சனி, 25 மார்ச், 2017

அசோகமித்ரன் மறைந்தார்

தமிழின் முது பெரும் எழுத்தாளர் அசோகமித்ரன் மறைந்தார். ஓடும் நதியைப் பார்த்துக்கொண்டே கை  மணலை உதிர்த்துக் கொண்டிருக்கும் சிறுவனின் செயல் போன்றது தான் இலக்கியம் என்று நான் நினைத்துக் கொள்வது வழக்கம். இந்த உதாரணத்துக்கு மிகவும் பொருத்தமானவர் அசோகமித்திரன்.கிட்டத்தட்ட வாழ்க்கையின் சகல கூறுகளையும் பூடகத்தன்மையுன் அலசிய எழுத்து. கூர்ந்து நோக்கினால் மட்டுமே வேறு சில பரிமாணங்கள் தெரியக்கூடிய உரத்த குரலற்ற விருப்பு வெறுப்பற்ற நோக்கில் எழுதியவர்.  இவர் எழுதிய புதினங்களாகட்டும் சிறுகதைகளாகட்டும் எடுத்து கொண்ட விஷயம் ஒன்றாகவும் தொக்கி நிற்பது வேறொன்றாகவும் இருந்ததால் இவரை எந்த வகையில் சேர்ப்பது என்று பலரும் தடுமாறினார்கள்.
'புலிக்கலைஞன்' என்கிற சிறுகதையை மட்டும் முற்போக்காளர்கள் பாராட்டுவார்கள். மற்ற படைப்புகளை எப்போதும் கிண்டல் செய்து கொண்டிருப்பார்கள். எனக்கு அந்த நாட்களில் அன்புக்குரியவராக இருந்த ஒரு முற்போக்கு எழுத்தாளர் 'அவர் உடம்பு மிகவும் பூஞ்சை ; அவர் எழுத்தும் அப்படித்தான் இருக்கும்' என்றார் . ஒரு பெரிய கூட்டம் சுற்றி. எல்லோரும் சிரித்தார்கள். நான் சொன்னேன் : 'நீங்கள் சொல்கிறபடி இருந்தால் தாராசிங் தான் நல்ல இலக்கியம் படைக்க முடியும்'. அதற்கும் கூட்டம் சிரித்தது.
தவறாகவும் புரிந்து கொள்ளப் பட்டவர் அசோகமித்திரன். 'தண்ணீரி'ல் பெருநகரத்து தண்ணீர் பிரச்சினையைப்  பற்றித்தான் எழுதுகிறார் என்று தோன்றும். இதே போல் தான் 'பதினெட்டாவது அட்சக்  கோட்டில்' இந்து முஸ்லீம் கலவரம் பற்றியும் மானஸரோவரில் திரைப் படக் கதாநாயகன் பற்றியும் எழுதுவதாகத் தோன்றும் மேலோட்டமாகப் பார்த்தால். சற்று நுட்பமாகப் பார்த்தால் மட்டுமே வேறு சில பரிமாணங்கள் தெரியும். இது போன்ற நுட்பமாக எழுதியதால் தானோ என்னவோ இவர் ஒரு பொருள் விளங்கா உருண்டையாக விளங்கினார். கடிக்க முடியாமலும் விழுங்க  முடியாமலும் திணறினார்கள் இவரின் வாசகர்கள். இதைப் பற்றி இவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. பாணியை வெகு ஜன அபிப்பிராயத்துக்காக மாற்றிக் கொள்ளவில்லை.
குற்றமில்லாத தொனியில் லேசான அங்கதத்துடன் ஒன்றிரண்டு சமயங்களில் வாழ்க்கையின் முரண்பாடுகளை சுட்டிக் காட்டுகிறார். 'ஒற்றனி'ல் வரும் இரு எழுத்தாளர்களில் ஒருவர் எழுதவேண்டிய புதினத்துக்குக் கச்சிதமான வரைவு ஒன்றைத் தயாரித்து வைத்திருக்கிறார். இன்னொருவர் எந்த விதமான வரை முறை இல்லா வாழ்க்கை வாழுகிறவர். கிட்டத்தட்ட பைத்தியம் போலிருப்பவர். கடைசியில் அவர் எழுதிய நாவல்தான் வெளி வருகிறது. இன்னொரு சிறு கதையில் அப்பாவின் நண்பர் முஸ்லீம் . மதக் கலவரத்தில் மனது முரண் பட்டு அப்பாவைச் சந்திக்க முனைப்பு காட்டாமல் இருக்க அம்மா அந்த சோதனையான நாட்களிலும் அவர் வராமல் இருப்பதைப் பற்றி கறுவிக் கொண்டிருக்கிறாள் . கடைசியில் அப்பா மறைவுக்கு துக்கம் கேட்க வரும் நண்பரை அன்னை கடிந்து கொள்ளப் போகிறாள் என்று மகன் எதிர் பார்த்திருக்க அன்னை நண்பரைப் பார்த்தவுடன் 'நம்மளை இப்படி அநியாயமா விட்டுட்டு போய்ட்டார் பார்த்தேளா?' என்று அழுவதுடன் முடிகிறது கதை.
மானஸரோவரின் கதை அவர் வாழ்க்கை சம்பவங்களால் கோக்கப் பட்டது. இதை சில பேட்டிகளில் அவரே பெரிதாக இல்லாவிட்டாலும் ஒப்புக் கொண்டிருக்கிறார். குடும்ப வாழ்க்கையைத் துறந்து சில காலம் சாமியார்களுடன் அவர் சுற்றித் திரிந்திருக்கிறார். அதைப் பற்றி வெளிப்படையாக கூற அவர் தயங்கினார். அவரின் படைப்புகளில் தென்படுகின்ற சார்பிலா நோக்குக்கு இது ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். ஜே கிருஷ்ணமூர்த்தி சொற்பொழிவின் தொடக்கத்தில் எப்போதும் ஒரு இயற்கைக் காட்சியை வர்ணிப்பார். பின்னர் அவர் பேசும் கருப் பொருளுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றும். சங்க இலக்கியங்களிலும் இது போன்ற விஷயத்தை நாம் கவனிக்க முடியும். எனக்குத் தோன்றுவதெல்லாம் இரண்டையும் தொக்கி நிற்கும் பருண்மை சொல்லாத வார்த்தைகளில்தான் அடங்கியிருக்கிறது என்று தோன்றும். அசோகமித்திரனின் எழுத்தும் இப்படிப் பட்டது தான்.
அசோகமித்திரன் திருப்தியாகத்தான் வாழ்ந்து மறைந்தாரா? எனக்கு சந்தேகமாகத் தான் இருக்கிறது. அவர் எழுத்தில் வெளியான துறவு அவர் மன நிலையில் இருந்ததா சந்தேகமே.
சரியான கவனிப்பும் அங்கீகாரமும் கிடைக்காத வருத்தத்துடன் தான் இருந்தார் அவர். பிராமணனாகப் பிறந்ததால் தான் தன்னை தமிழ் கூறும் நல்லுலகு புறக்கணித்தது என்று அவர் வருந்தினார். 'ஜெயகாந்தன் ஆட்சியில் இருந்த எல்லோரையும் சகட்டு மேனிக்குத் திட்டினார்; அவருக்கு போட்டி போட்டுக்கொண்டு விருதுகளும் அங்கீகாரமும் வழங்கினார்கள். என்னை யாரும் கண்டு கொள்ள வில்லை; ஜாதி தான் காரணம்' என்று வருந்தினார். இது ஓரளவுக்கு உண்மை தான். நஷ்டம் நிச்சயமாக அசோகமித்திரனுக்கல்ல.
சிறிய சூழலில் இயங்கிய தமிழின் மிகப் பெரிய கை ஒன்று மறைந்தது. அவர் ஆத்மா சாந்தி அடைவதாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...