய என் மகள் இதைப் பார்த்திருக்கிறாள். அவள் ஒரு பத்து நிமிடத்தில் தானாகவே ஒரு சூத்திரம் தயாரித்து ‘வர்க்க மூலத்தை இந்த சுருக்கு வழி மூலமாகவும் கண்டு பிடிக்கலாம்’ என்று உள்ளீடு செய்து விட்டாள். மறுபக்கத்தில் பயங்கர மௌனம். யாரும் எதையும் சொல்லிவிடாமல் பயங்கரமாக அமைதி காத்தார்கள்.
இதன் மறுநாள் பெரிய இசைவாணரிடமிருந்து என் மகளுக்குத் தொடர்ச்சியாக அலைபேசியில் வாட்ஸப்பில் வரிசையாகக் கேள்விகளாக வந்து கொண்டிருந்தன. ‘நீ எப்படிப் படிப்பாய்? தானாகக் கற்றுக் கொண்டாயா யாராவது சொல்லிக் கொடுத்ததா? எந்த நேரத்தில் படிப்பாய்? ஓய்ந்த வேளைகளில் என்ன செய்வாய்? எப்படி வர்க்க மூலத்திற்குப் புது சூத்திரத்தைக் கண்டு பிடித்தாய்?’ என்றெல்லம் குடைந்து குடைந்து கேள்விகள். என் மகளும் தோன்றியபடியெல்லாம் இந்தக் கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
சில நாட்களுக்குப் பின் என் பெண்ணிற்கு வகுப்புகளுக்கு முயன்றோம். பெரிய இசைவாணரிடமிருந்து பெரிய எழுத்தில் ‘நோ’ என்று ‘வாட்ஸப்பில்’ பதில் வந்தது! அவர் என் மகள் முகநூல் இட்டிருந்த பதிவை ஏதோ கர்வ பங்கம் ஆனாற் போல் உணர்ந்திருக்கிறார் போலிருக்கிறது. இதற்குப் பின் ஆதித்யாவிற்கு வகுப்புகள் கேட்டு என் மனைவி ‘வாட்ஸப்பில்’ ஒரு குறுஞ் செய்தி அனுப்பினாள். அந்தச் செய்திக்கும் ஒரு பெரிய ‘நோ’ தான். அன்று என் மனைவிக்கும் பெரிய இசைவாணருக்கும் இடையில் வாட்ஸப்பிலேயே ஒரு பெரிய வாக்குவாதம் நடைபெற்றது. அதில் அவர் ‘பெற்றோர் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். நான் சொல்வதில் 30% கூடக் கேட்பதில்லை என்றால் என்ன செய்வது?’ என்று எழுதியிருந்தார். இவர் என்ன சொல்லி நாங்கள் என்ன கேட்கவில்லை? இறைவனுக்குத் தான் வெளிச்சம். என் மனைவி மிகவும் தெள்ளத் தெளிவாக ‘நான் இத்துடன் வகுப்புகளை நிறுத்திக் கொள்கிறேன்’ என்று தீர்மானமாக எழுதி அனுப்பினாள். அத்துடன் பெரிய இசைவாணரின் சங்காத்தம் முடிவுக்கு வந்தது.
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்கிற கதையாக முகநூல் வாட்ஸப்பும் பெரிய தொல்லையாகத் தொடர்ந்தன. என் மனைவி போடுகிற படங்களை சூசகமாக எடுத்துக் கொண்டு ஏதாவது செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். திருவள்ளுவர் படம் போட்டால் திருக்குறளைப் பாடுவது, தஞ்சாவூர்க் கோயில் படம் போட்டால் தஞ்சாவூரில் போய்க் கச்சேரி செய்வது என்று ஆரம்பித்திருந்தார்கள். ஒரு முறை என் மனைவி மண்டை ஓட்டு மாலையுடன் கையில் அசுரனின் கொய்த தலையைப் பிடித்தவாறு நிற்கும் பத்ர காளியின் படத்தைப் போட்டிருந்தாள். உடனே அங்கிருந்து ‘தாயே! நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று பொருள் படும் படியாக பதில்.
தினமும் வாட்ஸப்பில் என் மனைவி போடும் ஸ்டேட்டஸைப் பார்ப்பது என்றெல்லாம் ஆரம்பித்திருந்தது. இதைச் சூசகமாக எடுத்துக் கொண்டு எதையாவது செய்வது. நான் என் மனைவியை அவ்வப்போது மிதமாக எச்சரித்துக் கொண்டே வந்தேன். என் மனைவி உபயோகித்துக் கொண்டிருந்த ஆண்ட்ராய்ட் கைபேசியின் எண்ணும் என் பெயரில் தான் இருந்தது; முக நூல் கணக்கும் என் பெயரில் தான் இருந்தது என்பதால் நாங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. என் மனைவிக்கும் மகளுக்கும் 'நாங்கள் ஏதாவது விகல்பமில்லாமல் செய்து கொண்டிருப்பதை யாராவது பார்த்து ஏதாவது புரிந்து கொண்டால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?’ என்கிற எண்ணம்.
 இதெல்லாம் நடப்பதற்குக் கொஞ்ச நாள் முன்னர் தான் ஊரில் இல்லாத சமயங்களில் சகோதரிகளிடம் சங்கீதம் கற்றுக் கொள்ள என் பெண்ணை அறிவுறுத்தியிருந்தார் பெரிய இசைவாணர். சகோதரிகளில் ஒருவர் ஸ்கைப்பில் வகுப்பு எடுப்பதாக ஏற்பாடு. அந்த சமயத்தில் என் பெண் ஏற்கெனவே பைரவியில் அமைந்திருக்கும் அட தாள வர்ணத்தைக் கற்றுக் கொண்டிருந்தாள். இதைத் தெரிந்து கொண்ட சகோதரி எப்போது வகுப்பு என்று ஸ்கைப்பில் வந்தாலும் என் மகளை  இந்த அடதாள வர்ணத்தை மீண்டும் மீண்டும் பாட வற்புறுத்திக் கொண்டிருந்தாள். என் மகள் இந்தத் தொல்லை தாங்க முடியாமல் இந்த வகுப்புகளையே ஒழித்துக் கட்டினாள். இதற்கும் ஆதித்யாவிற்கும் என்ன தொடர்பு என்று வாசகர்கள் நினைக்கலாம். தொடர்பு இருக்கிறது. இதைப் பின்னர் தெரிவிக்கிறேன்.
 2016 இல் ஆதித்யாவிற்காக ஒரு புது குருநாதரைப் பாடுபட்டுப் பிடித்து அவரின் முயற்சியால் 12.3.2017 அன்று ஆதித்யாவின் கர்நாடக இசைக் கச்சேரி அரங்கேற்றம் சென்னையில் நடந்தது. இந்த அரங்கேற்றத்துக்காக நாங்கள் பட்ட பாடுகளை விவரிக்க ஆரம்பித்தால் அது இத்தொடரின் இரண்டாம் பாகமாக விரியும் என்பதால் அதைச் சொல்லாமல் விடுகிறேன்.
ஆனால் அந்த சமயங்களில் நடந்த ஒன்றிரண்டு கசப்பான  சம்பவங்களை விவரிக்காமல் இத்தொடர் முற்றுப்பெறாது.
அது……………

அத்தியாயம் 31

ஆதித்யா வாழ்க்கையைப் பற்றிய திரைக் கதை என் மனதில் அடிக்கடி ஓடிக் கொண்டிருக்கும். முதல் காட்சியில் அவன் பெரிதாக ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு அரங்கில் ‘தில்லானா’ ஒன்றைப் பாடிக் கொண்டிருக்கிறான். அவன் கச்சேரியின் இந்தக் கடைசிப் பாடலில் ‘டைட்டில்’ ஓடிக்கொண்டிருக்கிறது. நானும் என் மனைவியும் முன் வரிசையில் அமர்ந்து கொண்டு கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். என் நினைவு பின்னோக்கிச் செல்கிறது. என் மனைவியைப் பெண் பார்க்கும் படலம் திரையில் விரிகிறது. கையில் தம்புராவுடன் இதே தில்லானாவை என் மனைவி  பாடிக் கொண்டிருக்கிறாள்……. இது போன்ற பதப் படுத்தப் பட்ட காட்சிகளுடன் ஆதித்யாவின் வளர்ப்புக் கதை நகர்கிறது.
 கதையை விட உண்மை மிகவும் விநோதமானது என்பார்கள். விநோதமானது மட்டும் அல்லாது இரக்கமற்றதும் கூட. அரங்கேற்றத்துக்கான ஏற்பாடுகளை என் மனைவி தனியாளாக நாயாக அலைந்து செய்திருக்கிறாள். நான் டெல்லியில் இருந்தவாறு தொலைபேசியில் அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருந்தேன் இப்படி இருக்கும் போது –  அரங்கேற்றத்துக்கு ஒரு வாரம் இருக்கும் போது- திடீரென்று என் மனைவியிடமிருந்து உடனே கிளம்பி வரும்படி போன் வந்தது. அவள் பேசிய தொனியிலிருந்து அவள் மிகவும் பயந்து போயிருக்கிறாள் என்றும் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாள் இன்றும் தெரிந்தது. நான் அலுவலகத்தில் அநுமதி வாங்கிக் கொண்டு போட்டது போட்டபடிக் கிளம்பிப் போனேன்.
என் பெண் பயிலும் கல்லூரியில் இன்னொரு பெண் படித்து வந்திருக்கிறாள். இந்தப் பெண்ணும் என் மகள் கொஞ்ச நாள் சங்கீதம் கற்றுக் கொண்டிருந்த சகோதரியிடம் பாட்டு கற்றுக் கொண்டிருக்கிறாள். அவள் யாருடைய தூண்டுதலின் பேரிலோ என் மகளிடம் வலிய வலிய பேச்சுக் கொடுத்து நட்பு கொண்டாடி இருக்கிறாள். அந்தப் பெண் எப்போதும் என் பெண்ணிடம் ‘பட்டப்படிப்பு முடிந்தவுடன் என்ன செய்வதாக உத்தேசம்’ என்று துளைத்தெடுத்திருக்கிறாள். என் மகளுக்கு யார் தூண்டுதலில் பெயரிலோ இந்தப் பெண் இப்படிக் கேட்கிறது என்று சந்தேகம். இதனால் அவள் இயற்கையிலேயே அமைந்த எச்சரிக்கை உணர்வுடன் அந்தந்த சமயங்களில் தோன்றுவதைச் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறாள் . இந்தப் பெண் தன் கைபேசியை வைத்து என் பெண்ணின் பேச்சுகளை ஒலிப்பதிவு செய்து யாருக்கோ அனுப்புகிறாள் என்கிற சந்தேகம் என் மகளுக்கு இருந்திருக்கிறது. என் பெண் அப்போதெல்லாம் கிண்டி ரயில் நிலையம் சென்று மின்சார ரயிலில் கல்லூரி செல்வது வழக்கம். கல்லூரியில் வழக்கமாக என் பெண் பரிசோதனைச் சாலையில் பரிசோதனைகள் செய்து கொண்டிருக்கும் போது இந்தப் பெண் தன் கைபேசியை அங்கு வைத்து விட்டு வெளியில் சென்று விடுவதுண்டாம். ஒரு நாள் என் மகள் பேச்சுவாக்கில் ‘இந்தப் பரிசோதனையின் வாதை ஒரு கத்தியை என்னில் செலுத்தினால் இருப்பதை விட அதிகமாகத் தான் இருக்கும்’ என்றிருக்கிறாள்.
மறுநாள் கிண்டி ரயில் நிலையத்தில் ஒரு ஆள் கையில் பையுடன் என் மகளை நெருங்கியிருக்கிறான். என் மகளிடம் ‘இன்னாருடைய மகள் தானே நீ? நான் உனக்கு உறவு முறை’ என்றிருக்கிறான். என் மகளும் விகல்பமில்லாமல் அவனுடன் பேசியிருக்கிறாள். அவன் சுற்று முற்றும் ஆட்கள் வரவே நகர்ந்து சென்று விட்டானாம். இதை என் மகள் என் மனைவியிடம் சொல்லியிருக்கிறாள். என் மனைவிக்கு பயம் பிடித்து விட்டது. என் குடும்பத்தை நன்கு அறிந்த யாரோ தான் என் மகளுக்குத் தீங்கு விளைப்பதற்காக ஆளை அனுப்பியிருக்கிறார்கள் என்று அவளுக்கு சந்தேகம். குறிப்பாக ஆதித்யா அரங்கேற்றத்தை நடக்க விடாமல் முடக்க வேண்டும் என்று  யாரோ முயற்சிக்கிறார்கள் என்று சந்தேகம். அப்போது தான் கொஞ்ச நாட்களுக்கு முன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஒரு இளம் பெண்ணை ஒருவன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த விஷயம் ஊடகங்களில் பெரிதாக அடிபட்டுக் கொண்டிருந்தது. ஏற்கனவே நான் கூறியிருந்த படி முகநூல் வாட்ஸப் இவைகளில் நாங்கள் போடும் ஸ்டேஸ்களை சூசகமாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று சந்தேகம் இருந்த நிலை.
 என் மகளும் மனைவியும் அளவு கடந்த பீதியில்  இருந்தார்கள். எதைப்  பார்த்தாலும் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அவர்களைத் தேற்றி அரங்கேற்றத்தை ஒப்பேற்றுவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இந்த மனக் கிலேசத்திலிருந்து என் மனைவியும் மகளும் இதெல்லாம் நடந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தற்போதும் முற்றிலுமாக விடுபட முடியவில்லை என்பதை வைத்தே வாசகர்கள் இதன் வீரியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
 என்னைப் பொறுத்த வரை பயந்து சாவதை விட நேரான அணுகுமுறை தான் சரிப்பட்டு வரும். இதையே நான் என் மகளுக்கும் மனைவிக்கும் போதித்தேன். அதன்படி என் மனைவி அந்தப் பெண்ணின் அன்னையிடம் பேசினாள். இரண்டு பக்கத்திலும் உஷ்ணமான உரையாடல்கள். பின்னர் என் மகள் மிகவும் மனமுதிர்ச்சியுடன் தெளிவாகவும் சாந்தமாகவும் அந்தப் பெண்ணின் அன்னையிடம், “ஆண்ட்டி! என்ன நடக்கறதுன்னு உங்க பெண் கிட்டக் கேளுங்கோ. எங்களுக்கு அவள் செல்போனை வெச்சு ஏதோ திரிசமன் செய்யறதா சந்தேகம் இருக்கு. அவள் அதெல்லாம் ஒன்றும் செய்யலைன்னா நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன்” என்று பேசி விட்டு இணைப்பைத் துண்டித்து விட்டாள். இதன் பின்னர் என் மகளும் மனைவியும் கல்லூரியின் என் மகள் படித்த துறையின் தலைமைப் பேராசிரியரிடம் போய் நடந்த விஷயங்களைப் புகார் தெரிவித்து விட்டு வந்தனர். என் மனைவியின் வாதமெல்லாம் அவர்கள் பெயரில் குற்றம் இல்லை என்றால் அவர்களும் இது போன்றே புகார் தெரிவித்திருக்க வேண்டும் அல்லது சண்டைக்கு வந்திருக்க வேண்டும்; அதெல்லாம் ஒன்றும் செய்யாதிருந்ததிலிருந்தே அவர்கள் பக்கம் ஏதோ குற்றம் இருப்பதாய்த் தான் தோன்றுகிறது என்று. இது சிந்தித்துப் பார்த்தால் நியாயமாகத் தான் படுகிறது.
 இதெல்லாம் உண்மையா அல்லது என் மனைவியும் மகளும் தேவையில்லாமல் பயப்பட்டார்களா என்பதெல்லாம் இன்று வரை எனக்கு விளங்கவில்லை. எனவே அவர்கள் என்னிடம் கோர்வையாகச் சொன்ன பல சம்பவங்களை இங்கு சொல்லாது விடுகிறேன்.
(தொடரும்)
நன்றி : சொல்வனம் 
https://solvanam.com/2018/05/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F-11/

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...