மணிக்கொடி எழுத்தாளர்களில் இரட்டையர்கள் என்றழைக்கப்படுபவர்
ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் ஆகியோர்.
“இவர்கள் ஏன் இரட்டையர்கள் என அழைக்கப்பட்டார்கள்?” என்கிற வினா இவர் இருவரின் எழுத்துக்களைப் படித்த எந்த வாசகருக்கும் எழுவது இயற்கையே.
‘தமிழ் புதுக் கவிதையின் முன்னோடி’ எனக்கருதப்படும் ந. பிச்சமூர்த்தி தத்துவ ஊறலில் தேடித் திளைத்தவர் அவர் கவிதைகளும் வாழ்க்கையும் ஆத்ம விசாரத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தன.
கு.ப. ராஜகோபாலனின் எழுத்து இந்த வகையைச் சேர்ந்தது அல்ல. ‘ஆண், பெண் உறவுச் சிக்கல்கள்’, ‘கூட்டுக் குடும்பச் சூழலின் சிக்கல்கள்’, ‘ஏழ்மை’, ‘ஜாதிக் கொடுமை’, ‘சடங்குகளின் எந்திரத்தன்மை’ இவற்றைப் பற்றி குபரா நிறைய எழுதியிருந்தாலும் அவருடைய எழுத்தின் அடி நாதமாக என்றும் ஒலித்துக் கொண்டிருந்தது ஆண், பெண் உறவுச் சிக்கல்கள்தாம். மணிக்கொடி எழுத்தாளர்களில் ந. பிச்சமூர்த்தியைத் தத்துவத்துக்கும், புதுமைப்பித்தனை முற்போக்குக்கும் உதாரணமாக எடுத்துக் கொண்டால், குபராவின் எழுத்துக்களை ‘ரொமான்டிக்’ வகையில்தான் சேர்க்க வேண்டும்.
நாற்பத்து இரண்டு ஆண்டுகளே வாழ்ந்த குபரா (1902-1944) கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவர். ஆங்கில இலக்கியத்திலும் சமஸ்க்ருத இலக்கியத்திலும் நல்ல தேர்ச்சி உள்ளவர் இந்தியக் கலாசாரத் தோய்வு உள்ளவர். அரசுப் பணியில் அமர்ந்த பின், கண்பார்வை மங்கியதால் பணியில் தொடர முடியாத நிலைமை. இந்தக் காலங்களில் அவர் கண் பார்வை மங்கியிருந்த சமயங்களில் அவர் சொல்லச் சொல்ல அவரின் சகோதரி கு.ப.சேது அம்மாள் எழுதி அந்தப் படைப்புகள் பத்திரிக்கைகளில் வெளிவந்தன.
இவர் எழுதிய ‘நூருன்னிஸா’ என்கிற கதை, முதல் படைப்பு என்று கூறப்படுகிறது. இதில் சிறுவயதில் ஒரு பிராமணப் பையன், முஸ்லிம் பையன் ஒருவனுடன் நெருங்கிப் பழகுகிறான். கள்ளங்கபடமில்லாத அந்த வயதில் அந்தச் சிறுவனுக்கும், அவன் நண்பனின் சகோதரி நூருன்னிஸாவிற்கும் ஈர்ப்பு முளைவிடுகிறது. இதன் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு அந்நண்பன் கடிதம் எழுதி சந்திக்கும் ஆவலை வெளிப்படுத்துகிறான். கதாநாயகன் முஸ்லீம் வீட்டிற்குச் செல்கிறான். நூருன்னிஸாவின் நினைவுடனேயே அவ்வளவு வருடங்கள் வாழ்கிறான். அவளும் அதேபோல் நினைவுடன் வாழ்கிறாள். மிச்ச வாழ்க்கையையும் அதே போல் வாழக் கதாநாயகனை அவள் வேண்டுவதுடன் முடிகிறது கதை. ஒழுங்கையும் மீறக் கூடாதென்ற ஜாக்கிரதை உணர்ச்சியும் வெளிப்படுகிறது.
நாயகனுக்கும், நண்பனின் மனைவிக்கும் நடக்கும் உள்ளீடான ஈர்ப்புச் சிக்கல்கள், அல்லது மனைவியின் தோழிக்கும், கணவனுக்கும் இடையில் நடக்கும் பரஸ்பர பரிமாற்றங்கள், விதவைகளின் விரகத் துன்பம், கூட்டுக் குடும்பத்தில் மாமியார், மாமனார் கொடுமையில் புருஷனுடன் சேர்ந்து வசிக்காமல் தவிக்கும் பெண்கள் இவர்கள்தாம் கு.ப. ராஜகோபாலனின் கதைகளில் கொட்டிக்கிடக்கிறார்கள்.
‘புதிர்’ என்கிற கதையில் சம வயதுள்ள சகோதரிக்கும், மனைவிக்கும் புருஷன் யார் சுவாதீனம் என்கிற போட்டியின் சிக்கல் வெளிப்படுகிறது. ‘விடியுமா’ என்கிற கதையில் ‘கணவன் கவலைக்கிடம்’ என்கிற தந்தி வந்து, மனைவியும், சகோதரனும் ரயிலில் பயணிக்கிறார்கள். மிகவும் கலக்கமான மனநிலையில் பயணம் செய்து மருத்துவமனையை அடைந்தவுடன் கணவன் இறந்த செய்தியை உறுதிப்படுத்தக் கொள்கிறார்கள். கலக்கம் போய் நிம்மதி பரவும் விநோத மனப்பாங்கைக் காட்டுகிறது இக்கதை.
‘வாழ்க்கைக் காட்சியில்’ கதாநாயகன் தன்னால் குத்தகை நிலத்திலிருந்து விரட்டப்பட்ட குடியானவக் குடும்பத்தை பட்டணத்தில் காணுகிறார். அவர்கள் சோற்றுக்குப்படும் பாட்டைக் கண்டு மனம் கலங்கி மீண்டும் குத்தகையை அவர்களிடமே ஒப்படைக்க உறுதி அளிக்க குடியானவக் குடும்பம் அவரை வாழ்த்துவதுடன் முடிகிறது கதை.
‘நினைவு முகம் மறக்கலாமோ?’ கதையில் பால்ய காலத்துக் காதலியை நாயகன், காசநோயாளி, மருத்துவமனையில் பார்க்க நேரிடுகிறது. அவள் புருஷனும் காச நோயாளி. நாயகன் சுதந்திரப் போராட்டத்தில் குதித்து சிறை சென்று காசநோயுடன் வருகிறான். நாயகி கணவனை தேறாத கேஸ் என்று டிஸ்சார்ஜ் செய்ய, நாயகி கணவனுடன் சென்று விடுகிறாள். நாயகனின் நினைவுகளுடன் முடிகிறது கதை.
தவறான உறவில் பிறந்த குழந்தையை பாட்டி ரகசியமாய்க் கொன்றுவிட யத்தனிக்க நாயகி எடுத்துக் காப்பாற்றுகிறாள் ‘தாய்’ என்கிற கதையில். ‘தாயாரின் திருப்தி'யில் நாயகன் தாய்க்கு சிரார்த்தம் செய்யும் போது படைக்கப்பட்ட பிண்டத்தை
பிச்சைக்காரிக்குப் போட்டு விடுகிறார். வந்திருந்த பிராமணர்கள் கோவித்துக் கொண்டு போக, நாயகன் ‘பிண்டம் சேர வேண்டிய இடத்தை சேர்ந்து விட்டது’ என்று திருப்தி அடைகிறார்.
‘தீபாவளியன்று கணவன் வருவாரா?’ என்று ஏங்கியிருந்து, கணவன் தாயை மீறி வந்த களிப்பைப் கொள்ளும் மனைவி. கணவன், மனைவி அந்தரங்கத்தில் இருக்கும் சமயம், வந்த நண்பனைக் கதவைத் தட்டச் சொல்லி அதில் குரூர திருப்தியும், கழிவிரக்கமும் கொள்ளும் கணவனைப் பிரிந்து வாழும் பெண். தன் வயதில் பாதியிருக்கும் பையனுடன் உறவு கொள்ள இச்சை கொள்ளும் பெண். தன் வீட்டிற்கு வந்து போகும் மனிதனைக் கணவனாக வரித்து ஏமாறும் தேவதாசிப் பெண் இது போன்ற கதாபாத்திரங்களை குபராவின் சிறுகதைகளில் கொட்டிக் கிடக்கின்றன.
குபராவின் கருத்துலகம் எப்படிப்பட்டது என்பதை நாம் அவதானிக்கும் முன் அவர் எழுதிய காலம் எப்படிப்பட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட உச்சம் மகாத்மா காந்திக்குப் பின் தேசமே அணி வகுத்த நின்ற சமயம், சுதந்திரம் மட்டுமல்லாமல் அதனூடே பெண் விடுதலை, ஜாதி விடுதலை, பொருளாதார விடுதலை என்கிற பல்வேறு சமூக விடுதலைக்கான விழைவுகளும் முயற்சிகளும் ஆரம்பித்திருந்த நிலை. அமெரிக்காவில் சென்று உரையாற்றிய ஸ்வாமி விவேகானந்தர் இந்து மதத்தை இடிபாடுகளிலிருந்து மீட்டெடுத்த காலம். மத, சமூக, சமய அரசியல் சீர்திருத்தவாதிகள் பாரம்பரியத்திற்குப் புதுவடிவம் கொடுத்துக் கொண்டிருந்தது புதிது.
சுதந்திர வேட்கையின் தன்னலமற்ற நோக்கு, காந்திஜி போதித்த எளிமை மற்றும் சேவை மனப்பான்மை, சமூகத்தை மறு சீரமைக்க வேண்டுமென்கிற தணியாத ஆர்வம் இவை அன்றைய சராசரி இளைஞனிடம் விரவியிருந்தது போல் மணிக்கொடி எழுத்தாளர்களிடமும் விரவி இருந்ததில் வியப்பில்லை. இத்துடன் சமஸ்க்ருத இலக்கியத் தோய்வு, ஷேக்ஸ்பியர் முதலான ஆங்கில இலக்கியங்களில் பரிச்சயம், இளைய வயது இவை சேர்ந்த ரஸவாதம்தான் குபரா.
குபராவின் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்கள் எங்கும் வியாபித்திருப்பவர்கள் ‘யாதுமாகி நின்றாய் காளி’ என்று கூறுகிறாரே பாரதி, அது போல் சகலங்களிலும் வியாபித்திருப்பவர்கள். சில சமயங்களில் அவர்கள் தீனர்கள், சில சமயங்களில் குரூர திருப்தி அடையும் சாடிஸ்ட்கள். சில சமயங்களில் ஆன்மீக வழிகாட்டிகள். சில சமயங்களில் தெய்வ அவதாரம் பூணுபவர்கள். ஆனால் அவர்கள் பெரும்பாலும் யுவதிகள். பல சமயங்களில் பதினைந்து வயதிற்கும் கீழ்ப்பட்டவர்கள். வனப்பும், வசீகரமும் கொண்டவர்கள். சம வயது ஆண்களிடம் நட்பை இச்சையித்தவர்கள். சுருக்கமாகச் சொன்னால் குபராவின் எழுத்துலகம் பெண்களின் உலகம்.
குபராவின் ஆண் எப்படிப்பட்டவன்? அவன் விஸ்வரூபம் எடுக்கும் பெண்ணின் அந்தரங்க உலகின் ஒரு சிறு கதாபாத்திரம்தான். பெரும்பாலும் கீழ்ப்படிதல் உள்ள உலகோடு ஒத்து வாழ்கிற மனப்பிணக்குகளை வலிந்து தீர்த்துக் கொள்ள முனையாத ஒரு சராசரி ஆண். மனைவிக்கும், அன்னைக்கும் பிணக்கு என்றால் அன்னைக்கு ஆதரவும், மனைவிக்கு இதயத்தில் இடமும் கொடுக்கிற கையாலாகாத சராசரி ஆண். வீட்டிலிருக்கும் பெரியவர்கள், இளையவர்கள் உல்லாசமாய் வாழத் தடையாயிருப்பதைக் கசப்போடு விழுங்கும் மனிதன். இது போன்ற மன நிலைக்கான உளவியல் சிக்கல்களை டி.எச். லாரன்ஸ் போன்ற ஆங்கில நாவலாசிரியர்கள் மிகவும் நுணுக்கமாக அலசியிருக்கிறார்கள் என்கிற பின்னணியில் நாம் பார்க்கும் போது குபராவின் எழுத்துலகைப் பற்றி விந்தை கொள்ள ஒன்றுமில்லைதான்.
என்றாலும் எழுத்து என்று பார்க்கும் போது, இயல்பான உரையாடல்கள், வளவளவென்று நீட்டிக் கொண்டு போகாத சொற்சுருக்கம், எதிர்பாராத தருணத்தில் ‘திடுக்’கென்று சிறுகதையை முடித்துவிடும் சாமர்த்தியம், பெண், ஆண் அந்தரங்க உறவுச் சிக்கல்களை எழுதும் போதும் விரஸ எல்லைக்குள் போகாது விவரிக்கும் கண்ணியம், தான் முன் நின்று முனைந்து ஒரு கருத்தைப் பதிவு செய்யாது அதைக் கதையினூடும் கதாபாத்திரங்களினூடும் நிறுவும் சாமர்த்தியம். இது போன்ற எண்ணறிந்த துல்லியமான உத்திகள் குபராவின் கதைகளில் காணக்கிடைக்கிறது.
குபரா மேற்கூறியபடி வனைந்து ஒரு கருத்தைப் பதிவு செய்யாதபோதும், படிக்கும் சராசரி வாசகனுக்கு அவர் முறை தவறிய உறவுகளை நியாயப்படுத்துகிறாரோ என்கிற ஐயம் எழுவது இயற்கையே. ஒழுக்கமுள்ள, சீலமான, கண்ணியமான குபரா பெண்கள் படும்பாட்டை விவரிக்கும் முயற்சியில் தன்னை அறியாமலேயே இது போன்ற ஒரு குற்றச்சாட்டுக்குத் தன்னை பலி கொடுத்துக் கொண்டிருந்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்தக் கட்டுரைகள் ஆரம்பத்தில மணிக்கொடி இரட்டையர்கள் என்று
ந. பிச்சமூர்த்தியையும் குபராவையும் குறிப்பிடுகிறார்கள் என்று கூறியிருந்தாலும் உண்மை இரட்டையர்கள் குபராவும் அவரின் வழித்தோன்றலான தி. ஜானகிராமனும்தான் என்று குறிப்பிடத் தோன்றுகிறது.
தி. ஜானகிராமன் ஆரம்பத்தில் குபராவால் அடையாளம் காணப்பட்டு பேணி ஊக்குவிக்கப்பட்டவர். ‘அம்மா வந்தாள்’, ‘செம்பருத்தி’, ‘மலர் மஞ்சம்’, ‘மரப்பசு’, ‘அன்பே ஆரமுதே’, ‘மோகமுள்’ என்று எழுதிக் குவித்தவர். பல சமயங்களில் 42 வயதே வாழ்ந்த குபரா இன்னும் இருபது முபது வருடங்கள் வாழ்ந்திருந்தால் இதே போல் அப்போதும் எழுதிக் கொண்டிருந்திருப்பாரோ என்று தோன்றுவதுமுண்டு. அப்படித்தான் எழுதிக் கொண்டிருப்பார் என்று நாம் நம்பும் வகையில்தான் தி. ஜானகிராமன் சாகும் வரையிலும் எழுதிக் கொண்டிருந்தார்.
அதே கும்பகோணம், அதே காவிரி ஆற்றங்கரை, அதே கிராமங்கள், அதே அக்கிரகார சநாதனிகள், அதே பெண்மையும், மென்மையும், அழகும் வனைத்துக் குழையப் பெற்ற பெண்கள். அதே சங்கீதம்! குபரா எட்டடி பாய்ந்தாரென்றால் தி. ஜானகிராமன் பதினாறடி பாய்ந்தார். குபராவின் காலங்களில் அவருக்கு இருந்த தர்ம நியாய மதிப்பீடுகள், குழப்பங்கள் திஜாவிற்குச் சுத்தமாக இல்லை.
கும்பகோணமும் துக்காம்பாளைத் தெருவும், சுண்ணாம்பு அடித்த வெண் சுவர் ஓட்டு வீடுகளும், அழகான பெண்களும், சங்கீதமும் திஜாவை கடைசி வரையில் மோக முள்ளாய்க் குத்திக் கொண்டிருக்க அவர் ஒரு நிச்சயமான நிலைப்பாட்டை எடுத்தார். ஆசாரம் பேசுபவர்கள், சநாதனிகள், விதவைப் பெண்களை மொட்டை அடித்து முக்காடு போடுகிறவர்கள், அடுத்தவர் நிலத்தை அபகரிக்கிறவர்கள், கொதிக்கும் பாயசத்தில் எலி விழுந்துவிட்டது என்று கூறிப் பானையைக் கவிழ்க்கிறவர்கள், பெண்களிடம் முறை தவறி நடக்கிறவர்கள். பாமரர்கள், நல்லவர்கள், நாணயமாக நடந்து கொள்கிறவர்கள், அடுத்தவருக்கு உதவுதற்காகவே அவதாரம் செய்தவர்கள் போல் நடந்து கொள்கிறவர்கள்.
பாமரர்கள், ஏழைகள்பால் திஜா கொண்டிருந்த பரிவும் பெண் விடுதலையின்பால் கொண்டிருந்த அக்கறையும் அவர் காலம் காலமாய்க் கட்டிக் காத்து வந்த மதிப்பீடுகளை துச்சமாய் எண்ணித் தூக்கி எறியத் தூண்டின. வேதம் படித்த மரபுகளைக் கட்டிக் காக்கிற சநாதனியா, சாதாரண வாழ்க்கை வாழுகிற சராசரி மனிதனா என்றால் திஜாவின் ஓட்டு சராசரி மனிதனுக்குத்தான். அவர் குடும்பத்தில் நிகழ்ந்த சில துக்ககரமான நிகழ்வுகளும் இதற்குக் காரணம்.
குபராவை எந்த ‘மோகமுள்’ குத்திக் கொண்டிருந்ததோ அதே ‘மோகமுள்’ தான் திஜாவையும் குத்தி எழுதத் து£ண்டியது. என்றாலும் குபராவின் சமூக மதிப்பீடுகளும், தர்ம நியாய உணர்வுகளும் அவரை எந்த வித புரட்சிகர முடிவுக்கும் தூண்ட முடியாத குழப்ப நிலையில் கடைசிவரை வைத்திருந்தது. அவர் தன் சிறுகதைகளில் எழுதியது சமூக நிலை குறித்தும், பெண் அடிமைத்தனம் குறித்தும் அவரின் விமர்சனம் மட்டும்தான். அவற்றை மாற்ற அவர் எந்த விதமான தீர்வையும் முன் வைக்காததற்குக் காரணம், எங்காவது தர்மத்துக்குப் புறம்போகச் சொல்லி விடப்போகிறோமோ என்கிற தீர்மானமில்லாத அவரின் மனநிலைதான்.
திஜாவும் எந்தவித தீர்வையும் முன்னிறுத்தவில்லை என்றாலும் ‘சகல மரபுகளையும் து£க்கி எறி’ என்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். இதை குபரா செய்யாததை திஜா செய்தார் என்பதை விட குபரா கட்டிய அஸ்திவாரத்தின் மேல் அவர் செங்கற்களை அடுக்கிக் கட்டிடத்தை எழுப்பினார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படிப் பார்க்கும் போது மணிக்கொடி இரட்டையர்கள் என்று நாம்
கு.ப. ராஜகோபாலனையும், தி. ஜானகிராமனையும்தான் கருத வேண்டியிருக்கிறது.
லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர், 2010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக