பதிவுகள் செய்யப் பத்து கட்டளைகள்:
1. மொழி: பண்டிதத் தமிழில் எழுத கூடாது. யாரும் படிக்க மாட்டார்கள். மொக்கை, மெர்சல், தரியல் போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். சொன்னார்கள் என்பதை 'சொல்லிட்டாங்கேய்' என்றால் தான் மரியாதை. புது வார்த்தைகளுக்கு அகராதிகளை புரட்ட வேண்டிய அவசியம் இல்லை. நான்கைந்து திரைப்படங்களை பார்த்தாலே போதும்.
2. கூடிய மட்டில் சுருக்கமாகப் பதிவுகள் இருக்க வேண்டும். ஒரு வரி அல்லது ஒற்றை வாக்கியம் போதுமானது. அது கூடிய மட்டில் சினிமாவில் வருகிற 'பன்ச் டயலாக்' மாதிரி இருந்தால் நல்லது. இளம் பெண்களாக இருந்தால் 'வானத்தில் சிட்டுக் குருவியைப் பார்த்தால் றெக்கை கட்டி பறக்குது மனசு' என்று சந்தேகாஸ்பதமாக சொல்லிவிட்டால் போதும். போகிற வருகிறவர்கள் 'லைக்குகளை' அள்ளி விடும்.
3. நல்ல சமுதாயத் தாக்கத்துடன் இருக்க வேண்டும். லஞ்சம், ஊழல்,எதேச்சாதிகாரம் போன்றவைகளுக்கு சாட்டையடி கொடுக்க வேண்டும். (அந்தரங்கத்தில் நாம் சற்று முன்னே பின்னே இருந்தால் பரவாயில்லை).
4. அரசியல்வாதிகள், திரைப்படப் பிரபலங்களைத் திட்ட வேண்டும். (கொஞ்சம் ஆபத்தான வழி; திருப்பி கேவலமாகத் திட்டுவார்கள் அந்தந்த பிரபலங்களின் அபிமானிகள் . பொறுத்துக் கொள்ளத் திராணி வேண்டும்.
5. மனைவிகள் கூடிய மட்டில் சம உரிமை பேச வேண்டும். (பெண்ணியம் பேசிய மாதிரியும் ஆயிற்று; வீட்டில் படுத்தும் கணவனை இடித்த மாதிரியும் ஆயிற்று.)
6. அடுத்தவர் போடும் பதிவுகளை பகிருவது. மிகவும் பாதுகாப்பான வழி. நாம் என்ன நினைக்கிறோம் என்பதைக் கடைசி வரையில் சொல்லவேண்டாம். இது இரண்டு மூன்று வகை. அப்துல் கலாம் அய்யா அல்லது பெருந்தலைவர் காமராஜர் படங்களை பகிர்ந்து கொண்டால் வம்புக்கே வேலையில்லை. எல்லோரும் அங்கீகரிக்கும் தலைவர்கள் இவர்கள்.
7. செயற்கரிய செயல்களை செய்பவர்களை பற்றிய செய்திகளை பாதுகாப்பாகப் பகிரலாம். விளையாட்டில் பதக்கம் வாங்குகிறவர்கள், ஏழ்மை நிலையிலிருந்து முன்னுக்கு வருகிறவர்கள், விட்டுச் சென்ற சாமானை நேர்மையுடன் திருப்பிக் கொடுத்த ஆட்டோ டிரைவர், நேர்மையான போலீஸ் அதிகாரி போன்றோர் பற்றிய பதிவுகள் இதில் சேரும்.
8. வைத்தியத்துக்கான ஆலோசனைகள். இதற்குச் சில குழுக்கள் உண்டு. அவற்றின் பதிவுகளை பகிரலாம். அல்லது நாமே தெரிந்ததைச் சொல்லலாம். யாரும் முயற்சி செய்யப் போவதில்லை என்பதால் பக்க விளைவுகள் பற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.
9. பதில் போடுவதற்கு சில வழி முறைகள் உண்டு. ஒரு நகைச்சுவை நடிகர் படம் போட்டு 'கெளம்பிட்டாங்கைய்யா கெளம்பிட்டாங்கெய்' அல்லது 'வெச்சுட்டான்யா ஆப்பு' என்று போடுவது இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெறுவதற்கான தகுதியை உண்டு பண்ணும். இல்லாவிட்டால் ஒரு பெரிய 'ஸ்மைலியைப்' போடலாம். 'பின்னிட்டே தலீவா' அல்லது 'கொன்னுட்டீங்க மேடம்' என்பதுடன் நிறுத்திக் கொள்வது நல்லது.
10. நம் படங்களை அடிக்கடி மாற்றுவது; அல்லது புதிது புதிதாகப் போட்டுக் கொண்டிருப்பது. பெண்களாக இருந்தால் இதற்குப் பெரிய வாசகர் வட்டம் உண்டு.