இந்தியாவின் தனி நபர் எதிர்க் கட்சியின் மறைவு
துக்ளக் ஆசிரியர் சோ மறைந்தார். அம்மையார் இறந்ததனால் சோவின் மறைவு பெருமளவில் கவனிப்பு பெறாமல் பொய் விட்டது. ஊடகங்கள் பெருமளவில் அதை ஈடு செய்தாலும் வெகு ஜனத் தலைவராக அவர் இல்லாததனால் பெரிதாகப் பொருட்படுத்தப் படவில்லை.
இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போல் புனைந்த கார்ட்டூனை அட்டைப் படத்தில் தாங்கி வெளியான அவரின் முதல் இதழிலிருந்து அவரின் வாசகனான நான் பல்வேறு சமயங்களில் அரசியல் கலாசார சமூக பொருளாதாரப் போக்குகளையும் நோக்குகளையும் தெளிவு படுத்திக்கொள்ள அவரைச் சார்ந்திருந்தேன் என்பதை இப்போது நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். குறிப்பாகக் கலைஞரின் அரசியலுக்கு எப்போதுமே அவர் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்தார். அதில் பெருமளவு நியாயமும் இருந்தது. இந்திரா காந்தியை மோசமாக எதிர்த்தார். நெருக்கடி நிலையின் போது மிகவும் சாதுர்யமாகவும் துணிச்சலுடனும் பத்திரிக்கையை நடத்தினார். (இந்திரா காந்தி யார்? என்கிற கேள்விக்கு சஞ்சய் காந்தியின் தாய் என்று அவர் அளித்த பதில் தணிக்கை செய்யப் பட்டது!)
ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்களை (ஜெயகாந்தன்) முதலில் நான் துக்ளக்கில் தான் படித்தேன்.மொரார்ஜி தேசாயின் மேன்மை, காமராஜரின் அப்பழுக்கற்ற நேர்மை, ராஜாஜியின் தொலை நோக்கு, 1967க்குப் பிறகு தமிழ் நாட்டில் ஆட்சி செய்தவர்களின், நேர்மையற்ற அரசியல்வாதிகளின் ஒழுங்கீனங்கள் எல்லாமே ஆரம்பத்தில் இவரால்தான் வெளிச்சத்துக்கு வந்தன. இவர் பத்திரிகை ஆரம்பித்த போது அண்ணா மறைந்து கலைஞர் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பெருமளவில் பரவலாகப் பட்டதாகக் கூறப் பட்ட ஊழலாலும் அதிகார துஷ் பிரயோகத்தாலும் மக்கள் வெறுப்புற்றிருந்த சமயம் . இவர் துணிவுடன் எதிர் வினையாற்றிய பதிவுகளின் பலன்கள் சற்று பின்னர் கட்சி ஆரம்பித்த எம்ஜியாருக்குப் போய்ச்சேர்ந்ததென்றால் அவரையும் சோ கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கினார்.
சினிமாவில் சற்று நலிவுற்று அம்மையார் ஏதோ ஒரு விரக்தியில் தனிமை பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவரைத் தன் பத்திரிகையில் கட்டுரை எழுத வைத்ததன் மூலம் வெளிக் கொணர்ந்தார். ஆனால் அம்மையார் அதிமுகவில் கொள்கைப் பரப்புச் செயலர் ஆன போது 'இந்தக் காட்சி தமிழகத்தின் தாழ்வுக்குச் சாட்சி' என்று கடுமையாக விமர்சித்து எழுதினார். அவரின் ஒரு கார்ட்டூனால் அப்போதைய அமைச்சர் சோமசுந்தரம் கட்சியை விட்டு விலக நேர்ந்தது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக