திங்கள், 15 ஜனவரி, 2018

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை V

அத்தியாயம் 17

“இது தான் பையனா?” என்றார் அந்த மனிதர். குட்டையாய் மாநிறமாய் இருந்தார். இடுப்பில் எட்டு முழ வேட்டி பனியன் அணிந்து கொண்டிருந்தார். குளிக்கவில்லை போலிருக்கிறது.
“எங்கேர்ந்து வர்றேள்? பாண்டிச்சேரிலேந்து வர்றேளாக்கும்” என்றார்.
“ஆமாம்” என்றேன் பொத்தாம் பொதுவாக. நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள தனி வீடு. அந்தக் காலத்து வீடு. வாசல் தாழ்வாரம் நல்ல விசாலமாக இருந்தது. அதில் ஒரு மூங்கில் நாற்காலிகளும் ஒரு டீபாயும் இருந்தது. டீபாயில் அன்றைய நாளிதழ் காகிதங்கள் இறைந்து கிடந்தன.
எங்களை நிற்க வைத்துக் குறுக்கு விசாரணை செய்து கொண்டிருந்தவர் நாங்கள் பார்க்க வந்த இசையாசிரியையின் கணவர் என்று அநுமானிக்க முடிந்ததே ஒழிய அவர் அறிமுகம் செய்து கொள்ளவெல்லாம் மெனக்கெடுவதாய் இல்லை.
வீட்டிற்குள்ளிருந்து மெல்லிய இசை ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. மகுடிக்கு மயங்கிய நாகம் போல் ஆதித்யா அதை நோக்கி ஓட யத்தனித்தான். அவனை அவர் மிகவும் முரட்டுத்தனமாய்த் தடுத்து நிறுத்தி விட்டு, அங்கே உள்ளேயிருந்து எட்டிப் பார்த்த பெண்ணை கையால் சைகை செய்து அழைத்தார். அவளிடம் “போய் ஒரு நோட் புக் எடுத்துக்கொண்டு வா” என்றார். அவள் எடுத்து வந்ததும் “இங்க உட்கார்ந்து நான் சொல்ற பாயிண்ட் எல்லாம் எழுதிக்கோ” என்று சொன்னார்.
நான் ஈனஸ்வரத்தில் “பையனுக்கு பாட்டு க்ளாஸ் பத்தி கேக்கலாம்னு வந்தேன்” என்று கூறி இன்னார் தான் எங்களை அனுப்பி வைத்திருக்கிறார் என்றும் தெரிவித்தேன்.
அவர் உடனே ஆணித்தரமாக “திஸ் இஸ் நாட் பாட்டு க்ளாஸ். திஸ் இஸ் குருகுலம்” என்றார். அவர் குரலில் இகழ்ச்சியும் வெறுப்பும் அளவுக்கதிகமாக தொனித்தன. வெறுப்பு எங்களைப் பார்த்த தாழ்மை உணர்ச்சியினால் எழுந்தது.
நான் “இல்லை சார், என் பையனை நீங்க டெஸ்ட் பண்ணிப் பாக்கலாம். எல்லா ராகமும் பாடுவான், நெறைய கீர்த்தனங்கள் மனப்பாடம் . கல்பனாஸ்வரங்கூட ….” என்று ஆதித்யாவின் அருமை பெருமைகளை இயம்ப முற்பட அவர் என்னை இடைமறித்தார்.
“பையனுக்கு எப்போலேருந்து இப்படி?”
“பொறந்ததிலேருந்து இப்படித்தான் இருக்கான்”
அவர் அதட்டும் குரலில் “இதல்லாம் எங்க குடும்பத்தில சர்வ சாதாரணம். எல்லா குழந்தைகளுமே இப்படித் தான். இதெல்லாம் எங்கிட்ட சொல்ல வேண்டாம்” என்றார்.
“நாங்க இதெல்லாம் பாத்துட்டுத்தான் உட்கார்ந்திருக்கோம். கிளாஸ்னால்லாம் இந்த மாதிரிக் குழந்தைகளுக்கு வசதிப் படாது. நீங்க கெளம்பறேளா! நான் வேணா ஆட்டோ பிடிச்சுத் தரட்டுமா?”
நான் பிரமித்து நின்று விட்டு அவரையே சில கணங்கள் பார்த்து விட்டு மனைவி பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு கிளம்பினேன். அவர் வெற்றிப் பெருமிதத்துடன் வீட்டினுள் சென்றார். அவர் பின்னாலேயே “நோட்ஸ்’ எடுக்க வந்த பெண்ணும் திரும்பிச் சென்றது.
கடைசி வரை வீட்டில் இசை சத்தம் கேட்டுக் கொண்டிருந்ததே ஒழிய இசை ஆசிரியை உள்ளே இருக்கிறாரா இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலும் அவரைச் சந்திக்காமலும் திரும்பினோம்.
பாண்டிச்சேரியிலிருந்து திரும்பியவுடன் இசைவாணர் சிபாரிசு செய்திருந்த பள்ளி இசையைப் பாடத் திட்டத்தில் கொள்ளாதிருந்த வழக்கப் பள்ளியாதலால் பாடத் திட்டத்தில் இசையையும் சேர்த்திருந்த பள்ளி ஒன்றில் ஆதித்யாவைப் போட்டு விடலாம் என்று ஆலோசித்தோம். மிகவும் புகழ் பெற்ற இசை நடனப் பள்ளி சென்னையில் இருந்தது. அதை ஒட்டினாற்போலவே அவர்கள் மேற்பார்வையில் நடந்து வந்த சிபிஎஸ்ஸி பள்ளியும் இருந்தது. அந்த இசைக் கல்லூரியின் முதல்வராய்ப் பணியாற்றியவர் என் மூத்த அண்ணனின் கல்லூரித் தோழரின் மனைவி. அவர் சங்கீதப் பேராசிரியையாக இருந்ததால் ஆதித்யாவை அவர் புரிந்து கொள்வது எளிது என்னும் அவர் மூலமாக அட்மிஷனை வாங்கி விடலாம் என்று முனைந்தோம்.
அந்த அம்மையார் நீண்ட வருடங்களாக இசையாசிரியையாக – பேராசிரியையாக இருந்த போதிலும் பெரிதாகக் கச்சேரியெல்லாம் செய்து நான் கேள்விப் படவில்லை. ஆதித்யாவின் திறமையை விளக்கும் விதமாக அவருக்கு ஒரு ஒலிப் பேழையை அனுப்பி வைத்திருந்தேன் முன்னதாக. அவர் அதைக் கேட்டு விட்டு அப்படியே மனமுருகி எல்லா சபாக்களுக்கும் விஷயத்தைச் சொல்லி ஆதித்யாவைப் பிரபலமாக்கி விடுவார் என்று நம்பவில்லையாயினும் ஓரளவுக்கு அவன் திறமையை அங்கீகரிப்பார் என்று நம்பினேன். அவருக்கு டெலிபோன் செய்தபோது அவர், “போறாது போறாது; இன்னும் நல்ல ட்ரெயினிங் வேணும். என் ஆத்துக்காரரே சொல்லிட்டார்” என்றார். கசப்பை விழுங்கியவாறே அவரிடம் காரியம் ஆக வேண்டியிருந்ததால் அவர் சார்ந்திருந்த இசை நடனப்பள்ளியில் அல்லது அதைச் சார்ந்திருந்த சிபிஎஸ்சி பள்ளியில் அட்மிஷனுக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டோம். அவர் கிளம்பி வரச் சொன்னார். சென்றபோது மிகவும் பரிவுடன் தான் பேசிக் கொண்டிருந்தார். அவருடன் எப்போதும் சிரித்துக் கொண்டிருக்கும் இனிமையான ஒருவர்-பெரிய வாக்கேயக்காரரின் பேரனும் – உடனிருந்தார். அவரும் ஏதோ பொறுப்பில் இருந்த ஞாபகம். அந்த அம்மையார் தான் இந்த அத்யாயத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் இசையாசிரியையைச் சிபாரிசு செய்தார். அவர் நாங்கள் அங்கிருந்து கிளம்பி இசையாசிரியை வீட்டிற்குச் செல்லுமுன்பே அந்த இசையாசிரியையின் கணவரிடம் தொடர்பு கொண்டு ஆதித்யாவைப் பற்றியும் நாங்கள் வருவது பற்றியும் சொல்லியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத் தான் நான் அத்யாயத்தின் ஆரம்பத்தில் கூறியிருந்த சம்பவம் நடைபெற்றது.
எனக்கிருந்த ஆத்திரத்தில் பாண்டிச்சேரி சென்றவுடன் இந்தப் பெண்மணியைக் கூப்பிட்டு “நீங்கள் இனிமேல் ஆதித்யாவை யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறிவிட்டேன். அவரும், “நான் ஏன் பேசப் போறேன்? ஏதோ நீங்க கேட்டுண்டதால நான் பேசினேன்” என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார். இதன் பின்னரே இசைவாணர் சிபாரிசு செய்த பள்ளியில் சேர்த்தோம்.
இதையெல்லாம் இசைவாணரிடம் ஒன்றும் பெயராது என்று நாளாக நாளாகப் புரிய ஆரம்பித்திருந்ததால் செய்ய ஆரம்பித்திருந்தோம்.
என் மனைவி மேல் அவள் பணியாற்றி வந்த பள்ளியின் பிடி கொஞ்சம் இறுக ஆரம்பித்தது. திடீரென்று அவர்கள் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை உயர ஆரம்பித்தது. என் மனைவி நல்ல திறமையான ஆசிரியையாக வேறு பரிமளித்துக் கொண்டிருந்தாள். தாளாளருக்கு ஆதித்யா வந்த அதிர்ஷ்டமா என் மனைவியின் உபாத்யாயத் திறமையில் ஈடுபாடா என் மனைவியை மிகவும் பரிவுடன் நடத்த ஆரம்பித்தார். இது போன்ற தனியார் பள்ளிகள் அந்தக் கால நில உடைமைச் சமுதாயத்தின் மறு உருவங்கள் தாம். இதில் ஆசிரியர்கள் ஆசிரியைகள் தாம் பண்ணை அடிமைகள். சான்றிதழ்கள் வாங்கி வைத்துக் கொள்வார்கள். வேலையை ராஜினாமா செய்தால் சான்றிதழ்களைத் திருப்பிக் கொடுப்பார்களோ மாட்டார்களோ என்கிற பயம். சம்பளம் சொற்பம். சொல்கிற வேலைகளைச் செய்ய வேண்டும்.
ஆதித்யா பதின்பருவ மத்தியில் இருந்தான். மிகவும் பிடிவாதத்துடன் ஏற்கனவே இருப்பவன். பதின் பருவமும் சேர்ந்து கொண்டது. பள்ளியில் அவன் படிக்கிறானா என்று யாருமே கவனிப்பதில்லை. ஆசிரியர்கள் என் மனைவி தாளாளரின் அன்பைப் பெற்றதால் கண்டிப்பாக நடந்து கொள்ளத் தயங்கினார்கள். தாளாளரைப் பொறுத்த மட்டில் என் மனைவி பள்ளி சம்பந்தமான எந்த புது நடவடிக்கை அல்லது ஒழுங்கை பிரேரயித்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு அமல் செய்யத் தயாராக இருந்தார். இது சக ஆசிரியைகளால் வெறுக்கப் பட்டும் அதே சமயம் என் மனைவி பால் மரியாதை கலந்த பயமும் கொள்வதற்கு ஏதுவாகவும் இருந்தது. ஆதித்யா அவன் இஷ்டப்படி நடந்து கொள்ளவும் என் மனைவி அங்கே பணியாற்றியது ஒரு கவசம் போல் ஆனது.
தாளாளர் என் மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள ஆத்தியாவிற்கு எதுவும் செய்யத் தயாராக இருந்தார். “நீ சொல்லு! இப்பவே பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ்–டிவி சானல்-எல்லோரையும் வரச்சொல்றேன். அவனுக்கு யாரும் விளம்பரம் கொடுக்க மாட்டாங்கன்னு தானேயிருக்கு. நான் சொல்றேன் உலகத்துக்கு இந்த மாதிரி ஒரு இசை மேதை எங்க பள்ளிக்கூடத்தில இருக்கான்னு” என்றார். என் மனைவி தயங்கினாள். ஆதித்யாவைப் பொறுத்தவரை அவன் ஒரு வைரக்கல். ஆனால் பட்டை தீட்டியிருக்கவில்லை. சற்று உன்னிப்பாகக் கவனிக்கும்போது உள்ளே ஒரு ஒளிக்கீற்று ரேகை ஓடிக்கொண்டிருப்பது தெரியும். அதற்கும் வைரம் பார்க்கத் தெரிந்த நிபுணர் வேண்டுமல்லவா? தவிர அவன் நடத்தையின் விநோதங்களையுமே உலகம் புரிந்து கொள்ளுமா என்பதில் அவளுக்கு சந்தேகம் இருந்தது.
எங்கள் இருவரின் அணுகுமுறையில் ஆரம்பத்தில் இருந்த இந்த வித்யாசம் இன்று வரை இருந்து வருகிறது. நல்ல பயிற்சியோடு ஒரு சில குறைகள்கூட இல்லாத அக்மார்க் சங்கீதமாக ஆதித்யா தரும் வரையில் நாங்கள் விளம்பரப்படுத்துவதைப் பற்றி சிந்திக்கவே கூடாது என்பது அவள் எண்ணம். என் எண்ணம் என்னவாக இருந்ததென்றால் அவனுடைய திறமையின் மேன்மை எப்படியாவது உலகம் அறியும் படிச் செய்து விட்டால் அவன் நடத்தையின் விநோதங்களை உலகம் பொருட்படுத்தாமல் இருக்கப் பழகிக் கொள்ளும் என்று நம்பினேன். புல்லாங்குழல் கலைஞர் டி ஆர் மகாலிங்கம் விஷயத்தில் உலகம் முதலில் அவர் வாசிப்பில் இருந்த மேன்மையை அங்கீகரித்தது. பின்னர் தான் அவர் குணாதிசயங்களில் இருந்த விநோதங்களை உள் வாங்கிக் கொண்டது. அப்போதெல்லாம் அவர் மேதைமையின் காரணமாக உலகம் அவர் குணாதிசயக் கூறுகளை சகிக்கக் கற்றுக்கொண்டது. இதே போல் ஆதித்யா விஷயத்திலும் நடந்தால் தேவலை என்று நான் நினைத்தேன். இதில் இன்னொரு விஷயமும் அடங்கி இருந்தது. அவன் பாடல்களைக் கேட்டுக் கேட்டு தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி வருகிறான். இதைப் போய் நான்கு சுவர் உள்ள ஒரு கட்டுமானத்தில் போட்டோம் என்றால் இதனால் அவன் இயற்கையான இசை மேதைமை அதில் தீய்ந்து விட்டால் என்ன செய்வது? இயற்கையாக சூரிய ஒளியை நோக்கித் தன் இஷ்டத்துக்குக் கிளை பரப்பும் மரத்தை வெட்டி மேசை நாற்காலி செய்வது போல் தான் இதுவும் என்று எனக்குத் தோன்றியது. மேசை நாற்காலியின் ஒழுங்கு மரத்தில் இருக்காது.; மரத்தின் இயற்கை அழகு மேசை நாற்காலியில் இருக்குமா சந்தேகமே. அவன் கிளை பரப்பி வளரட்டுமே என்று நினைத்தேன் நான்.
அந்த சமயத்தில் வார இதழ் ஒன்றில் ஒரு பெரிய இசையாசிரியரின் சிஷ்யர்கள் அவர் குறித்து வெளியிட்டிருந்த பேட்டிகளைத் தற்செயலாகக் கண்ணுற்றேன். அவர்கள் எல்லோருமே மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேட்டி கொடுத்திருந்தார்கள். இந்த இசையாசிரியர் இசையுலகின் பிதாமகர் என்று கருதப்பட்டவருடைய சிஷ்யர். தரமான பாடாந்தரம் உள்ள அவர்களின் பாணியில் நிறைய பேர் பாடிக் கொண்டிருக்கிறார்கள். குரல் சுமாராக உள்ளவர்களையும் அற்புத இசைக் கலைஞராக மாற்றும் பாணி அவர்களுடையது. நம் இசைவாணரின் வகுப்புகள் நொண்டியடித்துக் கொண்டிருந்ததால் இவரையும் முயற்சித்துப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். அங்கே விசாரித்து இங்கே விசாரித்து அவர் முகவரியைத் தெரிந்து கொண்டு ஒரு நாள் அவர் வீட்டிற்கு முன்னதாக போனில் அனுமதி வாங்கிக் கொண்டு போய்ப் பார்த்தோம். வயதானவர். மைலாப்பூரில் ரயில் லைனை ஒட்டினாற் போல் ஒரு சிறிய வீதியில் தனியான சிறு வீடு. வீட்டில் தற்கால அலங்காரம் சற்று கூடப் பிரதிபலிக்காத நடுத்தர எளிமை. அவரும் மாமியும் இருந்தார்கள். அவர் ஆதித்யாவைக் கூர்ந்து பார்த்து விட்டு ஏதாவது பாடச் சொன்னார். ஆதித்யா ஒரு வர்ணம் பாடினான். ராகம் எனக்கு தற்போது நினைவில் இல்லை. அவன் பாடி முடித்தவுடன் அவனிடம் அநுபல்லவியையோ சரண த்தையோ குறிப்பிட்டு “இந்த இடத்தில எடுக்கணும்னு எப்படித் தெரியும் உனக்கு? யார் சொல்லிக் கொடுத்தா?” என்று கேட்டார். ஆதித்யாவினால் சொல்லத் தெரியவில்லை வார்த்தைகளில். ஆதித்யாவை நாங்கள் கையில் கொண்டு வந்திருந்த பழம் வேஷ்டி அங்கவஸ்திரத்தை கொடுக்கச் சொல்லி நமஸ்காரம் செய்யச் சொன்னேன். ஆதித்யாவும் அவனுக்குப் பின் நாங்களும் நமஸ்காரம் செய்து எழுந்திருந்தோம்.
நான் அவரிடம் சம்பிரதாயமாக “பையன் கண்ணை நீங்க தான் திறக்கணும்” என்றேன். குருமார்கள் ஞானம் புகட்டுவதற்கான சம்பிரதாயமான வார்த்தை இது.
அவர் பெரிதாகச் சிரித்து விட்டு, “பையன் கண்ணை நன்னாத் தெறந்திண்டுதான் இருக்கான். உலகம் கண்ணை மூடிக்காம இருக்கணும்” என்றார். பின்னர் சற்று சிந்தித்து விட்டு, “இப்ப சத்தியா என் சிஷ்யன் ஒருத்தன்ட்ட போடறேன். எனக்கு சுத்தமாக டைமில்லை. பின்னால போகப் போகப் பாத்துக்கலாம்” என்றார். சொன்ன கையுடன் அவர் பிரதான சிஷ்யனுக்கு போன் செய்தார். சிஷ்யர் கச்சேரிகள் பிரமாதமாகச் செய்யவில்லையாயினும் முழுநேர இசையாசிரியர். அப்போது தான் முன்னுக்கு வந்து கொண்டிருந்தார். அவரைத் தொலைபேசியில் அழைத்து, “ஒரு பையன் வந்திருக்காம்பா. சங்கீதத்தில எல்லாம் தெரியறது. அவனுக்கு நீ செட்டு செட்டா ஒவ்வொண்ணா சொல்லிக் குடுத்தாப் போறும்” என்றார். நாங்களும் மன நிறைவுடன் வீடு திரும்பினோம்.
அவரின் சிஷ்யர் வீட்டுக்கு வந்து சொல்லிக் கொடுக்க ஏற்பாடாகியது. பட்டை பட்டையாக விபூதி இட்டுக் கொண்டு சிரித்த முகமாக இருந்தார். கொஞ்சம் வகுப்புகளும் நடைபெற்றன. அவருக்கு ஆதித்யாவைப் பொறுத்தவரை போதாமை உணர்வும் ஆதித்யாவைப் பொறுத்தவரை சுவாரஸ்யமின்மையும் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அவர் ஒரு கட்டத்தில் என்னிடம் “இதில ஒரு ஏழு கட்டம் இருக்குன்னு வைங்கோ அதிலே மூணு வரையிலும் என்னால போக முடியறது. உங்க பிள்ளை அதில ஆறாவது கட்டத்தில இருக்கான். அதனால நான் சொல்லிக்கொடுக்கறது கொஞ்சம் வியர்த்தம் தான்” என்று சொல்லி விட்டுக் கழன்று கொண்டார்.
ஹும்! இனி அடுத்ததைப் பார்க்க வேண்டும்.
அந்த சமயத்தில் நான் புதிதாகக் கணிப் பொறியை வாங்கி அதில் இண்டர்நெட் கனெக்ஷனையும் வாங்கினேன். ஆதித்யா அதைப் பார்த்தவுடன் உட்கார்ந்து கொண்டு புரட்டி எடுத்தான். ஒரு புதுவுலகம் திறந்து விட்டாற் போல் ஆயிற்று. புது கணிப்பொறி வாரண்டியில் இருந்ததால் தப்பித்தது. ஆதித்யா அதைப் போட்டு அடித்ததில் வாரம் ஒரு முறை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சர்வீஸ் இஞ்சினியரைக் கூப்பிட்டு ‘ஃபார்மட்’ செய்யச் சொல்லுவேன். அவர்களும் முகத்தைச் சுளித்தவாறே பல அழைப்புகளுக்குப் பிறகு வந்து சரி செய்து கொடுத்து விட்டுப் போவார்கள்.
அதில் இன்டர்நெட்டில் உள்ள கர்நாடக இசைத்தளங்களுக்கும் ‘யூட்டீயுப்’பிற்கும் கொஞ்சம் கொஞ்சமாகத் தாவினான் ஆதித்யா.
அதில் நான் அலசிக்கொண்டிருக்கும் போது இசை ரசிகர்களால் நடத்தப் படும் வலைப்பூ ஒன்றினைக் கண்டு பிடித்தேன். அதில் ஆதித்யாவைப் பற்றி கொஞ்சம் விளம்பரப் படுத்தலாமே என்று தோன்றியது எனக்கு. அது…….
பின் குறிப்பு:
எனக்கு மன நிறைவான விஷயம் 12.03.2017 அன்று நடந்த ஆதித்யாவின் அரங்கேற்றத்துக்கு அந்த மூத்த இசையாசிரியரைத் தலைமை தாங்க அழைத்திருந்தேன். அவன் மனமுவந்து கடைசி வரையில் அமர்ந்து கச்சேரியைக் கேட்டு விட்டு ஒரு அருமையான பாராட்டுரையையும் வழங்கிச் சென்றார். அவர் உரையின் கண்ணி இதோ:

அத்தியாயம் 18

நான் கூறுகின்ற வலைப்பூ சில இசை ஆர்வலர்களால் நடத்தப் படுவது. இதில் தென் இந்திய மாகாணங்கள் அனைத்துமே அடக்கம். அனைத்திலிருந்தும் அங்கத்தினர்கள் இருந்தார்கள். லண்டன், அமெரிக்கா என்று வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இருந்தார்கள். நிறைய பேர் அரைகுறையாக சங்கீதம் கற்றுக்கொண்டு பாதியில் விட்டவர்கள். ஒரு சில வித்வான்களும் அங்கத்தினர்களாக இருந்தார்கள். கர்நாடகாவைச் சேர்ந்த அங்கத்தினர்களின் ஆக்ரமிப்பு சற்று அதிகம் தான். என்றாலும் விவாதங்கள் எல்லாமே சென்னையச் சுற்றியும், சென்னையில் நடக்கும் கச்சேரிகள் – குறிப்பாக இசை விழா – இவற்றைச் சுற்றியும் இருக்கும்.
விவாதங்கள் என்றால் மயிர் பிளக்கும் விவாதங்கள். பெரிய சங்கீத விற்பன்னர்களும் இசையாசிரியர்களும் கலந்து கொள்வார்கள். வெவ்வேறு விதமான தலைப்புகளில் விவாதங்கள். இசைக் கச்சேரிகளுக்கு ஒரு தனிப்பிரிவு – இதே போல் இசைவாணர்கள், பாடல்கள், வாக்கேயக்காரர்கள், இசை சம்பந்தமான நிகழ்ச்சிகள், பொது விவாதங்கள் என்று ஒவ்வொன்றிற்கும் விரிவான தனித் தனிப் பிரிவு உண்டு. அங்கத்தினராகும் எவரும் எந்த ஒரு விவாதத்தையும் தொடங்க உரிமை உண்டு. எல்லோருக்கும் கண்ணியமான முறையிலும் அதே சமயம் ஆணித்தரமாகவும் கருத்துகளைச் சொல்ல பரிபூர்ண அநுமதி வழங்கப் பட்டு வந்தது. இதில் விவாதங்கள் நெறிப்படுத்தவும் கண்ணியம் குறையாமல் காக்கவும் நெறியாளர்கள் உண்டு. அவ்வப்போது விவாதங்கள் நடப்பதைக் கண்காணித்துக் கொண்டேயிருப்பார்கள். சற்று ரசனைக் குறைவாக அல்லது கண்ணியக் குறைவாக யாராவது இடுகை இட்டால் அதை உடனே நெறியாளர்கள் நீக்குவார்கள். மேலே ரசாபாசம் ஏற்படாமல் இருக்க அந்த விவாதத்தையே பூட்டி விடுவதும் உண்டு; சில சமயங்களில் சம்பந்தப் பட்ட அங்கத்தினரையே நீக்கி விடுவதும் உண்டு. இந்த வலைப் பூவில் என்ன பாடல் கேட்டாலும் கிடைக்கும். எத்தனைப் பழைய வித்வானின் ஒலிப்பதிவும் கிடைக்கும். இசை சம்பந்தமாக எந்த ஐயம் எழுப்பினாலும் துல்லியமாக விடை தருவதற்கு அங்கத்தினர்கள் இருந்தனர். ஒரு பெரிய இசைச் சுரங்கம் எந்தவிதப் பொருளாதார எதிர்பார்ப்பும் இல்லாத இவ்வளவு பெரிய முயற்சியைப் பலர் முனைந்து இவ்வளவு தூரம் வளர்த்து விட்டு வைப்பதற்கு ஆர்வமும் அர்ப்பணிப்பு உணர்வும் தான் காரணம்.
எனக்கு இந்த வலைப்பூவை ஆதித்யாவை விளம்பரப்படுத்த உபயோகிக்கலாமே என்று தோன்றியது. முதலில் அதில் அங்கத்தினர் ஆனேன். கொஞ்ச நாட்களுக்கு அதில் இடம் பெற்ற விவாதங்களிலும் பங்கு பெற்றிருக்கிறேன். என் குறைந்த இசை ஞானத்திலும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள சில விஷயங்கள் இருந்தன. இந்த சமயத்தில் ஆதித்யா நம் இசைவாணரிடமும் அவர் உறவினரான பெரிய இசைவாணரிடமும் வகுப்புகளுக்கு விட்டு விட்டுச் சென்று கொண்டிருந்தான். நம் இசைவாணர் முன்னரே எங்களிடம் வாக்களித்திருந்தபடி ஒன்றிரண்டு வகுப்புகளுக்கு பெரிய இசைவாணரிடம் போகச் சொல்லி வைத்திருந்தார். அவர்கள் குடும்ப உறவுகள், சிஷ்யர்கள் மத்தியில் ஆதித்யா கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம்.
இந்த வலைப்பூவில் ஆதித்யாவைப் பற்றி ஒரு தனியான நூலிழையை ஆரம்பிக்கலாம் என்று ‘ஆதித்யா மோகன்’ என்று தலைப்பிட்டு அவனைப் பற்றிப் பாராட்டாகவும் பெரிய இசைவாணர் அவனைப் பற்றிக் கூறிய வார்த்தைகளையும் இசையாசிரியர் கூறிய “உலகம் கண்ணை மூடிக்காமலிருக்கணும்” என்று சொன்னதையும் போட்டு வைத்தேன். என் நோக்கமெல்லாம் இசை ரசிகர்கள் ஆதித்யாவின் சங்கீதத்தைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஒரு வெள்ளோட்டம் பார்க்கலாம் என்கிற எண்ணம் தான். மிகவும் ஜாக்கிரதையான வார்த்தைகளுடன் அங்கத்தினர்களிடமிருந்து பதில்கள் வர ஆரம்பித்தன. முதலில் அவன் எங்காவது கச்சேரி செய்திருந்த ஒலிப்பதிவை சிலர் பகிரக் கோரினர். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர்களிடமே கேட்டேன். எப்படி பொது இசைத்தளத்தில் ஏற்றுவது என்று ஆலோசனை சொன்னார்கள். அதன்படி சிதம்பரம் கச்சேரியின் ராகம் தாளம் பல்லவியைப் பதிவேற்றம் செய்து அதன் கண்ணி விபரத்தை வலைப்பூவில் தெரிவித்திருந்தேன்.
பின்னர் ஒவ்வொன்றாக ஆரம்பித்தது. முதலில் பாராட்டுரை. பின்னர் நீண்ட ஆலோசனைகள். பையன் கச்சேரி செய்ய வைக்க அவசரப்படக் கூடாது. பையனுக்கு தலைக்கனம் மண்டைக்கு ஏறி விடக்கூடாது. பெற்றோர்கள் பையனை வைத்துக் காசு பண்ண முயற்சிக்கக் கூடாது. சங்கீதத்தை வைதீகபரமாகப் பண்ண வேண்டும் இத்யாதி இத்யாதி. அவரவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் கடைபிடிக்கவில்லையோ ஆனால் கடைப்பிடிக்கவில்லையே என்கிற ஏக்கமெல்லாம் அறிவுரைகளாகக் கொட்டின. இது ஒரு சில அஞ்சல்கள் வரை. அதற்குப் பின் அவதூறுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்தன. நம் இசைவாணரோ, அவரைச் சேர்ந்தவர்களோ இதில் ஈடுபட்டிருந்தார்கள் என்று நாங்கள் நம்ப நிறைய காரணங்கள் கிடைத்தன. பையனைப் ‘பிராடிஜி’ என்று சொல்வதைக் கண்டித்து டி ஆர் மகாலிங்கம் மாதிரியோ, மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மாதிரியோ இந்தப் பிள்ளையை எடுத்துக் கொள்ள முடியாது என்று ஆரம்பித்திருந்தார்கள். உடனே சிலர் ‘நான் அப்பவே நினைச்சேன்’ என்கிற ரீதியில் ஆரம்பித்து விட்டார்கள். உச்சக்கட்டமாக ஒருவர் தமிழில் கிண்டல் கவிதை ஒன்றைக் கொடுத்திருந்தார். ‘பெயர் போன வித்வான்கள்….’ என்று எங்களை மட்டுமல்லாது நான் குறிப்பிட்டிருந்த மூத்த இசையாசிரியரைப் பற்றியும் ரசனைக் குறைவாகக் கிண்டல் செய்திருந்தார்கள்.
எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இதைப் பார்த்த போது தான் மழலை மேதைகளைக் கொண்டாடும் உலகம் அவர் தம் பெற்றோர் மீது எத்தகைய விரோதத்தைப் பாராட்டி வருகிறது என்று புரிந்தது. மழலை மேதையைக் கொண்டாடிய காலம் ஒன்று இருந்தது. டி ஆர் மகாலிங்கம், மாண்டலின் ஸ்ரீநிவாஸ் காலங்கள் அவை. அப்போது அவ்வளவு மழலை மேதைகள் இல்லை. இப்போது யாரைக் கேட்டாலும் நானே மழலை மேதை தான் என்று ஒவ்வொருவரும் கூற ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த சமயத்தில் கர்நாடக சங்கீத ரசிகர்கள் பற்றியும் கர்நாடக சங்கீதத்தின் நிலை பற்றியும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அந்தக் காலத்தில் சக்கை போடு போட்ட வெகுஜனப் பத்திரிகைகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பத்திரிக்கையாகவும், பக்தி இதழ்களாகவும் மாறிவிட்டன. காரணம் என்னவென்று சற்று உட்புகுந்து பார்த்தால் வாசகர்கள் முக்காலே மூணு வீதம்பேர் ஐம்பது வயதைத் தாண்டியவர்கள். தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள். அவர்கள் தலைமுறையோடு தமிழ் படிப்பது பெரு நகரங்களில் நின்று விட்டது. தமிழை வாழ வைத்துக் கொண்டிருப்பவர்கள் இன்னுமும் தமிழ் மீடியத்தில் படித்து வரும் கிராமப்புற மாணவர்கள் தாம். இதேபோல் கர்நாடக சங்கீத ரசிகர்கள் பெரும்பாலும் ஐம்பது வருடங்களைக் கடந்தவர்கள். சிலபேர் தியாகராஜ பாகவதர் காலத்து ஆசாமிகள். 'அந்தக் காலத்தில் ராஜரத்னம் பிள்ளை விடியற்கார்த்தாலை மூணு மணிக்குச் சாளக பைரவியை வாசிச்சார் பாரு’ என்று சிலாகிப்பவர்கள். இவர்கள் அவரே இப்போது நேரில் வந்து வாசித்தாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். சென்னை சபாக்களில் கச்சேரி சீஸனில் போய்ப் பார்த்தோமென்றால் இதை உணர்ந்து கொள்ள முடியும். இவர்களுக்குப் பொதுவாக எல்லாவற்றின் மீதும் ஒரு கைத்த வெறுப்பும் கோபமும் உண்டு. வயதானதின் கோளாறு என்று நினைக்கிறேன்.
இது இப்படி என்றால் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வேறு வகையானவர்கள். இவர்கள் இரண்டு வகையானவர்கள். பலர் சுமார் மூன்று அல்லது நான்கு தலைமுறைகளாக அங்கேயே வசித்து வருபவர்கள். பொருளாதார நிலையில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். நல்ல படிப்பு படித்து அந்தக் காலத்திலேயே வெளிநாட்டுப் பல்கலையில் மேற்படிப்புக்காகச் சென்று, அங்கேயே குடியுரிமை பெற்றுக் கொண்டு செட்டில் ஆனவர்கள். தங்கள் புத்தி தீக்ஷீண்யம் கலாச்சாரம் பற்றிய பெரிய பெருமை இவர்களுக்கு உண்டு; அது தொடர்பான ஏக்கங்களும் உண்டு என்றாலும் தற்போது வெளிநாடு செல்லும் இந்தியர்களை இவர்கள் சம அந்தஸ்து உடையவர்களாக நினைப்பதில்லை. கூலிகள் என்று இகழ்ச்சியாகச் சொல்வார்கள் இவர்கள் சென்ற தலைமுறைகளில் கூலிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதை மறந்து.
இவர்கள் இந்தியா வந்தால் இதுபோன்ற மேட்டிமைத்தனம் பல மடங்கு ஆகிவிடும். சுஜாதா எழுதுவாரே “முதல்ல ரோடு ஒழுங்காகப் போடக் கத்துக்கங்கய்யா உங்க நாட்டில..” அது போன்ற பாணி தான். இவர்கள் பல சமயங்களில் வெளிநாடு செல்லும் இசைக் கலைஞர்களுக்குப் புரவலர்களாக இருந்திருக்கிறார்கள். பல வெளிநாட்டு நகரங்களில் தமிழ்ச் சங்கத்தையும் இசை சபாக்களையும் கட்டி எழுப்புவதற்கு மூல காரணிகளாய் இருந்திருக்கிறார்கள். ஆனால் மேட்டிமைத்தனம் குறுக்கே வந்து விடுகிறது. அது தான் பிரச்னையே.
இப்படிப் பார்க்கும் போது கர்நாடக சங்கீதமே நில உடைமைச் சமுதாயத்தின் எச்சம் தான் என்று தோன்றுகிறது. ஐம்பது அறுபதுகளில் உச்சத்தை அடைந்த இது குறிப்பாகச் சென்னையில் அந்தஸ்தின் குறியீடாக மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினரிடையே இன்றளவும் நீடித்து வருகிறது. தியாகராஜ ஸ்வாமிகள் போலவோ முத்துஸ்வாமி தீக்ஷீதர் போலவோ ஈஸ்வரார்ப்பணமாக இன்றைய உலகில் செய்வது கொஞ்சம் கடினம் தான் என்றாலும் கர்நாடக சங்கீதத்தை பேணுபவர்கள் மட்டுமல்லாது வித்வான்களும் முழுக்க முழுக்க அதைப் பொருளாதார ரீதியில் மட்டும் அணுகுகிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இத்துடன் புறக் காரணிகளான விஞ்ஞான சாதனங்கள் வளர்ச்சியால் கர்நாடக சங்கீதம் கொஞ்சம் கொஞ்சமாக நசித்து வருகிறது என்பது தான் உண்மை. ஒருவர் என்ன திறமை இருந்தாலும் கர்நாடக சங்கீதத்தை ஜீவனோபாயமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒரு மிகப் பெரிய தொகையை முதலில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் இப்போது உள்ளது.
இந்த வலைப்பூவில் நான் எழுதிய நூலிழைக்கு எதிர்வினையாக வந்த பதில்களுக்கெல்லாம் நான் மிகவும் பணிவுடன் பதில் எழுதியதோடு அவ்விவாதத்தை முடித்துக் கொண்டேன் என்றாலும் இந்த வலைப்பூவை தினமும் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன்.
இந்த சமயத்தில் வலைப்பூவின் உறுப்பினர் ஒருவர் தன் வீட்டில் ஒரு கச்சேரி ஏற்பாடு செய்தார். பெங்களூரைச் சேர்ந்த ஒரு வித்வான். உயரமான மனிதர். நல்ல இனிமையான குரல் உள்ளவர். இவர் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. மாம்பலத்தில் தனி வீடு. பெரிய பங்களா என்று சொல்ல முடியாது என்றாலும் ‘தண்ணெ’ன்று மரங்கள் அடர்ந்த இடத்தில் தனி வீடு. அந்தக் காலத்து வீட்டு மாடியில் கச்சேரி ஏற்பாடாகி இருந்தது. ஒலிபெருக்கி இல்லாத கச்சேரி. நான் அங்கே கச்சேரிக்குச் செல்ல முடிவெடுத்தேன். இந்த வலைப்பூவின் அங்கத்தினர்களை நண்பர்களாக்கிக் கொண்டு அவர்கள் நடவடிக்கைகளில் நாமும் பங்கெடுத்தோமென்றால் நாளை பின்னே அது ஆதித்யாவிற்கு உதவியாக இருக்கும் என்கிற எண்ணம். கச்சேரிக்குச் சென்றேன். தரையில் ஜமுக்காளம் விரித்திருந்தது. ஒரு இருபது பேர் அமர்ந்திருந்தார்கள். இரண்டு மூன்று இளைஞர்கள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். நான் மெதுவாகச் சென்று அமர்ந்து கொண்டேன். ஒரு கிழவர் என் கையைப் பிடித்துக் கொண்டு சிரித்தவாறே கன்னடத்தில் ஏதோ கேட்டார். நான் சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்து விட்டேன் எனக்கு கன்னடம் தெரியாது என்பதால்.
கச்சேரி முடிந்தவுடன் ஒருவரைப் பேச அழைத்தார்கள். அவர் இந்த வலைப்பூவில் மிகவும் ஆர்வமாக விவாதங்களில் பங்கு கொள்ளக்கூடியவர். அருமையாக ஆங்கிலம் எழுதுவார். தத்துவமாகவும் கவித்துவமாகவும் எழுதுபவர். பெரிய இசைச் சேகரம் வைத்திருந்தார். அவருக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அவரை எல்லோரும் பாராட்டுவதும் அவர் அவற்றையெல்லாம் பெருந்தன்மையுடன் அங்கீகரிப்பதும் அவ்வப்போது நடக்கும்.
நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டு ஓரிரு வார்த்தைகள் பேசினேன். வலைப்பூ குழுவில் பங்கு பெறுவதில் எனக்கு ஆர்வம் இருப்பதையும் அது போன்ற கச்சேரிகளை அவர்கள் நடத்த ஏதுவாக அவ்வப்போது ஏதாவது சிறு நன்கொடை தேவைப்பட்டால் என்னால் தர முடியுமென்றும் தெரிவித்தேன். அவர் வெறுமனே என்னைப் பார்த்துக் கொண்டு சிரித்துக் கொண்டு நின்றார். நான் சற்றுக் குழம்பினாலும் அவர் என்னிடம் ஒரு பெரிய சம்பாஷணையை வைத்துக் கொள்ள முனையவில்லை என்பதை புரிந்து கொண்டேன். என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதே ஆதித்யா மோகனின் தந்தை என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தேன். அது எந்தவிதமான் எதிர்வினையையும் அவரிடம் உண்டாக்கவில்லை என்பதையும் கவனித்துக் கொண்டிருந்தேன். சம்பிரதாய வார்த்தைகளுக்குப் பிறகு விடை பெற்றுக் கொண்டேன். அத்துடன் அது முடிந்தது. அதற்குப் பின் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை.
இதற்குக் கொஞ்ச நாட்களுக்குப் பின் இந்த வலைப்பூவை மேய்ந்து கொண்டிருந்தபோது ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை நான் மேற்கொண்டேன். இது என் அந்தரங்க விபரங்களை யாரும் கவர்ந்து விடக் கூடாது என்று நான் வழக்கமாக என் கணிப்பொறியில் செய்யும் ஒரு செயல். அதைச் செய்யும் போது தற்செயலாக இந்த வலைப்பூவின் நெறியாளர்கள் பகுதியில் நுழைந்து விட்டேன். அதில் நெறியாளர்களுக்கென்று தனியாக ஒரு துறையிருந்தது. அதில் பல நூலிழைகள். சாதாரண அங்கத்தினர்களுக்கு இதில் அனுமதி இல்லை. இதில் என்னயிருக்கிறது என்று பார்க்கும் போது இந்த நெறியாளர்களின் உண்மை முகங்களைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். எல்லோரும் வலைப்பூவில் பங்கு பெறும் எல்லா அங்கத்தினர்களைப் பற்றியும் பயங்கரமாகவும் கேவலமாகவும் கிண்டல் செய்திருந்தார்கள். மேற்குறித்த நபர் நான் சென்று வந்த கச்சேரியைப் பற்றி எழுதும்போது “ஹி வாஸ் ஆல் ஓவர் மீ” ( இவன் என் தலையில் ஏறி உட்கார்ந்திருந்தான்) என்று என்னைப் பற்றிக் கிண்டல் செய்திருந்தார்.
ஆதித்யாவைப் பற்றி எழுதும்போது அவன் சங்கீதத்தைப் பற்றி எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவன் ஒரு மாற்றுத்திறனாளி என்கிற ரீதியில் நான் கச்சேரியில் சந்தித்த நண்பர் எழுதியிருந்தார். பின்னர் அவரைப் பற்றி நினைத்துப் பார்த்தபோது அவர் பார்வையில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று தான் தோன்றியது. அவர் எப்போது ஏதாவது விஷயத்தை ( இசை உட்பட ) எழுதும்போதும் மிகவும் கவித்துவமாக தத்துவமாக எழுதுவார். இதையே வேறொருவர் எழுதினால் அவருக்கு பயங்கரக் கோபம் வந்து விடும். எழுதியவரைப் போட்டுப் பந்தாடி விடுவார். இவரின் இந்த நடவடிக்கையால் எனக்கு அவர் இசை இலக்கியம் தத்துவம் கவிதை இவற்றுக்கெல்லாம் தான் தான் மொத்தக் குத்தகை என்று நினைப்பது புரிந்து போயிற்று. இவர் பிள்ளை உண்மையிலேயே ஒரு மாற்றுத் திறனாளி. மூளை வளர்ச்சியில்லாத பிள்ளை. அவனை கணவனும் மனைவியும் மிகவும் பாடுபட்டு வளர்த்து வந்தார்கள். இந்தப் பையனைப் பற்றி இவர் வலைப்பூவில் ஒரு தனி நூலிழையில் பின்னலிட்டிருக்கிறார். அதில் ஏகப்பட்ட பாராட்டும் அநூதாபமும். இவரே இன்னொருவர் பிள்ளை என்று வரும்போது அதை எப்படியாவது விமர்சித்து மட்டம் தட்ட நினைப்பது புரிந்தது என்றாலும் இது உலக இயற்கை என்பதால் எனக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை.
இத்துடன் வலைப்பூ சங்காத்தம் முடிவுக்கு வந்தது. இப்பவும் அந்த வலைப்பூவை அவ்வப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும் எனக்கு அதில் இருந்த பழைய ஸ்வாரஸ்யம் போய்விட்டது என்று தான் கூற வேண்டும். இந்த நண்பர் ஆதித்யாவைப் பற்றி எழுதும்போது நான் ஒரு பெரிய வித்வானை ஆதித்யாவைப் பற்றி சந்தித்ததைக் குறிப்பிட்டிருந்தார்.
நம் இசைவாணரின் சிஷ்யர் ஒருவர் பின்னர் அந்த வித்வானின் சிஷ்யர் ஆனார். நான் வித்வானைச் சந்தித்தபோது அவரும் உடன் இருந்திருக்கிறார். அவர் அந்த சந்திப்பைப் பற்றி இந்த நண்பரிடம் குறிப்பிட்டிருக்கிறார். அதைத்தான் நண்பரும் எழுதியிருந்தார்.
அந்த சம்பவம்….

அத்தியாயம் 19

நான் குறிப்பிடும் வித்வான் மிகப் பிரபலமானவர். நன்கு உழைத்துப் பாடுகிறவர். நான்கு மணிக் கச்சேரியை அநாயாசமாய்ச் செய்கிறவர். நீண்ட நாட்களாகப் பாடி வருகிறவர். சங்கீதத்தை ஜீவனோபாயமாகக் கொண்டிருந்தாலும் தன் திறமையினாலும் உழைப்பினாலும் பெரிய வித்வானாக உருவெடுத்தவர். ஸ்ருதி பிரச்னை கொஞ்சம் உண்டு. அலையடிப்பது போல் போய் விட்டுப் போய் விட்டுத் திரும்பும் இவரின் சாரீரம். நல்ல ப்ருகா சாரீரம் என்பதால் இதை தவிர்க்க முடியாதென்பதே உண்மை. ஜீஎன்பிக்கே இந்தப் பிரச்னை உண்டு. மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கும் தான். இந்த வித்வானின் கற்பனையையும் திறமையையும் ரசிகர் கூட்டம் மெச்சி ஸ்ருதி விலகல் பிரச்னையைச் சகித்துக் கொண்டிருந்தது.
ஆரம்ப நாட்களில் இவர் பாட்டை ஆதித்யா வெறித்தனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் வழக்கம் எப்போதும் தனக்குப் பிடித்த பாடகரின் பெயரைத் தன் பெயராகச் சொல்லிக் கொள்வது. யாராவது ‘உன் பெயரென்ன?’ என்று கேட்டால் ஆதித்யா தன் பெயரைச் சொல்லாமல் இந்த வித்வானின் பெயரையே சொல்லிக் கொண்டிந்தான். நம் இசைவாணரிடம் வகுப்புகள் நின்றிருந்த புதிது. நாங்கள் இந்த வித்வானை முயற்சி செய்யலாமே என்று இறங்கினோம். இந்த வித்வான் நல்ல பாடகர் மட்டுமல்லாது நிறைய சிஷ்யர்களை உருவாக்கியிருந்தார். கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் நல்ல முன்னணி வித்வான்களாக உருவெடுத்து வந்தார்கள். இசையுலகிலும் இவருக்கு நல்ல மரியாதை இருந்தது.
ஒரு நாள் அவரைத் தொலைபேசியில் அழைத்து ஆதித்யாவைப் பற்றிக் கூறி அவனுக்கு பாட்டு பயிற்றுவிக்க முடியுமா என்று கேட்டேன். ஆதித்யாவைப் பற்றிய ஒரு சிறு முன்னுரையை வழங்கினேன். அவர் பொறுமையாகக் கேட்டுவிட்டு, “குழந்தையை நாளைக்குக் காலம்பற பத்து மணிக்கு அழைச்சுண்டு வாங்கோளேன்” என்றார். பெரிய வித்வான் என்கிறார்கள்; எந்தவித பந்தாவுமில்லாமல் மிகவும் எளிமையாக இருக்கிறாரே என்று எங்களுக்கு ஆச்சர்யமான ஆச்சரியம். மறுநாள் ஆதித்யாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினோம். சரியாக பத்து மணிக்கு அவர் வீட்டில் இருந்தோம்.
தனி வீடு. அந்தக் காலத்து மத்தியதர இல்லம். வாசலில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அது மழையில் நனையாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் கூரையால் சார்ப்பு ஒன்று போட்டிருந்தார்கள். நாங்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்ற போது வித்வானின் மனைவியும் மகளும் இருந்தார்கள். “இன்னும் வல்லை” என்றார்கள். நாங்கள் எங்கோ வெளியில் சென்றிருப்பார் என்று நினைத்து “பரவாயில்லை; வெயிட் பண்றோம்” என்று வெளியில் வந்து விட்டோம். வீட்டில் இருக்க அவர்களும் வற்புறுத்தவில்லை; நாங்களும் ஆதித்யாவின் அலைபாயும் குணம் கருதி உள்ளே காத்திருக்கப் பிரியப்படவில்லை. நானும் என் மனைவியும் ஆதித்யாவுடன் வீட்டிற்கு எதிர்த்த சாரியில் ப்ளாட்ஃபார்மில் நின்று கொண்டிருந்தோம்.
நான் வழக்கம் போல் ஸ்வாரஸ்யத்துடன் அக்கம் பக்கத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அமைதியான மத்திய தர வர்க்கச் சூழ்நிலை. தள்ளுவண்டியில் ஒரு ஜோடி ப்ளாட்பாரத்தின் ஒரு பக்கம் துணிகளை ‘அயர்ன்’ செய்து கொண்டிருந்தது. தூரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு ஜோடி நின்றது. அந்த வண்டியில் வந்த இளைஞன் வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் இறங்கி ஒயிலாக நின்றது. அந்த இளைஞன் பையிலிருந்து ஒரு அரை ப்ளேடை எடுத்து சிரித்து ஏதோ சொல்லிக்கொண்டே காலில் உள்ள நரம்பை வெட்டுவதற்காகக் குனிந்தான். பின்னர் அந்தப் பெண்ணை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே சிரித்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அந்தப் பெண் பதை பதைப்புடன் பார்துக்கொண்டிருந்தது. ஏதோ காதல் விவகாரம்; அந்தப் பையன் அந்தப் பெண்ணை ‘ப்ளாக்மெயில்’ செய்வதாகத் தோன்றியது. சற்று நேரத்தில் அவன் பிளேடை மறுபடி சட்டைப் பையைல் போட்டு விட்டு வண்டியைக் கிளப்பினான். இருவரும் நாங்கள் நின்றிருந்த இடத்தைக் கடந்து போனார்கள். அந்தப் பெண் சற்று வீம்பு கலந்த பெருமையுடன் பையனின் தோளைப் பற்றியவாறு என்னைப் பார்த்துக் கொண்டே சென்றது.
என் மனைவி வித்வானின் வீட்டுக்குள் அரைமணிக்கொரு தடவை போய் வந்து கொண்டிருந்தாள். அவளுக்கும் எனக்குமே ஏன் வித்வானின் மனைவி அவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாங்கள் காத்திருப்பதைத் தெரிவிக்கக் கூடாது என்று தோன்றிக் கொண்டிருந்தது. மணி கிட்டத்தட்ட 11.30 ஆகி விட்டது. வித்வானின் சிஷ்யர்கள் வகுப்பிற்காக ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தார்கள். மறுபடி கிளம்புவதற்குள் ஒரு முறை முயற்சித்து விடலாம் என்று மூவரும் வீட்டிற்குள் சென்றோம். அந்த சமயத்தில் வித்வானின் மனைவி தாழ்வாரத்தில் இருந்த ஒரு ‘காலிங்பெல்லை’ அழுத்தினார். இதை நாங்கள் ஏற்கெனவே பார்த்துக்கொண்டிருந்த போதே இரண்டு மூன்று முறை அழுத்தியிருந்தார். நாங்கள் அது என்னவென்று புரியாததால் அதைப் பொருட்படுத்துவதை விட்டு விட்டோம். உள்ளே மாணவர்கள் ஒவ்வொருவராக வகுப்புக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஒரு பெண் தடுக்குப் பாய்களை விரித்துக் கொண்டிருந்தார். ஒரு உயரமான மாணவர் ஊஞ்சல் கம்பிகளை மேலே கட்டி வைத்திருந்ததைக் கீழிறக்கினார். சார்த்தி வைத்திருந்த ஊஞ்சலை இரண்டு பேராகத் தூக்கி வந்தார்கள். கம்பிகளில் மாட்டினார்கள். அந்த மாணவரில் ஒருவர் எனக்குத் தெரிந்தவர். இசைவாணரின் சிஷ்யர். என்னைப் பார்த்து “அங்கே ஒண்ணும் சரிப்படலையா? அதான் வந்துட்டேள் போலிருக்கு. எனக்கும் அப்படித்தான். விட்டுட்டேன். ஆறு மாசமாச்சு” என்றார். நான் மையமாகப் புன்னகைத்து வைத்தேன்.
சரியாகப் பத்து நிமிடங்கள் கழித்து எங்களால் வெளியே சென்றிருக்கிறார் என்று நம்பப் பட்ட வித்வான் மயில் கண் வேஷ்டி ஜிப்பா அங்கவஸ்திரத்துடன் நெற்றியில் ஸ்ரீ சூர்ணம் இட்டுக் கொண்டு ‘தகதக’ வென்று மாடிப் படிகளில் இறங்கி வந்தார். அத்தனை நேரம் அவர் அதே வீட்டின் மாடியறையில் தான் இருந்திருக்கிறார்! அவர் வந்தவுடன் அந்த மாணவர்கள் பயபக்தியுடன் அவரின் காலைத் தொட்டு வணங்கினார்கள். அவர் யாரையும் பார்க்காமல் போய் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டார். நாங்கள் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தோம். எங்களை யார் என்னவென்று கேட்கவோ பையனைக் கூப்பிட்டுப் பேசவோ அவர் முனையவில்லை. எல்லோரும் பய பக்தியுடன் உட்கார்ந்து கொண்டார்கள். வகுப்பு ஆரம்பித்தது. ஏதோ பாட்டு. எல்லோரும் பாட ஆரம்பித்தார்கள். அவரும் அவ்வப்போது சேர்ந்து கொண்டார். ஆதித்யா தானாகப் போய் உட்கார்ந்து பாடலில் சேர்ந்து கொண்டான். அவனுக்கு அந்தப் பாடல் ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது. வார்த்தைகள் தெரியவில்லையாதலால் ஸ்வரமாகப் பாடிக் கொண்டு போனான். சற்று நூதனமாகவும் சிரிப்பை வரவழைப்பதாகவும் இருந்தது அது. வகுப்பு முடிந்தது. அந்த மாணவர்கள் அவரிடம் பேசக் கூட அஞ்சினார்கள். ஒரு மாணவி மிகவும் தயக்கத்துடன் உதவித் தொகை விண்ணப்பப் படிவம் ஒன்றை அவர் பரிந்துரைக்காக நீட்டினாள். அவர் பற்கள் தடதடக்க “என்னதிது’ என்றார். அப்போது தான் பார்த்தேன். பற்கள் கட்டிக்கொண்டிருந்தார் அவர். அந்த மாணவி அதை விவரித்ததும் அதை வாங்கி வைத்துக் கொண்டார். எல்லோரும் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம். கிளம்பு முன்னாவது அவர் எங்கள் பக்கம் பார்ப்பாரா என்று காத்திருந்தோம். ஹுஹும்! மனமிரங்கவில்லை.
நான் மெதுவாகப் போய் பக்கத்தில் நின்று கொண்டு, “சார் பையனுக்குக் க்ளாஸ்…” என்று இழுத்தேன் பலவீனமாய். அவர் அரை நிமிடம் என்னைப் பார்த்துப் புன்னகை புரிந்து விட்டு, “எனக்கு டைமில்லை இப்ப” என்று ஒரேடியாக முடித்து வைத்தார். அப்புறம் என்ன? கிளம்பி விட்டோம். இசைவாணர் எங்களிடம் பயமுறுத்தும் தொனியில் ஏற்கெனவே “நீங்க ஆதித்யாவை யார்ட்ட வேணாலும் கூட்டிண்டு போய்ப் பாருங்கோ யாராவது எடுத்துக்கறாளான்னு. எங்களைத் தவிர யாரும் அவனைப் புரிஞ்சுக்க மாட்டா” என்று கூறியிருந்தது ஏனோ நினைவுக்கு வந்து தொலைத்தது.
எனக்கும் என் மனைவிக்கும் அதிர்ச்சியும் விரக்தியும் தாங்க முடியவில்லை. வகுப்பு எடுக்கட்டும், எடுக்காமல் போகட்டும். வீட்டு வாசலில் இரண்டு மணி நேரம் காக்க வைப்பாரா ஒரு மனிதர்? அதுவும் வீட்டில் இருந்து கொண்டே? பன்னிரண்டு மணிக்குத்தான் பார்க்க முடியும் என்றால் அதை முன்னரே கூறி விட்டுப் பன்னிரண்டு மணிக்குச் சந்திக்கலாமே! அதுவும் வீட்டின் மாடியில் உட்கார்ந்து கொண்டு எதிர்த்த சாரியில் வீதியில் நின்று கொண்டிருந்த எங்களை நோட்டமிட்டவாறு இருந்திருக்கிறார்! அவர்கள் வீட்டிலுமே அப்படித் தான் இருப்பார் போலிருக்கிறது. அவர் மனைவியின் கண்களில் தெரிந்த தர்ம சங்கடமும் குற்றவுணர்வும் இன்னும் என் கண்களில் அப்படியே நிற்கின்றது. ஒரு விதத்தில் பார்த்தால் அவர் மனைவி பிள்ளைகள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் என்று தோன்றுகிறது. இது போன்ற ஒரு பிரகிருதியுடன் எப்படித்தான் இத்தனை நாள் குடித்தனம் நடத்தினார்களோ!
இதே சமயத்தில் மழலை மேதை என்று நம்பப்பட்ட ஒரு பையனின் தந்தையைச் சந்திக்க முயன்றேன் இந்தப் பையன் காற்று வாத்தியக் கருவியில் மேதையாகக் கருதப் பட்டு புயல் போல் கர்நாடக இசை உலகில் நுழைந்தவன். வழி முறைகள் சற்று மரபு சாராமல் இருந்த போதிலும் பெரிய இசை மேதையாக அங்கீகரிக்கப் பட்டவன். மறைந்த ஒரு பெரிய காற்று வாத்திய மேதைக்கு ஒப்புமை நோக்கிப் பேசப் பட்டவன். இந்தப் பையனின் தகப்பன் தன் பிள்ளையை எப்படி முன்னுக்குக் கொண்டு வந்தார் என்று நாம் தெரிந்து கொண்டால் அதே வழிகளை நாமும் பின்பற்றலாமே என்று நினைத்தேன். அவருடைய தொலைபேசி எண்ணை கூகுளில் பிடித்து அவருக்குப் ஃபோன் செய்தேன். அவர் என்னை மறுநாள் காலை புறப்பட்டு வரச் சொன்னார். நானும் என் மனைவியும் கிளம்பிச் சென்றோம். ஆதித்யாவை அழைத்துச் செல்லவில்லை.
மைலாப்பூரின் பணக்காரர்கள் வசிக்கும் ஒரு பிரபலமான் பகுதி. எல்லாம் தனித் தனி பங்களாக்கள். கோடீஸ்வரர்கள் வசிக்கும் பகுதி. ஒவ்வொரு வீடும் தோட்டமும் துரவுமாக, விசாலமான போர்ட்டிகோ வராந்தாவுடன் இருந்தது. காம்பவுண்ட் சுவரில் பித்தளையில் பளபளக்கும் பெயர்ப் பலகைகள். சுவற்றின் மேல் வெளிச்ச விளக்குகள். வாயில் கூண்டுடன் செக்யூரிடி என்று அமர்க்களமாக இருந்தது. இது போன்ற ஒரு வீட்டில் வாயிற் காப்போனின் அநுமதி பெற்று உள்ளே நுழைந்தோம். நாங்கள் நுழைந்த சமயம் ஒரு பழங்கால சோஃபா செட்டை ஒரு வெள்ளைக்காரன் கூலிக்காரர்களுடன் நகர்த்திக் கொண்டிருந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நம் ஆட்கள் வெள்ளைக்காரர்களுக்கு ஊழியம் செய்த காலம் போய் வெள்ளைக்காரன் இந்தியனுக்கு ஊழியம் செய்யும் காலமும் வந்தது பார் என்று நினைத்துக் கொண்டேன். மழலை மேதையின் தந்தை ஏதோ பழங்காலப் பொருட்களை ஏற்றுமதி செய்பவர் போலிருக்கிறது.
அவர் எங்களை வரவேற்றார். “பையனைக் கூட்டிக் கொண்டு வரவில்லையா?” என்று கேட்டார். தமிழ் கொஞ்சம் கொச்சையாகப் பேசினார். கன்னடக்காரர் போலிருக்கிறது. “ஆமாவா?” என்று கேட்பார்களே அந்த ரகம். ‘ஹவ்தா?’ என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு போலிருக்கிறது. கையில் வெள்ளிப் பொடி டப்பா வைத்திருந்தார். நல்ல விசாலமான சோபாக்களில் எங்களை அமரச் செயதார். விசாலமான ஹால். முத்து வர்ணத்தில் பெயிண்ட் அடித்து ஒரு சிறிய கறை கூட இல்லாத துல்லிய நிறச்சுவர்கள். அந்த மனிதர் தன் மனைவியை கூப்பிட்டு எங்களுக்கு மோர் கொண்டு வரச் சொன்னார். இரண்டு உயர கண்ணாடி டம்ப்ளர்களில் நல்ல கெட்டியான மோர். கருவேப்பிலை கொத்தமல்லி பெருங்காயம் போட்டு வெந்தயம் கடுகு எல்லாம் தாளிதம் செய்த மோர். அது போன்ற ஒரு சுவையான மோரை நான் என் வாழ்நாளில் அதற்குப் பின் ருசிக்கவில்லை. அவர் நான் பையனைக் கூட்டிக் கொண்டு வராததற்குக் கோவித்துக் கொண்டார். நான் ஆதித்யாவின் திறமைகளைக் குறிப்பிட்டு விட்டு “பஞ்சரத்னம் கூட மனப்பாடமாகப் பாடுவான் சார்!” என்றேன்.
அவர் என்னை நேராகப் பார்த்து, “உன்னால் லட்ச லட்சமாகப் பணம் முதலீடு செய்ய முடியுமா இதில்?” என்றார். நான் பேச்சிழந்து நின்றேன்.
“அப்படி உன்னால் முதலீடு செய்ய முடியுமென்றால் இதில் இறங்கு. அப்படிப் பணம் முதலீடு செய்ய சக்தியில்லையென்றால் கர்நாடக சங்கீத உலகத்தின் பக்கமே தலைவைத்துப் படுக்காதே. பணம் மட்டுமே இங்கே பேசும். வேறொன்றும் வேலைக்காகாது. பஞ்சரத்னமாவது தசரத்னமாவது………..” என்றார் கடுமையாக. அவர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாய் நான் நினைக்கவில்லை. அவர் பெற்ற கசப்பான அநுபவங்கள் அவரை அப்படிப் பேச வைத்தன என்பது எனக்குப் புரிந்த்து. அவர் பேசும் போது அவர் பையன் – மழலை மேதை – பக்கத்திலேயே புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தான். பேசுவதற்கு அப்பாவின் முகத்தைப் பார்ப்பது போலிருந்தது. அவர் மனைவியும், பெண்ணும் ஒரு மூலையில் நின்றிருந்தார்கள். அவர்கள் முகங்களிலும் தயக்கம் கலந்த பயம்.
இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அவர் சென்னை சங்கீதக் குழுக்கள் எவற்றுடனும் தொடர்பில் இருப்பதாய்த் தெரியவில்லை. சீசன் போது சென்னையில் கச்சேரி இருந்தால் பக்கவாத்யக்காரர்களை அவரே அழைத்து வந்து கொண்டிருந்தார் கொஞ்ச நாள் முன் வரையிலும். உள்ளூர் வித்வான்களை உபயோகித்துக் கொள்வது போல் தெரியவில்லை. இதெல்லாம் அவர் ஆரம்ப அநுபவங்களிலிருந்து பெற்ற பாடங்களாய் இருக்கலாம் என்று இப்போது நினைக்கையில் தோன்றுகிறது.
இன்னொன்றும் இருக்கலாம். இது போன்ற மழலை மேதைகள் துல்லியமாக ராகங்களுக்கும் தாளங்களுக்கும் கணக்கு வைத்திருப்பார்கள். தப்பு கண்டு பிடிப்பதில் மன்னர்கள். ஒரு ஸ்வரம் தப்பினால் அங்கேயே – தப்பு நடக்கின்ற பொழுதிலேயே – திருத்துகிற மோசமான மனப்பான்மை உண்டு. போகட்டும் என்று விட மாட்டார்கள். ஆதித்யாவிடமும் இந்தக் கோளாறு உண்டு. இதனால் பக்க வாத்தியக்காரர்கள் கோபித்துக் கொண்டோ பயத்தினாலோ மறு முறை வாசிக்க மறுப்பது உண்டு. ஈகோ பிரச்னையாகவும் இருக்கலாம்; சின்னப் பையனாவது நம்மைத் திருத்துவதாவது என்று.
அந்த சந்திப்புக்குப் பின் எங்களுக்கு அவரை மீண்டும் சந்திக்க ஆவலில்லை என்றாலும் அவர் பிரத்யட்ச நிலையை எங்களுக்குச் சுட்டிக் காட்டியதாகவே கருதுகிறேன். மழலை மேதை எனும் போது அது சம்பந்தமாக வேறொருவரைச் சந்தித்தோம்.
அது………….

அத்தியாயம் 20

நான் குறிப்பிடும் நபர் நல்ல பிரபலமானவர். பெரிய கலைக் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர்கள் குடும்பத்தினர் எப்போதுமே பொது ஊடக வெளிச்சத்தில் இருப்பவர்கள். அது தொடர்பான தொழில்களில் ஈடுபட்டிருக்கும் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். இந்த நண்பர் குழந்தைகளுக்கும் ஒரு சில இளைஞர்களுக்கும் இசைக் கச்சேரிகள் ஏற்பாடு செய்து கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்கான ஒரு அமைப்பையும் வைத்திருந்தார். அவர்களின் கச்சேரிகள் பெரிய ஆர்ப்பாட்டத்துடன் பத்திரிக்கைச் செய்திகளுடன் அவ்வப்போது நடக்கும். இவர் மூலமாகச் சென்றால் ஆதித்யாவை நாலு இடங்களில் பாட வைக்கலாமே என்று எனக்குத் தோன்றியது.
ஏற்கெனவே சிதம்பரம் கோயிலில் ஆதித்யாவிற்கு கடம் வாசித்த பையன் இந்த நண்பரின் குழுவில் இருந்தான். சிதம்பரம் கோயில் கச்சேரி முடிந்தவுடன் இந்தப் பையனிடம் நான் உபசாரமாகவும் மரியாதையாகவும் ஓரிரு வார்த்தைகள் பேச முயன்றேன். அந்தப் பையன் எந்த ஒரு எதிர்வினையையும் செய்யாமல் என்னை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான், தடிமனான சோடாப் புட்டிக் கண்ணாடி வேறு அணிந்து கொண்டிருந்தான் என்பதால் கண்களை வைத்து முகபாவத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி சுபாவம் என்று விட்டு விட்டேன்.
ஒரு சுபயோக சுப தினத்தில் அன்பருக்கு ஃபோன் செய்தேன். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆதித்யாவைப் பற்றியும் சொன்னேன். அவர் என்னிடம் “உங்கள் பையன் ஹெல்த் எப்படி?” என்றார். அவர் அவனை இப்போது தான் கேள்விப்படும் பாவனையில் இருந்ததாய்த் தெரியவில்லை. ஏற்கெனவே தெரிந்திருப்பது அல்லது கேள்விப் பட்டிருப்பது போன்ற தொனி அவர் குரலில் இருந்ததை என்னால் உணர முடிந்தது. அவர் கேள்வியின் உட்பொருளை என்னால் அப்போது உணர முடியவில்லை. “ஏன்? நன்னாத் தான் இருக்கு” என்றேன்.
“அப்படியா! நாளைப் பின்ன நம்ம ஆத்துக்கு பையனையும் அழைச்சிண்டு வாங்கோளேன்” என்றார். சரி இதையும் பார்த்து விடுவது என்று தீர்மானித்துக் கொண்டு மறுநாள் நான் என் மனைவி ஆதித்யா மூவரும் கிளம்பினோம். நல்ல பட்டை உரிக்கிற வெய்யில். ஆட்டோ பிடித்துக் கொண்டு போனோம். போய் இறங்கிக் கொண்டு ஒரு கிலோ பங்கனபள்ளி மாம்பழத்தை வாங்கிக் கொண்டு அவர் வீட்டில் வேர்க்க விறுவிறுக்கப் போய் நின்றோம். தனி வீடு. பெரிய பங்களா. கடற்கரை சாலையில் அமைந்திருந்ததால் காலை நல்ல அனல் காற்று வீசியது. உடம்பு பூரா பாசிமணி ஊசி மணி நகைகள் அணிந்திருந்த ஒரு பெண்மணி வரவேற்று மாடிக்கு வழி காண்பித்தார். அவர் நான் பார்க்க வந்தவரின் மனைவியாக இருக்க வேண்டும். அவருக்கு இது வழக்கம் போலிருக்கிறது. அந்த அலுப்பு முகத்தில் தெரிந்தது. அவரிடம் பழப் பையைக் கொடுத்து விட்டு மாடிப்படி ஏறிச் சென்றோம்.
நம் நண்பர் எங்களைப் புன்னகையுடன் வரவேற்றார். மாடியறையை ஓர் அலுவலகம் போல் வைத்திருந்தார். சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். பெரிய மேசை. அதன் மீது பெரிய கண்ணாடி. கண்ணாடிக்குள் படங்கள் அட்டவணைகள் மாதக் காட்டிகள். கண்ணாடி ஓரங்களில் நகராமல் இருக்க சைக்கிள் ட்யூபை வட்டமாக வெட்டி உள்ளே வைத்திருந்தது. அவர் ஆதித்யாவைப் கூர்ந்து கவனித்து விட்டு அவனுடன் பேச முயன்றார். ஆதித்யா அவரிடம் பேச முனைப்புக் காட்டவில்லை. ஆதித்யா கச்சேரியின் குறுந்தகடு ஒன்றைக் கொண்டு போயிருந்தேன். அதை அவரிடம் கொடுத்தேன். அவர் என்னைப் பார்த்துச் சிரித்து விட்டு “உங்க பையன் தான் நான் கேள்வி கேக்கறச்சே பதில் சொல்லாத முதல் குழந்தை” என்றார். “நீ வா; நான் உனக்கொரு ‘காசட்’ தர்றேன்” என்று சொல்லி ஆதித்யா கையில் அவர் சேகரத்தில் வைத்திருந்த ஒலிநாடா ஒன்றைத் திணித்தார். ஆதிதயாவும் அவர் கொடுத்ததை ஆர்வமாக வாங்கிக் கொண்டான்.
பின்னர் எங்கள் பேச்சு அவர் செய்து வரும் பணி பற்றித் திரும்பியது. அவர், “போதும் சார். பணம் பணம்னு ரொம்ப வருஷம் அலைஞ்சாச்சு. இப்போ இந்தக் குட்டிப் பசங்களுக்குப் பண்ற வேலை நிம்மதியா இருக்கு. எனக்கு- ஏன்? – நமக்கு ரசம் சாதம் போரும். என்ன சொல்றேள்?” என்றார். நான் தலையாட்டினேன். எல்லோரும் மோர் சாதம் என்று தான் சொல்வார்கள். இவர் என்னவோ ரசம் சாதம் என்கிறார். உடம்பு சீதளம் போலிருக்கிறது. மோர் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடித்துக் கொள்ளுமோ என்னவோ?
“மெட்றாஸில பாடவே வைக்காதேள். போட்டுக் ‘கிழிகிழி’ன்னு கிழிச்சிடுவான்கள். செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கமே இருக்கட்டும். இங்கே வேண்டவே வேண்டாம். அங்கேருந்து கூட ஒரு பெண் பாடறது. ‘கான கலா சரஸ்வதி’ன்னு பட்டம் எல்லாம் கொடுத்திருக்கான்கள். நம்ம குழந்தைகள் எல்லாம் வீட்டில “நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா” (கொச்சையாக குழந்தை மாதிரிக் குரலுடன் பாடிக் காட்டினார்) அப்படீன்னு பாடிண்டிருக்கும் நமக்குப் பெருமையா இருக்கும். அதெல்லாம் ப்ராடிஜின்னு நெனைச்சுண்டுடக் கூடாது” என்றார்.
“என் பையன் மேளராக மாலிகா கூடப் பாடுவான் சார்” என்றேன். அவருக்கு எப்படியாவது ஆதித்யாவைப் பற்றி விளக்கி விடவேண்டுமென்று எனக்கு ஆசை. அப்போது ஆதித்யா தொடர்ச்சியாக மகா வைத்யநாத சிவன் இயற்றிய ‘ப்ரணதார்த்தி ஹரு ப்ரபோ முராரே’ என்கிற பாடலைக் கேட்டுக் கொண்டும் பாடிக் கொண்டும் இருந்தான். தஞ்சாவூர் அவையில் இளவரசர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மகா வைத்யநாத சிவன் இப்பாடலுக்கு மெட்டமைத்துப் பாடினார். பின்னர் நரஸ்துதி செய்து விட்டோமே என்று மனம் வெதும்பி அதை அப்படியே சிவன் மேல் இருப்பதாய் மாற்றி அமைத்தார் என்பார்கள். இதில் 72 கர்நாடக மேள கர்த்தா  ராகங்களின் தாதுக்களும் வருவது போல் ஸ்வரங்கள் அமைத்துப் பாடியிருக்கிறார். அதைத்தான் நான் குறிப்பிட்டேன்.
அதைப் பற்றி அவருக்குச் சுத்தமாகத் தெரிந்திருக்கவில்லை. மேலும் அவருடன் நான் பேசி வரும் போதே அவருக்கும் சங்கீதத்துக்கும் ஸ்நாநப்ராப்தி கிடையாது என்பது எனக்குப் புரிந்து போயிற்று. சென்னை சபாக்கள் பாடுவது, சென்னையில் பிரபலப்படுத்துவது இவற்றைப் பற்றியெல்லாம் அவர் பேசும் போது ‘குசுகுசு’ப்பாக ஏதோ பயங்கர சதி செய்யும் தொனியில் பேசினார். அவர் வார்த்தையில் அவ்வளவு முன் ஜாக்கிரதையும் பயமும் கொப்பளித்தன.
“உங்கள் குரூப்ல ஆதித்யாவை சேத்துக்க முடியுமா சார்?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர் நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து ஏதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அதில் விருப்பமில்லை என்று புரிந்தது. விடைபெற்றுக் கொண்டு வந்தோம்.
இந்த நண்பரின் தூண்டுதலில் பேரில் தான் சிதம்பரம் கச்சேரிக்கு இவர் குழுவைச் சேர்ந்த கடம் வாசித்த பையன் வந்திருக்கிறான். ஆதித்யாவின் நடவடிக்கைகள் அவன் பாட்டுகளின் ஒலிப் பதிவுகள் எல்லாமே அவரைச் சென்றடைந்திருக்கின்றன. அவர்கள் ஒரு கும்பலாக உட்கார்ந்து கொண்டு கேட்டுக் கேட்டு அலசியிருக்கிறார்கள். இதில் வயலின் ஆசிரியை ஒருவரும் அடக்கம். இதெல்லாம் நானும் என் மனைவியும் உய்த்து உய்த்து உணர்ந்து கொண்டோம். இதற்கான காரணங்கள் நாங்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்த போதும் அதற்குப் பின்னும் கிடைத்துக்கொண்டேயிருந்தன.
விடைபெறும் போது “இன்னிக்கு வேணா அடையார் பத்மநாப ஸ்வாமி கோயிலுக்கு வாங்கோளேன். ஒரு குழந்தை பாடறான். கேளுங்கோளேன் பையனோட” என்றார். அதன் அர்த்தம் எனக்கு அப்போது புரியவில்லை. அவர் என்னிடம் நிரூபிக்க விரும்பியது “இது மாதிரியெல்லாம் உலகில் குழந்தைகள் பாடிக் கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் நீ என்னவோ பையனைக் கூட்டிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறாய்” என்பது தான். நான் மனைவி மகள் பையன் எல்லோரும் அந்தக் கச்சேரியில் ஆஜரானோம். அவர் இந்த தொனியில் தான் பேசியிருக்கிறார் என்று எனக்கு முன்னமே தெரிந்திருந்தாலும் நாங்கள் சென்றிருப்போம் என்பது தான் உண்மை என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது தான் சோகம்.
அன்று பாடிய பையனுக்கு சுமார் ஏழெட்டு வயதிருக்கலாம். பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகன். வேறோர் ஊரிலிருந்து வந்திருந்தான். அவன் அன்னையும் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். மனதுக்குள் பையனைப் பற்றி பெருமை இருந்திருக்குமா தெரியாது. மிகவும் இயல்பாய் சாந்தமாய் அமர்ந்திருந்தார். அந்தப் பையன் தேனொழுகும் இனிமையான குரலில் பாடினான். ஆலாபனை கற்பனாஸ்வரம் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. கச்சிதமான தயாரிப்பு. அப்பழுக்கு சொல்ல முடியாத சங்கீதம். கடைசியில் ‘முடித்து விடட்டுமா’ என்று அன்னையிடம் கேட்டு விட்டு ஆமோதித்தவுடன் ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலைப் பாடி முடித்து வைத்தான். எம் எஸ் சுப்பலக்ஷ்மியே அவதாரம் எடுத்து வந்தது போலிருந்தது. அவ்வளவு இனிமையான குரல்.
அதைப் பார்த்த எங்களுக்கு ‘ஐயோ ஆதித்யா இப்படிப் பாட மாட்டான் என்கிறானே’ என்றிருந்தது. அவன் மட்டும் எங்கள் பேச்சைக் கேட்டால் இதை விட நன்றாகக் கொண்டு வர முடியுமே என்றிருந்தது. இவன் இப்படியென்றால் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள எல்லோரும் வேறு தயங்குகிறார்கள். பெருமூச்சு விட்டுக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தோம்.
சில வருடங்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் ஒரு கர்நாடக சங்கீதக் கதாநாயகனுக்கான போட்டி ஒன்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் மேற்கூறிய பையனும் கலந்து கொண்டான். அந்த நிகழ்ச்சியை நாங்கள் தற்செயலாகக் கண்ணுற்றோம். நிகழ்ச்சியின் நீதிபதிகள் அவனை ஒரு வர்ணம் பாடச் சொன்னார்கள். ராகத்தைக் குறிப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன். இந்தப் பையனால் பாட இயலவில்லை. ‘புத்தகம் வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் அளவற்ற தாழ்வு மனப்பான்மையும் பதற்றமும் தென்பட்டுக் கொண்டிருந்தன. அந்தப் பையனால் பாட முடியவில்லை. தேர்வு ஆகவில்லை. கொஞ்ச நாட்கள் கழித்து நம் நண்பர் ஏற்பாடு செய்திருந்த வேறோர் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இந்தப் பையன் பாடியதைக் கேட்டேன். சாருகேசியில் அமைந்த திரை இசைப் பாடலுக்கு கற்பனாஸ்வரம் பாடிக் கொண்டிருந்தான். இது தேவைதானா என்று எனக்குத் தோன்றியது. எவ்வளவு பெரிய வீழ்ச்சி!
கர்நாடக சங்கீதத்தில் சாணக்கியங்கள் எடுபடாது என்பதே உண்மை. இந்தக் குழு உறுப்பினர்கள் அவர்களிடையே நன்கு சிரித்துப் பேசிக் கொள்வார்கள். எங்களைப் போன்ற குழுவிலிருந்து வெளியில் வரும் நபர்களை வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிதம்பரம் கச்சேரியில் கடம் வாசித்துக் கொண்டிருந்த பையன் வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்ததும் இந்த வகையைச் சேர்ந்ததே. நம் நண்பரின் சாணக்கியங்களையும் மீறி இந்தக் குழுவைச் சேர்ந்த சிலர் இன்று முன்னுக்கு வந்து கொண்dடிருக்கிறார்கள். ஆனால் முன்னுக்கு வந்திருக்கும் எல்லா இளைஞர்களையும் தன் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்வது நம் நண்பரின் வழக்கம். இது அவர் இயல்பிலேயே உள்ள விளம்பர யுக்தி என்று நினைக்கிறேன். எது எப்படியிருந்தாலும் ஆதித்யாவிற்கு இதில் இடமில்லை என்றான பிறகு இதை ரொம்பவும் பொருட்படுத்துவதில் அர்த்தமில்லை என்று விட்டு விட்டேன்.
இந்த சமயத்தில் நாங்கள் ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டி வந்தது. ஆதித்யாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் குறை வைக்கிறோமோ என்று எப்போதும் போல் சந்தேகம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது. பள்ளியில் என் மனைவி இல்லாமல் ஒன்றும் நடக்காது என்கிற நிலை ஏற்பட்டுக் கொண்டிருந்தது என்றாலும் அது எந்த விதத்திலும் ஆதித்யாவிற்கு உதவியாக இல்லை என்பதை உணர்ந்து கொண்டோம். என் மனைவி ராஜினாமாவைச் சமர்ப்பித்தாள். அதே பள்ளியில் நீண்ட வருடங்களாகப் பணியாற்றி வந்த ஆசிரியைகள் கிட்டத்தட்ட கொத்தடிமைகள் – என் மனைவியிடம் ‘போய் விடு; போய் விடு’ என்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். தாளாளர் என் மனைவி ராஜினாமா கொடுத்ததுமே அவளைத் தன் காரில் அழைத்துக் கொண்டு அவர்கள் நிர்வாகம் நடத்தும் எல்லாப் பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்திருக்கிறார். “சொல்; உன்னை இத்தனைப் பள்ளிகளுக்கும் எதிர்காலத்தில் மேற்பார்வையாளராக நியமிக்க இருக்கிறேன். எதற்கு ராஜினாமா செய்கிறாய்? வாழ்க்கையில் வரும் நல்ல வாய்ப்பை நழுவ விடாதே” என்றெல்லாம் பேசியிருக்கிறார். ஆனால் என் மனைவி மிகவும் தீர்மானமாக இருந்தாள். இது போன்ற பள்ளிகளில் ஆதித்யாவை உருவாக்க வாய்ப்புகள் கம்மி என்று உணர்ந்ததால் பிடிவாதமாக வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்து கொண்டே பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள முடிவு செய்தாள். ஆதித்யாவின் சங்கீதம் தவிர்த்த மற்ற வளர்ச்சிக்கு ஒரு விசேடப் பள்ளி தகுந்தது என்று முயற்சி செய்யலாமே என்று தோன்றியது. ஏற்கெனவே நம் இசைவாணர் பரிந்துரை செய்திருந்த இன்னொரு பள்ளியை முயற்சி செய்வது என்று முடிவெடுத்தோம். அந்தப் பள்ளியில் விசேடக் குழந்தைகளை சேர்த்துக் கொண்டு பள்ளி நடத்தி வந்தார்கள். மிக மோசமான மூளைக் குறைப்பாடு உள்ள குழந்தைகளுக்கான பள்ளி அன்று. ‘டிஸ்லெக்ஸியா’ போன்ற சிறு சிறு குறைகள் உள்ள குழந்தைகளுக்கான பள்ளி. அந்த நாட்களில் மலையாள தேசத்தில் நிர்வாகியாக இருந்து புகழ் பெற்ற ஒருவர் பெயரால் நடத்தப் பட்டு வரும் அறக்கட்டளையால் இயங்கி வந்தது. அதன் மாணவர்களை தேசீய திறந்த வெளிப் பள்ளிக் கூடத்திற்காகத் தயார் செய்து வந்தார்கள். மிகவும் நெகிழ்வான பாடத்திட்டங்கள். அரை நேரமே பள்ளி. அதே திறந்த வெளி பாடத்திட்டத்தில் இருந்த சிறு தொழில்களுக்கான பயிற்சிகளையும் வழங்கி வந்தார்கள்.
முதல்வரிடம் பேசிய பிறகு அட்மிஷனில் பெரிய பிரச்னை ஒன்றும் இல்லாமல் எளிதாக முடிந்தது. உண்மையில் கர்நாடக சங்கீதத்தில் திறமையுள்ள பையன் என்பதால் ஆதித்யாவை அப்பள்ளி இரு கரம் நீட்டி வரவேற்றது. பள்ளிக்கு ஆதித்யா செல்ல ஆரம்பித்தான். என் மனைவி ஆட்டோவில் கூட்டிக் கொண்டு போய் விட்டு விட்டுக் காத்திருந்து திருப்பி அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். பெண்ணை மனைவி வேலை பார்த்த பள்ளியிலிருந்து எடுத்து அவள் பழைய பள்ளியிலேயே போட்டு விட்டோம். அவள் தன் பாட்டுக்கு பள்ளி வேனில் போய் வந்து கொண்டிருந்ததால் அது எளிதாக ஓடிக் கொண்டிருந்தது.
இந்தப் பள்ளியில் அபோது தான் ஒரு மாணவன் படிப்பை முடித்து வெளியேறியிருந்தான். அந்தப் பையன் ஒரு பெரிய இசைக் கலைஞரின் குடும்பத்தில் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்தவன். தந்தையும் சிறிய தந்தையும் பாட்டனாரும் தொழில் முறைப் பாடகர்கள். வேறு ஒரு சாதாரணப் பள்ளியில் பிரச்னை எழுந்ததால் இந்தப் பள்ளியில் போட்டிருக்கிறார்கள். அந்தப் பையன் வந்த புதிதில் வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தைகளாகக் கொட்டும் என்று கூறினார்கள். அவன் தந்தை அவனை இசைத்துறையில் அறிமுகமாக்கிப் பிரபலமாக்க முயன்று கொண்டிருந்த நேரம். பள்ளியின் முதல்வர் எங்களிடம் “நீங்கள் வேண்டுமென்றால் அவருடன் பேசுங்களேன். ஆதித்யாவிற்கு வகுப்புகளோ கச்சேரிகளோ அவர் ஏதாவது நினைத்தால் செய்ய முடியும்” என்றார். அவரிடமே வித்வானின் தொலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு போய்ப் பார்ப்பதற்காகத் தொடர்பு கொண்டோம்.
அவருடன் எங்கள் சந்திப்பு…

அத்தியாயம் 21

நாங்கள் ஆதித்யாவுடன் அந்தக் கோயிலில் காத்திருந்தோம். முருகன் கோயில். நல்ல சந்தடியான இடத்தில் அமைந்திருந்த கோயில். முருகன் கோயிலுக்கே உரித்தான விபூதி மணமும் பூக்களின் மணமும் காற்றில் விரவியிருந்தது. அன்று கந்தர் சஷ்டி விழாவுக்காக திருப்புகழ் மற்றும் பாடல்கள் கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். ‘ரிலே ரேஸ்’ போல சாரி சாரியாகப் பாடகர்கள் குழுகுழுவாகப் பாடிக் கொண்டிருந்தார்கள்.
நாங்கள் சென்றிருந்த போது ஒரு குழு அப்போது தான் கச்சேரியை முடித்துக் கொண்டிருந்தது. அடுத்த குழு காத்திருந்தது. அந்தக் குழுவின் பிரதானப் பாடகர் நல்ல கருப்பாக குண்டாக எட்டு முழம் வேஷ்டியும் ஜிப்பாவுமாக இருந்தார். தலை பூரா வழுக்கை. முகத்தில் ஒரு வாரம் நரைத்த தாடி. வெற்றிலைக் காவியேறிய பற்கள். இவர் என்ன பாடப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் மேடையில் ஏறி உட்கார்ந்து கொண்டு சுருதி சேர்த்துக் கொண்டு ஆரம்பித்தார். அடாடா! என்ன குரல்! என்ன குரல்! புரளத் கூடிய வகையல்ல. ப்ருகா சாரீரம் இல்லை. ஆனால் ப்ருகா விளைவை ஏற்படுத்தக் கூடிய சங்கதிகள். விருத்தமாகவும் ராகமாகவும் பாடல்களாகவும் பாடிக்கொண்டு போனார். ஒரு புருவச் சுளிப்பில் அபூர்வ சங்கதியை வரவழைக்கும் வரம் பெற்றவராக இருந்தார். அப்படியே ஆன்மாவை உலுக்குகிற சங்கீதம். எனக்கா ஆச்சர்யமான ஆச்சர்யம். நல்ல குரல்களை நாம் எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறோம். அது வேறெங்கேயோ சாந்நித்யம் கொண்டிருக்கிறது. அருகில் இருத்தவரைக் கேட்டேன் யாரென்று அவர் பெயர் சேதலபதி பாலசுப்பிரமணியன் என்றார்கள்.
அவர் கடைசிப் பாடல் பாடிக்கொண்டிருந்த போது நாங்கள் சந்திக்க வேண்டிய நபர் வந்து கொண்டிருந்தார். வயதானவர். பக்கவாதம் வந்து தேறியிருந்தவர் போலிருக்கிறது. ஒரு கை தன்னிச்சையாக மடங்கி இருக்கக் காலை இழுத்து இழுத்து நடந்து வந்தார். பெரிய வாக்கேயக்காரர் என்று அறியப்படுகிறவர். நெற்றி நிறைய விபூதி. அலங்காரமாக இல்லாமல் கற்றையாகத் தீட்டியிருந்தார். முகத்தில் நல்ல பிரம்ம தேஜஸ். சற்று நேரம் நின்று பாடியவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்தவரிடம் “ஸ்வர ஞானம் கிடையாது போலிருக்கு” என்று முணுமுணுத்தார்.
பின்னர் அவர் மேடையில் அமர்ந்து கொண்டு நான்கைந்து பாடல்கள் பாடினார். தன்னளவில் இயன்றவரை ராகம் கற்பனாஸ்வரம் எல்லாமே பாடினார். பக்கவாத்தியம் வாசித்தவர்களும் கூடியிருந்தவர்களும் அவரை மிகவும் மரியாதையாக நடத்தியதை எங்களால் உணர முடிந்தது. அவர் பாடி முடித்துவிட்டுக் கிளம்பினார். நான் அவர் பக்கத்தில் போய் இன்னார் எங்களை அனுப்பியிருக்கிறார் என்று தெரிவித்தேன். அவரும் “ஆமாம்; ஃபோன் பண்ணார்” என்றார். நான் வாங்கி வந்திருந்த வேஷ்டி அங்கவஸ்திரம் வெற்றிலை பாக்கு பழம் பணம் ஐந்நூறு ரூபாய் உள்ள பையை அவரிடம் கொடுத்து ஆதித்யாவை நமஸ்காரம் செய்யச் சொன்னேன். அவர் ஆசீர்வாதம் செய்து விட்டு என்னிடம் “எனக்கு உடம்பு நேராயில்லை. இன்னும் எத்தனை நாளோ! அவர் ஏதோ க்ளாஸ் எடுக்க முடியுமான்னு கேட்டார். நானிருக்கிற நிலையிலே க்ளாஸ் எடுக்கிற நிலையிலே இல்லியே “என்று முடித்துக் கொண்டார்.
பள்ளியின் ஆலோசனைப்படி நாங்கள் வித்வானைத் தொடர்பு கொண்ட போது மேலே விவரித்தவரைப் போய்ப் பார்க்குமாறு பணித்திருந்தார். “ரொம்ப கஷ்டப் படறார் சார்! வயசானவர். பெரிய வாக்கேயக்காரர். அவர் ஆசீர்வாதம் பண்ணா உங்க பையன் நன்னா வருவான். உங்களால முடிஞ்சது ஏதாவது பண்ணுங்கோ” என்றிருந்தார். அதன் பிரகாரம் தான் வேஷ்டி அங்கவஸ்திரம் ஐந்நூறு ரூபாய் வெற்றிலை பாக்கு தேங்காய் பழம் எல்லாம் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு வந்தோம். பின்னாளில் பெரிய இசைவாணர் இதே வாக்கேயக்காரரைக் குறிப்பிட்டு அவருக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டார். அப்போது தனியாக ருபாய் பத்தாயிரம் கொடுத்தோம். இவர்கள் இருவரும் சொன்னது ‘அவர் ஆசீர்வாதம் செய்தால் உங்கள் பையன் நன்றாக இருப்பான்’ என்றது. இதை நான் விவரிக்கக் காரணம் நான் பணம் கொடுக்க நேர்ந்தது என்பதற்காக அல்ல. மனித மனம் நல்லதைச் செய்ய விழையும் போது அதைத் தனக்கு பாதிப்பில்லாமல் செய்து கொண்டு அதற்கான புண்ணிய பலனை அடைய விழைகிறது என்பதை விளக்குவதற்காகவே. இது நிற்க.
வித்வான் மறு நாள் எங்களை வரச் சொல்லியிருந்தார். அவரைச் சென்று சந்தித்தோம் நகரின் மிகவும் சந்தடியான பகுதியில் தனி வீடு. அண்ணனும் தம்பியும் வித்வான்கள். தனித்தனியே ஒரே காம்பவுண்டில் வீடு கட்டிக் கொண்டு வசித்து வந்தார்கள். வித்வானின் தந்தையும் பெரிய வித்வான். அகாலமாக மரணமடைந்து விட்டார். அவர் மனைவியும் மூத்த பிள்ளையுடன் வசித்து வந்தார். நாம் பார்க்கச் சென்றது அவரைத் தான். அவர் மனைவி பிள்ளை எல்லோரும் அன்பாக வரவேற்றார்கள். ஆதித்யாவைப் பார்த்து ஸ்ருதிப் பெட்டியை ‘ஆன்’ செய்தார். செய்து விட்டு ரீதிகௌளையில் ஒரு பாட்டை ஆரம்பித்தார். ‘ஜனனி’ நின்னு வினா’ என்று நினைக்கிறேன். ஆதித்யா வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். சரணத்தில் அவர் கற்பனாஸ்வரத்தை ஆரம்பித்தார். ஆதித்யா சடாரென்று உயிர் பெற்று அவருடன் இணைந்து கொண்டான். டென்னிஸ் மாட்சில் இரு விளையாட்டு வீரர்கள் பந்தை ஒருவருக்கொருவர் மாறி மாறி அடித்து விளையாடிக் கொண்டது போலிருந்தது. ஒரு கட்டத்தில் அவர் நிறுத்திக் கொண்டார். ஆதித்யா மீதம் ஸ்வரங்களைப் பாடி முத்தாய்ப்பு வைத்து நிறுத்தினான். அவர் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். முடிந்ததும் “அடேங்கப்பா! என்ன பாடினாலும் திருப்பி அடிக்கறாம்மா!” என்று வியந்து விட்டுத் தன் பையன் பக்கம் திரும்பினார். “பாத்துக்கோ. இது தான் சங்கீதம். யாருட்டயாவது சொல்லிண்டானா இந்தக் குழந்தை? எப்படி தானாப் பெருக்கெடுக்கறது பார் – உழைப்பு. கான்ஸண்ட்ரேஷன்” என்றெல்லாம் விமர்சனமாகவும் அறிவுரையாகவும் ஆரம்பித்து விட்டார். இதை அவர் மனைவி வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்ததை எங்களால் அவதானிக்க முடிந்தது.
கிளம்பும் போது ஆதித்யாவின் கச்சேரி அடங்கிய ஒலிப் பேழை ஒன்றை அவரிடம் கொடுத்துவிட்டு வந்தோம். மறுநாள் ஒலிப் பேழையை வீட்டிற்கு வந்து திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு அவரிடமிருந்து ஃபோன் வந்தது. என் மனைவி அவர் வீட்டில் போய் நின்றிருக்கிறாள். அவர் வீட்டிற்குள்ளிருந்தே வெளியில் வராமல் டிரைவரிடம் ஒலிப் பேழையைக் கொடுத்துச் சேர்ப்பிக்கச் சொல்லி விட்டார். வாசலோடு என் மனைவி திரும்பிவிட்டாள். இதில் என்ன நடந்திருக்குமென்று எங்களால் எளிதில் ஊகிக்க முடிந்தது. முதல் நாள் ஆர்ப்பட்டமாக வரவேற்றவர்கள் மறுநாள் வாசலோடு முகத்தைக் கூடப் பார்க்காமல் அனுப்ப என்ன காரணம் என்று நாங்களாகவே அநுமானித்தது இது தான்: நாங்கள் முதல் நாள் கிளம்பியதற்குப் பிறகு வித்வானின் மனைவி அவரிடம் ஊரார் பிள்ளையப் பாராட்டி விட்டுத் தன் பிள்ளையை ஊக்குவிக்காமல் மட்டம் தட்டுவதாய்ச் சண்டை பிடித்திருக்கிறார். மேலும் ரசாபாசம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டி அதன் பின்னர் அவர் எங்கள் முகத்தில் விழிப்பதற்கோ ஆலோசனை கூறுவதற்கோ தயங்கி இருக்க வேண்டும். அத்துடன் அது போயிற்று. ஆனால் அவர் மனைவி வருத்தப் படுவதற்குப் பெரிதாக ஒன்றுமில்லை என்று தான் தோன்றுகிறது இத்தனை வருடங்கள் கழித்து இதை நினைத்துப் பார்க்கும் போது. ஏனென்றால் அந்தப் பையன் தற்போது நிறைய இடங்களில் கச்சேரி பண்ணிக்கொண்டு நல்ல செயலாக இருக்கிறான்.
இதற்குப் பின் ஒரு வீணை ஆசிரியர் ஒருவரைப் பற்றி ஒரு கட்டுரை நாளிதழில் கண்டேன். அந்த நாளில் பெரிய வித்வான்களாக இருந்த சகோதரர்களின் பேரன். புரந்தரதாஸர் மாயமாளகௌளையில் இயற்றியிருந்த ஸ்வராவளிக்கு வார்த்தைகள் போட்டு இவர் புதுமையாகப் பாடியதை முன்பே மும்பையில் கேட்டிருந்தேன். நீண்ட நாட்கள் வெளிநாட்டில் இசையாசிரியராக இருந்த பின் சென்னையோடு வந்து விட்டார். அயல் நாட்டு அறக்கட்டளை ஒன்றின் மான்யம் பெற்று இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. வருடம் ஒரு முறை விழாவெல்லாம் நடக்கும். பெரிய ஆரவாரமெல்லாம் இல்லாது எப்போதாவது கண்ணில் படும் அளவிற்கு விளம்பரம் உள்ள அமைப்பிது.
இவரிடம் ஆதித்யாவைக் கூட்டிக்கொண்டு சென்றிருந்தோம். அவர் ஆதித்யாவைப் பாடச் சொல்லிக் கேட்டார். அன்று ஆதித்யாவிற்குத் தில்லானா ஜீரம். காளிங்க நர்த்தன தில்லானாவை அவர் முன்னர் பாடிக் காட்டினான். அவர் அவனுடன் சேர்ந்து பாட முயற்சிக்காமல் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தார். பாராட்டாக சில வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தார். ‘பொதுவாக இது மாதிரிப் பையன்களுக்கு வகுப்புகள் சரியாக வராது; அவர்கள் போகிற போக்கில் விட்டு விட வேண்டும். அப்போது தான் அவர்கள் திறமை தன்னால் வளர்ந்து வந்து பளிச்சிடும்’ என்று கூறிக் கொண்டிருந்தார். அவர் வகுப்புகள் எடுப்பதைத் தவிர்ப்பதற்காக இதைச் சொல்கிறாரா அல்லது உண்மையிலேயே தனக்குப் படுவதைச் சொல்கிறாரா என்பதை நிச்சயமாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை எங்களால். கிளம்பும் போது ஆதித்யா நகைச்சுவையாக ஒன்று செய்தான். அவர் பெயரைச் சொல்லி அவரைக் கட்டி அணைத்துக் கொண்டான்! அவரும் சிரித்துக் கொண்டே அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு, எங்களிடம், “ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்கோ” என்று கூறி அனுப்பி வைத்தார்.
இதைப் பற்றி இப்போது யோசித்துப் பார்க்கும் போது எனக்குத் தோன்றுவதெல்லாம் அவருக்குத் தேவையானதெல்லாம் அந்நிய நாட்டு அறக்கட்டளை மூலமாக வரும் மானியம் தடையில்லாம் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதற்குத் தேவையான குறைந்த பட்ச விஷயங்களை மட்டும் செய்தால் போதுமானது.; அதற்கு மேல் உயிரை விட்டுக்கொண்டு வகுப்புகள் எடுப்பதோ மாணவர்களைத் தயார் செய்வதோ அநாவசியம் என்று அவருக்குத் தோன்றிச் செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்று தான் என்னால் நினைக்க முடிகிறது. இது தவறாகவும் இருக்கலாம்.
இந்த சமயத்தில் ஆதித்யா ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில் இருந்தான். அவன் தன்னிச்சையாகப் பாடிக் கொண்டு பள்ளியில் வலம் வந்து கொண்டிந்ததைப் பார்த்து சக மாணவர்கள் அவனை ஏதோ வம்பிழுத்து எரிச்சல் படுத்தியிருக்கிறார்கள். எல்லாம் மேல்தட்டு நடுத்தர வர்க்க வீட்டுக் குழந்தைகள். ஆதித்யாவிற்கு இதற்கெல்லாம் எதிர்வினை செய்யத் தெரியாதென்றாலும் தன்னைச் சீண்ட முயற்சிக்கிறார்கள் என்று புரிந்துவிடும். அது புரிந்தால் அவன் மிரளும் யானை தான். என்ன செய்வானென்று சொல்ல முடியாது. ஒரு நாள் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென்று என் மனைவிக்குப் பள்ளியிலிருந்து ஃபோன் போயிருக்கிறது. என் மனைவி பதறியடித்துக் கொண்டு பள்ளிக்குப் போயிருக்கிறாள். ஆதித்யாவை ஒரு தனி ரூமில் ஒரு ஆசிரியர் துணையுடன் உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். ஆதித்யா அழுதழுது இரத்தச் சிவப்பான கண்களுடன் காணப் பட்டிருக்கிறான். என் மனைவிக்கு அவர்கள் சொல்லாமலேயே என்ன நடந்திருக்கும் என்று புரிந்ததால் அவர்களிடம் ஒன்றும் கேட்காமல் ஆதித்யாவைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டாள். இது நடந்த பின்னர் என்னைக் கூப்பிட்டு முன் ஜாக்கிரதையாக எங்களுக்கு நடந்த நிகழ்ச்சி பற்றி அறிவித்து விட்டதாகக் கூறி பெரிய விபரம் எதுவுமில்லாமல் ஒரு அறிக்கை தயார் செய்து எங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டார்கள். நாளை பின்னே நாங்கள் பள்ளி மீது வழக்குத் தொடர்ந்து விடுவோமோ என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று நினைக்கிறேன்.
இந்தப் பள்ளிக்கு அப்புறம் ஆதித்யா ரொம்ப நாள் செல்லவில்லை. மறுபடிக் கூட்டி வரும்படி எங்களுக்குப் பலமுறை ஆள் விட்டார்கள். எங்களுக்குத்தான் விட்டுப் போய் விட்டது.
இந்தப் பள்ளியில் ஆதித்யா இருந்த போது அவன் ஆசிரியை நம் இசைவாணரின் உறவினரான பெரிய இசைவாணரை ஒரு நாள் ஃபோனில் அழைத்து “சார்! ஆதித்யாவோட பேரண்ட்ஸ் ரொம்ப கஷ்டப் படறா. நீங்க ஏதாவது செய்யமுடியுமா? “என்று கேட்டிருக்கிறார். அந்த ஆசிரியையின் இச்செயல் தன்னிச்சையானது. எங்களின் தூண்டுதலோ வற்புறுத்தலோ இல்லாமல் எங்களுக்குத் தெரியாமல் நடந்தது. அவரும், ‘கூட்டிண்டு வரச் சொல்லுங்கோளேன்” என்றிருக்கிறார். அந்த ஆசிரியை எங்களைக் கூப்பிட்டு இதைச் சொல்லி ஆதித்யாவைக் கூட்டிச் செல்லச் சொன்னார்.
இப்படியாகத் தான் மீண்டும் பெரிய இசைவாணரின் தொடர்பு தன்னால் ஏற்பட்டு அவர் நடத்தும் வகுப்புகளுக்குச் செல்வது என்று ஆரம்பித்தோம்.
அதே சமயத்தில் நடந்த ஆதித்யாவின் கச்சேரி ஒன்றில் அவன் பாடிய பிலஹரி ராகக் கீர்த்தனையை வாசகர்கள் கேட்கக் கோருகிறேன். நான் கேட்ட பிலஹரியில் சிறந்த ஒன்றில் இது ஒன்று எனச் சொல்லலாம். அதற்கான கண்ணி இதோ:
நன்றி: சொல்வனம் https://solvanam.com/?p=51310

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...