புதன், 16 செப்டம்பர், 2015

நல்லூர் மனிதர்கள் - அஸ்வத் நாவல்கள் பற்றிய வெங்கட்சாமிநாதனின் விமர்சனம்



அஸ்வத் இதற்கு முன் நல்லூர் மனிதர்கள் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். ஏழெட்டு வருஷங்களாகி விட்டன. இதுவும், இதன் தலைப்பு என்னவாக இருந்தாலும், நல்லூர் மனிதர்களைப் பற்றியது தான். மொத்தம் கிட்டத்தட்ட 800 பக்கங்களுக்கு நல்லூர் மனிதர்களைப் பற்றியது தான். மொத்தம் கிட்டதட்ட 800 பக்கங்களுக்கு நல்லூர் மனிதர்களைப் பற்றிய ஒரு பெரிய saaga  இது.
நல்லூர் ஒரு சமஸ்தானத்தின் தலைநகரம். பெரிய நகரம் அல்ல. புதுக்கோட்டை, கொச்சி மாதிரி... மால்குடி மாதிரி... ஃபாக்னரின் யாகனபடாவா மாதிரி கற்பனை அல்ல. நிஜம். அதில் சொல்லப்பட்டிருக்கும் மனிதரும், அநேகர். அநேகமாக நிஜம். அச்சான பதிவு என்று சொல்லும் நிஜம் அல்ல. கொஞ்சம் ஸ்வதந்திரம் எடுத்துக் கொண்டு சாயல்களிலும் விவரங்களிலும் மாற்றம் செய்த ஸாரம் தொடரும் நிஜம். நமக்கு அந்த அநுபவத்தையும், வாழ்க்கைப் பதிவுகளையும் சொல்லத் தேவையான நிஜம்.
நல்லூர் சமஸ்தானமாக இருந்ததற்கும் முந்திய காலத்திலிருந்து அதன் வாழ்கதியைப் பற்றி, மனிதர்களைப் பற்றி சொல்லி வருகிறார் அஸ்வத். நல்லூருக்கு பாரிஜாத நல்லூர் என்றோ என்னவோ ஒரு பெயருண்டு. அது மறந்து விட்டது. மறந்து தான் போகும். மகா கவி குவேம்பு ரோட், கலைஞர் கருணாநிதி நகர் போன்ற படாடோபங்கள் எல்லாம் மக்கள் நாவில் புரள்வதில்லை. எம்.கே.கே. ரோட், கே.கே. நகர் என்றுதான் கூனிக் குறுகிப் போகும். மகாத்மா காந்தியே எம்.கே.ஜி. ஆகும் போது இப்படித்தான் ஆகும் மற்றவையும். இது சின்ன விவரம் தான். இருந்தாலும் குறித்துக் கொள்ள வேண்டும். இந்த சின்ன விவரத்தையும்.
அரண்மனைக்குள் ஒரு சந்நிதி, குருமூர்த்தி சந்நிதி. மகாராஜாவின் மூதாதையருக்கு அருள் பாலித்த ஒரு பண்டாரச் சாமியாரின் சந்நிதி. ராஜா நான்கு வீதிகளையும் சுற்றி குருமூர்த்தி சந்நிதியில் அபிஷேக ஆராதனைகள் செய்து அரண்மனை திரும்புவார். வழியில் மக்கள் தெருவில் நீர்தெளித்து கோலம் இட்டு, மன்னனுக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செய்வார்கள். இது ஒரு கால கட்டம். அக்கால கட்டத்தில் அனந்த ராமன் என்னும் ஒரு பள்ளி ஆசிரியர். ஒரு நீண்ட வித்வத் நிறைந்த கனபாடிகள் குடும்பத்தின் வித்து, மன்னருடன் டென்னிஸ் ஆடுவார். கல்லூரி ஆசிரியப் பதவியையும், நிர்வாகத் துறையின் அதிகார பலத்தையும் துறந்து பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுப்பதையே விரும்பியவர். ஷேக்ஸ்பியரை வரி பிசகாது ஒப்பிக்கவல்ல அவர் ஷேக்ஸ்பியரை அனந்தராமன் என்று பிரஸித்தமானவர். சம்பளம் ரூ 13. செலவுகள் ரூ 5. வசதியான வீடு வேண்டும் என்றதற்கு ஹநுமந்த் ராவ் ரூ. 2க்கு வாடகைக்கு வீடு தருகிறார். உங்கள் அப்பா வேத வித்து. அவரும் நீங்களும் எங்கள் வீட்டில் குடியிருந்தால் எங்களுக்குப் புண்ணியம் என்கிறார் அவர். பின்னர் அனந்தராமன் 5000 ரூபாய்க்கு வீடு கட்டிக் கொண்டு போகும் போது, ஹநுமந்தராவ் விக்கி விக்கி அழுகிறார். அனந்தராமனுடன் அரட்டை அடிக்கும் நண்பர் வெங்கிடராம பிள்ளை சமஸ்தான நீதிபதி, அவர் தீர்ப்புகளில் அனந்தராமனின் மூளைக்கும் பங்கு உண்டு என்று அங்கு பலர் நம்புகிறார்கள். பின்னர் இவர்களிடையே சொந்த வாழ்க்கை உரசல் ஏற்படுகிறது. அது வெங்கிடராம பிள்ளைக்கு அனந்தராமனிடம் பகைமை கொள்ள வசதியான சித்தாந்த, அரசியல் பகையாகிறது. வீடு கட்டியது சின்னையா என்ற கொத்தனார். அவருக்குக் கொடுக்கப்பட்டது ரூ. 5000. அதில் காரைக்குடி செட்டியார்கள் வீடு மாதிரி கட்டிக் கொடுத்ததும் அல்லாமல் இவ்வளவுதான் செலவாயிற்று என்று மிச்சப் பணத்தை அனந்தராமனுக்கு சின்னையா கொடுக்கிறார்அந்தக் கால காண்டிராக்டர். இப்படி ஒரு காலம். இப்படிபட்ட மனிதர்களைக் கொண்டு நல்லூர் கதை சொல்லப்படுகிறது. அநேகமாக அனந்தராமனை மையமாக வைத்தே பலர் அறிமுகமாகிறார்கள். நிறைய மனிதர்கள். உடற்பயிற்சிக்கு ஆசிரியராக ராஜாவால் கீர்த்திவாசன் நியமிக்கப்படுகிறார். ஜனத்தொகை கணக்கெடுப்பு அனந்தராமன் பொறுப்பில் வருககறது. அமானுல்லா என்று ஒரு திவான் நியமிக்கப்படுகிறார். அரண்மனைச் சொத்துக்கள் களவு போகின்றன. சட்டத்தை மீறாத கொள்ளை நடக்கிறது. அந்தக் காலத்திலேயே விஞ்ஞான பூர்வமான கொள்ளை தொடக்கம் பெற்றுவிட்டது எனத் தோன்றுகிறது. திவான் அமானுல்லாவுக்கு, அனந்தராமனைக் கண்டு பொறாமை, பகை. கோயில் நிலங்களை குத்தகைக்காரர்கள் கபளீகரம் செய்கிறார்கள்.
அமானுல்லா தண்டனையாக, அனந்தராமனை கல்லூரிக்கும், நிர்வாகத்திற்கும் மாற்ற முயல்கிறார். அனந்தராமன் பள்ளி ஆசிரியராகத்தான் இருப்பேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். ராஜாவிடமிருந்து ராஜ்யம் பறிக்கப்படுகிறது. குடிபடைகள் சோகத்தில் ஆழ்கிறார்கள். ராஜா கொஞ்ச தூரத்தில உள்ள சமணப்பள்ளிக்கு குடிபோகிறார். நல்லூருக்கு வந்தால் நல்லூர் தண்ணீரைக் கூட அவர் தொடுவதில்லை.
மாடுகளைப் பராமரிக்கும் அழகிய மணவாளப் பிள்ளையின் ஒரே செல்ல மகன் மேலே படிக்கத்தான் போகிறேன் என்று பிடிவாதம் பிடித்து டாக்டராகிறான். அவனது திறமையிலும், புகழிலும், சேவை உணர்விலும் ஒரு ரங்காச்சாரி நிழலாடுகிறார்.
சமஸ்தானத்திலும் ஒரு கலவரம் நடக்கிறது. ராணுவம் வந்து அதை அடக்க வேண்டி வருகிறது. அக்காலத்திய மலபார் கலகம் பிரஸித்தம்.
இப்படித்தான் நமக்கு ஆசிரியர் பரிச்சயப்படுத்தும் மனிதர்கள், சம்பவங்கள் எல்லாம் நாம் கேட்டறிந்த பலவற்றை நினைவு படுத்துகின்றன. வகுப்பு வாரி பிரதிநிதித்வம், பதவி சுழற்சி, நீதிக்கட்சியின் உந்துதல்கள், தொடக்கங்கள், ஏழ்மையிலிருந்து உயர்ந்த பல பெரியவர்கள் (முத்துசாமி அய்யர், மணி அய்யர் இத்யாதி, டாக்டராக ரங்காச்சாரி) தண்டாயுதபாணி என்று ஒருவரைப் பற்றிச் சொல்கிறார். படிப்பில் அக்கறை இல்லை. எப்போது பார்த்தாலும், பானையைத் தட்டிக் கொண்டிருப்பான். இப்படி இவன் தன் பாட்டுக்கு ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கும் போது, சுப்பையா பாகவதர் என்ற ஒரு ஜலதரங்க வித்வான் இவன் பானைக் கச்சேரியைக் கேட்டு பிரமித்து அவனைத் தன் பொறுப்பிலேயே சிட்சை செய்வித்து வித்துவானாக்கி விடுகிறார்.
இப்படி நடந்த சரித்திரங்கள் உண்டு. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இப்படித்தான் ஒரு குதிரை வண்டிக்காரன் நுகத்தடியில் தாளம் போடக் கேட்டு அவனை தன் பராமரிப்பில் எடுத்துக் கொண்டு, மிருதங்கமோ தவிலோ, தெரியாது, வித்வானாக்கிய சரித்திரம் உண்டு. அந்த நடேசன் புகழ் பெற்றாலும் அதிக நாள் உயிரோடிருக்கவில்லை. அஸ்வத் சொல்லும் தண்டாயுதபாணி, எல்லோரையும் ஆண்டவனே என்றுதான் விளிப்பார். இது புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்திப்பிள்ளையைப் பற்றிச் சொல்லும் குணவிசேஷம். மிகுந்த பணிவும், கனிவும் உள்ளவர். பெரிய மேதை, இருப்பினும் கஞ்சிரா தூக்கி வருபவனும் ஆண்டவனே என்று விளிக்கத்தக்க ஆண்டவன் ஸ்வரூபம் தான். லயத்துக்கே பேர் போன ஊர் நல்லூர் என்று சொல்கிறார் அஸ்வத். புதுக்கோட்டையைப் பற்றியும் தான் இப்படி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
சங்கீதம் பற்றி எழுதும்போது அஸ்வத் மிகுந்த லயிப்போடு எழுதுகிறார். பல இடங்களில் நமக்கு அவர் ஜானகிராமனை நினைவுக்கு கொண்டு வருகிறார். இவர்கள் சங்கீதத்தைப் பற்றி எழுதும்போது அது ஒரு தொழில் நுட்பமாக வெளிவருவதில்லை. தவம், யோகம், ஞானம், சித்தி, கனிவு, பரிவு இப்படியான மனிதனின் உயர்ந்த பாவங்களில் ஒன்றாக, பக்தியும், இறைமையும், பரவசமும் கொண்ட ஒன்றாக, மனிதனையே மாற்றிப் புடம் போட்டுவிடும் ஒன்றாகத்தான் நமக்கு இவர்கள் எழுத்தில் அது அநுபவமாகிறது.
அனந்தராமனுக்கு சங்கீதத்தில் ஈடுபாடு கிடையாது. இருப்பினும் ஒரு நாள் தற்செயலாக தண்டாயுதபாணியின் கச்சேரி கேட்கிறார். கச்சேரி முடிந்தது கூடத்தெரியாது, உணராது, தன்னை இழந்து இருக்கிறார்.
தனித்திருக்கும் அனந்தராமனை அணுகி ஆண்டவனே கச்சேரி முடிஞ்சிரிச்சி என்கிறார் தண்டாயுதபாணி.
என்ன முடிஞ்சுடுத்தா. நாதமும், மிருதங்க த்வனியும் இன்னும் என் காதிலே கேட்டிண்டுருக்கே என்கிறார் அனந்தராமன்.
ஏதோ கஞ்சிக்கு அடி என்கிறார் தண்டாயுதபாணி.
அந்தக் கையக்குடுங்கோண்ணா. கண்லே ஒத்திக்கறேன். உங்க புண்யத்திலே கிஞ்சித்தாவது எனக்கு வரதா பார்க்கலாம் என்ற அனந்தராமனிடம், தண்டாயுதபாணி என்ன ஆண்டவனே இந்த வார்த்தை பேசறிய? வேதம் சொல்ற உங்க கைய நான்ல ஒத்திக்கணும்? என்கிறார். இதற்கு அனந்தராமன், வேதமாவது ஒண்ணாவது, அதெல்லாம் அப்பாவோட போச்சு என்று பதில் அளிக்கிறார்.
இதில் யார் யாருக்கு உயர்ந்தவர் என்று தோன்றுகிறது? இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் ஆண்டவனே தான்.
இந்த இரண்டு மனிதர்கள், இந்த பேச்சு இந்த பண்பாடு, ஒரு கால கட்ட நிகழ்வு.
எப்போது பார்த்தாலும், விறகுக் கட்டையைத் து£க்கி கொண்டு அலையும் கல்யாணம் என்ற ஒரு பைத்தியமும் நல்லூர் மனிதர்தான். எவராவது கூப்பிட்டுச் சோறு போட்டால் உண்டு. ஊருக்குப் பைத்தியம் தான்.
ஒரு வீட்டில் நடந்த தனிப்பட்ட விசேஷமாக நடந்த பாட்டுக் கச்சேரியில், விறகுக்கட்டை கல்யாணம் மாமா நானும் பாடட்டுமா? என்று கேட்கிறார். ஒரு புன்சிரிப்புடன் அநுமதி கிடைக்கிறது. "கல்யாணம் மாமா பாட ஆரம்பித்தார். ஏதோ வடநாட்டு சங்கீதக்காரன் வெல்வெட்டில் வைரங்களை உருட்டிவிட்டாற் போல் குரல் சரளமாகப் புரள ஆரம்பித்தது. முதலில் காத்ரமான சாரீரம் போல் இருந்தது. காத்ரத்திலேயே நன்றாகப் புரளக்கூடிய வகை. கோபாலச்சாரியார் எப்போதாவது து£றல் தெளித்தாற்போல் போடுகிற பிருகாவை, கல்யாணம் மாமா அநாயாசமாக உருட்டிவிட்டார். என்னவோ எங்கேடா? என்றால் இதோ வந்தேன், எஜமான் என்று கையைக் கட்டிக் கொண்டு முன்னால் வந்து நின்றது அது. கெஞ்சிக் கூத்தாடவில்லை. அதுவாக வந்து என்னை எடுத்துக் கொள் என்று கெஞ்சிற்று. ஒன்றில்லை. ஏகப்பட்ட வேலையாட்கள்.
இப்படி ஒரு எழுத்து, இந்த நடை, இந்த பாவம், ஜானகிராமனை நமக்கு நினைவுபடுத்துவது எதனால்? சங்கீதத்தினாலா? தஞ்சை மண்ணின் விசேஷமா? அல்லது உயர்ந்த சங்கீதம் இப்படிப்பட்ட மனிதர்களாகத்தான் உருவாக்கும் என்பதாலா? இன்னும் ஒன்று. இந்தக் காலம். இந்த சுபாவம். ஹரிகேசநல்லூர் முத்தைய பாகவதர் காலம். தக்ஷ்ணாமூர்த்திபிள்ளை, காஞ்சிபுரம் நயினப்பிள்ளை போன்றோர் காலம். அந்தக் காலம் ஜானகிராமனுக்கு பராபரியாகக் காதில், அவர் அப்பா சொல்லி விழுந்த காலம். அதற்கு ஒரு தலைமுறைக்குப் பிறகு பிறந்த அஸ்வத்துக்கு இது செய்தியாக அல்ல, பாவ விசேஷங்களோடு வந்து சேர்ந்தது எப்படி? அது இவ்வளவு ஜீவத் துடிப்புடன், எழுத்தில் வருவது எப்படி?
அனந்தராமனின் அண்ணா எப்போதோ ஓடிப்போனவர் தாடியும் கிழட்டுத்தனமாக பைத்தியம் பிடித்த பிச்சைக்காரனைப் போல தண்டாயுதபாணிப்பிள்ளை வீட்டில் எதிர்ப்படுகிறார். அந்த பைத்தியப் பிச்சை தண்டாயுதபாணி பிள்ளையைக் கேட்கிறது. என்னடா, எத்தனை நாழி? பீடி வாங்கிண்டு வந்தியா இல்லையா? என்று.
ஒரு வேளை அப்பன் பாடு அப்படியும் முழுதும் போய்விடவில்லை. சில காலம் மீறி தலை காட்டிக் கொண்டு தான் இருக்கின்றது.
பஜனை கதாகாலட்சேபம், உஞ்ச விருத்தி, நரஸிம்ம ஜெயந்தி அன்னதானம் என்று பல குண விசேஷங்களை உருட்டித் திரண்ட சீதாராமன் நமக்குக் கிட்டத்திய பாபநாசம் சிவனைக் கொண்டே உருவாக்கப் பட்டிருக்கலாம். ரொம்ப தூரம் ஸதாஸிவ பிரும்மேந்திரருக்கு நாம் போக வேண்டியதில்லை.
உஞ்ச விருத்தி எடுத்து அன்னதானம் செய்யும் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒரு மனிதர், நரசிம்ம ஜெயந்தி விழாவில் வைத்திருந்த தாலியை குரங்கு எடுத்துப் போக, வெளியில் இருக்கும் நரிக்குறவர் கூட்டத்தைக் கண்டு, அவர்களைக் கவனிக்காத குற்றத்தைத்தான் தனக்கு தாலி எடுத்துச் சென்ற குரங்கின் ரூபமாக ஆஞ்சநேயர் தனக்கு உணர்த்தியதாக எண்ணி, அந்த நரிக்குறவர்களை உள்ளே அழைத்து இலை போட்டது போன்ற விவரிப்புகள்.
சிறந்த லய விந்நியாசம் செய்வதற்கு என்ன வழி என்று கேட்டதற்கு தண்டாயுதபாணிப்பிள்ளை சொல்கிறார். அய்யா, உலகத்தில் லயமில்லாமே எதுவுமே கிடையாது. கடிகாரத்தைப் பாருங்க அந்த ஓசை எப்படி இருக்கு? மழைத் தண்ணி சொட்டு சொட்டா விழறதைக் கேளுங்க. ரயில்லே போனீங்கண்ணா தண்டவாளத்திலே சக்கரம் ஓடுற சத்தம் ஒரு லயத்திலே இருக்கு. நம்ம நடையையே எடுத்துக்குங்க. லயமில்லாத மனுஷனே கிடையாது. இதைப்போல இந்தப் பிரபஞ்சமே லயத்திலே லயத்திலேதான் இயங்கிட்டு இருக்கு. இத நாம புரிஞ்சிக்கிடணும் முதல்ல. பொறவு, இந்த லயத்திலே நம்ம இயக்கம் துடிக்கிற மாதிரி செஞ்சிரணும். சுருதி கேக்கற மாதிரி. அவ்வளவுதான் விஷயம்.
இதுவும் ஒரு காலகட்டத்திய, ஒரு தரத்து, மனிதர் சொல்லும் சங்கீதம் தான். சங்கீதம் உருவாக்கிய மனிதர் தான். இரண்டையும் கவனிக்க வேண்டும். இக்காலகட்டம் இரண்டையுமே இழந்து நிற்கும் காலம்.
நல்லூர் மனிதர்கள், பகுத்தறிவுப் பாசறைகளின் இயக்கம் தொடங்கும் காலத்தோடு முடிகிறது. அனந்தராமனின் கட்டுப்பாடுகள், நியமங்கள், பாட்டியிடம் தனியாக செல்லமாக வளர்ந்த அவர் மகன் நரஸிம்மனுக்கு ஒத்து வருவதில்லை. இந்த வெறுப்பு, பகுத்தறிவுப் பாசறையில் அவனைக் கொண்டு சேர்க்கிறது. அனந்தராமனின் கண்டிப்பும், ஒழுக்க விதிகளும், புதிதாக வந்த துணைவேந்தருக்குச்  சரிப்பட்டு வருவதில்லை. இதுபோன்ற ஒழுக்கங்களும் கூட பிராமணீயத்தால் ஏற்படுகிற கோளாறு என்று கருதும் பாசறையில் வளர்ந்தவர் அவர்.
அனந்தராமனுக்கு வயதாகிறது. பிள்ளைகளுக்குள் ஒற்றுமை இல்லை. பெண் கல்யாணத்திற்காக வீடு விற்கப்படுகிறது. ஏழ்மையிலும் அந்த வீட்டை விற்பதில அனந்தராமனுக்கு இஷ்டம் இல்லை. பிள்ளைகளுக்கு வீட்டில் பிடிப்பில்லை. அது தரும் பணம் அவர்களுக்கு வேண்டும். அந்த வீடு பல விஷயங்களுக்கு குறியீடாகிறது. நாவல் முழுதிலும் எந்த த்வனி அடியோட்டமாக உள்ளதோ அதன் குறியீடாகத் தான் வீடு தோன்றுகிறது. ஒரு நாகரீகம், ஒரு வாழ்க்கைப் பார்வை முடிகிறது.
இதுவரை, நல்லுர் மனிதர்களைப் பற்றியே அதிகம் சொல்லியிருக்கிறேன். காரணம், இரண்டாவது நாவலும் முன்னர் சொன்னது போல நல்லூர் மனிதர்களைப் பற்றித்தான். நல்லூர் வரலாற்றின் அடுத்த பட்டம். அதே மனிதர்களும், குடும்பங்களும் வருவதில்லைதான். ஆனாலும் கால கதியின் ஓட்டத்தில் நல்லூர் மனிதர்களின் இக்கால கட்டத்திய வாழ்க்கை மாற்றங்களை, மதிப்புகளைச் சொல்கிறது. நல்லூர், அல்லது காலம் ஏற்கும் வரலாற்றின் கதியைச் சொல்கிறது.
இதில் மையமாக்கப்படும் பாரதியை, சென்ற நாவலின் அனந்தராமன் குடும்பத்தின் பெண்ணாகவே எடுத்துக் கொள்ளலாம் அல்லது அவரது பிள்ளைகளில் ஒருத்தனான விஸ்வநாதனை இதில் பாரதியாக்கியும் வரலாற்றைத் தொடர நினைத்திருக்கலாம். விஸ்வநாதனிடம்தான் பாரதியைப் போல மரபின் தொடர்ச்சியும் எதிர்காலத்தை நோக்கும் ஒரு பார்வையும் காணப்பட்டது. ஆனால் பாரதி பெண்ணாக்கப்பட்டு விட்டாள். அவள் தான் புத்தகத் தலைப்பு சொல்லும் தேவதை. மற்ற சிலர், கல்லூரி மாணவர்கள், அவசளைச் சுற்றியவர்கள் வண்ணாத்திப்பூச்சிகள்தான். குமார், அருள்ஜோதி, பொருட்டெழினி என்னும் சின்னராசு, கௌதம் எல்லோரும் பாலுறவு சம்பந்தப்படாத, தெளிவாக உணரப்படாத சமயங்களில் எல்லாம், பாரதி நமக்குக் கதை சொல்லும் போதெல்லாம், ஒரு ஆண் பேசுவதாகவே எனக்குத் தோன்றியது. அந்தக் குரல், தொனி ஓர் ஆணுடையது என்று நினைப்பது ஏன் என்று தெரியவில்லை. விளக்க முடியவில்லை. அதன் காரணம், பாரதி. விஸ்வநாதனின் நிழலாக தோன்றுவதாலும் ஒரு பாகம் விட்ட இடத்தில் இன்னொன்று தொடர்வதாலும் இருக்கலாம்.
இதெல்லாம் முக்கியமில்லை. நல்லூர் மனிதர்கள் முடிவில் சொல்லப்பட்ட வரலாற்றின் பண்பு, கால ஓட்டம் மட்டும் அல்ல. ஒரு பண்பாட்டுப் பதிவு. ஒரு வரலாற்று மாற்றத்தின் தொடக்கம். முன் நாவலிலேயே பதிவாகியிருக்கிறது. வெங்கிடராமபிள்ளை என்னும் நீதிபதியின் அனந்தராமன் உறவில் மாற்றம். அனந்தராமன் பிள்ளை நரஸிம்மனுக்கு கணையாழி அன்பளிப்பு, அவர் பையன் அனந்த சயனத்தின் போக்கு. அனந்தராமனுக்கும், அமானுல்லாவுக்கும் இடையேயான மோதல்கள் இத்யாதி.
இவற்றை நாம் நேரிடையான பதிவுகள் என்றும் கொள்ளலாம். அல்லது இப்பாத்திரங்களை, வரலாற்றுப் போக்குகளின் குறியீடுகள் என்றும் கொள்ளலாம்.
அத்தகைய குறியீடுகள் தான், பாரதிக்கு எதிர் முனையில் பொருட்டெழினி என்றும் சின்னராசு, அவன் தந்தை தமிழழகன், அவர் கட்சி மாற்றங்கள், பதவி வேட்டைகள், இன்னம் ஒன்று பளீரென்று மினனலடித்து மறையும் ஒற்றுமை காவாலித்தனமாக பெண்களைச் சுற்றியலையும் தன் பிள்ளையைக் கண்டிக்காது, தன் காலிப் படைகளுடன் சென்று தன் மகனை மிரட்டி அடித்த போலிஸ் அதிகாரியால் லாக்கப்பில அடைக்கப்பட்டு, செம்மையாக உதை வாங்கிய தமிழழகன், தன் கைப்பிடியில் இருப்பதாகவும் வந்து பார்க்கலாம் என்று தவறிழைக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு போலிஸ் அதிகாரி சொல்ல, அந்த தந்தை சொல்லும் பதில்தான் பண்பாட்டின் குரலும், குறியீடும் ஆகிறது“ஐ டூ நாட் வான்ட் டு சி ஹிம்; ஹி டஸ் நாட் ஈவன்  டிசர்வ் தட்  
இது ஆச்சரியமாக இருக்கிறது. இதை அஸ்வத் எழுதி ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். இது வரலாற்றுப் பதிவு இல்லை. அஸ்வத் எழுதியது பின்னர் நிகழ்ந்துள்ளது. அப்படியே அல்ல. இந்தமாதிரி சாயல்களில். எப்படி இது சாத்தியமாகிறது? இவையெல்லாம் சில மனிதக் கூட்டங்களின், கட்சிகளின் சைக்கி.ஆதலால் இவை என்றும் நடப்பது, இனியும் நடக்கும்.
பாரதியைச் சுற்றிய கல்லூரி மாணவர்கள் ஓரிரண்டு வருடங்கள் முன்னும் பின்னுமானவர்கள். அவரவர்கள், பின் நிகழ்ந்த இன்றைய பண்பாட்டு மாற்றங்களை, சீரழிவை வெவ்வேறு வண்ணங்களில் அச்சீரழிவின் நாயகர்களாக, துணைவர்களாக, அல்லது பார்வையாளராக அமைந்து விடுகின்றனர்.
பாரதியின் அப்பா பழங்காலத்து மனிதர். ஒரு கட்டத்திய பண்பாட்டின் சின்னம். முந்தைய கதையின் அனந்தராமன். பாரதி குமார் எல்லாம் அதன் சாரத்தோடு, தம் வாழ்க்கையைத் தொடர்பவர்கள். சில தோற்றங்களை, சடங்குகளை உதிர்த்தவர்கள். இதை முற்றிலும் எதிர்த்துக் கேள்வி கேட்டவன் கௌதம். பாரதி அவனிடம் சாய்ந்து பின்னர் குமாரிடம் திரும்புவதும் மரபுகள் தம்மை எப்படி எங்கெங்கோ சுற்றி என்னென்னவோ பாதிப்புகளை ஏற்றாலும் பின்னர் திரும்பத் தன்னை புதுப்பித்துக் கொண்டு தம்மை தக்க வைத்துக் கொள்கின்றன என்பதைக் குறிக்கும் எல்லாவற்றையும் முழுவதுமாக எதிர்பபவன் அருள்ஜோதி. உலகம் அவனுக்காக வேண்டும். எல்லாம் தனக்கு, தான் யாருக்கும் உரியனல்லன். எதையும் தனக்காக்கிக் கொள்ள அவனிடம் இருப்பவை, ஆசை, உடல்பலம், இவன் முந்தைய கதையின் தமிழழகன் பொருட்டெழினி ஆகியோரின் அடுத்த தலைமுறை.
இப்படியாக இந்த இளம் தலைமுறையினரைப் பற்றி அறியும் போதே, இன்னம் பல பழம் தலைமுறையின் எச்ச சொச்சங்களையும், சந்ததிகளையும் பார்க்கலாம். இவர்களில் பலர் நமக்கு முன்னரே அறிமுகமானவர்களின் சாயல்களில், சாயல்களில்தான் பார்க்கலாம்.
சிலரின் குணமாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்வது கஷ்டம் அருள்ஜோதியின் ஆரம்ப மிருகத்தனம். அது குழந்தைத் தனம் என்று சிலரால் சொல்லப்படுவது. பின்னர் அவன் பாரதியிடம் காட்டும் கனிவு, பரிவு, மரியாதை எல்லாம். கௌதம், அருள்ஜோதியின் கட்டைப் பஞ்சாயத்தில் அடிபட்டுக் கொண்டு காட்டும் மனத்திடம் பின்னர் அவன் காட்டும் உற்ற மாற்றங்கள் குமாரின் மறைவான திட்டங்கள் காய் நகர்த்தல்கள், இப்படியாக பல. ஆனாலும் ஒரு சில முக்கியமானவை என்று எனக்குத் தோன்றுவனவற்றை அடிக்கோடிட்டு நான் பதிவு செய்ய வேண்டும்.
நல்லூர் மனிதர்கள் புத்தகத்தை இரண்டு முறை படித்துவிட்டேன். ஆக வருடங்களுக்கு முன்பு ஒரு முறை. இப்போது ஒருமுறை. இப்போதைய நாவலை ஒரு முறை. இனிவரும் வருடங்களில் இவ்விரண்டையும் படிக்க நேரிட்டால். இதைத்தான் படித்தாகிவிட்டதே, இனி ஏன் மறுபடியும் என்று இவற்றைத் தள்ளமாட்டேன். மறுபடியும் சந்தோஷத்துடன் படிப்பேன் அத்தகைய ஒரு கவர்ச்சியும் தேர்ச்சியும் அஸ்வத்தின் எழுத்துக்களில் காணமுடிகிறது. இப்படி ஒரு மனமுதிர்ச்சியும் திறனும் உள்ளவர் ஏன் இவ்வளவு தாமதமாக நமக்கு அறிமுகமாகிறார் என்பது தெரியவில்லை.
அஸ்வத்தின் எழுத்தில், அதன் பிரவாகம் முழுதிலும், எழுதப்படுவது மனிதரும், சம்பவங்களும் பாராட்டாகவோ, கண்டனமாகவோ. எப்படி இருந்தாலும், அவற்றின் அடிநாதமாக இழையோடும், எளிய நகை உணர்வு. ஒரு மிருதுவான கிண்டல். இவற்றிற்கும் அடியில் ஓர் இன்னம் மெல்லிய இழையோட்டம். ஒரு பிடிபடாத சோகம்.
மறுபடியும் அஸ்வத்தின் எழுத்துக்களைப் படிக்கும் போது எனக்கு ஜானகிராமன் தான் எதிர் நிற்கிறார்பாவை சந்திரனைப் படிக்கும் போதும் இப்படித்தான் தோன்றிது. ஜானகிராமன் மாதிரி சின்ன சின்ன வாக்கியங்கள் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளாக நிறைய அடுக்கிக் கொண்டே போகும் விவரிப்புகள், வர்ணனைகள். மனித சுபாவங்களைப் பற்றி மதிப்பீடுகள். எல்லாவற்றிற்கும் மேலாக சங்கீதம் பற்றி எழுதும் போதும், சங்கீத கலைஞர்களைப் பற்றி எழுதும் போதும் அவர் எழுத்தில் ததும்பி எழும் பரவசம் இருவரதும் கட்டத்தட்ட ஒரே மாதிரியான எழுத்து. மோகமுள்ளில் நம் அன்றாட வாழ்க்கையில் எதிர்ப்படும் சப்தங்களைக் கூர்ந்து கவனிக்கச் சொல்லும் இடம் தாம்பாளம் விழுந்து அது எழுப்பும் ஒலி அதிர்வுகளைச் சொன்னது எனக்கு, தண்டாயுதபாணிப்பிள்ளை நம்மைச் சுற்றி எங்கிலும் இயற்கையில் காணும் லயங்களைப் பற்றிச் சொல்லும்போது நினைவுக்கு வந்தது. நிறைய இடங்களை அநுபவித்து எழுதுகிறார். அந்த அநுபவம் தொழில் அநுபவம் இல்லை. ராக லட்சண எடை போடல் இல்லை. பரவசம்.
எழுத்தாளர்கள் அநேகர் அந்தக் காலத்தில் தஞ்சாவூர்க்காரர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போது அப்படி இல்லை. காவிரி வற்றிவிட்டது. என்ன காரணத்தாலோ கோவில்பட்டியில்தான் அமோக விளைச்சல். அந்தக் கரிசல்காட்டில் கருவேலமரத்தை விட்டால், வேறு என்ன விளைகிறதோ இல்லையோ, எழுத்தாளர்கள் மூன்று போகம், நான்கு போகம் விளைகிறார்கள். எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் எழுத்தாளர் பெரும்பாலோர் தஞ்சைக்காரர்களாக இருந்தாலும், தஞ்சை சங்கீதத்தின் ராஜபீடமாக இருந்தபோதிலும், ஜானகிராமனிடம் மட்டும்தான் அந்த மண்ணின் இந்த வாசனை அடித்தது. சிதம்பர சுப்ரமணியம் எல்லாம் ஒன்றும் சொல்லும் படியாக இல்லை. சங்கீதத்தின் பிரஸன்னம் ஜானகிராமனிடத்தில்தான்.
ஜானகிராமன் எழுத்தில் எனக்குள்ள அத்யந்தப் பிரேமை ஒரு புறம் இருக்கட்டும். அஸ்வத்திலும், பாவை சந்திரனிடத்திலும் நான் ஜானகிராமனைக் காண்பது. இவர்கள் எழுத்திலும், அலட்டலும், பாவனைகளும் இல்லாத ஜானகிராமனின் எளிமையும், உண்மையும் இருப்பதும் ஒரு காரணம். அல்லது தஞ்சை மண்ணைப் பற்றிச் சொல்வதாலா, அல்லது நானும் இவர்களும் தஞ்சையைச் சேர்ந்தவர்கள் என்பதாலா தெரியாது. அஸ்வத், தான் புதுக்கோட்டைக்காரர் என்கிறார். புதுக்கோட்டையில் காவிரி எப்படிப் பாய்ந்தது என்று தெரியவில்லை.
அடுத்து இன்றைய பாஷனாகிப் போன சாரம் தேடும் எழுத்துக்களில் அதி யதார்த்த, மாந்திரீக யதார்த்த, பின் நவீனத்துவ, இத்யாதி இத்யாதி எழுத்துக்களில் அவர்கள் சொல்லிக் கொள்ளும் இன்றைய தமிழக வாழ்வின் அநுபவத்தின் சாரம் பதிவாவதில்லை. நாம் அநுபவித்து வரும் வரலாற்று மாற்றங்கள் இந்த பிரம்மாண்டமும், அகோரமுமான பண்பாட்டுச் சரிவுகள் பதிவாவதில்லை. இவற்றை பதிவு செய்ய ஒரு தைரியம் வேண்டும் அல்லது இழக்க ஏதும் இல்லை என்று நிற்க வேண்டும். அல்லது எதையும் விழையாத மனம் வேண்டும். எப்போது பொருட்டு எழினிகளும், தமிழழகன்களும் எப்போது, எத்தகைய மூர்க்கத்துடன் எதிர்ப்படுவார்கள் என்று சொல்லமுடியாது. அதனால்தானோ என்னவோ வாழ்க்கையின் சாரத்தின் தேடல் என்றும், பன்முக வாசிப்பு என்றும் சொல்லிச் சொல்லி தமிழும் அல்லாத, நாம் அநுபவித்து அவஸ்தைப்படும் வாழ்க்கையும் அல்லாத எதையோ எழுதும் அலட்டல்கள் நடக்கின்றன.
ஆக, இதுகாறும் பதிவாகாத வரலாறு அஸ்வத்தின் இவ்விரண்டு புத்தகங்களில் பதிவாகியுள்ளது. இப்போது ஃபாஷன் இல்லாத, எளிய, நமக்குப் புரியும், நம்மை பாதிக்கும், நம்மைச் சிந்திக்க வைத்து, எளிமையான புன்னகை தரும் அழகான எழுத்து. இதில் பயமறியாத தைரியம் உண்டு. வருவது என்ன என்று எடைபோட்ட தைரியம் அல்ல. நேர்மை உண்டு. அழகும் உண்டு.
ஃபாஷன் இல்லாததும் எளியதும் நேரியதும் ஆன ஒன்றை உயர்த்திப் பிடிப்பதில் எனக்குத் தயக்கம் இல்லை. நானும் புதுமை அறியாத கட்டுப்பெட்டியாக இருந்துவிட்டுப் போகின்றேன். எனக்குத் தெரிந்ததைத்தான் செய்யமுடியும். உணர்ந்ததைத்தான் சொல்லமுடியும்.
இப்புத்தகத்தின் தலைப்பு ஒன்றுதான் நல்லூர் மனிதர்கள் என்ற தொடக்கத்திற்கு மாறான குணம் கொண்டதாக ஆகிவிட்டது. ஏன் இந்த நைந்து போன மரபார்ந்த வர்ணனைச் சொற்கள்?

படித்துறை, ஜூலை 2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...