நேற்று டெல்லி தமிழ் சங்க நூலகத்திற்கு இரவல் புத்தகம் மாற்றுவதற்காகச் சென்றேன். தற்செயலாக ஜோக்கர் திரைப் படம் திரையிடுகிறார்கள் என்கிற அறிவிப்பைப் பார்க்க நேர்ந்தது. பெரிதாகச் செய்ய ஒன்றுமில்லையாதலால் படத்தைப் பார்த்து வைப்போமே என்று போய் அரங்கில் உட்கார்ந்தேன். இந்தப் படம் இயக்கிய தம்பி ராஜு முருகனின் 'வட்டியும் முதலும்' என்கிற புத்தகத்தை ஏற்கெனவே படித்திருந்தேன் என்பதால் அவர் மீது மதிப்பிருந்தது. தவிரவும் இப்படம் சமீபத்தில் தேசிய விருது வாங்கி இருந்த அறிவிப்பை பார்த்த ஞாபகம். தம்பியின் வட்டியும் முதலும் என்கிற புத்தகம் நடைச் சித்திரம் வரிசையில் வந்தது. அருமையான பதிவுகள் உள்ள குறிப்பிடத் தகுந்த படைப்பு. அதில் வருகின்ற மாந்தர்கள் இன்னும் என் நினைவில் உலா வருகின்றனர். குறிப்பாக மனைவி இன்னொருவனைக் காதலித்து அவனுடன் ஓடிப் போன பின்பும் அவளை மன்னித்து காதலனுடன் வாழ அனுமதித்த திருநா அண்ணன். இது நிற்க.
படத்தைப் பொறுத்தவரை நேரடியாக அழுத்தமான செய்தி சொல்லும் படமாகத் தெரிந்தது. அதிகார வர்க்கத்தினரும் ஆளும் கட்சிகளும் செய்யும் அராஜகங்களுக்கு சவுக்கடி கொடுக்கிறது படம். குறிப்பாக மோடியின் சுத்தம் இந்தியா திட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. தம்பியின் மார்க்சிய சார்பை என்னால் முன்பே உய்த்துணர முடிந்ததால் இது குறித்துப் பெரிய ஆச்சர்யம் எனக்கேதும் இல்லை. ஆனால் இவ்வளவு பிரச்சார நெடி தேவை தானா என்று எனக்குத் தோன்றியது.
ஹீரோ காதலிக்கும் பெண் கழிப்பறை இல்லாத வீடுள்ளவனைக் கல்யாணம் செய்யத் தயங்குவதால் முன் முயற்சி எடுத்து அரசு உதவியுடன் கழிப்பறையை கட்ட முயல்கிறார். அரசு அலட்சியத்தினால் அரை குறையாகக் கட்டப்பட்ட அறை மழையில் கரைந்து கர்ப்பஸ்திரீயான மனைவியின் மேல் சரிகிறது. வயிற்றில் பிள்ளை இறக்க மனைவியும் கோமாவில் ஆழ்ந்து விடுகிறார். கணவன் பைத்தியமாகிறான். தான் தான் இந்திய ஜனாதிபதி என்று பிரகடனப் படுத்திக் கொண்டு சமூக பிரச்னைகளில் பங்கெடுக்கிறான். சமூக ஆர்வலர் ஒருவரும் அவனுக்குத் துணை. மனைவி கருணைக் கொலைக்கு மனு செயகிறான். மணல் கொள்ளையை எதிர்க்கிறான். கருணைக் கொலை மீதான மனு உச்ச நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப் பட ஹீரோவை மணல் கொள்ளையர் லாரி ஏற்றிக் கொல்கிறார்கள்.சமூக ஆர்வலர் தகுதி இல்லாத தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் நம்மைக் குற்றம் சொல்வதுடன் முடிகிறது கதை.
மனம் ஒப்பாமல் அவ்வப் போது விமர்சனங்களுடன் பார்த்துக் கொண்டிருந்தேன் படத்தை. கதை ஜெயமோகன் எழுதியுள்ள கோட்டி என்கிற கதையை நினைவு படுத்துகிறது. கிட்டத்தட்ட வழிகாட்டியாக வருபவராக பவா செல்லதுரை வேடம் ஏற்று நடித்திருக்கிறார். அவரின் கதா பாத்திரத்தையும் பாதியில் கொன்றுவிடுகிறார்கள்.
மார்க்சிஸ்டுகளின் எளிய அரசியல் தான் இது. ஆனால் இரு நூறு வருடங்களாக வளர்ந்து நிலைக்களன் கொண்டுள்ள இந்திய அரசின் ஆட்சி அதிகாரத்தையும் குடிமை முறைகளையும் இது போல் கடுமையான விமர்சனத்திற்க்குள்ளாக்குவது ஏற்புடையது தானா?
ஆள்பவர்கள் சரியில்லைதான். அரசு அலுவலகத்தில் நூறு ரூபாய் லஞ்சம் வாங்குகிறவனைக் கையும் களவுமாகப் பிடித்து இரண்டு வருடங்கள் கடுங்காவல் கொடுக்கிறது அமைப்பு. நூறு கோடி பணம் திருடுகிறவர்கள் தொலைக் காட்சியில் சிரித்துக் கொண்டே வருகிறார்கள். இந்த லட்சணத்தில் தான் இருக்கிறது நம் சமூக அமைப்பு.
ஆனால்...
கோடிக் கணக்கில் திருடுகிறவர்கள் வானத்தில் இருந்தா குதித்து வருகிறார்கள்? அவர்களும் நம்மில் இருந்து தான் வருகிறார்கள். என்னால் இப்படித் தான் இதைப் பார்க்க முடிகிறது. இதனாலேயே மஹாத்மா சொன்ன மாதிரி 'புரட்சி செய்ய வேண்டுமென்றால் அதை முதலில் உன்னிலிருந்து தொடங்கு' என்கிற ஒற்றை வாக்கியத்தை நாம் தாரக மந்திரமாகக் கொள்ளவேண்டும் என்று தோன்றுகிறது.
படத்திலும் இதே குறை தான். தவிரவும் அனுபவங்கள் நேரடியாகத் தோய்வு இல்லாமல் மொத்தையாகத் தரப் பட்டுள்ளன. மேலாண்மை பொன்னுச் சாமியின் சிறுகதையைப் படிப்பது போலிருக்கிறது. பாடல்கள் ஒரே இழுவை.
நோக்கமெல்லாம் சரிதான். தம்பி கதை சொல்லுவதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
அஸ்வத் 30.4.2017
பின் குறிப்பு: சமூக ஆர்வலருக்கு டப்பிங் பேசிய குரலை எங்கோ கேட்டுருக்கிறோம் என்று இரண்டு நாளாக யோசனை செய்து கொண்டிருந்தேன். இன்று விடியற்காலை அது கம்பர் ஜெயராமனின் குரல் என்று நினைவுப் படலத்தில் ஒரு மின்னல் அடித்தது. அற்புதமான நடிகர். ஏன்அவரையே அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்காமல் டப்பிங் மட்டும் பேச வைத்தார்கள் என்று தெரியவில்லை.
பின் குறிப்பு: சமூக ஆர்வலருக்கு டப்பிங் பேசிய குரலை எங்கோ கேட்டுருக்கிறோம் என்று இரண்டு நாளாக யோசனை செய்து கொண்டிருந்தேன். இன்று விடியற்காலை அது கம்பர் ஜெயராமனின் குரல் என்று நினைவுப் படலத்தில் ஒரு மின்னல் அடித்தது. அற்புதமான நடிகர். ஏன்அவரையே அந்தப் பாத்திரத்தில் நடிக்க வைக்காமல் டப்பிங் மட்டும் பேச வைத்தார்கள் என்று தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக