தற்செயலாக ஜெயமோகன் என்கிற எழுத்தாளரின் வலைப்பூவை வாசிக்க நேர்ந்தது. படிக்கப் படிக்க இவ்வளவு சான்றாண்மை, மரபுத் தோய்வு, ஆன்மிகத் தேடல், நேர்மை மற்றும் நுண் மாண் நுழை புலம் உள்ள எழுத்தாளர் ஒருவர் தமிழில் இருக்கிறார் என்று அறிந்து பிரமித்துப் போகிறேன். என்ன உழைப்பு! என்ன படிப்பு! என்ன தெளிவு! என்ன தீர்மானம்! ஜெயகாந்தனுக்குப் பிறகு நான் பார்த்து வியக்கும் ஒரு பெரிய எழுத்தாளர் இவர் தாம். இவர் சமீபத்தில் மின் அஞ்சல்களுக்கு பதில் எழுதாததற்காக மன்னிப்புக் கேட்டிருந்தார். அதற்கு பதிலாய் நான் அவருக்கு ஒரு மடல் அனுப்பி இருந்தேன். அதில் அவரைப் பாராட்டி ஒரு அஞ்சல் அனுப்பி இருந்தேன். கூச்ச உணர்வினாலோ அல்லது முகஸ்துதி செய்கிறேன் என்று நினைத்தோ என்னவோ அவர் அதைத் தன வலைப்பூவில் வெளியிடவில்லை. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் என் தற்போதைய மயக்கம் பின்னாளில் தெளிந்து போகலாம். அவர் குறித்த என் அபிப்ராயத்தை மாற்றிக்கொள்ள நேரலாம். அதற்காக நான் அவரைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறேன் என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அதற்காக நான் அவருக்கு எழுதிய அஞ்சலை இங்கு வெளியிடுகிறேன். அவரைப் போன்ற ஒரு அறிவு ஜீவியை ஆதரிப்பது தமிழ்ச் சமுதாயத்தின் கடமை:
" அன்பு ஜெயமோகன்,
மன்னிப்பா? யாரிடம் யார் மன்னிப்புக் கேட்பது? தங்களின் வலைப்பூவில் ஒரு சதம் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இப்பவே உங்களை அண்ணாந்தாவது பார்க்க முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது. என் போன்ற வாசகனிடமா மன்னிப்பு? வேறு வேலையைப் பாருங்க.
என்னைப் பொருத்தமட்டில் உங்களுக்கு எது முக்கியமென்று படுகிறதோ அதை மட்டும் செய்யவும். பிற வேலைகளைப் பிரித்துக் கொடுத்து விடவும். குறிப்பாகப் பாராட்டு மடல்கள். (என் மடலையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்).
உங்களுக்கு மறதி சின்னச்சின்ன விஷயங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தீர்கள். எனக்கென்னவோ சுகப் பிரம்மம் மாதிரி மோன நிலையை நீங்கள் அடைந்து கொண்டிருப்பதாகப் படுகிறது. நீங்கள் முக்கியமென்று கருதும் விஷயங்களில் ஓர்மை அடைந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. இதில் சந்தோஷப் படுவதற்குத் தான் நிறைய இருக்கிறது.
ஜெயகாந்தன் இறந்தபோது 'ஐயோ ஜெயகாந்தன்' போய் விட்டாரே' என்று இடிந்து போனேன். இத்தனைக்கும் அவர் சமீபங்களில் எழுதுவது, பேசுவது ஒன்றுமே செய்யாமல் இருந்தார். உங்கள் வலையில் மாட்டிக் கொண்ட பிறகு இப்போது என்ன தோன்றுகிறது என்றால் ' ஜெயகாந்தன் வயதாகித் தானே இறந்தார்; பரவாயில்லை. இனிமேல் ஜெயமோகன் பார்த்துக் கொள்வார்' என்று தான். ஜெயகாந்தனைபற்றிய ஒரு கட்டுரையில் 'எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு' என்று குறிப்பிட்டிருந்தேன். அதே வார்த்தையைத்தான் உங்களைப் பற்றி நினைக்கும் போதும் குறிப்பிட வேண்டி இருக்கிறது.
தமிழில் மூன்று பேருக்குத் தான் ' மஹாமஹோபாத்யாய' பட்டம் வழங்கப் பட்டுள்ளது. ம வ ராமனுஜாச்சரியார், உ வே சாமிநாத ஐயர், பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஆகிய மூவர் தாம் அவர். நான்காவதாக நான் தங்களுக்கு இன்று 'மஹாமஹோபாத்யாய' பட்டம் வழங்குகிறேன்.
கே வி மகாதேவன் இசை அமைத்துக் கேட்டிருப்பீர்கள். பாடிக் கேட்டிருக்கிறீர்கள? இதோ அதைக் கேளுங்கள்:
கிட்டத் தட்ட திருச்சி லோகநாதன் குரல். கண்ணாய் என்கிற இடத்தில் அவரும் பி லீலாவும் போடும் பிருகாவைக் கவனியுங்கள்!
அன்புடன்,
அஸ்வத் "
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக