சமீபத்தில் ஒரு வாட்சப் குழுவிலிருந்து நான் வெளியேற நேர்ந்தது. எல்லாம் என் கல்லூரி நண்பர்கள். ஒருவருக்கொருவர் பாசமும் நட்பும் பாராட்டி வருகிறவர்கள். ஒன்றிரண்டு பேர் மிகுந்த முன் முயற்சி எடுத்து குழுவை ஒருங்கிணைத்தார்கள். எல்லாம் நன்றாக ஓடிற்று ஒரு ஆறு மாதம். ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வதென்ன அன்பை வெளிப்படுத்திக் கொள்வதென்ன பாசப் பறவைகளாக வலம் வந்தோம்.
இதில் வலம் வந்தவர்கள் அளித்த இடுகைகள் வருமாறு:
1. காலம் கார்த்தாலை ஸ்வாமி படம் அல்லது வீடியோ போட்டுவிடுவார் ஒருவர். பக்திமான். இவரே பரமாச்சார்யரின் வாழ்க்கையில் நடந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்களை விவரித்திருப்பார். சில சமயம் கோவில் படங்களும் ஸ்தல புராணமும் இருக்கும்.
2. காலை வணக்கத்துடன் பொன்மொழிகளை போட்டு விடுவார் அடுத்தவர். இவரே வாழ்க்கையில் எப்படியெல்லாம் கஷ்டப் பட்டவர்கள் எப்படி தங்களுடைய + அணுகு முறையால் பெரிய கோடீஸ்வரர் ஆனார்கள் என்றெல்லாம் விவரிப்பார். சுய முன்னேற்ற ஆலோசகர். அநேகமாகத் தனக்கே முயற்சித்து பெரிய ஆதாயம் இல்லாமல் அதையே மற்றவர்களுக்கு கற்றுத் தருகிறவர். ஆசான்.
3. அடுத்தவர் லா பாயிண்ட் நாராயணசாமி ஜிஎஸ்டி வருமான வரி சொத்து வரி போன்ற சட்ட நுணுக்கங்களை அடுக்குவார்.
4. இவர் நாடோடி. பல ஊர்களுக்கும் அடிக்கடி சென்று வருபவர். போன இடங்களிலெல்லாம் அந்த ஊரின் முக்கியமான சரித்திரச் சான்றுகளுடன் தன் புகைப் படத்தையும் செல் ஃபீ எடுத்துப் போட்டு விடுவார்.
5. இந்துத்வா மற்றும் ப்ராமணத்துவா . நாத்திகர்களுக்கும் பிராமண அவிசுவாசிகளுக்கும் புற மதத்தவர்க்கும் சவுக்கடி கொடுப்பார். இதற்காக திடுக்கிடும் தரவுகள் எல்லாம் கையில் வைத்திருப்பார். சிலசமயம் ஒரே பிரலாபமாக இருக்கும் 'இந்தியாவில் தான் இப்படி எல்லாம் நடக்கிறது' என்று.
6. ஜோக்குகள், குட்டிக் கதைகள் மற்றும் அறிவுரைகள். நீள நீளமாக இருக்கும். படிக்கும் போதே அலுத்து வரும். ஜோக்குகள் பொதுவாக மனைவிமார்களை விமர்சிப்பதாக இருக்கும். இவரை நாம் பெரியப்பா என்று வைத்துக் கொள்ளலாம்.
7. இவர் பஞ்சாங்கம் . கடவுளை பற்றி நிரம்ப கவலைப் பட மாட்டார். அமாவாசை, சஷ்டி, பௌர்ணமி, பண்டிகை என்றால் வேரோடு பிடுங்க வேண்டும் என்று நினைப்பார். தவிர ராகு காலம், எம கண்டம், குளிகன் என்று போட்டுப் பந்தாடி விடுவார்.
8. டைப் ரைட்டர். எந்த நம்பரை கை பேசியில் அழுத்தினால் கால் காவல் நிலையத்துக்கு செல்லும் எந்த நம்பரை போட்டால் நமக்கு வந்த கால் உண்மையா போலியா தெரிந்து விடும் என்றெல்லாம் போட்டுக் கொண்டே இருப்பார்.
9. நாட்டு வைத்தியர். மூட்டு வலிக்கு முடக்கித்தான், கை வலிக்கு கத்தாழை எண்ணெய், பல்வலிக்குப் பாடாவதி பல்பொடி என்று பின்னிவிடுவார். இவை எல்லாவற்றையும் இவர் முன் வைத்து 'சாப்பிடுடா!' என்று கத்த வேண்டும் போல் எரிச்சலாக வரும்.
10. போஸ்ட் மாஸ்டர் . தனக்கு வருகிற எல்லாவற்றையும் குழுவில் சேர்த்தால் தான் தூக்கம் வரும். எது என்ன என்று பார்ப்பதில்லை. ஏற்கெனெவே வலம் வந்ததை எல்லாம் கர்ம சிரத்தையாக அனுப்பி விடுவார்.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக