சனி, 8 செப்டம்பர், 2012

வெகுஜனப் பத்திரிகை ஒன்றை நான் வழக்கமாகப் படித்து வருகிறேன். மிகவும் பாரம்பரியமான பத்திரிகை அது. அதில் மிகவும் புகழ் பெற்ற கார்டூனிஸ்ட் ஒருவர் உண்டு. மிகவும் புத்திசாலித்தனமாக அவர் வரையும் கார்டூன்கள் மிகவும் உலகப் புகழ் பெற்றவை. ஒன்று இரண்டு வரலாற்று நூல்களையும் எழுதிய அவருக்கு அற்ப காரணுங்களுக்காக கல்தா கொடுத்தார்கள். அதே சமயம் மிகவும் சாமர்த்தியமான திரைப் பாடலாசிரியர் ஒருவர் எழுதிக்கொண்டிருந்த கதை த் தொடர் முடிய அதற்குப் பாராட்டு மழை. கிராமத்தைப் பற்றி கதை சொல்லிகளின் உதவியுடன் எழுதப்பட்ட இந்த  நெடுந்தொடரில் 'கிளிசே' மனிதர்கள்தான் உலா வருகிறார்கள். இந்த எழுத்தாளர் கடந்த 40 வருடங்களாக சென்னைவாசி. கிராமத்துக்கும் அவருக்கும் ஸ்நானப்ராப்தி கிடையாது.
கட்டுரைகள் வன்முறை பற்றி சர்வ சாதரணமாக விவரிக்கின்றன. அந்தக்காலத்தில் மஞ்சள் பத்திரிக்கைகள்   கூட வெளியிடத் தயங்கும் கொடுமைகளை புலனாய்வு என்கிற பெயரில் வெளியிடுகின்றன. பக்கத்துக்குப் பக்கம் சினிமா.
இப்போது  ஒரு பேட்டியில் ஒருவர் தெய்விக சிலைகளைச் செய்வதாகவும் ஆனால் தெய்வ நம்பிக்கை இல்லை என்றும் தொழிற்சாலைகளில் பொருட்கள் செய்வது போல் தான் இதுவும் என்று சமஸ்க்ருதத்தையும் ஆன்மிகத்தையும் கிண்டல் அடித்திருக்கிறார்.
இதே trend தான் ஏனைய பத்திரிக்கையிலும். ஆச்சர்யகரமாக குங்குமம் நன்றாக இருக்கிறது. அமுத சுரபியும் கலைமகளும் தரமாகவும் கண்ணியமாகவும் கனமான உள்ளடக்கத்துடனும் வருகின்றன.

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

66ஆம் சுதந்திர தினம்

சுதந்திர தினத்தை இந்தியா எப்படிக் கொண்டடுகிறதென்று  தொலைகாட்சி வழியாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பது நம் மரபாதலால் காலை எழுந்தவுடன் பெட்டியை ஆன் செய்தேன். மகாத்மா நாசர் 'சிக்னலில் நிற்காமல் போகிறார்கள்;வீதி பூராக் குப்பை; என்ன சுதந்திரம் வேண்டிக்கிடக்கிறது ' என்று புலம்பினார். தங்கர் பச்சன் 'விவசாயப் புரட்சி என்கிற பெயரில் விளை நி லங்களைப் பாழடித்து விட்டார்கள்' என்று அழுதார். ஷாலினி என்னும் மன நல மருத்துவர்- டிவியில் அடிக்கடி காணப்படுபவர்- அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் ஏற்பட்ட சமுக சிந்தனை மாற்றத்தால்  மட்டுமே இந்திய சுதந்திரம் கிடைத்ததே ஒழிய சுதந்திரப் போராட்டத்தால் கிடைக்கவில்லை என்று ஒரு ஒப்பற்ற கருத்தை வெளியிட்டார்.
இவர்கள் எல்லாம் நாட்டுக்கு இவர்களின் பங்களிப்பு இதுவரை என்ன என்று எண்ணிப் பார்த்துப் பின் இது போன்ற கருத்துக்களை வெளியிடுகிறர்களா என்று புரிந்து கொள்ள முடியவில்ல்லை. அவரவர் அவரவர் வேலையைப் பணம் வாங்கிக்கொண்டு செய்கிறார்கள். அவ்வளவே. அவரவர் ஜீவனோபாயத்துக்கான வேலைகளுக்கு மேல் என்ன செய்திருக்கிறார்கள்?
சுதந்திர தினத்தில் நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம் ஒன்று தான் இருக்கிறது. எந்தவிதமான தவற்றைப் பற்றியும் நமக்கு குற்றவுணர்வு குறைந்து கொண்டிருக்கிறது.
'மாப்பிள்ளை குடிக்கிறாரா? யார் தான் குடிக்கவில்லை? லஞ்சம் வாங்குகிறானா? அது வழக்கம் தானே? கவுன்சிலர்  ஸ்கார்பியோ காரில் போகிறானா? நமக்கு எதாவது காரியம் ஆகுமா அவன் மூலம்? மணல் கொள்ளை போகிறதா? நாம் கட்டும் வீட்டிற்கு மணல் கிடைத்தால் போதும்' எது போன்ற மனச்சமாதானங்கள் தாம் நம் அவலங்களுக்குக் காரணம். சுதந்திர தினத்தில் இதைத் தான் நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டி இருக்கிறது.
ஜெய் ஹிந்த்!

ஞாயிறு, 1 ஜூலை, 2012

அரசு உடனடியாகச  செய்ய வேண்டிய தற்போதய டாப் 10 பணிகள் :
1. பூரண மதுவிலக்கை உடனடியாக அமல் செய்தல் .
2. மாநிலம் முழுவதும் நடக்கும் மணல் கொள்ளையை முற்றிலுமாக ஒழித்தல்.
3. காவேரியை நம்பி இராமல் நீர் ஆதாரங்களை பலப்படுத்துதல்.
4. விளை நிலங்களை பிளாட் போட்டு விற்கும் அவலத்தைத் தடுத்து நிறுத்துதல் .
5. பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்தி கட்டுக்குள் வைத்திருத்தல்.
6. செயற்கை உரங்களை முற்றிலுமாக ஒழித்து இயற்கை உரங்களை ஊக்குவித்தல் .
7. சினிமாவில் அரிவாள் கலாச்சாரத்துடன் வரும் படங்களைத்  தடை செய்தல்.
8. சினிமா ஹீரோக்களின் சம்பள விகிதங்களை நெறிப்படுத்தி கட்டுக்குள் வைத்திருத்தல் .
9. மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கட்டாயமாக்கி ஊக்குவித்தல்.
10. கேரளாவுக்குக் கடத்தப்படும் மணல் மற்றும் அரிசி அநீதியை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுதல் 

சனி, 2 ஜூன், 2012

ஆங்கிலக் கல்வி மோகம் தலைவிரித்தாடுகிறதே....

 தமிழ் ஆசான் 

தி.வே. கோபாலய்யருடன் 

ஒரு நேர்காணல்

ஆசிரியர் அழகப்பன் பெயரால் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் தொல்காப்பியர் விருது பெற்ற திரு.தி.வே.கோபாலய்யர். கடந்த நாற்பத்தேழு வருடங்களாகத் தமிழ் தொண்டாற்றி வரும் ஆசான். எண்பது வயதிலும் தளராது உழைத்து வரும் இவ்விளைஞர் 23 நூல்களைப் படைத்தவர். ஆறு புத்தகங்கள் அச்சேறக் காத்திருக்கின்றன. தமிழ் இலக்கண மரபுச் சொல் அகரவரிசை அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. கூர்மையான நினைவாற்றல், தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய திடமான கருத்துக்கள், வயதைப்பொருட்படுத்தாது உழைத்துக் கொண்டிருக்கிற முனைப்பு, தம் சாதனைகளைப் பற்றிய பெருமித உணர்வு இல்லாத அடக்கம் இவைதான் தி.வே.கோபாலய்யர்.
    15 ஆண்டுகள் தஞ்சையில் தமிழ் ஆசிரியராகவும், 15 ஆண்டுகள் திருவையாறு தமிழ்க் கல்லூரிப் பேராசியர் ஆகவும் பணியாற்றிய இவர் 1979ம் ஆண்டிலிருந்து புதுச்சேரி வாசி. பிரஞ்சுக் கலை நிறுவனத்துக்காகத் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார்.
    மருந்துக்குக் கூடத் தற்கால அலங்காரம் பிரதிபலிக்காத எளிமையான இவருடைய மத்தியதர இல்லத்தில் சந்தித்தேன். கேட்ட கேள்விகளுக்கு, கடல் மடை திறந்த வெள்ளம் போன்று உற்சாகமாக அவர் பதில் சொல்லிக் கொண்டு போனவிதத்தில் பேட்டி ஒரு ஸ்வாரஸ்யமிக்க உரையாடலாகப் பரிணமித்தது. இரண்டு மணி நேரம் கழித்து அவரிடம் விடைபெற்ற போது அவரைத் தலைவணங்க எழுந்த உணர்ச்சியை அடக்க முடியவில்லை. இனி பேட்டியிலிருந்து சில பகுதிகள்;

நீங்கள் தமிழைத் தேர்ந்தெடுத்து வந்த காரணம் என்ன?

    நான் பிறந்த ஊர் திருவையாறு. 1940ம் வருடம் எஸ்.எஸ்.எல்.சி. முடித்த கையுடன் என் தந்தை என்னைப் பரமாச்சாரியாரிடம் கூட்டிச் சென்றார். மேற் படிப்புக்குத் திருச்சிக்கு என்னை அனுப்ப அவருக்கு எண்ணம். பரமாச்சாரியார் தமிழில் எல்லாமே இருக்கிறது. இருந்தும் தமிழ்ப் படிப்பு குறைந்து வருகிறது.  பையனைத் தமிழில் சேர்த்துவிடு என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். அவர் சொன்ன பின் அப்பீல் ஏது? திருவையாறு கல்லூரியில் சேர்ந்தேன். பள் ளியிலும், சரி, கல்லூரியிலும் சரி முதல் மாணவனாகவே இருந்தேன்.

வேலைக்குச் சென்றது பற்றி?

 வித்வான் படிப்பை முடித்துச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பே தஞ்சையில் ஒரு பள்ளியில் வேலைக்குச் சென்று விட்டேன். வெள்ளைக்காரர்தான் அங்கே தாளாளர். அவர்தான் என்னைப் பணிக்குத் தேர்ந்தெடுத்தார் அங்கு ஒரு வருடம். பின் திருப்பனந்தாள் கல்லூரியில் 5 வருடங்கள். அதன்பின் திருவை யாறு கல்லுரியில் 1979 வரையிலும் பணி அதன்பின்னர் தற்போதைய பிரெஞ்சு அரசால் நிதி உவி பெறும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த இருபத்தைந்து வரு டங்களாகப் பணியாற்றி வருகிறேன்.

தொல்காப்பியம் பின் நன்னூல் இவற்றிற்குப் பிறகு தற்கால மாற்றங்களுக்கேற்றவாறு இலக்கணம் வளந்திருக்கிறதா?

 வடமொழியைப் பொறுத்தவரை பாணினி எழுதிய அஷ்ட அத்யாயிக்குப் பலர் விளக்கவுரை போன்று எழுதியிருக்கிறார்கள். முதலில் பதஞ்சலி எழுதினார். பின் வரருசி என்று காத்யாயனார் எழுதினார். இதன்பின்னர் காசியிலிருந்து இரண்டு பேர் காசிகா விருத்தி என்று எழுதினர். இவை எல்லாமே மூலத்தின் 4000 சூத்திரங்களை வேறுவிதத்தில் சீர் செய்தவைதாம். ஆனால் இவையே அபசித்தாந்தம் என்று அழைக்கப்பட்டன. சுருங்கச் சொன்னால் பாணினி யின் படைப்பை பாதிக்காத ஒரு வழிமொழி நூல்கூட அஷ்ட அத்யாயியின் அந்தஸ் தைப் பெற வில்லை. வடமொழியின் இலக்கணம் அந்த அளவிற்குக்கூட வளைந்து கொடுக்க இடம் கொடுக்கவில்லை. தமிழில் நிலைமை வேறு. தொல்காப்பியம் வேறு. நன்னூல் வேறு. இது போன்ற மாற்றங்களைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் விதத்தில் அமைந்திருப்பது தமிழின் சிறப்பு. ஆனால் தொல்காப்பியத்திற்குப் பிறகே பல மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. உதாரணமாக `ச’வை முதற் சொல்லாகக் கொண்ட வார்த்தைகள் தொல் காப்பியர் காலத்தில் கிடையாது. இப்போது வழக்கில் ஏராளமான சொற்கள் வந்து விட்டன. இதைக் கருத்தில் கொண்டுதான் ‘கடிசொல் அல்ல காலத்துப் படினே’ என்று தொல்காப்பியமும், ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல்’ என்று நன்னூலும் கூறுகின்றன. இப்படிப் பார்க்கும் போது தொல் காப்பியமும் நன்னூலும் தற்போதைய இலக்கணத் தேவைகளுக்குப் போதாது என்று தோன்றினாலும் இதற்கான சலுகைகளின் தேவையை அவை அக் காலத்திலேயே குறிப்பிட்டிருப்பது சிறப்பு.
    தொல்காப்பியத்திற்கு சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட உரை இல்லை. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டில் தான் அபிநயம் என்கிற நூல் ஏற்பட்டிருக்கிறது என்பதை நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதன் சொல்கிறார். இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது இலக்கணத்தைப் பொறுத்தவரை தொல்காப்பியத்தின் மையக் கோட்பாடு பழுதுபடாமல் சிற்சில மாறுதல்களுடன் அவ்வப்போது நூல்கள் வரத்தான் வேண்டும்.

       வடஇந்தியாவில் பல மொழிகள் பேசப்படுகின்றன. இவை எல்லாவற்றிற்கும் வேர் மொழியாக சமஸ்கிருதம் விளங்குவதை அந்தந்த மொழி பேசுபவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். தென்னிந்தியாவின் மூல மொழியாகத் தமிழ் இருந்தும் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளின் வேர் மொழியாகத் தமிழுக்கு அங்கீகாரமும் பரஸ்பரத் தொடர்பும் இல்லையே. அது ஏன்?
 
 வடமொழி விஷயம் வேறு. அது யாராலும் பேசப்படாதிருந்தும் படித்தவர்கள் ஒருவரோடொருவர் தகவல் பரிமாற்றத்திற்காக ஏற்படுத்திக்கொண்ட  மொழி. தென்னிந்தியா வைப் பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் மூல பாஷையாக ஒன்று இருந்திருக்கிறது. அம் மொழியை திராவிடம் என்று தான் அழைக்க வேண்டும். அந்த மொழியின் மூலக்கூறுகள் பலவற்றைத் தமிழ் எடுத்துக் கொண்டது. இதர தென்னிந்திய மொழிகளும் கொஞ்சம் எடுத்துக் கொண்டன. மூலமொழியின் சிறப்பியல்புகளைப் பெரும்பாலும் எடுத்துக் கொண்டதால் தான் தமிழ் தென்னிந்திய மொழிகளில் முதன்மை மொழியாக விளங்கி வரு கிறது.
    இந்தக் காரணத்தினால்தான் தனித்து இயங்கும் இயல்பு பெற்றது தமிழ். மற்ற தென்னிந்திய மொழிகள் அனைத்துமே இலக்கணத்தைப் பொறுத்தவரை வட மொழியின் திட்ட வரையறையைப் பின்பற்றுபவை. இதற்கு முதன்மையான காரணம் வல்லின மெல்லின ஒலிகளுக்கு அந்த மொழிகள் சமஸ்கிருதத்தை அடியொற்றுவது. தமிழில் உச்சரிப்பு மொழியில் இயல்பிலேயே அமைந்திருப் பதால் அது தனித்து இயங்கும் வல்லமை படைத்தது.


வடமொழியை இன்று இறந்த மொழி என்கிறார்கள். இதுபோன்ற நிலை தமிழுக்கு ஏற்படும் சாத்தியக்கூறு உள்ளதா?
    
வடமொழி நான் ஏற்கனவே கூறியிருந்த படி யாராலும் பேசப்படாத மொழி. சமஸ்கிருதம் என்றாலே திருத்தியமைக்கப்பட்டது என்று பொருள். அந்தக் காலத்தில் அறிஞர்கள் தத்தமது கலாசாரத்தின் பரிமாற்றத்திற்காக ஏற்படுத் திக் கொண்ட மொழி வட மொழி. இதில் மிகவும் குறிப்பிடப்பட வேண்டியது வட மொழியைப் பெரிதும் ஆதரித்து வளர்த்தவர்கள் தமிழர்களே. உதாரணமாக உபநிடதங்களுக்கு விளக்கமாக வியாசர் பிரும்ம சூத்திரம் எழுதினார். இதற்கு உரை எழுதிய சங்கரர், மத்வர், ராமானுஜர், ஸ்ரீகண்டர், ஸ்ரீபதி பண்டித ஆராத்யர் ஐவரும் தமிழர்கள். சங்கரரையும், மத்வரையும் நான் தமிழர் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். அப்போது மலையாளம் ,கன்னடம் என்கிற பாகுபாடு இல்லை.
    தமிழைப் பொறுத்தவரை அது செம்மொழியாக இருந்தபோதிலும் அது பேசு மொழியாகவும் இருந்து வருகிறது. அவ்வப்போது காலங்களின் தன்மையை ஒட்டி பிர யோகத்தில் மாற்றங்கள் நிகழலாமே ஒழிய தமிழ் மொழி முற்றிலும் அழிந்துவிடுவதற்கான வாய்ப்பு இல்லை.

அப்போது தமிழின் எதிர்காலம்?

 அதை நினைத்தால் கவலையாக இருக்கிறது. நான் சொல்வது முரண் பாடாகத் தோன்றலாம். தமிழ்மொழியின் தனித்தன்மையினால் அது சாகாவரம் பெற்றது. ஆனால் தமிழ் தமிழ் என்று எங்கும் கூக்குரல் கேட்டுக் கொண் டிருக்கும் இப்போது நிதர்சனத்தில் நம் தமிழர்களுக்கு மொழி அபிமானம் கம்மி. தமிழ் கற்பிப்பது என்பது ஃபாஸ்ட் புட் மாதிரி ஆகி விட்டது. தமிழை ஊக்கு விக்கிறோம் என்கிற பெயரில் தமிழ்க் கல்வியை மிகவும் எளிமைப் படுத்தி விட்டார்கள். இருக்கும் எம்.ஏ. , பி.எச்.டி. க்களில் பாதிப்பேர் தமிழில் பட்டம் பெற்றவர் கள். ஆனால் அவர்களில் நிறையப் பேரின் தமிழ் மொழிசார்ந்த புலமை கம்மி. இதற்குப் பாடத் திட்டத்தைத்தான் குறை சொல்ல வேண்டும்.
    இது போதாதென்று ஆரம்பப் பள்ளியிலிருந்து தாய்மொழி தவிர்த்த கல்விதான் பரவலாக உள்ளது. ஆங்கிலக்கல்வி மோகம் தலைவிரித்தாடுகி றது. குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றன. ஆங்கிலத்திலும் அரைகுறை ஞானம் தான் ஏற்படுகிறது. நமது தமிழர்களுக்கு பாஷாபிமானம் இருந்தால் இது போன்ற நிலை ஏற்பட்டிருக்குமா? ஆந்திரத்திலோ கர்நாடகத்திலோ கேரளத் திலோ இப்படி ஒரு நிலை இல்லை.
    இதை மாற்ற தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், அரசு, பெற்றோர் என்று பலதரப்பட்டவர்களும் சேர்ந்து முனையவேண்டும். அப்போது தமிழ் பழைய சிறப்பை எய்தும்.

டாகடர் கே. ஏ, குணசேகரன் பேட்டி

கவனிப்பைப் பெறுகிறது தலித் இலக்கியம்.....


- டாகடர் கே. ஏ, குணசேகரன் பேட்டி


  புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறை தலைவராய்ப் பணியாற்றி வரும் டாக்டர். கே.ஏ. குணசேகரன் நாட்டுப் புறப் பாடல்கள், நடிப்பு, நாடகம், நாவல் என்று பன் முகங்களில் தம் ஆளுமையை வெளிப்படுத்தி வருபவர். தன்னானே என்கிற முதல் தமிழ் நபுற ஒலி நாடாவை வெளியிட்டுப் பரவலான கவனிப்பைப் பெற்றவர். சிவகங்கையில் படித்த போது கவிஞர் மீராவால் அடையாளம் காணப்பட்டவர். ஆரம்ப காலத்தில் முற்போக்கு இயக்கங்களால் பெரிதும் பேணப்பட்ட இவர் இன்றும் பல்வேறு இயக்கங்களுடனும் சித்தாந்தங்களுடனும் தொடர்பு கொண்டு தீவிரமாக இயங்கி வருகிறார்.
    கடுமையான உழைப்பாளி. படிப்பாளி .தலித்தாகப் பிறந்ததால் தாம் பெற்ற அடிகளையும் வலியையும் வடு என்கிற நாவலில் வெளிப்படுத்தி இருக்கிறார். மிகுந்த முனைப்புடன் இயங்கும் இவரை இவர் இல்லத்தில் சந்தித்து உரையாடிய உரையாடல் மிகவும் மனந்திறந்தும் பரிவுடனும் அமைந்து நிறைவு தந்தது .தாம் பெற்ற வலிகளை ஏற்படுத்தியவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி தொனிக்காது இவர் உரையாடலை அமைத்துக் கொண்ட நயத்தக்க நாகரிகம் ரசிக்கத் தக்கது. இதற்கு இவர்இவை எல்லாவற்றையும் மீறி இவ்வளவு தூரம் உயர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இனி பேட்டி.....




வங்காள நாட்டுப் புறப் பாடலுக்கோ பஞ்சாபி நாட்டுப்புறப் பாடலுக்கோ கிடைக்கின்ற அங்கீகாரமும் அந்தஸ்தும் தமிழ் நாட்டுப் புறப் பாடலுக்குக் கிடைக்க வில்லையே?
பதில்; வங்காளத்திலோ பஞ்சாபிலோ நாட்டுப் புறப் பாடல்களுக்குப் பரந்து பட்ட தளம் இருப்பதற்கு இரண்டு காரணங்கள். அங்கேயெல்லாம் செந்நெறி இசை வாணர்கள் நாட்டுப்புறப் பாடல்களை அங்கீகரிக்கிறார்கள், அரசும் ஊக்குவிக்கிறது. தவிரவும் அப்பாடல்களில் நடனத்திற்கு எற்ற வன்பண் இருக் கிறது. நமது செந்நெறி இசை வாணர்கள் நாட்டுப்புறப் பாடல்களை அங்கீகரிப் பதும் இல்லை. நம்முடைய இசை மிகவும் நளினமும் குழைவும் மென்மையும் நிறைந்தது.
இதுதொடர்பான ஒரு துணைக் கேள்வி...... கர்நாடக கங்கீதம் தமிழ் வரலாற்றில் மிகவும் தொன்மை வாய்ந்தது அன்று. நாயக்க மராட்டிய மன்னர்களால் வளர்க்கப்பட்ட அது தமிழ் மண்ணில் வேரூன்றிய அளவிற்கு நாட்டுப்புறப் பாடல்கள் வேரூன்ற வில்லையே ஏன்?
பதில்;   இதற்குத் தமிழ் இசை மரபு கோயில் சார்ந்ததாக இருந்தது ஒரு முக்கிய காரணம். இசை என்றாலே அது இறைவனின் துதியாகத் தான் இருக்க முடியும் என்கிற அழுத்தமான நம்பிக்கையின் பின்னணியில் கர்நாடக சங்கீதம் துளிர் விட்டு வளர்ந்ததில் ஆச்சரியமில்லை. நாட்டுப் புறப் பாடல்கள் மனிதனைப் பற்றியும் பேசின.
    என்னம்மா தேவி சக்கம்மா
    உலகம் தலைகீழாத் தொங்குதே
    நியாயமா?        
    இப்போ சின்னஞ்சிறிசெல்லாம்
    சிகரெட்டு பிடிக்குது
    சித்தப்பன் மாருட்டே தீப்பெட்டி கேக்குது.....
(பாடிக் காண்பிக்கிறார்)
 இப்பாடலில் உள்ள ஆதங்கத்தைக் கவனியுங்கள். இப்பாடல் தெய்வத்திடம் முறையிடுவதாகத் தோன்றுகிறதே ஒழிய சமூகம் மாற்றமடையும் போது ஏற்படுகின்ற சீரழிவைக் கண்டு வெதும்பும் மனதைத் தான் உண்மையில் சுட்டுகிறது. மனிதனையும் வாழ்க்கை அவலங்களையும் தேடலையும் வெளிப்படுத்தும் நாட்டுப் புறப் பாடல்கள் தெய்வத்திடம் முக்தியை வேண்டும் இசைவாணர்களிடமும் சமூகத்திடமும் தீண்டத் தகாததாய் இருந்ததில் வியப்பொன்றும் மில்லை.
இது தொடர்பான இன்னொரு முரண்பாடான விஷயம் என்னவென்றால் நெடிய பாரம்பரியம் இல்லாத கர்நாடக சங்கீதம் வேறெங்கிலும் இல்லாத அள விற்கு தமிழகத்தில் ஊன்றுவதற்கு இடங்கொடுத்த தமிழர்கள் நிச்சயமாக அதற்கு முன்பு வேறோர் இசை வடிவிற்கு ஆதரவாய் இருந்திருக்க வேண்டும். அது என்ன?
பதில்;கர்நாடக சங்கீதத்திற்கு முன்பு கோயில்கள் தான் இசைக்கு நிலைக்களனாய் விளங்கி வந்திருக்கின்றன. கோயிலில் பண் இசை பாடும் ஓதுவார்களைத் தவிர ஆடல் பாடல்களில் தெய்வத்தை ஆராதிப்பதை வாழ்க்கையாகவே கொண்ட இசை வேளாளர் சமுகம் இருந்து வந்திருக்கிறது. அவர்களின் இசைத் திறமையும் அச்சமூகப் பெண்களின் ஆடல்  திறனும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கிட்டத்தட்ட 13ம் நூற்றாண்டு வரை மாலிக்காபூர் படையெடுத்து வரும் வரை நம் இசைத் திறனும் ஆழ்வார் களாலும் நாயன்மார்களாலும்செழுமை பெற்று வந்தது. சங்க காலத்தைப் பொறுத்த வரை பாணர்கள் இருக்திருக்கிறார்கள். அவர்கள் பாடு பொருளாக வேந்தனையும் தலைவனையும் தலைவியையும் கொண்டு பாடினார்கள். இது பேரரசுகள் அமையும் வரையிலும் கோயில்கள் உருவாகும் வரையிலும் நீடித் தது. எல்லாக் காலங்களிலும் கிராமங்களில் கமழ்ந்து வந்தது நாட்டுப் புற இசையே. ஆனால் அது கிராமங்களுடன் நின்றுவிட்டது. கிட்டத்தட்ட பிரிட் டிஷ்காரர்கள் தான் தொல்குடிகளைப் பற்றியும் நாட்டுப்பாடல்களைப் பற்றியும் எழுதியதில் நாட்டுப் புறப் பாடல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.
தமிழ் நாடகத்தைப் பொறுத்த வரை நம் பண்டைய கூத்தின் கூறுகளை உள் வாங்கி வளரவில்லையே இதற்கு என்ன காரணம்?
பதில்;    கன்னடத்தைப் பொறுத்தவரை பி.வி.கராந்த் , யட்ச கானத்தை மீண்டும் உயிர்ப்பித்தார். பல பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்தார். தமிழில் இத்தகைய முயற்சிகள் நவீன நாடகங்களில் மேற்கொள்ளப்பட்டன. தேசீய நாடகப் பள்ளியும் இங்கே காந்தி கிராமத்தின் ஆசிரியர்கள் எஸ்.பி.ஸ்ரீநிவாசன், ராமானுஜம் போன்றோருமே இத்தகைய பரிசோதனை முயற்சிகளைச் செய்யத் தொடங்கினார்கள். நவீன நாடகங்கள் இன்றும் நம் பண்டைய மரபு முறைகளை உள்வாங்கி நடந்து கொண்டு வருகின்றன.என்றாலும் இசை வழி மரபு தற்கால நாடகங்கள் எவற்றிலும் உள் வாங்கப் படாததற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. பாரம்பரிய இசையின் கூறுகளை ஓரளவு உள்வாங் கிய சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களின் ஊடே ஷேக்ஸ்பியர் நாடக வழியில் பம்மல் சம்மந்த முதலியார் நாடகங்கள் நடந்து வந்தன. மிக துரதிர்ஷ்டவசமாக நகர்ப்புற நாடக வடிவங்களாய் சம்மந்த முதலியாரின் நாடகங்களும் கிராமிய வடிவங்களாய் சுவாமிகளின் நாடகங்களும் புரிந்து கொள்ளப் பட்டதால் நகரங்கள் வளர்ந்து கிராமங்கள் தேய்ந்தது போலவே கிராமிய இசை நாடக வடிவங்களும் தமிழில் தேய்ந்து மறைந்தன.
மராட்டிய நாடகத்தில் விஜய் டென்டுல்கர் எழுதிய கன்ஷிராம் கொத்தவால் என்கிற நாடகம் இன்றும் பிரபலமாக நடந்து வருகிறது. இந்நாடகத்தின் உத்திமரபு வடிவம். ஆனால் கருப் பொருள் மரபை எதிர்ப்பது. இது போன்ற ஒரு நாடகம் உருவாகும் அளவிற்குத் தமிழ் நாடகம் வளரவில்லையே?
பதில்;    இது போன்ற நாடகங்கள் வரவில்லை என்று ஒரேயடியாக மறுத்து விடுவதற்கில்லை. பரிசோதனை முயற்சிகளில் பிணம் தின்னும் சாத்திரங் கள், இந்திரா பார்த்தசாரதியின் நந்தன் கதை ,என்னுடைய சத்திய சோதனை போன்ற நாடகங்கள் முயன்று வந்திருக்கின்றன. இவற்றில் தேவையான மரபு வடிவங்களை உள்வாங்கி தேவையற்றவற்றை ஒதுக்கி எழுதப்பட்டு நடிக்கப் பட்டு வருகின்றன.
திரைப்படத் துறையுடன் உங்களுக்கிருக்கும் தொடர்பைப் பற்றிச் சொல் லுங்கள்...
பதில்;திரைப்பட துறையைப் பற்றி எனக்கு மரியாதை ஏற்பட்டது நிமாய்கோஷ் வழிகாட்டுதலில் திரைப்படத் திறனாய்வுப் பயிற்சி பெற்ற பின்புதான். பதேர் பாஞ்சாலி போன்ற படங்களைப் பார்த்த பிறகு இந்த ஊடகத்தை இப்படியும் பயன்படுத்த முடியுமா என்கிற வியப்பும் புரிதலும் ஏற்பட்டது. இதன் பின் என் வள்ளி திருமண நவீன நாடகத்தை திரைப்பட நடிகர் நாசர்பார்த்து கவரப்பட்டு எனக்கு நண்பரானார் அவருடைய தேவதை படத்தில் ஒரு பாடல் எழுதி பாடி அக்காட்சியில் நானும் என் உதவியாளரும் நடித்தோம். அதன் பின் நண்பர் தங்கர் பச்சானின் அழகி படத்தில் நடித்தேன். அதில் வந்த கதாபாத்திரம் கட்டையனாக நான் நடித்து பலாப்பழம் தூக்கி வரும் காட்சி பரவலான கவனிப்பைப் பெற்றது. இந்த சந்தர்ப்பத்தில் தான் நாட்டுப் பாடல்களை வெளியிட்டு நான் பெறாத கவனிப்பை திரைப்படங்களில் குறுகிய காலத்தில் பெற முடிந்ததை உணர முடிந்தது. பின்னர் பாரதி படத்திலும் சிறு வேடம் ஏற்று நடித்தேன். இது எல்லாமே நண்பர்களின் வற்புறுத்தலுக்காகச் செய்தது தான். இதன் மூலம் ஒரு நன்மை விளைந்தது. நான் சார்ந்திருக்கும் துறையின் பாடத்திட்டங்களில் இது சம்பந்தமான வகுப்புகள் நடக்க நேருகையில் என்னால் இன்னும் எளிமையாகவும் புரிதலுடனும் அவற்றைக் கையாள முடிந்தது.
தாங்கள் வடு என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறீர்கள். அதைப் பற்றி?
பதில்;என் இளைமைப் பருவத்திலும் மாணவப் பருவத்திலும் பெற்ற அனுபவங்களை வைத்துத் தான் இந்த நாவலை எழுதினேன். இந்த நாவல் பரவலான வரவேற்பைப் பெற்றது. மும்பையிலிருந்து அம்பை தொலை பேசியில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தார். அமெரிக்கா சென்ற சுந்தர ராம சாமி கடிதம் எழுதினார். அதுதான் புதிய பார்வையில் வெளிவந்தது. இதைத் தவிர எதிர்பாராத இடங்களிலிருந்தும் பாராட்டு. மதுரையிலிருந்து ஆர்.எஸ்.எஸ்.  தொண்டர் ஒருவர் கூடை நிறைய பழங்களை வாங்கி கொடுத் துப் பாராட்டி விட்டுப் போனார். மிகவும் ஆசாரமான குடும்பம் எங்களுடையது. தங்கள் நாவலைப் படித்ததில் ஏதோ குற்றம் செய்த உணர்வு ஏற்படுகிறது என்ற கூறிவிட்டுப் போனார். இதுபோன்ற அனுபவங்கள் நிறைய.
தலித் இலக்கியம் வளர்ந்திருக்கிறதா? தலித்களின் தற்போதைய நிலைப் பாடுகள் எத்தகைய மாற்றங்களை அடைந்துள்ளன?
பதில்;இந்திய அரசால் டாக்டர் அம்பேத்காரின் படைப்புகள் அனைத்தும் அனைத்து இந்திய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டதில் தலித்துக்களின் ஒருங் கிணைப்பும் ஒத்திசைவும் இயக்கமாக உருவெடுத்து விட்டது சரித்திரத்தில் இந்த மாதிரியாக இயக்கங்கள் உருவாகும் சமயங்களில் எல்லாம் அது சம்மந் தமான கலை இலக்கிய வடிவங்கள் வீறு கொண்டு வெளி வருவது வழக்கம். அதுதான் இப்போது நடந்து கொண்டுவருகிறது. என்றைக்கும் இல்லாத அளவு தலித் புதின மற்றும் இதர கலை இலக்கிய வடிவங்கள் இன்று வெளிவந்து எப்போதும் இல்லாத அளவில் கவனிப்பையும் பெற்று வருகின்றன. இத்தனை நாளும் கவனிப்புப் பெறாத பதிவு செய்யப்படாத ஆவணங்களாக தலித் துகளின் வாழ்க்கையும் அவலங்களும் இருந்தபோத அவற்றை எல்லாம் பதிவு செய்வதற்கு வழிவகை செய்தவர் டாக்டர் அம்பேத்கார். அது எந்த அளவிற்கு இப்போது இருக்கிறது என்றால் நான் நாவல் எழுதினால் அதை மனந்திறந்து பாராட்ட அம்பை, சுந்தர ராமசாமி போன்ற தலித் அல்லாத படைப்பாளிகளும் முன் வருகிறார்கள் என்பதே. இது வரவேற்கத் தக்கது.
வடநாட்டில் வேதகாலத்துக்குப்பின் ஏற்பட்ட பக்தி இயக்கம் சமூகத்தின் அடித்தட்டு மக்கள் வரை ஊடுருவிச் சென்று இரண்டறக் கலந்தது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை வேதங்களைப் போற்றிய ஆன்மீகம் தன்ன ளவில் நின்றது போலவே அதன்பின்  வந்த பக்தி இயக்கமும் தன் அளவில் நின்று விட்டது. இதற்குக் காரணம் என்ன?
பதில்;ராமானுஜரை விரட்டி அடித்தவர்கள் தானே நாம்? காரணம் என்று பார்த்தால் எவ்வித மாற்றங்களையும் ஏற்றுக் கொள்ளத் துணியாத மனப்பக் குவமின்மையும் விழிப்புணர்வின்மை யும் தான். நந்தன் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கையில் மூவாயிரம் வேதியர் அவனைத் தடுத்து நிறுத்தியது இதனால் தானே.
பக்தி இயக்கங்கள் செய்யத் தவறியதை இவர்கள் செய்வார்கள் என்று நம்பித் தானே திராவிட இயக்கங்களைப் பெருவாரியான அடித்தட்டு மக்கள் ஆதரித்தார்கள்? ஆனால் திராவிட இயக்ககங்கள் பக்தி இயக்கம் போலவே ஜாதீயக் கட்டுமானம் சிதையாமல் பார்த்துக் கொண்டது என்று கூறினால் ஒப்புக் கொள்வீர்களா?
பதில்;ஒப்புக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. இதற்கு முக்கியமான காரணமாக நான் நினைப்பது தந்தை பெரியார். தான் இயக்கம் ஆரம்பித்து நடத்தி வந்த போது தன்னைப் போல் சமூக இயக்கங்கள் நடத்தி வந்த அயோத்திதாச பண்டிதர் போன்ற மற்ற ஆர்வலர்களையும் அங்கீகரித்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல அவர்களையும் அரவணைத்துச் செல் லாதது தான் காரணம் என்று நினைக்கிறேன். ராஜா, இரட்டை மலை சீனி வாசன், அயோத்தி தாச பண்டிதர் போன்றவர்கள் நடத்திய இயக்கங்கள் கவனிப்பு பெறாமல் போனது சரியல்ல.
தங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன?
பதில்;நவீன நாடகங்கள், புதினங்கள், இசை வடிவங்கள், திரைப்படங்கள் இப்படி நிறைய.. சுருங்கச் சொன்னால் இயங்கி கொண்டிருக்க வேண்டும். இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இதுதான் திட்டம்.

புதுமைப் பித்தன் எனும் எரிமலை



    ‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம்’ என்று முடியும் சிறுகதை எந்தவித சிறுகதைக் கோட்பாடுக்கும் உட்படாதது. இருந்த போதிலும் பெரிய பெரிய ஜாம்பவான்கள் எழுதிய மகத்தான உத்திகள் கொண்டு எழுதப்பட்ட கதைகளெல்லாம் பெறாத கவனிப்பை இது பெற்றது. இந்தக் கதையை எழுதியவர் சிறு வயதிலேயே மரணம் அடைந்த புதுமைப் பித்தன் என்னும் சொ. விருத்தாசலம்.
    மணிக்கொடியில் வேலை பார்த்தவர். மணிக்கொடி எழுத்தாளர்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவர். எழுதுவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தவர். வாசன் இயக்கிய ஔவையார் திரைப்படத்தின் கதை கொத்தமங்கலம் சுப்புவால் எழுதப்பட்டது. இதே படத்திற்குப் புதுமைப்பித்த னும் கதை எழுதினார். அது நிராகரிக்கப்பட்டது. இவரின் கற்பனையில் உதித்த கதைக்கரு தான் பின்னர் ஏ.பி. நாகராஜனால் இயக்கப்பட்டு வெளிவந்த சரஸ் வதி சபதம் என்கிறார்கள்.
    மரபை மறுக்கும் அங்கதம், வாழ்க்கையில் நலிவுற்றவர்கள் பால் பரிவு. ஜாதி இந்துக்களிடம் வெறுப்பு, பணத்தின் மேலும், பணம் படைத்தவர்கள் மீதும் வன்மம், இதுதான் புதுமைப்பித்தன்.
    கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் கதையில் கதையின் நாயகன் சிவபெருமானை பாரிமுனை எஸ்ப்ளநேடு என்கிற இடத்தில் சந்திக்கிறார். சிவபெருமானுக்குக் கந்தசாமிப் பிள்ளைக்கு எந்த விதத்திலாவது உதவி செய்து விட வேண்டுமென்கிற துடிப்பு, கந்தசாமிப் பிள்ளைக்கு எப்படியாவது தாம் நடத்தும் சஞ்சிகைக்கு ஆயுள் சந்தாவாங்கி விட வேண்டு மென்கிற அவ சரம். கேட்டே விடுகிறார். கடவுள் கேட்கிறார். உம் ஆயுளா? பத்திரிக்கை ஆயுளா? என்று. கந்தசாமிப்பிள்ளை படுகிற அவதிகளைப் பார்த்துவிட்டு வரம் கொடுக்க விருப்பம் தெரிவிக்கும் போது கந்தசாமிப் பிள்ளை சொல்கிறார். உம்ம ஜாதியே அதற்குத்தானே லாயக்கு என்று.
    இதே கதையின் நீட்சியாக இன்னொரு கதையிலும் சிவன் வருகிறார். சிவன் இதில் பிழைப்புத் தேடி கதாநாயகனிடம் கேட்க அவர் பெரிய நாட்டியக்காரர் என்று சிபாரிசு செய்ய ஒருவரிடம் கூட்டிப் போகிறார். சிவன் பாம்புடன் மயான ருத்ரனாம்.... என்று ஆட ஆரம்பிக்க சிபாரிசு செய்ய வேண்டியவர், என் னய்யா.... இது பாம்பைப் புடிச்சுக் கூடையில் போடச் சொல்லுய்யா. குழந்தை கள் பார்த்தா பயந்துக்கப் போவுது. இதென்ன புலித் தோலைக் கட்டியிருக் காரு? புலித்தோல் மாதிரிப் பட்டைக் கட்டிக்கச் சொல்லு என்கிறார். சிவ னுக்குப் போதுமடா உலக வாழ்க்கை என்று தோன்றி விடுகிறது.
    மனித எந்திரத்தில் மளிகைக் கடையில் வேலை பார்ப்பவருக்கு பர்மாவுக்கு ஓடிப்போய் காசுக் கடை வைத்து பெரும் பணம் சம்பாதித்து ஊர் திரும்பி செல்வாக்காக வாழ வேண்டுமென்கிற ஆசை திடீரென்று தோன்றி விடுகிறது. கடைக்காசை எடுத்துக் கொண்டு துணிச்சலாகக் கிளம்பி விடுகிறார். நடு வழியில் பயம் பிடித்துக் கொள்ள ஊர் திரும்பி விடுகிறார். முதலாளி வீட்டிற்குப் போய்க் கடைச்சாவியை ஒப்படைத்து எடுத்த பணத்திற்குப் பற்று சொன்னவுடன் தான் நிம்மதிப் பெருமூச்சு வருகிறது அவருக்கு.
    துன்பக் கேணி என்று ஒரு நெடுங்கதை. அற்பத் தொகையைக் கடன் வாங்கிய தாழ்த்தப்பட்ட கூலி ஒருவன் எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. அவனும் அவன் மனைவியும் தேயிலைத் தோட்டத்தில் போய்க் கொத்தடிமைகள் போல் வேலை செய்கிறார்கள். அவன் மனைவிக்குப் பறங் கிப் புண் வந்து விடுகிறது. ஆளே உருமாறிப் போய் ஊருக்குத் திரும்பும் அவன் ஞாபகம் வைத்துக்கொண்டு முதலாளியிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க எத்தனிக்கையில் அவர் பெருந்தன்மையாக விட்டுத் தள்ளு சவத்தை என்கிறார். இதை அவர் முன்னாமேயே சொல்லியிருந்தால் அவன் வாழ்க்கை  யில் அவ்வளவு துன்பப்பட நேர்ந்திருக்காது என்பதைக் கூட உணர்ந்து கொள்ள இயலாத பிரக்ஞை இன்மையில் தான் சமுதாயத்தின் மேல் மட்டத் தில் இருப்பவர்கள் இருக்சிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் கதை இது.
    ஒரு நாள் கழிந்தது கதையில் மளிகைக் கடைக்காரன் சொல்கிறான்; சாமி பழைய பாக்கியே இருக்கு. எனக்குக் குடுத்துக்கட்டாது. நான் பிழைக்க வந்தவன் என்று. அதற்குக் கதையின் நாயகர் சொல்கிறார் மற்றவர்கள் என்ன சாகவா வருகிறார்கள்? என்று.
    இந்தக் கதைகளைச் சற்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது புதுமைப்பித்தன் வறுமையை ஆராதிப்பது பளிச்சென்று தெரிகிறது. வறுமை யில் உழலுபவர்கள் அதை மீறி வெளியில் வருபவர்களாக இல்லை. வறுமை யிலேயே சுகம் காணுபவர்களாக இருக்கிறார்கள். வறுமையையோ சமூ கத்தின் சீர்கேடுகளையோ இறை நம்பிக்கையையோ பழக்க வழக்கங்க ளையோ எதிர்த்து நின்று குரல் கொடுப்பவர்களாக கதை மாந்தர்கள் உலா வருவதில்லை. இவற்றினூடே இருந்து கொண்டு இவர்களிடம் இவைகளிடம் காணப் படும் முரண்பாடுகளை அங்கத நோக்கில் விவரிக்கும் தன்மையே இவர் படைப்புகளில் காணப்படுகின்றது. இதற்காகத் தானோ என்னவோ இவர் வறுமையை விரும்பி மணந்து கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதனாலேயே புதுமைப்பித்தன் ஒரு புரட்சியாளர் என்று பரவலாக அறியப் படுவது பிழையென்றும் அவர் ஒரு கலகக்காரர் மட்டுமே என்றும் குறிப்பிடத் தோன்றுகிறது.
    சுதந்திரப் போராட்டத்தின் பின் வந்த தலைமுறைகளில் எழுந்த திராவிட இயக்க எழுச்சி ஓரளவு முற்போக்கு சிந்தனை எழுச்சி. இவற்றின் காரண கர்த்தர்களோ முன்னெடுத்துச் செல்பவர்களோ யாருமே புதுமைப் பித்தனைத் தத்தம் குழுக்களைச் சேர்ந்தவர் என்று காண்பிப்பதில் அவ்வளவாக முனைப்பு காட்டாததற்கு மேற் கூறியவைகளே காரணம் என்று தோன்றுகிறது.
    புதுமைப் பித்தனின் குறுகிய வாழ்க்கை மிகவும் துன்பகரமானது. முழு நேர எழுத்தாளராக இருந்த அவர் வறுமையுடனும் டி.பியுடனும் போராடினார். கல்கி போன்றவர்களின் எழுத்தைக் கடுமையாகச் சாடிய அவர் கல்கி, ராஜாஜி போன்றவர்களிடம் துவேஷம் கொண்டிருந்தார். கல்கி பற்றியும் ராஜாஜி பற்றியும் அவர் எழுதிய மூனாவருணாசலமே என்கிற பாடல் பல இடங்களில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. தம்முடைய தந்தையாரிடம் பிணக்கு. அதனால் அவர் பரம்பரைச் சொத்தை பாகம் செய்தபோது வளர்ந்த மனக்கசப்பு. அவர் கதை மாந்தர்களின் துன்பங்களுக்குச் சற்றும் குறைவில்லாதவை அவர் உண்மை வாழ்க்கையின் துன்பங்கள்.
    அவர் வாழ்வின் கடைசிநாட்கள் கல் நெஞ்சனையும் கரைய வைக்கும். தியாகராஜ பாகவதரின் கடைசிப் படமான ராஜமுக்திக்காக இப்படம் வெளிவரவில்லை. புனே சென்றவர் உடல் உபாதை காரணமாக அங்கிருந்து திரும்பி வந்து சில நாட்களில் மறைந்தார். மகாத்மா காந்தி கொலையுண்ட போது புனேயில் இருந்த அவர் பெனிஸிலின் ஊசி போட்டுக் கொண்ட தில் உடம்பு சற்று நேரானதாக எழுதுகிறார். அவர் சிதம்பர ரகுநாதனுக்கு எழுதிய கடிதங்களில் இந்த விவரங்களை நாம் அறிய முடிகிறது.
    புதுமைப்பித்தன் இறந்தவுடன், கண்ணாளா! எழுதி எழுதிக் கை வீங்கிற்றே! கடைசியில் உயிரையும் கொடுத்தாயே? என்று அவர் மனைவி கமலா கதறினாராம். கண்ணீரை வரவழைக்கும் புதுமைப்பித்தனின் முடிவைப் பார்க் கும் போது நமக்குமே அவர் எழுத்துக்கு உயிரை கொடுத்தார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
    உலகின் சில நியதிகளில் மிகவும் முக்கியமானது மாந்தர் அவரவர் தம் செய்தொழிலால் சமுதாய அந்தஸ்தை அடைவது என்பது. சிறப்பொக்கும் செய்தொழில் வேற்றுமையால் என்கிற திருவள்ளுவரின் வாக்கு எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் மதங்களிலும் இனங்களிலும் காணப்படுகின்ற பொதுப்படையான தன்மை. நமது நாட்டில் இதற்கு ஜாதி என்கிற மோசமான பரிமாணமும் உண்டு. இதில் முக்கியமான ஒரு விஷயம் உள உழைப்பு செய்கிறவர்கள் உடல் உழைப்பு செய்கிறவர்களை விட வாழ்க்கை வசதிகளிலும் ஊதியம் போன்றவைகளிலும் மேம்பட்ட வர்களாக இருக்கிறார்கள்.
    இதை மறுதலித்து ஜான் ரஸ்கின் எழுதிய ருவேடி கூhந டயளவ என்கிற புத்தகத்தால் கவரப்பட்டுத் தான் மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் சமுதாயக் கூடங்களை அமைத்தார். மகாத்மா காந்தி மற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களிலிருந்து இப்படித்தான் மாறுபடுகிறார். சுதந்திரப் போராட்டத்துடன் சமூகப் போராட்டத்தையும் வேறு யாரும் இணைத்துப் பார்க்க வில்லை. அறைகளில் நடந்து வந்த சுதந்திரப் போராட்டங்களை ஒரு சமூக இயக்கமாக மகாத்மாவால் மாற்ற முடிந்ததற்கு அவர் வேறு பல சமூக சீர்திருத்தங் களையும் முன்னெடுத்துச் சென்றது தான் காரணம். இதற்கு அடிநாதமாக விளங்கியது மனிதன் தனக்குத் தேவையான உபகரணங்களையும் உற்பத்திப் பொருட்களையும் தானே தயாரித்துக் கொள்ள வேண்டம் என்று அவர் விழைந் தது. இதைத்தான் அவர் உள உழைப்பாளிகளுக்கும் உடல் உழைப்பாளிகளுக் கும்இடையே நிலவிய பொருளாதார அந்தஸ்து ஏற்றத் தாழ்வுகளுக்கான தீர்வாகக் கருதினார். இது தான் உண்மையில் அவர் கண்ட ராமராஜ்யம்.
    முற்போக்காளர்களின் மாட்சிமையில் தொழிற்சங்கவாதியும் உடலால் உழைப்பவனும் முதன்மை பெறுகிறார்கள். இதுவும் விரும்பத்தக்க விளைவைத் தர வில்லை என்பதை நாம் கம்யூனிஸ நாடுகளின் வீழ்ச்சியால் உணர முடிகிறது.
    சுதந்திரத்திற்குப் பின் வந்த தலைமுறைக்கு மகாத்மா காந்தி தந்த பல நிவாரணங்கள் ஏற்புடையனவாய் இருந்தன. பொது வாழ்வில் ஒழுக்கம், தூய்மை, வெளிப்படைத் தன்மை, இவற்றுடன் இழி தொழில் என்று கருதப்படுகிற தொழில்களைச் செய்பவர்கள் ஏனையோர் போல் முன் னேற வேண்டும் என்கிற அவா இவை எல்லோரிடமும் இருந்தன.
    மகாத்மா காந்தி மீது அளவற்ற பக்திவைத்திருந்த கல்கி போன்றோர் தம் வழியில் இதைச் செய்ய முயன்றார்கள். மகாத்மா காந்தி ,பாரதி போன்றோர் மீது பக்தி வைத்திருந்த புதுமைப் பித்தன் என்கிற எரிமலையும் இதைத் தான் செய்தது.
    தமிழ் இலக்கியப் போக்குகளை அலசும் பலரும் கல்கி, புதுமைப் பித்தன் இவர்களின் இலக்கியங்களை வெவ்வேறு மாறுபட்ட போக்குகளாகத் தான் பார்க்கிறார்கள். இது குறித்த பல்வேறு சச்சரவுகளும் சண்டைகளும் இப் போதும் நடந்து வருகின்றன.
    சற்று கூர்ந்து நோக்கும் போது இரு போக்குகளும் வெவ்வேறானவை அல்ல என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ஜெயகாந்தன்


தமிழ் இலக்கிய உலகின் துருவ நட்சத்திரம்



    ‘’ என் பெண்டாட்டி ஒரு நாள் அந்தப் பழனியோட ஓடிப் போயிட்டா மகனே.’’
    ‘’யூமீன் யுவர் வொய்ப் அண்பரியாரி?’’
    ‘’ஆமாம் மகனே’’
    ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் ஹென்றிக்கும் அவன் தகப்பனாருக்கும் நடக்கும் உரையாடலாக வருபவை மேற்கூறிய வரிகள். இந்த நாவல் படித்த அனைவரும் மறக்க முடியாத வரிகள், ஷேக்ஸ்பியரின் யூ டூ  ப்ரூட்டஸ்? என்கிற வரிகள் அல்லது வேத வியாஸரின் அஸ்வத்தாமா ஹதக் குஞ்சரஹ போன்று மீண்டும் மீண்டும் நினைவில் கொண்டு ரசிக்கத் தக்க வரிகள்.
    ஆரம்ப நாட்களிலிருந்து மேற் கூறிய நாவல் வரை ஜெயகாந்தனின் புனையுலகில் வளர்சிதை  மாற்றத்தை சற்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது சில சுவாரஸ்யமான  கூறுகள் நமக்குக் கிடைக்கின்றன.
    சிறுகதைகளின் இலக்கணத்தை வரைந்தவர் என்றாலும் சிறுகதைகளை செய்திகளைத் தெரிவிக்கும் ஊடகமாக மட்டும் பயன்படுத்தினார் என்று கருத வேண்டியிருக்கிறது. எதிர் மறையாக ஒரு கருத்திலிருந்து தான் சொல்ல வந்ததை நிறுவும் ஒரு வித்தை அவர் இயல்பான தன்மையிலிருந்தே வெளிப்படுவதை நாம் உணர முடிகிறது.
    சட்டை கதையில் பூந்தோட்டச் சாமியார் வாழ்க்கையைத் துறந்தவர் பூந்தோட்டமும் கோயிலுமே கதி என்று கிடக்கிறார். ஊரில் ராணுவத்தில் சேர்ந்து சண்டையில் உயிரைப் பறி கொடுத்தவனின் தகப்பன் அது பற்றிப் பெருமிதத்துடன் பேசுவதை சாமியார் கேட்கிறார். தகப்பனாரே ராணுவத் திலிருந்து ஓய்வு பெற்றவர்- இதன் பின் கோயிலில் பிரசங்கிக்கும் பௌரா ணிகர் ஒருவர், உடம்பு என்பது ஆத்மனுக்குச் சட்டை என்கிற ரீதியில் விளக் கம் அளிப்பதை சாமியார் கேட்டுவிட்டு ஓடிப்போய் பட்டாளத்தில் சேர்ந்து விடுகிறார். குருக்கள் கேட்கும் போது எல்லாமே சட்டைதானுங்களே என்கிறார் சாமியார். ஜெயகாந்தனின் தத்துவ தரிசனத்தால் சாமியார் ராணுவ வீரனாகும் ரஸவாதம் நிகழ்ந்து விடுகிறது.
    இது போன்ற எவ்வளவோ உதாரணங்களைக் கூற முடியும். சீசர் என்கிற சிறுகதையில் சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள். என்கிற  பழமொழி உண்மையில் சீசரின் பௌருஷத்தையும் ஆண்மையையும் ஆளு மையையும் குறிப்பதை நிறுவுகிறார் மகாபாரதத்தில் துரியோதனன் எடுக் கவோ கோர்க்கவோ என்று சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருக்கும் தன் மனைவியையும் கர்ணனையும் கேட்டது போல் அமைத்த சம்பவம் போல் தான் இதுவும்.
    குரு பீடத்தில் குரு என்கிற வார்த்தைக்குத் தகுதியில்லான ஒருவனை குரு என்று வரித்து அவனுக்குப் பணிவிடைகள் புரிகிறான் சிஷ்யன். குரு அபத்தமாக உளறும் வார்த்தைகளைக் கூட வேதவாக்காக எடுத்துக் கொள் கிறான். சிஷ்யன் திடீரென்று ஒரு நாள் காணாமற்போக குரு மாறிய மனித னாய் சிஷ்யனைத் தேடி அழுகிறான். பன்முகப் பரிமாணங்களைக் காட்டு கின்ற சிறுகதை இது. குருபீடம் என்பது குருவை விட உன்னதமானது என்பது ஒன்று. குருவுக்கு முன்னரே சிஷ்யன் சித்தியடைகிறதைப் பூடகமாக உணர்த் துவது மற்றொன்று (பட்டினத்தார் பத்திரகிரியார் போல) குரு பீடத்திற்கு குரு வைத் தயார் செய்யும் சிஷ்யன் குருவுக்கும் மேலாக உயர்ந்து விடும் சாத்தியக் கூற்றை உணர்த்துவது இன்னொன்று.
    இதுபோல எவ்வளவோ சிறுகதைகளைக் கூறலாம் சுயதரிசனத்தில் காயத்ரி மந்திரத்துக்கு அர்த்தம் தெரியாக சாஸ்திரிகள் ஒருவர் வீட்டை விட்டு ஓடிப்போய் சுயதேடலில் ஈடுபட ஆரம்பிக்கிறார். தன் பிள்ளைகளுக்கு கடிதம் எழுதுகிறார் எங்கிருந்தோ. இவர் வழக்கமாக அமாவாசைத் தர்ப்பணத்துக்குப் போகும் வீட்டில் மாப்பிள்ளை வந்திருக்கிறார் ஊரிலிருந்து. தர்ப்பணம் பண்ணி முடித்து விட்டு தட்டைப் பார்த்தால் தட்சிணை குறைந்திருக்கிறது. என்ன ஸ்வாமி தட்சிணை கொறையறதேன்னேன். அவர் சொன்னார் மந்திர மும் கொறையறதேன்னுட்டு. அப்புறம் தான் தெரிஞ்சுது. அவர் காசீலே சமஸ் கிருத புரபஸராம். ஏதோ உபயோகமில்லாத பிரகிருதி என்று தாங்கள் நினைத் திருக்கும் தகப்பனார் இவ்வளவு சிந்தனா சக்தியுள்ளவரா என்று ஆச்சரியமாக இருக்கிறது பிள்ளைகளுக்கு.
    இது போன்ற சிந்தனா சக்தி வீர்யம் தர்க்கம் தீர்மானமான முடிவுகள், எழுதும் போது சமாதி நிலையிலிருக்கும் ஒரு மனிதனுக்கு மட்டுமே சாத்தியம். அதுவும் எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்? சுதந்திரப் போர் சுதந்திரத்தைப் பற்றிய சிந்தனை என்று ஒரு தலைமுறை. அதன் பின்னர் சுதந்திரத்தைப் பேணுவதும் சமூக விடுதலையும் நோக்கமாகக் கொண்டு ஒருதலைமுறை. இதன் நீட்சியாகத் தான் ஜெயகாந்தன் தமிழில் உதயமானார் என்று நினைக்கத் தோன்றுகிறது. இவருக்கு முந்தைய தலைமுறையின் ஒரு சாரார் சமூகக் கட்டுமானத்தை உடைக்க விரும்ப வில்லை. இன்னொரு சாரார் மரபு சம்பந்தமான அனைத்தையும் உடைக்க விரும்பிச் செயல்பட்டு வந்தனர்.
    இந்தக் கால கட்டம் மிகுந்த சோதனையான கால கட்டம் கிட்டத் தட்ட மணிக்கொடி பரிசோதனை முயற்சிகள் முடிந்து திராவிட இலக்கியம் கோலோச்சிக் கொண்டிருந்த காலம். தேசீயமும் தமிழ் தேசீயமும் ஒன்றுக் கொன்று முரண் என்று பன்னிப் பன்னி எல்லோரும் உரத்த குரலில் சொல்ல ஆரம்பித்த காலம்.
    இந்த சந்தர்ப்பத்தில் ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகள் ஆனந்த விகடனில் வெளியாக ஆரம்பித்தன. இவர் கையாண்ட உத்தி அனைத்துமே எல்லோருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலும் பிராமண வாசகர் வெகுஜனப் பத்திரிகைகளுக்கு இருந்த காலம். பிராமண வாசகர்கள் பெருவாரியாக இருந்த போது வாசகர் வட்டம் இதரர்களுக்கும் மெள்ள மெள்ள விரிவடைந்து கொண்டு வந்தது. ஜெயகாந்தன் எழுதுகின்ற நுணுக்கமான பிராமண பாஷையை நினைத்து பிராமணர்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள் என்றால், சாதாரண மாந்தர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்று நினைக்கும் படியாக அவர்கள் பேச்சு பழக்க வழக்கங்கள் சம்பிரதாயங்கள் அவற்றையும் அவர் நுட்பமாக எழுதியது ஏனையோரையும் அவர் பால் ஈர்த்தது.
    சந்நதம் வந்தது போல் எழுதினார் ஜெயகாந்தன். எல்லாவித முயற்சிகளையும் அவர் சிறுகதைகளில் செய்தார். தேவன் வருவாரில் இப்போது பிரபலமாக முழங்கும் மாஜிகல் ரியலிஸம்  நனவோடை உத்தி எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாகக் கையாண்டிருந்தார் நைவேத்யம் செய்கின்ற ஏழைக் கிழவியை விரட்டும் குருக்கள்  கோயிலில் மூல விக்ரகமாகிய கிருஷ்ணனின் கை இளைத்துப் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைகிறார். ஆடிக் களைத்த தர்ம பாலன் என்கிற பழம் பெரும் நடிகர் தியாகராஜ பாகவதர்? கடைசியில் ரிக்ஷாக்காரன் பராமரிப்பில் மரித்துப் போகிறார். அக்ரஹாரத்தில் பூனை, கோடுகளைத் தாண்டாத கோலங்கள், ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான உத்தி  கொண்டு எழுதப்பட்டது.இன்னது தான் என்று முடிவு கட்டும் போதே சடாரென்று புது உத்தி ஒன்றைப் புகுத்துகிற ஆற்றல் ஜெயகாந்தனுக்கு இருத்தது. இவருடைய நாவல்களும்  அவற்றுக்கு இவர் அளித்த முன்னுரைகளும் அவ்வப்போது  கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி வந்தன. இப்போது மிகவும் பிரபலமாக வழங்கி வரும் ஃப்யூஷன் இசையை ஆதரித்து  இவர் எழுதிய பாரீசுக்குப் போ பல விதமான சர்ச்சைகளைக் கிளப்பியது என்றால் ஆண் பெண் உறவை மிகவும் துல் லியமாக எடுத்துக் காட்டியது கோகிலா என்ன செய்துவிட்டாள்? பிரும்மோ பதேசத்தில் ஓதுவார் பையனுக்குப் பூணூல் அணிவித்து அவனை பிராமணன் ஆக்குவார் அந்நாவலின் நாயகர் சர்மா. அவர் தோழர் ராயர் கேட்கிறார். (ஓடிப் போன சர்மாவின் பெண்) மைத்ரேயிக்கும் இந்தப் பையனுக்கும் கல்யாணம் செய்து வைத்திருக்கலாமே? என்று. அதற்கு சர்மா பதில் சொல்கிறார். ஏய். இவன் என் பையன் ஸ்தானம். என் பெண்ணுக்கு இவனை எப்படிக் கல்யாணம் பண்றது? என்று.
    நாவல் என்கிற தலையணையின் கட்டுமானத்தை உடைத்து குறுநாவல் என்பதைப் பிரபலமாக்கியவர் ஜெயகாந்தன் .மொழி பெயர்ப்புக் கதைகளை நினைவுறுத்துவது போல் இவர் நடையிருந்த போதிலும் வலிவான தர்க்கமும் மிகை தவிர்த்த உணர்வுகளும் கனமான உள்ளடக்கமும் நடையின் சலிப்பை மறக்கடித்து விட்டன.
    இந்த சந்தர்ப்பத்தில் தான் அக்னி பிரவேசம் சிறுகதையை எழுதினார் ஜெயகாந்தன். கெட்டுப் போன பெண்ணை நீரூற்றி அவள் அம்மா தூய்மைப் படுத்துவதாகக் காட்டியிருந்தார் சநாதனிகள் மத்தியில் பலத்த சர்ச்சையை யும் எதிர்ப்பையும் இச்சிறுகதை கிளப்பியது. இந்தக் கோபத்தில்  தான் ஜெய காந்தன் இப்படி நடக்காமலிருந்தால் என்ன ஆகியிருக்கும்? என்று கற்பனை செய்ததில் விரிவடைந்தது சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் நாவல் ஜெயகாந்தனுக்கு அளவற்ற பெயரையும் புகழையும் சாகித்ய அகாடமி பரிசை யும் பெற்றுத் தந்தது.
    அக்னிபிரவேசம் தவறான காரணங்களுக்காக சிலரால் பாராட்டப்பட்டும் சிலரால் விமர்சிக்கப் பட்டும் வந்தது. கெட்டுப்போனதை சுத்தப்படுத்தியதை சநாதனிகள் எதிர்த்தார்கள் என்றால் பிராமணப் பெண் கெட்டுப் போனது என்கிற இந்த நிகழ்வை வேறு யாராவது கெட்டுப் போயிருந்தால் எப்படி சாதாரணமாகப் பார்த்திருக்கக் கூடுமோ அது போலவே இதையும் பார்த்திருக்க வேண்டும் என்று நவீன வாதிகள் கருதினார்கள். ஜெயகாந்தன் இந்த நிகழ்வுக்குத் தந்த முக்கியத்துவம் அவர்களை எரிச்சல்படுத்தியது.
    இதே போல ரிஷிமூலம் என்கிற நாவல் இன்றளவும் பலராலும் ஜீரணிக்க முடியாத நிகழ்வுகளைக் கொண்ட நாவல். யூடிபஸ் காம்பளக்ஸ் என்கிற மனோ வியாதியை நுணுக்கமாக விவரிக்கும் இந்நாவலை மிதவாதிகள் ஒப்புக் கொண்ட போதிலும் இந்த நுட்பமான விஷயத்தை இவ்வளவு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கத் தேவையில்லை என்று முணு முணுத் தார்கள். சிலர் ஒரு படி மேலே போய் பிள்ளையாருக்கே யூடிபஸ்காம்ப்ளக்ஸ் தானே? நம் மதத்தில் இல்லாததையா சொல்லி விட்டார்? என்றார்கள்.
    இந்த சந்தர்ப்பத்தில் எல்லாம் ஜெயகாந்தன் யாருக்கும் வேண்டாதவர் ஆகிவிட்டார்.
    சிறுவயதிலிருந்து பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் ஊறித்திளைத்து பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்கள் பால் பரிவுடன் கதைகளைப் படைத்த ஜெயகாந்தன் மனிதர்களின் பல்வேறு குணாதிசயங்களையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எவ்வாறு மனிதர்கள் வெவ்வேறு விதமான மனப்பான்மைகளுடன் செயல்படுகிறார்கள் என்பதையும் உய்த்து உணர லானார். ஒரு படைப்பாளி எழுதிக் கொண்டு வரும்போதே செய்யும் பயணத் தின் பரிணாம வளர்ச்சி இது. வயிற்றுப் பிழைப்புக்காக விலைமாது தொழிலில் ஈடுபடுகிறாள் என்று எழுதும் போதே ஊடே ஊடே பொருளாதாரக் காரணங் களுக்கு மட்டும் அவள் தொழிலில்  ஈடுபடவில்லை அதற்கும் மேலாக ஏதோ ஒரு காரணம் கண்டறிந்தது பொதுவுடைமையாளர்களால் ரசிக்கப்பட வில்லை.
    இது இப்படியென்றால் பல சமயங்களில் விலைமாதர் இருப்பிடங்களில் புனிதமான சம்பாஷணைகள் நடந்து கொண்டிருந்ததை நூதனமாக ஏற்று ரசித்த சநாதனிகள் புனிதமான விஷயங்கள் பேசுவதற்கு விலைமாதர் வீட் டிற்குப் போனால்தான் முடியும் என்று ஜெயகாந்தன் நம்புவது போல் அவர் கதைகளில் சுட்டியிருந்த தொனியை நிராகரித்தார்கள்.
    இது போன்ற சந்தேகத்திற்கெல்லாம் இடம் கொடுத்துக் கொண்டிருந்ததற்கு ஜெயகாந்தனின் பொதுவுடைமைக் கருத்துக்களையும் மீறி அவர் மனதில் விழுந்திருந்த மரபு சார்ந்த படிமானங்கள் தான் காரணம்.
    அக்னிபிரவேசம் அவர் சநாதனிகளுக்குத் தான் எழுதினார்; எழுதியிருக்க வேண்டும். கங்கை நீர் சகல பாவங்களையும் சுத்திகரிக்கும் என்று எப்போதும் உரத்து மற்றவர்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, அதை நீங்களே நம்பமாட்டேன் என்கிறீர்களே என்கிற ஆற்றாமை வெளிப்படுவதாகத் தான் தோன்றுகிறது ஜெயகாந்தனுக்கு - இதே காரணங் களுக்காகத் தான் திரு ஈ.வே.ரா. அவர்கள் திருச்சியில் ஆற்றிய உரைக்கு அவர் முன்னாலேயே மரபு சார்ந்த விஷயங்களுக்கு வக்காலத்து வாங்கினார் ஜெயகாந்தன். நாத்திகம் போன்ற பல விஷயங்களுக்கும் சநாதன மதத்தில் இடம் உண்டு. அவற்றை மரபு சார்ந்த விஷயங்களை உடைக்க முடியாது, கூடாது என்று திட்ட வட்ட மாக எடுத்துரைத்தார் ஜெயகாந்தன். பெரிய பெரிய படிப்பு படித்திருந்த சநாதனி கள் செய்யத் தயங்கிக் கொண்டிருந்த ஒரு துணிவு மிக்க செயலைச் செய்தது தமிழ் நாட்டில் ஜெயகாந்தனின் குற்றவுணர்வில்லாத படைப்புத் திறனும் ஆளுமையும்.
    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் இவர் கலியுகத்து மனிதர்களைப் பற்றி எழுதவில்லை. கிருத யுகத்து மனிதர்களைப் பற்றித்தான் எழுதினார். சாதாரண நாவல்களின் ஆசாபாசங்கள் இந்நாவலில் இடம் பெறவில்லை. விருப்பம் சார்ந்த செயல்களேயில்லாத நிலையில் புண்ணிய பாவங்கள் இவ் வுலகில் இல்லை. தன் எழுத்தின் நெடிய பயணத்தின் உச்சமாக ஜெயகாந்தன் எழுதிய இந்த நாவல் மனித சுய வெளிப்பாட்டின் உச்சமாக விளங்குகிறது. இதே போல் இவர் எழுதிய அதிகம் கவனிப்புப் பெறாத விழுதுகள் என்கிற குறு நாவலும் மனித மனத்தின் படைப்புத் திறனின் எல்லை என்று கூறவைக்கிறது.
    மரபு சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் உடைத்துப் போட்டார் தி. ஜானகிராமன் என்றால் மரபு சார்ந்த ஒழுக்க சிந்தனைக்கும் உண்மைகளுக்கும் மெய்யறிவிற்கும் வக்காலத்து வாங்கினார் ஜெயகாந்தன்.சநாதன விளிம்பில் நின்று கொண்டு தி. ஜானகிராமன் புதுமைக்குக் கொடி பிடித்தவர் என்றால் ஜெயகாந்தன் புரட்சியின் விளம்பில் நின்று கொண்டு மரபு சார்ந்த விஷயங்களுக்குக் குரல் கொடுத்தார்.
    புதுமை செய்கின்ற ஒவ்வொரு படைப்பாளியும் மரபு சார்ந்த விஷயங்களை அவ்வப்போது உள்வாங்கி அதில் தேவையான மாற்றங்களைச் செய்திருக் கிறார்கள். ராமானுஜரில் ஆரம்பித்து விவேகானந்தர் பாரதி எல்லோரும் இதைத் தான் செய்திருக்கிறார் கள் இது மட்டுமே காலத்தை வெல்லும் திறமை படைத்தது என்று தோன்றுகிறது.
    இப்படிப் பார்க்கும் போது ஜெயகாந்தனை நாம் தமிழ் இலக்கிய உலகின் துருவ நட்சத்திரம் என்று தான் சொல்லவேண்டும்.

இமயம்




    ஐந்தரை அடி உயரமே உள்ளவர். இந்த உயரக் குறைவை அவரைத் திரையில் கண்ட எவரும் உணரவில்லை. மாறாக ஒவ்வொரு படத்திலும் அவர் விஸ்வரூபம் எடுத்ததைத்தான் பார்த்திருக்கிறார்கள். கப்பலோட்டிய தமிழ னில்  யாருமே சிவாஜியைக் காணவில்லை. சிதம்பரம் பிள்ளையைத் தான் கண்டார்கள். கட்டபொம்மன் என்கிற குறுநில மன்னன் வெள்ளையரை எதிர்த்தவன் - விடுதலைச் சரித்திரத்தின் சின்னமாக உருவானது சிவாஜியால் தான். பாசமலரின் ராஜசேகரன், அன்றைய முதலாளிகளுக்கு ஆதர்சம். வியட்நாம் வீடு நாடகத்தைப் பார்த்த ஜெமினி வாசன், கதறிக் கதறி அழுதாராம். அவர் இளமையும், அன்னையும்  அவர் வாழ்க்கையில் முன்னுக்கு வரப்பட்ட சிரமங்களும் நாடகத்தின் ஊடே அவர் எண்ணத் திரையில் நிழலாடிக் கொண்டே இருந்திருக்கின்றன.
    நாடக உலகின் பிதாமகர் டி.கே. ஷண்முகம், ஔவையாராக நடித்துப் பெரும் புகழ் பெற்றவர்.கிழவியின் தோற்றம் வெண்டுமென்பதற்காக முன்னிரு பற்களைப் பிடுங்கிக் கொண்டவர். ஔவையாராய் கூன் போட்டுக் கூன் போட்டு கூன் அவரிடம் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அவர் ஒரு நாடகம் பார்த்த பொழுது ராமபிரானின் அன்னையாக நடித்த நடிகையின் உணர்ச்சி கரமான நடிப்பில் மனத்தைப் பறி கொடுத்திருக்கிறார். நாடகம் முடிந்த பின் 'யார் அந்த நடிகர்?' என்று கேட்டாராம். 'அவரைத் தெரியாதா? அவர் தான் வி.சி. கணேசன்' என்று சொன்னார்களாம். அவர் நம்முடைய நடிகர் திலகம், சிவாஜி கணேசன்.
    ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து வந்தவர், சிறுவயதிலிருந்தே நாடகத்தில் பல்வேறு முகங்களையும் துறைகளையும் அநுபவ வாயிலாகக் கண்டவர். மு. கருணாநிதி என்கிற காட்டாற்று வெள்ளம் வசனம் எழுதிய பராசக்தியின் கதாநாயகனாக அவர் ஆனது, விதி வசத்தால் என்று சொல்வதை விட, தமிழ் நாட்டின் அதிருஷ்டத்தால் என்று தான் சொல்ல வேண்டும். ‘’ தென்றலைத் தீண்டியதில்லை ; தீயைத் தாண்டியிருக்கிறேன். ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள், அம்பாள் எப்போதடா பேசினாள் அறிவு கெட்டவனே? ‘’  போன்ற நெருப்புப் பொறி களைப் பொத்தி  வைத்திருந்து கக்கியவர், சிவாஜி கணேசன். தமிழ்த் திரைப்பட உலகில் அன்றிலிருந்து ஒரு புது சகாப்தம் தொடங்கியது. குரலின் ஏற்ற இறக்கங்கள், உணர்ச்சியின் பாவத்தைப் பாதிக்காது இருக்க முடியும் என்று தமிழ் உலகிற்கு முதலில் மெய்ப்பித்தவர் சிவாஜி.
    ஆரம்பத்தில் மிகை தவிர்த்த உணர்ச்சி வெளிப்பாடு, அழுத்தமான வசனங்களின் உணர்வுத் ததும்பல்களை அடக்காமல் பார்த்துக் கொண்டது அவரின் சாமர்த்தியம் என்று தான் சொல்லவேண்டும்.
    அவருடைய நடிப்பின் பரிணாம வளர்ச்சியை மூன்று பிரிவாக நாம் பார்க்கலாம். முதலில் மிகை தவிர்த்த உணர்ச்சியுடன் கூடிய  மிகை வசனங்கள், நடுவில் சற்றே மிகை கூடிய வசனங்கள் குறைந்த உணர்ச்சிகர நடிப்பு, பின்னால் மிகையும், உச்சரிப்பில் ஏற்றத்தாழ்வும் கூடிய உரத்த நடிப்பு. இந்தப் பரிணாம வளர்ச்சியைத் தமிழ் மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வந்த போதிலும் ஒவ்வொரு கட்டத்திலும் அவரின் ஆளுமைத் திறனை உண்மையாக ரசித்துப் பாராட்டினார்கள்.
    இந்த நடிப்பு வளர்ச்சியில் நாம் சிவாஜியின் நடிப்பின் உச்சமாகப் பார்ப்பது நடுவில் வந்த காலகட்டத்தைத்தான். அப்போதுதான் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர், படிப்படியாக வளர்ச்சி பெற்று, தனக்கென்று ஓர் ஆளுமையையும் தனித்தன்மையையும் கொண்டு வலம் வரத் தொடங்கினார். கிட்டத்தட்ட ஒரு முரட்டுக் குதிரை போல் இருந்த இவரைஒரு வட்டம் போட்டு  அந்த வட்டத்தை மிகாமல் , வெளிவராமல் திறமையை வெளிப்படுத்திய இயக்குநர் ஒருவர் இருந்தார். அவர் தான் பீம்சிங். இவர் கதை சொல்லும் பாணியே தனி. கதாபாத்திரங்களைப் பழங்காலக் கலைப் பொருட்களாக உலா விடுவது இவரின் பிரத்யேக பாணி. இந்தியக் கலா சாரத்தின் மரபு சார்ந்த  படிமானங்கள் அழுத்தமாய்ப் படிந்திருந்த பீம்சிங், அதையொட்டியே திரைப்படங்கள் எடுத்தார். பாசமலர், பாகப்பிரிவினை, படித் தால் மட்டும் போதுமா, பார்த்தால் பசி தீரும் போன்ற அழுத்தமான திரைக் கதை களில் இயல்பாக ஒன்றிப் பொருந்தினார் சிவாஜி கணேசன்.
    ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான கதாபாத்திரம். எல்லாமே சிவாஜிக்கு வடிவமைக்கப்பட்டது மாதிரி. படிக்காத மேதையில் விசுவாசமான வேலைக்காரன், எஸ்.வி. ரங்காராவின் குணச்சித்திர மிகை தவிர்த்த நடிப்புக்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார் சிவாஜி கணேசன். அவரின் உணர்ச்சிப் பூர்வமான நடிப்பில் மிகை இழையைச் சற்றும் வெளிக் காட்டாத சாதுர்யமான திரைக்கதை அமைப்பின் சாமர்த்தியம் பீம்சிங்கிற்கு உரியது. இசை சேகரத்தின் அந்நாள் மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, தத்துவ தரிசனம் கண்ட பாடலாசிரியர் கண்ணதாசன் போன்றவர்கள் இந்தப் படங்களுக்கு மெருகு கூட்டி, திரைப்படங்களைக் காவிய அந்தஸ்துக்கு உயர்த்தினார்கள்.
    பாசமலரில் முரட்டுப் பாசம் காட்டும் அண்ணன் வேடம் சிவாஜிக்கு. அடர்த்தியான புருவங்கள், மெல்லிய மீசை, தங்கச் சங்கிலி கடிகாரம், சூட்டுடன் ராஜநடை நடந்த சிவாஜியின் நடிப்பில் மனத்தைப் பறிகொடுத்தது தமிழ்ச் சமூகம். ராஜா போல் வாழ்ந்த மனிதன், தங்கைக்காகச் சகலத்தையும் தியாகம் செய்துவிட்டுக் கடைசியில் பிச்சைக்காரன் போல் கண்களையும் இழந்து 'கை வீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கை வீசு' என்று அழும் போது பார்த்த மக்கள் அவ்வளவு பேரும் சேர்ந்து அழுதார்கள்.
    தூக்குத்தூக்கியிலிருந்தும் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியிலிருந்தும் சிவாஜி என்கிற குணச்சித்திர நடிகர் தனித்த ஆளுமையுடன் பரிணமித்தது பரிமளித்தது இப்படித்தான். கம்பீரமானவன், முரட்டுத் தனமாக அன்பு செலுத்துபவன், பாசத்துக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத ஆதர்ச மனிதன், தமிழ் மண்ணில் வலம் வந்தது இப்படித்தான். அவனுக்குத் தெரிந்த தெல்லாம் அன்பு செலுத்துவதும் அன்புக்காக ஏங்குவதும். இப்படி ஒரு காலம் கடந்த பரிசோதனைத் திரைப்பட ஃபார்முலாவை முதன் முதலில் வெற்றிகரமாகப் பரிசோதித்தவர் சிவாஜிகணேசன்.
    படித்தால் மட்டும் போதுமா, எதையும் வெளிப்படையாகச் செய்யும் ஓர் ஆளுமை நிறைந்த மனிதனுக்கும் எல்லாவற்றையும் ரகசியாகப் பூட்டி வைக்கும் மனிதனுக்கும் இடையில் நிகழும் போராட்டத்தைச் சித்திரிக்கும் படம் இது.
    பீம்சிங்கின் பட வரிசையை அடுத்து வந்த படங்கள் எல்லாமே சிவாஜியின் ஆளுமை சார்ந்த மிகை நடிப்பை வெளிக் கொணருவதிலேயே குறியாய் இருந்தன.
    உடல் பருமன் சற்றிளைத்த சிவாஜி, முரட்டு நல்லவன் இமேஜிலிருந்து நல்லவன் இமேஜிற்கு வளர்ந்திருந்த சமயம். பந்துலுவின் கர்ணனையும்  பி.எஸ். வீரப்பாவின் ஆலய மணியையும் கூட இதில் சேர்க்க முடியாது. கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் கை கொடுத்த தெய்வத்தை ஓரளவு சேர்க் கலாம். பின்னர் வந்த ஸ்ரீதரின் படங்கள், எங்க மாமா, தங்கைக்காக போன்ற படங்கள் எல்லாமே  சிவாஜியின் நடிப்பை நம்பியல்லாது இமேஜை நம்பி உருவாக்கப்பட்ட படங்கள். இவற்றில் அன்றிருந்த சந்தை எதிர்ப் பார்ப்பிற்கு  ஏற்ப நடித்திருந்தார் சிவாஜி என்று சொல்லலாமே ஒழிய அந் தந்தக் கதாபாத் திரங்களில் அவர் முழு மனதோடு ஈடுபாட்டோடு நடித்திருந் தாரா என்பது கேள்விக்குறியே. தெய்வமகன். ஆஸ்காருக்குச் சென்றது. ஒரே நடிகர் மூன்று வெவ்வேறு பாத்திரங்களில்
    இதுதான் சிவாஜியின் தோல்வியின் ஆரம்பம் என்று சொல்லலாம். குணச்சித்திரம் மாறி ஆளுமையும் நடிப்பும் என்று ஆகிக் கடைசியில் ஆளுமை மட்டுமே கோலோச்சியது தான் சிவாஜியின் நடிப்பை விரும்பி பார்த்தவர்களை அபிமானத்தால் சகித்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளியது. இதற்கு ஏற்கெனவே கூறியிருந்தபடி சிவாஜியைச் சுற்றிப் பின்னப்பட்ட மாய இமேஜ் வலைதான் காரணம் என்று நாம் பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது.
    இந்த மிகை ஆளுமையின் நடுவிலும் அவ்வப்போது சில நட்சத்திரச் சிதறல்களை அள்ளி வீசாமல் இல்லை. ராமன் எத்தனை ராமனடியில் வீரசிவாஜியாக வசனம் பேசி விட்டுக் கடைசியில் வாளைக் கையில் ஏந்தி ஒரு நடை நடப்பார். சாம்ராஜ்யக் கனவைக் கண்களில் ஏந்திக் கனவில் மிதப்பது போன்ற நடை. உண்மையில் வீர சிவாஜி அதுபோல்தான் நடந்திருப் பார். வியட்நாம் வீட்டின் பிரஸ்டிஜ் பத்மநாபன் வேடத்திற்காக சிம்ஸன் நாராயணசாமி ஐயரைப் போய் சிவாஜி உன்னிப்பாகக் கவனித்தார் என்று சொல்கிறார்கள். அவர் காட்டிய முகபாவங்களும் நடையுடை பாவனைகளும் பேசிய வசனங்களும் ஓர் உண்மையான பிராமண கணவானைக் கண்களில் கொண்டு நிறுத்தியது. கௌரவத்தின் அநாசார வக்கீல் சத்தத்தையும் மீறி அவரின் கம்பீர நடிப்பு, நம் உள்ளத்தில் நிற்கிறது. திருநாவுக்கரசராகத் திருவருட்செல்வரில் நாம் கண்டது ஒரு முதிய தவயோகியின் அருள் கனிந்த முகத்தை. தங்கப் பதக்கத்தில் நேர்மையும் கம்பீரமும் கண்டிப்பும் மிக்க போலீஸ் அதிகாரியைக் கண்டோம். அதில் பதக்கம் வாங்கக் கடைசியில் அவர் நடக்கும் நடை,  உண்மையான போலீஸ் அதிகாரி யைக் கூடப் பெருமை கொள்ளச் செய்யும்.
    சிவாஜி மறைந்துவிட்டார். குழந்தை போன்றவர். உண்மையான தேசியவாதி.
    படிப்பு அதிகமில்லாத, உருவ லட்சணங்களும் சுமாராக உள்ள ஒரு மனிதர். தம் நடிப்புத் திறமையை மட்டும் வைத்து நம்மையெல்லாம் நாற்பது ஆண்டு களுக்குக் கட்டிப் போட்டிருந்தார்.
    நாடகக் கலை மிகுதியும் வளராத தமிழ்ச் சூழலில், சினிமா,  நாடகத்தைக் கபளீகரம் செய்திருந்த நிலையில், ஓர் உண்மையான நாடகக் கலைஞன், ஒப் பாரும்  மிக்காரும் இல்லாமல் கோலோச்சியது ஆச்சர்யம் தான்.
    அவரை அபிமானிகள் இமயம் என்கிறார்கள். என்ன தவறு?

சுஜாதாவின் பன்முகம்

       


                 
சுஜாதா முதன் முதலில் வெளிச்சத்துக்கு வந்தது நைலான் கயிறு தொடர்கதையின் மூலமாகத்தான். அது வரையிலும் துப்பறியும் கதைப் பக்கம் அவ்வளவாக யாரும் சென்றதில்லை. தமிழ் வாணன் நிறைய சங்கர்லால் கதைகளை எழுதியிருக்கிறார். பி.டி.சாமி எழுதுவார். தமிழ்வாணன், பி.டி.சாமி போன்றவர்களின் கதைகளில் துப்பறியும் கதை என்று சொல்லிக் கொண் டாலும் துப்பறியும் கூறுகள் கம்மி தான்.
    இப்படிப்பட்ட கால கட்டத்தில் சுஜாதா ஒரு புது வரவாக தமிழ் தொடர் உலகத்தில் அடியெடுத்து வைத்தார். இவரின் அனிதா இளம் மனைவியில் தான் முதன் முதலில் கணேஷ் என்கிற வழக்கறிஞர் கதாபாத்திரம் அறிமுக மானது பின்னர் வந்த ப்ரியாவில் தான் முதல் முதலில் வசந்த் அறிமுக மானார்.
    சொற் சிக்கனம், என்றாலும் கருத்துருவை முழுமையாகக் கண்முன் கொண்டு நிறுத்தும் சாமர்த்தியம், மெலிதான அங்கத நகைச்சவை, அடுத்து என்ன நடக்கும் என்கிற ஆவலைத் தூண்டு விதத்தில் கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு இவை சுஜாதாவின் தனிச்சிறப்பு.
    இளமை ததும்பும் விவரணைகள், காலப் போக்கை அனுசரித்த நோக்கு, மிளிரும் படிப்பின் வீச்சு- இவற்றால் இளைஞர்களை அவர் ஈர்த்த்தில் ஆச் சரியமில்லை.குறிப்பாக சிறுகதைகளின் வடிவமைப்பை இவர் துல்லியமாக கையாண்ட முறையில் தனக்கெனத் தனியாக ஒரு வாசகர் வட்டத்தை மிகவும் எளிதாக இவரால் உருவாக்க முடிந்தது. இவர் கையாளும் மொழி மிக வும் வசீகரமானது. இதைப் பற்றி இவரைக் கேட்டபோது, நான் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் எழுதுகிறேன் என்று கூறியதாகப் பிரபலமாகப் பேசிக் கொண்டார்கள்.
    ஒரு சந்தர்ப்பத்தில் சுஜாதா தொடர் இல்லாமல் வெகுஜன சஞ்சிகை விற்காது என்கிற நிலை வந்தது. இவரே நகைச்சுவையாக நான் வண்ணான் கணக்கைக் கொடுத்தால் கூட அதைப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்றார் அதை மெய்ப்பிக்கும் விதமாகவோ என்னவோ சாவி தன் பத்திரிக் கையில் சுஜாதாவின் வண்ணான் கணக்கை அவரின் கையெழுத்திலேயே வெளியிட்டார்.
    ஒரு பக்கம் துப்பறியும் தொடர்கள், கணையாழியின் கடைசிப் பக்கக் கட்டுரைகள், கல்கியில் விஞ்ஞானச் சிறுகதைகள், குருப்ரஸாதின் கடைசி தினம் போன்ற வித்யாசமான சமுகக் குறுநாவல்கள் என்று பரந்துபட்ட தளத்தில் இயங்கிய இவரைக் கண்டு மூக்கில் விரல் வைக்காதவர்கள் இல்லை. நகைச்சுவைக் கட்டுரைகள், மரபுக் கவிதைகள் போன்றவற்றையும் விட்டு வைக்கவில்லை இவர். ஒரு எழுத்தாளனுக்கு இவ்வளவும் சாத்தியமா என்கிற பிரமிப்பு ஏற்படுகிறது. நிறையப் படிக்கிற பழக்கம், படித்ததை கிரகித்து அப்படியே நினைவில் பதிந்து கொள்ளும் திறன், எதையும் தள்ளாமல் படிக்கின்ற ஒரு திறந்த போக்கு இவரிடம் இருந்ததால் மட்டுமே இவ்வளவு பரந்து  பட்ட வீச்சு இவருக்குச் சாத்தியமாயிற்று என்று தோன்றுகிறது.
    சிறுகதையில் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் 'எல்டொராடோ' என்கிற கதையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எதையோ தேடி வீட்டை விட்டு ஓடிப் போகும் மகன் தகப்பன் சாகுந் தருவாயில் வருகிறான் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள நுட்பமான உறவைத் துல்லியமாகப் பதிவு செய்த கதை இது.
    கட்டுரை என்றால் ஏராளமான உதாரணங்கள் காட்ட முடியும். இவர் தந்தையார் இறந்த போது அவருக்கு அஞ்சலியாக இவர் எழுதிய கட்டுரை யைக் குறிப்பிடலாம். அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு உணர்ச்சி வசப் பட்டு நிறைய பேர் இவருக்குக் கடிதம் எழுதினார்களாம்.
    இதே போல் இவர் நகைச்சுவையாக எழுதிய சிறுவர்கள் பற்றிய, `சாப்டவுடன் ப்ளேட்டெடுப்பாய்’ என்கிற கவிதையும் 'வேண்டாம்' என்று முடி யும் ஆசிரியப்பாவும் இன்றவும் ரசிக்கப் படுகின்றன.
    படிப்பாளி என்றாலும் உலக அனுபவங்களில் தோயாத எழுத்து என்று ஆரம்பித்த இவர் வயது ஆக ஆகக் 'கற்றதும் பெற்றதும்' என்கிற அனுபவப் பதிவுகளை எழுதும் அளவிற்கு உயர்ந்த ரஸவாதம் மிகவும் சுவாரஸ்மானது. இவருக்கு வயது ஏற ஏற கூடிக் கொண்டே போன படிப்புடன் அனுபவப் பதிவு களும் சேர்ந்து கொண்டது இவரை ஒரு தரமான எழுத்தாளராக உருவாக்கியது. மனிதர்களைப் பற்றி இவர் எழுதிய ஸ்ரீரங்கத்து தேவதைகள் என்கிற சொற் சித்திரம் ஒன்றே இதற்குச் சாட்சி எனலாம். மனித மனங்களின் குணாதிசயப் போக்குகளையும் அவற்றின் முரண்பாடுகளையும் மிகவும் துல்லியமாக இக்கட்டுரைகளில் பதிவு செய்திருந்தார் இவர். ஒன்றிரண்டு கட்டுரைகளை நீக்கி விட்டுப் பார்த்தால் உலக வரிசைகளுள் சேர்க்க வேண்டியது இத் தொகுதி.
    விஞ்ஞானத் தொடரான 'என் இனிய இயந்திரா' பெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் வரவேற்பைத் தொடர்ந்து 'மீண்டும் ஜீனோ' எழுதினார் சுஜாதா. இந்த நாவல்களில் இடம் பெற்ற ஜீனோ என்கிற இயந்திர நாய் கதா பாத்திரத்துக்காகப் பைத்தியம் போல் மீண்டும் மீண்டும் இந்நாவல்களைப் படித்தார்கள் வாசகர்கள். இதை இப்படிப் பார்க்கும் போது கல்கியின் பொன் னியின் செல்வனுடன் தான் ஒப்பிடத் தோன்றுகிறது. இதே சந்தர்ப்பத்தில் 'பதவிக்காக' என்று ஒரு நாவல் எழுதினார். அந்நாவலில் இவர் குறிப்பிட்டிருந்த அனைத்து அரசியல் நிகழ்வுகளும் பின்னாளில் அப்படியே அரங்கேறின.
    இவற்றினெல்லாவற்றினூடே இவர் கடவுள் குறித்த சிந்தனைகள், நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ,உபநிடதங்கள், இவை குறித்த விஷயங்களை மிகவும் எளிமையாக எடுத்துரைத்தது வாசகர்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றது.
    தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை வெகுஜனப் பத்திரிக்கைகளில் எழுதி பிரபலமாகியவர்கள் என்கிற கசப்பான உண்மைக்கு சுஜாதாவே சான்று. வெகுஜன பத்திரிக்கைகள் மட்டுமல்லாது சிறு பத்திரிக்கைகளிலும் முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுதிக் குவித்த இவருக்கு சாகித்ய அகாடெமி போன்ற அமைப்புகள் எந்த விருதும் வழங்கவில்லை. அறுபத்து மூவர் உற்சவத்தில் நீர் மோர் போன்று வழங்கப்படுகிற கலை மாமணி விருது மட்டும் தான் இவருக்குக் கிடைத்த விருது.
    இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாது எழுதிக் குவித்த இவர் எப்படிப்பட்டவர்? கஷ்கத்தில் வியர்த்திருந்தது என்று கொஞ்சம் ஆபாசம்; துப்பறியும் நாவல்களில் விரவித் தெளித்த கொலைகள்; வைணவம் தவிர்த்த இதர மத நம்பிக்கைகளில் லோசான காழ்ப்பு; வழிவழியாக இருந்து வரும் அனுபவ நம்பிக்கைகள் மற்றும் பழக்க வழக்கங்களின் மீது எள்ளல்; விம ர்சனத்தை நிராகரிக்கும் போக்கு; கொஞ்சம் சுய தம்பட்டம்; (அப்துல் கலாம் க்ளாஸ்மேட்; தேர்தல் மின்னணுப் பதிவு எந்திரத்தை நான் தான் வடிவமைத் தேன் இத்யாதி) இவையெல்லாம் இருந்தும் இவையெல்லாவற்றை யும் புரிந்து கொண்டும் சகித்துக் கொண்டும் தமிழ் வாசகர்கள் இவரைத் தலை மேல் வைத் துக் கொண்டு கொண்டாடினார்கள்.
    ஏராளமாக எழுதியதும் படித்ததை வினியோகித்ததும் தான் இவர் வெற்றிக்கு காரணம் என்று தோன்றுகிறது.
    முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுதிக் குவித்த இயந்திரம் ஓய்ந்து விட்டது. இது போல் எழுத இனி எவர் வரப் போகிறார் என்கிற ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது தமிழ் வாசகர் வட்டம்.

தி.ஜா.வின் எழுத்துலகம்





    ஜானகிராமனின் மாஸ்டர் பீஸ் என்று மோகமுள் அழைக்கப்படுகிறது. தரத்தில் மட்டுமல்லாது கனத்திலும் பெரிய நாவல். மோகமுள் படித்தவர்கள் கும்பகோணம் போனால் துக்காம்பாளையம் தெரு எது என்று கேட்காமல் திரும்ப மாட்டார்கள். அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்திய நாவல்.
    ரேழியுள்ள வீடுகளும் நடு முற்றங்களும் காவேரியும் வெற்றிலை சீவலும் செவலை மாடும் கர்நாடக சங்கீதமும் வேறெங்காவது இவ்வளவு பிராதான்யம் பெற்றிருக்குமா சந்தேகமே. அதுவும் அந்தப் பெண்கள்! 'அன்பே ஆரமுதே' டொக்கி எதிராஜு படம் போடுகிறது போல் கோலம் போடுகிறாள். 'அம்மா வந்தாளின்' அலங்காரத்துக்கு வரும் கனவுகள் நிஜ வாழ்க்கை வண்ணங்களையும் சித்திரங்களையும் தோற்கடிக்கின்றன. 'மோக முள்ளின்' யமுனாவோ கேட்கவே வேண்டாம். டொக்கியின் வார்த்தையில், ‘ மல்லிகைப் பூவால் ஜோடிச்ச கை தான் அது; எலும்பாலும் சதையாலும் வனையப் பட்டதன்று ‘செம்பருத்தி நாயகியை நினைக்கும் போதெல்லாம் செம்பருத்திப் பூ தான் நினைவுக்கு வருகிறது. அவ்வளவு கவர்ச்சிகரமான எழுத்து.
    'ஜானகிராமனுக்குப் பெண்களையே தெரியாது;அறிந்ததில்லை' என்றார் அம்பை ஒரு முறை. மிகவும் வசீரமான வாதம்- ஜானகிராமனின் பெண்களைப் போலவே. கற்பனையும் மண்வாசனையும் கனவும் அழகும் சங்கீதமும் குழைத்து வனையப்பட்ட அவர்கள் தரையில் நடக்கிறவர்கள் தானா என்று சிலர் சந்தேகிப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஜானகிராமனையே 'அன்பே ஆரமுதே'யில் வரும் அனந்தசாமி போன்ற ஒரு நபராகத் தான் கற்பனை செய்ய முடிகிறது.
    அனந்தசாமிக்கு கல்யாணம் நிச்சயம் செய்கிறார்கள். விளக்கு மாதிரி வெளிச்சமாக இருக்கிறது பெண் - அனந்தசாமிக்குக் குற்றவுணர்ச்சி -  இவ்வளவு அழகான பெண்ணையா திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று. சாப்பிடுவதற்கு இலை போடுகிறார்கள்  இலையில் குட்டி உருவமாக விவேகானந்தர் மேலேயும் கீழேயும் நடக்கிறார் 'எங்கேடா வந்தே?' என்று கேட்டுக் கொண்டு. பிடுங்கல் தாங்காமல் கல்யாண வீட்டிலிருந்து அனந்த சாமி ஓடி விடுகிறார். இதே போன்ற ஒரு ஆச்சரியம், பிரமிப்பு, பயம், தாழ்மை யுணர்ச்சி போன்ற அனைத்தையும் ஜானகிராமனிடம் நாம் காண முடிகிறது. பெண் எப்போதும் விஸ்வரூபம் எடுக்கிறாள் ஆண் கடுகளவு சிறுத்து விடு கிறான். இதை அவர் புனைந்து செய்தார் என்பதைவிட அவரின் பொதுப் படையான தன்மை என்று கூறி விடலாம்.
    பின்னால் இதைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டார். 'மரப்பசு'  நாயகி அம்மணி கடைசி யில் ப்ரூஸ் என்கிற அமெரிக்கனிடம் தோற்றுப் போகிறாள். கோபாலி யையும் பட்டாபியையும் சக்கையாகப் பிழிந்து விடும் அம்மணி கடைசியில் இராணுவ வீரனுக்கு ஆட்பட்டு தன் மீதான கழிவிரக்கத்தில் குமுறுகிறாள். நள பாகத்தின் சாரங்கனும் இதே பாணியில் செல்வதாகத் தெரிகிறது.
    அவர் நளபாகம் எழுதின காலங்கள் எல்லாம் அவரின் கடைசி நாட்கள். கும்பகோணம் போகலாம் என்று வந்து விட்டு தங்க உத்தேசித்திருந்த நாட்கள். முழுமைக்கும் தங்காமல் டெல்லி திரும்பிய காலம். தஞ்சாவூர் என்கிற முள் அவரைக் குத்திக் கொண்டிருந்தது ஜீவ அவஸ்தையின் வாதை தாங்க முடி யாமல் அவர் எழுதிக் கொண்டிருந்ததையும் மீறி ஆயாசமும் அயர்ச்சியும் மிகுந்தது. ஜப்பானிய மொழியில் ஹரகிரி என்பார்கள். அவர் வாழ் நாள் பூரா வும் செய்து கொண்டிருந்த ஹரகிரி என்னும் தற்கொலை முடிவுக்கு வந்து கொண்டிருந்தது.
    பல முற்போக்குவாதிகளும் இலக்கிய முனைவர்களும் அவரை அறவே ஒதுக்கித் தள்ளினர்.
    'அம்மாவந்தாளின்' சிவசுக்கும் அலங்காரத்திற்கும் முறை தவறிப் பிறந்த குழந்தைகளுடன் சகோதரனாக இருக்க வேண்டிய கட்டாயம் வேத விற்பன் னனாகிய கதாநாயகனுக்கு- ஒழிந்த வேளைகளில் தெருப் பையன்களுடன் கபடி விளையாடும் கதாநாயகன் மேல் விதவைப் பெண்ணிற்குக் காதல் மலர்ந்து விடுகிறது. அம்மா வந்தாள் முப்பதுகளில் எழுதப்பட்ட நாவல். பெரிய பெரிய சமூக சீர்திருத்தவாதிகள் எழுத யோசித்துக் கொண்டு தயங்கிக் கொண்டு இருந்த காலத்தில் சர்வ சாதாரணமாக ஜானகிராமன் 'அம்மா வந் தாளில்' பட்டவர்த்தனமாகப் போட்டுடைத்தார் (ஊர்ப் பிரஷ்டத்தை ஏற்க நேரிட்ட போதும் கூட)
    நளபாகத்தின் வத்ஸன் கூடைக்காரியிடம் சல்லாபம் செய்கிறார். சாமி பிரியம் என்று அவள்  வீட்டினுள்ளேயே வந்து விடுகிறாள். சாமி பிரியம் கடைசியில் சிஃபிலிஸில் கொண்டு போய் விட்டு விடுகிறது. நாயகன் சாரங்கன் தான் சமைக்கும் வீட்டுக்காரரின் மனைவியை நெருங்குவது யோகத்துக்குச் சமமாகச் சித்தரிக்கப்படுகிறது. அந்நாவலில் வரும் பகுத்தறிவுவாதி கூட சாரங்கனின் தெய்வீக ஆற்றலை வியந்து அவனிடம் பெரு மதிப்பு வைத்திருக்கிறான்.
     'அன்பே ஆரமுதேயின்' அனந்தசாமி கடைசியில் தான் திருமணம் செய்ய மறுத்த ருக்மணியின் வீட்டின் ஒரு போர்ஷனில் வாழ மனம் ஒப்புகிறார். அதில்  வரும் டொக்கி என்கிற பெண்ணின் வாழ்வைக் கெடுத்த ஹீரோ அருண் குமார் அனந்தசாமியின் வார்த்தைகளில் உத்தமமான சிஷ்யன் - அனந்தசாமி தன் சிநேகிதர் பாகவதரிடம் கொல்கிறார்; 'பாகவதர்வாள்! உம்ம சிஷ்யனைப் போல ஒரு உத்தமான சிஷ்யனைப் பார்த்ததில்லை.'
    ஜானகிராமன் எப்படிப்பட்டவர்? அவரே ஒரு முறை சொன்னது போல், ச்ருதி சுத்தமான சங்கீதத்தைக் கேட்டால் கண்களில் நீர் நிறைந்து விடுகிறது என்று. அதுபோன்ற நெட்டுயிர்ப்பில் தான் எழுதினாரா? பழைய நிலப்பிரபுத்துவ அமைப்பின் ஊடே வளர்ந்து அதில் இருக்கும் குறைபாடுகளைக் கண்ணுற்று அதிலிருந்து பெருகிய தொகை தான் ஜானகி ராமனா? அவசியம் பாற்பட்ட சநாதனக் கருத்துக்களை வைத்துக் கொண்டு பிறவற்றைக் தூக்கி எறிந்த வரம்பு மீறாத புரட்சியாளரா? உணர்ச்சிப் பெருக்கில் கரைகளை உடைத்துக் கொண்டு பாய முயன்ற காட்டாற்று வெள்ளமா? ஜானகிராமன் எப்படிப் பட்டவர் என்பதை விளக்குவது கொஞ்சம் கடினம் தான்.
    அவர் நாவல்களில் அவரையே அறியாமல் பதிந்து கிடக்கும் வீடு மாற்றுவதை நாம் அவரின் ஒழுங்கு முறைகளை மாற்ற விழைகிற. அவாவின் குறியீடாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. பழைய வீடுகளை வெள்ளையடிப்பது, வீடு மாற்றுவது, கட்டாயம் அவர் நாவல்களில் இடம் பெறும் நிகழ்வுகள். மரபு சார்ந்த விஷயங்களை அப்படியே ஒதுக்கிவிட்டு திருத்திய புது வாழ்க்கையை அவர் கனவில் வாழ முயன்றது பல இடங்களில் புலப்படுகிறது. மரபு சார்ந்த மனிதர்கள் பல இடங்களில் வில்லன்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். யமுனாவின் அண்ணன், 'மோக முள்ளில்' யமுனாவிற்குச் சேர வேண்டிய நெல்லை அளக்க மறுக்கிறார். கண்டு சாஸ்திரி 'மரப்பசுவில்' நாட்டுப் பெண்ணுக்கு மொட்டையடிக்கும் சடங்கைச் செய்கிறார். அலங்காரத்தம்மா சாஸ்த்ரோக்தமான  சநாதனியின் மனைவி  சிவசுவிடம் சோரம் போகிறாள். சநாதனிகள் இப்படியென்றால் சாதாரணக் கதை மாந்தர்கள் தெய்வ நிலைக்கு உயர்ந்து விடுகிறார்கள் 'மரப்பசுவின்' அம்மணி கடைசியில் மரகதம் என்கிற வேலைக்காரியுடன் தங்க நிச்சயிக்கிறாள். சாம்பல் பூத்த நெருப்பு மாதிரிக் கனன்று பாடும் கோபாலி, தலையால் இட்டதைக் காலால் செய்யும் பட்டாபி, குதிரை சக்தி கொண்ட இராணுவ வீரன் ப்ரூஸ் மற்றும் ஏனையோரிடம் ஸ்வாரஸ்யம் இழக்கும் அம்மணி கடைசியில் வேலைக்காரி சகிதம் மிச்ச வாழ்வை ஓட்ட முடிவு செய்து விடுகிறாள்.
    'பரதேசி வந்தான்' என்கிற சிறுகதையில் சாப்பிட உட்காரும் பரதேசியை எழுப்பு விடுகிறார் வீட்டுக்காரர். பரதேசி பத்தாம் நாள் வருகிறேன் என்று சூளுரைத்து விட்டுப் போகிறான். சொன்னபடி பத்தாம் நாள் வீட்டுக்காரர் பிள்ளையின் சாவுக்கு வந்து விட்டு போகிறான். சநாதனிகள் ,லஞ்சம் வாங்குகிறவர்கள், ஊரை அடித்து உலையில் போடுகிறவர்கள், பெண்களை மொட்டை யடிப்பவர்கள், கல்யாண வீட்டில் போய்  வயிற்றெரிச்சலில் பாயசத் தில் எலி விழுந்துவிட்டது என்று கவிழ்க்கிறவர்கள். சாதாரணர்கள் அசாதாரண நிலைக்கு உயர சநாதனிகள் இழிவாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். புதிதாக மதம் மாறியவர்கள் ஏற்கெனவே அம்மதத்தில் இருப்பவர்களை விட வெறியர்களாக இருப்பது போல் தான் இதுவும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
    ஆரம்பத்தில் இருந்து சகோதரன் சகோதரி என்று பாதி கதையை வளர்த்து விட்டுப் பின்னர் தடலடியாக வேறு உறவு என்று மாற்றுகிற அதிர்ச்சிகர ரஸ வாதம் ஜானகிராமனுக்குக் கை வந்த கலை. அதை அவர் புனைந்து செய்யவில்லை. பல வித முடிவுகளுக்கு அவர் வரக் காரணமாயிருந்த அதே மாந்தர்களும் ஊரும் மேற்கூறிய அதிர்ச்சி சம்பவங்களுக்கு முகாந்திரம்.
    தஞ்சாவூர் கும்பகோணம் என்கிற முள் அவரை எப்போதும் குத்திக் கொண்டிருந்தது. அதன் மாந்தர்களும் நிதர்சனங்களும் தான் சாஸ்வதம் என்கிற ஆற்றாமை. அந்த `ஆற்றாமை தான் அவரின் நாவல்கள். அந்த நாவல்களின் வளர்ச்சியினூடே அவர் பார்த்து வியந்த கிராமங்கள். அவரின் நெட்டுயிர்ப்பில் வளர்ந்த ராம ராஜ்யமாக இல்லாது வாழ்க்கையின் இருண்மைப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய நிதர்சன உலகை அவ்வப்போது உள்வாங்கிஅசுர வளர்ச்யிடைந்த விஷ விருட்சத்தைப் பார்த்த ஏமாற்றம். இது தான் ஜானகி ராமன். அவர் நிராசையாகத் தான் இறந்தார். இறந்திருக்க வேண்டும் புரட்சியில் பங்கு கொள்கிற பலர் புரட்சியின் பிறகு ஏற்படுகிற மாற்றத்தில் தெருவில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடும் என்று நம்பிக் கடைசியில் புரட்சிக்கு முன்பிருந்ததை விட அலங்கோலமும் அராஜகமும் அவ மரியாதையும் ஆட்சி செய்யும்  அவலத்தைப் பார்த்து வெதும்புவது போல் தான் ஆயிற்று கடைசியில் ஜானகிராமனின் நிலைமை.
    வி.ஸ. காண்டேகர் இவ்வளவு அவதியுறவில்லை.வால்மீகி வேடனைப் பார்த்து இட்ட சாபத்தை மட்டும் வைத்துக் கொண்டு 'கிரௌஞ்ச வதம்' என்கிற நாவலை எழுதினார் சடங்குகளில் நம்பிக்கையுள்ள சநாதனியும் அவற்றைச் சாரும் புரட்சியாளனும் கடைசியில் ஒரே நோக்கில் தான் செயல்படுகிறார்கள் என்கிற அத்வைத சித்தாந்தத்தை அவர் வெறும் ஒரே ஒரு சுலோகத்தை வைத்துக் கொண்டு நிறுவியிருந்தார். மனித குலம் தோன்றிய  நாள் முதலாக இந்த சம்வாதம் நிகழ்ந்து கொண்டிருப்பதாய்த் தான் தோன்றுகிறது. யுலிஸிஸ் பல்வேறு கண்டங்களை தரிசித்து புதுப்புது அநுபவங்களைப் பெற விரும்புகிறான் என்றால் அவன் பிள்ளை டெலமாகஸ் தம் மக்களை முன்னேற்றுவதே தலையாய கடமை என்று நினைக்கிறான். வாழ இரண்டும் தான் வேண்டியிருக்கின்றன. ஒன்று நிர்மாணம் என்றால் மற்றொன்று விடுதலை.
    இந்திய சுதந்திர விடுதலையை ஒட்டி வந்த தலைமுறைக்கு சமூக விடுதலை மிக முக்கியமாகப் பட்டிருக்கிறது. ஜானகிராமன் போன்ற ஒன்றிரண்டு பேர் அத்துடன் மன விடுதலையையும் சேர்த்துக் கொண்டிருக் கிறார்கள்.
    சநாதனமா நூதனமா என்றால் ஜானகிராமனின்  ஓட்டு நூதனத்துக்குத்தான். இவையிரண்டிற்கும் துலாக்கோல் போன்று எழுதியவர்கள் உண்டு. ஜானகிராமன் அதுபோன்ற நடுவு நிலை எடுக்க வில்லை நல்ல வேளையாக. அவ்வாறு அவர் எடுத்திருந்தால் காவிரியும் சங்கீதமும் துக்காம் பாளையத் தெருவும் நெல் குதிரும் நடு முற்ற வீடும் சலசலக்கும் தென்னங் கீற்றுக்களும் மனவெளி மனிதர்களும் கனவும் கற்பனையும் மேன்மையும் பெண்மையும் குழைத்து வனையப் பட்ட பெண்களும் நமக்குக் கிடைத்திருப்பார்களா என்பது சந்தேகமே.

புதன், 23 மே, 2012

மகத்தான எழுத்தாளர் கல்கி


                        
            பிற்கால சோழர்களில் ஆதித்த கரிகாலன் கொலையுண்டதும் சுந்தர சோழனுக்குப் பிறகு உத்தம சோழன் பட்டத்துக்கு வந்ததும் சரித்திர நிகழ்வுகள். ஆதித்த கரிகாலன் கொலையுண்டது பாண்டிநாட்டு சதிகாரர்களால் என்று கூறப்பட்ட போதிலும் அது இன்றுவரை துப்புத் துலங்காத மர்மமே. இந்த மர்ம வலைப் பின்னலில் நந்தினி என்று ஒரு கற்பனா பாத்திரம் - இந்த நந்தினியின் பிறப்பு என்கிற மர்மம். இந்த மர்ம முடிச்சைக் கொஞ்சங் கொஞ்சமாய் அவிழ்க்கும் சுந்தர சோழர், அநிருத்த பிரம்மராயர், செம்பியன் மாதேவி, மதுராந்தகன், கருத்திருமன் ஆழ்வார்க்கடியான் என்பன போன்ற எண்ணிறந்த கதாபாத்திரங்கள்.
           மொத்தம் ஐந்து பாகங்கள். ஒவ்வொரு பாகமும் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள் மீண்டும் மீண்டும் பிரசுரம் செய்தும் இன்றும் படிக்கப் படிக்க ஆவலைத் தூண்டும் மகத்தான காவியத்தைத் தமிழில் எழுதியவர் சுதந்திரப் போராட்டத்தினால் ஈர்க்கப்பட்டு அதில் குதிக்க வேண்டி இறுதிவரை முடிக்காத பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்ட கல்கி என்னும் மா மனிதர். ராஜாஜியிடம் அளவற்ற பக்தி வைத்திருந்தவர். கர்நாடகம் என்கிற பெயரில் கலை விமர்சனம் செய்தவர். அனல் பறக்கும் தலையங்கங்களுடன் இளைஞர்களை சுதந்திரப் போராட்டத்தில் வீறு கொண்டு கலந்து கொள்ளச் செய்தவர்.
    எண்ணற்ற கதாபாத்திரங்கள் - படிப்பவர்களே சற்றுக் குழம்புகிற நிலை. இவ்வளவு கதாபாத்திரங்களைக் கையாண்ட போதிலும் எந்த வீரநாராயணபுரத்தில் கதையை ஆரம்பித் தாரோ அதே ஏரியில் கதையை முடிக்கும் துல்லிய அறிவுத் திறன் கொண்டிருந்தவர் கல்கி.
    பாரதியார் கவிதை, கட்டுரை, கதை என்று எழுதிக் குவித்தார் என்றாலும் அவர் கவிதையில் பேர் வாங்கிய அளவிற்கு உரைநடையில் பேர் வாங்கவில்லை. பாரதியாரின் குணா திசயக் கூறுகள் பல சமயங்களில் கவிஞன் என்கிற பட்டத்துக்கு பொருந்துகிறாற் போல் இருந்த தும் ஒரு காரணம்.
    முதல் கார்ட்டூன் வரைந்தவர், முதல் தேதிய இலக்கியவாதி, முதல் தமிழ் தேசியவாதி, முதல் தமிழ்ப் புரட்சியாளர், முதல் பெண்ணுரிமை விடுதலையாளர், முதல் ஜாதீய விடுதலை யாளர் போன்ற பல முதல்களுக்குத் தமிiழுப் பொருத்தவரை  சொந்தக்காரராக பாரதி இருந்த போதிலும் அவரை எல்லோரும் கவிஞராகத்தான் கருதினார்கள். அவரும் அதைத் தான் விரும் பியிருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
    அவரது அந்திமக் காலத்தில் வ.ரா என்கிற பாரதியின் சிஷ்யர் கிருஷ்ணமூர்த்தி என்கிற இளைஞரை ராஜாஜியிடம் அறிமுகம் செய்து வைத்தார். கிருஷ்ணமூர்த்தி கதைக்கு முன்னுரை ஒன்றை எழுதி வாங்கினார். அந்த முன்னுரையில் விமர்சிப்பதாய் இருந்தவைகளை ஆட் சேபித்து நீக்கக் கோரினார். அந்த இளைஞர் தான் கல்கி என்னும் மகத்தான எழுத்தாளர்.
    வினாடி வினாப் போட்டிகளில் இன்றும் மாமல்லபுரத்தைக் கட்டியது யார்? என்கிற கேள்விக்கு ஆயநர் என்று தவறாகச் சிலர் விடையிறுக்கிறார்கள் என்றால் அதன் பெருமை அவ்வளவு தத்ரூபமாக சிவகாமியின் சபதத்தில் ஒரு கற்பனை பாத்திரத்தைப் படைத்திருந்த கல்கியையே சாரும்.
    பார்த்திபன் கனவு சரித்திர நவீனத்தை அவர் முதல் முதலில் எழுதிய போது தான் சிவகாமியின் சபதம் என்கிற கதைக் கரு அவருக்கு உதயமாயிற்றாம். நமது தேசத்தின் உயிர்த் துடிப்பில் கலந்துள்ள ராமாயணம் கூட அவரையே அறியாமல் சிவகாமியின் சபதத்தில் நுழைந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது, அந் நாவலின் கதைப் பாங்கைச் சற்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது, இப்படிப் பார்க்கும் போது சிவகாமியின் சபதத்தை ராமயணத்துடன் ஒப்பிட்டால் பொன்னியின் செல்வனை மகாபாரதத்துடன் தான் ஒப்பிட வேண்டும்.
    பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்கள் எல்லாவற்றையுமே எனக்குத் தான் சொந்தம் என்று பிரத்யேகமாக உரிமை கொண்டாடும் இலட்சக்கணக்கானோர் இன்றும் தமிழ் மண்ணில் உண்டு. குந்தவை, வானதி, நந்தினி, வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியான், பூங்குழலி இவர்கள் போன்ற ஏனைய கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரையும் தத்தம் அந்தரங்க நண்ப ரென்றும் அவர்களைப் பற்றிப் பேசக் கூட மற்றவர்களுக்கு உரிமை கிடையாதென்றும் பிடி வாதம் பிடிக்கும் வீம்பு பிடித்தவர்கள் இன்றும் நிறைய பேர் இருப்பது கல்கியின் படைப்புத் திறனுக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருக்கிறது.
    பொன்னியின் செல்வனின் பெரிய பழுவேட்டரையரை   கடைசி பாகம் வரை வெறுக்காதவர் கிடையாது. எண்ணற்ற போர்க்களங்களில் பங்கு கொண்டு தம் உடலில் அறுபத்தி நான்கு  போர்க்காயங்களைச் சுமந்து கொண்டிருந்தவர் தம் மனைவி நந்தினியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு சுந்தர சோழன் மகன்கள் பட்டத்துக்கு வருவதற்குக் குறுக்கே நிற்கிறார். கடைசியில் சதிகள் அம்பலமாக ஆதித்த கரிகாலன் மரணத்திற்குத் தாம் தான் காரணம் என்ற அழுது குமுறுகிறார். அவர் குமுறுவது பெரிய சுழற்காற்றையும் இடி மின்னலை யும் ஒத்திருந்தது என்று கல்கி எழுதும் போது  படிக்கும் வாசகனும் பெரிய பழுவேட்டரையரின் கூடவே அழுகிறான். அத்தனை அத்தியாயமும் அவன் பழுவேட்டரையரிடம் கொண்டிருந்த வெறுப்பும் துவேஷமும் மாறி அன்பும் பச்சாதாபமும் பொங்குகிறது. கல்கியின் எழுத்து அப்படிப் பட்டது.
    இந்த நாவலை அவர் எழுத அநுராதபுரத்து வீதிகளில் திரிந்திருக்கிறார். தஞ்சையில் இடிபாடுகளுக்கிடையில் இருந்த சிங்காச்சியார் கோயிலை வைத்து அது சிங்கள நாச்சியார் கோயில் என்று அனுமானித்து அதன் அடிப்படையில் ஊமைச்சி கதாபாத்திரத்தைப் படைத்திருக்கிறார்.
    கடைசி அத்தியாயத்தில் மணிமேகலை என்னும் பெண் கதாநாயகன் வந்தியத் தேவன் மீது அளவற்ற காதல் கொண்டு அவன் நினைவாகவே வாழ்ந்து உயிர் விடக் காத்திருப்பவள். புரியாத இன்னதென்று விளங்காத மொழியில் மிழற்றுகிறாள். வந்தியத்தேவன் அது என்ன வென்று கேட்கக் குனிகிறார். அவன் கண்களிலிருந்து ஒரு நீர் முத்து மணி மேகலையின் நெற்றியில் விழுகிறது. கல்கி எழுதுகிறார்; ‘’ அவள் பேசுவது புரியாவிட்டால் என்ன?’’ என்று. படிக்கும் நாம் கண்ணீரைக் கட்டுப்படுத்தத் திணறுகிறோம். காதலை இதற்கு மேலும் துல்லிய மாக யாராவது காட்ட முடியுமா என்று அதிசயிக்கிறோம்.
    வரலாற்று நவீனங்களில் முத்திரை பதித்த கல்கி சமூக நவீனங்களையும் விட்டு வைக்கவில்லை. தியாகபூமி திரைப்படமானது. அலைஓசை அளவிலாப் புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது. அலைஓசையின் நாயகி சீதா வாழ்க்கையில் அவ்வளவு கஷ்டப்படுகிறாள். அவளுக்குக் காதில் கடைசியில் எப்போதும் அலைஓசை கேட்டுக் கொண்டேயிருக்கிறது அவள் சகோதரி தாரிணி குருடியாய் அவள் முன்னர் நிற்கும் போது கூட சகோதரியின் சுந்தர முகமே அவள் கண்களில் தெரிகிறது.
    அப்போது தான் மகாத்மா கொலையுண்ட செய்தி  வருகிறது. சீதாவும் சாரிசாரியாகச் செல்லும் ஜனங்களுடன் சேர்ந்து கொள்கிறாள். பல்வேறு முகங்கள் குணாதிசயங்கள் இவற்றினூடே அடிநாதமாக சுதந்திரப் போராட்ட நிகழ்வுகள் விவரிக்கப்படுவது இந்நாவலின் சிறப்பு.
    நாம் ஏற்கெனவே கூறியிருந்தது போல் எப்படி எல்லோரும் பாரதியாரைக் கவிஞராக மட்டும் கண்டார்களோ அதே போல் நம் கல்கியையும் வரலாற்றுப் புதின ஆசிரியராகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். இது கல்கியின் குறைபாடு அன்று. சரித்திர நவீனங்களின் பழைமைத் தன்மையை சமூக  நவீனங்களில்எதிர்பார்க்கும் வாசகர்களைத் தான் இதற்குக் குறை சொல்ல வேண்டும். அருள் மொழி வர்மன் அரும்பெரும் காரியங்களை ஆற்றுவதாகக் கதையில் காண்பிப்பதற்கு அவன் வாழ்ந்த காலத்தின் பழைமைத் தன்மை மட்டும் காரணமில்லை. அது போன்ற அரும்பெரும் காரியங்களை அவன் உண்மையிலேயே ஆற்றியிருப்பதாய்க் கல்வெட்டுக்கள் சான்று பகர்வதானல் தான் அவர் சரித்திரத்தில் தனித்த ஒளி வீசுகிறான். கல்கியும் அவனைக் கதை மாந்தன் ஆக்க நிச்சயிக்கிறார். நகமும் சதையுமாக நாம் பார்க்கும் சாதாரணர்கள் சமூக நவீனங்களில் உலா வரும் போது வாசகன் தான், தான் எதிர் பார்க்கும் பிரம்மாண்டத்தைத் தளர்த்திக் கொள்ள வேண்டி யிருக்கிறது.
    எது எப்படியிருப்பினும் கல்கியின் நாயகிகள் வசீகரமானவர்கள். அது சரித்திர நவீன மானாலும் சரி சமூக நவீனமானாலும் சரி, கல்கியின் பெண்கள் வனப்பும், புத்தி சாதுர்யமும், பெண்மையின் இலக்கணமும் கொண்டு திகழ்பவர்களாக இருக்கிறார்கள். தியாக பூமியின் நாயகி, அலை ஓசை சீதா ,சிவகாமியின் சபதச் சிவகாமி எல்லோருமே இத்தனை திறமைகளிலும் துக்கப்படுபவர்களாகத் தான் இருக்கிறார்கள். சிவகாமியின் தோழி கமலி, நரசிம்மவர்மர் மனைவி மக்களுடன் ஊர்வலம் வருவதை பார்த்து சிவகாமி வாயடைத்துப் போவதைப் பார்த்துக் கேட்கிறாள்; ‘’  ஏண்டி பார்! ஆளும் வேந்தனைக் காதலித்ததனால் திருமணம் செய்யத்தான் உரிமையில்லாது போய்விட்டது..ஒரு வாய் அழக்கூடவா உரிமை யில்லாதுபோய்விட்டது ? என்று. கல்கியின் பெண்கள் இவ்வளவு தீனமாக இருந்ததற்குக் காரணம் அக் கால சமூக நிலை என்று தான் சொல்ல வேண்டும்.
    எனினும் அந்தப் பெண்கள் புதுமை விரும்பிகள் இல்லை. தியாகம் செய்யும் திடசித்தம் உடையவர்கள் தாம்; மரபை உடைக்கும் திடசித்தம் உடையவர்களாகத் தோன்றவில்லை. பெண்களை விவரிக்கும் போதும் முகத்துக்குக் கீழே வர்ணிக்காத கண்ணியம் அவர்களை மரபு மீறாமல் காப்பதிலும் முனைப்பு காட்டியிருக்கிறது. பெண்டிர் நிறைகாக்கும் காப்பே தலை என்று சொன்ன திருவள்ளுவர் பழைமைவாதி யென்றால் நம் கல்கியும் பழைமைவாதிதான்.
    தமிழ் இலக்கியம் சுதந்திரத்திற்குப் பின்பே இரு கூறாகப் பிளவு பட்டிருந்தது. ஒரு கருத்தை நிறுவுகின்ற லட்சிய நோக்கில் எழுதுவது என்கிறது ஒரு வகையாகவும் வாழ்க்கையை வாழ்க்கையின் போக்கில் அதன் சாதாரண மாந்தர்களுடன் ஆசாபாசங்களுடன் விவரிப்பது என்றும் இரு பிரிவாக இருந்தது. இலட்சிய நோக்கில் எழுதுபவர்கள் வெறும் பொம்மைகளை உற்பத்தி செய்கிறார்கள் என்று யதார்த்த எழுத்தாளர்கள் குற்றம் சாட்டினர். இலட்சியவாதி களோ யதார்த்தவாதிகளை வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறேன் என்கிற பெயரில் அசிங்கங்களை வெளிச்சம் போடுகிறார்கள் என்று குற்றம் சொன்னார்கள்.
    இரண்டிலும் சற்று உண்மையில்லாமல் இல்லை. இலட்சிய வாதிகளின் நாயகர்கள் தரை மீது நடப்பவர்களாக இல்லை. யதார்த்த வாதிகள் பாத்திர விவரிப்பில் வாசகனின் சுய மதிப்பை உயர்த்துவதற்கு எந்த விதமான முயற்சியையும் செய்யவில்லை. விவரிப்பை முடிவை நோக்கி இட்டுச் செல்லும் ஊடகமாக அல்லாது அதையே முடிந்த முடிவாக முன் வைத்தனர்.
    கல்கி இரண்டையுமே சாமர்த்தியமாகச் செய்தார் என்று தோன்றுகிறது. மாந்தர்களை யதார்த்தமாகவும் உலக இயல்புகளை ஒட்டிய குணாதிசயக் கூறுகளுடனும் படைத்த அதே சமயம் தாம் எடுத்துக் கொண்ட நோக்கத்திலிருந்து நழுவாமல் நகர்த்திச் சென்றார். இதுதான் கல்கியின் மேன்மை.
    கல்கியை ஒரு சாரார் பகிரங்கமாக குறை கூறிக் கொண்டே யிருந்தார்கள். அவர் நகைச் சுவையை ‘ ஜெரோம் கே ஜேரோம்’ என்கிற எழுத்தாளரைக் காப்பியடித்தும் நவீனங்களை சர் வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமாஸ் போன்ற எழுத்தாளர்களைக் காப்பியடித்தும் எழுதினார் என்றும்  குற்றம் சாட்டினார்கள். இக்குற்றச்சாட்டுகளுக்கு ஒன்றிரண்டு முறை அவர் பதில்  சொன்னார். இதர சமயங்களில் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார். புதுமைப்பித்தன் ரஸமட்டம் என்கிற புனைப்பெயரில் காப்பியடிப்பதைப் பற்றி எழுதினார். வாசகர்கள் இவற் றைப் பொருட்படுத்தவில்லை என்பதைவிட இது போன்ற விமர்சனங்கள் அவர்களைச் சென்றடைந்ததா என்பதே சந்தேகம் தான். கல்கி என்கிற காட்டாற்று வெள்ளம் இது போன்ற  தூசிதும்புகளை அடித்துக் கொண்டு போய் விட்டது.
    தமிழர்கள் தமிழ் மொழியின் உரைநடை வளர வேண்டியதன் அவசியத்தை உணர்ந் திருக்கவில்லை. சந்தத்துக்கும் நினைவாற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதால் பிரதியில் சேமிக்க வகையில்லாத காலங்களில் எல்லாவற்றையுமே செய்யுளாக எழுதி வைத்தார்கள். இப்படிப் பார்க்கும் போது உரைநடையின் தேவையையே அச்சு இயந்திரம் புழக்கத்திற்கு வந்த பின் தான் தமிழர்கள் உணரத் தலைப்படலானார்கள். அந்த சமயத்தில் தமிழ் உரைநடைக்கு முன்னோடியாக விளங்கியவை ஐரோப்பிய இலக்கியங்களாதலால் பல சமயங்களில் ஒன்றிரண்டு விஷயங்களை அங்கேயிருந்து ஸ்வீகரித்துக் தான் மொழியை முன்னெடுத்து செல்ல வேண்டிருந்தது.
    கல்கியை விமர்ச்சித்தவர்கள் மேற்கூறிய விஷயத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா என்பது சந்தேகம் தான். நாவல் பாணியை ஸ்வீகரித்த வீரமாமுனிவர் மீதோ வேதநாகயம் பிள்ளை மீதோ ராஜம் ஐயர் மீதோ எந்த விமர்சகரும் இது போன்ற குற்றச்சாட்டு எதையும் கூறவில்லை நல்ல வேளையாக.
    எது எப்படியிருப்பினும் தமிழ் தொன்மையான மொழி; தமிழ் சரித்திரம் தொன்மை யானது மட்டுமல்லாது பல்வேறு உலக நாகரீகங்களைக் காட்டிலும் காலத்தால் முற்பட்டும் அறிவிலும் பண்பிலும் கலகளிலும் மேம்பட்டும் விளங்கியது என்பதைச் சுவை படவும் பிரும்மாண்டமாகவும் நவீனங்களில் சொன்னவர் முதன் முதலில் கல்கி ஒருவர் தான். கவிதை மூலம் தமிழ் ஸைக்கியை (ஞளுலுஊழநு ) உயர்த்தியவர் பாரதி என்றால் நவீனங்களின் மூலம் அதற்குப் பெருமை தந்தவர் கல்கி தான்.
    இப்படிப் பார்க்கும் போது அவருக்கு முன்னோடிகள் பலர்  இருந்த போதிலும் தமிழ் உரை நடையின் பிதாமகர் என்று கல்கியைத்தான் குறிப்பிடத் தோன்றுகிறது.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

தண்டிக்கும் கடவுளும் மன்னிக்கும் கடவுளும்

துக்ளக் ஆண்டு விழாவில் ஒரு வாசகர் திரு சோவைக் கேட்டார். ‘கிறிஸ்துவ மதம் தமிழ் நாட்டில் வேகமாய்ப் பரவி வருகிறது. காரணம் என்ன? ‘ என்று. இதற்குச் சோவின் பதில் ஓரளவிற்குச் சாத்வீகமாய்த் தான் இருந்தது. கிறிஸ்துவர்கள் மத மாற்றத்தில் ஈடுபடுவது உண்மை தான், அதற்காக மதம் மாறுகிற எல்லோரும் பணத்துக்காகத் தான் மதம் மாறுகிறார்கள் என்று சொல்லி விட முடியாது. என்கிற ரீதியில் அமைந்திருந்தது சோவின் பதில்.

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...