ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று சூடாக தொலைக்காட்சியில் விவாதங்கள் நடந்து வந்து இப்போது சற்று ஓய்ந்திருக்கிறது.மத்திய அரசு மாட்டிறைச்சித் தடைக்கு சுற்றறிக்கை அனுப்பியதும் கவனம் திரும்பி விட்டது. இப்போது இந்துத்துவாவிலிருந்து கைபர் கணவாய் வரை சந்திக்கு இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரஜினி அவ்வப்போது இந்த வெடியைக் கொளுத்தி விட்டுப் போகிறது வழக்கம் தான் என்பதால் ஆச்சர்யப் பட எதுவும் இல்லை தான்.
ரஜினி நிச்சயமாக அரசியலுக்கு வரும் வாய்ப்பு இல்லை என்று தான் தோன்றுகிறது. இது போன்ற அறிவிப்புகளை அவர் தன் படம் வெளிவரும் சமயம் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகத் திட்டம் போட்டுச் செய்கிறார் என்று சிலர் குற்றம் சாட்டுவது பிழை என்றும் இதை அவரின் முடிவெடுக்க முடியாத நிச்சயமற்ற தன்மை என்றும் தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அரசியலுக்கு வர விரும்பும் ஒருவர் முப்பது வருடங்களாக ஆண்டவனிடம் அனுமதி கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்.
மாறாக அவர் முடிவு எடுத்து விட்டதாகக் கருதலாம். ஆனால் அதில் அவரின் எதிர்பார்ப்பாக தோன்றுவதெல்லாம்-
தன் முக்கியத்துவம் குறைந்து விடக் கூடாது.
கட்சியில் உள்ளவர்கள் ஊழல் செய்து விடக்கூடாது.
ஊழல் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து விட கூடாது.
கட்சியில் இருப்பவர்கள் பணம் சம்பாதிக்க அவரின் செல்வாக்கைப் பயன் படுத்தக் கூடாது.
எப்போ அலை ஓய்வது? எப்போ குளிப்பது?
மற்றவர்களுக்கு இல்லாத எந்தத் தகுதி ரஜினிக்கு இருக்கிறது? அவர் சினிமா நடிகர் என்கிற ஒரே தகுதி தான். 'கரிஷ்மா' உள்ள நடிகர் அதுவும். இது இருந்து விட்டால் ஜாதி, மொழி, மத, குழு, இன வாதங்கள் எல்லாம் அடி பட்டுப் போகின்றன. இது தமிழ் நாட்டின் பிரத்யேக நிலை. இதன் உளவியல் காரணங்களை நாம் மன்னன் மீதுள்ள பிரேமையால் தன் தலையை வெட்டி பலி பீடத்தில் வைக்கும் தொல்குடி இளைஞனின் மரபில் தான் தேட வேண்டும். இது ரஜினிக்குப் புரிந்திருப்பது போலவே இவரை எதிர்க்கும் அரசியல்வாதிகளுக்குப் புரிந்திருக்கிறது. இலவு காத்த கிளிகள் போல் அவர்களெல்லாம் பல வருடங்களாக கத்திக் கொண்டு முதல்வர் ஆகும் கனவுடன் காத்திருக்க இடையில் வரும் ஒருவர் அதைத் தட்டிக் கொண்டு ஓடி விடப் போகிறாரே என்று பயப்படுகிறார்கள். ஏனையோர் ரஜினியின் செல்வாக்கை வைத்து தங்கள் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வரமுடியுமா என்று ஏங்குகிறார்கள்.
சினிமா நடிகர்கள் இப்படிக்கு கோலோச்சுவது பாகவதர் காலத்தில் இருந்து நடந்து வருகிறது தான். ரஜினி பக்கத்தில் உட்காரும் உரிமை கமலஹாசனுக்கு மட்டும் உண்டு என்றும் மற்றவர்களுக்கு அது கிடையாது என்றும் சொல்கிறார்கள். இது போன்ற சட்ட திட்டங்கள் எம்ஜியார் சிவாஜி காலத்திலும் உண்டு. முன்னால் சிகரெட் பிடிக்கக்கூடாது உட்காரக்கூடாது என்று ஏகப்பட்ட எழுதப்படா விதிகள். இந்த சூழலில் இருந்து வரும் ஒருவர் எப்படி மக்களின் தேவைகளைக் கலந்து பழகாமல் உணர்ந்து கொள்ள முடியும்? முதன் முறையாக முதல்வர் ஆன பின்பு கூட்டப் பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் போதுமான இருக்கைகள் போதாத நிலையில் 'மிஸ்டர். இராமச்சந்திரன்! பத்திரிக்கையாளர் என்றால் நாற்காலிக்கு கூட அருகதை இல்லாதவர்கள் என்று நினைக்கிறீர்களா?' என்று ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கேட்டதில் எம்ஜியார் விதிர் விதிர்த்துப் போனார் என்பார்கள். அது வரை எம்ஜியார் சந்தித்திராதது இது. இது போன்ற நடைமுறை வாழ்க்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாகத் தான் தன்னை தயார் படுத்திக்கொண்டார் எம்ஜியார். இத்தனைக்கும் ஜெயகாந்தன் எழுதிய 'சினிமாவுக்குப் போன சித்தாளு'வைப் படித்த எம்ஜியார் 'நடக்கிறதைத் தானே எழுதி இருக்கார் அந்த ஆளு' என்று விட்டு விட்டாராம் ஜெயகாந்தன் தன்னைத் தான் கடுமையாக விமர்சிக்கிறார் என்று உணர்ந்தும் கூட!
தனி நபர்கள் இது போன்ற முக்கியத்துவம் ஏன் பெறுகிறார்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் யோசிக்கத் தோன்றுகிறது. பாடுவதற்கு இரவல் குரல், ஆடுவதற்கு டான்ஸ் மாஸ்டரின் பயிற்சி, சண்டை போட ஸ்டண்ட் மாஸ்டரின் பயிற்சி, தவிர சினிமாவுக்குள்ள பறந்து பறந்து அடிப்பது போன்ற தந்திரங்கள் இவை மூலம் ஒரு சூப்பர் மனிதனை சினிமா ஸ்ருஷ்டிக்கிறது. இதை வைத்து இவர்கள் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாது மக்களின் வாழ்க்கையிலும் அரசிலும் கோலோச்ச முயலுகிறார்கள். காரணம் நாளாக நாளாக சினிமா தன்னைப் பற்றி கட்டமைத்திருக்கிற பிம்பம் உண்மை என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள். இப்படிப் பார்க்கும் போது இவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று தான் தோன்றுகிறது.
முடிவாக-
ரஜினி முதல்வராக வேண்டும் என்று நினைத்தால் அதில் பெரிய தவறேதும் காண முடியாது. சட்டப் படியும் தார்மீக நெறிப் படியும் ஒன்றும் தவறில்லை தான்.
ஆனால்-
மாநில முதல்வரை சாதாரண மனிதன் சந்திக்க முடியாத நிலை தொடரும். மாட்சிமை இல்லாத அதிகார மையங்கள் இப்போது போல் கோலோச்சிக் கொண்டிருக்கும். கடைக் கோடி மனிதனின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது.