அத்தியாயம் 11
பாண்டிச்சேரிக்கு செல்வதற்கு முன்பே ஆதித்யாவிற்குப் பள்ளியில் பிரச்னைகள் ஆரம்பித்திருந்தன. பதின் பருவத்தின் நுழைவாயிலில் இருந்தான். அவன் பள்ளி நடவடிக்கைகளைப் பற்றி நாங்கள் பெரிதாக ஆராயப் புகுந்ததில்லை. ஏதாவது புது வம்பு வந்து விடப் போகிறதே என்கிற பயம். அவனும் ஏதாவது நகைச் சுவையாகப் பண்ணிக் கொண்டிருப்பான். ஒருமுறை வீட்டில் உபயோகமற்றுக் கிடந்த கூலிங்கிளாஸ் ஒன்றை எடுத்து மாட்டிக் கொண்டு சென்றுவிட்டான். அதைத் தொடர்ச்சியாக தினமும் மாட்டிக் கொண்டு செல்வது என்று ஆரம்பித்தான். பள்ளியில் கழற்றுவதேயில்லை. சக மாணவர்கள் கிண்டல்களையும் பொருட்படுத்துவது இல்லை. பள்ளியில் எங்களைக் கூப்பிட்டு அனுப்பினார்கள். நாள் பூரா கூலிங்கிளாஸைப் போட்டுக் கொண்டிருக்கிறான் என்றும் மாணவர்களுக்குப் பெரிய கவனச்சிதறல் ஏற்படுகிறது என்றும் சொன்னார்கள். அதை ஒளித்து வைத்து, ஒளித்து வைத்து ஒழித்துக்கட்டினோம்.
வனவிலங்குகளைப் பார்ப்பதற்கு சஃபாரி செல்லும் ஒரு குடும்பம் பற்றிய விளம்பரப் படம் ஒன்று நினைவுக்கு வருகிறது. காட்டில் காரில் போய்க்கொண்டிருக்கும் போது சிறுத்தைப் புலி பாய்ந்து வருவதைப் பார்த்துக் காரை நிறுத்துகிறது குடும்பம். எதிர்பாராத விதமாகக் காரின் ‘பானெட்டில்’ சிறுத்தைப் புலி ஏறி அமர்ந்து கொள்கிறது. குடும்பம் திக் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிறுத்தை நிதானமாகச் சுற்றும் முற்றும் நோக்கி விட்டு நிதானமாகக் கீழே குதித்துச் செல்கிறது. ஆதித்யாவின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட இது போல் தானிருக்கும். தன் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு உள்ளம் பூரா இசைச் சிந்தனை யானை போல் ஏறி அமர்ந்து கொண்டிருக்கிறது. வேறோர் சமூக சம்பாஷணையை அவன் நடத்த வேண்டுமென்றால் இந்த யானையை இறக்கி வைத்தால் முடியும். அல்லது அலை வரிசையை மாற்றினால் நடக்கும். இது வீட்டில் ஓடலாம். வெளியில் ஓடுமா?
வகுப்புகளில் பாடங்களை கவனிக்கிறானா? தெரியாது. யாருக்குமே தெரியாது. பாடங்கள் சில சமயங்களில் நோட்டுகளில் எழுதியேயிருக்காது. என் மனைவி அங்கே விசாரித்து இங்கே விசாரித்து அவனை வீட்டில் எழுத வைப்பாள். மணி அடிக்கும் வரையிலும் வகுப்பில் உட்கார்ந்திருப்பானேயொழிய சக மாணவர்களிடத்தில் எந்த வித சம்பாஷணையும் இருக்காது. பல சமயங்களில் பாடிக் கொண்டிருப்பவனை ரொம்ப வற்புறுத்தி நிறுத்த வேண்டியதாய் இருந்திருக்கிறது.
சொல்கிற வார்த்தைகளைக் கேட்கிறானா சந்தேகம். ஏனென்றால் பல சமயங்களில் கொடுக்கிற ஆணைகளை ஏற்று நடப்பதில்லை. மத்திய தர உயர் மத்திய தர குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், பள்ளி ஆசிரியர்களும், சக மாணவர்களும் இவன் விசேஷ நிலை கருதி ஒத்துழைத்தார்கள். ஒரு நாள் ஏதோ கம்பெனி அவர்களின் வியாபார விருத்திக்காக புட்டி நிறைய எல்லா மாணவர்களுக்கும் கால்சியம் மாத்திரைகளை கொடுத்திருக்கிறார்கள் ஆளுக்கொன்றாக. ஆதித்யா இனிப்பாக இருந்ததால் ஒரே மூச்சில் எல்லா மாத்திரைகளையும் தின்று விட்டான். பள்ளி கொஞ்சம் பயந்து போய் அவசியம் ஏற்பட்டால் மருத்துவரிடம் காண்பிக்க அறிவுறுத்தி அனுப்பினார்கள். நல்ல வேளையாக ஒன்றும் ஆகவில்லை. அதே போல் கை ஒடிந்த சமயத்தில் ஆதித்யாவைப் பள்ளி அப்படிப் பரிவுடன் பார்த்துக் கொண்டது. வேறு யாரையாவது விட்டு அவன் நோட்ஸை எழுதிக் கொடுக்கவெல்லாம் சொல்லி உதவி செய்தது பள்ளி.
இது எத்தனை நாளுக்கு ஓடும்? ஆசிரியைகள் கொஞ்சம் கடுமையைக் காட்ட ஆரம்பித்தார்கள். அடித்திருக்கிறார்கள். ஆதித்யாவிற்குச் சொல்லத் தெரியாது. ஆனால் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்தான். ஆசிரியைகள் அடித்தால் வலி தாங்க முடியாது அடித்தவரை அல்லது சக மாணவர்களை அடித்து விடுவான். எங்களுக்கு அவன் நடத்தையில் மாறுதல் தெரிந்தது. கவலையாக இருந்தோமே ஒழிய என்ன காரணம் என்று தெரியவில்லை. இப்படி இருக்கும் போது பள்ளியில் கூப்பிட்டு அனுப்பினார்கள். நானும் என் மனைவியும் கவலையுடன் பள்ளிக்குச் சென்றோம். அவன் வகுப்பு ஆசிரியர் ஆதித்யாவை சமாளிக்க கொஞ்சம் சிரமம் ஆகி வருகிறது என்றும் யாராவது மருத்துவரிடம் காண்பிக்கவும் சிபாரிசு செய்தார். அப்போது ஆதித்யா அங்கு திறந்த வெளியில் பயிற்சிக்காக வைக்கப் பட்டிருந்த இணை இரும்பு பைப்புகளில் ஒன்றில் இரண்டு கால்களை முட்டியுடன் மடித்து தலை கீழாகத்தொங்கி எங்களைப் பார்த்துக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தான்!
கொஞ்சம் ஆறுதலாக ஏதாவது சொல்வார்களோ என்கிற நப்பாசையில் மற்ற ஆசிரியைகளிடம் சென்றோம். எங்களைச் சுற்றிக் கூட்டமாக நின்று கொண்டு புகார் மேல் புகாராக அடுக்கி விட்டு “எடுத்துருங்கோ ஸ்கூல்லேருந்து” என்றார்கள்.
நிலைமை இப்படியிருந்ததால் பாண்டிச்சேரிக்கு மாற்றல் எனக்கு வரப் பிரசாதமாக அமைந்து விட்டது. பள்ளியிலிருந்து டீஸி வாங்கப் பின்னாளில் ஒரு நாள் சென்ற போது அங்கிருந்த ஆசிரியைகளின் கண்களில் இருந்த குற்றவுணர்வை என்னால் மறக்க முடியவில்லை. ‘எதுக்கு, எதுக்கு’ என்றார்கள் சந்தேகமாக. பள்ளி முதல்வரை நாங்கள் பார்க்க நின்றிருந்த போது அவர்களுக்கு நாங்கள் ஏதோ புகார் செய்யப்போவதாய்த் தோன்றியிருக்கிறது. அவர்கள் பள்ளியை விட்டு எடுக்கச் சொன்னதை நாங்கள் அவ்வளவு சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்வோம் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்.
தற்போது பாண்டிச்சேரி வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார்கள். நான் சமீபத்தில் செல்லவில்லை. 2003 ஆம் வருடத்தில் பேருந்தில் ஏறிப் போகும் போது அரசு விளம்பரங்களை ஸ்வாரஸ்யமாக கவனிப்பது உண்டு. ஒரு விளம்பரத்தில் ‘பாண்டிச்சேரியில் நேரம் நின்று விடுகிறது’ என்று எழுதியிருப்பார்கள். சின்ன ஊர் சின்ன கடற்கரை. இரண்டு சக்கர வாகனத்தில் அரைமணி நேரத்தில் முழு ஊரையும் சுற்றி வந்து விட முடியும். பெரிய கட்டுமானங்கள் இல்லாத ஊர் என்றாலும் பெரிதாகச் செலவு வைக்காத ஊரும் கூட. பாண்டிச்சேரியில் பெரிதாக எனக்கு வேலையும் இல்லை. பத்து மணிக்கு அலுவலகம் சென்றால் ஐந்து ஐந்தரைக்குக் கிளம்பி விடலாம். அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் பெரிய தூரம் கிடையாது. குழந்தைகள் அட்மிஷனுக்கும் பெரிய பிரச்னைகள் இல்லை. வீட்டிற்குப் பக்கத்திலேயே மலையாள கிறிஸ்துவத் தம்பதிகள் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்கள். இரண்டு தகரக் கொட்டகைகள் அதில் தான் பள்ளி வகுப்புகள். நான் எதிர் பார்த்ததை விட எளிதாக அட்மிஷன் முடிந்தது. தாளாளர் ஆதித்யாவின் திறமையைக் கேள்விப்பட்டவுடன் அவனுக்கான நன்கொடையையும் தள்ளுபடி செய்து விட்டார்.
ஆதித்தியாவின் சங்கீதம் ஒரு கேள்விக் குறியாக நின்றது. முன்னதாகச் சென்னையில் ஒரு இசைவாணரிடம் ஆதித்யா கிளம்புமுன் அவ்வப்போது போய் வந்து கொண்டிருந்தான். இதை நான் முன்னரே விவரித்திருக்க வேண்டும். சங்கீத முயற்சிகளைக் கொஞ்சம் கோர்வையாகச் சொல்ல வேண்டுமென்பதால் முதலில் சொல்லவில்லை. இந்த இசைவாணர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தாம். கச்சேரிகள் செய்கிறவர். சபா போன்ற ஒரு அமைப்பையும் வைத்துக் கொண்டிருந்தார். இசைப் பள்ளியும் இருந்தது. இவரையும் தவிர அங்கே வேலைக்கு இசை ஆசிரியர்கள் வைத்துக் கொண்டிருந்தார். பெரிய தொழிற்சாலை போல நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தது.
இவர்களைப் பற்றி நான் தற்செயலாக நாளிதழில் வரும் விளம்பரங்களைப் பார்த்திருந்தேன். ஏற்கெனவே இவரின் முயற்சிகளைப் பற்றி ஏதோ கட்டுரைகள் சஞ்சிகைகளில் படித்திருந்தது கூட ஞாபகம். இவர் வருடா வருடம் இசைப் பள்ளிக்கான ஆரம்ப விழா ஒன்றை நடத்துகிற வழக்கம். அந்த விளம்பரத்தைப் பார்த்துத் தான் இவரிடம் செல்ல நிச்சயித்தேன் என்று நினைக்கிறேன்.
ஆரம்ப விழா அமர்க்களமாக இருக்கும். அதில் இன்னொரு இசை விற்பன்னரும் கலந்து கொள்வார். பிரபலமானவர் கச்சேரிகள் வருடம் பூரா செய்கிறவர். அவருக்கு இவர்கள் இசைப் பள்ளி மற்றும் அமைப்பில் ஏதோ பங்கு இருந்தது என்று நினைக்கிறேன். அந்தப் பிரபலம் ஆரம்ப விழாவிற்கு வருவதுடன் சரி. அதன் பின்னர் தலை காட்ட மாட்டார். மாணவர்களை கவர்ந்திழுக்க இது ஏதோ மார்க்கெட்டிங் உத்தி போலிருக்கிறது. இதெல்லாம் பின்னால் தான் எனக்கு புரிந்தது.
ஆதித்யாவை நாங்கள் கூட்டிப் போனவுடன் அவனைப் பாடச் சொல்லியிருக்கிறார். ஆதித்யா ‘சாதிஞ்சனே’ என்கிற ஆரபி ராக பஞ்ச ரத்ன கீர்த்தனையை அவர்கள் முன் பாடினான். குழந்தைகளாக வந்திருந்த அந்த இடத்தில் ஆதித்யா பாடிக்கொண்டிருந்த போது சூழ்நிலையே மாறிவிட்டது. ஊசி விழுவது கேட்குமளவு நிசப்தம். பாடி முடித்தவுடன் கூடியிருந்த எல்லோரும் கைத்தட்டினார்கள். ஒரு மாமி “செம்பை பிறந்திருக்கார்” என்று மாய்ந்து போனார்.
பாடி முடித்தவுடன் ஆதித்யா இவர்கள் யார் முகத்தையும் பார்க்கவில்லை. அந்த இசைவாணர் கேட்கிற கேள்விகளையும் பொருட்படுத்தவில்லை. அங்கே ஒரு ‘கீபோட்’ வைத்திருந்தார்கள். அதை நோக்கி பாய்ந்தான். நாங்கள் ஏற்கனவே ஆதித்யாவிற்கு ‘யமஹா’ கீபோர்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தோம். அதில் அவன் பாடல்களை வாசிப்பது வழக்கம். தானாகக் கற்றுக்கொண்டது தான். நன்றாக வாசிப்பான்.
அவன் கீபோர்டை வாசிக்க ஆரம்பித்தான். தேனைச் சுற்றும் ஈக்கள் போல் சிறு கூட்டம் அவனைச் சூழ்ந்து கொண்டு நின்றது. இசைவாணர் அவனை விட்டு விட்டு என்னிடம் வந்தார்.
“இது ஒரு ‘இன்ஸ்டிங்ட்’ தான். ஆனா இதை இப்படியே விட்டுடக் கூடாது. பெரிய ‘டாலண்ட்’. பேரண்ஸூம் குருவும் ஒத்துழைச்சாத்தான் முன்னுக்குக் கொண்டு வரமுடியும்” என்று கூறி விட்டு “இப்போ இருக்கிற டாலண்ட் ‘ஸ்டாடிக்’. இதை டைனமிக்கா மாத்தறத்துக்கு மட்டும் நாம கொஞ்சம் ஒழைச்சாகணும்” என்றார்.
நான் கொஞ்சம் பேச்சிழந்து அவர் வாயைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.
“எங்க குடும்பமே இசைக் குடும்பம் தான். நாங்க எல்லோரும் ‘ப்ராடிஜீஸ்’. ஆனா இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரதுக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கேன் தெரியுமா? என் கம்பெனியோட டர்ன் ஓவர் இப்போ ஃபைவ் க்ரோர்ஸ். நான் ஆரம்ப நாள்ல அவ்வளவு கஷ்டப் பட்டேன். அப்ப ஒரு முடிவு பண்ணேன். இந்த மாதிரி டாலண்ட் உள்ள பசங்களுக்குத் தான் முன்னுரிமை. இங்க டாலண்ட் ப்ரமோஷன்னு ஒரு ப்ரோக்கிராம் இருக்கு. உங்க பையனைப் பொறுத்த மட்டில ஆரம்பப் பாடம்லாம் தேவையில்லை. அந்தப் ப்ரோக்ராம்ல போட்டுடுங்கோ. பத்தாயிரம் ரூபா. பீஸைக் கட்டிடுங்கோ” என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.
“பையன் இன்னும் வளரலியே சார். இன்னும் கொஞ்சம் மெச்சூரிடி இருந்தாத் தேவலயில்லையா. . . . . . ” என்று நான் இழுத்தேன்.
“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. சங்கீதத்திலேயே மூழ்கியிருக்கறவா அப்படித்தானிருப்பா. அவன் வயசுக்குத் தேவையான மெச்சூரிடி நிறைய இருக்கு. மத்ததெல்லாம் தானா வந்துரும் என்றார்.
“லோகப் பிரக்ஞை. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ” என்று ஆரம்பித்தவனை அவர் இடைமறித்துச் சொன்னார். “அதான் சொன்னேனே. எங்க குடும்பத்திலே இவன் மாதிரித்தான் நாங்க எல்லோருமே. நாங்கள்லாம் சங்கீதத்திலேயே இருக்கறதுனால எங்களுக்கு இதெல்லாம் நன்னாப் புரியும் ” என்றார்.
அவர் முகத்தில் புன்சிரிப்பை மீறி வெளிப்பட்ட நம்பிக்கை எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. தவிரவும் அவர் அவனை எந்தவித மனக்கட்டுமானமும் இல்லாமல் எல்லோரைப் போலவும் சாதாரணமாக நடத்தியது பெரிய தேறுதலாக இருந்தது.
“அவன் எங்க குடும்பத்து ஆளு. தப்பிப் போய் உங்க குடும்பத்திலே பொறந்துட்டான். அவன் இனிமே எங்க கூடத் தான் இருக்கப் போறான். . . . . . ”
கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்குக் கிடைத்த கட்டை போல் அவர் வார்த்தைகளையும் அவரையும் உணர்ந்தேன்.
எவ்வளவு பெரிய பிழை!
அத்தியாயம்- 12
மைலாப்பூரில் ஏதோ ஒரு விழா. இசை சம்பந்தப்பட்டது தான். அதற்கு ஆதித்யாவைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார் இசைவாணர். அப்போது நான் பாண்டிச்சேரி சென்றிருந்த புதிது. குடும்பம் சென்னையில் தான் இருந்தது. நான் பாண்டிச்சேரியில் ரூம் எடுத்துத் தங்கிக் கொண்டு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வார இறுதியில் சென்னை வந்து விட்டு திங்கட்கிழமை காலை வேலைக்குத் திரும்பி விடுவேன். அந்தமாதிரி சந்தர்ப்பத்தில் ஆதித்யா கொஞ்சம் தொடர்ச்சியாக அந்த இசைவாணரிடம் வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தான். என் மனைவி அழைத்துக் கொண்டு போய் வருவாள்.
இந்த இசை விழாவில் மேடையில் தன் பக்கத்தில் ஆதித்யாவை உட்காரச் சொல்லியிருக்கிறார் இசைவாணர். இசைப்பள்ளியின் மாணவர்கள் தனித்தனியாகவும் குழுவாகவும் பாடிக் கொண்டு வந்திருக்கிறார்கள். நல்ல கூட்டம். மாணவர்களின் பெற்றோர் முக்கால் வாசி. இது நடந்து கொண்டிருந்தபோது கொஞ்சம் இடைவெளி வந்தது. இடைவெளியில் இசைவாணர் “எங்கிட்ட ஒரு பையன் இருக்கான்; பெரிய இசைஞானி. இப்பப் பாடச் சொல்றேன்” என்று கூறி விட்டு இந்தோள ராகத்தில் ‘சாமஜ வர கமனா’ சரணத்தில் ஆரம்பித்துப் பாடி விட்டு ஆதித்யாவுக்கு ஜாடை காண்பித்து விட்டு பல்லவியில் கற்பனா ஸ்வரத்தை எடுத்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஸ்வரம் பாடியிருக்கிறார்கள். சூடு பிடித்தவுடன் ஆதித்யா பின்னலான கணக்குகளுடன் அசாத்தியமாக. ஸ்வரம் பாடி முத்தாய்ப்பு வைத்து பாட்டை முடித்திருக்கிறான். கொட்டகை பிய்த்துக் கொண்டு போகுமளவிற்குக் கைத்தட்டல். ஒரே ஆஹாகாரம். ’யார் பையன் யார் பையன்” என்று மெல்லிய குரல் விசாரிப்புகள். சிலர் என் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு உணர்ச்சி வசப் பட்டிருக்கிறார்கள். எதிர்பாராத விதமாக ஒரு பெரிய சபையில் இது போன்று ஒரு அங்கீகாரத்தை என் மனைவி எதிர்பார்க்கவில்லை. அவள் என்னிடம் இதைச் சொன்னபோது இசைவாணர் பால் எங்களுக்கு அளவற்ற நன்றியுணர்ச்சியும் பரிவும் பெருக்கெடுக்க ஆரம்பித்தன.
சென்னை பள்ளியில் ஏற்கெனவே எங்களிடம் “பையனுக்கு இசையில் நாட்டம் இருந்தால் அவனை அதில் ஈடுபடுத்துவது தான் நல்லது,” என்று அறிவுறுத்தியிருந்தார்கள். அவர்கள் எங்களைக் கூப்பிட்டு அனுப்பிய போது ஆதித்யாவின் குணாதியங்களில் தெரிய ஆரம்பித்த மாறுபாடு புரிபடவில்லை. எங்களுக்கு ஏதோ தாம்பத்தியப் பிணக்கு என்று நினைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அல்லது பையன் விருப்பத்துக்கு மாறாக நாங்கள் ஏதோ செய்ய வற்புறுத்துகிறோம் என்று கூட நினைத்திருக்கலாம். அவர்களுக்குப் புரியாத விஷயம் நாங்களுமே அவன் நடத்தையில் தென்படுகிற மாற்றங்களைப் புரிந்து கொள்ளவியலாது திணறுகிறோம் என்பது தான். எது எப்படியிருந்தாலும் இசைவாணர் அளித்துக் கொண்டிருந்த நம்பிக்கையும் பையன் மீது கொண்டிருந்த அன்பும் எங்களை அவர் பால் ஈர்த்தன. எனவே பள்ளியில் வேறு, பையனை அவன் விருப்பப்படி நடவடிக்கையில் ஈடுபடுத்தச் சொன்னதால் இசைவாணரை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முடிவு செய்தோம்.
இசைவாணரைப் பொறுத்தவரை ஆதித்யாவை எந்தவித பிரத்யேக கவனிப்புக்கும் ஆட்படுத்த தயாராக இல்லை. அவனை இதரர்களை எப்படி நடத்துவாரோ அதே போல் நடத்தினார். அவன் குணாதிசயங்களில் இருந்த முரண்பாடுகளை அப்படியே உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டார். அவன் பிடிவாதத்தைத் தளர்த்துவதற்கு அவனுடன் மன்றாடத் தயாராக இருந்தார். அவனிடம் கோளாறுகள் இருக்கிறது என்பதை நம்பத் தயாராக இல்லை. அவனைப் பெரிய இசை அறிஞனாக அங்கீகரித்தது மட்டுமல்லாமல் “உங்களுக்குத் தான் இதெல்லாம் புதிது. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் இப்படித்தான்,” என்று சொல்லிக் கொண்டிருந்தார். அது ஒரளவிற்கு உண்மையும் கூட. குடும்பத்தில் எல்லோருமே இசைவாணர்கள். உலகம் பூரா கச்சேரி செய்கிறவர்கள். மழலை மேதைகள் என்று அறியப்பட்டவர்கள்.
வகுப்புகள் ஆரம்பித்தன. இசைவாணர் சௌகரியமான சமயங்களில் வகுப்பு வைத்துக் கொள்வதாகப் பேச்சு. ஒன்றிரண்டு வகுப்புகளும் நடந்து வந்தன. இசைவாணர் இசைப் பள்ளியை நிர்வாகம் செய்து கொண்டிருந்ததுடன் பல இடங்களிலும் நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். மிகவும் பிஸியான மனிதர். “காலம்பர ஒம்பது மணிக்கு போன் பண்ணுங்கோ,”என்பார். ஒன்பது மணிக்கு போன் செய்தால் ‘பிஸியாக இருக்கிறேன்; பத்து மணிக்கு போன் செய்யவும்’ என்று பதில் வரும். பத்து பன்னிரண்டாகும். பின்னர் மூன்றாகும். ஆறாகும். இப்படியே இழுத்து இழுத்து இரவு எட்டு மணிவாக்கில் வகுப்பு கடைசியாக நடக்கும். இது எத்தனை நாள் ஓடும்?.
என் மனைவி தான் பாவம். நாயாக அலைந்தாள் பையனையும் இழுத்துக்கொண்டு.
இசைவாணரிடம் இன்னும் கொஞ்சம் வயதாகிய மாணவனும் இருந்தான். வயது இருபது இருக்கலாம். இந்தப் பையனின் அன்னை இசையாசிரியர். ஆனால் பையன் இசைப் பக்கம் போய் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று மிகவும் கவனமாக இருந்தார். பையன் பொறியியல் படிப்பிற்காக ‘நுழைவுத்தேர்வு கோச்சிங்’கிற்காகச் சென்னை வந்தான். இவன் ஒரு தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூரிலிருந்து வந்தவன். அங்கேயே பல்லவியில் நிபுணராகிய ஒரு இசையாசிரியரிடம் ஏற்கெனவே இசை கற்றுக் கொண்டிருந்தான். நல்ல குரல் வளம். இவன் செனனை வந்த இடத்தில் ஏதோ ஒரு தொலைக்காட்சிச் சானலில் வரும் பாடகருக்கான போட்டிக்காக மனு செய்திருக்கிறான். நல்ல பாராட்டு. இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று எல்லாவற்றிலும் முன்னேறி அரை இறுதிச் சுற்றில் உள்ளத்தை உருக்கும் விதமாகப் பாடியிருக்கிறான்.
ஒரே பாராட்டு மழை. மிகவும் மன வருத்தத்துடன் அவனை நிராகரித்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின் ஒரு நீதிபதி நம் இசைவாணரின் தொழில் பங்குதாரர். ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேனே – இசைப்பள்ளி தொடக்க விழாவிற்கு அன்று மட்டும் வந்து செல்பவர் என்று – அவர் தான். அவரும் நல்ல பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான். அவர் பையனிடம் போகிற போக்கில் ‘எதற்கு படிப்பெல்லாம்; நல்ல திறமையிருக்கிறது. முறையாகப் பயிற்சி பெற்றால் பெரிய இசைக்கலைஞனாக வரலாம்,’என்கிற ரீதியில் ஓதிவிட்டுச் சென்றிருக்கிறார். தொலைந்தது. பையன் மனது மாறி விட்டது. அதே இசைக்கலைஞர் நம் இசைவாணரின் பெயரைச் சிபாரிசு செய்ய பையன் நுழைவுத்தேர்வையெல்லாம் அம்போ என்று விட்டு விட்டு நம் இசைவாணரே கதி என்று வந்து விட்டான். இதெல்லாம் அவன் அன்னை பின்னாளில் எங்களிடம் வருத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்ததில் தெரிந்தது.
இந்தப் பையன் கிட்டத்தட்ட இசைவாணரின் அந்தரங்கக் காரியதரிசி மாதிரி ஆகி விட்டான். அவர் பொருளாதாரம் தவிர்த்த மற்ற நடவடிக்கைகளுக்கு அவன் தான் உறுதுணை. தொலைபேசி அழைப்புகளை ஏற்று பதில் சொல்வதிலிருந்து பயணத்துக்குத் தயாராக வேண்டிய சாமான்களை ஒழுங்கு படுத்துவது வரை எல்லாம் தன் தலைப் பொறுப்பாக வைத்துக் கொண்டான். ஜாகை இசைவாணரின் வீட்டில் தான். அவர் தனியாகத் தான் இருந்தார். ஊரில் இருக்கும் போது அவருக்கு சமைப்பதற்கும் வீட்டுக் காரியங்களுக்குமாக ஒரு பெண்மணியும் அவர் உறவினர்களும் இருந்தனர். இசைவாணர் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டவர் என்றும், மணமுறிவு ஏற்பட்டு விட்டதிலிருந்து தனியாகத் தான் இருக்கிறார் என்றும் பேச்சு என்றாலும் அது குறித்து நாங்கள் பெரிதாக ஆராயப் புகவில்லை. ‘நமக்கு எதற்கு ஊர் வம்பு; தவிரவும் பையனின் குருநாதர்,’ என்று வாளாவிருந்துவிட்டோம்,
இசைவாணரைப் பொறுத்த வரை ஆதித்யா ஒரு கிடைத்தற்கரிய பொக்கிஷம். ஆனால் பெற்றோர் முள்ளாகக் குத்தினார்கள். பூக்கடை வைத்திருக்கும் ஒருவர் பூவின் வர்ணத்தையோ வாசனையையோ அழகையோ வடிவு நேர்த்தியையோ ரசிக்கப் புகுவதில்லை. அவரைப் பொறுத்தவரை அது கிலோ கணக்கு அல்லது முழம் கணக்கு எவ்வளவு எடுக்கலாம். எத்தனை மாலை கட்டலாம், என்ன விலைக்குப் போகும் லாபம் எவ்வளவு என்று தான் சிந்தனை ஓடும். இசைவாணருக்கும் அப்படியே. தன் சிஷ்யன் அல்லது தன் இசைப் பள்ளியின் மாணவன் என்று விளம்பரப் படுத்துவதில் என்ன ஆதாயம் என்று தான் சிந்தனை ஓடிற்று. தவிரவும் ஆதித்யா இசைச் சுரங்கம் போன்று ஒவ்வொரு முறையும் விதம் விதமான கணக்குகளுடன் போடும் ஸ்வரப் பின்னல்கள் மற்றும் கோர்வைகளை எப்படியாவது இழுத்துக் கொள்ள வேண்டும்; அதுவும் எங்களுக்குத் தெரியாமல்.
“கவலையே படாதீங்கோ, வெளிநாட்ல கொண்டு போய் உட்கார்த்தி வெச்சு ஆதித்யாவை நாலு ஸ்வரம் பாட வைச்சேன்னாப் போதும் – டாலராக் கொட்டிருவான்கள்,’ என்பார் அடிக்கடி. வெளிநாடு அவருக்கு மட்டுமல்லாது அவரது குடும்பத்திற்கே கொல்லைப்புறம் மாதிரி. “ஷோ கேஸ் பண்ணாப் போதும் இவன் இப்போ இருக்கற ஸ்டேஜே நம்மூர் பிஹெச்டிக்குச் சமானம் – ஒரு மேக்கப் போட்டு உட்காத்தி வைச்சேன்னாக்க சும்மா பிச்சுண்டு போயிடும். ” என்பார்.
கிளைகளை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார் இசைவாணர். நான் ஏற்கெனவே கூறியிருந்த பையனின் தாயார் இசையாசிரியராக இருந்ததால் வேலையை விட்டு விட்டு இவர் இசைப் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து விட்டார். அவர்கள் குடும்பமாக ஜாகையை மாற்றிக் கொண்டு சென்னையோடு வந்து விட்டார்கள். அந்த அம்மையார் நாள் பூரா கிளை கிளையாக இசை கற்றுத் தருவதற்காக அலைந்து கொண்டிருந்தார்.
இதெல்லாம் நடந்து வரும் சமயங்களில் தான் நான் பாண்டிச்சேரி மாறுதலாகிச் சென்றிருந்தேன். இசை வகுப்புகள் ஏனோ தானோவென்று நடந்து கொண்டிருந்தன. ஆனால் யாராவது முக்கியப் புள்ளி இசை சம்பந்தப் பட்டவர், இசைப் பள்ளிக்கு வந்தால் அவரிடம் ஆதித்யாவைக் காண்பதில் இசை வாணர் குறியாக இருப்பார்.
இந்த சமயத்தில் ஒரு வெளிநாட்டு சானல் ஒன்றிற்காக இசைவாணர் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, தொடர்ச்சியாக பல இசைக் கலைஞர்களை வைத்து ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார். ரொம்பப் பிரபலமாகாத கலைஞர்களிலிருந்து யாருக்குமே தெரியாத கலைஞர்கள் வரை தொடர்ச்சியாக ஒருவர் மாற்றி ஒருவர் பாடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஆதித்யாவைப் பாட வைக்க வேண்டுமென்று அவனை அழைத்துக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார். என் மனைவியும் ஆதித்யாவை இழுத்துக் கொண்டு சென்றிருக்கிறார். அப்போதெல்லாம் இசைவாணர் ஆதித்யாவிடம் நிறைய பேசி அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பிடிக்குள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருந்த நேரம்.
ஆதித்யா வழக்கம் போல் பிடிவாதம் பிடித்திருக்கிறான் தன் சந்தர்ப்பம் வரும் போது ஸ்ருதியை மாற்றச் சொல்லியிருக்கிறான் என்று நினைக்கிறேன். அவன் ஒன்றைப் பிடித்தால் பிடித்த பிடிதான் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இது சம்பந்தமாக ஆதித்யாவை இசைவாணர் வற்புறுத்திக் கொண்டிருந்ததும் ஆதித்யா “நோ நோ” என்று மறுத்துக் கொண்டிருந்ததும் நடந்து கொண்டிருந்திருக்கிறது. என் மனைவி ரசாபாசம் வேண்டாம் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போது என்று கருதி “அவன் இஷ்டப்படியே விட்டுடுங்கோ; அவன் பாடிடுவான்,” என்றிருக்கிறாள் எதார்த்தமாக. அவளை உறுத்துப் பார்த்து விட்டு இசை வாணர் வெளியில் சென்றிருக்கிறார். ஆதித்யா பாடி முடிக்கிற வரையில் எட்டியே பார்க்கவில்லை. ஆதித்யாவிற்கு முன்னால் பாடியவர் பஜனைப் பாடகர். கோஷ்டியுடன் பாடிக் கொண்டிருந்தவர். ஆதித்யாவின் பாட்டைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு “ஆஹாகாரம்” செய்திருக்கிறார். ஒரே கைத்தட்டல்.
நிகழ்ச்சி முடிந்த பின் அன்று என் மைத்துனியை இசைவாணர் கூப்பிட்டு “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆதித்யாவும் அவன் அம்மாவும் ? மெட்றாசிலே அவன் எந்த சபாவில் பாடிட்றான்னு நானும் பார்த்துடறேன். ஜ வில் ஹாவ் ஹிம் த்ரோன் அவுட் அஃப் ஆல் சபாஸ்,” என்று ‘காச்மூச்’ சென்று கத்தியிருக்கிறார். எங்களுக்கு வயிற்றைக் கலக்கியது. என்ன ஆகி விட்டதென்று இப்படிக் குதிக்கிறார் என்று புரியவில்லை.
“நான் இன்னாரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டேன். அவர் வீட்டுக்கு மதியம் நான்கு மணிக்கே போய் விடுவேன். எல்லோருக்கும் க்ளாஸ் முடித்து விட்டு குருநாதர் எனக்குக் க்ளாஸ் எடுக்க ஒன்பது மணியாகி விடும் அப்போ முடிவு பண்ணினேன் என் கதி என் சிஷ்யன் ஒருத்தனுக்கும் வரக் கூடாதுன்னு. ’ என்று சொல்லிக் கொண்டிருந்தவர்! பிள்ளையைக் கொடுத்துவிட்டு நாங்கள் சுத்தமாக நகர்ந்து விட வேண்டும். எந்தவித பாத்யதையும் நாங்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று அவர் எதிர்பார்ப்பது எங்களுக்கு புரிந்தது.
எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்த இது போன்ற சிறு சிறு அவமானங்கள் நாளாவட்டத்தில் பழகி விட்டன. பையன் முன்னுக்கு வந்தால் போதுமென்கிற எண்ணம். ‘க்ளாஸுக்கு வா,’ என்று சொல்லி விட்டு வகுப்பெடுக்காமல் கழுத்தறுப்பது, தொலைபேசியில் உரையாடப் புகுந்தால் பாதி உரையாடும் போதே படக்கென்று தொலைபேசியை அணைப்பது என்ன கேட்டாலும் பதில் சொல்லாமல் மௌனம் சாதிப்பது போன்ற வகை அவமானங்கள். என்றைக்குப் பணம் கட்டுகிறோமோ அன்று மட்டும் வகுப்பு நன்றாக நடக்கும்.
இது இப்படியென்றால் பள்ளியில் வேறு ‘எடு எடு’ என்கிறார்கள். இவையெல்லாவற்றையும் ஆலோசித்து குடும்பத்தைப் பாண்டிச்சேரிக்கு பெயர்த்து விடுவது என்று முடிவு செய்தோம். இசைவாணரின் வகுப்புகளைப் பார்த்துக் கொள்ளலாம், கொஞ்ச நாள் ஆதித்யாவின் ஏனைய வளர்ச்சியில் கவனம் செலுத்தலாம் என்று தோன்றியது. அப்போதும் இசைவாணரை முற்றிலும் விட்டு விட நிச்சயிக்கவில்லை. இசைவாணர் எங்களிடம் ஏற்கெனவே ஆதித்யாவைத் தன் நெருங்கிய உறவினரிடம் வகுப்புகளுக்குக் கூட்டிச் செல்வதற்கு உறுதி அளித்திருந்தார். அவர் உறவினர் தந்தி வாத்தியக்காரர். பெரிய மேதை என்று கொண்டாடப்படுகிறவர்.
இந்த சமயத்தில் இசைவாணரின் உறவினர் வீட்டில் எதற்காகவோ விருந்து ஏற்பாடாகி இருந்தது. அந்த விருந்திற்கு ஆதித்யாவையும் என் மனைவியையும் அழைத்திருந்தார்கள். உறவினரை நாம் பெரிய இசைவாணர் என்று வைத்துக் கொள்ளலாம்.
கடற்கரையை ஒட்டிய ஒதுக்குப்புறமான இடத்தில் தனி பங்களா. கூடத்தில் முற்றத்துடன் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட விசாலமான வீடு. மொத்தமாக ஒரு ஐம்பது பேர்களை அழைத்திருந்தார்கள். அங்கே பெரிய இசைவாணர் ஆதித்யாவை “நீதான் ஆதித்யாவா? தினமும் உன் பேச்சுத் தான். இப்பத்தான் பாக்கறேன்,” என்று கட்டி அணைத்து கொண்டிருக்கிறார். என் மனைவிக்கு கண்ணீரே வந்து விட்டது. ஆதித்யாவை அவர்கள் வித்யாசமாக நடத்தாமல் அவன் விநோதங்களைப் புரிந்து கொண்டு அவனைத் தங்களில் ஒருவன் போல் நடத்தியது என் மனைவியை நெகிழ வைத்து விட்டது. எங்களுக்கு அப்போதிருந்த மன நிலையில் “இசைவாணர் வகுப்பு எடுக்காவிட்டாலும் பரவாயில்லை. எப்படியாவது பெரிய இசைவாணர் வகுப்பில் சேர்த்து விடுவதற்கு உதவி செய்தால் போதும்,” என்று தோன்றியதால் இசைவாணரின் தொடர்பை முற்றிலும் கத்தரித்துக் கொள்ள விரும்பவில்லை. அத்துடன் இதற்கெல்லாம் முடிவு கட்டியிருந்தால் பின்னால் இவ்வளவு அநுபவப்பட, சிரமப்பட நேர்ந்திருக்காது என்று தோன்றுகிறது.
நன்றி:சொல்வனம்
https://solvanam.com/?p=50967
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக