தமிழ் சினிமாவின்
விசித்திரங்களில் ஒன்று பாடல்களும் இசையும். தமிழ் சினிமா என்று கூறுவதைவிட இந்தியத்
சினிமா என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். இதற்கு முதலான காரணம் நாடகத்தின் கூறுகளை
சினிமா அப்படியே ஸ்வீகரித்ததே ஆகும். நாடகத்தின் கூறுகளுக்காக நாம் யாரிடமும் கடன்
வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கவில்லை.
காரணம் நம் புராண
மரபும் பண்டைய கூத்து மரபுகளும்தாம். கூத்து மரபுகளில் புறக்காரணிகளில் கவனம் கம்மிதான்.
உதாரணமாக கத்தி என்றால் தத்ரூபத்திற்காக நிஜக்கத்தியை வைத்துக் கொள்வதில்லை நடிகர்கள்.
அதன் அடையாளத்தை வேறோர் புற குறீயீட்டிலிருந்தும் பார்வையாளர்கள் புரிந்து கொள்கிறார்கள்.
நடிகர்களின் முக ஒப்பனை மிகையாக அலங்காரமாகச் செய்வதிலேயே ப்ரஹ்லாதனையும், ஹிரண்யகசிபுவையும் பார்வையாளர்கள்
எளிமையாகப் புரிந்து கொள்கிறார்கள். இதன் வெவ்வேறு வடிவங்கள்தான், கன்னட யக்ஷகானமும், கேரள கதகளியும். இதையும் தவிர பண்டைய
இந்திய நாடகங்களில் சமூகக்கதை என்று ஒன்று இருந்ததாக அறிய முடியவில்லை. காரணம் நம்
பரந்துபட்ட புராண மரபு. ராமாயணத்தையும், மகாபாரதத் தையும் ஒட்டிய
கதைகளையும் கருத்து உருவாக்கத்தையும் கதாபாத்திரங்களையும் மீறி வெளியில் கதை தேடுவதற்கான
தேவையே இந்திய நாடகக் கலைக்கு ஏற்படவில்லை. அரிச்சந்திரன் கதையிலிருந்து சத்யவான் சாவித்ரி
கதை வரை. சகுந்தலை கதையிலிருந்து வள்ளி திருமணம், அல்லி அர்ஜுனா
வரை நம் சமூகம் கருத்தாக்கங்களை உள்வாங்கி கொண்டது.
இதில் மிகப் பெரிய
மாற்றம் நிகழ்ந்தது தற்செயலாக. இந்திய கிராமங்கள் எப்படி படிப்படியாக தம் சுயத்தை இழந்து
நகரங்களுக்கான துணை ஊர்களாக ஆனதோ, அது போலவே கிராமங்கள் கட்டிக் காத்த கலை இலக்கியக் கூறுகள்
நகர வல்லுறவுகளால் பாழ் பட்டன. நாளாவட்டத்தில் தேய்ந்து மறைந்தன. இப்படிப் பார்க்கும்
போது நாம் மேற்கந்திய கலாச்சாரத்தைத்தான் குறை கூற வேண்டியிருக்கிறது. ஏதோ சில உபகரணங்களையும்
ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு நம்மை ஆண்ட வெள்ளைச் சமூகம் நம் மீது தத்தமது கலாசார
அடையாளங்களையும் திணித்தது.
அவர்கள் இந்தியாவின்
பன்முகத் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாது திணறினார்கள் என்பதுதான் உண்மை. இதில்
மிகவும் துரதிர்ஷ்டமான விஷயம் என்னவென்றால், நம் நாட்டின் படித்தவர்கள் முற்றிலும்
வேறான கலைகளைக் கற்றதுடன் நம் பாரம்பரியக் கலைகளை பத்தாம் பசலித்தனம் என்று வெறுத்து
ஒதுக்கினார்கள்.
தமிழ் நாடகத்தின்
கூறுகள் மேற்கூறிய சீரழிவினாலேயே இரண்டாகப் பிளவு பட்டது. சங்கரதாஸ் ஸ்வாமிகளின் நாடகப்
பாங்கை நெருக்கிப் போட்டு பம்மல் சம்மந்த முதலியாரின் நகர நாடகப் பாணி கோலோச்ச ஆரம்பித்தது.
சங்கரதாஸ் ஸ்வாமிகளின் நாடகப் பாணியில் ஆரம்பித்து பம்மல் சம்மந்த முதலியாரின் நாடகபாணி
பலி கொண்ட ஒரு மாபெரும் கலைஞன் பி.யு.சின்னப்பா என்கிற புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னச்சாமி.
ஐந்தாவது வயதிலிருந்து
நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர் சின்னப்பா. இவருடைய தந்தையாரும் நாடக நடிகராய் இருந்ததால்தான்
இது சாத்தியமானது என்று தோன்றுகிறது. இயற்கையாகவே நல்ல குரல்வளமும், எஸ்.ஜி. கிட்டப்பாவை சற்று
நினைவு படுத்துகின்ற கம்மல் குரலும் இவருக்கு இயற்கையாகவே வாய்த்திருந்ததால் இவருக்குமே
நாடக மேடைகளில் பெரும் ரசிகர் கூட்டம் இருந்தது வியப்பில்லை.
நாடகத்துறையில் குரல்
வளம் மிக்கவர்கள்தாம் கோலோச்ச முடியும். ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்த இசை வழி நாடகங்களே
இதற்குக் காரணம். தமிழ் நாடக உலகில் இந்த வகையில் பார்க்கும் போது பலர் பெயர் பெற்றிருந்தாலும்
குரலால் கட்டிப்போட்டவர்கள் நான்கு பேர். எஸ்.ஜி. கிட்டப்பா, கே,பி. சுந்தராம்பாள், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம் ஆகிய நால்வர்தாம் அவர்கள்.
இந்த நால்வரில் பின்னலான
ஸ்வரக் கோர்வைகளும், தாளக் கட்டுகளும் கொண்ட சிக்கலான பாடல்களைப் பாடியவர் பி.யு.சின்னப்பா. இவர்
மேடைகளில் அந்த நாட்களில் ‘பக்தி கொண்டாடுவோம்’ என்கிற பாடலை அபாரமான ஸ்வரப்
பின்னல்களுடன் அரை மணி நேரம் பாடுவாராம். பாடிமுடிந்தவுடன் ரசிகர்கள் ‘ஒன்ஸ்மோர்’ கேட்டுத் துளைத்தெடுப் பார்களாம்.
சின்னப்பா முறையாகக்
கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டவர். திருவையாறு சுந்தரேசனிடமும், காரைக்குடி வேதாசலத்திடமும்
கற்றுக்கொண்டு வர்ணம் ஸ்வர ஜதி, கீர்த்தனை பதங்கள் என்று எல்லாமாக
500 உருப்படி வரை பாடம் செய்தார். இதில் சுந்தரேசன் நாதஸ்வர வித்வான் என்பதால் பின்னலான
ஸ்வரக் கோர்வைகளும், தாளக் கட்டுகளும் அவர் மூலமாக சின்னப்பா
கற்றுக் கொள்ள முடிந்தது.
பொதுவாக பாடுபவர்கள்
மற்ற விஷயங்களில் சோபிப்பதில்லை. சின்னப்பா அதற்கு விதிவிலக்கு. குத்துச்சண்டை, மல்யுத்தம், கத்தி வீசுதல், கம்பு சுழற்றுதல் போன்ற வீர விளையாட்டுகளையும்
அவர் புதுக்கோட்டையில் தால்மியான் கொட்டடி என்னும் இடத்தில் கற்றுக் கொண்டார். அப்போதெல்லாம்
நடிகர்கள் பாவனை செய்வதோடு நிற்காமல் உண்மையிலேயே அந்தந்தக் கலைகளில் விற்பன்னர்களாக
விளங்கினார்கள். சின்னப்பா அதற்கு விதி விலக்கல்ல. ஊமைத்துரை பெயர் பெற்று விளங்கிய சுருள்பட்டா வீசுவதில் சின்னப்பா மன்னர்.
சண்டை போடுவது போல்
பாவனை செய்யாமல் அன்றைய மைசூர் சமஸ்தான மல்யுத்தர்களை வரவழைத்து அவர்களுடன் சின்னப்பா
உண்மையான மல்யுத்தம் செய்திருக்கிறார். அதேபோல் பளு தூக்குவதிலும் பெரிய
வீரராய் இருந்திருக்கிறார்.
1936ஆம் ஆண்டு இவர் நடித்த
முதல் படம் சந்திரகாந்தா வெளிவந்தது. இதன்பிறகு ஐந்து படங்கள் தொடர்ச்சியாக வந்தாலும்,
பெரிய வெற்றியை பெறவில்லை. இதில் மனம் கலங்கிய சின்னப்பா நாற்பது நாட்கள்
உபவாசம் இருந்து வாய்ப்புக்காக தவமிருந்திருக்கிறார். இதனாலோ என்னவோ உத்தமபுத்திரன்
படவாய்ப்பு மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் மூலமாக இவரைத் தேடி வந்தது. இரட்டை வேடம்.
படம் பயங்கர ஹிட்.
இதன்பிறகு சின்னப்பா
திரும்பிப் பார்க்கவில்லை. வரிசையாக ஹிட் படங்கள். உத்தமபுத்திரனுக்கு பின் சூப்பர்
ஸ்டாரான சின்னப்பா வரிசையாக எட்டு ஹிட் படங்களைக் கொடுத்தார். எல்லாப் படங்களின் பாடல்களும்
ஹிட். குறிப்பாக ஜெகதலப்பிரதாபன் படத்தில் ‘தாயே உனைப் பணிவேன்’ என்கிற பாடலில் ஐந்து வேடங்களில்
அசத்தியிருப்பார். வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம், கஞ்சிரா, கொன்னக்கோல்
இவை அனைத்தையும் சின்னப்பாவே செய்திருந்தது மிகுந்த வியப்பையும் பாராட்டையும் பெற்றது.
கிட்டத்தட்ட திருவிளையாடல் சிவாஜியின், ‘பாட்டும் நானே’ போல. ஆனால் அதன் மிகை தவிர்த்து.
இதே போல் ‘காதல் கனிரசமே’ என்கிற
சித்தரஞ்சனிப் பாடலில் இவர் போடும் ஸ்வரக் கோர்வைகள் இவருக்கு ஏகோபித்த பாராட்டைப்
பெற்றுத் தந்தது.
இதன் பின்னர் இவர்
பாடல்கள் இசைத்தட்டுகளிலும் வந்து நல்ல விற்பனை ஆகியது. இவர் கிருஷ்ணபக்தியில் செய்த
கதாகாலட்சேபம் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. எல்லாமே இசை மழையில் தோய்த்தெடுத்த
முத்துக்கள்.
நிறைய புகழுடன் பணமும் ஈட்டினார். வந்த பணத்தையெல்லாம் வீடுகளில் முதலீடு செய்தார். இவர் வீடு வாங்கும் வேகத்தைப்
பார்த்த புதுகோட்டை மன்னர் அதற்குத் தடை விதித்தார் என்றால் இவர் ஈட்டிய பொருள் எவ்வளவு
என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
இவருக்கு போட்டியாக
இருந்தவர் தியாகராஜ பாகவதர் ஒருவர் மட்டுமே. அவரும் இவர் அளவிற்குக் கற்பனாஸ்வரம் பாடுவதில்
வல்லவர் கிடையாது. இருவர் ரசிகர்களுக்கும் இப்போது நடப்பது போலவே அப்போதும் மோதல் நடந்தது.
இந்த சந்தர்ப்பத்தில்தான் இவரின் சுதர்ஸன் படம் தயாராகிக் கொண்டிருந்தது. இந்திய நாடகக்
கூறுகளுடன் இருந்து வந்த நாடகக் கலை அப்போது கொஞ்சம் கொஞ்சமாக ஷேக்ஸ்பியர் பாணியில்
சமூகக் கதைகளுக்குத் திரும்ப ஆரம்பித்தது. புராணக் கதைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்
வாங்கிக் கொண்டிருந்த நிலை. மிகப் பெரிய கலை மாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருந்த சின்னப்பாவின்
தேவையும் முடிவுக்கு வந்தது.
சுதர்ஸன் தோல்வி
அடைந்தது. அதைப் பார்க்க சின்னப்பா உயிருடன் இல்லை. தம் முப்பத்தைந்தாம் வயதில்
1951இல் மரணமடைந்ததார்.
சங்கீதத்திலும் இயல்பான
நடிப்பிலும் வீர சாகஸங்களிலும் பிரேமை கொண்டிருக்கும் தமிழ் நெஞ்சங்களில் அவர் இன்னமும்
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக