அத்தியாயம் 34
என் தந்தை 92 வருடங்கள் வாழ்ந்தார். ஒழுக்கத்தாலும் கட்டுப்பாட்டினாலும் இளைஞனைப் போல் வாழ்ந்து மறைந்தார். சுகமோ துக்கமோ எல்லாவற்றையும் விழுங்கியவர். அதிகம் பேசுகிறவர் அன்று. அளவாகத் தான் பேசுவார். கடைசியில் 92 ஆம் வயதில் வந்த சிறுநீர் அடைப்பு அவரைக் கிட்டத்தட்ட ஒரு மாதம் படுக்கையில் தள்ளியது. நாங்கள் அருகில் இருந்து கவனித்து வந்தோம். காலையில் செய்தித்தாள் வந்து விட்டதா என்று வினவுவார். வந்தால் மூக்குக் கண்ணாடியை அணிவித்து பேப்பரைப் பிடித்துக் கொள்வோம். அவர் படுத்த மேனியிலேயே தலைப்புச் செய்திகளாய் மேய்ந்து விட்டுப் போதும் என்பார். இறப்பதற்கு கொஞ்ச நாள் முன்னர் அவர் நினைவு எப்படி இருக்கிறது என்று பரிசோதிப்பதற்காகக் காதில் ‘அப்பா! ‘ஹைனஸ்’ (எங்கள் ஊர் மன்னர்) இருக்காரா?’ என்று வினவினேன். ‘இல்லை போயிட்டான்; மூணு மாசம் ஆய்டுத்து’ என்றார். அவர் நினைவு கடைசி வரையிலும் அவ்வளவு துல்லியமாக இருந்தது.
என் அன்னை விருத்தாப்பியத்தில் இருந்த போது என் வீட்டிற்கு ஒரு நண்பர் வந்திருந்தார். நாஸ்திகர். பிராமணர்கள் மீது காழ்ப்புணர்ச்சி உண்டு. ஜெயகாந்தனைக் கொண்டாடுவார். ஜெயகாந்தன் எழுத்துக்கள் அனைத்தையும் படித்திருப்பதால் ஜெயகாந்தனில் தான் பெரிய அதாரிடி என்கிற எண்ணம் அவருக்கு. அவர் வீட்டிற்கு வந்தபோது என் அன்னையிடம் அவரை அறிமுகப் படுத்தி வைத்தேன். நாங்கள் உரையாடிக் கொண்டிருந்த போது ஒரு குறிப்பிட்ட குடும்பம் குறித்துப் பேச்சு வந்தது. அப்போது என் அன்னை, “அவர்கள்ல்லாம் ஜெயகாந்தன் ஒரு கதை எழுதியிருக்கிறார் ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’ என்று அதில் வரும் கதாபாத்திரங்கள் போன்றவர்கள்’ என்று பேச்சுவாக்கில் சொன்னார். இதைக் கேட்ட நண்பர் விதிர்விதிர்த்துப் போனார். மடிசார் கட்டிக்கொண்டிருந்த மாமியிடம் சத்தியமாக அவர் இதை எதிர்பார்க்கவில்லை.
பதவி உயர்வு பெற்று மும்பாய் மாறுதல் வந்த போது என் அன்னையிடம் போய்க் கையைப் பிசைந்து கொண்டு நின்றேன். வயதான காலத்தில் அவர்களை விட்டுச் செல்கிறோமோ என்கிற குற்றவுணர்வு அரித்தெடுத்தது என்னை. அப்போது என் அன்னை என்னிடம் புன்னகையுடன், “நான் பழுத்த இலைடா. எப்ப வேணா மரத்திலிருந்து விழுந்துடுவேன். உன் வாழ்க்கையைப் பாருடா” என்று தெம்பூட்டும் குரலில் கூறினார். பதினான்கு வயதில் என் தந்தையைத் திருமணம் புரிந்து கொண்டு வந்தவர். வாழ்வில் துன்பத்தைத் தவிர வேறொன்றும் அறியாதவர். அவருடைய ஏழாவது பிள்ளையாக நான் பிறந்தேன். வயதான காலத்தில் காலை ஒடித்துக் கொண்டு நடை உடை இல்லாமல் இருந்தார். இறப்பதற்கு முன் ‘ஆதித்யஹ்ருதயம்’ ஸ்லோகத்தை முணு முணுத்து விட்டு ‘வாசுதேவா!’ என்றார். பிராணன் போய் விட்டது. அவர் வாழ்நாள் பூரா எதையாவது கற்றுக் கொண்டே இருந்தார். அவர் இறந்த பின் அவர் டைரியைப் புரட்டிப் பார்த்தேன். வானொலியில் வரும் இசைப் பயிற்சிப் பாடல்களுக்கான இசைக் குறிப்புகள் இருந்தன.
என் பெரியப்பா சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தவர். நான் பார்த்ததில்லை. நான் பிறக்கு முன்னரே காலமாகி விட்டார். எங்கள் ஊர் நீதிமன்றத்தில் சிரஸ்தாராகப் பணி புரிந்தவர். இலுப்பூர் பொன்னுசாமிப் பிள்ளை என்கிற வயலின் வித்வானிடம் சங்கீதம் கற்றுக் கொண்டவர். அவருக்கு இசையில் தான் பெரிதாகச் சாதிக்க இயலவில்லை என்கிற குறை இருந்தது. அவரைப் பற்றி ஒரு நாள் என் தந்தையிடம் கேட்டேன். “அவனுக்கு நெஞ்சு வேகலைடா!” என்றார் என் தந்தை. பெரியப்பா இறந்த மறுநாள் சஞ்சயனத்துக்கு இடுகாட்டுக்குச் சென்ற என் தந்தை இதைக் கண்ணுற்றிருக்கிறார்.
என் தந்தை யானை போன்ற நினைவாற்றல் கொண்ட சான்றோர். என் அன்னை அன்பும் இலக்கிய நுகர்வும் கொண்டவர். இது போன்ற பெற்றோர் சங்கீதத்தில் தோய்ந்த உறவினரும். இவற்றிலிருந்து கிளைத்தெடுத்த நான் இவற்றில் எவைகளை ஸ்வீகரித்தேன் என்பது விளங்காத விஷயம் தான். தவிர என் தந்தையை முந்தைய தலைமுறை எவ்வெவற்றைக் கொண்டிருந்தார்கள் என்று அனுமானிக்கிற நிலையில் நான் (அவர்களையெல்லாம் பிரத்யட்சமாய்ப் பார்க்காததால்) இல்லை. இப்படியிருக்கும் போது ஆதித்யா யாரிடமிருந்து எவ்வெவற்றை ஸ்வீகரித்தான் என்று எப்படி அநுமானிக்கவியலும்? தவிரவும் நான் ஏற்கெனவே கூறியிருந்தபடி என்னில் ஆதித்யாவின் குணாதிசயக் கூறுகள் இல்லாமல் இருந்தாலும் நான் என் வழியே அவற்றைக் கடத்தியிருக்க வாய்ப்பு உண்டு. விஞ்ஞானமும் சரி நம் பாரம்பரிய மத நம்பிக்கைகளும் சரி இதைத்தான் போதிக்கின்றன.
ஆதித்யாவிடம் இயற்கையாக இருந்த வாழ்வியல் வித்தை ஒரு புறம் என்றால் என் மனைவியின் முயற்சி மறுபுறமாக இருந்தது. நடுத்தர நகரத்திலிருந்து வந்த எனக்கு இருந்த முயற்சியையும் நம்பிக்கையையும் விடப் பெரு நகரத்திலிருந்து வந்த அவளுக்கு அதெல்லாம் பன் மடங்கு இருந்தது. அது வழிவழியாக இந்தியக் குடும்பங்களில் வந்த பாரம்பரியமா, கலாச்சாரத் தோய்வா, இந்து மத நம்பிக்கையா இன்னதென்று சொல்லத் தெரியவில்லை. சிறு சிறு பொறிகளைப் பிடித்துக் கொண்டு அவற்றையே முன் இலக்காகக் கொண்டு மாடு மாதிரி உழைக்கத் தயாராக இருந்தாள் அவள். விரக்தி ஏற்படும் சமயங்களில் நாங்கள் ஒருவரையொருவர் தேற்றிக் கொண்டு முன்னகர்ந்திருக்கிறோம். இத்தனை வருடங்களில் எங்களில் ஒருவர் ஏதாவது விபரீதமான முடிவைத் தேடியிருக்கலாம்; மண முறிவு செய்து கொண்டிருக்கலாம். நாங்கள் இது போன்ற எந்தவிதமான அபத்தமான முடிவையும் எடுக்காததற்குக் காரணம் எங்கள் ரத்தத்தில் ஊறியிருக்கும் பாரம்பரியக் கூறுகளும் இறை நம்பிக்கையும் மட்டுமே. உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் எள்ளல், அவமானங்கள், அநுதாபங்கள் – ஆனால் ஆதரவின்மை- அந்தஸ்து இறக்கம் இவையெல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிறோம். பாதி தூரம் தான் கடந்திருக்கிறது என்பதால் ஒரு சிறு ஆயாசம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவே. வயதானதினாலும் முன் போல் ஓட முடியாததனாலும் தான்.
ஆதித்யாவைப் பொறுத்தவரை அவன் ஸ்திதப்ரக்ஞன். எதுவும் பொருட்டு கிடையாது. அவன் உண்டு; அவன் சங்கீதம் உண்டு. கர்நாடக சங்கீதம் அப்படியே இருக்கிறது. அவற்றுடன் கடந்த சில வருடங்களாக ஹிந்துஸ்தானியில் அவன் கவனம் திரும்பியிருக்கிறது. ஆனால் தன்னைப் பொறுத்தவரை கர்நாடக சங்கீதக்காரன் தான் என்கிற தீர்மானமும் அவனுக்கு இருக்கிறது. ஹிந்துஸ்தானியில் பெரிய வாத்யக் கலைஞர்களுடன் ஜுகல் பந்தி செய்ய வேண்டும் என்று அவனுக்கு அவா இருக்கிறது. தான் ‘ஹவாயன் கிடாரிலும்’ ஹிந்துஸ்தானி வித்வான் தன் தந்தி வாத்தியத்திலும் வாசித்து ஜுகல் பந்தி செய்ய வேண்டுமென்று அவன் ஆசைப் படுகிறான். ஹிந்துஸ்தானி ராகங்களையும் கர்நாடக சங்கீத ராகங்களையும் எப்போதும் ஒப்புமை செய்து கொண்டேயிருக்கிறான்.
ஆதித்யாவைப் பார்த்த இசைக்கலைஞர்கள் அவனைக் கவர்ந்து கொள்ள நினைத்தார்களே ஏன்? எனக்குத் தெரியாது. ஷட் கால கோவிந்த மாரார் பிறந்ததிலிருந்து சங்கீத நினைவுடனேயே இருந்திருக்கிறார். மேலேயும் கீழேயும் நடந்து கொண்டு பாடிக்கொண்டே இருந்திருக்கிறார். தியாகராஜரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கத் திருவையாறு சென்றிருக்கிறார். ஏழு தந்திகள் உள்ள தம்புராவை வலது கையிலும் டக்கா என்கிற கஞ்சிராவை இடது கையிலும் வாசித்துக் கொண்டே பாடுவாராம். இப்படி அவர் மிகவும் சவுக்கமாக ஒன்றாம் காலத்தில் பாடலை எடுத்து இரண்டு மூன்று என்று அதிகரித்து அதிதுரித காலமான ஆறாம் காலத்தில் தியாகராஜர் முன் பாடினாராம். தியாகராஜர் பிரமித்துப் போய் “எந்தரோ மகாநுபாவுலு அந்தரிக்கி வந்தனமு” என்று அப்போது தான் பாடினார் என்பார்கள் அன்னமாச்சார்யா சிறுவனாக இருந்த போதே வீதியில் பாடிக் கொண்டு வந்த பஜனை கோஷ்டியின் பின்னலேயே போய் விட்டார் என்பார்கள். ஆதித்யா இவர்களைப் போலவா எனக்குத் தெரியாது.
என் பெரியப்பா சங்கீத வித்வானாக ஆக விரும்பி ஆசை நிறைவேறாமல் மரணித்தாரே அவரே மறுபடியும் விட்ட குறை தொட்ட குறையாகப் பிறந்திருக்கிறாரா எனக்குத் தெரியாது. அல்லது நினைத்த நேரங்களில் நினைத்த இடங்களில் தோன்றி மறைந்து கொண்டிருந்ததே சதாஸிவ பிரம்மம் அவரைப் போலவா இவன்? எனக்குத் தெரியாது. பின்னாளில் சோதனையான தருணத்தில் நான் சந்தித்த மனநல மருத்துவர், ‘உங்கள் பிள்ளை பகவான் ஸ்ரீ ரமணர் மாதிரி. இவனைப் போல் உலகில் மொத்தமே இருபது பேர் தான் இருக்கிறார்கள்’ என்றாரே அது உண்மையா? எனக்குத் தெரியவில்லை. நடனப் பள்ளிக்கு ஆதித்யா சென்று கொண்டிருந்தபோது அவனை மகான் என்று பாமர ஜனங்கள் பேசிக் கொண்டார்களே அது உண்மையா? எனக்குத் தெரியாது. பல சமயங்களில் நம் எண்ணங்களைப் படித்து அதற்குத் தகுந்தாற் போல் ஆதித்யா எதிர்வினை செய்கி றான் என்று கூறுவாள் என் மனைவி. அது உண்மையா? எனக்குத் தெரியாது. (எனக்கே நடந்திருக்கிறது. ஒரு முறை “நான் திடீரென்று இறந்து விட்டால் இவன் கதியென்ன?” என்று நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். ஆதித்யா என் முகத்தை உற்று நோக்கிக் கொண்டு “அப்பா! நத்திங் வில் ஹாப்பன் டு யூ” என்றான்! அவன் என் எண்ணத்தைப் படித்தானா? எனக்குத் தெரியாது.)
ஆதித்யாவை ஆராய முயன்றவர்கள் பலர். என் மனைவியின் உறவினர் “அஸ்பர்கர் சிண்ட்ரோம்” என்றார். அது உண்மையா? எனக்குத் தெரியாது. ஆரம்ப நாட்களில் சந்தித்த மனநல மருத்துவர் ‘ஹி இஸ் நாட் ஆட்டிஸ்டிக் பட் இஸ் ஆர்ட்டிஸ்டிக்” என்றாரே அது உண்மையா எனக்குத் தெரியாது. பின்னாளில் அவன் ரமணரைப் போல் என்று கூறிய மருத்துவர். “ம்யூஸிக் சாவண்ட்” என்றாரே அது உண்மையா? எனக்குத் தெரியாது.
இருவர் காதலிக்கும் போது அவர்கள் காதலிக்கும் விஷயம் ஊருக்கே தெரியும். பெற்றோருக்கு மட்டும் கடைசியில் தான் தெரியும். அது போல் ஆதித்யாவைப் பற்றி வெளியில் எல்லோரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. பத்திரிகைக்கு பேட்டி என்று வந்தவர்கள் நாங்கள் சொல்லாமலேயே கொட்டை எழுத்துக்களில் ‘ஆட்டிஸ்டிக்’ என்று போட்டார்களே அவர்கள் எதை வைத்து அதைத் தீர்மானித்தார்கள்? எங்களுக்குத் தெரியாது.
நான் குறிப்பிடுகின்ற இசைவாணர்கள் ஆதித்யாவை எப்போதும் பாராட்டிக் கொண்டே ஒன்றும் செய்யாமல் ‘சாடிஸ்ட்’ போல் இருந்தார்களே அது ஏன்? எங்களுக்குத் தெரியாது. ஆதித்யா இருக்கட்டும் ; எங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தார்கள்? எங்களுக்குத் தெரியாது. அவர்கள் எங்களிடம் என்ன எதிர்பார்த்தார்கள்? எங்களுக்குத் தெரியாது.
ஆதித்யா என்னவாகிலும் இருந்து விட்டுப் போகட்டும். எந்தவிதப் பயிற்சியும் இல்லாமல் எந்த ராகத்திலும் தோன்றியபடிப் பழுது இல்லாமல் பாடல்களையும் கற்பனாஸ்வரங்களையும் பாடுகிறானே எப்படி? எனக்குத் தெரியவில்லை. ராகம் மட்டுமல்லாது லயம் பிரமாணமும் பிரத்யட்சமாக அவனிடம் சித்தியாகி இருக்கிறதே இது எப்படி? எனக்குத் தெரியாது. (அவன் தாளம் போட ஆரம்பித்தால் கை பறக்கும். சொற் கட்டுகளை அவன் வாசிப்புக்கு உச்சரிக்க முடியுமா சந்தேகமே)
பல குழந்தைகளில் ஒருவராய்ப் பிறந்த எஸ் ஜி கிட்டப்பா சங்கீதத்தை முறைப்படிக் கற்றுக் கொள்ளவில்லை. “இவன் சங்கீதத்துக்குக் கிட்டயே நாம போக முடியாது போலயிருக்கே!” என்றாராம் கிட்டப்பா நாடகத்துக்குச் சென்ற விஸ்வநாத ஐயர். காம்போதியில் ‘அன்றொரு நாள் குட்டி’ என்றொரு விருத்தம் பாடியிருக்கிறார். அதில் இடையில் ராகபேதம் வருகிறது என்று திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை காவிரிக் கரையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது சொன்னாராம். கிட்டப்பாவுக்கு மனக்லேசம் வந்து விட்டதால் உடனே எழுந்து விட்டாராம். ஆறுமாதங்கள் அவர் ராஜரத்தினம் பிள்ளையுடன் பேசவில்லையாம். பின்னர் கிட்டப்பா ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரிடம் ‘அது போன்ற பேதங்களில் தவறில்லை’ என்று தெளிவு படுத்திக் கொண்ட பிறகே மனச் சமாதானம் அடைந்தாராம். ராஜரத்தினம் பிள்ளைதான் எப்பேர்ப்பட்ட கலைஞர்! ஒரு கல்யாணக் கச்சேரியில் இரவு பதினொரு மணிக்கு நடபைரவியை வாசிக்க ஆரம்பித்தவர் விடியற்காலை மூன்று மணி வரை வாசித்துக் கொண்டிருந்தாராம். குழந்தை போன்றவர். சென்னையில் வீட்டில் குடியிருந்த போது கரண்ட் பில் கட்டாமல் ஃப்யூஸைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டார்களாம். அது கூடத் தெரியாமல் இருட்டில் உட்கார்ந்து கொண்டிருந்திருக்கிறார். ரசிகர் ஒருவர் வந்து கரண்ட் பில்லைக் கட்டினாராம்.
டி ஆர் மகாலிங்கம் புல்லாங்குழல் வாசிப்பதில் அவர் தந்தைக்கு ஆரம்பத்தில் விருப்பம் இல்லை என்பார்கள். உறவினர் ஒருவர் தான் புல்லாங்குழலில் மாலிக்கு ஸரிகமபதநி மட்டும் வாசிக்கச் சொல்லிக் கொடுத்தாராம். மற்றபடி அவர் வாசித்த குழல் – இசையுலகத்தையே ஸ்தம்பிக்க வைத்த நாதம்- எங்கிருந்து வந்தது? யாருக்கும் தெரியாது. இறக்கும் வரையிலும் புதிர் போல் தான் நடந்து கொண்டார் அவர்.
எஸ் பாலசந்தர் என்று இன்னொரு மகாமேதை. எல்லா வாத்யங்களையும் முயன்று விட்டுக் கடைசியில் வீணையில் அமைந்தார். அவர் வகுப்பு நடத்தும் முறை நூதனமானது என்பார்கள். மேளகர்த்தா ராகங்கள் அனைத்திலும் அலங்காரங்களைப் பல வருடங்கள் கற்றுக் கொடுத்து மாணவர் அதில் கரதலையாகப் பயிற்சி பெற்ற பின்னரே கீர்த்தனத்திற்குப் போவார் என்பார்கள். அவர் வாழ்நாள் பூராவும் யாருடனாவது பொருது கொண்டேயிருந்தார்.
மேற்கூறிய இசை மேதைகளில் யார் போலவும் ஆதித்யா இல்லை. இந்த இசை மேதைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் இருந்தது போலவே ஆதித்யாவும் வேறு விதமாக இருக்கிறான் என்பது தான் நான் இவர்கள் மத்தியில் காணும் ஒற்றுமை. அவன் இசை மேதையாக இருக்கலாம்; அல்லது பலர் நினைப்பது போல் விசேடக் குழந்தையாகவும் இருக்கலாம்.
எனக்கு- எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவன் எங்கள் பிள்ளை. இன்று அல்லது நாளை பிரபலமாகட்டும். அல்லது இப்போதைப் போலவே அவன் சங்கீதம் வீட்டிற்குள் முடங்கட்டும். சபாக்கள் அவன் திறமையை அங்கீகரிக்கட்டும் அல்லது உதாசீனம் செய்யட்டும். நான் குறிப்பிடுகிற இசைவாணர்கள் மேலும் மேலும் அங்கீகாரங்களைப் பெறட்டும்; எதுவாயினும் பொருட்டு இல்லை. எங்கள் பிள்ளை ஒரு இசை மேதை என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆரம்ப நாட்களில் இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் தற்போது கிஞ்சிற்றும் இல்லை.
இந்தத் தொடர் எழுதும் போது எங்கள் முன் மூன்று தெரிவுகள் இருந்தன:
- நான் குறிப்பிடுகிற இசைவாணர்கள் வீட்டின் முன் நின்று கொண்டு மண்ணை வாரித் தூற்றுவது
- குடும்பமாக விபரீதமான முடிவைத் தேடிக் கொள்வது.
- நடந்ததை நடந்தபடி உலகிற்கு எடுத்துச் சொல்வது. ‘தன் நெஞ்சறிவது பொய்யற்க’ என்கிறாரே வள்ளுவர் அதன் படி அந்தரங்க சுத்தியுடன் உள்ளதை உள்ளபடி எடுத்துரைப்பது.
புத்தியுள்ள மனிதன் எடுத்த முடிவாக நான் இந்த மூன்றாவது முடிவைத் தேர்ந்தெடுத்தேன். என் மனைவுக்கும் மகளுக்கும் இதில் விருப்பமில்லை. எங்களின் பாதுகாப்பிற்காகவும் தான் நான் ரட்சையாக இதைச் செய்திருக்கிறேன். நான் இதை எழுதவில்லையென்றால் மேலும் மேலும் அப்பாவிகள் இது போன்ற சுழல்களில் மாட்டிய வண்ணாம் இருந்திருப்பார்கள். அதைத் தடுக்க வேண்டி என்னால் ஆன சிறு முயற்சியாக இதைச் செய்திருக்கிறேன்.
இதை ஒரு வழிகாட்டி நூலாக உபயோகப்படுத்திக் கொள்ள முடியாது. காரணம் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். அதனால் அவரவர் சூழ்நிலைக்குத் தக்கவாறே அவரவர் யுக்திகளை வகுத்துக் கொள்ள வேண்டுமென்று கருதுகிறேன். ஆனால் ஒன்றைப் பற்றி நான் மிகவும் தீர்மானமாக இருக்கிறேன். குழந்தைகள் செடிகள் மரங்கள் போன்றவைதாம். அவர்கள் வளர்ந்து கிளை பரப்ப நாம் வசதிகள் வழிகள் செய்து கொடுப்பதில் தவறில்லை. மரங்களை அறுத்துத் தான் மேசைகளும் நாற்காலிகளும் செய்கிறார்கள். அவற்றின் ஒழுங்கும் வடிவமைப்பும் நேர்த்தியும் மரங்களில் இருக்காது தான். ஆனால் மரங்கள் உயிருள்ளவை; மர சாமான்கள் உயிரற்றவை. இதை நாம் எப்போதும் கருத்தில் கொள்ள வேண்டும்,
ஆதித்யா விஷயத்தில் ஒரு தெய்வீகக் குறுக்கீடு தேவையா அது நடக்குமா நடக்காமலே போகுமா எனக்குத் தெரியவில்லை. அவன் மிகுந்த பிஸியாய் செயலுள்ள கலைஞனாகப் இன்னமும் பெரிய அளவில் பரிமளிக்காததற்கு இதைத் தவிர என்னால் வேறு எந்தக் காரணமும் கற்பிக்க முடியவில்லை.
இந்தத் தொடர் ஆரம்பிக்கும் போது தோற்றுவாயாக கீழ்க் கண்ட வரிகளை எழுதியிருந்தேன்.
இடையூறுகளை நீக்குகிற யானை முகத்தோனுக்கு நமஸ்காரம். ஞான யோகி சுப்ரமணியனுக்கு நமஸ்காரம். பிரபஞ்சத்தின் தாய் தந்தை பார்வதி பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம். வேங்கட மலையில் நெருப்பென வீற்றிருக்கும் வேங்கடவனுக்கு நமஸ்காரம். கிராமத்து தேவதைகளுக்கும் ஆபத்சகாயத்துக்கும் அமராவதிக்கும் நமஸ்காரம். வானில் நின்று நல்ல தீய வார்த்தைகளை ஆமோதிக்கிற அத்ரி, ப்ருகு ருத்ஸ, வசிஷ்ட கௌதம, காஸ்யப ஆங்கிரஸ எனும் சப்த ரிஷிகளுக்கு நமஸ்காரம்.உலகின் கருத்துலக முதல் ஸ்ருஷ்டி கர்த்தா மஹா வியாசனுக்கு நமஸ்காரம். உயிரையும் ஒளியையும் இயக்கத்தையும் உலகிற்கு அள்ளித் தருகிற ஆதித்யனுக்கும் கர்ம வினைகளுக்கேற்ப பலன்களைத் தருகிற நவக்ரஹங்களுக்கும் நமஸ்காரம்.
என் குல முன்னோன் பரத்வாஜனுக்கு நமஸ்காரம். என் பிதாமஹர்களுக்கும் பிரபிதாமஹர்களுக்கும் அவர் தம் தர்ம பத்னிக்களுக்கும் நமஸ்காரம். என் தாய் தந்தையர்க்கும் மறைந்த என் சகோதர சகோதரிக்கும் நமஸ்காரம்.
தெய்வ வசத்தால் தூண்டப் பெற்று என் பிள்ளை வளர்ந்த கதையை எழுத மேற்கொள்ளும் என்னை தீய சக்திகளிலிருந்தும், வார்த்தைகளிலிருந்தும், தீய நடத்தைகளிலிருந்தும், பொறாமை வஞ்சம் சூது கர்வம் காமம் போன்ற தீமைகளிலிருந்தும் முப்பத்து முக்கோடி தேவர்களும் காக்கட்டும்.
மஹா வியாசன் பாரதம் தடையின்றி எழுத கணபதி உதவியது போல் என் கரங்களிலும் அவர் புகுந்து இந்த வியாசத்தை எழுதட்டும் ஓம்! ஓம்! ஓம்!
இத்தொடர் முடியும் தருவாயில் மீண்டும் இத் தெய்வங்களை வணங்கி அவர்கள் ஆசிகளை எனக்கும் என் மகனுக்கும் என் குடும்பத்திற்கும் வழங்க இறைஞ்சுகிறேன். ஆதித்யா இதோ எனக்குப் பாடல்கள் கற்பித்துக் கொண்டிருக்கிறான். காமவர்த்தனி வர்ணத்தில் ஆரம்பித்து, ஓரங்கசாயி காம்போதி, துளஸி பில்வ கேதார கௌளை என்று ஒவ்வொன்றாகப் பாடிக் கொண்டிருக்கிறோம். நரஹரி என்று ஹாடகாம்பரியில் ஒரு பாடல் கற்றுத் தருகிறான். இந்த ராகத்தையே இப்போது தான் கேள்விப் படுகிறேன். இதை முடித்து முத்தாய்ப்பாக பஸந்த் பஹாரில் மகாராஜபுரம் சந்தானத்தின் தில்லானாவைப் பாடிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தில்லானாவில் நான் என் வசமிழந்து நெடுங்காலம் இருந்தேன். மும்பையில் இருந்த காலங்கள் அந்தப் பாடல் தந்த நெட்டுயிர்ப்பிலேயே ஆயிரம் பக்க நாவலை எழுதினேன். அதன் சரணத்தில் வரும் வரிகள்:
கலியுகம் தன்னில் கண்கண்ட தெய்வம்கலி தீர்க்கும் காஞ்சி மாமுனியேசலிக்கும் மனதை ஒரு நிலைக்குள் நிறுத்தஉந்தன் சந்நிதியை நான் நாடி வந்தேன்கடைக்கண் பார்வையால் கடையன் என்னையேகாத்தருள் செய்யும் கருணை தெய்வமேஅடைக்கலம் என்று உந்தன் திருவடி தனில்மகாராஜன் பாடி நிதம் பணிந்திடுவேன்…
தொடரின் ஆரம்பத்தில் ஆதித்யா பிறக்குமுன் சங்கராச்சாரியாரைப் போய் பார்த்ததைப் பற்றி எழுதியிருந்தேன். அவரிடம் இன்றும் தினம் தினம் ஆதித்யாவிற்கு உன் தெய்வீக அருள் எப்போது சித்திக்கும் என்று வினவிக் கொண்டேயிருக்கிறேன். அவர் அருளில் பிறந்த குழந்தைகள் உலகில் நிறைய பேர் மேன்மை அடைந்திருக்கிறார்கள் என்று தினம் தினம் புதுப் புதுக் கதைகளாகக் கேள்விப் பட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் ஆதித்யாவையும் உயர்த்தி விட வேண்டும் என்கிற நம்பிக்கை இன்னமும் எனக்கு இருக்கிறது. அவர் தானே குல குரு?
சாந்தி பஞ்சகத்தின் முத்தாய்ப்பாகப் பின் வரும் மந்திரங்கள் வரும்:
தச்சம் யோரா வ்ருணி மஹே.காதும் யக்நாய .காதும் யக்ஞ பதயேதைவி ஸ்வஸ்தி ரஸ்துனஹஸ்வஸ்திர் மானு ஷேப்யஹஊர்த்வம் ஜிகாது பேஷஜம்ஸந்நோ அஸ்து த்விபதேஸம் சதுஷ் பதேஓம் சாந்தி சாந்தி சாந்தி!
இதன் பொருளாவது:
நாங்கள் எல்லா உயிர்களின் நலனுக்காகவும் பரம் பொருளை இறைஞ்சுகிறோம். ஹோமங்களின் போது பரம்பொருளை நாங்கள் பாடுவதற்கேற்ப துன்பங்களும் தடைகளும் அகலட்டும். எல்லா மூலிகைகளும் பெருகி சகல வியாதிகளும் அகலட்டும். தெய்வங்கள் எங்கள் மீது அமைதியைப் பொழியட்டும். இரண்டு கால் இனங்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். நான்கு கால் இனங்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். எல்லா உள்ளங்களிலும் அமைதி நிலவட்டும் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
(முற்றிற்று)
நன்றி: சொல்வனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக