நான் புகுமுக வகுப்பில் இருந்த போது ஐஐடி கேள்வித்தாளை பார்த்திருக்கிறேன். ஒரு இழவும் புரியாது. கேள்விகளெல்லாம் ஒரே கணக்குக் குறியீடுகளுடன் கிழக்கில் இருந்து மேற்கில் ஓடும். நான் பள்ளி இறுதி வரைத் தமிழ் மீடியத்தில் படித்தவன். என்றாலும் சடாரென்று புகு முக வகுப்பில் ஆங்கில வழிக்கு கல்விக்குத் தாவுவதில் பெரிய சிரமம் இருக்கவில்லை. என் குடும்பப் பின்னணி அப்படிப் பட்டது. அப்பா ஆங்கிலப் பேராசிரியர் என்பதால் என் ரத்தத்தில் ஆங்கிலம் ஓடுகிறது என்பார்கள். நான் பேசுகிற ஆங்கிலத்தைப் பார்த்துக் கிறங்கிப் போய் என்னுடன் நட்புக் கொண்டவர்கள் பலர்.புகுமுக வகுப்பில் கணக்கில் 100/100 வாங்கினேன். இதையெல்லாம் வைத்துக்கொண்டு ஐஐடியில் ஜல்லி அடிக்க முடியாது போனதே உண்மை. அதே சமயம் என்னை மாதிரியே தமிழ் மீடியத்தில் பயின்று புகுமுக வகுப்பில் ஆங்கில மீடியத்தில் படித்து நிறைய மார்க்குகள் வாங்கிய நண்பன் ஸ்ரீநாத் ஐஐடி நுழைவுத் தேர்வை ஊதித் தள்ளினான்.மிகவும் சாதாரணமான குடும்பம். ட்யூஷன் எல்லாம் கிடையாது. தானாகப் படித்து வந்தவன்.
கல்லூரி விடுதியில் அன்புச் செழியன் என்று ஒரு நண்பர். வேட்டி கட்டிக் கொண்டு இருப்பார். பார்த்தால் மாணவன் என்று சொல்ல முடியாது. கறுப்பாகக் கிராமத்து ஆள் மாதிரி இருப்பார். ஏதோ குக் கிராமத்தில் படித்து வந்தவர். படிப்புக்கு உதவி தொகையை எதிர் பார்க்கிற நிலைமை. அவரைப் பார்த்தால் பேராசிரியர்கள் பயப்படுவார்கள் என்பார்கள். சக மாணவர்கள் 'செழியன் செழியன்' என்று கொண்டாடுவார்கள். இயற்பியலில் என்ன சந்தேகம் கேட்டாலும் சொல்லுவார். புத்தகத்தைப் பார்க்க வேண்டும் என்கிற அவசியமே இருக்காது. அவர் பட்டம் முடித்த கையுடன் எம் ஐ டி சென்றார்.
இதனாலெல்லாம் எனக்குத் தோன்றுவதெல்லாம் நன்றாகப் படிக்கிற மாணவன் நீட் என்ன எந்த நுழைவுத் தேர்வையும் ஊதித் தள்ளுவான் என்றுதான் தோன்றுகிறது.
ஆனால்........
நான் பார்த்த வரை தமிழ் நாட்டின் கல்வி மாணவனின் சிந்தனையைத் தூண்டுகிற விதத்தில் வடிவமைக்கப் படவில்லை. இங்கிருக்கும் நுழைவுத் தேர்வுகளையும் அதையொட்டியே அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட வேலை பார்க்கும் நண்பர் பையனுக்கு எம்பிபிஎஸ் சீட்டு கிடைத்தது. அந்தப் பையனை நண்பர் முன் கூட்டியே நாமக்கல்லில் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்றில் சேர்த்து விட்டார். அவர்கள் என்ன மாயம் செய்கிறார்கள் என்று கேட்டேன்.அவர்கள் கொடுக்கும் நோட்ஸை வரி வார்த்தை அரைப் புள்ளி மாற்றாமல் அப்படியே உருப்போட வேண்டும் அவ்வளவு தான். ராத்திரி பன்னிரண்டு மணியானாலும் விடமாட்டார்கள். நாள் கிடையாது கிழமை கிடையாது, விடுமுறை.....மூச்...
சிபிஎஸ்சி மாணவர்களையும் பார்த்திருக்கிறேன். என் குழந்தைகள் சிபிஎஸ்சியில் தான் படித்தார்கள். நுழைவுத் தேர்வை மிகச் சுலபமாக எதிர் கொண்டாள் என் மகள். பெரிய கோச்சிங் வகுப்பெல்லாம் போகவில்லை . ஐஏஎஸ் தேர்வு எழுதுகிறவர்கள் என்சிஆர்டி புத்தகங்களை படிப்பதைப் பார்த்திருக்கிறேன். எளிமையான நடையில் மிக விளக்கமாகப் பாடங்கள் இருக்கும். நான் பார்த்த வரை மாணவர்களின் சிந்தனையை தூண்டுகிற விதத்தில் மாயம் செய்கிறது சிபிஎஸ்சி பாடத் திட்டம்.
பல மாநிலங்கள் சிபிஎஸ்சி பாடத் திட்டத்தை அடி ஒற்றியே அமைத்துக் கொண்டிருக்கும் போது நமக்கு என்ன தயக்கம்?
பெரிய தடை படிப்பில் பெரிய மாற்றங்கள் விழையாத, புதிதாகக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்லாத ஆசிரியர்கள் தான்.
என்ன செய்ய வேண்டும்?
1. நீட் தேர்வுக்குத் தடை ஏதும் சொல்லாது அனுமதிக்க வேண்டும்.
2. அதற்காகத் தேவைப் படும் கோச்சிங்கை அரசே ஏற்றுத் திறம்பட நடத்த வேண்டும்.
3. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை ஒற்றி தமிழ் நாடு பாடத்திட்டத்தை மாற்றவேண்டும். இந்த வருடம் ஒன்றாவதிலிருந்து மாற்றத்தை ஆரம்பித்தால் 12 வருடங்களில் திட்டம் முழுமை அடைந்து விடும்.
4. அதற்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்க்கு உடனே துவங்க வேண்டும்.
5. இதைத் தமிழ் வழிக் கல்வியிலேயே செய்யலாம்.
எனக்குத் தெரிந்த வரை இது தான் கிணற்றுத் தவளைகளாய் இருக்கும் நம் மாணவர்களுக்கு வெளிக் காற்றை சுவாசிக்க கொடுக்கக் கூடிய வாய்ப்பு என்று தோன்றுகிறது.
டாக்டர் படிப்பு எனும் மாய மான் வேட்டையைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. பின்னர் எழுதுவேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக