புதன், 27 டிசம்பர், 2017

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை IV

அத்தியாயம் 13

பாண்டிச்சேரி சென்ற பிறகு ஆதித்யாவிற்கு அங்கே பெரிய வாய்ப்பு ஒன்றுமில்லை என்று தெரிந்தது. சிறிய ஊர். ஃபிரெஞ்சு காலனியாக இருந்ததாலோ என்னவோ தமிழ் நாட்டின் இசை மற்றும் கலாச்சாரக் கூறுகளின் நிழல் தான் இருந்தது. ஜனங்கள் மிகவும் சாத்வீகமானவர்கள். எளிமையானவர்கள். அங்கு திராவிட இயக்கங்கள் தமிழ் நாட்டில் செலுத்தி வந்த எதிர் கலாச்சார விழுமியங்கள் அவ்வளவாக இல்லை என்று தான் கூற வேண்டும். ஆந்திரா போல், கர்நாடகம் போல் மக்கள் பெருமளவில் தேசீயத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகத் தானிருந்தனர். பிராமணர்கள் மற்ற ஊர்களை விட அங்கு கம்மி தான். என்றாலும் கோயில்களில் ஆன்மீகமும் தெய்வீகமும் பக்தியும் மற்ற ஊர்களைப் போலவே குறைவில்லாமல் தான் இருந்து வந்தன.
இசையைப் பொறுத்தவரை அரசுப் பள்ளி ஒன்று இருந்தது. அங்கு வாத்யங்கள் இசைப்பதற்கும் பாட்டு பயிற்றுவிப்பதற்கும் பாடத் திட்டங்கள் இருந்தன. மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தனர். தவிரவும் ‘ஜவஹர் யுவ கேந்திரா’ என்கிற மத்திய அரசு அமைப்பில் இசை போன்ற கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. ஒரு சங்கீத சபா இருந்தது. தன்னார்வலர் ஒருவர் நடத்தி வந்தார். எப்போதாவது பிரபலங்களின் கச்சேரி நடக்கும். ‘ஆல் இந்தியா ரேடியோ’ இசைக் கலைஞர்கள் இருந்தனர். என்றாலுமே சென்னை போலவோ தமிழ் நாட்டின் இதர சிறு நகரங்கள் போலவோ இசைக்கான பெரிய சந்தை கிடையாது. பெரிய அளவில் ராக ஆலாபனை செய்யக் கூடிய அளவிலோ, கற்பனா ஸ்வரங்கள் பாடக் கூடிய அளவிலோ பெரிய வித்வான்கள் இல்லை என்பது தான் உண்மை.
ஆதித்யாவிற்கு திடீரென்று சங்கீத வெளிச்சம் கம்மி ஆகிக் கொண்டிருக்கிறது என்று எண்ணத் தலைப்படலானோம். அந்த சமயத்திலும் சென்னை இசைவாணரிடம் தொடர்பில் தான் இருந்தோம். ஆதித்யாவைப் பொறுத்த வரை ஒரு பிரச்னையும் இல்லை. அவன் உண்டு. அவன் இசை உண்டு. டேப் ரிகாடரில் டேப் செய்வதை அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருந்தேன். கீபோர்டை வைத்து வாசித்துக் கொண்டிருப்பான். அதை காஸட் காஸட்டாக டேப் செய்து கொண்டிருந்தான். தவிரவும் அவனே வீட்டில் இருக்கும் தட்டு முட்டு சாமான்களை வைத்து ‘ட்ரம்ஸ்’ செட் செய்து கொண்டிருந்தான். அடிப்பதற்காக ஒரே அளவில் இரண்டு குச்சிகளை அவன் வெளியில் எங்காவது செல்லும் போது தயார் செய்து கொள்வது வழக்கம். அதை வைத்து அவ்வப்போது வாசித்துக் கொண்டிருப்பான். பாட்டும் வாய் ஓயாமல் பாடிக் கொண்டிருந்தான்.
அப்போது இசைவாணரைத் தொடர்பு கொண்டிருந்த போது அவர் தெளிவாகக் கூறினார். “நீங்க அவனுக்கு என்ன ஐடியா வெச்சுருக்கேள் தெரியாது. ஆனால் அவன் தனியா சில திட்டங்கள் வைச்சுருக்கறதாத் தான் தெரியறது. அவனுக்கு பாட்டுல தான் போற ஐடியா இருக்கு. அவன் இஷ்டப்படி விடறது தான் நல்லது. நாங்கள்லாம் என்ன பெரிசாப் படிச்சுட்டோம்? உண்மையாப் பாத்தா படிச்சவாளை விட நாங்க நன்னாத்தான் சம்பாதிக்கறோம். உலகம் பூராச் சுத்தறோம்….”
அதெல்லாம் சரி. வகுப்புகள்? பாண்டிச்சேரியிலேயே ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று ஆலோசித்தோம். சென்னையில் எதிர் வீட்டுப் பெண்மணி என்று சொன்னேனே அவர் திருவஹிந்தபுரத்துக்காரர். ஏற்கெனவே வீணை கற்றுக் கொண்டிருந்தவர். அவருடைய குரு அங்கே பக்கத்து ஊரில் இருந்தார். நல்ல வீணை வித்வான். வாய்ப் பாட்டிலும் நல்ல வித்வத். அவரிடம் கற்றுத் தருவதற்கு ஏற்பாடாயிற்று. அவர் வாரா வாரம் வந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார்.
“சார்! ஃபீஸ் எவ்வளவு கொடுக்கணும்?” என்றேன்.
“என்னோட பஸ் சார்ஜுக்கு மட்டும் கொடுத்தாப் போதும்” என்றார். பழுத்த பழம்- வாழ்வில் நிறைய அடிபட்டவர். குழந்தைகள் முன்னுக்கு வராததால் எழுபத்தைந்து வயதிலும் உழைக்க நிர்பந்திக்கப்பட்டவர். அவரைப் பற்றிக் கேள்விப் பட்டு வெளிநாட்டுக்காரர்களும் வீணை கற்றுக் கொள்ள வந்து கொண்டிருந்தார்கள். என்றாலும் பெரிய பணம் பண்ண சாமர்த்தியம் இல்லாதிருந்தார். சாமர்த்தியம் இல்லை என்பதை விட வேண்டாம் என்றிருந்தாரோ என்று தோன்றும்.
அவருக்கு “இசைக்காகப் பெரிய தியாகங்கள் செய்து விட்டோம்; அதெல்லாம் பெறுமானம் தானா?” என்கிற சந்தேகமும் இருந்தது.” ஓலைச் சுவடில்லாம் தேடிப் போய்ப் பாத்துப் பாட்டுக் கத்துண்ட காலம் உண்டு….” என்று பெருமூச்செறிவார். அவர் பேருந்தில் வரும் போது குடிப்பதற்காகக் கையில் ஒரு மெதுபான பாட்டிலை வைத்திருப்பார். ஆதித்யா அவர் வந்தவுடனே அதை முதலில் வாங்கிக் குடித்து விட்டுத் தான் வகுப்பை ஆரம்பிப்பான். அதற்கெல்லாம் அவரிடம் பெரிய ஆட்சேபணை இருந்ததில்லை. அவனுக்கென்று தனியாக ஒரு பாட்டிலை வாங்கி வர ஆரம்பித்திருந்தார். சுமார் ஒன்று ஒன்றரை மணிநேரம் வகுப்பு நடக்கும். மெல்லிய இனிமையான குரலில் பாடுவார். பாடி முடிந்தவுடன் அந்தப் பாட்டை அவர் கையாலேயே ஸ்வரப் படுத்திப் பாட்டாக எழுதிக் கொடுப்பார். இது கொஞ்ச நாள் ஓடிற்று. நல்ல வித்வத் உள்ளவராயினும் ஆதித்யாவின் கற்பனா ஸ்வரங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினார். ஆதித்யாவிற்குக் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வாரஸ்யம் போய்க்கொண்டிருந்ததை எங்களால் உணர முடிந்தது.
அப்போது தான் ஆதித்யா கச்சேரி செய்வதற்கான முயற்சிகளில் இறங்கியிருந்தோம். அதைத் தூண்டுவதற்கு ஒரு முக்கியமான சம்பவம் காரணமாக இருந்தது. அதை முதலில் விவரித்து விட்டுப் பின்னர் ஆரம்பக் கச்சேரிகளைப் பற்றிச் சொல்லலாமென்று நினைக்கிறேன்.
பாண்டிச்சேரிக்கு ஜாகை பெயர்ந்த பிறகு அட்மிஷனுக்குப் பள்ளி விடுமுறை கழிந்து திறப்பதற்கும் இடைப்பட்ட காலத்தில் பரிசோதனை முயற்சியாக இசைவாணருடன் ஆதித்யாவை விட்டு விடலாம் என்று ஒரு ஏற்பாட்டில் இறங்கினோம். இது இசைவாணரின் தூண்டுதலின் பெயரிலும் வற்புறுத்தலின் பெயரிலும் நடந்தது தான். அவர் எல்லாவற்றிற்கும் தயாராக பதில் வைத்திருந்தார். “அவனை நான் ஸ்கூல்ல போட ஏற்பாடு பண்ணிடறேன்” என்று கூறி இரண்டு பள்ளிகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். “அவன் என்னோட இருப்பான்: நம்மாத்திலேருந்து ஸ்கூலுக்கு போவான்; வருவான்” என்றார். எங்களுக்கு மிகவும் திகைப்பாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. ஆதித்யாவும் அவருடன் மிகவும் ஸ்வாதீனமாய்ப் பழகிக் கொண்டிருந்தான். அவரைப் பெயர் சொல்லித்தான் கூப்பிடுவான். அவருக்கு அதைப்பற்றிப் பெரிய ஆட்சேபணைகள் இல்லை. தனக்குள் சிரித்துக் கொள்வார். எங்களுக்கும் இதை முயற்சி செய்து பார்க்கலாம் என்றிருந்தது. அவருடன் சங்கீதத்தில் முயன்று கொண்டிருந்த அவரின் உறவினரும் இருந்தார். நான் ஏற்கெனவே கூறியிருந்த சிஷ்யப் பையனும் அவருடன் தங்கிக் கொண்டிருந்தான். சமையலுக்கும், வேலைக்கும் ஆட்கள் வீட்டோடு இருந்தனர்.
ஒரு சுபயோக சுபதினத்தில் ஆதித்யாவை அவன் உடைகள் கீபோர்ட் சகிதமாக அவர்கள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டோம். இசைவாணர் எங்களின் எந்தக் கவலையும் பொருட்படுத்தத் தயாராக இல்லை. அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்கிற ரீதியில் சிரித்து ஒதுக்கினார். நாங்கள் போயிருந்த சமயம் காலை. சாப்பிடாமல் போயிருந்தோம். எங்கள் முகங்களை உற்று நோக்கி விட்டு “நீங்க சாப்பிடலை போலிருக்கே? இங்கியே சாப்பிட்டுடுங்கோ…” என்று சமையற்காரப் பெண்மணியை அழைத்து தோசை வார்த்துக் கொடுக்க சொல்லி விட்டார். நாங்கள் சாப்பிட்டோம். ‘இவ்வளவு இங்கிதம் தெரிந்த மனிதராக இருக்கிறாரே” என்று நெகிழ்ந்து போனோம்.
பாண்டிச்சேரி திரும்பி விட்டோம் ஆதித்யாவை விட்டு விட்டு. வாழ்க்கையே வெறிச்சோடிப் போய்விட்டது. அல்லும் பகலும் ஆதித்யா என்ன செய்கிறானோ என்கிற விசாரம். என் மனைவி கண்ணீராகப் பெருக்கிக் கொண்டிருந்தாள். நான் அவ்வப்போது இசைவாணரிடம் தொலைபேசியில் பேச முயல்வேன். அவர் பட்டுக் கத்தரித்தாற் போல் ரத்தினச் சுருக்கமாகப் பேசி விட்டு முடித்து விடுவார். சில சமயங்களில் அழைப்புக்கு பதில் இருக்காது. ‘பிஸியாக’ இருப்பதாகக் குறுஞ்செய்தி வரும். நடுவில் ஒரு நாள் ஆதித்யாவிற்குப் பிறந்த நாள் வந்தது. உடைகள் வாங்கி இசைவாணரின் முகவரிக்குக் கூரியரில் அனுப்பினோம். உடைகள் கிடைத்ததா என்று போன் செய்தால், ‘கிடைத்தது’ என்கிற சுருக்கமான பதில். “ஆதித்யா எப்படி ஒருக்கான்?” “ஹி இஸ் ஃபைன்”. அத்தோடு சரி. என்ன நடக்கிறதென்று புரியாமல் திணறினோம்.
பின்னாளில் அவர்கள் வீட்டிலிருந்த வேலைக்காரப் பெண்மணியிடம் என் மனைவி பார்த்தபோது விசாரித்திருக்கிறாள். இசைவாணர் தன் இசைப் பள்ளியை அப்போது தான் ஓரளவிற்கு நிலை நிறுத்தியிருந்தார். அதற்காக உழைக்க வேண்டியிருந்தது. அங்கு பணி புரிபவர்களை நிர்வாகம் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. தவிரவும் சபா சம்பந்தமான வேலைகள். பல சமயங்களில் ஆதித்யாவை வீட்டில் விட்டு விட்டுச் சென்று விடுவாராம். அவர் உறவினரும் மிகவும் பிஸியான மனிதர். ஆதித்யாவை எங்காவது கூட்டிக் கொண்டு போனால் அவர் அவனை விட்டு அங்கே இங்கே கண்ணைத் திருப்ப முடியாத நிலை. எனவே பல சமயங்களில் கூட்டிச் செல்ல முடியாத நிலை.
ஆதித்யா வழக்கம் போல் வீட்டில் இருந்து கொண்டு பாடிக் கொண்டிருக்கிறான். இசைவாணர் இரவு வீடு திரும்பினால் அவரிடம் இசை சம்பந்தமாகக் கேள்விகளாகக் கேட்டுக் கொண்டிருப்பானாம். ஏதாவது கோர்வையைப் போட்டு விட்டு பாடச் சொல்லி வற்புறுத்துவானாம். அவர் களைப்பாகக் கண்கள் கிறங்க உறங்க முயன்றாலும் விடுவதில்லை. அவரை ஏதாவது கேள்வி கேட்டு உலுக்குவானாம். அவருக்கு தூக்கமோ களைப்போ ஆதித்யாவுக்கு பதில் சொல்லாமல் தூங்க முடியாது. இப்படி ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. அவருக்கு ஆதித்யாவைத் தவிர வேறொன்றும் நினைப்பில்லாத நிலை. வெளியில் போனாலும் இதே நிலை.
ஆதித்யாவைப் பொறுத்தவரை அவன் வேளா வேலைக்கு சாப்பிடுகிறானா என்று யாருக்குமே அக்கறையில்லாத நிலை. குளிக்கிறானா கண்காணிக்க யாருமில்லை. தலையில் எண்ணெய் இல்லை. உடைகள் துவைக்கப்படாமல் இருந்தன. நாங்கள் ஒரு முறை அவனை பார்க்கச் சென்றிருந்த போது இவையெல்லாம் எங்களுக்குக் கண்ணில் பட்டன. வீட்டில் இருக்கும் போது அவன் ஆட்சேபணைகளையும் பொருட்படுத்தாது என் மனைவி மல்லுக்கட்டி அவனுக்கு உணவைக் கொடுப்பாள். அப்படியிருந்த அவன் எங்களைப் பார்த்து “கிவ் மீ ஃபுட்” என்று கேட்டது வயிற்றெரிச்சலாக இருந்தது.
சிஷ்யப் பையனின் அன்னையை அப்போது சந்திக்க நேர்ந்தது. அவர் பிள்ளையும் அங்கே இசைவாணர் வீட்டிலே இருக்கிறான் என்பதால் அவரிடம் பேசிக் கொண்டிருந்தோம். அவர் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு, “அழைச்சுண்டு போயிடுங்கோ இங்கியே விடறது எல்லாம் வேண்டாம், கிளாஸுக்கு அழைச்சுண்டு வந்துட்டு கூட்டிண்டு போயிருங்கோ. ராத்திரி இங்க விடறது எல்லாம் வேண்டாம்” என்றார். அது வேறு வயிற்றைக் கலக்கியது.
“முடிஞ்சா எங்க ஊருக்குக் கூட்டிண்டு போய் என் பையனோட பழைய குருநாதர்ட்ட விட்டுருங்கோ. அவர் நன்னா சொல்லிக் கொடுப்பர்,” என்றார். என்ன நடக்கிறது என்று புரியாத நிலை. எங்களை எடுத்துவிடு என்று வற்புறுத்துகிறவர் தன் பையனை ஏன் அங்கு விட்டு வைத்திருக்கிறார் என்று புரியவில்லை. ஒரு வேளை இவர் கேட்டுக் கொண்டும் பையன் இணங்கவில்லையோ என்னவோ!
நடுவில் எனக்கு நாலு நாள் விடுமுறை வந்தது. அந்த சமயத்தில் ஆதித்யாவைக் கூட்டிக்கொண்டு பாண்டிச்சேரியில் அவன் நான்கு நாட்கள் இருந்த பின் திரும்பக் கொண்டே விட்டு விடலாம் என்று நிச்சயம் செய்தோம். இசைவாணரிடம் பேசினோம். அவர் சொன்னார் “கொஞ்ச நாளைக்குக் கூட்டிண்டு போங்கோ, நானே இப்பத்தான் பிஸினஸை ஸ்தாபிச்சிண்டிருக்கேன். இவன்கிட்ட ‘கான்ஸன்ட்ரேட் பண்ண முடியலை. ஏதாவது ஏற்பாடு பண்ணிக்கலாம்…….” என்றார். எங்களை ஏற்கனவே ஆதித்யா பார்த்திருந்த போது “பாண்டிச்சேரி வரமாட்டேன்; அண்ணாவுடன் தான் இருப்பேன்,” என்று நாங்கள் கேட்காமலேயே சொல்லிக் கொண்டிருந்தான். இது போல் அவனைச் சொல்லச் சொல்லிப் பழக்கியிருக்கிறாரோ இசைவாணர் என்கிற சந்தேகம் எனக்கிருந்தது. அதைக் கொஞ்சம் சமத்காரமாகச் சமாளிக்க வேண்டிய கட்டாயம்.
இசைவாணரின் உறவினர் வேறு எங்களிடம் “ஸ்வீகாரம் மாதிரி ஏதாவது ஏற்பாடு வேணும்னா பண்ணிக்கலாம்” என்று ஏற்கெனவே கூறியிருந்தார் எங்களிடம். அது வேறு வயிற்றில் புளியைக் கரைத்தது.
நான் மட்டும் ஒரு நாள் சென்று வீட்டில் தனியாக இருந்த ஆதித்யாவை இசைவாணரிடம் தெரிவித்துவிட்டு கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். பாண்டிச்சேரி என்று சொல்லவில்லை. யாரையோ பார்க்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தான். “வா, அவரைப் பார்க்கலாம்” என்று அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். பாண்டிச்சேரி என்று முதலில் அவனுக்கு புரியவில்லை. பேருந்து பாண்டிச்சேரியை நெருங்கியதும் தான் புரிந்தது. அழ ஆரம்பித்தான். ஏதோ சமாதானம் செய்து விட்டதும் சரியாகி விட்டான். இத்துடன் இசைவாணர் வீட்டில் விட்டிருந்த படலம் முடிவுக்கு வந்தது.
இசைவாணரின் உறவினர் ஸ்வீகாரத்தைப் பற்றிப் பேசியதற்கு நாங்கள் ஒரு ரியாக்ஷனும் காட்டாதது அவர்களை வெறுப்பேற்றியிருக்கிறது. அவனை தங்களுடனேயே வைத்துக் கொண்டு வெளியுலகிற்குக் காட்டாமல் விஷயங்களை வாங்கிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தார்களோ என்னவோ! என் மனைவி நிஷ்டூரமாக “நன்னாயிருக்கு; இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வளத்துட்டு இவாள்கிட்ட போய் பிள்ளையைக் கொடுப்பாளாக்கும்?” என்றாள்.
இசைவாணரிடம் நாங்கள் எதிர்பார்த்தது சீரான வகுப்புகள் மற்றும் கொஞ்சமாகக் கச்சேரி அரங்குகளில் அறிமுகம். வகுப்புகள் நடக்கவேயில்லை. கற்றுக் கொண்டதெல்லாம் அவனாகக் கற்றுக் கொண்டது தான். அறிமுகம் என்றால் யாராவது பெரிய இசைவாணர் அவர்கள் பள்ளிக்கு வந்தால் அவர்களை பயமுறுத்த மட்டும் ஆதித்யாவை முன்னிறுத்துவது வழக்கம். சிஷ்யப் பையனின் பழைய குருநாதர் ஒரு நாள் இசைப்பள்ளிக்கு வந்திருக்கிறார். இசைவாணர் முதற்கொண்டு அவரிடம் பல்லவி கற்றுக்கொள்வதாக ஏற்பாடு. ஆதித்யா பாடியதைக் கேட்ட அவர் “பெரிய மகான்” என்று கூறிவிட்டுச் சென்றாராம், சிஷ்யப் பையனின் அன்னையே எங்களிடம் கூறினார்.
இப்படி இருக்கும் போது என் மனைவிக்கு இவனைக் கச்சேரி செய்ய வைத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. நாங்கள் அப்போதிருந்த மன நிலையில் எனக்கு இது ஒரு தேவையில்லாத ஒரு விபரீதப் பரிசோதனை என்று தோன்றியது. ‘நிறைய குழந்தைகள் பாடுகிறார்கள்; இவனை எல்லோரும் நிபுணன் என்று கொண்டாடுகிறார்கள். வகுப்புகள் நடத்தத் தயக்கங்கள் இருக்கின்றன. இது என்னதான் என்று பார்த்து விடுவோமே’ என்று அவளுக்குத் தோன்றியிருக்கிறது.
எங்கள் எதிர் வீட்டுப் பெண்மணியுடன் தொடர்பு கொண்டோம். எங்கள் காலனியில் உள்ள பிள்ளையார் கோயிலில் நிறைய பணக்கொடைகள் செய்திருப்பதால் நல்ல தொடர்பில் உள்ளவர். அவர் கோயில் நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு நவராத்திரியின் போது ஆதித்யாவின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்து விட்டார்.
இப்படியாகத் தானே ஆதித்யா கச்சேரி செய்யும் படலம் ஆரம்பம் ஆகியது.

அத்தியாயம் 14

எப்போதும் கச்சேரிக்குப் பாடிக் கொண்டிருப்பவனுக்கு ஒத்திகை ஒன்றும் தேவையில்லை என்பது என் மனைவியின் அநுமானம். அவள் அவனிடமே கேட்டு ஒரு பாட்டு ஜாபிதா தயார் செய்து வைத்திருந்தாள்.  எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு என் குடும்ப சகிதமாய்க் கிளம்பினாள். அந்த சமயத்தில் எல்லாம் என் ஃபிளாட்டை வாடகைக்கு விட்டிருந்ததனால் சொந்த வீட்டில் போய்த் தங்க முடியாத நிலை. எனவே உறவினர் வீட்டிற்குப் படையெடுத்தோம். வழக்கமாகத் தங்கும் ஒரு உறவினர் வீட்டுப் பிள்ளைக்குப் பரிட்சை நடந்து கொண்டிருந்ததால் வேறோர் உறவுக்காரர் வீட்டில் போய்த் தங்கினோம். முதலில் என் மனைவியும் குழந்தைகளும். பின் நான்.
அந்த உறவினர் ஒரு பெரிய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் அப்போது தான் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு வந்திருந்தார். மனைவி பிள்ளைகள் என்று சம்சாரி. ஓரளவு பஜனைப் பாடல்கள் பாடுவது உண்டு. வேதம் கற்றுக் கொண்டிருந்தார். பிள்ளைகளும் சொல்வார்கள். அவர்கள் பரம்பரையில் நல்ல ஆன்மீகமாக உள்ளவர்கள். அது அவர் வந்த வழி, பொது நல நோக்கும் சேவை மனப்பான்மையும் உண்டு. அது போன்ற ஒரு நோக்கில்தான் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு சென்னையோடு வந்து விட்டார். வந்த இடத்தில் தன் தொடர்புகளைப் பயன்படுத்தி ஒரு நல்ல தனி வீடாக வாடகைக்கு எடுத்துக் கொண்டார். பெரிய புத்தக சேகரம் வைத்திருந்தார். அதையே மூன்று நான்கு ஆளுயர பீரோக்களில் அடுக்கியிருப்பார்கள் அவர்கள் வீட்டில் இதைத் தவிரவும் கடவுள் சிலைகள், ஓவியங்கள், பெரிய சங்கராச்சாரியார் படம் என்று வீடே அமர்க்களமாக இருக்கும். அதையெல்லாம் தூசி துடைத்துப் பாலிஷ் போட்டுப் பாதுகாப்பதில் குடும்பமாகச் செயல்படுவார்கள்.
அவர் என் போன்றவர்களிடமெல்லாம் பேசும் போது ஒரு மேட்டிமைத்தனம் அவரையும் அறியாமலேயே வெளிப்படும். “அய்யோ பாவம்! வேதமும் தெரியாது. ஆன்மீகமும் தெரியாது. வாழ்வியல் வழிகளும் தெரியாத ஜென்மங்கள்,” என்கிற தொனி தென்படும். அவர்கள் மட்டுமல்லாது அவர்கள் குஞ்சு குளுவான்களுக்கும் அதே மேட்டிமை உணர்வு. ‘ஏதோ பிழைத்துப் போகட்டும்’ எங்கிற ரீதியில் நடந்து கொள்வார்கள். ஆன்மீகம், அருள், தெய்வீகம், சடங்குகள், பாடல்கள், கர்நாடக சங்கீதம், சேவை மனப்பான்மை எல்லாவற்றிற்கும் அவர்க்ள் தாம் மொத்தக் குத்தகை போன்று நடந்து கொள்வார்கள்.
சாதாரண சமயங்களில் பெரிய விலக்குகள் இல்லாமலும் விலங்குகள் இல்லாமலும் நடந்து கொள்கிறவர்கள் என்னையும் என் மனைவியையும் பார்த்தால் அப்படியே மாறிவிடுவார்கள். ‘மடி ஆசாரம் சுத்த பத்தம் ஒன்றும் கிடையாது; சுத்த பாஷாண்டர்கள்,’ என்று அவர்கள் எங்களைப் பற்றி நினைப்பது அவர்கள் பார்வையிலேயே தெரியும். நாங்கள் இருக்கிற வரை அதற்காக அவர்களின் தினசரி நடவடிக்கைகளை அப்படியே மாற்றிவிடுவார்கள். சந்தி என்ன, பூஜை என்ன, புனஸ்காரம் என்ன என்று ஒரே அமர்க்களமாக இருக்கும், பேசினால் ஒரே தத்துவம்; ஆன்மீகம், குட்டிக் கதைகள், அறிவுரை மழை. எங்களுக்கு தெரிந்த ஏதாவது ஸ்லோகத்தைச் சொல்லச் சொல்லி எங்களிடம் அதற்குப் பொருள் கேட்டு வெறுப்பேற்றுவது. தப்பித் தவறி நாங்கள் சொல்லி விட்டால் ‘அது சரியான பொருள் கிடையாது,’ என்று வேறு எதையாவது கண்டு பிடித்துச் சொல்வது என்று போட்டுப் பந்தாடி விடுவார்கள்.
அந்த உறவினருக்கு ஆதித்யா போன்ற ஒரு குழந்தை எங்கள் குடும்பத்தில் பிறக்கலாமா; இது ஆண்டவனுக்கே அடுக்குமா; தங்கள் குடும்பத்தில் அல்லவா இது போன்ற ஒரு குழந்தை பிறந்திருக்க வேண்டும் என்கிற எண்ணம். அது எங்களுக்கான பெருமையல்லாது,இகழ்ச்சியைத்தான் கூட்டி விட்டது.
கச்சேரிக்காக உறவினர் வீட்டில் போய்த் தங்க நிச்சயித்தவுடன் என் மனைவி குழந்தைகளுடன் நான்கு நாட்கள் முன்னதாகவே போய் விட்டாள். அந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் கொலு வைத்திருக்கிறார்கள். விதம் விதமான பொம்மைகள் அலங்காரம் சீரியல் செட் விளக்குகள் என்று அமர்க்களமாக இருக்கும். நிறைய பூக்களை வைத்து பகல் பன்னிரண்டு மணிக்குத் தான் பூஜை செய்வார்கள். பழங்கள், அன்றைக்கான சுண்டல் எல்லாம் நைவேத்யம் செய்வார்கள். லலிதா சகஸ்ர நாம பூஜை செய்வார்கள் என்று நினைக்கிறேன். என் மனைவி முன்னதாகச் சென்ற காரணம் இசைவாணரிடம் கூட்டிச் சென்று, ஒன்றிரண்டு ஒத்திகை பார்த்து விட வேண்டுமென்கிற எண்ணம்.
நான் விடுமுறை இல்லாத்தால் கச்சேரிக்கு முதல் நாள் செல்வதாக ஏற்பாடு. நடுவில் ஒருமுறை என் மனைவியைத் தொலைபேசியில் அழைத்த போது ‘என்ன நடந்து கொண்டிருக்கிறது?’ என்று கேட்டேன் யதார்த்தமாக. மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலையில் இருந்தாள். விருந்தாகப் போன இடத்தில் பூஜை புனஸ்காரம் என்று பிழிய வேலை வாங்கியிருக்கிறார்கள். பன்னிரண்டு மணிக்குத்தான் உணவு. உறவினருக்கு எடுபிடி வேலைகளையும் செய்ய வேண்டிய கட்டாயம். போதாதென்று உறவினர் ஆதித்யாவைத் துரத்தித் துரத்தி “ததரினா ததரினா ….” என்று தனக்குத் தெரிந்த ராகத்திலெல்லாம் பாட்டுப் பாடி ‘இது என்ன ராகம்; அது என்ன ராகம்’ என்று பிராணனை வாங்கியிருக்கிறார். ஆதித்யா தொல்லை தாங்க முடியாமல் தவித்திருக்கிறான். இது இப்படியென்றால் இசைவாணர் கச்சேரிக்கான எந்தவித ஒத்திகையிலும் முனைப்பு காட்டவில்லை. ‘எல்லாம் பாடிடுவான்; பிராக்டிஸெல்லாம் ஒன்றும் வேண்டாம்,’ என்று கழுத்தறுத்திருக்கிறார். இவர்கள் தானே ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; இவர்களே சமாளித்துக் கொள்ளட்டும்’ என்கிற அலட்சியம்.
உறவினரின் மனைவியின் தம்பி பிள்ளை மாற்றுத்திறனாளி. அதை வைத்து அவர் இரண்டும் இரண்டும் நாலு என்று கணக்குப் போட்டு ‘இதெல்லாம் செய்யக்கூடாது. மனநல நிபுணரிடம் காண்பித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்’ என்று உறவினரிடம் ஏதோ ஓதிவிட அவர் என் மனைவியைப் பார்த்து “கச்சேரி பண்ண வைக்கிறாளாம் கச்சேரி. போய் சைக்காட்ரிஸ்டிஸ்ட்டே காமிடி,” என்று காட்டுக்குக் கூச்சலாகக் கத்தியிருக்கிறார். அவர் மனைவியும் அவருடன் சேர்ந்து கொண்டு,“சட்டை பாண்டைக் கிழிச்சிண்டு தெருவில ஓடாம இருக்கானேன்னு சந்தோஷப் பட்டுக்கோ,” என்று கூறியிருக்கிறார். ‘ஃபிராயிடின் பிறழ்வு’ என்பார்கள். மனதில் இருப்பது தன்னை அறியாமல் வெளியில் வந்து விடும் என்பார்கள்.
கச்சேரிக்கு முதல் நாள் நான் அங்கே போய்ச் சேர்ந்த போது சூழ்நிலை மிகவும் கொந்தளிப்பாக இருந்தது, என் மனைவி அழுதழுது வீங்கிய கண்களுடன் காணப்பட்டாள். உறவினர் என்னைப் பார்த்து வேறு ஒரு பாட்டம் கத்தினார். நான் என்ன செய்ய முடியும்? தஞ்சம் என்று வந்த இடத்தில் இப்படி.
இந்த உறவினருக்கு ஒரு சகோதரி அகாலமாக மரணமடைந்து விட்டார், நீண்ட வருடங்களுக்கு முன்பு. அதன் காரணமாகவோ என்னவோ அவர்கள் குடும்பத்தில் இரண்டு மூன்று தலைமுறைகளாகப் பெண் குழந்தையில்லை எங்கிற மனத்தாங்கல் வேறு அவர்களுக்கு இருந்தது. அப்படியிருக்கும் போது நவராத்திரியும் அதுவுமாக இப்படி ஒரு சுமங்கலியை அழ அடிக்கிறார்களே என்கிற வயிற்றெரிச்சல் எனக்குத் தாங்க முடியவில்லை என்பது தான் நிஜம்.
உறவினருக்கு பஜனை வழியில் ஒரு குருநாதர் உண்டு. அவர் குறி சொல்லும் திறன் கைவரப் பெற்றிருந்தவர். அவரிடம் போய் உறவினர் வகையறா ஆதித்யாவைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள். அவர் சாதாரணமாக, ‘கவலைப்பட ஒன்றுமில்லை; பல காலத்திற்கு முன் வாழ்ந்து மறைந்த பெரிய காற்று வாத்திய மேதை போல் தான் அவன்,” என்று கூறியிருக்கிறார். மனித இயல்பு யாராவது நல்லது சொன்னால் அதை ஒப்புக் கொள்வதில்லை. யார் என்ன குற்றம் சொல்வார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இது பொதுவான மனித சுபாவம் தான்.
மறுநாள் கோயிலில் கச்சேரி. எங்களுக்குத் தெரிந்தவர் கூடியிருந்தனர். மற்ற சமயங்களில் புரியாத வகையிலும் குழந்தை போலும் நடந்து கொள்ளும் ஆதித்யா ஒரு பெரிய இசைக்கலைஞன் போல் அன்று அருமையாகப் பாடினான். பாராட்டுகள் குவிந்தன. உறவினர்க்கும் அவர் மனைவிக்கும் பாராட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. மறைந்த இசைக் கலைஞரைக் குறிப்பிட்டு “அவரேதான்; அவரே தான்,” என்று பாராட்டும் புன்சிரிப்புமாகக் கூறிக் கொண்டே வந்தார் உறவினர்.
இதற்கான பின் குறிப்பு ஒன்று உண்டு. அங்கேயிருந்த ஒரு மாமி என் மனைவிக்குத் தெரிந்தவர். ஆதித்யாவின் பயோடேட்டா வேண்டுமென்றும் அதை வைத்து அவனுக்கு ஒரு சபாவில் கச்சேரி ஏற்பாடு செய்வதாகவும் கூறினார். அதை மறுநாள் என் மனைவி தயார் செய்ய எத்தனிக்கையில், உறவினர் கிண்டலாக ஏதோ ஒரு சுடு சொல்லைக் கூறினார். என் மனைவி பொங்கி எழுந்து விட்டாள். கண்ணீராகப் பெருக்கி விட்டு சாமான்களை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
நான் மனம் பொறாமல் அவரிடம் கேட்டேன் “உங்கள் அறிவுரையை யாராவது கேட்கிறார்களா? நீங்கள் அறிவுரை வழங்குவதற்கு முன் அதை நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோமா என்று யோசிக்க வேண்டாமா? உங்களுக்கே ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன, அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதை விட்டு விட்டு எதற்கு இன்னொருவர் விவகாரங்களில் தலையிடுகிறீர்கள்? இதே போல் நாங்கள் உங்கள் வீட்டு விவகாரங்களில் தலையிட்டு அறிவுரை வழங்க ஆரம்பித்தால் அது உங்களுக்கு உவப்பாய் இருக்குமா?”
உறவினரால் பதில் சொல்ல முடியவில்லை. பின்னால் வேறொரு உறவினரிடம் அவர் வருந்தியிருக்கிறார் “நான் ஏன் அப்படி நடந்துண்டேன்னு தெரியலை,” என்று. என்ன உணர்ந்து என்ன? அவர்களிடம் நாங்கள் கொண்டிருந்த உறவு அத்துடன் முறிந்தது. இப்போதும் ஏதாவது கல்யாணம் காட்சி என்றால் சந்தித்துக் கொள்கிற வழக்கம் தான். ஆரம்ப விசாரிப்புகளோடு சரி. அத்துடன் நின்று விடுகிறது. இந்த சம்பவத்தின் கசப்பு இன்னும் தொண்டையில் இருக்கிறது.
இப்போது நினைத்துப் பார்க்கும் போது இது உலக இயல்பு என்று தோன்றுகிறது. இதில் பெரிதாகக் குற்றம் காண ஒன்றும் இல்லைதான். ஏதாவது வியாதியைப் பற்றி யாரிடமாவது குறிப்பிட்டால் ஆளுக்கு ஆள் விதம் விதமான மருந்துகள் பரிந்துரைத்துத் தள்ளி விடுவார்கள். அல்லோபதி என்ன, ஆயுர் வேதம் என்ன, சித்த வைத்தியம் என்ன, ஹோமியோபதி என்ன, இயற்கை வைத்தியம் என்ன என்று அமர்க்களப்படுத்தி விடுவார்கள். அந்தந்த மருந்துகளை அவர்கள் தத்தமது மீது பிரயோகிக்கிறார்களா என்று யாரும் ஆராயப் புகுவதில்லை. ‘மூதுரை, நன்னெறி, ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்’ போதாதென்று ஆளாளுக்குத் தயார் செய்து வரும் அறிவுரைகள் கொட்டிக் கிடக்கின்றன நம் நாட்டில். யாராவது அடுத்தவன் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து அதைப் பரிவுடன் சொல்கிறார்களா என்றால் அது சொற்பமே. ஜெயகாந்தன் சொல்வாரே ‘சஹ்ருதயர்கள்’ என்று அது போன்ற சஹ்ருதயர்கள் உலகில் சொற்பமே என்று தோன்றுகிறது. குறிப்பாக ஒரு மனிதன் கஷ்டத்தில் இருக்கிறான் என்று அடுத்தவன் உணரும் போது எதையாவது தெளித்து விட்டு ஓடத்தான் நினைக்கிறானே ஒழிய, அதில் பங்கெடுப்போம் என்று முனைவோர் நிறைய பேர் கிடையாது.
அவரவர்க்கு அவரவர் கவலை. அவ்வளவுதான் பொருளாதார சமூக சூழல் காரணிகளும் காரணம். மற்றவர் படும் அவதிகளை உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு நகர்ந்து விடுகிறது. இதற்கு நானும் விதிவிலக்கன்று.
பாண்டிச்சேரியில் என் இசை முயற்சிகளைப் பற்றிக் கூறலாம் என்று நினைக்கிறேன். இசை சபா நடத்தி வந்தவரிடம் ஒரு பொது நண்பர் மூலமாகக் கச்சேரிக்கு முயன்றேன். அவர் சபாவில் உறுப்பினராக இருந்தால் மட்டுமே பரிசீலிக்க இயலும் என்று ஏதோ ஒரு ஆட்சேபணையைக் கூறியதாக நினைவு. அது அத்துடன் போயிற்று. அடுத்த இலக்கு கோயில்கள். குருமாம் பேட்டை என்கிற இடத்தில் ராகவேந்திர ஸ்வாமிகள் அதிஷ்டானம் ஒன்று உண்டு. அங்கு ஒரு கச்சேரி ஏற்பாடு செய்தேன். ஏற்பாடு என்றால் எல்லாம் என் கைக்காசு தான். இடம், மைக் அவர்கள் தருவார்கள். பொதுவாகக் கோயிலுக்கு நன்கொடை எதிர்பார்ப்பார்கள். இங்கே அதுவும் எதிர்பார்க்கவில்லை. மேடை பெரிய கூட்டமெல்லாம் கிடையாது, தரையில் ஜமுக்காளத்தில் உட்கார்ந்து பாடிக் கொள்ள வேண்டியது தான்.
அந்தக் கச்சேரிக்குப் பாடுபட்டு பக்கவாத்யத்தை ஏற்பாடு செய்தோம். வயலின்காரர் அங்கு இசையாசிரியராக இருந்தவர். ஆதித்யாவின் வித்வத்தைப் பற்றிப் பெரிதாக அவர் அலட்டிக் கொள்ளவில்லை. தான் பெரிய வயலின் வித்வான், பையனோ சிறிய பையன் நான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்கிற அணுகுமுறை. ஆதித்யாவிற்கு பெற்றோர் உட்பட, அடுத்தவர் சொல்பேச்சு கேட்பது என்கிற சரித்திரமே கிடையாது. என்ன சொன்னாலும் நல்லதோ கெட்டதோ கேட்க மாட்டான். நாம் பூர்வபீடிகையாக ‘நீ குட் பாயா, பாட் பாயா?’ என்று ஆரம்பித்தோமென்றால் அடுத்து என்ன வரும் என்பதை முன் கூட்டியே யூகித்து ‘பாட் பாய்’ என்று முடித்து விடுவான்; அப்படியிருக்கும் போது ஆதித்யாவின் நிர்பந்தங்களுக்கு ஆட்பட்டுக் கொண்டு வயலின் கலைஞர் ஆதித்யாவிடம் எதிர்பார்ப்பதையும், நம்மிடம் எதிர்பார்ப்பதையும் நாமே பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயம். வயலின் கலைஞரும் பணத்தேவை கருதி பீறிட்டு வந்த கோபத்திற்கு அவ்வப்போது அணை போட்டுக் கொண்டிருந்தார். மிருதங்கம் வாசித்த இளைஞன் மாணவன். பெரிய பிரச்சினை இல்லை. ஒரு மாதிரி சமாளித்து ஏறக்கட்டினோம். அப்போது என் மனைவியின் பழைய மும்பாய் அலுவலகத் தோழி க்ஷேத்ராடனம் போக வந்திருந்தார் தன் இரட்டைப் பிள்ளைகளுடன். இவர்கள் தாம் ரசிகப் பெருமக்கள். கோயிலுக்கு வந்து போய்க் கொண்டிருந்த ஒன்றிரண்டு பேரும் தான்.
ஆதித்யா செய்த முதல் கச்சேரி ஒலிப் பதிவு என்னிடம் இல்லை. முயற்சி செய்தும் பதிவாகவில்லை. மற்ற கச்சேரிகள் கிட்டத்தட்ட அனைத்துமே இருக்கின்றன. மேற்குறித்த கச்சேரியின் பதிவும் இருக்கிறது. அதில் பாரதியாரின் பாடல் ‘முருகா முருகா முருகா வருவாய் மயில் மீதினிலே….’ என்கிற பாடலைக் கீரவாணியில் பாடியிருந்தான். எனக்கு   என் குருநாதர் நாட்டக் குறிஞ்சியில் பயிற்றுவித்திருந்தார். இதில் சரணத்தில் ‘கவலைக் கடலைக் கடியும் வடிவேல்….’ என்கிற இடத்தில் துரித காலத்தில் பாடியிருந்தான். வித்தியாசமாக இருந்தது. இதே பாடலை சென்னையில் மறுபடியும் வேறோர் கச்சேரியில் பாடியிருந்த போது நாட்டக் குறிஞ்சியில் வேறு துரித நடையில் பாடினான். இதை ‘ஹிமகிரிதனயே…’ என்கிற சுத்த தன்யாசி ராகக் கீர்த்தனையை ஜீஎன்பி பாணியில் மிகவும் துரித காலத்தில் பாடி, மின்னல் மாதிரி ஸ்வரம் போட்டு விட்டு முருகா என்று எடுத்ததில் ‘டெம்போ’ குறையாமல் சூழலுக்கு பொருந்திப் போயிற்று.
இந்த அத்யாயத்தில் கொஞ்சம் மகிழ்ச்சிக் குறைவான சம்பவங்களை விவரிக்க நேர்ந்தது. அதை ஈடு செய்யும் விதமாக ஒரு நகைச்சுவைச் சம்பவத்தை கூறலாம் என்று நினைக்கிறேன்.
பாண்டிச்சேரி தொலைக்காட்சிக்கு ஆதித்யா பாடுவதற்கு மனு செய்திருந்தேன். ஆச்சரியகரமாக அவர்கள் அழைத்திருந்தார்கள். பக்கவாத்யம் அவர்களே ஏற்பாடு செய்திருந்தார்கள். மேக்கப் ரூமெல்லாம் இருந்தது. ஆதித்யாவிற்கு மேக்கப் போட்டு விட்டார்கள். மேடையில் உட்கார்த்தி வைத்தார்கள். ஒத்திகை நான்கைந்து முறை நடந்தது. ஒரே பாட்டைப் பாடச் சொல்லிப் படம் பிடிப்பார்கள். பாதியில் நிறுத்தச் சொல்வார்கள். பின்னர் அதே பாட்டை ஆரம்பிக்கச் சொல்வார்கள். இது போன்று ஆதித்யாவிற்குப் பழக்கம் இல்லையாதலால் எங்களுக்குக் கவலையாக இருந்தது. ஒவ்வொரு இடைவெளியிலும் ஆதித்யா பரபரப்பாக எதையாவது நோண்டிக் கொண்டிருந்தான். அவனை அடக்கி வைப்பது சிரமமாக இருந்தது. மிருதங்கக்காரப் பையன் மிருதங்கத்தில் ஓட்டுவதற்காக ரவையை உருட்டி வைத்திருந்தான். அதை ஆதித்யா எடுத்துத் தின்று விட்டான்! ஒளிப் பதிவு செய்தவர் ஒரு பெண்மணி – ஆதித்யாவைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.
அந்தக் கச்சேரியின் சிறு பகுதிக்கான கண்ணியை இங்கு கொடுத்திருக்கிறேன். சிறுபையன் பெரிய தயாரிப்பு இல்லாமல் பாடியது என்பதை மனதில் வைத்துப் பார்த்தால் ஒரு பெரிய இசைக் கலைஞனின் ஆரம்ப காலக் கூறுகளை இதில் காண முடியும்.
தானம் பாடுவதில் அப்போது அவனுக்குப் பெரிய மோகம் இருந்தது. சண்முகப் பிரியாவில் தானம் பாடிக் கொண்டிருந்தவன் சடாரென்று காம்போதிக்குத் தாவினான். வயலின் வாசித்துக் கொண்டிருந்த பையன் கண்ணில் தெரிந்த திகைப்பை என்னால் மறக்க முடியவில்லை. வெளியில் வந்த போது ஆதித்யாவிடம் “அண்ணாக்கு பை சொல்லு,” என்றேன். அந்தப் பையன் என்னிடம் “நியாயமாகப் பாத்தால் இவன் தான் எனக்கு அண்ணன்,” என்றான் சிரித்துக் கொண்டே.

அத்யாயம் 15

எனக்கு ஆதித்யா வேதபுரீஸ்வரர் கோயிலில் பாட வேண்டுமென்றிருந்தது. வேதபுரீஸ்வரர் கோயில் மேல் எனக்குப் பரிவு உண்டு. இபோது அங்கு பிரபலமாக விளங்கி வரும் சம்பா கோயில் என்கிற மாதா கோயில் தான் ஒரிஜினல் வேதபுரீஸ்வரர் கோயில் என்றும் அது மதாம் துப்ளே (துப்ளேயின் மனைவி) மற்றும் பாதிரியாரால் இடிக்கப் பட்டது என்றும் அங்கிருந்த மூலவரை அவர்கள் எட்டி உதைத்தார்கள் என்றும் அதன் மீது காரி உமிழ்ந்தார்கள் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். இது பற்றிக் குறிப்பிடும் ஆனந்தரங்கம் பிள்ளையின் குறிப்புகளையும் வருத்தத்தையும் கண்ணுற்று இருக்கிறேன். இதற்கான முயற்சிகளில் இறங்கினேன். கோயில் அரசு அறநிலைத் துறையின் கீழ் வருவது என்றாலும் தமிழ்நாடு போலல்லாது தன்னாட்சி பெற்ற அமைப்பு என்று நினைக்கிறேன். பொது மக்களில் இருந்தும் அறங்காவலர்கள் உண்டு போலிருக்கிறது.
அதற்குண்டான ஒரு தனி அலுவலரையும் சந்தித்தேன். அவர் கேட்டுக் கொண்டு “பையனின் பயோ டேட்டா குடுங்க சார். ஏதாவது சந்தர்ப்பம் இருந்தா ஏற்பாடு செய்யுறேன்” என்றார். இது நடந்து மூன்று நான்கு வாரங்களுக்குப் பிறகு மறுபடி நினைவூட்டுவதற்காகச் சென்றேன். அவர் சற்று எரிச்சலுடன் “அதான் சொன்னேனே சார் ஏதாவது சந்தர்ப்பம் வந்தா சொல்றேன்னுட்டு. நாங்களே காண்டாக்ட் பண்றோம் சார். நீங்க வெட்டியா அலைய வேணாம்” என்றார் கறாராக. இந்த மாதிரி அவர்கள் பேசும் தருணம் சற்று ஊன்றி நோக்கினால் சிக்கலான தருணம். முக்கால்வாசி பேர் இத்தருணத்தில் சிறு கையூட்டு எதிர்பார்க்கலாம். அல்லது உண்மையிலேயே கறாராக யதார்த்தத்தை விளக்கலாம்.
அதை அத்துடன் விட்டுவிட்டேன். இந்த சந்தர்ப்பத்தில் பாண்டிச்சேரியில் ஒரு மருத்துவர் பெரிய யோகா பள்ளி ஓன்றை நடத்தி வந்தார். அவர் தந்தை வடநாட்டுக்காரர். பாண்டிச்சேரியில் ஆத்ம சாதனத்தில் ஈடுபட்டுக் காலகதி அடைந்தவர். அவர் அன்னை வெளிநாட்டைச் சேர்ந்தவர். இவர்கள் ஒரு ஆசிரமத்தையும் நிர்வகித்து வந்தனர். மருத்துவர் அலோபதி மருத்துவரானாலும், குடும்பப் பின்னணியால் யோகம் சங்கீதம் இவற்றிலெல்லாம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். வாய்ப்பாட்டு கற்றுக் கொண்டிருந்தார். அருமையாக மிருதங்கம் வாசிப்பார். இவரை ஒரு நாள் சந்தித்து ஆதித்யா பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். ஆதித்யாவின் அலைபாயும் தன்மையைக் கட்டுக்குள் கொண்டு வர யோகா வகுப்புகளில் அவனை முயற்சி செய்யலாம் என்பது என் எண்ணம். ஆதித்யாவை அவர் பார்த்துப் பாடச் சொல்லிக் கேட்டார். கேட்டு விட்டு “இவனுக்கு எதுவும் தேவையில்லை என்று தான் தோன்றுகிறது. என்றாலும் யோகா பொதுவாகவே எல்லோருக்குமே தேவைதானே? அந்த விதத்தில் சில யோகாசனங்களைக் கற்பிக்கச் சொல்லுகிறேன்” என்றார்.
ஆதித்யா சென்னையில் இருக்கும் போது சோபாவில் இரண்டு மூன்று நிமிடங்களிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை சிரசாசனம் செய்வான். இதை எதற்குச் செய்கிறான் யார் செய்வதைப் பார்த்துக் கற்றுக் கொண்டான் என்பதெல்லாம் புரியாத புதிர் தான். அதே போல் நீச்சல் குளத்திற்குப் போனால் ஆழம் குறைந்த குளத்தில் இறங்கி முதலில் சிரசாசனம் தான் இரண்டு மூன்று நிமிடங்களுக்குச் செய்வான். கொஞ்சம் பயமாகத் தான் இருக்கும். நகைச்சுவையாகவும் இருக்கும்.
அந்த மருத்துவர் பள்ளியில் இருந்த முக்கிய யோகா ஆசிரியரை அழைத்து அவரிடம் சில முக்கிய ஆசனங்களைச் சொல்லி அதை ஆதித்யாவிற்குப் பழக்குமாறு கூறினார். கஜேந்திரன் என்பது அவர் பெயர். அவர் என்னிடம் வந்து “சார்! பையன் சொல்வதைக் கேட்பதற்காக நான் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் தப்பாக நினைக்கக் கூடாது” என்றார். எனக்கு பெரிய ஆட்சேபணைகள் இல்லை. ஆதித்யா அவரை எங்காவது வெளியில் கண்டாலே “கஜேந்திரன் சார் நோ நோ” என்று ஓடிவிடுவான். அவர் அதைப் பார்த்து சிரித்துக் கொள்வார். இந்த வகுப்புகளின் என் பெண்ணையும் போட்டிருந்தேன். போய் வந்து கொண்டிருந்தோம்.
அந்த யோகா வகுப்புகளுக்குப் பல பெற்றோர் குழந்தைகளுடன் வந்து செல்வார்களாதலால் அவர்களுடன் குழந்தைகள் யோகா செய்து கொண்டிருக்கும் போது அறிமுகமாகி பேசிப் பழகி நண்பர்களாகி விட்டிருந்தோம். அங்கு ஒரு வயதான பெண்மணி தன் பேரக்குழந்தையை அழைத்துக் கொண்டு வருவார். நெற்றி நிறைய திருநீறு பூசிக் கொண்டு ஆன்மிகமாக இருப்பார். அவர் என் மனைவியுடன் நட்பாயிருக்கிறார். அவர் பேச்சுவாக்கில் ஆதித்யாவைப் பற்றிக் கேட்க என் மனைவி அவனைப் பற்றிப் பிரஸ்தாபித்திருக்கிறாள். கச்சேரிகளைப் பற்றிப் பேசும் போது ‘வேதபுரீஸ்வரர் கோயிலில் கூட முயற்சித்தோம்; ஒன்றும் நடக்கவில்லை’ என்றிருக்கிறாள் ஒரு தகவலாக. இதைக் கேட்ட அந்த அம்மையார் அது வரை சாந்தமாக இருந்தவர் “அதெப்படி இந்த மாதிரி ஒரு குழந்தை ஞானமாக இருக்கும்போது அதெல்லாம் ஏற்பாடு செய்ய முடியாதுன்னு சொல்ல முடியும்? அதையும் பார்த்துடுவோம்,” என்றிருக்கிறார் கோபமாக.
என் மனைவி பயந்து “அதெல்லாம் எதுக்கும்மா அவங்க முடியாதுன்னு சொல்றச்சே….” என்றிருக்கிறாள்.
“நீ சும்மா இரு. உனக்கொண்ணும் தெரியாது. நாங்கள்லாம் கோயில்ல கட்டளை உள்ளவங்க. நாங்க சொன்னா கேட்டுத் தான் ஆகணும்” என்று சொன்னவர் மறுநாள் கோயிலுக்குச் சென்று பேசி கச்சேரிக்காக ஏற்பாடு செய்து விட்டுத் தான் ஓய்ந்தார். மறுநாள் என் மனைவியிடமும் வந்து தெரிவித்து ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார். யாரோ ஒரு அந்நியர் கர்நாடக சங்கீதம் எல்லாம் பெரிதாகத் தெரியாதவர் வலிய வந்து உதவியதால் வேதபுரீஸ்வரர் கோயிலில் ஆதித்யாவின் கச்சேரி நடந்தது. இரண்டு மணி நேரம் கச்சேரி.
கச்சேரி குறித்து நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘பக்க வாத்தியக்காரர்கள் யாரையாவது பரிந்துரை செய்ய முடியுமா’ என்று கேட்டோம். அவர் மிகவும் சாதாரணமாக “மிருதங்கம் நானே வாசிக்கிறேன். வயலினுக்கு ஸ்ரீநிவாசனைப் போட்டுடுங்கோ” என்றார். வாரம் பூரா க்ளினிக்கில் நோயாளிகள். யோகா பள்ளியை வேறு நடத்திக் கொண்டிருந்தார். மிகவும் பிஸியான மனிதர். இதில் பெரிய பணம் கிடையாது என்று தெரிந்திருந்தும் அவர் வாசிக்க மனமுவந்தது அவரின் பெருந்தன்மையும் கர்நாடக சங்கீதத்தின் மேல் உள்ள காதலும் பாற்பட்டுத் தான் என்று இப்போது நினைக்கையில் தோன்றுகிறது.
இந்தக் கச்சேரியில் ஆதித்யா பாடிய பாடல்கள் வருமாறு:
  1. ராம ஈவேள      :     கரகரப்ரியா
  2. நகுமோமு         :     ஆபேரி
  3. ஓரஜூபுஜூ      :    கன்னட கெளளா
  4. துடுகு கல                                       :    கௌளா
  5. ஆடமோடி கலதா                         :    சாருகேசி
  6. ஆனந்த நடமாடுவார் தில்லை :    பூர்வி கல்யாணி
  7. மாதவ மாமவ                                :    நீலாம்பரி
  8. கமலாம்பா பஜரே  :   ஆனந்த பைரவி
  9. சங்கீத ஞானமு       :   தன்யாசி
  10. சபாபதிக்கு              :   ஆபோகி
  11. சௌந்தர்ய லஹரி 5 ஸ்லோகங்கள் விருத்தம்
  12. தில்லானா                :   த்விஜாவந்தி
இதில் முதல் ஐட்டமான ‘ராம ஈவேள’வை எங்கு பிடித்தான் என்று தெரியவில்லை. இது பத வர்ணம். தென் மடம் நரசிம்மசார்லு என்பவர் இயற்றியது. கிட்டத்தட்ட ராமாயணத்தின் சுருக்கம் விவரிக்கப் பட்டுள்ளது. மிகவும் நீளமான வர்ணம். அதை எங்கே கேட்டிருக்கிறான் எப்படி மனப்பாடமாகப் பாடினான் ஒன்றும் தெரியாது. தற்போது எனக்கு திடீரன்று சந்தேகம். கூகிளில் தேடிப் பார்த்துத் தான் தெரிந்து கொண்டேன். இருந்தாலும் ஒரு சந்தேகம் தியாகராஜராக இருக்குமோ என்று. ஆதித்யாவிடம் இன்று கேட்டேன் “யாருடா கம்போஸர்?” என்று. ‘நரசிம்மாச்சார்லு’ என்றான் ஆணி அடித்தாற் போல். பாடி பதிமூன்று வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது. இன்றைக்கும் அவன் நினைவு வைத்திருப்பது ஆச்சர்யம் தான்.
அன்று வயலின் வாசித்தவர் நல்ல வித்வத் உள்ளவர். ஆசிரியர். சிங்கப்பூரில் சில வருடங்கள் ஆசிரியராய்ப் பணி ஆற்றி விட்டு பாண்டிச்சேரியோடு வந்து விட்டார். கச்சேரி முடிந்தபின் அவரிடம் “எப்படிப் பாடுகிறான்?” என்று கேட்டேன். அவர் “சாதாரணமாகப் பாடுகிறவர்கள் எங்கே நிரவல் செய்யப் போகிறார்கள், எங்கே கற்பனாஸ்வரம் எடுக்கப் போகிறார்கள் என்பதை ஆரம்ப ஓட்டத்திலேயே கணித்து விட முடியும். உங்கள் பிள்ளையைப் பொறுத்தவரை எது எப்போது வரும் என்று சொல்ல முடியாது. அதனால் ஒரு மாதிரித் தயார் நிலையில் டென்ஷனிலேயே இருக்க வேண்டியிருக்கிறது” என்றார்.
ஆதித்யா எப்போதுமே கச்சேரியில் ஒரு பிரதானப் பாடலை வைத்துக் கொள்வது வழக்கம். எல்லா வித்வான்களின் வழக்கம் தான் இது. ஆனந்த பைரவி கமலாம்பாவில் அன்று விஸ்தாரமாக ஆலாபனை நிரவல் கற்பனாஸ்வரம் தனி ஆவர்த்தனம் என்று வைத்துக்கொண்டு அதன் பிரகாரம் பாடியிருந்தான். ஆரம்பப் பாடல்களில் கற்பனை ஸ்வரங்களையும் ஆலாபனையும் சுருக்கி விடுவான். அதைப் போலவே அன்று சாருகேசியில் சுருக்க ராகம் பாடி மின்னல் வேகத்தில் ஸ்வரம் பாடியிருந்தான். பெரிய கூட்டம் கிடையாது. கோயிலுக்கு வந்து போகிற கூட்டம் தான். என் சக ஊழியர்கள் இரண்டு பேரை அழைத்திருந்தேன். வந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒருவருக்கு கொஞ்சம் சங்கீத வாசனை உண்டு. மிகவும் உணர்ச்சி வசப் பட்டு என் கையைப் பிடித்துக் கொண்டு “பெரிய பொக்கிஷத்தை வெச்சிருக்கீரய்யா நீரு,” என்றார். கச்சேரி நல்ல விதமாக முடிந்தது.
மூன்று கச்சேரிகளுக்குப் பிறகு ஆதித்யாவிற்கு அதில் கொஞ்சம் ருசி காண ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட குட்டிச் சாத்தானைக் கிளப்பி விட்டு விட்டது போலாகி விட்டது. கச்சேரிக்கான ஜாபிதா மேல் ஜாபிதாவாகப் போட்டுத் தள்ள ஆரம்பித்தான். அதற்கு பெரிய பெரிய வித்வான்கள் வேறு பக்க வாத்தியம். அவன் கற்பனை உலகில் அவன் ராஜா என்றால் இந்த வித்வான்கள் மந்திரி. நினைத்தே பார்க்க முடியாத காரியம். அவன் ஆசைக்கு யார் அணை போட முடியும்? அவன் கச்சேரி செய்ய ஆரம்பித்த ஒன்றிரண்டு சந்தர்ப்ப்பங்களிலேயே இது ஒன்றும் உலகை நெம்பப் போவதில்லை என்று எங்களுக்குப் புரிந்து போயிற்று. ‘ஆஹாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி!’ என்று சங்கீத உலகமே கிடுகிடுக்கவில்லை. உலகம் தன் போல் இயங்கி வந்தது. யாராவது எப்போதாவது அள்ளித் தெளித்தாற் போல் பாராட்டுவார்கள். அத்துடன் சரி. கொஞ்சம் சங்கீதம் தெரிந்தவர்கள் ஆலோசனை கூறுவதும் உண்டு. அவர்களுக்குத் தெரிந்த அளவில் எதாவது சொல்லுவார்கள். அன்று கச்சேரியில் நகுமோமு பாடும் போது அநுபல்லவியில் “ஜகமெல்ல பரமாத்மா….” என்று பாடினான். இது நியாயமாக ‘ஜகமேல’ என்று தான் இருக்க வேண்டும். ஆதித்யா அப்போதெல்லாம் மதுரை சோமுவை மும்முரமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவர் ‘ஜகமெல்ல’ என்று பாடியிருப்பார். அதை இவன் பிடித்துக் கொண்டு விட்டான். அதை என் மனைவிக்கு அங்கு அறிமுகமான தோழி ஒருவர் குறிப்பிட்டு அதை சரி செய்யச் சொன்னார் தெலுங்குக்காரர். ஆதித்யா கேட்கிற மன நிலையில் இருக்க வேண்டுமே!
பாண்டிச்சேரியில் இருந்தவரை அவ்வப்போது கச்சேரி ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். எல்லாம் எங்கள் கைக்காசுதான். கைக்காசு என்றால் பக்க வாத்தியக்காரர்களுக்குப் பேசும் தொகை தான். பெரிய தொகை கிடையாது. இடத்தைப் பொறுத்தவரை கோயில்களோ மடமோ தான். அதைக் கொடுத்து விடுவேன். பாண்டிச்சேரியில் இருந்த போது சிதம்பரம் கோயிலில் கச்சேரி ஏற்பாடு செய்தேன்.
சிதம்பரத்தில் இசைவாணர்கள் நிறைய பேர். இசை ஆசிரியர்கள் மட்டுமல்லாது வாக்கேயக்காரர்களும் நிறைய பேர் சிதம்பரம் தீக்ஷிதர்களில் உண்டு. சிதம்பரம் வங்கிக் கிளையில் எனக்கொரு நண்பர் இருந்தார். நல்ல வாய் ஜாலகர். சிதம்பரத்தில் நல்ல தொடர்புகள் உண்டு. ‘வெட்டு’ என்றால் ‘கட்டு’ என்கிற ரகம். என்னை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் ‘அண்ணா அண்ணா’ என்பார். அவர் ஒரு முறை குடும்பத்துடன் வேறு வேலையாக வந்திருந்தவர் என்னைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார். அவர் வந்த போது ஆதித்யா ஸ்வாதீனமாய்ப் பாடிக் கொண்டிருந்தான். அவர் மனைவி மிகவும் ஆச்சர்யப் பட்டுப் போனார். அவர் தன் பிள்ளையையும் பாடல் வகுப்புகளுக்கு சிதம்பரத்தில் அனுப்பிக் கொண்டிருந்தார்.
நண்பர் என்னப் பார்த்து “அண்ணா! பையன் இப்படின்னு சொல்லவேயில்லையே?” என்றார். சங்கீதம் சம்பந்தமான ஒன்றும் தெரியாது என்று நான் கருதுபவர்களிடம் ஆதித்யா பற்றி ஒன்றும் பிரஸ்தாபிக்காமல் இருப்பது வழக்கம். எதையாவது அரைகுறையாகப் புரிந்து கொண்டு “சார்! இந்த ‘கிரேட் சிங்கர்’ன்னு ஒரு ப்ரோக்ராம் வர்றது டிவில. அதில உங்க பையனுக்கு ட்ரை பண்ணுங்கோளேன். போன வாரம் ஒரு பையன் ஓமணக்குட்டன்னு பாடினான் பாருங்கோ. உங்க பையன் மாதிரிதான்; கண்ணும் தெரியாது. காதும் கேக்காது. சோல் சர்ச்சிங் ம்யூசிக்……” என்று ஆரம்பித்து விடுவார்கள். அதனால் இவர் எப்படி என்று தீர்மானமாக இல்லாத்தால் சிரித்துக் கொண்டே “அவன் அப்படித்தான் சின்ன வயசிலிருந்தே……… கச்சேரி கூடப் பண்ணியிருக்கான்” என்றேன் பொத்தாம் பொதுவாக.
“நம்ம சிதம்பரம் கோவில்ல நான் ஒரு கச்சேரி ஏற்பாடு பண்றேண்ணா உடனே.  நீங்க பையனைக் கூட்டிண்டு வர்றேள். ஃபாமிலியோட ஸ்வாமி தரிசனம் பண்றேள். பையன் கோவிந்தராஜ ஸ்வாமி சந்நிதில பாடறான்” என்றார். அப்போது தான் எனக்கு சிதம்பரம் கோவிலுக்குள் பெருமாள் சந்நிதியும் இருப்பது தெரியும்.
“சரி; டேட் சொன்னேள்ன்னா பக்க வாத்தியத்துக்கு ஏற்பாடு பண்ணிடறேன்” என்றேன் கொஞ்சம் பலவீனமாக. இதை நினைத்தாலே இது சம்பந்தமான போக்குவரத்து சம்பாவனை செலவுகளில் ஆழ்ந்து விடும் என் மனது.
“அதெல்லாம் பேசப் படாது. பக்க வாத்தியமெல்லாம் என் பொறுப்பு. நீங்க சிதம்பரத்தைப் பொறுத்த மட்டிலே எங்க விருந்தாளிண்ணா. சரி நான் உத்தரவு வாங்கிக்கறேன். ஏற்பாடெல்லாம் பண்ணிட்டுப் ஃபோன் பண்றேன்” என்று கிளம்பி விட்டார். நான் மண்டல அலுவலகத்தில் இருந்ததால் அவர் சம்பந்தமாக என்னால் ஒன்றிரண்டு காரியம் ஆகவேண்டியிருந்தது அவருக்கு. தவிரவும் என் அலுவலக அந்தஸ்த்தால் அவர் தொடர்புகளின் முக்கியமான கண்ணியாக நான் இருப்பதாய் அவர் கருதியிருக்கலாம். தற்போது உபயோகம் இல்லாவிட்டாலும் எதிர்கால நன்மையை அவர் உத்தேசித்திருக்கலாம். எது எப்படியோ கச்சேரிக்கு ஏற்பாடு செய்து விட்டார்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை வைத்துக் கொண்டோம். வீதி உலாவின் போது ஸ்வாமி தண்டு இறங்குகிற மண்டபம் ஒன்று கோயிலில் உண்டு. மிகவும் ஆகி வந்தது என்று பேசிக் கொண்டார்கள். சேக்கிழார் பெரிய புராணத்தை அரங்கேற்றம் செய்ததோ என்னவோ. இப்போது சரியாகச் சொல்ல நினைவில்லை. உள்ளூர் தீக்ஷிதர் ஒருவர் கற்றைக் குடுமியுடன் வாட்ட சாட்டமாக இருந்தவர் மிருதங்கம் வாசித்தார். அதேபோல் வயலினையும் சிதம்பர வித்வான் ஒருவரே வைத்து வாசிக்க வைத்திருந்தார்கள். கடத்திற்குச் சென்னையிலிருந்து ஒரு பையன் வந்திருந்தான் தடிமனான கண்ணாடி அணிந்து கொண்டு. ஒரு பெரிய வித்வானின் அண்ணன் பையன். பெரிய இசைக் குடும்பம். இந்தக் கச்சேரிக்கு யாரோ சொல்லிப் பிடிவாதமாக வாசிக்க வேண்டும் என்று வந்திருந்தான். அவன் தந்தையும் இருந்தார். அங்கே பல்கலையில் இசையாசிரியர்.
கச்சேரி நிகழ்வுகளைப் பற்றி சொல்வதற்கு முன் ஆதித்யா அதில் பாடிய ராகம் தானம் பல்லவியை வாசகர்கள் கேட்டு ரசிக்கக் கோருகிறேன். அதற்கான கண்ணி இதோ:


அத்தியாயம் 16

கச்சேரியில் அவன் பாடிய பாடல்களைக் கீழே தந்துள்ளேன். இந்த விவரம் குறித்த ஒரு ஆச்சர்யத் தகவல் பின் குறிப்பாக இந்த அத்யாயத்தின் முடிவில் தந்துள்ளேன்.
  1. மஹா கணபதே                 :  ஹம்சத்வனி
  2. ஆனந்த நடமாடுவார்       :  பூர்வி கல்யாணி
  3. சிதம்பரேஸ்வரம்               :  பின்னஷட்ஜம்
  4. ஆநந்தாம்ருத கர்ஷிணி  :   அம்ருத வர்ஷிணி
  5. சங்கரி சங்குரு                   :   சாவேரி
  6. கருட கமன                          :   ஹிந்தோளம்
  7. ராகம் தானம் பல்லவி      :   ரேவகுப்தி, கரகரப்ரியா..
  8. நிருபமான                  :   பெஹாக்
  9. அனாதசநாத             :    கலாவதி
  10. பாவமு லோன           :   சுத்த தன்யாசி
  11. ப்ராத ஸ்மராயி         :   விருத்தம் ராகமாலிகா
  12. மங்களம்                      :   சுருட்டி

பின்னஷட்ஜம் என்கிற ராகத்தையும், ரேவகுப்தி என்கிற ராகத்தையும் அப்போது தான் கேள்விப்படுகிறேன். அதே போல் சிதம்பரேச்வரம் என்கிற கீர்த்தனையையும். கச்சேரி கேட்க உள்ளூர் வித்வான் ஒருவரும் வந்திருந்தார். தீக்ஷீதர். ‘ராகமாலிகையில் ஸ்வரம் பாடிக் கேட்டிருக்கிறேன் -தானத்தில் ராகமாலிகையாக இப்போது தான் கேட்கிறேன்,’ என்றார். கடம் வாசிக்க வந்திருந்த பையனின் தந்தையும் மிகவும் சிலாகித்தார். ‘கொத கொத’ வென்ற வெற்றிலைச் சிவப்பின் வாயோடு, ‘எல்லாம் பூர்வ ஜன்ம சுகிர்தம்,‘ என்றார். அந்தக் கச்சேரி முடிந்த பின் நகைக்கடை முதலாளி ஒருவர் பேசினார். “அந்தக் காலத்தில் திருஞான சம்பந்தரைப் பற்றிச் சொல்லுவார்கள். ஞானசம்பந்தரை நாம் பார்த்ததில்லை. ஞான சம்பந்தர் உருவில் இந்தப் பிள்ளையைக் காண்கிறோம். ஆடலரசனின் அருளால் இந்தப் பிள்ளை மேன்மேலும் ஞானம் பெற்றுப் பெரிய வித்வானாக வளர வேண்டும்” என்று பேசிப் பொன்னாடை போர்த்தினார். நம் நண்பர் என்னிடம் வந்து, “அண்ணா! என்னவோ நெனைச்சேன். பையன் இவ்வளவு ஞானஸ்தன்னு இப்பத் தான் புரிஞ்சுண்டேன். நாட்யாஞ்சலி  ஃபெஸ்டிவல் வர்றது. அதிலயும் ஏற்பாடு பண்ணிடலாம். டான்ஸுக்கு முன்னாலே கச்சேரிகள் பண்ற வழக்கம்,” என்றார்.  (அது நடக்கவேயில்லை; பின் நிகழ்வுகள் காரணம்.)
இதற்குப் பின் கச்சேரிகள் அவ்வப்போது எற்பாடு செய்து கொண்டிருந்தேன். காஞ்சி மடம் ஸ்ரீகாரியத்துக்கு ஸ்வாமிகள் முன்னால் என் பிள்ளையைப் பாட வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதினேன். அதற்கு பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆச்சர்யகரமாக பையனைக் கூட்டிக் கொண்டு வரும்படி ஸ்ரீகாரியத்திடமிருந்து கடிதம் வந்தது. டாக்ஸி ஏற்பாடு செய்து கொண்டு பாண்டிச்சேரியிலிருந்து வயலின் மிருதங்கம் ஏற்பாடு செய்து கொண்டு போனோம். ஜெயேந்திரர் முன்பு ஒன்றரை மணி நேரம் பாடினான் ஆதித்யா. பொறுமையுடன் ஜெயேந்திரர் கேட்டு விட்டு “பொறுமையா ஆடாம அசையாம பாடறானே,” என்று சொல்லி விட்டு “இங்க வாடா அம்பி,” என்று அழைத்து ஒரு வெள்ளி டாலரும் குங்கும பிரஸாதமும் அளித்தார். இதற்குப் பின் ஒன்றிரண்டு சிறிய சிறிய கச்சேரிகள்.
எல்லாம் 2004 இல் தான். பாண்டிச்சேரியிலேயே நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்து சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் பாடினான். நவராத்திரி சமயம். ஆதித்யாவிற்கு நல்ல ஜூரம். அந்தக் கச்சேரியில் ‘ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி’ பாடினான். நவராத்திரி சமயத்தில் அந்தப் பாடல் பாடுவது பொருத்தமாக இருக்கும் என்று யார் சொல்லித் தெரிந்து கொண்டான் தெரியவில்லை. ஏற்பாடு செய்த நண்பரின் மனைவி, பாரத் ஸ்டேட் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் ஆதித்யா பாடுவதைக் கேட்டு விட்டு “ ப்ளெஸ்டு பேரண்ட்ஸ்,”என்று சொல்லி விட்டு சென்றார்.
எனக்கு விபத்து நடந்த போது எங்கள் உறவினர் ஒருவருக்குக் கிட்னிகள் பழுதடைந்து விட்டன. அப்போது வேறோர் உறவினர் சொன்னார் என்று குறி சொல்பவர் ஒருவரிடம் அவர்கள் போயிருக்கிறார்கள். ராகவேந்திர ஸ்வாமிகள் அவர் சொப்பனத்தில் வந்து சொல்வாராம். அதை அவர் அப்படியே குறியாகச் சொல்வது வழக்கம். அந்த மாதிரி இந்த உறவினருக்கு கிட்னி தானம் செய்ய இரு சுமங்கலிகள் வருவார்கள் என்று ராகவேந்திர ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார் என்று சொன்னாராம். அதன்படியே இருவர் வந்தார்கள். அவர்களில் ஒருவர் சிறுநீரக தானம் செய்ததில் உறவினர் பிழைத்துக் கொண்டார். அதிலிருந்து அவருக்கும் அவர் மூலமாக என் மனைவிக்கும் மாமி மீது பிடிப்பு ஏற்பட ஆரம்பித்தது. என் மனைவி ஒரு முறை மாமியிடம் குறிகேட்க, மாமி “ரெண்டு மூணு நாள் கழிச்சு ஃபோன் பண்ணு. சொப்பனம் வர்றதா பாக்கலாம்,” என்றிருக்கிறார். அதன் பிரகாரம் என் மனைவி இரண்டு மூன்று நாள் கழித்து மாமியிடம் கேட்டபோது அவர், “கவலைப்படறத்துக்கு ஒண்ணுமில்லையம்மா. ஒரே மழை. நீயும் உன் ஆத்துக்காரரும் ஆதித்யா கையைப் பிடிச்சுண்டு நிக்கறேள். ராயர் (ராகவேந்திரஸ்வாமிகள்) ஆதித்யாகிட்ட வந்து அவன் வாயிலே தேன் மாதிரி என்னத்தையோ ஊட்டறார். அப்படி எனக்கு நேத்திக்கு சொப்பனம் ஆச்சு. அதுனால கவலையை விடு,” என்றிருக்கிறார்.
அந்த மாமி சென்னைப் புறநகர் ஒன்றில் ராகவேந்திர ஸ்வாமிகளுக்கு ஒரு பிருந்தாவனம் அமைத்திருந்தார். அந்த பிருந்தாவனத்தில் ஆதித்யாவின் கச்சேரி ஏற்பாடு ஆகியது. வயலின் வாசித்தவன் இளைஞன். இசைவாணரின் பள்ளியில் வேலை பார்த்து வந்தவன் தனிப்பட்ட முறையிலும் கச்சேரிகளுக்கு வாசித்துக் கொண்டிருந்தான். அருமையாக ஆதித்யாவுக்கு ஈடு கொடுத்து வாசித்தான். (பின்னாட்களில் அவன் ஆதித்யாவுக்கு வாசிக்கப் பிரியப்படவில்லை என்ன காரணத்தாலோ.)
2003 – 2004 இப்படிக் கழிந்தது. பாண்டிச்சேரியில் என் மனைவிக்கு இருப்புக் கொள்ளவில்லை. குழந்தைகள் பாடமெல்லாம் சுமார். ஆதித்யாவைப் பள்ளியில் அவிழ்த்து விட்டு விட்டார்கள். ‘நீ என்னவோ பண்ணிக்கோ’ என்கிற ரீதியில். சென்னைப் பள்ளியில் இருந்த பரிவும் அக்கறையும் அங்கு இல்லை. ப்ராடெஸ்டன்ட் கிறிஸ்துவர்கள் நடத்தும் பள்ளி வேறு. பிராமணர்கள் பால் காழ்ப்பு உண்டு. நான் என் பள்ளி நாட்களிலேயே அநுபவித்திருக்கிறேன். படிப்பா,வேறு நடவடிக்கைகளா நாமே நாமாகச் செய்து கொள்ள வேண்டியது தான். பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகத்தினர் அவர்கள் கவனமெல்லாம் மற்ற மாணவர்கள் மீது தான் இருக்கும். பள்ளியும் ஆரம்ப நிலையில் இருந்தது. பெரிய கட்டுமானங்கள் ஒன்றுமில்லை. தகரக் கொட்டகைகளில் வகுப்புகள்.
ஆதித்யாவிற்கு இசை வகுப்புகள் சுத்தமாக நின்று விட்டன. வெளியூரிலிருந்து வந்து இசை கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியர் நீண்ட நாட்களுக்கு உயிருடன் இல்லை. ஆதித்யா முதல் கச்சேரி பண்ணும்போதே அவர் சுகவீனமாகி மருத்துவமனையில் அநுமதிக்கப்பட்டிருந்தார். அவரிடம் நான் ஆசீர்வாதம் வாங்க வேண்டி போன் செய்தபோது “ஆதித்யாவுக்கு என் ஆசீர்வாதம். நன்னா வருவான். கவலைப்படாதீங்கோ,” என்றார். அது தான் நான் அவரிடம் கடைசியாகப் பேசியது. அதற்குப் பின் அவர் மறைந்த செய்திதான் வந்தது.
இசைவாணர் வகுப்புகளை விட்டது தவறோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது. பிரமாதமாக வகுப்புகள் நடக்கவில்லையாயினும் பெயருக்காவது நடந்து கொண்டிருந்தன. பாண்டிச்சேரி வந்ததில் அதுவும் போயிற்று. பாண்டிச்சேரியில் செல்வதற்கும் பெரிதாக இடங்கள் இல்லை. மறுபடி மறுபடி மணக்குள விநாயகர், அன்னை ஆசிரமம், ஆரோவில் அவ்வளவு தான். ஆதித்யாவிற்கு ஏதாவது உடற்பயிற்சி வேண்டுமென்று நீச்சல் குளத்திற்குக் கூட்டிச் செல்வதுண்டு. அதுவும் பத்து கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. என் மனைவி சடாரென்று மீண்டும் சென்னை சென்று விடுவதென்று முடிவெடுத்தாள். நான் மாறுதல் வரும் வரைக்கும் அங்கேயே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு இருப்பது; அவள் விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் பாண்டிச்சேரி வந்து செல்வது என்று தீர்மானித்துக் கொண்டோம்.
மறுபடி சென்னை. இசைவாணரைச் சந்தித்து அவர் ஏற்கெனவே பரிந்துரைத்திருந்த பள்ளிகளைப் பற்றிக் கேட்டோம். அவருடம் ஆதித்யாவின் அட்மிஷனுக்காக அவர் ஏற்கெனவே பரிந்துரைத்திருந்த பள்ளியின் தாளாளரைத் தொடர்பு கொண்டு, சிபாரிசு செய்து விட்டு எங்களை அவரைப் போய்ப் பார்க்கும் படிச் சொன்னார்.
அந்தப் பெண்மணியை நாங்கள் குடும்ப சகிதமாகச் சென்று பார்த்தோம். வயதானவர். பெரிய குங்குமப் பொட்டை நெற்றியில் தீற்றியிருந்தார். தடிமனான கண்ணாடி அணிந்து இரட்டை நாடியாக இருந்தார். அவரின் அறையில் ஒற்றை மீன் ஒன்று அளவில் பெரியது தண்ணீர் தொட்டியில் வைக்கப்பட்டிருந்தது. ஆதித்யா அதனருகே போய் அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த கண்ணாடிச் சுவற்றில் அவன் விரலை வைத்து லேசாகத் தட்டினான். அந்த மீன் மிகவும் கோபமாக குறுக்கும் நெடுக்குமாக நீந்த ஆரம்பித்துவிட்டது. “டேய் ஆதித்யா! சும்மாயிரு,” என்று அடக்கினேன். அவர்களே ஏதோ வாஸ்து நிவர்த்திக்காக ஒற்றை மீனை வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. அவன் அதைப் போய் எரிச்சலூட்டி அட்மிஷனைக் கெடுத்து விடப்போகிறானே எங்கிற கவலை எனக்கு.
தாளாளர் என்னைப் பார்த்து இசைவாணர் பெயரைக் குறிப்பிட்டு “அவர் என்னவோ பெரிய ஜீனியஸ் அது இதுங்கறார். நாங்க ஏதோ மக்குப் பசங்களை வெச்சுட்டு ஸ்கூல் நடத்திட்டிருக்கோம். இங்க ஸ்கூல்ல நீங்க போட்டப்புறம் எங்களால உங்க பையன் அறிவு மங்கிப்போச்சுன்னு நாளைக்குச் சொல்லக் கூடாது,” என்றார். உடனே பையனுக்கும் பெண்ணுக்கும் அன்றே அட்மிஷனைப் போட்டுக் கொடுத்து விட்டார்.
எங்கள் சொந்த வீடு வாடகையில் இருந்ததால் பள்ளிக்குப் பக்கத்திலேயே ஒரு ஃபிளாட் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு என் மனைவி குழந்தைகளுடன் குடிபுகுந்து விட்டாள். இசைப் பள்ளியும் ஆட்டோவில் சென்றால் கால் மணி நேரம். எல்லாம் ஒரு மாதிரி ‘செட்டில்’ ஆகிக் கொண்டிருக்கிறது. இனிமேல் வாழ்க்கை நிம்மதியாக ஓடிவிடும் என்று கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயன்றேன். அலை எப்போது ஓய்வது எப்போது குளிப்பது?
இசைவாணர் வழக்கம் போல் படுத்திக்கொண்டிருந்தார். வகுப்பு எடுக்கிறேன் என்று ஆரம்பிப்பார். இரண்டு வரி பாடுவதற்குள் பெரிதாக அறிவுரையாக ஆரம்பித்து விடுவார். தீர்ந்தது அன்றைய வகுப்பு, அத்துடன் முடிந்து விடும். இசைப்பள்ளிக்கு வகுப்புக்கு வரச் சொல்லிவிட்டு அங்கு குறித்த நேரத்தில் இருப்பதில்லை. எப்போது ஃபோன் செய்தாலும் ‘அங்கிருக்கிறேன், இங்கிருக்கிறேன்’ என்று பதில் வரும். அவ்வப்போது என் மனைவி மீது நிலையில்லா புத்தியுடன் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள்.
ஆதித்யா வழக்கம்போல் பாட்டு, படுத்தல் என்றிருந்தான். என் மனைவி சைக்கிளை எடுத்துக் கொண்டு அவனையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த மாநகராட்சி மைதானத்துக்கு தினமும் சாயந்திரம் அழைத்துச் செல்வாள். அங்கு அவன் கொஞ்ச நேரம் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தபின் மூவரும் வீடு திரும்புவார்கள். எல்லாவற்றிலும் என் பெண்ணும் பங்கு கொண்டிருந்தாள் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
இசைவாணர் பள்ளியில் ரிசப்ஷனிஸ்ட் வேலை இருந்தது. இசைவாணருக்கு என் மனைவியை அந்த வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றிருந்திருக்கிறது. அவளிடம் கேட்டிருக்கிறார். என் மனைவி என்னிடம் கேட்டு விட்டுச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறாள். எனக்கும் அந்த வேலை செய்வதில் சௌகரியங்கள் இருப்பதாய்த் தோன்றியது. இவள் வேலை பார்க்கும் நன்றியினால், பையனுக்கு ஊக்கமாக வகுப்பு நடந்தால் நல்லது தானே என்று நினைத்தேன். அவளிடம் சொல்லவும் செய்தேன். அவள் பெண்களுக்கு இயற்கையிலேயே உள்ள எச்சரிக்கை உணர்வினால் பிடிவாதமாக வேண்டாம் என்று மறுத்துவிட்டாள். அவள் என் பேச்சைக் கேட்காதது நல்லதாய்ப் போயிற்று என்பதை நான் சற்று மெதுவாகத்தான் உணர்ந்து கொண்டேன். அதே சமயம் குழந்தைகள் படித்த பள்ளியிலும் வாத்யார் வேலை வந்தது. என் மனைவி வணிகவியலில் முதுகலையும் ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்பும் படித்திருந்தாள். ஏற்கெனவே ஆசிரியையாக வேலைபார்த்த அநுபவமும் இருந்தது. அதனால் குழந்தைகளைப் பார்த்துக் கொண்ட மாதிரியும் ஆயிற்று என்று அதை ஒப்புக் கொண்டாள். இசை வாணருக்கு எங்களிடம்  ஸ்வாரஸ்யம் வர வரக்  குறைந்து  கொண்டே வந்தது. ‘பையனையும் ஸ்வீகாரம் கொடுக்கமாட்டேனென்கிறார்கள். வேலைக்கு வா என்றாலும் விருப்பப் படவில்லை’ என்கிற கோபமும், அதன் பாற்பட்ட அலட்சியமும். ‘இன்ஸ்டிங்க்ட் எல்லார்ட்டயும் இருந்துடும்; அதை ‘க்ரூம்’ பண்ணிக் கொண்டு வர்றது பெரிய சேலஞ்ச். ஆயிரம் பேர் இன்ஸ்டிங்க்டோட பிறந்தான்னா அதில பத்துபேர் பெரிய வித்வானா வந்தாலே ஜாஸ்தி,’ என்றெல்லாம் பேச ஆரம்பித்திருந்தார் இசைவாணர்.
காலையில் எழுந்து குழந்தைகளைத் தயார் செய்து அழைத்துக் கொண்டு பள்ளிக்கு ஓடவேண்டும். திரும்பி வந்ததும் மைதானத்தில் சைக்கிள் ரவுண்ட். அவ்வப்போது கடனிழவே என்று இசைவாணரின் வகுப்புகள். மலை மலையாய்த் திருத்தக் குவியும் மாணவர்களின் தேர்வுத் தாள்கள். இரவு தான் தண்ணீர் விடுவார்கள். அப்போது தான் துணி துவைக்கமுடியும். இப்படி அல்லாடினாள் என் மனைவி. அவ்வப்போது கச்சேரிகளுக்கும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். வார இறுதிகளிலும் கச்சேரி என்றாலும் நான் சென்னை வந்து கொண்டிருந்தேன்.
சிறுசிறு கச்சேரிகளைப் பற்றி சொல்லாமல் விடுகிறேன். ஏனென்றால் இரண்டு மூன்று பாடல்கள் பாடிய பின்னர் தான் ஆதித்யாவிற்கு சூடு பிடிக்கும். பல சமயங்களில் கச்சேரிகள் குழந்தைகளை வைத்து பெரிய மேளா மாதிரி நடத்துவார்கள். கால் மணி நேரம் ஒவ்வொரு குழந்தைக்கும் என்பார்கள். அதில் போய் ஆதித்யா மூன்று பாடல்கள் பாடினால் தீர்ந்தது. யாருடைய கவனிப்பையும் அது பெறுவதில்லை. அப்படியே காற்றோடு போய் விடும்.
5.5.2005 அன்று என் அண்ணன் பையனின் பூணூல் கல்யாணம் பெங்களூரில் நடந்தது. அதில் முதல் நாள் நாந்தி அன்று ஆதித்யாவின் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தேன். இது கிட்டத்தட்ட ‘கேட் க்ராஷிங்’ என்பார்களே அது போல் தான். என் உடன் பிறந்த அண்ணன் என்பதால் எனக்குச் சலுகை இருந்தது. அவர் கொடுத்த உரிமை என்பதை விட நானாக எடுத்துக் கொண்டது என்று சொல்லி விடலாம். என் அண்ணனுக்கு பெரிய ஆட்சேபணைகள் இல்லை. நம்ம தம்பி மகனை நாம் விளம்பரப் படுத்தாமல் வேறு யார் விளம்பரப் படுத்துவார்கள் என்று கூட இருந்தது அவருக்கு. சென்னையிலேயே ஒரு வயலின் வித்வானின் தொடர்பு இருந்தததால் பக்கவாத்தியம் அவரின் பெங்களூர் தொடர்பில் எளிதாக ஏற்பாடு செய்ய முடிந்தது. கடத்துக்கு மட்டும் ஆள் கிடைக்கவில்லை.
அங்கு போன் செய்து இங்கு போன் செய்து கடைசியில் ஒரு பையனை வரவழைத்தேன். அன்று அவன் வராமல் இருந்திருந்தால் கச்சேரி நடந்திருக்குமா சந்தேகமே. ஆதித்யாவின் பிடிவாதம் அப்படிப்பட்டது.
கச்சேரி மிகவும் நன்றாக நடந்தது. கச்சேரியில் மொத்தம் 14 பாட்டுகள் பாடினான். மிகவும் நன்றாக பாடினான். வயலின் வாசித்தவர் வயதானவர். கொஞ்சம் ஈடு கொடுக்க சிரமப்பட்டார். அவ்வப்போது உதட்டைப் பிதுக்கிக் கொண்டிருந்தார். உறவினர்கள் எல்லாம் – என் தந்தை வழி தாய் வழி உறவுகள் – அண்ணியின் உறவுகள் என்று கூட்டம். சுமார் 150 பேர் இருக்கலாம். ஊசி விழுந்தால் கேட்கும் நிசப்தத்துடன் கேட்டு விட்டு கைதட்டினார்கள். உணர்ச்சி வசப் பட்டிருந்த ஒன்றிரண்டு பேர் என்னிடம் வந்து “இந்தப் பையனுக்கு நாங்க ஏதாவது செய்யணும் சொல்லுங்கோ,” என்றார்கள். எனக்கு என்ன தேவை? பெரிய பணத் தேவையில்லை. எங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவு என் ஊதியம் போதுமானதாயிருந்தது. ஆதித்யா இந்தக் கச்சேரியில் ‘பால ஸரஸ முரளி’ என்கிற கீரவாணி ராகப் பாடலைப் பாடினான். ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் இயற்றியது. சிக்கலான ஸ்வரக் கோர்வைகள் உள்ளது. சப்த ரத்னங்களுள் ஒன்று. தியாகராஜரின் பஞ்ச ரத்னத்துக்கு இணையாகக் கருதப்படுவது.
கச்சேரியில் ஒரு சிறு அசம்பாவிதம். கடம் வாசித்தவன்  சும்மாவே உட்கார்ந்திருந்தான். ஆதித்யா இதை கவனித்து விட்டு “ப்ளே” என்றிருக்கிறான். கடம் வாசித்தவன் ‘பையன் என்னைவிடச் சின்னவன், ஏன் அப்படிக் கூறினான்?” என்று வாசிக்காமல் அழிச்சாட்டியமாக உட்கார்ந்திருந்தான். நாங்கள் ஒன்றிரண்டு பேர் சமாதானம் செய்ய நேர்ந்தது. இது பின்னால் கொஞ்சம் பழகி விட்டது. ஆலாபனை செய்யும் போது வயலின்காரர் ராகம் புரியாமல் கொஞ்சம் மாற்றி விட்டால் தொலைந்தார். ஆதித்யா அங்கேயே ஸ்வரஸ்தானத்தைச் சொல்லி வகுப்பு எடுக்க ஆரம்பித்து விடுவான். ஒன்றிரண்டு பேர் கோபம் தாங்காமல் கிளம்பியதும் நடந்ததுண்டு. பலர் ஒரு முறை வாசிப்பதுடன் சரி. இரண்டாம் முறை கூப்பிட்டால் வரமாட்டார்கள்.
இந்தக் கச்சேரியின் விளைவாக வேறு ஒரு நன்மை விளைந்தது. சென்னை மருத்தீஸ்வரர் கோயிலில் ஆதித்யா பாட வேண்டுமென்றிருந்தது எனக்கு. பலமுறை முயன்றேன். நடக்கவில்லை பெங்களூர் கச்சேரிக்கு வந்திருந்த உறவினர் ஒருவர் கோயிலுடன் நல்ல தொடர்பில் இருந்தார். அவர் ஏற்பாட்டில் வசந்த பஞ்சமியின் போது ஆதித்யா கச்சேரி ஏற்பாடு ஆகியது.
15.05.2005 அன்று அந்தக் கச்சேரி நடந்தது. நல்ல வேனல் காலம். கையெழுத்து மறையும் சமயத்தில் கடற்காற்று வீசிக் கொண்டிருந்தது. சென்னை திருவான்மியூரில் நடு மையமாக இந்தக் கோயில் உள்ளது. கோயில் ஒன்றிரண்டு இடங்களில் பாதி கட்டுமானப் பணியுடன் நின்றிருப்பதாய் எனக்குத் தோன்றுவது உண்டு. உள்ளே தனித்த மண்டபங்களாக இருக்கும். அதற்கும் கர்ப்ப க்ருஹத்திற்கும் நடுவில் வெட்ட வெளியாக புல்வெளியாக இருக்கும். அந்த மண்டம் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று ஆதித்யா 2 ½  மணி நேரம் பாடினான். வெக்கை அதைத் தணிக்கும் விதமான கடல் காற்று. அக்காற்றுடன் பூக்களின் வாசம், செக்கர் வானம் என்று சூழ்நிலையே மிகவும் ரம்மியமாக இருந்தது.
அந்தக் கச்சேரி நடந்து கொண்டிருந்த போது வானம் இடி இடித்தது. கோடையிடி. மழையில்லை. அதைக் கேட்ட எனக்கு ஆதித்யாவின் பாட்டை வானோர்  அங்கீகரித்துப் பாராட்டுகிறார்கள் என்று தோன்றியது. கச்சேரி முடிந்ததும் ஒரு மாமி எங்களிடம் வந்து, “உங்கள் பிள்ளை வளர்ந்து வர்றச்சே இப்ப இருக்கிற பெரிய வித்வான்களையெல்லாம் தூக்கி சாப்பிடப் போறான்,” என்று பாராட்டிவிட்டுப் போனார்.
இத்துடன் கச்சேரி பிரதாபங்களுக்கு ஒரு இடைவேளை விட்டு விட்டு நான் ஆதித்யா சம்பந்தமாகச் சந்தித்த சிலரைப் பற்றியும் சில சம்பவங்களையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
பின் குறிப்பு:
சிதம்பரம் கோயில் கச்சேரியில் ஆதித்யா பாடிய பாடல்களின் விபரம் எங்கு தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை. பொதுவாக எல்லாக் கச்சேரிகளின் பாட்டு அட்டவணையை நான் என் கணிப்பொறியில் சேமித்து வைத்திருப்பது வழக்கம். இந்தக் கச்சேரியைப் பொறுத்தவரை பாடல்களின் ஒலிப்பதிவு கிடைத்ததே ஒழிய அட்டவணை கிடைக்கவில்லை. ‘சரி ஒரு முயற்சி செய்து பார்க்கலாம்’ என்று ஆதித்யாவிடம் கேட்டேன். பொட்டில் அடித்தாற் போல் பாடல்களை ராகங்களோடு பாடின சீரிலேயே சொன்னான்! ஆச்சரியமாக இல்லை? 2004 இல் பாடியது.
நன்றி:சொல்வனம் 
https://solvanam.com/?p=51165

திங்கள், 11 டிசம்பர், 2017

தொல்வெளியிலிருந்து தொடரும் இசை III

அத்தியாயம் 11

பாண்டிச்சேரிக்கு செல்வதற்கு முன்பே ஆதித்யாவிற்குப் பள்ளியில் பிரச்னைகள் ஆரம்பித்திருந்தன.  பதின் பருவத்தின் நுழைவாயிலில் இருந்தான்.  அவன் பள்ளி நடவடிக்கைகளைப் பற்றி நாங்கள் பெரிதாக ஆராயப் புகுந்ததில்லை.  ஏதாவது புது வம்பு வந்து விடப் போகிறதே என்கிற பயம்.  அவனும் ஏதாவது நகைச் சுவையாகப் பண்ணிக் கொண்டிருப்பான்.  ஒருமுறை வீட்டில் உபயோகமற்றுக் கிடந்த கூலிங்கிளாஸ் ஒன்றை எடுத்து மாட்டிக் கொண்டு சென்றுவிட்டான்.  அதைத் தொடர்ச்சியாக தினமும் மாட்டிக் கொண்டு செல்வது என்று ஆரம்பித்தான்.  பள்ளியில் கழற்றுவதேயில்லை.  சக மாணவர்கள் கிண்டல்களையும் பொருட்படுத்துவது இல்லை.  பள்ளியில் எங்களைக் கூப்பிட்டு அனுப்பினார்கள்.  நாள் பூரா கூலிங்கிளாஸைப் போட்டுக் கொண்டிருக்கிறான் என்றும் மாணவர்களுக்குப் பெரிய கவனச்சிதறல் ஏற்படுகிறது என்றும் சொன்னார்கள்.  அதை ஒளித்து வைத்து, ஒளித்து வைத்து ஒழித்துக்கட்டினோம்.
வனவிலங்குகளைப் பார்ப்பதற்கு சஃபாரி செல்லும் ஒரு குடும்பம் பற்றிய விளம்பரப் படம் ஒன்று நினைவுக்கு வருகிறது.  காட்டில் காரில் போய்க்கொண்டிருக்கும் போது சிறுத்தைப் புலி பாய்ந்து வருவதைப் பார்த்துக் காரை நிறுத்துகிறது குடும்பம்.  எதிர்பாராத விதமாகக் காரின் ‘பானெட்டில்’ சிறுத்தைப் புலி ஏறி அமர்ந்து கொள்கிறது.  குடும்பம் திக் பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சிறுத்தை நிதானமாகச் சுற்றும் முற்றும் நோக்கி விட்டு நிதானமாகக் கீழே குதித்துச் செல்கிறது.  ஆதித்யாவின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட இது போல் தானிருக்கும்.  தன் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு உள்ளம் பூரா இசைச் சிந்தனை யானை போல் ஏறி அமர்ந்து கொண்டிருக்கிறது.  வேறோர் சமூக சம்பாஷணையை அவன் நடத்த வேண்டுமென்றால் இந்த யானையை இறக்கி வைத்தால் முடியும்.  அல்லது அலை வரிசையை மாற்றினால் நடக்கும்.  இது வீட்டில் ஓடலாம்.  வெளியில் ஓடுமா?
வகுப்புகளில் பாடங்களை கவனிக்கிறானா? தெரியாது.  யாருக்குமே தெரியாது.  பாடங்கள் சில சமயங்களில் நோட்டுகளில் எழுதியேயிருக்காது.  என் மனைவி அங்கே விசாரித்து இங்கே விசாரித்து அவனை வீட்டில் எழுத வைப்பாள்.  மணி அடிக்கும் வரையிலும் வகுப்பில் உட்கார்ந்திருப்பானேயொழிய சக மாணவர்களிடத்தில் எந்த வித சம்பாஷணையும் இருக்காது.  பல சமயங்களில் பாடிக் கொண்டிருப்பவனை ரொம்ப வற்புறுத்தி நிறுத்த வேண்டியதாய் இருந்திருக்கிறது.
சொல்கிற வார்த்தைகளைக் கேட்கிறானா சந்தேகம்.  ஏனென்றால் பல சமயங்களில் கொடுக்கிற ஆணைகளை ஏற்று நடப்பதில்லை.  மத்திய தர உயர் மத்திய தர குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும், பள்ளி ஆசிரியர்களும், சக மாணவர்களும் இவன் விசேஷ நிலை கருதி ஒத்துழைத்தார்கள்.  ஒரு நாள் ஏதோ கம்பெனி அவர்களின் வியாபார விருத்திக்காக புட்டி நிறைய எல்லா மாணவர்களுக்கும் கால்சியம் மாத்திரைகளை கொடுத்திருக்கிறார்கள் ஆளுக்கொன்றாக.  ஆதித்யா இனிப்பாக இருந்ததால் ஒரே மூச்சில் எல்லா மாத்திரைகளையும் தின்று விட்டான்.  பள்ளி கொஞ்சம் பயந்து போய் அவசியம் ஏற்பட்டால் மருத்துவரிடம் காண்பிக்க அறிவுறுத்தி அனுப்பினார்கள்.  நல்ல வேளையாக ஒன்றும் ஆகவில்லை.  அதே போல் கை ஒடிந்த சமயத்தில் ஆதித்யாவைப் பள்ளி அப்படிப் பரிவுடன் பார்த்துக் கொண்டது.  வேறு யாரையாவது விட்டு அவன் நோட்ஸை எழுதிக் கொடுக்கவெல்லாம் சொல்லி உதவி செய்தது பள்ளி.
இது எத்தனை நாளுக்கு ஓடும்? ஆசிரியைகள் கொஞ்சம் கடுமையைக் காட்ட ஆரம்பித்தார்கள்.  அடித்திருக்கிறார்கள்.  ஆதித்யாவிற்குச் சொல்லத் தெரியாது.  ஆனால் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ள ஆரம்பித்தான்.  ஆசிரியைகள் அடித்தால் வலி தாங்க முடியாது அடித்தவரை அல்லது சக மாணவர்களை அடித்து விடுவான். எங்களுக்கு அவன் நடத்தையில் மாறுதல் தெரிந்தது.  கவலையாக இருந்தோமே ஒழிய என்ன காரணம் என்று தெரியவில்லை.  இப்படி இருக்கும் போது பள்ளியில் கூப்பிட்டு அனுப்பினார்கள்.  நானும் என் மனைவியும் கவலையுடன் பள்ளிக்குச் சென்றோம்.  அவன் வகுப்பு ஆசிரியர் ஆதித்யாவை சமாளிக்க கொஞ்சம் சிரமம் ஆகி வருகிறது என்றும் யாராவது மருத்துவரிடம் காண்பிக்கவும் சிபாரிசு செய்தார்.  அப்போது ஆதித்யா அங்கு திறந்த வெளியில் பயிற்சிக்காக வைக்கப் பட்டிருந்த இணை இரும்பு பைப்புகளில் ஒன்றில் இரண்டு கால்களை முட்டியுடன் மடித்து தலை கீழாகத்தொங்கி எங்களைப் பார்த்துக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தான்!
கொஞ்சம் ஆறுதலாக ஏதாவது சொல்வார்களோ என்கிற நப்பாசையில் மற்ற ஆசிரியைகளிடம் சென்றோம்.  எங்களைச் சுற்றிக் கூட்டமாக நின்று கொண்டு புகார் மேல் புகாராக அடுக்கி விட்டு “எடுத்துருங்கோ ஸ்கூல்லேருந்து” என்றார்கள்.
நிலைமை இப்படியிருந்ததால் பாண்டிச்சேரிக்கு மாற்றல் எனக்கு வரப் பிரசாதமாக அமைந்து விட்டது.  பள்ளியிலிருந்து டீஸி வாங்கப் பின்னாளில் ஒரு நாள் சென்ற போது அங்கிருந்த ஆசிரியைகளின் கண்களில் இருந்த  குற்றவுணர்வை என்னால் மறக்க முடியவில்லை.  ‘எதுக்கு, எதுக்கு’ என்றார்கள் சந்தேகமாக.  பள்ளி முதல்வரை நாங்கள் பார்க்க நின்றிருந்த போது அவர்களுக்கு நாங்கள் ஏதோ புகார் செய்யப்போவதாய்த் தோன்றியிருக்கிறது.  அவர்கள் பள்ளியை விட்டு எடுக்கச் சொன்னதை நாங்கள் அவ்வளவு சீரியஸ்ஸாக எடுத்துக்கொள்வோம் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை போலும்.
தற்போது பாண்டிச்சேரி வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார்கள்.  நான் சமீபத்தில் செல்லவில்லை.  2003 ஆம் வருடத்தில் பேருந்தில் ஏறிப் போகும் போது அரசு விளம்பரங்களை ஸ்வாரஸ்யமாக கவனிப்பது உண்டு.  ஒரு விளம்பரத்தில் ‘பாண்டிச்சேரியில் நேரம் நின்று விடுகிறது’ என்று எழுதியிருப்பார்கள்.  சின்ன ஊர் சின்ன கடற்கரை.  இரண்டு சக்கர வாகனத்தில் அரைமணி நேரத்தில் முழு ஊரையும் சுற்றி வந்து விட முடியும்.  பெரிய கட்டுமானங்கள் இல்லாத ஊர் என்றாலும் பெரிதாகச் செலவு வைக்காத ஊரும் கூட.  பாண்டிச்சேரியில் பெரிதாக எனக்கு வேலையும் இல்லை.  பத்து மணிக்கு அலுவலகம் சென்றால் ஐந்து ஐந்தரைக்குக் கிளம்பி விடலாம்.  அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் பெரிய தூரம் கிடையாது.  குழந்தைகள் அட்மிஷனுக்கும் பெரிய பிரச்னைகள் இல்லை.  வீட்டிற்குப் பக்கத்திலேயே மலையாள கிறிஸ்துவத் தம்பதிகள் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்கள்.  இரண்டு தகரக் கொட்டகைகள் அதில் தான் பள்ளி வகுப்புகள்.  நான் எதிர் பார்த்ததை விட எளிதாக அட்மிஷன் முடிந்தது.  தாளாளர் ஆதித்யாவின் திறமையைக் கேள்விப்பட்டவுடன் அவனுக்கான நன்கொடையையும் தள்ளுபடி செய்து விட்டார்.
ஆதித்தியாவின் சங்கீதம் ஒரு கேள்விக் குறியாக நின்றது.  முன்னதாகச் சென்னையில் ஒரு இசைவாணரிடம் ஆதித்யா கிளம்புமுன் அவ்வப்போது போய் வந்து கொண்டிருந்தான்.  இதை நான் முன்னரே விவரித்திருக்க வேண்டும்.  சங்கீத முயற்சிகளைக் கொஞ்சம் கோர்வையாகச்  சொல்ல வேண்டுமென்பதால் முதலில் சொல்லவில்லை.  இந்த இசைவாணர் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தாம்.  கச்சேரிகள் செய்கிறவர்.  சபா போன்ற ஒரு அமைப்பையும் வைத்துக் கொண்டிருந்தார்.  இசைப் பள்ளியும் இருந்தது.  இவரையும் தவிர அங்கே வேலைக்கு இசை ஆசிரியர்கள் வைத்துக் கொண்டிருந்தார்.  பெரிய தொழிற்சாலை போல நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தது.
இவர்களைப் பற்றி நான் தற்செயலாக நாளிதழில் வரும் விளம்பரங்களைப் பார்த்திருந்தேன்.  ஏற்கெனவே இவரின் முயற்சிகளைப் பற்றி ஏதோ கட்டுரைகள் சஞ்சிகைகளில் படித்திருந்தது கூட ஞாபகம்.  இவர் வருடா வருடம் இசைப் பள்ளிக்கான ஆரம்ப விழா ஒன்றை நடத்துகிற வழக்கம்.  அந்த விளம்பரத்தைப் பார்த்துத் தான் இவரிடம் செல்ல நிச்சயித்தேன் என்று நினைக்கிறேன்.
ஆரம்ப விழா அமர்க்களமாக இருக்கும்.  அதில் இன்னொரு இசை விற்பன்னரும் கலந்து கொள்வார்.  பிரபலமானவர் கச்சேரிகள் வருடம் பூரா செய்கிறவர்.  அவருக்கு இவர்கள் இசைப் பள்ளி மற்றும் அமைப்பில் ஏதோ பங்கு இருந்தது என்று நினைக்கிறேன்.  அந்தப் பிரபலம் ஆரம்ப விழாவிற்கு வருவதுடன் சரி.  அதன் பின்னர் தலை காட்ட மாட்டார்.  மாணவர்களை கவர்ந்திழுக்க இது ஏதோ மார்க்கெட்டிங் உத்தி போலிருக்கிறது.  இதெல்லாம் பின்னால் தான் எனக்கு புரிந்தது.
ஆதித்யாவை நாங்கள் கூட்டிப் போனவுடன் அவனைப் பாடச் சொல்லியிருக்கிறார்.  ஆதித்யா ‘சாதிஞ்சனே’ என்கிற ஆரபி ராக பஞ்ச ரத்ன கீர்த்தனையை அவர்கள் முன் பாடினான்.  குழந்தைகளாக வந்திருந்த அந்த இடத்தில் ஆதித்யா பாடிக்கொண்டிருந்த போது சூழ்நிலையே மாறிவிட்டது.  ஊசி விழுவது கேட்குமளவு நிசப்தம்.  பாடி முடித்தவுடன் கூடியிருந்த எல்லோரும் கைத்தட்டினார்கள்.  ஒரு மாமி  “செம்பை பிறந்திருக்கார்” என்று மாய்ந்து போனார்.
பாடி முடித்தவுடன் ஆதித்யா இவர்கள் யார் முகத்தையும் பார்க்கவில்லை.  அந்த இசைவாணர் கேட்கிற கேள்விகளையும் பொருட்படுத்தவில்லை.  அங்கே ஒரு ‘கீபோட்’ வைத்திருந்தார்கள்.  அதை நோக்கி பாய்ந்தான்.  நாங்கள் ஏற்கனவே ஆதித்யாவிற்கு ‘யமஹா’ கீபோர்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தோம்.  அதில் அவன் பாடல்களை வாசிப்பது வழக்கம்.  தானாகக் கற்றுக்கொண்டது தான்.  நன்றாக வாசிப்பான்.
அவன் கீபோர்டை வாசிக்க ஆரம்பித்தான்.  தேனைச் சுற்றும் ஈக்கள் போல் சிறு கூட்டம் அவனைச் சூழ்ந்து கொண்டு நின்றது.  இசைவாணர் அவனை விட்டு விட்டு என்னிடம் வந்தார்.
“இது ஒரு ‘இன்ஸ்டிங்ட்’ தான்.  ஆனா இதை இப்படியே விட்டுடக்  கூடாது.  பெரிய ‘டாலண்ட்’.  பேரண்ஸூம் குருவும் ஒத்துழைச்சாத்தான் முன்னுக்குக் கொண்டு வரமுடியும்” என்று கூறி விட்டு “இப்போ இருக்கிற டாலண்ட் ‘ஸ்டாடிக்’.  இதை டைனமிக்கா மாத்தறத்துக்கு மட்டும் நாம கொஞ்சம் ஒழைச்சாகணும்” என்றார்.
நான் கொஞ்சம் பேச்சிழந்து அவர் வாயைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.
“எங்க குடும்பமே இசைக் குடும்பம் தான்.  நாங்க எல்லோரும் ‘ப்ராடிஜீஸ்’.  ஆனா இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரதுக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கேன் தெரியுமா? என் கம்பெனியோட டர்ன் ஓவர் இப்போ ஃபைவ் க்ரோர்ஸ்.  நான் ஆரம்ப நாள்ல அவ்வளவு கஷ்டப் பட்டேன்.  அப்ப ஒரு முடிவு பண்ணேன்.  இந்த மாதிரி டாலண்ட் உள்ள பசங்களுக்குத் தான் முன்னுரிமை.  இங்க டாலண்ட் ப்ரமோஷன்னு ஒரு ப்ரோக்கிராம் இருக்கு.  உங்க பையனைப் பொறுத்த மட்டில ஆரம்பப் பாடம்லாம் தேவையில்லை.  அந்தப் ப்ரோக்ராம்ல போட்டுடுங்கோ.  பத்தாயிரம் ரூபா.  பீஸைக் கட்டிடுங்கோ” என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.
“பையன் இன்னும் வளரலியே சார்.  இன்னும் கொஞ்சம் மெச்சூரிடி இருந்தாத் தேவலயில்லையா. . . . . . ” என்று நான் இழுத்தேன்.
“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை.  சங்கீதத்திலேயே மூழ்கியிருக்கறவா அப்படித்தானிருப்பா.  அவன் வயசுக்குத் தேவையான மெச்சூரிடி நிறைய இருக்கு.  மத்ததெல்லாம் தானா வந்துரும் என்றார்.
“லோகப் பிரக்ஞை. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ” என்று ஆரம்பித்தவனை அவர் இடைமறித்துச் சொன்னார்.  “அதான் சொன்னேனே. எங்க குடும்பத்திலே இவன் மாதிரித்தான் நாங்க எல்லோருமே.  நாங்கள்லாம் சங்கீதத்திலேயே இருக்கறதுனால எங்களுக்கு இதெல்லாம் நன்னாப் புரியும் ” என்றார்.
அவர் முகத்தில் புன்சிரிப்பை மீறி வெளிப்பட்ட நம்பிக்கை  எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.  தவிரவும் அவர் அவனை எந்தவித மனக்கட்டுமானமும் இல்லாமல் எல்லோரைப் போலவும் சாதாரணமாக நடத்தியது பெரிய தேறுதலாக இருந்தது.
“அவன் எங்க குடும்பத்து ஆளு.  தப்பிப் போய் உங்க குடும்பத்திலே பொறந்துட்டான்.  அவன் இனிமே எங்க கூடத் தான் இருக்கப் போறான். . . . . . ”
கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்குக் கிடைத்த கட்டை போல் அவர் வார்த்தைகளையும் அவரையும் உணர்ந்தேன்.
எவ்வளவு பெரிய பிழை!

 அத்தியாயம்- 12

மைலாப்பூரில் ஏதோ ஒரு விழா.  இசை சம்பந்தப்பட்டது தான்.  அதற்கு ஆதித்யாவைக் கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார் இசைவாணர்.  அப்போது நான் பாண்டிச்சேரி சென்றிருந்த புதிது.  குடும்பம் சென்னையில் தான் இருந்தது.  நான் பாண்டிச்சேரியில் ரூம் எடுத்துத் தங்கிக் கொண்டு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  வார இறுதியில் சென்னை வந்து விட்டு திங்கட்கிழமை காலை வேலைக்குத் திரும்பி விடுவேன்.  அந்தமாதிரி சந்தர்ப்பத்தில் ஆதித்யா கொஞ்சம் தொடர்ச்சியாக அந்த இசைவாணரிடம் வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தான்.  என் மனைவி அழைத்துக் கொண்டு போய் வருவாள்.
இந்த இசை விழாவில் மேடையில் தன் பக்கத்தில் ஆதித்யாவை உட்காரச் சொல்லியிருக்கிறார் இசைவாணர்.  இசைப்பள்ளியின் மாணவர்கள் தனித்தனியாகவும் குழுவாகவும் பாடிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.  நல்ல கூட்டம்.  மாணவர்களின் பெற்றோர் முக்கால் வாசி.  இது நடந்து கொண்டிருந்தபோது கொஞ்சம் இடைவெளி வந்தது.  இடைவெளியில் இசைவாணர் “எங்கிட்ட ஒரு பையன் இருக்கான்; பெரிய இசைஞானி.  இப்பப் பாடச் சொல்றேன்” என்று கூறி விட்டு இந்தோள ராகத்தில் ‘சாமஜ வர கமனா’ சரணத்தில் ஆரம்பித்துப் பாடி விட்டு ஆதித்யாவுக்கு ஜாடை காண்பித்து விட்டு பல்லவியில் கற்பனா ஸ்வரத்தை எடுத்திருக்கிறார்.  கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஸ்வரம் பாடியிருக்கிறார்கள்.  சூடு பிடித்தவுடன் ஆதித்யா பின்னலான கணக்குகளுடன் அசாத்தியமாக.  ஸ்வரம் பாடி முத்தாய்ப்பு வைத்து பாட்டை முடித்திருக்கிறான்.  கொட்டகை பிய்த்துக் கொண்டு போகுமளவிற்குக் கைத்தட்டல்.  ஒரே ஆஹாகாரம்.  ’யார் பையன் யார் பையன்” என்று மெல்லிய குரல் விசாரிப்புகள்.  சிலர் என் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு உணர்ச்சி வசப் பட்டிருக்கிறார்கள்.  எதிர்பாராத விதமாக ஒரு பெரிய சபையில் இது போன்று ஒரு அங்கீகாரத்தை என் மனைவி எதிர்பார்க்கவில்லை.  அவள் என்னிடம் இதைச் சொன்னபோது இசைவாணர் பால் எங்களுக்கு அளவற்ற நன்றியுணர்ச்சியும் பரிவும் பெருக்கெடுக்க ஆரம்பித்தன.
சென்னை பள்ளியில் ஏற்கெனவே எங்களிடம் “பையனுக்கு இசையில் நாட்டம் இருந்தால் அவனை அதில் ஈடுபடுத்துவது தான் நல்லது,” என்று அறிவுறுத்தியிருந்தார்கள்.  அவர்கள் எங்களைக் கூப்பிட்டு அனுப்பிய போது ஆதித்யாவின் குணாதியங்களில் தெரிய ஆரம்பித்த மாறுபாடு புரிபடவில்லை.  எங்களுக்கு ஏதோ தாம்பத்தியப் பிணக்கு என்று நினைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அல்லது பையன் விருப்பத்துக்கு மாறாக நாங்கள் ஏதோ செய்ய வற்புறுத்துகிறோம் என்று கூட நினைத்திருக்கலாம்.  அவர்களுக்குப்   புரியாத விஷயம் நாங்களுமே அவன் நடத்தையில் தென்படுகிற மாற்றங்களைப் புரிந்து கொள்ளவியலாது திணறுகிறோம் என்பது தான்.  எது எப்படியிருந்தாலும் இசைவாணர் அளித்துக் கொண்டிருந்த நம்பிக்கையும் பையன் மீது கொண்டிருந்த அன்பும் எங்களை அவர் பால் ஈர்த்தன.  எனவே பள்ளியில் வேறு, பையனை அவன் விருப்பப்படி நடவடிக்கையில் ஈடுபடுத்தச் சொன்னதால் இசைவாணரை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முடிவு செய்தோம்.
இசைவாணரைப் பொறுத்தவரை ஆதித்யாவை எந்தவித பிரத்யேக கவனிப்புக்கும் ஆட்படுத்த தயாராக இல்லை.  அவனை இதரர்களை எப்படி நடத்துவாரோ அதே போல் நடத்தினார்.  அவன் குணாதிசயங்களில் இருந்த முரண்பாடுகளை அப்படியே உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டார்.  அவன் பிடிவாதத்தைத் தளர்த்துவதற்கு அவனுடன் மன்றாடத் தயாராக இருந்தார்.  அவனிடம் கோளாறுகள் இருக்கிறது என்பதை நம்பத் தயாராக இல்லை.  அவனைப் பெரிய இசை அறிஞனாக அங்கீகரித்தது மட்டுமல்லாமல் “உங்களுக்குத் தான் இதெல்லாம் புதிது.  எங்கள் குடும்பத்தில் எல்லோரும் இப்படித்தான்,” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அது ஒரளவிற்கு உண்மையும் கூட.   குடும்பத்தில் எல்லோருமே இசைவாணர்கள்.  உலகம் பூரா கச்சேரி செய்கிறவர்கள்.  மழலை மேதைகள் என்று அறியப்பட்டவர்கள்.
வகுப்புகள் ஆரம்பித்தன.  இசைவாணர் சௌகரியமான சமயங்களில் வகுப்பு வைத்துக் கொள்வதாகப் பேச்சு.  ஒன்றிரண்டு வகுப்புகளும் நடந்து வந்தன.  இசைவாணர் இசைப் பள்ளியை நிர்வாகம் செய்து கொண்டிருந்ததுடன் பல இடங்களிலும் நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார்.  மிகவும் பிஸியான மனிதர்.  “காலம்பர ஒம்பது மணிக்கு போன் பண்ணுங்கோ,”என்பார். ஒன்பது மணிக்கு போன் செய்தால் ‘பிஸியாக இருக்கிறேன்; பத்து மணிக்கு போன் செய்யவும்’ என்று பதில் வரும்.  பத்து பன்னிரண்டாகும்.  பின்னர் மூன்றாகும். ஆறாகும்.  இப்படியே இழுத்து இழுத்து இரவு எட்டு மணிவாக்கில் வகுப்பு கடைசியாக நடக்கும்.  இது எத்தனை நாள் ஓடும்?.
என் மனைவி தான் பாவம்.  நாயாக அலைந்தாள் பையனையும் இழுத்துக்கொண்டு.
இசைவாணரிடம் இன்னும் கொஞ்சம் வயதாகிய மாணவனும் இருந்தான்.  வயது இருபது இருக்கலாம்.  இந்தப் பையனின் அன்னை இசையாசிரியர்.  ஆனால் பையன் இசைப் பக்கம் போய் வாழ்வைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று மிகவும் கவனமாக இருந்தார்.  பையன் பொறியியல் படிப்பிற்காக ‘நுழைவுத்தேர்வு கோச்சிங்’கிற்காகச் சென்னை வந்தான்.  இவன் ஒரு தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிற்றூரிலிருந்து வந்தவன்.  அங்கேயே பல்லவியில் நிபுணராகிய ஒரு இசையாசிரியரிடம் ஏற்கெனவே இசை கற்றுக் கொண்டிருந்தான்.  நல்ல குரல் வளம்.  இவன் செனனை வந்த இடத்தில் ஏதோ ஒரு தொலைக்காட்சிச் சானலில் வரும் பாடகருக்கான போட்டிக்காக மனு செய்திருக்கிறான்.  நல்ல பாராட்டு.  இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று எல்லாவற்றிலும் முன்னேறி அரை இறுதிச் சுற்றில் உள்ளத்தை உருக்கும் விதமாகப் பாடியிருக்கிறான்.
ஒரே பாராட்டு மழை.  மிகவும் மன வருத்தத்துடன் அவனை நிராகரித்திருக்கிறார்கள்.  அந்த நிகழ்ச்சியின் ஒரு நீதிபதி நம் இசைவாணரின் தொழில் பங்குதாரர்.  ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேனே – இசைப்பள்ளி தொடக்க விழாவிற்கு அன்று மட்டும் வந்து செல்பவர் என்று – அவர் தான்.  அவரும் நல்ல பிரபலமான கர்நாடக சங்கீத வித்வான்.  அவர் பையனிடம் போகிற போக்கில் ‘எதற்கு  படிப்பெல்லாம்; நல்ல திறமையிருக்கிறது.  முறையாகப் பயிற்சி பெற்றால் பெரிய இசைக்கலைஞனாக வரலாம்,’என்கிற ரீதியில் ஓதிவிட்டுச் சென்றிருக்கிறார்.  தொலைந்தது.  பையன் மனது மாறி விட்டது.  அதே இசைக்கலைஞர் நம் இசைவாணரின் பெயரைச் சிபாரிசு செய்ய பையன் நுழைவுத்தேர்வையெல்லாம் அம்போ என்று விட்டு விட்டு நம் இசைவாணரே கதி என்று வந்து விட்டான்.  இதெல்லாம் அவன் அன்னை பின்னாளில் எங்களிடம் வருத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்ததில் தெரிந்தது.
இந்தப் பையன் கிட்டத்தட்ட இசைவாணரின் அந்தரங்கக் காரியதரிசி மாதிரி ஆகி விட்டான்.  அவர் பொருளாதாரம் தவிர்த்த மற்ற நடவடிக்கைகளுக்கு அவன் தான் உறுதுணை.  தொலைபேசி அழைப்புகளை ஏற்று பதில் சொல்வதிலிருந்து பயணத்துக்குத் தயாராக வேண்டிய சாமான்களை ஒழுங்கு படுத்துவது வரை எல்லாம் தன் தலைப் பொறுப்பாக வைத்துக் கொண்டான்.  ஜாகை இசைவாணரின் வீட்டில் தான்.  அவர் தனியாகத் தான் இருந்தார்.  ஊரில் இருக்கும் போது அவருக்கு சமைப்பதற்கும் வீட்டுக் காரியங்களுக்குமாக ஒரு பெண்மணியும் அவர் உறவினர்களும் இருந்தனர்.  இசைவாணர் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டவர் என்றும், மணமுறிவு ஏற்பட்டு விட்டதிலிருந்து தனியாகத் தான் இருக்கிறார் என்றும் பேச்சு என்றாலும் அது குறித்து நாங்கள் பெரிதாக ஆராயப் புகவில்லை.  ‘நமக்கு எதற்கு ஊர் வம்பு; தவிரவும் பையனின் குருநாதர்,’ என்று வாளாவிருந்துவிட்டோம்,
இசைவாணரைப் பொறுத்த வரை ஆதித்யா ஒரு கிடைத்தற்கரிய பொக்கிஷம்.  ஆனால் பெற்றோர் முள்ளாகக் குத்தினார்கள்.  பூக்கடை வைத்திருக்கும் ஒருவர் பூவின் வர்ணத்தையோ வாசனையையோ அழகையோ வடிவு நேர்த்தியையோ ரசிக்கப் புகுவதில்லை.  அவரைப் பொறுத்தவரை அது கிலோ கணக்கு அல்லது முழம் கணக்கு எவ்வளவு எடுக்கலாம்.  எத்தனை மாலை கட்டலாம், என்ன விலைக்குப் போகும் லாபம் எவ்வளவு என்று தான் சிந்தனை ஓடும்.  இசைவாணருக்கும் அப்படியே.  தன் சிஷ்யன் அல்லது தன் இசைப் பள்ளியின் மாணவன் என்று விளம்பரப் படுத்துவதில் என்ன ஆதாயம் என்று தான் சிந்தனை ஓடிற்று.  தவிரவும் ஆதித்யா இசைச் சுரங்கம் போன்று ஒவ்வொரு முறையும் விதம் விதமான கணக்குகளுடன் போடும் ஸ்வரப் பின்னல்கள் மற்றும் கோர்வைகளை எப்படியாவது இழுத்துக் கொள்ள வேண்டும்; அதுவும் எங்களுக்குத் தெரியாமல்.
“கவலையே படாதீங்கோ, வெளிநாட்ல கொண்டு போய் உட்கார்த்தி வெச்சு ஆதித்யாவை நாலு ஸ்வரம் பாட வைச்சேன்னாப் போதும் – டாலராக் கொட்டிருவான்கள்,’ என்பார்  அடிக்கடி.  வெளிநாடு அவருக்கு மட்டுமல்லாது அவரது குடும்பத்திற்கே கொல்லைப்புறம் மாதிரி.  “ஷோ கேஸ் பண்ணாப் போதும் இவன் இப்போ இருக்கற ஸ்டேஜே நம்மூர் பிஹெச்டிக்குச் சமானம் – ஒரு மேக்கப் போட்டு உட்காத்தி வைச்சேன்னாக்க சும்மா பிச்சுண்டு போயிடும். ” என்பார்.
கிளைகளை விரிவுபடுத்திக் கொண்டிருந்தார் இசைவாணர்.  நான் ஏற்கெனவே கூறியிருந்த பையனின் தாயார் இசையாசிரியராக இருந்ததால் வேலையை விட்டு விட்டு இவர் இசைப் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து விட்டார்.  அவர்கள் குடும்பமாக ஜாகையை மாற்றிக் கொண்டு சென்னையோடு வந்து விட்டார்கள்.  அந்த அம்மையார் நாள் பூரா கிளை கிளையாக இசை கற்றுத் தருவதற்காக அலைந்து கொண்டிருந்தார்.
இதெல்லாம் நடந்து வரும் சமயங்களில் தான் நான் பாண்டிச்சேரி மாறுதலாகிச் சென்றிருந்தேன்.  இசை வகுப்புகள் ஏனோ தானோவென்று நடந்து கொண்டிருந்தன.  ஆனால் யாராவது முக்கியப் புள்ளி இசை சம்பந்தப் பட்டவர்,  இசைப் பள்ளிக்கு வந்தால் அவரிடம் ஆதித்யாவைக் காண்பதில் இசை வாணர் குறியாக இருப்பார்.
இந்த சமயத்தில் ஒரு வெளிநாட்டு சானல் ஒன்றிற்காக இசைவாணர் ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, தொடர்ச்சியாக பல இசைக் கலைஞர்களை வைத்து  ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்.  ரொம்பப் பிரபலமாகாத கலைஞர்களிலிருந்து யாருக்குமே தெரியாத கலைஞர்கள் வரை தொடர்ச்சியாக ஒருவர் மாற்றி ஒருவர் பாடிக் கொண்டிருந்தார்கள்.  அதில் ஆதித்யாவைப் பாட வைக்க வேண்டுமென்று அவனை அழைத்துக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்.  என் மனைவியும் ஆதித்யாவை இழுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.  அப்போதெல்லாம் இசைவாணர் ஆதித்யாவிடம் நிறைய பேசி அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பிடிக்குள் கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருந்த நேரம்.
ஆதித்யா வழக்கம் போல் பிடிவாதம் பிடித்திருக்கிறான் தன் சந்தர்ப்பம் வரும் போது ஸ்ருதியை மாற்றச் சொல்லியிருக்கிறான் என்று நினைக்கிறேன்.  அவன் ஒன்றைப் பிடித்தால் பிடித்த பிடிதான் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.  இது சம்பந்தமாக ஆதித்யாவை இசைவாணர் வற்புறுத்திக் கொண்டிருந்ததும் ஆதித்யா “நோ நோ” என்று மறுத்துக் கொண்டிருந்ததும் நடந்து கொண்டிருந்திருக்கிறது.  என் மனைவி ரசாபாசம் வேண்டாம் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் போது என்று கருதி “அவன் இஷ்டப்படியே விட்டுடுங்கோ; அவன் பாடிடுவான்,” என்றிருக்கிறாள் எதார்த்தமாக.  அவளை உறுத்துப் பார்த்து விட்டு இசை வாணர் வெளியில் சென்றிருக்கிறார்.  ஆதித்யா பாடி முடிக்கிற வரையில் எட்டியே பார்க்கவில்லை.  ஆதித்யாவிற்கு முன்னால் பாடியவர் பஜனைப் பாடகர்.  கோஷ்டியுடன் பாடிக் கொண்டிருந்தவர்.  ஆதித்யாவின் பாட்டைக் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு “ஆஹாகாரம்” செய்திருக்கிறார்.  ஒரே கைத்தட்டல்.
நிகழ்ச்சி முடிந்த பின் அன்று என் மைத்துனியை இசைவாணர் கூப்பிட்டு “என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆதித்யாவும் அவன் அம்மாவும் ? மெட்றாசிலே அவன் எந்த சபாவில் பாடிட்றான்னு நானும் பார்த்துடறேன்.  ஜ வில் ஹாவ் ஹிம் த்ரோன் அவுட் அஃப் ஆல் சபாஸ்,” என்று ‘காச்மூச்’ சென்று கத்தியிருக்கிறார்.  எங்களுக்கு வயிற்றைக் கலக்கியது.  என்ன ஆகி விட்டதென்று இப்படிக் குதிக்கிறார் என்று புரியவில்லை.
“நான் இன்னாரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டேன்.  அவர் வீட்டுக்கு மதியம் நான்கு மணிக்கே போய் விடுவேன்.  எல்லோருக்கும் க்ளாஸ் முடித்து விட்டு குருநாதர் எனக்குக் க்ளாஸ் எடுக்க ஒன்பது மணியாகி விடும் அப்போ முடிவு பண்ணினேன் என் கதி என் சிஷ்யன் ஒருத்தனுக்கும் வரக் கூடாதுன்னு. ’ என்று சொல்லிக் கொண்டிருந்தவர்! பிள்ளையைக் கொடுத்துவிட்டு நாங்கள் சுத்தமாக நகர்ந்து விட வேண்டும்.  எந்தவித பாத்யதையும் நாங்கள் எதிர்பார்க்கக் கூடாது என்று அவர் எதிர்பார்ப்பது எங்களுக்கு புரிந்தது.
எங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்த இது போன்ற சிறு சிறு அவமானங்கள் நாளாவட்டத்தில் பழகி விட்டன.  பையன் முன்னுக்கு வந்தால் போதுமென்கிற எண்ணம்.  ‘க்ளாஸுக்கு வா,’ என்று சொல்லி விட்டு வகுப்பெடுக்காமல் கழுத்தறுப்பது, தொலைபேசியில் உரையாடப் புகுந்தால் பாதி உரையாடும் போதே படக்கென்று தொலைபேசியை அணைப்பது என்ன கேட்டாலும் பதில் சொல்லாமல் மௌனம் சாதிப்பது போன்ற வகை அவமானங்கள்.  என்றைக்குப் பணம் கட்டுகிறோமோ அன்று மட்டும் வகுப்பு நன்றாக நடக்கும்.
இது இப்படியென்றால் பள்ளியில் வேறு ‘எடு எடு’ என்கிறார்கள்.  இவையெல்லாவற்றையும் ஆலோசித்து குடும்பத்தைப் பாண்டிச்சேரிக்கு பெயர்த்து விடுவது என்று முடிவு செய்தோம்.  இசைவாணரின் வகுப்புகளைப் பார்த்துக் கொள்ளலாம், கொஞ்ச நாள் ஆதித்யாவின் ஏனைய வளர்ச்சியில் கவனம் செலுத்தலாம் என்று தோன்றியது.  அப்போதும் இசைவாணரை முற்றிலும் விட்டு விட நிச்சயிக்கவில்லை.  இசைவாணர் எங்களிடம் ஏற்கெனவே ஆதித்யாவைத் தன் நெருங்கிய உறவினரிடம் வகுப்புகளுக்குக் கூட்டிச் செல்வதற்கு உறுதி அளித்திருந்தார்.  அவர் உறவினர் தந்தி வாத்தியக்காரர்.  பெரிய மேதை என்று கொண்டாடப்படுகிறவர்.
இந்த சமயத்தில் இசைவாணரின் உறவினர் வீட்டில் எதற்காகவோ விருந்து ஏற்பாடாகி இருந்தது.  அந்த விருந்திற்கு ஆதித்யாவையும் என் மனைவியையும் அழைத்திருந்தார்கள்.  உறவினரை நாம் பெரிய இசைவாணர் என்று வைத்துக் கொள்ளலாம்.
கடற்கரையை ஒட்டிய ஒதுக்குப்புறமான இடத்தில் தனி பங்களா.  கூடத்தில் முற்றத்துடன் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட விசாலமான வீடு.  மொத்தமாக ஒரு ஐம்பது பேர்களை அழைத்திருந்தார்கள்.  அங்கே பெரிய இசைவாணர் ஆதித்யாவை “நீதான் ஆதித்யாவா? தினமும் உன் பேச்சுத் தான்.  இப்பத்தான் பாக்கறேன்,” என்று கட்டி அணைத்து கொண்டிருக்கிறார்.  என் மனைவிக்கு கண்ணீரே வந்து விட்டது.  ஆதித்யாவை அவர்கள் வித்யாசமாக நடத்தாமல் அவன் விநோதங்களைப் புரிந்து கொண்டு அவனைத் தங்களில் ஒருவன் போல் நடத்தியது என் மனைவியை நெகிழ வைத்து விட்டது.  எங்களுக்கு அப்போதிருந்த மன நிலையில் “இசைவாணர் வகுப்பு எடுக்காவிட்டாலும் பரவாயில்லை.  எப்படியாவது பெரிய இசைவாணர் வகுப்பில் சேர்த்து விடுவதற்கு உதவி செய்தால் போதும்,” என்று தோன்றியதால் இசைவாணரின் தொடர்பை முற்றிலும் கத்தரித்துக் கொள்ள விரும்பவில்லை.  அத்துடன் இதற்கெல்லாம் முடிவு கட்டியிருந்தால் பின்னால் இவ்வளவு அநுபவப்பட, சிரமப்பட நேர்ந்திருக்காது என்று தோன்றுகிறது.
நன்றி:சொல்வனம் 
https://solvanam.com/?p=50967

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...