அத்தியாயம் 28
மும்பைக்கு குடிபெயர்ந்த போது எனக்கிருந்த பிரமிப்பும் திகைப்பும் டெல்லி வந்த போது எனக்கில்லை. வயதும் கூடி இளமையின் மயக்கங்கள் உதிர ஆரம்பித்திருந்த சமயம். குடும்பக் கவலைகளில் ஆழ்ந்திருந்தேன். பணம் படிப்பிற்கோ, பெண் திருமணத்திற்கோ போதாது என்று தோன்றிக் கொண்டிருந்தது. பையன் கவலை வேறு அரித்துக் கொண்டிருந்தது. பொதுத் துறையில் 29 வருடங்கள் பணியாற்றியிருந்த போதும் பெரிய அளவில் வேலை முன்னேற்றமோ பணப் பெருக்கமோ கிட்டவில்லை. பணத் தேவைகள் அதிகரித்துக் கொண்டிருந்தன. அதற்கு ஏற்றாற் போல் ஊதிய உயர்வுகள் இல்லை. வருகின்ற வருமானத்துக்குத் தகுந்த அளவில் செலவுகளைச் சுருக்கிக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லை.
டெல்லி மிகப் பெரிய ஊர். மும்பையை விட நிலப் பரப்பில் மிகப் பெரியது. தேசத் தலைநகர் வேறு. பாலங்களுக்கும் சாலைகளுக்கும் அரசு பணத்தைக் கொட்டுகிறது. விசாலமான சாலைகள். ஆங்காங்கே பெரிய பெரிய பூங்காக்கள். ஊர் பூரா சரித்திர இடிபாடுகள். இந்தியக் கட்டிடக் கலை பாரசீகக் கட்டிடக் கலை இணைந்த கலவையுடன் அற்புதமான சரித்திரச் சின்னங்கள்.
இந்த சமயத்தில் என் பெண் பத்தாம் வகுப்பு முடிந்து பதினோராம் வகுப்பிற்கு வந்திருந்த சமயம். அந்த வகுப்புகளுக்கே உரித்தான படிப்புச் சுமை கூடியது. ஆதித்யாவின் மீது எங்களுக்கிருந்த கவனம் கொஞ்சம் குறைந்தது போன்ற நிலை. அவனைப் பொறுத்த மட்டில் எல்லாவற்றிற்கும் தயார். புது டெல்லியின் குளிருக்கும் கலாச்சார மாறுபாட்டுக்கும் தன்னை நன்றாக மாற்றிக் கொண்டான். என்றாலும் சென்னையின் கடற்கரையையும் ஏனைய கலாச்சார விழுமியங்களையும் நினைத்து நாங்கள் எல்லோருமே ஏங்குகிற நிலை.
சங்கீதத்தைப் பொறுத்த வரைப் பெரிதாகக் கவலைப் பட ஒன்றுமில்லை. அவன் இணையத்தில் வழக்கம் போல் கேட்டுக் கொண்டும், பாடிக் கொண்டும், பாடல்கள் புனைந்து கொண்டும் இருந்தான். அவ்வப்போது மலை மந்திர் என்று பிரபல்யமாக விளங்கும் ஸ்வாமிநாத ஸ்வாமி கோயிலுக்கும் எப்போதாவது ஹுமாயூன் சமாதி அமைந்துள்ள கோட்டைக்கும் செல்வதுண்டு. பழைய கோட்டை என்றழைக்கப்படும் பரந்து பட்ட கோட்டைக்குள்ளும் சென்று பார்த்து வருவதுண்டு. ஆறு மாதத்தில் ஓரளவு செட்டில் ஆகி விட்டோம் என்று சொல்ல முடியும்.
சென்னையில் பெரிய இசைவாணர் கிட்டத் தட்ட கழற்றி விட்டு விட்டார். இந்த சமயத்தில் நடந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளைச் சொல்லத் தான் வேண்டும். இவற்றைச் சொன்னால் தான் பின்னால் நடந்த ஒன்றிரண்டு சம்பவங்களின் பின்னணி புரியும். நாங்கள் பெரிய இசைவாணர் பெயர் வாங்கிய வாத்யத்தில் ஆதித்யாவை எப்படியாவது பழக்குவது என்று குறியாக இருந்தோம். ஆதித்யா சில சமயங்களில் வாய்ப்பாட்டிற்கும் பல சமயங்களில் ‘ஹவாயன் கிடார்’ வாசிப்பதற்குமாகப் பெரிய இசைவாணரின் வகுப்புகள் அபூர்வமாக நடக்கும் போது சென்று கொண்டிருந்தான். பெரிய இசைவாணர் வீம்புடன் வாத்யத்தில் ஆதித்யாவைப் பழக்க ஒரு முயற்சியும் எடுக்காமல் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு முறை வற்புறுத்திக் கேட்டபோது எங்களை அவர் உறவினரிடம் போய்க் கற்றுக் கொள்ளுமாறு கூறினார். இந்த உறவினரைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
இவர் நான் முதன் முதலில் ஆதித்யாவை அழைத்துச் சென்ற இசைவாணருடன் தங்கி இருந்தார். அவர்களுக்குள் என்ன உறவு என்று புரியவில்லை. குழந்தைப் பருவத்திலிருந்து இசைவாணர்கள் குடும்பத்துடன் தான் தங்கியிருந்தார். ஆதித்யாவின் ஸ்வீகாரத்தைப் பற்றி இவர் எங்களிடம் பிரஸ்தாபித்ததைப் பற்றியும் நாங்கள் பயந்து ஓடி வந்ததைப் பற்றியும் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். இவர் தந்தி வாத்யத்தை மிகவும் அருமையாக வாசிப்பார். பெரிய இசைவாணருக்கு ஒரு படி மேல் என்று கூடக் கூறமுடியும். என்ன காரணத்தாலோ இவரைத் தந்தி வாத்யம் வைத்துக் கச்சேரி செய்ய இசைவாணர்கள் அநுமதிக்கவேயில்லை. பெரிய இசைவாணரின் முக்கியத்துவம் குறைந்து விடப் போகிறது என்று பயந்தார்களோ என்னவோ! அதனால் இவர் இசைவாணருடன் சேர்ந்து வாய்ப் பாட்டுத் தான் பாடிக் கொண்டிருந்தார்.
இவரிடம் ஆதித்யாவைக் கூட்டிக் கொண்டு செல்ல ஆரம்பித்தோம். இவர் மனைவி பெரிய இசைவாணரின் பழைய மாணவி. அவரும் தந்திக் கருவியை வாசிப்பார். முதல் வகுப்புக்குச் சென்ற போது “நல்லது; இவர் ஆதித்யாவை நன்னா முன்னுக்குக் கொண்டு வருவர்” என்றார். இப்போது திறந்திருப்பது புதுக் கதவா அல்லது பழைய வழிக்கே கொண்டு போகப் போகிற சுழல் கதவா என்கிற நிச்சயம் இல்லாமல் தான் போனோம். ஒரு சில வகுப்புகள் நடந்தன. நாளாக நாளாக அவர் ஆதித்யா பாடவும் தான் தந்தி வாத்தியம் வாசிக்கவும் தான் குறிப்பாக இருப்பதாகத் தெரிந்தது. நானும் என் மனைவியும் அவர்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பின் கூடத்தில் உட்கார்ந்திருப்போம். இவர்களுக்கு வேறு அறையில் வகுப்பு நடக்கும். அந்த அறையில் பார்வையில் படுகிற மாதிரி ஒரு மடிக் கணினி திறந்து வைக்கப் பட்டிருக்கும். பாடுகின்ற ராகங்களையும் பாடல்களையும் ஒன்று பதிவு செய்துக் கொண்டிருக்க வேண்டும். அல்லது ‘லைவ் ரிலே’யாக யாருக்கோ சென்று கொண்டிருக்க வேண்டும். இந்தக் குடும்பத்தின் மர்ம நடவடிக்கைகளால் எங்களால் இது போன்ற சந்தேகங்கள் எழுவதை விலக்கி வைக்க முடியவில்லை.
இந்த வகுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் துவங்கின. அந்த நண்பர் பின்னர் ‘ஸ்கைப்பில்’ வகுப்பு எடுக்கிறேன் என்று ஆரம்பித்தார். எங்களுக்கும் சௌகரியமாக இருந்தது. அவர் வீட்டுக்குச் செல்வதற்கான வண்டிச் சத்தத்தையாவது மிச்சம் பண்ணலாமென்கிற எண்ணம். இந்த சந்தர்ப்பத்தில் ஒரு நாள் அவர் அவசரமாக ‘ஸ்கைப்’ வகுப்புகளுக்கு அழைத்தார். அன்றோ மறுநாளோ அவருக்குக் கச்சேரி இருந்தது என்று நினைக்கிறேன். வகுப்பு ஆரம்பித்ததும் அவர் ஒரு ராகத்தில் ஆலாபனை செய்ய ஆரம்பித்தார். செய்து கொண்டிருக்கும் போது ஆதித்யா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன் குறுக்கிட்டு, “நீ (நிஷாதம்) வில் நாட் கம் இன் திஸ் ராகா” என்றான். அவர் உடனே மறுபடி மறுபடி அந்த ராகத்தை மிகவும் அதிர்ச்சியுடன் திருப்பித் திருப்பிப் பாடிச் சரி செய்ய முயன்று கொண்டிருந்தார். அவ்வளவு தான். தொலைந்தது. அன்றுடன் இவரின் வகுப்புகள் முடிவுக்கு வந்து விட்டன. பிள்ளை பெரிய அண்ணாவியாக இருக்கும் போது நாங்கள் என்ன தான் செய்வது?
மேற் கூறிய காரணங்களால் நான் புதுடெல்லி வேலையை ஒப்புக் கொண்டு வந்தவுடன் என் மனைவி குடும்பத்தைப் பெயர்த்துக் கொண்டு புதுடெல்லி வந்து விடுவதென்று முடிவு செய்தாள். படிப்போ சங்கீதமோ டெல்லியில் பார்த்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம். ஏனென்றால் சென்னையில் ஒன்றும் பெரிதாக நடந்து விடவில்லை.
டெல்லியில் தாயாதி முறையில் எனக்கொரு தூரத்து உறவினர் உண்டு. பத்திரிக்கையாளர். காந்தியவாதி. கட்டை பிரம்மச்சாரி. அன்றைய அரசியல்வாதிகள் அனைவரையும் அந்தரங்கமாக அறிந்தவர் என்றாலும் தனக்கென்று எதுவும் சேர்த்துக் கொள்ளாமல் நாடோடி மாதிரி வாழ்ந்து வந்தார். இவரின் உறவினர்கள் புதுடெல்லியில் பணியாற்றி வாழ்ந்து வந்தார்கள். இவர்களில் ஒருவர் தந்தி வாத்ய விற்பன்னர். பொதுத்துறை ஒன்றில் பணியாற்றி வந்தார். அவருடன் தொடர்பினைப் புதுப்பித்துக் கொண்டோம். அப்போது பத்திரிக்கையாளர் காலமாகி சில வருடங்கள் ஆகியிருந்தது. அவர் ஆதித்யாவிற்கு வகுப்புகள் எடுப்பது என்று ஏற்பாடு செய்து கொண்டோம். ஆதித்யா அவரிடம் ‘ஹவாயன் கிடார்’ வகுப்புகளுக்குச் சென்று வர ஆரம்பித்தான். அவர் தன் தந்தி வாத்யத்தில் வாசிப்பார். ஆதித்யா தன் கிடாரில் வாசிப்பான் என்று போய்க் கொண்டிருந்தன வகுப்புகள்.
ஒரு ஆசிரியரை விட்டு விட்டு இன்னொரு ஆசிரியரிடம் செல்லும் போது புது ஆசிரியர் ‘லம்போதர லகுமிகரா’ என்று ஆரம்பிப்பார். பழைய ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததெல்லாம் சரியாக வராது புது ஆசிரியருக்கு. ‘பாடாந்தரமே வேற; எல்லாத்தையும் மாத்தணும்’ என்று ஆரம்பிப்பார். இதற்காக பல இசை ஆசிரியர்கள் வெளியிட்டுப் பிரபலமாக விளங்கி வரும் புத்தகங்களிலும் இவர்கள் பழுது சொல்லுவார்கள். வேத அத்யயனம் போன்று பன்னெடுங்காலமாக வாய் மொழியாகவே இசையும் கற்பிக்கப் பட்டு வருவதால் பாட பேதங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தற்போது எல்லாமே அச்சில் வந்து விட்டதால் இவற்றுள் ஒரு பொதுப்படையான பாடாந்திரத்துக்கு எல்லோரும் கூடி வர வேண்டாமா? இது நிற்க.
வர்ணங்களிலிருந்து ஆரம்பித்தார் புது குரு. ஆதித்யா அவர் தந்தி வாத்யக் கருவி என்பதால் ‘ஹவாயன் கிடார்’ அவர் முன்னிலையில் வாசிப்பது என்று ஆரம்பித்தான். அவருக்கு நீண்ட நாட்களாக இசைத் துறையில் இருந்ததால் பெரிய இசை வாணரைத் தெரிந்திருந்தது. நாங்கள் இருந்த குடியிருப்புக்குப் பக்கத்தில் சைக்கிள் ரிக்ஷா தூரத்தில் அவர்கள் குடியிருப்பு இருந்ததால் என் மனைவி வழக்கம் போல் கூட்டிச் சென்று வருவது என்று ஆரம்பித்தாள்.
புது குருவிற்கு ஆதித்யாவைத் தவிர வேறோர் சிஷ்யனும் இருந்தான். அந்தப் பையன் ஆதித்யாவைக் காட்டிலும் இன்னும் சற்று முதிர்ந்தவன் வயதில். திருமணம் ஆகியிருந்தது. வேலை பார்த்து வந்தான். டெல்லியில் உள்ள ஒரு நாட்டிய மணியின் பிள்ளையாம். அதனால் புது குரு மிகவும் ஜாக்கிரதையாக அந்தப் பையனுக்கு வகுப்பு எடுத்து வந்தார். அந்தப் பையனிடம் என்ன சொல்லி வைத்திருந்தாரோ புது குரு தெரியவில்லை. எங்களிடம் பேசுவதற்குப் பெரிதாக அவன் முனைப்புக் கட்டவில்லை. அல்லது சுபாவமே அது போலவோ என்னவோ!
ஆதித்யா வந்தவுடன் ‘வாம்மா கண்ணா! ஆபோகி வர்ணத்தை வாசிச்சுரு,’ என்பார் புது குரு. ஆதித்யாவும் மிகுந்த கீழ்ப்படிதலுடன் வாசிப்பான். இது போல் வகுப்புகளில் வர்ணத்தைத் தொடர்ந்து வர்ணம். ஆபோகியை விட்டால் காம்போதி. காம்போதியை விட்டால் கல்யாணி. கல்யாணியை விட்டால் பேகடா. இப்படி எத்தனை நாள் நடந்தது தெரியுமா? இரண்டு வருடங்கள்! யாராகிலும் இதை நம்ப முடியுமா? இந்த இரண்டு வருடங்களில் ‘டொய்ங் டொய்ங்’ என்று வாசித்துக் கொண்டிருந்த அந்த இன்னொரு மாணவன் நன்றாகவே இனிமையாக வாசிக்க ஆரம்பித்து விட்டான். எங்கு போனாலும் இதே மாதிரிப் படுத்துகிறார்களே இதை எந்த தெய்வத்திடம் முறையிடுவது?
நாளாக நாளாக இந்தப் புது குரு நாங்கள் அங்கு உட்காரக் கூடாது என்று ஆரம்பித்தார். எங்களிடம் ஆதித்யாவின் திறமைகள் ஒன்றைப் பற்றியும் பாராட்டு விதமாகப் பேசாதவர் நாங்கள் இல்லாத போது வாய்ப் பாட்டாகப் பாடச் சொல்லி விஷயத்தை வாங்க முயல்வது புரிந்தது. இத்தனைக்கும் பெரிய இசைவாணரிடம் நாங்கள் பட்ட பாடுகளை அவரிடம் சொல்லித் தான் வகுப்பில் ஆதித்யாவைச் சேர்ந்திருந்தோம். பொதுவாக எல்லோருக்குமே நாங்கள் ஆதித்யாவிடம் கண்டிப்பாக நடந்து கொள்ளவில்லை அவன் ஆகாத்தியங்களை அனுமதிக்கிறோம் என்கிற எண்ணம். இது உலக இயற்கை. தன் குழந்தைகள் அதிகப் பிரசங்கித்தனமாய்ப் பேசினால் அது புத்தி சாதுர்யத்தின் வெளிப்பாடு; அதுவே இன்னொருவர் குழந்தை செய்தால் அது அழிச்சாட்டியம்; பேயறையாக அறைந்து அடக்க வேண்டும் என்று தான் உலகம் கருதுகிறது. குறிப்பாக ஆதித்யா விஷயத்தில் நாங்கள் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லோரிடமும் மிகவும் வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருந்ததால் அது கிட்டத்தட்ட ஒரு சமூகப் பிரச்னை ஆகிக் கொண்டிருந்ததை எங்களால் உணர முடிந்தது.
புது குரு பெரிய இசைவாணரிடம் பழைய தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டு ஆதித்யா குறித்துப் பேசியிருக்கிறார் என்கிற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. இவரிடமும் ஆதித்யா இயற்றிய இயற்றிக் கொண்டிருந்த அனைத்துப் பாடல்களின் பிரதிகளைக் கொடுத்து வைத்தோம். ஒரு புண்ணியமும் இல்லை. அவர் என்ன எழுதியிருக்கிறான் என்று நான்கு வரி கூடப் படித்துப் பார்க்கவில்லை. தன் பெருமை! தன் ஜம்பம்! வேறொன்றும் பேசக் கூடாது. மூச்!
இந்த புது குருவால் ஒரு குறிப்பிட்ட நன்மை விளைந்தது. மத்திய அரசின் கலாச்சாரத் துறைக்கான உதவித் தொகைக்கு ஆதித்யாவை விண்ணப்பிக்க வற்புறுத்தினார். அவரின் வழிகாட்டுதலிலும் பரிந்துரையின் பேரிலும் ஆதித்யாவிற்கு அந்த உதவித் தொகை இரண்டு வருடம் கிடைத்தது. அந்த பணம் புது குருவிற்கு ஃபீஸ் கொடுக்க உதவியாக இருந்தது. அந்த இரண்டு வருட முடிவில் ஆதித்யாவை வாத்யத்தை வாசிக்க அழைத்திருந்தது அந்த மத்திய அரசு கலாச்சாரத் துறை. அதன் பிரகாரம் ‘கன்னாட் ப்ளேஸு’க்கு அருகில் இருந்த பெரிய மைதானத்தில் ஆதித்யாவின் அரை மணி நேரக் கச்சேரி நடைபெற்றது.
இத்துடன் ஆதித்யாவின் வாய்ப் பாட்டுக் கச்சேரி ஒன்றையும் ஏற்பாடு செய்தேன். மயூர் விகார் விநாயகர் ஆலயத்தில் இடம் கொடுத்து உதவினார்கள். கச்சேரி அருமையாக அமைந்தது. அது குறித்து ஒரு மதிப்புரை வெளியாகப் புது குரு ஏற்பாடு செய்தார். இந்தப் புது குருவின் புண்ணியத்தில் இந்த மதிப்புரையில் முதன் முதலாக ‘ஆட்டிஸம்’ என்கிற வார்த்தை இடம் பெற்றது. எல்லோரும் நாங்கள் இல்லாத போதும் எங்களின் பின்னாலும் பேசிக் கொண்டிருந்த வார்த்தையை பொது வெளியில் முரசறைந்த பெருமை இந்தப் புது குருவையே சாரும்.
புது டெல்லியில் அவ்வப்போது வாய்ப்பாட்டுக் கச்சேரிக்கும் வாய்ப்பாட்டு வகுப்புகளுக்கும் அவ்வப்போது ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். அந்த அநுபவங்கள் வழக்கமானவை என்றாலும் ஸ்வாரஸ்யமானவை.
அது…………
அத்தியாயம் 29
புது டெல்லி மிகப் பெரிய ஊர். ஷாங்காய்க்குப் பின் மிகப் பெரிய ஊர் இது தான் என்கிறார்கள். நகர் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்று நான்காகப் பிரிந்திருக்கிறது. மத்திய டெல்லி வேறு தனி. தமிழர்கள் என்றால் முக்கால் பேர் அரசு அலுவலகங்களிலும் தனியார் துறைகளிலும் வேலை பார்ப்பவர்கள் தாம். கால்வாசிப் பேர் பஞ்சம் பிழைக்க வந்து இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டவர்கள். அந்தந்த இடங்களில் தென்னகக் கோயில்கள் அமைந்திருக்கின்றன. எல்லாமே பிள்ளையார் கோயில்கள். ஒன்றிரண்டு இடங்களில் பெருமாள் கோயில்களும் உண்டு. மலை மந்திர் என்று பிரபலமாக வழங்குகிற ஸ்வாமி நாத ஸ்வாமி கோயிலும் சிறு குன்றில் ராமகிருஷ்ணபுரம் என்கிற பகுதியில் அமைந்திருக்கிறது. மூல விக்ரகம் அப்படியே அச்சு அசலாக ஸ்வாமி மலை மூலவரைப் போன்றே அமைந்திருக்கிறது.
ஒன்றிரண்டு சபாக்களும் உண்டு. தன்னார்வலர்களால் நடத்தப் படுவது. ஆங்காங்கே இருக்கும் தமிழர்கள் தான் இசை ரசிகர்கள். நீண்ட வருடங்களாக இசை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களும் கொஞ்ச பேர் உண்டு. டெல்லிப் பல்கலையில் கர்நாடக சங்கீதத்துக்குத் தனித் துறை இயங்கி வருகிறது. அவற்றில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும் உண்டு. இவையெல்லாம் இருந்தாலுமே கர்நாடக இசைக்கான பெரிய சந்தை இங்கு கிடையாது. மும்பையையும் புது டெல்லியையும் ஒப்பு நோக்கும் போது மும்பையில் கர்நாடக இசை நடவடிக்கைகள் சற்று அதிகம் தான். ஏனென்றால் அங்கு தமிழ் ஜனத் தொகையும்– குறிப்பாக தமிழ் பேசுகிற பாலக்காட்டுக் காரர்களின் எண்ணிக்கையும் சற்று அதிகம். ஆங்காங்கே தீவு தீவாக இருக்கும் சில இடங்களில் நாம் தமிழ் மணத்தை நுகர முடியும். புது டெல்லியில் இது கம்மி தான்.
என்றாலும் கர்நாடக சங்கீதத்தையும் போஷிப்பதற்கு அரசு எந்திரங்கள் உண்டு. யாராவது ஒரு அமைச்சர் அல்லது கலாச்சாரத் துறையின் செயலர் கர்நாடக சங்கீத ரசிகராக இருந்து விட்டால் அவரை வைத்து ஸ்பான்ஸர்களைப் பிடிப்பது எளிதாக இருந்தது. நான் இங்கு வந்த புதிதில் கிடார் வாசிப்பதற்கான ஆசிரியரைத் தேர்வு செய்த கையுடன் வாய்ப் பாட்டிற்கும் ஆசிரியரைத் தேட ஆரம்பித்தேன். அத்துடன் ஆதித்யா கச்சேரி செய்வதற்கான வாய்ப்புகளையும் தேட ஆரம்பித்தேன். என் பழைய வேலையில் இருந்த சக ஊழியர் ஒருவர் ஏற்கெனவே டெல்லியில் பணியாற்றியவர் என்பதால் அவர் தனக்குத் தெரிந்த ஒரு செல்வாக்கான நபரிடம் தொடர்பு கொள்ளச் சொல்லியிருந்தார். மொழியின் பெயரில் நடத்தப் படும் மன்றத்தின் செயலாளராக அந்தச் செல்வாக்கு மிக்கவர் பணியாற்றி வந்தார்.
அவருடன் தொடர்பு கொண்டு இரண்டு மூன்று முறை தொலைபேசியில் உரையாடினேன். அவரிடம் நான் உதவியை எதிர்பார்த்து நின்றிருந்தது அவருக்கு ஸ்வாரஸ்யப் படவில்லை. அவர் பணியாற்றி வரும் மன்றம் சகலரையும் உள்ளடக்கியது என்பதால் அவர்கள் பார்வையெல்லாம் எல்லோரையும் திருப்திப் படுத்துகிற வகையில் தான் அமைந்திருந்தது. வருடா வருடம் தேர்தல் நடக்கிற ஜனநாயக அமைப்பு வேறு. பட்டிமன்றம் வைப்பார்கள். சினிமா திரையிடுவார்கள். சென்னையிலிருந்து குழுக்களை வரவழைத்து நாடகம் நடத்துவார்கள். இப்படிப் போய்க் கொண்டிருந்த இடத்தில் கர்நாடக சங்கீதத்தில் போய் ஊறி விழ அவர்கள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.
இவருக்கு பலமுறை தொலைபேசியில் அழைத்த நிலையில் இவரை நேரில் மன்றத்திலேயே சந்திக்கும் வாய்ப்பு வந்தது. விடுவானேன் என்று அங்கு அவரைச் சந்தித்து மீண்டும் ஆதித்யாவைப் பற்றிப் பிரஸ்தாபித்து அவனுக்கு ஏதாவது பாடுவதற்கு வாய்ப்பு வழங்க வற்புறுத்தினேன். ‘இதேதடா பெரிய ரோதனையாகப் போய்விட்டது?’ என்று அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும். இதை உடனே முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் அவருக்கு. தானும் பெரிதாகப் பட்டுக் கொள்ளாமல் அங்கிருந்த வயதான ஒரு வரை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். அந்த முதியவர் தன் பொறுப்பில் கர்நாடக சங்கீதத்துக்கான ஒரு அமைப்பை நடத்தி வந்தார்.
முதியவருக்கு அப்போதே எண்பது வயதிருக்கும் என்று நினைக்கிறேன். பார்ப்பதற்கு ஒல்லியாகச் சருகு போல் இருந்தார். நான்கு முழ வேட்டி வெள்ளைச் சட்டையுடன் சாதாரணமாக இருந்தார். வேட்டி சட்டையில் நீர்க் காவி. நல்ல மலர்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார். ஆதித்யாவைப் பற்றி மிகவும் ஆர்வமாக விசாரித்தார். பின்னர் அவர்களின் அமைப்பு ஒரு பாட்டுப் போட்டி நடத்துவதாகவும் அதில் ஆதித்யாவைக் கலந்து கொள்ளச் செய்யுமாறும் அறிவுறுத்தினார். அதன் படி அந்தப் போட்டியில் ஆதித்யா பங்கெடுத்தான்.
நான் தங்கியிருந்த இடத்திலிருந்து 20 கி.மீ தள்ளியிருந்த ஒரு இடத்தில் ஒதுக்குப்புறமாக அமைந்திருந்தது அந்த விநாயகர் கோயில். அங்கு தான் அந்தப் போட்டி நடைபெற்றது. மொத்தம் நாற்பது ஐம்பது பேர் இருப்பார்கள். குழந்தைகளையும் சேர்த்துத் தான். அங்கு நீதிபதிகளும் இருந்தார்கள். ஆதித்யா முறை வந்தவுடன் ‘ராம கதா சுதா‘ என்கிற மத்யமாவதி ராகத்தில் அமைந்த பாடலைப் பாடினான். நீதிபதி ஒரு இடத்தில் கற்பனை ஸ்வரம் பாடச் சொன்னார். ஆதித்யா வழக்கம் போல் வேறோர் இடத்தில் தான் ஸ்வரம் எடுத்துப் பாடினான். அவன் பாடும்போது மயான அமைதி நிலவியது. பாடி முடித்தவுடன் கூரை பிய்த்துக் கொண்டு போகுமளவிற்கு எல்லோரும் கைத் தட்டினார்கள். அவனுக்கு அந்தப் போட்டியின் முதல் பரிசை– தம்புராவை– அறிவித்து விட்டார்கள். அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளரான முதியவர் பின்னர் என் மனைவியைக் கூப்பிட்டு ஆதித்யாவைப் பற்றிப் பேசச் சொன்னார். அவரும் கூடியிருந்தவர்களிடம் ஆதித்யா பற்றி விளக்கினார். இது இத்துடன் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்த அமைப்பின் விழா ஒன்றில் பல பெரிய மனிதர்களை அழைத்து பேசச் சொல்லி அவர்கள் முன்னிலையில் பரிசுகள் கொடுப்பதாக ஏற்பாடு. அதற்கு ஒரு நாள் குறித்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது முதியவர் ஒரு நாள் என்னைத் தொலைபேசியில் அழைத்தார். தன்னுடைய வீட்டில் பரிசு தயாராக இருப்பதாகவும் வந்தால் வாங்கிக் கொண்டு போய் விடலாம் என்றும் சொன்னார். ‘சரி, விழா நிகழ்ச்சி நடக்கவில்லை; ரத்தாகி விட்ட்து போலிருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டு நாங்கள் நால்வரும் கிளம்பிப் போனோம். ‘வேகு வேகு’ வென்று நல்ல ‘சுள்’ளென்ற வெய்யிலில் அங்கே விசாரித்து இங்கே விசாரித்துத் தெரிந்து கொண்டு அவர் வீட்டில் போய் நின்றோம். அவர் எங்களைப் பார்த்தவுடன் தன் பிள்ளையை விட்டுத் தம்புராவை எடுத்து வரச் சொல்லி எங்களிடம் பெருந்தன்மையான புன்னகையுடன் ‘எடுத்துண்டு போங்கோ. நல்ல ஆகி வந்த தம்புரா’ என்று நீட்டினார். நாங்களும் வாங்கிக் கொண்டு கிளம்பினோம். அது ஒரு பழைய தம்புரா! அதன் மீது பழைய அங்கவஸ்திரம் ஒன்று போர்த்தி இருந்தது! காயலாங் கடைக்காரர் கூட வாங்க யோசிப்பார். தந்திகள் ஒன்றிரண்டு வேறு இல்லை. உபயோகிப்பதற்காக மராமத்து செய்ய வேண்டுமென்றால் கூட இரண்டு மூவாயிரம் ரூபாய் செலவழித்தால் தான் முடியும். போகும் வழியிலெல்லாம் என் மனைவி பொருமிக் கொண்டே வந்தாள்.
என் மனைவி அத்துடன் இதை விடுவதாக இல்லை. அவளுக்கு பொங்கிப் பொங்கி வந்தது. அப்போது ஆதித்யாவிற்கு வாய்ப் பாட்டிற்காக ஒரு வித்வாம்ஸினியிடம் ஏற்பாடு செய்திருந்தோம். இசை ஆசிரியை ஓய்வு பெறும் தருவாயில் இருந்தார். ஏற்கெனவே தந்தி வாத்யக்கார தூரத்து உறவினரிடம் கிடார் வகுப்புகளுக்காகச் சென்று கொண்டிருந்தான் ஆதித்யா. அது போதாது என்று வாய்ப்பாட்டிற்கு இந்தப் பெண்மணியிடம் போய்க் கொண்டிருந்தான். நல்ல தாட்டியான உடல்வாகு. பாடிப் பாடிப் பண்பட்ட காத்ரமான குரல். பதவியில் இருந்ததாலும் வித்வத்தாலும் இயல்பில் வந்த அதிகார தோரணை. அவரே சங்கீதத்தில் இரண்டாம் மூன்றாம் பரம்பரையைச் சேர்ந்தவர். அவரின் உறவினர் அந்தக் காலத்தில் மிகவும் தேர்ந்தெடுத்த வித்வானாக இருந்திருக்கிறார். அவருடைய ஸ்வரக் கோர்வைகளையும் பாடல்களையும் சங்கீதத்தில் பெரிய பிதாமகராகக் கருதப்பட்ட ஒரு வித்வான் அப்படியே கவர்ந்து கொண்டு இவரைப் போட்டு அமுக்கி விட்டார் என்பார் அந்த வித்வாம்ஸினி. என் மனைவி வீட்டிற்கு வந்தவுடன் எங்கள் உறவுக்காரரான தந்தி வாத்யம் வாசிப்பவரிடமும் மேற்குறித்த இசை அரசியிடமும் ஃபோனில் பொருமித் தள்ளி விட்டாள். சபையில் வைத்து முதல் பரிசு புதுத் தம்புராவைக் கொடுப்பதாகத் தான் வழக்கம். இவர் என்னவோ பழைய தம்புராவைத் தலையில் கட்டி விட்டார் என்று புலம்பித் தள்ளி விட்டாள். நானும் என் பங்கிற்கு வழக்கமாக மிருதங்கம் வாசிக்கிறவரிடம் ஃபோனில் ‘என்ன இந்த மாதிரிச் செய்து விட்டாரே? டெல்லியில் இது தான் வழக்கமா?’ என்று கேட்டேன். மிருதங்கக்காரருக்கு தர்ம சங்கடம். ஊர்க்காரரையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை. எங்களையும் சமாதானப்படுத்த முடியவில்லை.
நான்கு நாள் கழித்து முதியவர் எனக்குப் போன் செய்தார். “ஏதோ புத்தி பிசகி நடந்துனுட்டேன். மன்னிச்சிடுங்கோ. ஃபங்ஷன் அன்னிக்குப் பழைய தம்புராவை எடுத்துண்டு வந்து கொடுத்திட்டுப் புதுத் தம்புராவை வாங்கிண்டு போயிடுங்கோ” என்றார். அதன் பிரகாரமே பழைய தம்புராவை கொடுத்து விட்டுக் காத்திருந்தோம் நிகழ்ச்சி நடந்த இடத்தில். அவர் எங்களைக் கூட்டிக் கொண்டு போய்ப் புதுத் தம்புராவைக் காண்பித்தார். நிகழ்ச்சியில் பிரமுகர் கையால் ஆதித்யாவிற்கு வாத்யத்தை வாங்கிக் கொடுத்து மிகவும் மரியாதையாக அனுப்பி வைத்தார். வாய்ப் பாட்டு ஆசிரியை எங்களிடம் “வாயுள்ள பிள்ளை பிழைக்கும்” என்றார் பாராட்டு முகமாக.
இசை ஆசிரியை அருமையாகப் பாடுவார். ஆதித்யாவின் திறமையைக் கண்ணுற்று மாய்ந்து போனார். இது போன்ற ஒரு திறமையை வெளிச்சத்துக்குக் கொண்டு வராத இசைவாணர்களைக் கரித்துக் கொண்டிருந்தார். அந்த நாளைய சங்கீதப் பிதாமகர் எப்படித் தன் உறவினரான வித்வான் வெளிச்சத்துக்கு வராமல் அமுக்கினாரோ அது போன்றே ஆதித்யாவையும் அமுக்கி விட்டார்கள் என்று மாய்ந்து போனார். அவரிடம் கொஞ்ச நாட்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. என் மனைவி வழக்கம் போல் ரிக்ஷாவை அமர்த்திக் கொண்டு வகுப்புகளுக்குக் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தாள்.
அப்படி ஓடிக் கொண்டிருந்தால் எப்படி? ஆசிரியைக்கு ஆதித்யாவைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டு முன்னுக்குக் கொண்டு வரவேண்டுமெறிருந்தது. என் மனைவி இவரிடமோ உறவுக்கார தந்தி வாத்தியக் கலைஞரிடமோ பிடிகொடுத்துப் பேசத் தயக்கமிருந்தது. பெரிய இசைவாணரின் செல்வாக்கையும் பெயரையும் நேரில் கண்டிருக்கிறோம். நாளை சென்னை போகும் போது எப்படியும் அவர் மனம் மாறி ஆதித்யாவைக் கொஞ்சம் முன்னுக்குக் கொண்டுவர முயலலாம். தவிரவும் டெல்லியில் இருப்பவர்களின் செல்வாக்கு சென்னையில் எப்படி எடுபடப் போகிறது என்கிற சந்தேகமும் இருந்தது.
இதனால் பெரிய இசைவாணருக்கு மாதம் ரூ 4000/= வீதம் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தோம். அவருக்கு நாங்கள் கொடுத்துக் கொண்டிருந்தது குறைவோ என்னவோ என்று என் மனைவிக்குச் சந்தேகம். அதனால் வகுப்பும் இல்லாமல் ஒன்றும் இல்லாமல் சும்மா அனாமத்தாக அவருடைய வங்கிக் கணக்கிற்கு இந்தப் பணம் போய்க் கொண்டிருந்தது. மனிதர் கொஞ்சம் கூட அசையவில்லை. ‘ஸ்கைப்‘பிலாவது வகுப்பு எடுக்கலாம் என்று கூட முனையவில்லை. எந்தவிதக் குற்றவுணர்வுமில்லாமல் பணத்தை வாங்கி வாயில் போட்டுக் கொண்டிருந்தார் மனிதர்.
டெல்லியின் இசையாசிரியர்களுக்கு ஆதித்யாவின் முழு கட்டுப்பாடு வேண்டியிருந்தது. அதை நாங்கள் கொடுக்கத் தயாராக இல்லை என்றவுடன் அவர்கள் ஆதித்யாவிற்குப் பெரிதும் முன் முயற்சி எடுக்கத் தயங்கினார்கள்.
வாய்ப் பாட்டு ஆசிரியையின் நடவடிக்கைகள் கொஞ்சம் விநோதம் தான். திடீரென்று ஒரு நாள் ‘ஆதித்யாவின் ஜாதகத்தைக் கொண்டு வந்து கொடு’ என்றார் எதற்கு என்று புரியவில்லை. கொடுத்த பிறகு பலமுறை கேட்டுப் பார்த்தும் எதற்காக ஜாதகத்தைக் கேட்டார்; யாராவது ஜோசியரிடம் காண்பித்தாரா என்று சொல்லாமல் கழுத்தறுத்தார். இது போதாதென்று ஒரு நாள் அவர் மும்முரமாக பூர்வி கல்யாணி ஆலாபனை செய்து கொண்டிருந்தார். கொஞ்சம் ஏதோ மாறிவிட்டார் போலிருக்கிறது. ஆதித்யா திடீரென்று “யூ ஆர் சிங்கிங் கமனாஸ்ரமம்” என்றான். அதற்குப் பின் வகுப்புகளுக்குக் கூட்டிச் சென்றால் அவர் பாட மாட்டார். ஆதித்யாவை மட்டும் பாடச் சொல்லிவிட்டு அனுப்பி விடுவார்.
இரண்டு வருடங்கள் இப்படியே ஓடி விட்டன. இரண்டாம் வருட முடிவில் என் பெண் சென்னைக் கல்லூரியின் நுழைவுத்தேர்வில் தேர்வு பெற்றுப் பொறியியல் படிப்பிற்கு ஆயத்தமானாள். குடும்பத்தை மீண்டும் சென்னைக்குப் பெயர்க்க வேண்டிய நிர்பந்தம்.
அது…………….