தேர்தலுக்குப் பதினைந்து நாட்கள் இருக்கிற நிலையில் கட்சிகள் கவுண்ட் டௌனை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். முதலில் நாம் தமிழர் கட்சி.
இந்தக் கட்சி சீமான் என்கிற ஒற்றைப் படைத் தலைமையை நம்பி உருவாக்கப் பட்ட இயக்கம். சினிமா, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் துதி, தமிழ் தேசியம், கிட்டத்தட்ட காந்தியத்தைக் காப்பி அடிக்கும் அரைகுறை பொருளாதார அறிவு, வெகு ஜன மந்தை மனப்பான்மையை கவர்ந்து எடுக்கும் விதமான வெற்று கோஷங்கள், இந்திய இறையாண்மைக்கு வெற்று சவால்கள் விடுத்துக் கொண்டிருப்பது இவை போன்ற கோளாறுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஹிட்லரின் மெய்ன் காம்ப் புத்தகத்தைப் படிக்கும் எவரும் சீமான் ஹிட்லரின் வெகு ஜனத்தைக் கவர்ந்து இழுக்கும் ஹிட்லரின் உத்திகளைக் கூசாமல் பின் பற்றுகிறார் என்று எளிதாகச் சொல்ல முடியும்.
இவரின் நல்ல விஷயங்கள் என்ன?
1. மிகவும் கவர்ச்சிகரமான ஆக்ரோஷமான பேச்சாளர். இவர் பேச்சைக் கேட்கும் எவரும் இவரை விரும்பாமல் இருக்க முடியாது. என்ன அபத்தமாகப் பேசினாலும் அதை வசீகரமாக மாற்றுகிற உடல் மொழி.
2. ஊழல் குற்றச்சாட்டு கிடையாது. ஏன் என்றால் இவர் ஆட்சியில் இல்லை.
3. 234 தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் போட்டி இடும் அசாத்தியத் துணிச்சல்.
4. தேர்தல் போட்டியில் உண்மையாகப் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு தந்தது. எந்த அரசியல் கட்சியும் செய்யத் துணியாதது இது.
இவரை நாம் நிராகரிப்பதற்கான காரணங்கள்:
1. வெளிநாட்டைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆதரவாளர் என்று சொல்லிக் கொள்கிறார். பிரபாகரன் கருத்து வேறுபாடுகளை சமாளிக்கக் கையாண்ட ஒரே வழி தீர்த்துக் கட்டுவது. ராஜீவ் காந்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தங்கத் தாம்பாளத்தில் வைத்து நீட்டினார். அதை எட்டி உதைத்து ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தனர் புலிகள். அவர்களை போற்றுகிற சீமானை நாம் ஆதரிக்க முடியாது.
2. மத்திய மாநில அரசுகளை, இந்திய இறையாண்மையை வெறுப்பது. இது எந்த அளவுக்கு என்றால் 'தடுப்பூசி முதலில் மோடியும் எடப்பாடியும் போட்டுக் கொள்ளட்டும்; பின் நான் போட்டுக் கொள்கிறேன்' என்பது. இப்போது இருவரும் போட்டுக் கொண்டு விட்டார்கள். இவர் என்ன செய்யப் போகிறார்?
3. வன்முறைப் பேச்சு. 'வாழை மட்டையை வைத்து அடிப்பேன்; திருக்கை வாலை வைத்து அடிப்பேன்' என்கிறார். இவர் ஆட்சிக்கு வந்தால் அரசு நடக்குமா கசாப்புக் கடை நடக்குமா?
4. முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது; நிலைப்பாடுகளை அடிக்கடி மாற்றிக் கொள்வது. ஈவேரா, நாத்திகம், இந்து மதக் கடவுள்கள், நம்பிக்கைகள், ஊழல் இவை எல்லாவற்றையும் பற்றி வெவ்வேறான கருத்துக்கள். முரண் பேச்சுக்கள்.
5. ஜனநாயகத்தைப் பற்றி வாய் கிழிய பேசிக்கொண்டு உட்கட்சி சர்வாதிகாரத்தை நிலை நிறுத்துவது. அவர் கட்சியில் சமீபத்தில் நடந்த ராஜிநாமாக்களை உற்று கவனிக்கும் எவரும் இதை உணர்ந்து கொள்ள முடியும்.
6. தமிழன் தான் ஆள வேண்டும் என்கிறார். தமிழன் யார் என்பதற்கான வரையறையை யார் வைத்திருக்கிறார்கள்? தமிழ் சரித்திரத்தில் பேரரசுகளை நிறுவ அரசர்கள் கொண்ட மண உறவுகளில் சுத்த தமிழ் இனம் என்பது என்றோ அழிந்து விட்டது. அப்படிப் பார்க்கும் போது கடை ஏழு வள்ளல்கள் காலம் மட்டுமே தமிழர் காலம் என்று நாம் கொண்டாட முடியும்.
7. இந்தியக் கலப்புப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ளாது வேளாண்மை, கல்வி, மருத்துவம் போன்றவை பற்றி வெற்றுத் திட்டங்களை சாத்தியமா என்று யோசிக்காமல் அடித்து விடுவது.
மேற்கூறியவற்றால் நாம் இவரை நிராகரிக்க வேண்டி இருக்கிறது. இவருக்கு இந்தத் தேர்தலில் பெரிய வெற்றி வாய்ப்பு இல்லை தான். ஆனால் இவருக்கு கிராமப்புற இளைஞர்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவு கவலை அளிக்கக் கூடியது.
இந்த விதத்தில் பார்க்கும் போது இவர் நம் கவுண்ட் டவுனில் பத்தாம் இடத்தில் இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக