ஞாயிறு, 25 டிசம்பர், 2016

சமீபத்திய நான்கு நிகழ்வுகள்-சில பதிவுகள் IV


வர்தா புயல் தந்த செல்வம்  பன்னீர் செல்வம்!

பெரிய ஆல மரத்தின் கீழ் செடி கொடிகள் வளராது என்பார்கள். பெரிய ஆலமரம் வேரற்றுச் சாயும் போது அடியில் சில செடிகள் துளிர் விடும் போலும்.
சென்ற வருடப் பெரு மழையின் போது விளைந்த கோர தாண்டவத்தை தொலைக் காட்சி  ஊடகங்களுடன் சேர்ந்து அரசும் வேடிக்கை பார்த்தது. அதன் வீச்சை எதிர் கொள்ள முடியாது அரசு எந்திரம் ஸ்தம்பித்தது. கட்சிக்காரர்கள் விளம்பரத்திலும் வாக்கு வாதங்களிலும் காட்டிய முனைப்பை நிவாரணப் பணிகளில் காட்டவில்லை. இரண்டு காரணங்கள் இருந்திருக்க முடியும். அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வேலையில் சுதந்திரம் கொடுக்கப் படவில்லை என்று நினைக்கும் அளவிற்கு இருந்த மேலிடக்  கட்டுப்பாடுகள். என்ன செயலின்மை இருந்தாலும் அம்மாவின் செல்வாக்கு அதனை ஈடு செய்து விடும் என்கிற மெத்தனம்.
இதை  மீறி முதன் முதலாகத் தனக்கு கிடைத்த வாய்ப்பை  இந்த முறை பன்னீர் நன்கு பயன் படுத்திக்க கொண்டார் என்றே சொல்லவேண்டும். கச்சிதமான முன்னேற்பாடுகளுடன் ஆரவாரமில்லாமல் புயலைத் தமிழகம் எதிர் கொண்டதற்கு திரு.ஓ பன்னீர் செல்வம் முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும்.
அனாவசிய தோரணை இல்லை; சத்தம் இல்லை;போகின்ற இடங்களில் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொண்டு சாமானியனின் தோளில் கை போட்டுக் குறைகளை செவி மடுத்த சினேக பாவம்.
இவர்  கடந்த காலத்தில் அம்மையாரின் அடி பணிந்திருக்கலாம். சுய சிந்தனை இல்லாதவர் என்கிற தோற்றத்தைக்  கொடுத்திருக்கலாம். ஒரு நெருக்கடி என்று வரும் போது சுதந்திரமாகச் செயல் பட அனுமதிக்கப் பட்டால் தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் பன்னீர்.
இந்த எளிமையையும் காரியமாற்றும் திறமையையும் மேலும் வளர்த்துக் கொண்டு நேர்மையையும் கடைப் பிடித்தார் என்றால் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு நாம் வேறு முதல்வரைத் தேட வேண்டிய அவசியம் இல்லை.

புதன், 21 டிசம்பர், 2016

சமீபத்திய நான்கு நிகழ்வுகள் -சில பதிவுகள் III ஆ


இந்தியாவின் தனி நபர் எதிர்க் கட்சியின் மறைவு 

இதன் பின்னர் சோவின் அம்மையார் எதிர்ப்பு அவர் முதலாம் ஆட்சி முடிவுக்கு வரும் வரை நீடித்தது. நரசிம்ம ராவ் அதிமுகவுடன் உறவை முறிக்க மறுத்த கையோடு தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானதும் அதன் திமுக தொகுதி உடன்பாட்டுக்குச் சோ பெரும் பங்காற்றினார். அத்துடன் அவரின் ஜெயலலிதா எதிர்ப்பு முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் வந்த காலங்களில் அவரின் மறைவு வரைக்கும்  அவர் ஏதோ காரணங்களால் அம்மையாரின் பெரிய ஆதரவாளராக மாறிப் போனார். கடுமையாகவோ கிண்டலாகவோ அம்மையாரை அவர் விமர்சிக்கத் தயங்கியது ஏன் என்பது இன்று வரை துலங்காத மர்மமே.
சோ முக்கியமான தருணங்களில் தீர்மானமான நிலைப் பாட்டை  எடுத்தார். அவையாவன:
1. துக்ளக் திரைப்படம் வெளியாவதில் கடும் நெருக்கடிகளை சந்தித்த போது அதைத் துணிவுடன் எதிர்த்தார்.
2. நெருக்கடி நிலையைத் துணிவுடன் எதிர்த்தார்.
3. திமுகவின் ஒழுங்கீனங்களைச் சாடியவாறே இருந்தார். காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் அதிமுக கிட்டத்தட்ட திமுகவின் வழிகளையே கொண்டிருந்த நிலையில் விமர்சிக்கும் தேவையை அவர் எதிர்க்கட்சி நிலையில் நின்று பூர்த்தி செய்தார். கலைஞரை வாழ் நாள் முழுதும் கிண்டல் செயது கொண்டே இருந்தார். ஆனால் இருவரும் அந்தரங்க நட்பைக் கடைசிவரை பேணினர். இருவருள் யார் பெரியவர்?
4. சட்ட மன்றத்தில் ஆனந்த விகடன் ஆசிரியர் தண்டிக்கப் பட்ட போது அதைத் துணிவுடன் எதிர்த்தார். 
5. ஆந்திராவில் என்டியார் அரசை கவிழ்த்து பாஸ்கரராவ் முதல்வரான சூழ்நிலையில் அதை எதிர்க்க அனைத்திந்திய பத்திரிக்கையாளர்களை ஒன்றிணைப்பதில் மிகுந்த ஊக்கம் காட்டினார்.
6. விடுதலைப் புலிகளை ஆரம்பத்திலேயே எதிர்த்தார். அவரை ராஜீவ் காந்தியின் படு கொலைக்குப் பின்னர் தான் தமிழகம் உணர்ந்து கொண்டது.
7. ராஜ்ய சபா நிதியை இப்படிக்கூடப் பயன் படுத்த முடியும் என்பதை பள்ளிக்கூடக்  கட்டிடங்களைப்  பல இடங்களில் கட்டுவதற்கு ஒதுக்கியதன் மூலம் நிரூபித்தார்.
8. ஒரு தனியார் வங்கியின் உரிமை யாருடயது என்கிற சிக்கல் எழுந்த போது அதை சம்பந்தப் பட்டவர்களு டன் பேசிக் சுமுகமாக முடித்து வைத்தார் என்பார்கள்.
9. திரை மறைவில் நிறைய உதவி செய்திருக்கிறார்கள் என்கிறார்கள். நடிகர் நெப்போலியன் அவருக்கு கொடுத்த இரங்கலைப் பார்த்த போது ஆச்சர்யமாக இருந்தது.
10. மகாபாரதத்தின் ஒரிஜினலைப் படித்து அதை விரிவாக அலசினார். இதன் தொடர்ச்சியாக இந்து மகா சமுத்திரம் என்று இந்து மதத்தையும் பற்றி எழுதினார். இரன்டுமே நம் பொக்கிஷங்களை அறிந்து கொள்ளச் சரியான முன்னுரையாக அமையும். நாத்திக வாதம் உரத்த குரலில் தமிழ் நாட்டில் உச்சரிக்க படும் சென்ற 50 வருடங்களில் ஏற்படுத்திய கோளாறுகளைக் கணக்கில் கொண்டால் இதன் முக்கியத்துவம் விளங்கும்.

(தொடரும்)

திங்கள், 19 டிசம்பர், 2016

சமீபத்திய நான்கு நிகழ்வுகள் -சில பதிவுகள் III அ

இந்தியாவின் தனி நபர் எதிர்க் கட்சியின் மறைவு 

துக்ளக் ஆசிரியர் சோ மறைந்தார். அம்மையார் இறந்ததனால் சோவின் மறைவு பெருமளவில் கவனிப்பு பெறாமல் பொய் விட்டது. ஊடகங்கள் பெருமளவில் அதை ஈடு செய்தாலும் வெகு ஜனத் தலைவராக அவர் இல்லாததனால் பெரிதாகப் பொருட்படுத்தப் படவில்லை.
இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போல் புனைந்த கார்ட்டூனை அட்டைப் படத்தில் தாங்கி  வெளியான அவரின் முதல் இதழிலிருந்து அவரின் வாசகனான நான் பல்வேறு சமயங்களில் அரசியல் கலாசார சமூக பொருளாதாரப் போக்குகளையும் நோக்குகளையும் தெளிவு படுத்திக்கொள்ள அவரைச் சார்ந்திருந்தேன் என்பதை இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். குறிப்பாகக் கலைஞரின் அரசியலுக்கு எப்போதுமே அவர் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்தார். அதில் பெருமளவு நியாயமும் இருந்தது. இந்திரா காந்தியை மோசமாக எதிர்த்தார். நெருக்கடி நிலையின் போது மிகவும் சாதுர்யமாகவும் துணிச்சலுடனும் பத்திரிக்கையை நடத்தினார். (இந்திரா காந்தி யார்? என்கிற கேள்விக்கு சஞ்சய் காந்தியின் தாய் என்று அவர் அளித்த பதில் தணிக்கை செய்யப் பட்டது!)
ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்களை (ஜெயகாந்தன்) முதலில் நான் துக்ளக்கில் தான் படித்தேன்.மொரார்ஜி தேசாயின் மேன்மை, காமராஜரின் அப்பழுக்கற்ற நேர்மை, ராஜாஜியின் தொலை நோக்கு, 1967க்குப் பிறகு தமிழ் நாட்டில் ஆட்சி செய்தவர்களின், நேர்மையற்ற அரசியல்வாதிகளின்  ஒழுங்கீனங்கள்  எல்லாமே ஆரம்பத்தில் இவரால்தான் வெளிச்சத்துக்கு வந்தன. இவர் பத்திரிகை ஆரம்பித்த போது அண்ணா மறைந்து கலைஞர் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்  பெருமளவில் பரவலாகப் பட்டதாகக் கூறப் பட்ட  ஊழலாலும் அதிகார துஷ் பிரயோகத்தாலும் மக்கள் வெறுப்புற்றிருந்த சமயம் . இவர் துணிவுடன் எதிர்   வினையாற்றிய பதிவுகளின் பலன்கள் சற்று பின்னர் கட்சி ஆரம்பித்த எம்ஜியாருக்குப் போய்ச்சேர்ந்ததென்றால் அவரையும் சோ கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கினார். 
சினிமாவில் சற்று நலிவுற்று அம்மையார் ஏதோ ஒரு விரக்தியில் தனிமை பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவரைத் தன் பத்திரிகையில் கட்டுரை  எழுத வைத்ததன் மூலம் வெளிக் கொணர்ந்தார். ஆனால் அம்மையார் அதிமுகவில் கொள்கைப் பரப்புச் செயலர் ஆன போது 'இந்தக் காட்சி தமிழகத்தின் தாழ்வுக்குச் சாட்சி' என்று கடுமையாக விமர்சித்து எழுதினார். அவரின் ஒரு கார்ட்டூனால் அப்போதைய அமைச்சர் சோமசுந்தரம் கட்சியை விட்டு விலக நேர்ந்தது.
(தொடரும்)

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சமீபத்திய நிகழ்வுகள்-சில பதிவுகள் II

அம்மா!
ஜெயலலிதா மறைந்து விட்டார். நான் ஒன்றும் அவரது பெரிய விசிறி இல்லை ஆயினும் மிகவும் வருத்தமாக இருந்தது. அவருடைய துன்ப வாழ்க்கை முடிவுக்கு வந்தது. எல்லோரும் பேசிக்கொள்வது போல் பொது வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு மேலே வந்தாராயினும் அந்தரங்க வாழ்க்கையில் மிகவும் தனியாகவும் உண்மையான பாசத்துக்கு ஏங்கும் முரட்டுக் குழந்தையாகவுமே மரிக்கும் வரையிலும் விளங்கினார். கலைஞர், கண்ணதாசன் மறைந்த போது 'கை நீட்டுவோர் பக்கமெல்லாம் கரம் நீட்டித் தாவுகின்ற குழந்தை நீ ' என்று எழுதினார். இது அம்மையாருக்கும் பொருந்தும். அந்த பலவீனத்தை எல்லோரும் பயன் படுத்திக் கொண்டார்களே தவிர அவர் மீது உண்மையான அக்கறை யாராவது காட்டினார்களா சந்தேகம் தான். சற்று உற்று நோக்கினால் எம்ஜியாருக்கும் என்டியாருக்கும் இது தான் நடந்தது. அவர்கள் ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டார்கள்.
அம்மையார் முதலில் அன்னையின் வற்புறுத்தலுக்காகப் படிப்பைப் பாதியில் விட நேர்ந்தது. இதை அந்த நாளில் குமுதத்தில் எழுதிப் பாதியில் நிறுத்திய சுய சரிதையில் குறிப்பிடுகிறார். பின்னர் எம்ஜியாரின் ஆளுமையின் நிழலில் வாழ நேர்ந்தது. எம்ஜியார் மறைந்த போது அவர் அளித்த முதல் நாளிதழ் அறிக்கையில் இதை 'நான் விடுதலை பெற்று விட்டேன்' என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் எம்ஜியாரின் பூத உடல் வைக்கப் பட்டிருந்த வண்டியிலிருந்து தள்ளி விடப்பட்டதிலிருந்து ஆட்சி மன்றத்தில் அவமானப் பட்டதிலிருந்து குன்ஹா தீர்ப்பினால் சிறை சென்றது வரை பல ஏற்ற இறக்கங்களை பார்த்தார். எல்லாமே அவர் தன்னிச்சையாய் எடுத்த முடிவுகளின் விளைவுகள் தான் என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. விடுதலைப் புலிகளிலிருந்து கூடங்குளம் வரை நிலைப் பாடுகளை நிறைய மாற்றிக் கொண்டார். ஆடம்பரத் திருமணம். ஏகப் பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள்.சாராயக் கடைகளை மூடுவதில் அக்கறை காட்டவில்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிய பொருளாதாரத் திட்டங்களை கொணராது இலவசங்களில் தான் அக்கறை செலுத்தினார். ஆனாலும் மக்கள் அவரின் ஆளுமையால் கவரப்பட்டு மீண்டும் மீண்டும் வாக்களித்துக் காத்திருந்தார்கள். அவரும் கனிந்து கனிந்து மக்கள் முதல்வராக உருவெடுத்தார். காலம் காத்திருக்கவில்லை.
காவேரிப் பிரச்சினையில் அவருக்கு முந்தையவர்கள் கெஞ்சிக் கொண்டிருந்ததை மாற்றி மிகவும் போர்க் குணத்துடன் வாதிட்டுக் 'காவேரியில் தமிழர்களுக்கும் உரிமை உண்டு' என்று உச்ச நீதி மன்றம் சொல்ல வைத்ததை வேண்டுமானால் அவரின் சாதனை என்று சொல்ல முடியும்.
அவர் வாழ்நாள் பூராவும் ஏங்கிய பாசத்தையும் நிம்மதியையும் அவரின் முடிவாவது அவருக்கு வழங்கட்டும்

சனி, 17 டிசம்பர், 2016

சமீபத்திய நான்கு நிகழ்வுகள்-சில பதிவுகள் I

பண மதிப்பின்மை அறிவிப்பு வந்த போது பர்ஸைத் திறந்து பார்த்தேன். 140 ருபாய் இருந்தது. பின்னர் தான் எல்லா செலவுகளையும் இத்தனை நாளாக அட்டையையும் ஆன்லைன் பண மாற்றங்களையும் வைத்தே சமாளித்து வந்திருக்கிறேன் என்று புரிந்தது. என்னிடம் கறுப்புப் பணமும் இல்லை. கையில் பெரும் பணம் வைக்க வேண்டிய தேவையும் இல்லை.
ஆனால்..... கறுப்புப் பண முதலைகள் அரசின் இந்த மிரட்டல்களுக்கு ஈடு கொடுத்தே வருகிறார்கள். பெருமளவில் பாதிக்கப் படுவது ஒழுங்கு முறைத் தொழில் சாரா வெகு மக்கள் தாம். அல்லாடுகிறாரகள். ஏற்கெனவே அன்றாடக் கூலி+அரை வயிற்றுக் கஞ்சி. இந்த லட்சணத்தில் சொந்தப் பணத்தை எடுக்கப் பிச்சை எடுக்க வேண்டிய நிலை. ஆன்லைன் வர்த்தகம் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள் என்று வெந்த புண்ணில் வேலைப்  பாய்ச்சுவது போல் அரசின் அறிவுரை வேறு. அனா ஆவன்னா தெரியாதவனை திருப்புகழ் படிக்கச் சொன்னது போலிருக்கிறது. வேறு இடங்களில் புது நோட்டுகளைக் கொத்துக் கொத்தாக அள்ளுகிறார்கள். இவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தும் இது எப்படி நடக்கிறது என்கிற கேள்வி எழுகிறது. 
அதிகார/பண வர்க்கத்தின் மேலிருந்து கீழ் வரை நேர்மையின்மை கோலோச்சிக் கொண்டிருக்கிற இத்தனை பெரிய தேசத்தில் அதிலும் முக்கால் பேர் சோற்றுக்கு அலைகிற தேசத்தில் ஆளுகிறவர்கள் கடைக் கோடி மனிதர்களைக் கணக்கில் எடுத்துத் தான் தேச நலனை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
மிக முக்கியமாக கடைக் கோடி மனிதன் காட்டும் அளவற்ற பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையையும் ('கஷ்டமாத்தானிருக்கு; ஆனா நல்லதுக்குத் தான செய்யறாங்க!') பொறுத்து தான் இது போன்ற முடிவுகள் வெற்றியடைகின்றன; அவர்களின் அதிகாரம் இதை சாதிக்கவில்லை என்பதை ஆளுபவர்கள் உணர்ந்து செயல் படுவது நம் தேசத்தின் எதிர்காலத்துக்கு நல்லது.
சுருங்கக் கூறின் கடைக் கோடி மனிதனின் வழி மகாத்மா காண்பித்த வழி என்பதை ஆளுகிறவர்கள் மறக்கக் கூடாது.

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...