தமிழ் நாட்டின் இலக்கிய போக்குகளை நாம் அவதானிப்பதற்கு சிறு பத்திரிக்கைகள் மற்றும் பெரிய சஞ்சிகைகள் என்கிற இரு பெரும் கால்வாய்களை புரிந்து கொண்டாக வேண்டும். சிறு பத்திரிக்கையை நடத்துகிறவர்களோ அல்லது அதில் எழுதுகிறவர்களோ என்னவோ தங்களின் தலைக்குப் பின் ஒளி வட்டம் தோன்றியது போல் பெரிய சஞ்சிகைகளையும் அதன் ஸ்ருஷ்டி கர்த்தாக்களையும் இகழ்ச்சியாகப் பார்ப்பதும் பேசுவதும் நடந்து வருகிறது. இதன் காரணங்கள் பல இருந்தாலும் எனக்குத் தோன்றும் பிரதான காரணம் ஒன்று உண்டு.
அந்தக் காலத்தில் பார்த்தால் பத்ராதிபர்கள் எல்லோரும் தஞ்சாவூர்க்காரர்களாக இருந்திருக்கிறார்கள். தஞ்சாவூர்க்காரர்கள் என்றால் தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து சென்னை வரை என்று பொருள் கொள்ளலாம். திருநெல்வேலிக்காரர்கள் பிரமாதமான எழுத்தாளர்களாக இருந்தபோதிலும் தஞ்சாவூர்க்காரர்களிடம் கை கட்டி வேலை செய்கிறவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். இது போன்ற ஒரு போக்கு ஆழமான காழ்ப்புணர்ச்சியை திருநெல்வேலிக்காரர்களிடம் உண்டு பண்ணியிருப்பதில் பெரிய ஆச்சர்யம் இல்லை. ஒன்றிரண்டு கட்டுரைகளில் சுப்ரமணிய பாரதியாரே சுதேசமித்திரன் ஆசிரியர் ஜி சுப்ரமணிய ஐயரிடம் தாம் கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப் படுத்துகிறார்.
அதுவும் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் சுவீகரித்த ஒரு நடைமுறை ஒன்று உண்டு. ஒருவரை வேலையை விட்டுத் தள்ள வேண்டுமென்று நிர்வாகம் முடிவு செய்து விட்டால் குறிப்பிட்ட நாளில் அவர் அலுவலகம் வரு முன்பே அவர் மேசையின் டிராயர் பூட்டை உடைத்து இருக்கும் சாமான்களை பிரித்து வைத்து மறுபடி வேறு பூட்டைப் போட்டுப் பூட்டி சீல் வைத்து விடுவார்கள். காலை பணிக்கு வரும் ஊழியர் திகைப்பார்; தாள முடியாத அதிர்ச்சியுடன் வேலை போன விஷயத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் உள்வாங்கி கொள்வார். இது வாராவுக்கு நடந்திருக்கிறது. ஸ்டாலின் ஸ்ரீனிவாசனின் வழித்தோன்றலாகிய மணிக்கொடியில் நடந்ததை பி எஸ் ராமையா விவரிக்கிறார். பின்னாளில் இது பி எஸ் ராமையாவிற்கே நிகழ்ந்தது. இத்தனைக்கும் அந்நாளில் ஆசிரியர் பொறுப்பில் இருந்த டி எஸ் சொக்கலிங்கம் திருநெல்வேலிக்காரர். (ராமசாமி முதலியார் பதவியில் இருந்த போது தங்கத்துக்கு வரி கூட்டி விட்டார் என்பதற்காக 'தாலி அறுத்த முதலியார்' என்கிற தலைப்பில் தலையங்கம் தீட்டியவர்.) ஏ என் சிவராமன் தஞ்சாவூர்க்காரர்.
எனவே இது புதுமைப் பித்தன் கல்கி காழ்ப்புணர்ச்சிகளுக்கு முன்பே தொடங்கி விட்டது எனலாம். இப்படிப் பார்க்கும் போது சென்னையிலிருந்து மதுரை வரை உள்ள ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் என்றால் திருநெல்வேலிக்காரர்களுக்கு மட்டம். திருநெல்வேலி ஸ்ருஷ்டி கர்த்தாக்கள் என்றால் நாகர்கோயில்காரர்களுக்கு இளக்காரம். மலையாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம். தமிழர்களே மட்டம் தான். இதில் அந்நாளில் சென்னையைத் தலைப்பிடமாகக் கொண்டு மதராஸ் ராஜதானி திகழ்ந்த வயிற்றெரிச்சல் வேறு! சென்ற ஆண்டுகளின் மிகச் சிறந்த உதாரணமாக சுந்தர ராமசாமியின் 'ஜெ ஜெ சில குறிப்புகளைச்' சொல்லலாம். அதில் அவர் சக தமிழ் எழுத்தாளர்களை சகட்டு மேனிக்குக் கிண்டல் செய்திருக்கிறார். 'முல்லைக் கல் மாதவன் நாயர்' என்று அவர் குறிப்பிடுவது ஜெயகாந்தன் தான் என்று தோன்றுகிறது. இதே போல சிவசங்கரியையும் (போய் ஜமாய்டீ!) கிண்டல் செய்திருக்கிறார். இப்படிப் பார்க்கும்போது சுந்தர ராமசாமி ஜெயகாந்தனை விட பெரிய எழுத்தாளரா என்று நினைக்கத் தோன்றுகிறது.
வெகு ஜனப் பத்திரிகை என்று பார்க்கும் போது அது வணிகம் மட்டுமே. வெகுஜனப் பத்திரிக்கைகளுக்குப் பெரிய இலக்கிய நோக்கங்கள் இருக்கின்றன என்று நாம் நம்ப எந்த முகாந்திரமும் இல்லை என்று தான் கூற வேண்டும். அதே சமயம் சிறு பத்திரிக்கைகளை பீடித்திருப்பது அல்பாயுசும் குழு மனப்பான்மைகளும் தான்.
இரண்டையும் சமன் செய்கிற விதத்தில் அந்தக் காலக் கணையாழி முயன்றாலும் ஓரளவுக்கு ஈடு கொடுத்து வந்தது சுபமங்களா. துரதிர்ஷ்டவசமாக அந்த முயற்சியும் கோமல் சாமிநாதனின் மறைவுக்குப் பின் முடிவுக்கு வந்தது. தற்போது உள்ள காலச்சுவடு கூட குழு மனப்பான்மையுடன் தான் செயல் படுவதாய்த் தோன்றுகிறது. ஏனைய பத்திரிக்கைகள் குழு மனப்பான்மையில் குறுகிக் கடைசியில் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரை உயர்த்திப் பிடிப்பதற்காகத்தான் செயல் படுவதாய்த் தோன்றுகிறது. சில வேளைகளில் இந்த எழுத்தாளர் தலைக்குப்பின் ஒளி வட்டம் தெரிவது போல் ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரே அறிவுரை மயம். இணைய பத்திரிக்கைகளையோ கேட்கவே வேண்டாம். ஒன்றிரண்டைத் தவிர மீதம் ஒரே வசவு மயம்.
பரமபதத்தில் வரும் பாம்புகளும் நன்மையே செய்கின்றன என்று ஒரு நம்பிக்கை உண்டு. இப்படித்தான் நாம் வணிக சஞ்சிகைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நான் ஜெயந்தனின் 'துப்பாக்கி நாயக்கரை' குமுதத்தில் தான் படித்தேன். ஜெயமோகன் 'டார்த்தனீயம்' என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். இதையே தமிழ் வாணனும் 'பேய் பேய் தான்' என்கிற தொடரில் ஒரு கிளைக் கதையாக அந்தக் காலத்திலேயே எழுதியிருக்கிறார். ஆர் சூடாமணியை நான் முதலில் குங்குமத்தில் தான் படித்தேன். சுஜாதாவின் 'எல்டோராடோவை'க் குங்குமத்தில் படித்தேன். அனுராதா ரமணனின் 'கை' என்கிற கதையைக் குங்குமத்தில் படித்தேன். சிறு பத்திரிக்கைகளிலும் நல்ல கதைகளையும் மோசமான கதைகளையும் படித்திருக்கிறேன். ம.ந.ராமசாமியின் 'புழு' என்னும் கதையை சிவாஜியில் படித்தேன். கந்தர்வனின் 'பூவுக்குக் கீழே' என்கிற கதையை இதயம் பேசுகிறது சிறுகதை பத்திரிகையில் படித்தேன். இன்னும் ஏகப் பட்ட கதைகள். முக்கால் வாசி வணிக சஞ்சிகைகளில் வந்தவையே.
சுருங்கக் கூறின் வெகு ஜனப் பத்திரிக்கைகளும் தீவிர இலக்கியத்துக்குத் தாலி கட்டிக் கொள்ளவில்லை ஆயினும் அவைகளும் இலக்கிய சேவை புரிவதாகத்தான் நான் கருதுகிறேன்.
Merkur Futur Adjustable Safety Razor | Marcela Sontava
பதிலளிநீக்குMERKUR is a company that manufactures and offers the best of the safety razors, deccasino razors, and scents. 바카라 We provide you with a range of different razors designed 바카라사이트 for you