எல்லோரும் கிழி கிழி என்று கிழிக்கிறார்களே அதில் என்ன தான் எழுதி இருக்கிறது என்று பார்க்கலாமே என்று மிகவும் முன் முயற்சி எடுத்து மாதொரு பாகன் நாவலை வாங்கினேன். தமிழில் கிடைக்கவில்லை. பெங்குவின் வெளியிட்டிருந்த ஆங்கில மொழியாக்கம் கிடைத்தது. அது குறித்து என் வினையாடல்கள் (!) வருமாறு:
- பிள்ளையில்லா தம்பதியினருக்கு சமுதாயம் கொடுக்கும் மன அழுத்தம் தாங்க முடியாமல் வருத்தத்தில் இருக்கும்போது இரண்டு வீட்டுப் பெரியவர்களும் சேர்ந்து கோவில் திருவிழாவில் பிற ஆடவனுடன் பிள்ளையில்லாப் பெண் கூடி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்கிற ஐதீகத்தைச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.கணவனுக்கு ஒப்புதல் இல்லை. கணவன் ஒப்புக் கொண்டது போல் நாடகமாடி அவன் மனைவியை சம்மதிக்க வைத்து விடுகிறார்கள். கடைசியில் கணவன் விஷயம் தெரிந்து மிகவும் விரக்தி அடைகிறான்.
- இதற்கு சாஸ்திர சம்மதம் இருக்கிறதா? சந்ததி இல்லாமல் இருக்கும் பெண்ணின் கணவன் சிறு வயதிலேயே இறந்து விட்டால் பெண் அவள் மைத்துனனிடம் கூடிப் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்கிறது மனு ஸ்ம்ருதி.
- சத்ய காம ஜாபாலன் கதை நினைவுக்கு வருகிறது. உத்தாலக ஆருணியிடம் தன பிள்ளை சத்யகாமனை ஜாபாலை வேதம் கற்க அனுப்புகிறாள். ரிஷி 'உன் கோத்ரம் என்ன?' என்று வினவ சத்யகாமன் தெரியாதென்கிறான். ரிஷி அன்னையிடம் போய்க் கேட்டு வருமாறு கூற அவள் 'நான் பல இடங்களில் வேலை செய்து வந்தேன்; அங்கெல்லாம் எனக்கு ஆண்களிடம தொடர்பு ஏற்பட்டதால் அதில் யாருக்கு நீ பிறந்த பிள்ளை என்று எனக்குத் தெரியவில்லை' என்று சொல்லி அனுப்ப ரிஷி 'நீ உண்மையைச் சொன்னதால் நீ வேதம் கற்கத் தகுதியானவன்; இனிமேல் உன் கோத்திரத்தை ஜாபாலி கோத்திரம் என்றே கூறிக்கொள்' என்று வேதம் கற்றுத் தரச் சம்மதிக்கிறார்.
- த்ருதராஷ்ட்ரனும் பாண்டுவும் விதுரனும் வியாசருக்குப் பிறந்தவர்கள் தானே? பாண்டவ கௌரவ வம்ச வ்ருத்தி இப்படித் தானே உண்டாகி இருக்கிறது?
- இதை சொல்லும் போதே யாகத்தில் மிருகங்களைப் பலி கொடுப்பதும் பெண் மைத்துனனின் மூலமாகச் சந்ததியை உண்டாக்கிக் கொள்வதும் தவறாகப் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பம் உள்ளதால் கலியில் இவை விலக்கப் பட்டிருக்கின்றன என்றும் வேறு ஒரு சாஸ்திர சம்பந்தமான புத்தகத்திலும் படித்த நினைவு.
- எப்படி இருப்பினும் மனித சமுதாயம் இப்படித்தான் வளர்ந்திருக்கிறது என்று ஒரு விஷயத்தை புரிந்து கொண்டால் ஒழிய இதைப் பொருட்படுத்தாமல் இருக்க முடியும் என்று தோன்றவில்லை.
- நில உடமைச் சமூகத்தில் பரம்பரைச் சொத்தைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், செயற்கைக் கருத்தரிப்பு வழிகள் இல்லாத காலங்களில் இது போன்ற பிரச்சினைக்கு இதைத் தவிர என்ன தீர்வு இருந்திருக்க முடியும் என்று தெரியவில்லை.
- இது போன்ற விஷயங்களில் இருந்து மனித சமுதாயம் வெகு தூரம் தள்ளி வந்து விட்டதினாலேயே இது போன்ற ஒரு விஷயம் எப்பவோ சமுதாயத்தில் இருந்திருக்காது என்று நம்புவது அறிவீனம் என்று தோன்றுகிறது.
- பிராமண வீடுகளில் ஸ்ரார்த்ததின் போது 'என்மே மாதா ப்ரிதிர்லோம சரதி' என்று ஒரு மந்த்ரம் சொல்வதுண்டு. அதன் பொருள் 'ஒரு வேளை நான் இன்று வரிக்கும் தகப்பனுக்குப பிறக்காமல் வேறு ஒருவனுக்குப் பிறந்திருந்தாலும் நான் இன்று அளிக்கும் ஹவிசு என் ஒரிஜினல் தகப்பனைச் சேராமல் வரிக்கும் தகப்பனையே அடையட்டும்' என்பதாகும். இதே மந்த்ரத்தை பாட்டனாருக்கும் கொள்ளுப் பாட்டனாருக்கும் சொல்வார்கள்!
- இது போன்ற விஷயங்களால் இந்த எதிர்ப்பு தேவை அற்றது என்பது தான் என் எண்ணம்.இதை விட மோசமான் நாவல்களை நான் படித்திருக்கிறேன். (சாரு நிவேதிதாவின் பான்சி பனியனும் எக்சிசடின்சியலிசமும் சுஜாதாவின் ஹாஸ்டல் தினங்கள் போன்றவை).
- இப்போது நாவலுக்கு வருகிறேன்:
- ஏதோ நிதி உதவி பெற்று பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி இந்த நாவல் எழுதி இருக்கிறார் என்று சொல்கிறார்கள். இதில் ஆராய்ச்சியின் கூறுகள் எதுவுமே என் கண்ணில் படவில்லை.
- இது போன்ற கதைகளை 'முடித்த எல்லைக் கதைகள்' என்பார்கள். க்ளைமாக்ஸ் என்ன என்று ஆரம்பத்திலேயே தெரிந்து விடும். கிட்டத் தட்ட மோடி மஸ்தான் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை விடுவது போன்றது தான் இதுவும்.
- இரண்டு மூன்று அத்தியாயங்களிலேயே படிக்கும் வாசகனுக்கு பின்னால் நாயகி வேறு ஒரு ஆடவனுடன் உடலுறவு கொள்ளப் போகிறாள் என்று தெரிந்து விடுவதால் அதை 'எப்போ எப்போ' என்று மனம் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறது. இதை ஒரு சாமர்த்தியமான உத்தியாகக் கதாசிரியர் கையாண்டு இந்த விஷயத்தைக் கடைசி வரை நகர்த்திச் செல்கிறார். நாவல் முடியும் தருவாயில் குறிப்பிட்ட தருணம் வருகிறது.
- அந்த இடத்தில் காமம் கிளர்ந்து படிக்கும் வாசகன் அந்நிய ஆடவன் நாயகிக்குப் புட்டு ஊட்டும் தருணத்தில் உச்சகட்ட மனக் கிளர்ச்சியை அடைகிறான். அந்த இடத்தில் புட்டு ஊட்டுகின்ற தருணம் உடலுறவு விவரிக்கப் பட்டால் என்ன கிளர்ச்சியை ஏற்ப்படுத்துமோ அதே கிளர்ச்சியை எற்படுத்துகிறது.
- அந்தக் காலத்தில் குமுதத்தில் எழுதிய ஹேமா ஆனந்த தீர்த்தனுக்கும் இந்தக் கதாசிரியர்க்கும் எந்த வித்யாசமும் எனக்குத் தெரியவில்லை.
- மேற்கூறிய காரணங்களால் இந்த நாவல் தடை செய்யப் படவேண்டிய நாவல் இல்லை ஆயினும் உதாசீனப் படுத்தப் படவேண்டிய நாவல் என்று தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக