வியாழன், 9 பிப்ரவரி, 2017

தற்போதைய அரசியல் நிகழ்வுகளும் நாமும்

உலகின் பண்டைய இலக்கியங்களுக்கும் மகாபாரதத்துக்கும் அணுகுமுறையில் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. மற்ற இலக்கியங்கள் மனிதனைக் ‘கெட்டவன்’ என்றும் ‘நல்லவன்’ என்றும் வேறுபடுத்திப் பாகுபாடு செய்துதான் இலக்கிய ஆக்கங்களைச் செய்துள்ளன. மகாபாரதம் மட்டும்தான் மனிதர்கள் எவ்வாறு வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. தர்மர் செய்த தீங்குகளையும், துரியோதனன் செய்த நல்ல செயல்களையும் வியாசர் சுட்டத் தவறவில்லை. உப பாண்டவர்களைக் கொல்வதற்கு முன் நடக்கும் சம்வாதத்தில் காகங்களைத் தாக்கும் கூகைகளை அஸ்வத்தாமன் சூசகமாக ஏற்றுக் கொள்கிறான். அவனைப் பற்றிக் குறிப்பிடும் போதும் வியாசர் மகாத்மா என்றே குறிப்பிடுகிறார். 
நம் அணுகுமுறையில் உள்ள கோளாறு என்னவென்றால் எல்லா மனிதர்களையும் நல்லவன் கெட்டவன் என்று பாகுபடுத்தப் பார்ப்பதே. இப்படிப் புரிந்து கொண்டு உறவுகளைக் கட்டமைப்பது நமக்கு மிகவும் எளிதாக இருக்கிறது. தவிரவும் நமக்கு எப்போதும் ஒரு பொது எதிரி வேண்டியிருக்கிறது. அதற்கான இலக்குப் புள்ளிகளை சிலர் விதி வசத்தாலோ வேறு செய்கைகளாலே நம்மிடம் காண்பிக்கும்போது நமக்கு வேலை இன்னும் எளிதாகிவிடுகிறது. 
வியாசரைப் பொறுத்தவரை நல்லவன் கெட்டவன் என்கிற பாகுபாட்டைச் சற்று உயர்த்தி ஸ்வதர்மம் என்கிற ஒரு மனப்பாங்கைச் சுட்டுகிறார். இதன் பிரகாரம் உலகத்தில் பொது தர்மம் என்று ஒன்றில்லை என்றும் அவரவர் பிறப்பு வளர்ப்பு சூழ்நிலை மனப்பாங்கு என்பதனைக் கொண்டு அவரவர் பொருத்தமான ஸ்வதர்மத்தைப் பூண வேண்டும் என்று நிறுவுகிறார்.
இதன் பிரகாரமே கர்ணனையும் சகுனியையும், திருதராஷ்ட்ரனையும், விகர்ணனையும், தர்மனையும், பீமனையும் அவர் சித்திரிக்கிறார். மகாபாரதத்தின் காலத்தை வென்று நிற்கும் தன்மை எக்காலத்துக்கும் பொருத்தக்கூடிய பாங்கு இதனாலேயே என்று தோன்றுகிறது.
இனி விஷயத்துக்கு வருகிறேன். ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையின் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு வந்ததிலிருந்து அவருக்கு எல்லா இடங்களிலிருந்தும் (நான் உட்பட) பாராட்டு மழை. சசிகலா பொது எதிரி ஆகிவிட்டார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது “காணோம்... காணோம்... ஓபிஎஸ்ஸைக் காணோம்...” என்று அவரை  வில்லனாகச் சித்தரித்த கூட்டம் இன்று ஹீரோவாகக் கொண்டாடுகிறது.
இது விஷயமாக எனக்குமே அவருடைய எளிமையாலும் காரியங்களைச் சாத்வீகமாக ஆற்றும் சாதுரியத்தாலும் கடுமையாக விமர்சிப்பவர்களைப்  பார்த்து பெருந்தன்மையாகச் சிரித்துவிட்டுப்  போவதாலும் பெரிய வசீகரப் புள்ளியாகத் தெரிகிறார். 
‘காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் 
மீக்கூறும் மன்னன் நிலம்‘ (குறள்: 386) என்கிற குறளுக்குப் பொருத்தமாகத் தெரிகிறார் ஓபிஎஸ். 
ஆனால் சில சந்தேகங்களைத் தவிர்க்க முடியவில்லை.
1. சசிகலாவின் ஆகாத்தியங்களை ஜெயலலிதா மறைவுக்குப் பின் பொறுத்து வந்திருக்கிறார். அவரை விழுந்து கும்பிட்டிருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு முன் மொழிந்திருக்கிறார் - இப்போது சசிகலா முதல்வர் பதவியை மடை மாற்றம் செய்தவுடன்தான் அவரின் குணாதிசயக் கேடுகள் இவர் கண்ணில் தெரிகின்றனவா?
2. தேர்தலுக்கு முன்னர் பன்னீர்செல்வத்தின் உறவினர்கள் நிறைய ஊழல் செய்து விட்டதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பி அதைச் சிலர் ஜெயலலிதா அம்மையாரின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகச் சொல்லப்பட்டதே அது உண்மையா?
3. அதேபோல் தன் ஆட்களையே பொறுப்பான பதவிகளுக்கு சிபாரிசு செய்ததன் மூலம் தன் முக்கியத்ததுவம் அரசியல் கட்சியிலும் குறையாமல் பார்த்துக் கொள்ள முயல்கிறார் என்றொரு குற்றச்சாட்டு எழுந்து அதுவும் அம்மையாரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது என்கிறார்களே அது உண்மையா?
இதெல்லாம் உண்மையாயிருக்கும் பட்சத்தில் பன்னீரை நாம் துன்பம் இழைக்கப்பட்ட அப்பாவி என்று கருத முடியாது. மாறாக மிகவும் சாணக்கியமாகச் செயல்பட்டிருக்கிறார் என்றுதான் கருதவேண்டும் - தவிரவும் இவர் பொது அலை எங்கு அடிக்கிறதோ அந்த திசையை நோக்கிச் செல்பவர் போல் தெரிகிறது. அது ஒரு தலைவனுக்குரிய குணாதிசயம் கிடையாது. தலைவன் வழி நடத்த வேண்டும்.
சசிகலாவின் விஷயத்தில் எல்லோருமே ஒரு பொது எதிரியைக் கண்டாயிற்று. போட்டு சாத்து சாத்தென்று சாத்துகிறார்கள் - அவரின் கடந்தகால சரித்திரம் அப்படிப் பட்டதென்பதால் வரும் விமர்சனங்களில் பெருமளவு குறை காண வாய்ப்பில்லைதான்.
ஆனால்... 
ஜெயலலிதா அம்மையாரும் இவரும் சேர்ந்து செய்த தவறுகளுக்கெல்லாம் இவரை மட்டும் பொறுப்பாக்கிவிட்டு அம்மையாருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்ன நியாயம்? அம்மையார் இறந்துவிட்டார் என்கிற ஒரே காரணம் தானிருக்க முடியும். ஜெயலலிதா சசிகலாவை வீட்டை விட்டு விரட்டியதை மட்டும் எல்லோரும் சுட்டிக் காட்டுகிறார்களே ஒழிய, அம்மையார் அவரை ஏன் மீண்டும் மீண்டும் சேர்த்துக் கொண்டார் என்று யாருமே விவாதிக்கத் தயாராக இல்லை. 
அம்மையார் மருத்துவமனையில் இருந்தபோது சசிகலா அதை ராணுவ ரகசியம் போல் காப்பற்றியது மன்னிக்க முடியாத குற்றம்தான் - இன்னும் சிலபேரைப் பார்க்க அனுமதித்திருக்கலாம் - சில புகைப்படங்களைப் பத்திரிக்கைகளுக்குக் கொடுத்திருக்கலாம். மருத்துவர்கள் பெரிய நம்பிக்கையெல்லாம் கொடுக்காமல் உள்ளது உள்ளபடித் தெரிவித்திருக்கலாம் - தேறி வருகிறார் என்று தினமும் செய்தி கொடுத்துவிட்டு திடீரென்று ஒருநாள் இறந்துவிட்டார் என்று அறிவித்தால் எல்லோருக்குமே சந்தேகம் வரத்தான் செய்யும்.
எம்ஜிஆர் உடல் நலக்குறைவான போதும் இதுதான் நடந்தது. ஆர்.எம்.வீரப்பன், ஜானகி அம்மையார் மருத்துவர்கள் போக மீதம் யாருக்குமே விபரம் தெரியவில்லை. ப்ரூக்ளின் மருத்துவமனை சென்ற பின்னரே புகைப்படங்களும் வீடியோவும் வெளியிடப்பட்டன. ஆனால் நல்லவேளையாக எம்.ஜி.ஆர் பிழைத்துக் கொண்டார்.
அடுத்ததாக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதில்தான், யார் ஆட்சி அமைப்பார்கள் என்கிற விஷயம் தொக்கி நிற்கிறது. ஓபிஎஸ் ஒரு 20 எம்எல்ஏக்களைத் தன் பக்கம் இழுக்க முடிந்தால் போதும். சசிகலா ஆட்சி அமைக்காது பார்த்துக் கொள்ளலாம் - ஆனால் அவர் ஆட்சி அமைக்க இந்த ஆதரவு மட்டும் போதுமா? திமுக வெளியிலிருந்தோ உள்ளிருந்தோ ஆதரவு அளிக்கும் வாய்ப்பு கம்மி - ஏனென்றால் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் வந்தால் அதனால் ஆதாயம் அடையக்கூடியது திமுக மட்டுமே. அதிமுக சசிகலா அணி - ஓபிஎஸ் அணி என்று பிரிந்தால் அது திமுக தேர்தலில் அமோக வெற்றியடையத் துணை புரியும் என்கிற உண்மை எல்லோருக்குமே தெரியும்.
ஒருவேளை சட்டமன்ற உறுப்பினர்கள் பெருவாரியாக ஆதரவு அளித்து சசிகலா ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் அமையுமானால் அதை அனுமதிப்பதுதான் சட்டத்தின் வழி - ஆளுனரும் அதையே பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.
அதற்கு முன்னாலேயே நாம் கட்சி கட்டிக் கொண்டு வாதாடுவதில் பயனில்லை. ஜல்லிக்கட்டுக்குப் போராடியது போல் இதற்குப் போராட முடியாது; கூடாது. 
இப்போதைய சூழ்நிலையில் பன்னீர் தமிழக முதல்வராக நீடித்தால் கவர்ச்சி இல்லாது எளிமையான கலந்து பழகுகிற முதல்வர் நமக்குக் கிடைப்பார் - பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் அப்படி ஒரு தலைவரை ஓபிஎஸ்ஸிடம்தான் காண்கிறோம். ஆனால் பன்னீர், பெருந்தலைவர் அந்தஸ்துக்கு உயர்வதற்கு தன்னலமின்மை, தொலைநோக்கு, முடிவெடுக்கும் திறன், மனிதர்களை எடைபோடும் தன்மை, முடிவுகளில் உறுதி, தேச நலன் என்கிற ஒற்றைக் குறிக்கோள் இவற்றை வளர்த்துக் கொண்டால் மட்டுமே சாத்தியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...