ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

நேனெந்து வெதுகுதுரா-சிறுகதை


 விசு சார் தம்புராவை எடுத்து மீட்டினார். ஸுநாதமான ஒலி, ரொம்ப அருமையான தம்புரா, ‘பைஸா’ என்று ஒலியுடன் ஒன்றினார். இப்போதெல்லாம் அவ்வப்போது பிசிறு தட்டுகிறது வயதான கோளாறு.
‘நேனெந்து வெதுகுதுரா’ என்று ஆரம்பிக்கும் போது சிரஸ்தார் வீட்டு கடிகாரம் ‘டணார் டணார்’ என்று ஐந்து மணி அடித்து ஓய்ந்தது பிரும்ம முஹூர்த்தத்தில் எழுந்து, சாதகம் செய்த காலமெல்லாம் போயே போய்விட்டது. சரசு ‘தூங்கவே விட மாட்டேங்கறேள்’ என்று கத்திக் கொண்டேயிருப்பாள். அவள் குரல் ஓய்ந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.
சங்கீதம் சுட்டுப் போட்டாலும் வராது அவளுக்கு அவ்வப்போது இடித்துக் கொண்டேயிருப்பாள். நாளாக, நாளாக அதுவே அவளுக்குக் கொஞ்சல் போல் ஆகிவிட்டது. அவள் அவரைப் பற்றி அடிக்கடி உதிர்க்கும் வாக்கியம் ‘சமர்த்தே போறாது.’ அவள் போய்ச் சேர்ந்த பிறகு வீட்டில் இருந்த லட்சுமி போய்விட்டது. லட்சுமி என்றால் பணமா? ஒழுங்கும் லயம் மாறாத அன்றாட நடவடிக்கைகளும் தான் லட்சுமி. பாடிக் கொண்டே இருக்கும் போது குரல் கம்மிக் கண்களில் நீர் துளிர்த்தது விசு சாருக்கு. மேல் துண்டால் துடைத்துக் கொண்டார்.
தியாகராஜரின் அண்ணா கோபம் கொண்டு தியாகையர் பூஜித்த ராமர் விக்ரகத்தைக் காவிரியில் எறிந்து விடுகிறார். தியாகராஜர் காவேரியில் போய் ‘நேனெந்து வெதுகுதுரா’ என்று அழுது கொண்டே விக்ரகத்தைத் தேடுகிறார். ‘நான்முகனுக்கே நீ காட்சி தரத் தயங்கின போது சாதாரண ஆசாபாசங்கள் உள்ள நான் எம்மாத்திரம்?’ என்று கேட்கிறார்.
நான் சங்கீதத்தில் இத்தனை வருடங்களாக எதைத் தேடிக் கொண்டிருந்தேன்? பாட்டை முடித்து ‘ஸபஸா’ சொல்லி தம்புராவை உறை போட்டு மூடி சார்த்தி வைத்துவிட்டு எழுந்திருந்த விசு சாருக்கு இப்படித்தான் தோன்றியது.
சங்கீத சாகரத்தில் மூழ்கி என்ன முத்தெடுத்தேன்? கணக்கெழுதப் போயிருக்கலாம். மளிகைக் கடை வைத்திருக்கலாம். ரிஜிஸ்ட்ரார்  ஆஃபீஸில் பத்திரம் எழுதி வயிறு வளர்த்திருக்கலாம். இல்லாவிட்டால் அத்யயனம் செய்துவிட்டு புரோகிதத்திற்குப் போயிருக்கலாம்.
கிணற்றடியில் போய் வேஷ்டியை அவிழ்த்து மேல் துண்டைக் கட்டிக் கொண்டு கிணற்றில் தண்ணீர் சேந்தி தலையில் ஊற்றிக் கொண்டார். ஐப்பசி மாதக் குளிருக்கு சீதளம் சிலீரென்று உள்ளே இறங்கியது.
பெரிய சஞ்கீத வித்வான் ஆகிற நினைப்புதான். அது ஒரு காலம்! சங்கீதம், சங்கீதம் என்று அலைந்த காலம்! வேணு சார் வீட்டிலேயே பழி கிடந்தேன்! சம்பளமில்லாத வேலைக்காரனாக...!
உடம்பைத் துடைத்துக் கொண்டு கொடியில் கிடந்த வேஷ்டியை எடுத்து கட்டிக் கொண்டார். பஞ்சபாத்திரத்தை எடுத்து சந்தி பண்ண உட்காரும் போது, சற்று அலுப்பாக இருந்தது.
வேணு சார் சொல்லிக் கொண்டேயிருப்பார். ‘சங்கீதம் வந்தா மட்டும் போறாது, இங்கிதமும் வரணும்’ என்று. அவர் சொல்லிக் கொடுத்து, சொல்லிக் கொடுத்து இங்கிதம் நன்கு வர ஆரம்பித்த பிறகுதான் வேணு சார் சங்கீதமே ஒழுங்காகக் கற்றுத் தரவில்லை என்று புரிய ஆரம்பித்தது. விசு சார் சிரித்துக் கொண்டார். வேணு சார் என்ன செய்வார் பாவம்! அவர் சங்கீதத்தைப் பற்றி நினைக்க ஆரம்பித்த உடனேயே வேணு சாருக்குத் தான் தன் குருவிடம் பட்ட அடிகள் நினைவுக்கு வந்துவிடும். அதைப்பற்றி ஆரம்பித்து விட்டால் சங்கீதம் அவ்வளவு தான். தான் பட்ட அடிகளில் கொஞ்சமாவது சிஷ்யனிடம் வசூல் செய்து கொண்டால் தான் அவர் மனம் ஆறும் என்பது போலிருக்கும் அவர் நடவடிக்கை.
இதென்ன அபசாரமான எண்ணம் என்று ஒதுக்க முயன்றார். சங்கீத வித்வான் ஆகாவிட்டாலும் ‘பாட்டு வாத்யார்’ என்கிற பெயராவது இருக்கிறது. ஜீவனம் அதனால்தான் ஒடிக் கொண்டிருக்கிறது. கலாநிதி எழுந்திருந்து பக்கத்தில் வந்தாள். முகத்தில் அசட்டுச் சிரிப்பு.
பிடித்த ராகமென்று ‘கலாநிதி’ என்று பெயர் வைத்தேன். பெண்ணின் மேல்சட்டை பாவாடையை ஒழுங்கு செய்த விசு சார் பெருமூச்செறிந்தார். முப்பது வயது ஆகிறது. பேச வரவில்லை. வாயில் எச்சில் ஒழுகுவது தெரியவில்லை. சரசு இருந்தவரை மூன்றாம் பேருக்குத் தெரியாமல் வளர்த்து விட்டுப் போய்ச் சேர்ந்தாள் மகராஜி!
பெண்ணை பாத்ரூமுக்கு அழைத்துப் போய்விட்டார். இதெல்லாம் சரசு இருந்தவரை அவளே பார்த்துக் கொண்டாள். இது போதாதென்று வீட்டில் இல்லாத சமயங்களில் இன்னும் கஷ்டம் பிராரப்தம்!
பெண் மீது வாஞ்சை பெருகிற்று. அவள் தன் பிராரப்தத்தைத் தொலைக்க வந்திருக்கிறாள். நான் என் பிராரப்தத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறேன்.
பெண்ணுக்குத் தண்ணீர் ஊற்றி துடைத்து, பாவடை சட்டையை மாட்டிவிட்டு, ரேழியில் கொண்டு போய் விட்டு விட்டு ஸ்டவ்வை ஏற்றி உலையை வைத்தார்.
வாசலில் நிழலாடியது.
“நமஸ்காரம்.” நிகோலஸ் வந்து நின்றான்.
“வாங்கோ” என்றார் விசு சார். பாயை விரித்துப் போட்டார். என்ன பணிவு! என்ன ஈடுபாடு! என்ன அடக்கம்! இத்தனைக்கும் மேற்கத்திய சங்கீதத்தில் பெரிய டாக்டர். கர்நாடக சங்கீதத்தால் ஈர்க்கப்பட்டு கற்றுக்கொள்ள வந்திருக்கிறான். அதற்குள் நடை, உடை எல்லாமே நம்மூரக்குத் தாவி விட்டது. நெற்றி நிறைய விபூதி, குங்குமம். சந்தி பண்ணாதது தான் பாக்கி. உருவம் தான் வெள்ளைக்காரன்.
“கொஞ்சம் சமையல் வேலை இருக்கிறது. பதினைந்து நிமிடங்களில் முடிந்துவிடும். அதுவரை தனியாகப் பாடிக் கொண்டிருக்க முடியுமா? என்றார் விசு சார் குற்றவுணர்வுடன்.
“ஷ்யூர்” என்று உட்கார்ந்து கொண்டு எலக்ட்ரானிக் ஸ்ருதிப் பெட்டியை ‘ஆன்’ செய்துவிட்டு, ‘சபசா‘ என்று இழுத்தான். ‘கும்’மென்று குரல் காதை நிறைத்தது. பிலஹரி ராகத்தைச் சற்று நேரம் ஆலாபனை செய்துவிட்டு, ‘கனுகொன்டினி...’ என்று ஆரம்பித்தான். என்ன பொருத்தம்! ‘நான் காலையில் எங்கே போய்த் தேடுவேன்?’ என்று பாடிக் கொண்டிருந்தேன். ‘இவன் கண்டு கொண்டேன்’ என்று பாடுகிறான். விசு சாருக்கு கொத்தவரங்காயை நறுக்கிக் கொண்டிருக்கும் போது ஆச்சரியம் தாங்கவில்லை.
‘நேனெந்து வெகுகுதுரா’ என்று பாடிய தியாகராஜர் துழாவித் துழாவி ராமர் விக்ரகத்தைக் கண்டெடுத்து விடுகிறார். எடுத்தவுடன் ஆனந்தம் தாங்க முடியாமல் ‘தரிசனம் கிடைத்தது’ என்று பாடுகிறார். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியோ அல்லது தியாகராஜ ஸ்வாமிகளோ நிகோலஸ் மூலமாக ஏதோ செய்தி தெரிவிப்பதாகப்பட்டது. நான் இத்தனை நாளும் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறேனே, தேடிக்கொண்டிருக்கிறேனே, அதற்கெல்லாம் ஒரு இறுதியான பதில் கிடைக்கப் போகிறதா?
உலையை இறக்கிவிட்டு குழம்புப் பாத்திரத்தை ‘ஸ்டவ்’வில் வைத்துவிட்டு, கையைத் துடைத்துக் கொண்டு வந்தார். நிகோலஸ் சற்று இடம் விட உட்கார்ந்து கொண்டார். இரண்டு பேரும் மாறி மாறி பிலஹரியில் கல்பனா ஸ்வரங்களைப் பாடி முடிக்கும் போது மணி எட்டாகி இருந்தது. வேண்டாமென்று சொல்லியும் கேட்காமல் சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி விட்டு எழுந்திருந்தான். “போயிட்டு வரேன்” என்று தமிழில் சொல்லிக் கொண்டு கிளம்பினான். எங்கோ பிறந்தவன்! விவாதி ராகத்தில் பாட விரும்பி வந்தான். விசு சாரிடம் அவ்வளவு ஈடுபாடு வந்துவிட்டது. தன் பிள்ளையும் இருந்ததே! விசு சார் கசப்பை விழுங்க முடியாமல் தொண்டையை அடைத்ததைக் கனைத்துச் சரி செய்து கொண்டார்.
படிப்பு வரவில்லை. என் பிள்ளை, என் பிள்ளை என்று அடித்துக் கொண்டு சங்கீதத்தை உரைத்துப் புகட்ட முயன்றார் விசு சார். கொஞ்சம் கடுமையாகத்தான் நடந்து கொண்டார். சரசு ‘வேண்டாம் விட்டுடுங்கோ’ என்று கதறியும் கேட்கவில்லை! சாதத்தை நைவேத்யம் செய்து விட்டு பருப்பு நெய்யை ஊற்றிப் பிசைந்து, ரேழியில் போய் பெண்ணுக்கு ஊட்ட ஆரம்பித்தார். ‘அப்பா, தாதா, காக்கா’ என்றது குழந்தை. குழந்தைதான், “ஆமாம்மா சாப்பிடு” என்று ஊட்டி விட்டார்.
பிராரப்தம் நாளா வட்டத்தில் பிள்ளைக்கு அப்பா பேரிலிருந்த வெறுப்பு. அப்பா சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் வர ஆரம்பித்துவிட்டது. அபார மூளை. ஓட்டை ரேடியோவை ரிப்பேர் செய்து விடுவான். வீட்டில் எந்த எலக்ட்ரிக் வேலையாக இருந்தாலும் தானே செய்வான். ‘படி, படி’ என்றார் விசு சார். கொஞ்சம் லேட்டாக, பயலுக்கு அதிலும் வெறுப்பு வந்துவிட்டது. சகவாசம் சரியில்லை. பீடி குடித்த நாற்றத்துடன் வீட்டிற்கு வருவான். நேரம் கிடையாது. காலம் கிடையாது. ஊர் சுற்றிக் கொண்டிருந்தவனை தட்டிக் கேட்டவுடன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டான். சரசுவைப் பிள்ளை ஏக்கமே கொண்டு போய்விட்டது.
மெக்கானிக் கடை வைத்திருக்கிறான் என்றார்கள். கிறிஸ்துவனாக மாறி, கிறிஸ்துவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்திக் கொண்டிருக்கிறான் என்றார்கள். பெண் பிறந்திருக்கிறது என்றார்கள். சரசு காலமான போது கொள்ளி போட வந்தான். அப்போது பார்த்தது.
விசு சாருக்குக் கண்கள் பனித்தன. கொள்ளி போட வேண்டிய பிள்ளை, மனைவியையும், பெண்ணையும் நிர்கதியாக விட்டு விட்டு ரயிலில் தலையைக் கொடுத்துவிட்டான். மூன்று மாதம் ஆகிறது. கடனா, மனக்கலக்கமா இன்னதென்று தெரியவில்லை. கொள்ளி போட வேண்டிய பிள்ளை.
குழந்தைக்கு வாயைத் துடைத்து விட்டார். தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாகப் பருகக் கொடுத்தார். பையன் இறந்த பிறகு அவன் மனைவியின் தூரத்து உறவுக்காரர் ஆரோக்யசாமி என்று ஒருவர் வந்திருந்தார். அவரிடம் அப்படிக் கோபமாகப் பேசியிருக்க வேண்டாம் என்று நினைத்துக் கொண்டார் விசு சார். “உங்கள் ஜாதியில் வேறு நல்ல பையனாகக் கிடைக்கவில்லையா உங்களுக்கு? என்றே கேட்டுவிட்டார். அந்த மனிதர் பாவம் அதற்கப்புறம் நடையாய் நடந்துவிட்டார். விசு சாருக்கு அந்தப் பெண்ணையும், பேரக் குழந்தையையும் தன் குல வாரிசுகளாக நினைப்பதற்கே இத்தனை நாளாகிவிட்டது.
கடைசியில் இந்தப் பிராரப்தமும் சேர்ந்து கொண்டுவிட்டது. வயதான காலத்தில் பிள்ளை மீது சாய்ந்து கொண்டிருப்பதற்கு பதிலாக,
மருமகளையும், பேரக் குழந்தையையும் காப்பாற்ற வேண்டிய நிலை. கடைசியாக விசு சார் பலவீனமான தருணத்தில் கொண்டு வந்து விடச் சொல்லிவிட்டார். அவர்கள இன்று வருகிறார்கள்.
மறுபடியும் ‘நேனெந்து வெதுகுதுரா’ பாடலே மனதில் அனிச்சையாக ஓடிக் கொண்டிருந்தது. தட்டை எடுத்து வைத்துக் கொண்டு சாதத்தை எடுத்து போட்டுக் கொண்டார். சாதத்தில் கை அளைந்து கொண்டிருந்தது. ‘எனக்குப் பிறகு சங்கீதம்?’ சிரிப்பாக வந்தது விசு சாருக்கு. ஆர்வமாக இருந்து, வெறியாக மாறி, பின் ஜீவனோபாயமாக ஆகிவிட்டது. நானே இல்லை என்று ஆகிவிட்டால் என் சங்கீதம் எங்கே இருக்கப் போகிறது? தியாகராஜர் அதே முனைப்புடன் தேடினார். ‘கனுக் கொண்டினி’ என்று கண்டடைந்தார். ஸ்வாமிகளுடைய நாதோபாசனை அப்படிப்பட்டது.
கையைக் கழுவிக் கொள்ளும் போதெல்லாம் அந்தப் பெண்ணும் பேரக் குழந்தையும் வந்துவிட்டார்கள்.
ஆரோக்யசாமி சுருக்கமாக விடை பெற்றுக் கொண்டார். அவர் முகத்தில் நிம்மதி பரவுவதை விசு சார் கவனித்தார்.
பிள்ளையின் மனைவி காலில் விழுந்து வணங்கி விட்டுக் குழந்தையையும் காலில் போட்டாள். அந்தக் குழந்தை விசு சாரின் காலைப் பற்றிக் கொண்டு எழுந்திருந்தது.
கறுப்பாக இருந்தாலும் களையான முகம், மீனாட்சி மாதிரி. ‘மீனாட்சி மேமுதம்’ ஞாபகம் வந்தது. முத்துஸ்வாமி தீட்சிதர் பாடிக் கொண்டிருக்கும் போதே சமாதி ஆகிவிட்டார்.
விசு சார் குழந்தையைத் து£க்கிக் கொண்டார். சற்று நேரம் கழித்து இறக்கிவிட்டவுடன் குழந்தை ஸ்ருதிப் பெட்டியை எடுக்கத் தாவியது விசு சாருக்குப் பரவாயில்லையே என்று தோன்றியது.
ஸ்ருதியை ‘ஆன் செய்தார். மெதுவாக ஸ...ரி...க...ம... என்று இழுத்தார். குழந்தை வெற்றிடத்தை வெறித்தது. ‘மாயாமாள கௌள’ என்றது.
என்னதிது!... என்னதிது!... ‘சங்கராபரணம்’ ஆரோகணத்தை எடுத்தார். ‘சங்கராபரணம்’ என்றது குழந்தை. விசு சாருக்கு மூச்சு நின்றது போல் ஆகிவிட்டது.
கொஞ்சம் கொஞ்சமாக திக் பிரமிப்புடன் ஒவ்வொரு ராகமாய்ச் சொல்லிக் கொண்டே வந்தார். ஸ்வர ஸ்தானத்தை ‘கப் கப்’பென்று பிடித்துக் கொண்டு குழந்தை ராகங்களை அடையாளம் சொல்லிக் கொண்டே வந்தது. பேசக்கூட வந்திருக்கிறதா சந்தேகம்.
குழந்தையை வாரி எடுத்து அப்படியே நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு மேல் வஸ்திரத்தால் பெருகி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் விசு சார்.
‘கனு கொண்டினி’ பாட வேண்டும் போலிருந்தது அவருக்கு.

லேடீஸ் ஸ்பெஷல், தீபாவளி மலர், 2006

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...