சமீபத்தில் சென்னையில் ஒரு கிளப்பில் வேஷ்டி கட்டிக்கொண்டுபோன ஒரு நீதிபதிக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்தன . தொலைக்காட்சி சேனல்களில் 'பாண்ட்' அணிந்த பல அறிஞர்கள் இந்தத் தடை தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானது என்று வன்மையாகக் கண்டித்தனர். இதன் பின் தமிழக அரசும் மேற்கூறிய கிளப்பிற்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நமக்கு பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1. தமிழ்ப் பண்பாடு வேஷ்டி கட்டிக்கொள்வதில் அடங்கியிருக்கிறதா?
2. தமிழ்ப் பண்பாடு என்றால் என்ன?
வேஷ்டி கட்டிக்கொள்வதை இந்தியப் பண்பாடு என்று வேண்டுமானால் சொல்லமுடியுமே ஒழிய தனிப்பட்ட தமிழ்ப் பண்பாடு என்று கூறுவது கடினம் என்றுதான் தோன்றுகிறது. நாம் பார்த்த வரை இந்தியாவின் சகல மாநிலத்தோரும் வேஷ்டி கட்டிக்கொள்ளும் பழக்கம் உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். தட்டுச்சுற்று வேஷ்டியை வேண்டுமானால் நம் தனிப்பட்ட பண்பாடாகக் கருத முடியும். அதுவும் நம் தனித்த சொத்து அல்ல. கேரளாக்காரர்கள் நம்மை விடப் பிடிவாதமாக வேஷ்டி கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.
தவிரவும் தமிழ்நாட்டில் வேஷ்டி என்பது அதிகாரத்துக்கும் அரசியல்வாதிக்கும் குறியீடாகப் போய் நீண்ட நாட்கள் ஆகி விட்டன. முன்னெல்லாம் வேஷ்டி பாமரனின் உடை. அதுவே இப்போது ஆடம்பரத்தின் அடையாளம். தற்போது தூய வெண்மையில் பருத்தியில் யாராவது வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தால் அது ஒரு அந்தஸ்தின் குறியீடாகப் பார்க்கப்படுகிறதே ஒழிய தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாகப் பார்க்கப்படும் சந்தர்ப்பங்கள் குறைவு என்றுதான் தோன்றுகிறது.
இதைத் தவிரவும் வேஷ்டி அப்படி என்ன சௌகர்யமான உடையா என்ன? அடிக்கடி அவிழ்த்துக் கட்டிக்கொள்ள வேண்டும்; பாக்கட் கிடையாது; காற்று அடித்தல் விலகுமோ என்று பயந்து சாக வேண்டும். கட்டிக்கொண்டு தூங்கினால் அவிழ்ந்து விடும் அபாயம் உண்டு.
தவிர தமிழ்ப் பண்பாட்டைக் கட்டமைக்கிறவர்கள் நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்வதையும் ஏனைய தமிழ் நாட்டுக்கே உரித்தான சடங்குகளையும் தமிழ்ப் பண்பாடாகக் கருதுவதில்லை. இதில் தமிழ் நாட்டுக்கு மட்டும் உரித்தான, கோள்களின் பயணத்தை வைத்துக் கணக்கிடப்படும் விஞ்ஞானப் பூர்வமான தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்த சர்ச்சையை நினைவு கொள்ளலாம். காழ்ப்புணர்ச்சியைத் தவிர இதற்கு வேறு என்ன காரணம் கற்பிக்க முடியும்?
கேரளாவிலும் கர்நாடகாவிலும் தண்ணிக்குச் சண்டை போடுகிறார்கள். அவர்கள் மாநிலத்து மணலைக் கட்டிக் காப்பாற்றுகிறார்கள். நாம் அவர்களுக்கு மணலையும் மாடுகளையும், இலவச கணினிகளையும் மளிகையையும் பாதி விலைக்கு விற்றுவிட்டு வேஷ்டி விவாதங்களில் ஆழ்ந்திருக்கிறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக