அயன்ராண்ட் பற்றிய
விவாதங்கள் மீண்டும், மீண்டும் ஜெயமோகனின் வலைப் பக்கத்தில் தற்செயலாகக் கண்ணில்
பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இந்தியச் சூழலில் அயன்ராண்டை நாம் எப்படிப் புரிந்து
கொள்வது அல்லது உள் வாங்கிக் கொள்வது? கொஞ்சம் கடினமான செயல்தான். என்றாலும்
முயற்சிக்கலாம்.
நான் கல்லூரி
படிக்கும்போது விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது என் அறை நண்பனைப் பார்க்க அவன்
பள்ளி நண்பன் வருவான். அவனைப் பார்க்க வருவது பாதி, சிகரெட் குடிக்க வருவது மீதி.
அப்போது நானும் புகைக்கும் பழக்கம் கொண்டிருந்ததால் அவன் எனக்கும் பெரிய
நண்பனாகிவிட்டான். தவிரவும் என்போன்று பொறியியல் கல்லூரியில் இடம்
கிடைக்காதவர்களுக்கு அவன் போன்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் மீது பெரிய மயக்கமே
உண்டு.
இந்த நண்பன்
அயன்ராண்டைப் படிக்க ஆரம்பித்தவன் பைத்தியம் போல் ஆகிவிட்டான். படிப்பில் நாட்டம்
இல்லாது போய்விட்டது. குளிக்காமல் ‘புல்கானின்’ தாடியுடன் ஒரு மாதம் தோய்க்காத
ஜீன்ஸைப் போட்டுக் கொண்டு மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.
பரிட்சை எழுதாமல் நிறைய பேப்பர்கள் ‘அரியர்ஸ்’ வேறு. கடைசியில் சக மாணவர்கள்
உதவியுடன் கழிப்பறையில் போய் பதில்களைப் பெற்றுவந்து ஒருவழியாக பொறியியல்
பட்டப்படிப்பை ஒப்பேற்றினான். அதிலிருந்து மீண்டு வர அவனுக்குக் கிட்டத்தட்ட பத்து
வருடங்கள் பிடித்தன. படிப்புக்கு சம்பந்தமில்லாது காப்புறுதி ஏஜெண்ட் ஆகி
ஜீவனோபாயத்தை நடத்தி வருகிறான்.
இவனுக்கு அயன்ராண்டை
அறிமுகம் செய்த இன்னொரு நண்பன் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல
பண்பாடான குடும்பம் பெற்றோர், தம்பி, தங்கை எல்லோரையும் உதறித் தள்ளிவிட்டு
பெங்களுருடன் போய்விட்டான்.
வேலைக்குப் போய்
ஒருமுறை பெங்களுர் சென்றிருந்த போது என் உறவினர் ஒருவரைப் பார்ப்பதற்காக அவர்
பணிசெய்யும் வங்கிக்குச் சென்றிருந்தேன். அங்கே தற்செயலாக மேற்கூறிய வங்கி
ஊழியனைச் சந்தித்தேன். குறிப்பாக அவன் தன்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் ஊழியரைப்
பற்றி பாராட்டாகப் பேசிக் கொண்டிருந்தான். அந்த அம்மையாரை நானும் பார்த்தேன். நல்ல
உயர்தர மத்திய வர்க்கத் தோற்றம். ஜீன்ஸ் பேண்ட், சட்டையுடன் முதுமையை மறுதலிக்கும்
பாவத்துடன் என்னை முறைத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார். நண்பன், அவரும்
அயன்ராண்டின் பெரிய வாசகர் என்று கூறியதில் நான் வியந்து போய் அவரை என்னை
அறியாமலேயே முறைத்துக் கொண்டிருந்திருக்கிறேன் போலிருக்கிறது. அதனால்தான் அவரும்
என்னை முறைத்துக் கொண்டு சென்றார் போலும்.
பின்னர் என் உறவினர்
அந்தப் பெண்மணியின் கணவன் சீட்டாட்ட விடுதியில் பழியாகக் கிடந்ததாகவும் அதனால்
பெண்மணி அவருடன் வாழவில்லை என்றும் தெரிவித்தார். அத்துடன் என் நண்பனுக்கும்
அவருக்கும் ஏதோ கள்ள உறவு என்று தெரிவித்தார். உண்மையா, பொய்யா தெரியவில்லை. ஒரு
ஆணும், பெண்ணும் சகஜமாகப் பேசிக் கொண்டாலே இதுபோன்ற வம்புகள் சகஜம்தான்.
என்னுடைய புகைக்கிற
நண்பன் கிட்டத்தட்ட பைத்தியம் பிடித்த மாதிரி ஆனபின் சரி அப்படியென்ன
எழுதியிருக்கிறது இந்தப் புத்தகத்தில் என்கிற ஆவலில் ‘அட்லஸ் ஷ்ரக்ட்’ என்கிற
நாவலை வாங்கிப் படித்தேன். கிட்டதட்ட ஆயிரம் பக்கங்கள். இதன் பின்னர் தொடர்ச்சியாக
‘ஃபௌன்டன் ஹெட்டையும்’ ‘வித் லிவிங்’கையும் வாங்கிப் படித்தேன். ‘அட்லஸ் ஷ்ரக்ட்’
கிட்டதட்ட ஒரு மர்ம நாவல் மாதிரி. துல்லியமான நடை. தெளிவான, சீரான கருத்துக்கள்,
வசீகரிக்கும் தர்க்க வாதம். மாற்றுக் கருத்தைப் புறந்தள்ளும் எள்ளல். அப்போது
நானும் கல்லூரியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். மிகவும் சிந்தனாய் பூர்வமாக
எழுதப்பட்ட படைப்பு என்பதால் அளவிலா வசீகரிப்பைக் கொண்டிருந்தது அவரின் எழுத்து.
என்றாலும் புகைக்கிற நண்பன் போன்று என் வாழ்க்கை முறை மாறிவிடவில்லை, பைத்தியம்
பிடிக்கவில்லை. எப்போதும் போல்தான் இருந்தேன்.
இப்போது நான் ஏன் அவன்
போல் ஆகவில்லை என்று நினைத்துப் பார்க்கிறேன். நாவல்களைப் படிக்கும் போதே அதற்கு,
அவற்றின் மையக் கருத்துகளுக்கு எதிர்மறையான கருத்துகள் என் மனதில் தோன்றிய வண்ணம்
இருந்தது நினைவுக்கு வருகிறது. என்னை அவைகள் கவராததற்குக் காரணம் இவற்றை நான்
படிப்பதற்கு முன்னரே என் மனதில் யானை போல் அமர்ந்து கொண்ட இந்திய கலை மரபுக்
கலாச்சாரப் படிமானங்கள் தாம் என்று தோன்றுகிறது. என் அன்னை எனக்குச் சோற்றுடன்
ஊட்டிய புராணக் கதைகள், சிறு வயதிலிருந்தே இதிகாசம், உபநிடதம் என்று வளர்ந்த சூழல்
போன்றவையே இதற்குக் காரணம். ராமனும், கிருஷ்ணனும், சிவனும், அன்னையும், முருகனும்,
முண்டகமும் யக்ஷ ப்ரச்னமும் என் மனதில் ஏற்கெனவே அமர்ந்திருந்தது காரணம்.
இந்த சமயத்தில் மேற்கத்தியப்
பொருளாதாரக் கருத்துலகத்தையும் அதற்கு முற்றிலும் மாறாக இருந்த இந்தியக்
கருத்துலகத்தைப் பற்றியும் சிந்தனை வருகிறது.
செயல் அல்லது
படைப்பாக்கம் என்று வரும்போது அதன் பொருளாதாரப் பயனைக் கருதாது மேற்கத்திய
கலாச்சாரம் கட்டமைக்கப் படவில்லை. அதற்கு முன்னரே தோன்றிய இந்தியக் கலாச்சாரக்
கூறுகளில் பொருளாதாரக் தேவைக்கான அடையாளங்கள் ஒன்றுகூட இல்லை.
அயன்ராண்ட்
எப்படிப்பட்டவர்? ரஷ்யாவில் பிறந்தவர். புரட்சியின்போது ஏற்பட்ட, அடியோடு புரட்டிய
வளர்சிதை மாற்றங்களைக் கண்ணாரக் கண்டவர். அதனால் பெரிதும் பாதிப்புக்குள்ளானவர்.
அதன் பாற்பட்ட வெறுப்பும், விரோதமும் அவரை அமெரிக்கப் பொருளாதாரம் நோக்கித்
தள்ளியதில் ஆச்சர்யம் இல்லை. என்றாலும் ‘அலெக்ஸாண்டர் சோல்சிநிட்சின்’ போலவோ
பெரிதும் கவனிப்புப் பெறாத ‘ஐசன்கேர்’ போலவோ இவரை அவ்வளவு எளிதாகப்
புறந்தள்ளமுடியாது.
காரணம் இவர் கம்யூனிசத்திற்கு
எதிராக வைத்த முதலாளித்துவம் சார்ந்த கோட்பாடு. முதலாளித்துவத்தை இயல்பான
விஷயமாய், மரபான விஷயமாய் எல்லோரும் பார்த்தார்களே ஒழிய, இதை இவர் போன்று வலிமையான
ஒரு கருத்தாக்கமாக வேறு யாராவது பதிவு செய்திருக்கிறார்களா என்பது சந்தேகமே.
கம்யூனிசத்தை விமர்சித்த எல்லோருமே அதன் கோளாறுகளை விமர்சித்தோ அங்கதம் செய்தோ
எழுதினார்களே ஒழிய, அதற்கு மாற்றான கருத்தாக வேறு எதையும் முன்நிறுத்தவில்லை.
அயன்ராண்டின்
நாவல்களின் வசீகரம் என்ன? உழைப்பு அங்கே முதன்மை பெறுகிறது. ஏட்டுக் கல்வியை
நடைமுறைப் படுத்துவதற்கு அடிப்படையிலிருந்து உழைத்தால்தான் முடியும் என்பதை வலிவாக
நிறுவுகிறார் ராண்ட். அவர் பார்வையில் அடிப்படைத் தொழிலாளியும், தலைமை வகிக்கும்
முதலாளியும் உழைப்பவர்கள் என்றால் அவர்கள் உன்னதமானவர்கள். சமத்துவம்
பேசுகிறவர்கள், ஏழைபால் பரிவு கொண்டு நடக்க முயற்சிக்கிறவர்கள், எல்லோருக்கும்
நியாயம் நடக்க வேண்டுமென்று விழைகிறவர்கள் மற்றும் போராடுகிறவர்கள் இவர்கள்
அனைவருமே தத்தம் வேலை அல்லது மனப்பான்மைக் குறைப்பாட்டினால் அப்படி நடந்து
கொள்கிறார்கள் என்று ராண்ட் கருதியிருக்கிறது தெரிகிறது.
இதற்கும் மேலாக
சமத்துவம், சகோதரத்துவமும் பேசுகிறவர்கள் உண்மையில் தங்கள் சுயலாபத்திற்காகத்தான்
அதைச் செய்கிறார்கள் என்கிறார் அயன்ராண்ட். இவற்றில் ஓரளவு உண்மை இல்லாமல் இல்லை
என்றுதான் தோன்றுகிறது.
இவர் முன் வைக்கும்
முதலாளித்துவப் பின்புலத்துக்கு நாத்திகத்தையும் அறிவு ஜீவனத்தையும், உழைப்பையும்
துணைக்கு வைத்துக் கொள்கிறார். இவருடைய கோட்பாட்டின்படி உலகில் பிறக்கும் மிகச்
சிலர் சாதிக்கப் பிறந்தவர்கள். அவர்கள் கடுமையாக உழைத்து சாதனை செய்வார்கள்,
அதற்கு வரும் எதிர்ப்புகளை சாமர்த்தியமாக எதிர்கொள்வார்கள். இவர்களின் சிந்தனை
பெரும்பாலானவர்களின் சிந்தனையிலிருந்து மாறுபட்டு இருக்கும். மெஜாரிடி மனிதர்கள்
எதிர்க்கும் பட்சத்தில் தங்கள் போன்ற ஒத்த கருத்து உடையவர்களுடன் சேர்ந்து தனி
உலகத்தையே சிருஷ்டி செய்யும் வல்லமை உடையவர்கள்.
பணவீக்கத்தை
வளர்ச்சியின் அறிகுறி என்று இவர் நிறுவுகிறார். இது உண்மையா? அமெரிக்கப் பொருளாதாரம்
எனக்கு நினைவுக்கு வருகிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தை நான் ‘கொக்ககோலா’
பொருளாதாரம் என்று நினைத்துக் கொள்வதுண்டு. தாகத்தைத் தீர்க்க அமெரிக்கர் நீர்
அருந்துவதில்லை. ‘பெப்ஸி’யோ ‘கோக்’கோ அருந்துவார்கள். இவற்றைக் குடித்தால் தாகம்
அதிகரிக்கும், தாகம் அதிகரிக்க மறுபடியும் அதையே குடிப்பார்கள்.
அமெரிக்கப் பொருளாதாரம்
இப்படிப்பட்டதே. பொருள் உற்பத்தி செய்தால்தான் பொருளாதாரம் மேம்படும். இப்படி
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வாங்கும் சக்தி ஜனங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ
வாங்க வை, எப்படி? கடனாளியாக்கு. கடன் அட்டைகள் கொடு. இப்படிப்போய் இப்போது
அமெரிக்கர்களுக்கு சேமிப்பே கிடையாது. அரசாங்கமே கடனில் தத்தளிக்கிறது. இதைச்
சமாளிக்க அடுத்த நாடுகளின் சேமிப்புகளில் கைவைத்துக் கொண்டிருக்கிறது.
இதே அமெரிக்காவின்
பூர்வகுடியான ‘சியாட்டில்’ நினைவுக்கு வருகிறார். சிவப்பிந்தியர். அமெரிக்க அரசு
ஒரு முறை இவர் ஆளுமையில் இருந்த நிலப்பகுதியைக் கேட்டபோது அவர் எழுதினாராம்
‘மண்ணும், நீரும், வானும் யாருக்குத் தனிப்பட்ட சொந்தம்? யார் உரிமை கொண்டாட
முடியும்? இறைவனின் படைப்புகளான இவை எல்லோருக்கும் பொதுவானவைதானே' என்று. இதுபோன்ற
‘ஆதிகால சிந்தனைகளைக்' கொன்று அதன்மீது தன் வளர்ச்சியை அமைத்துக் கொண்ட அமெரிக்கா
இன்றுமே குற்றவுணர்வில் தவிக்கிறது எனலாம்.
அயன்ராண்ட்
கம்யூனிஸ்டுகளின் மீது தாளமுடியாத வெறுப்பு வைத்திருந்தார். இது புரிந்து கொள்ள
முடிந்ததே. சிறுவயதில் புரட்சியின்
அலங்கோலங்களைக் கண்ணுற்றவர், பாதிப்படைந்தவர், அதன் வெம்மை தாங்காது புலம்
பெயர்ந்தவர். இந்தப் பின்னணியில் இவர் எள்ளி நகையாடும் ‘சமூக விஞ்ஞானம்’
‘சிந்திக்காதே’ ‘உணர்’ என்கிற ‘க்ளிஷேக்’களை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.
ஆனால்
அது கம்யூனிசமோ,
முதலாளித்துவமோ அறனற்ற பொருளாதாரம்தான் அது. முதலாளித்துவத்தில் முதலாளி முதன்மை
பெறுகிறான் என்றால் பொதுவுடமையில் உழைப்பாளியும், தொழிலாளியும் முதன்மை
பெறுகிறார்கள். (கம்யூனிசத்தில் இதன் பேரால் தகுதியற்ற பலர் தலைமை ஆக்ரமித்துக்
கொள்கிறார்கள்).
இவற்றிற்கு மாற்றாக நம்
தேசம் முன் வைக்கும் காந்தியப் பொருளாதாரம் அறன் சார்ந்தது. விட்டுக்
கொடுத்தலையும், பரஸ்பர அன்பையும் முன்வைத்தது. மகாத்மா காந்தி சொன்னாரே ‘நமக்கு
மிகப் பெரிய உற்பத்தி தேவையில்லை, எல்லோரும் சேர்ந்து ஈடுபடுகின்ற உற்பத்திதான்
தேவை' என்று; (We do not want mass production but we want production by the masses) அது ஒன்று மட்டுமே 125 கோடி வயிறுகளை நிரப்பும்
என்று தோன்றுகிறது. இப்படித்தான் கோயில்களையும், சிலைகளையும், வேதங்களையும்
இலக்கியங்களையும் விஞ்ஞானத்தையும் மருத்துவத்தையும் படைத்த நம் முன்னோர் நமக்கு
ஒரு விலை மதிப்பிலாப் பாரம்பரியத்தைவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில்
அயன்ராண்டை நாம் படிக்கும் போது அவரின் நிர்மாணம் உழைப்பு, உயர்வு பணம்
இவற்றிற்குப் பின் ஒளிந்திருப்பது ஹிட்லர் போன்றவர்கள் முன் நிறுத்திய ஃபாசிச
வெறிதான் என்று தோன்றுகிறது.
மேற்கூறியவற்றால் நாம்
அயன்ராண்டை, ரசித்துவிட்டு அவர் எழுதியதை அத்துடன் மறந்துவிடுவதுதான் நல்லது என்று
தோன்றுகிறது.
இது மட்டுமல்லாது
படிப்பை முடித்து அமெரிக்காவிற்குக் கூலி வேலைக்குப் போய் அங்கிருக்கும் ஓட்டைகளை
தாம் பெறும் சௌகரியங்களை வைத்து அடைத்துக் கொண்டு இந்தியக் கலாசார மரபைச் சுத்தமாக
இன்னதென்று தெரிந்து கொள்ளாமலேயே இங்கிருக்கும் ஒழுங்கீனங்களை மட்டும்
பூதாகாரப்படுத்தி இளக்காரம் செய்யும் பரதேச அலட்டிகளைப் பார்த்து நாம் வாய்
பிளப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக