பூரம் என்னும்
புனைபெயரில் எழுதிவரும் திரு. சத்தியமூர்த்தி நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள்
எழுதியவர். சிறுவர்களுக்காக எழுத ஆரம்பித்து பெரியவர்களுக்குமான தரமான சிறுகதைகள்
எழுதியவர். சொற்சிக்கனம், நுட்பமான கருத்துரு, ஆன்மீகத் தேடல் மற்றும்
மனச்சிக்கல்கள் இவர் கதைகளில் காணக் கிடைக்கின்றன.
இவரின் சாதனைகள்,
நாடகம், சிறுவர் சிறுகதை, சிறுவர் தொடர்கதை, கலைமகள் நடத்திய வண்ணக்கதை இவற்றான
போட்டிகளில் முதல் பரிசுகளை உள்ளடக்கியவை. 1990ம் ஆண்டு அகில இந்திய வானொலி நாடகப்
போட்டியில் விருது பாரத ஸ்டேட் வங்கி விருது போன்றவையும் உண்டு.
சென்னைத் துறைமுக
மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்தியமூர்த்தி கண்பார்வை இழந்தவர். இன்றும்
எழுபதாவது வயதிலும் 15 மாணவர்களுக்கு வேதம் கற்பிக்கிறார் - ஆன்மீகம் பற்றி சப்த
கிரியில் கட்டுரைகள், சோதிட நூல்கள், இந்திய இசைக் கருவிகள் என்று பரந்த தளத்தில்
இயங்கும் இவரது படைப்புத்திறன் உலகத்தின் வெளிச்சத்துக்கு அதிகம் வரவில்லை. இவரைச்
சந்தித்தோம்.
உங்கள் சிறுகதைகள்
கொஞ்சம் கு.ப.ரா., தி.ஜா. கொஞ்சம் லாசரா, காண்டேகர் கலவையாகத் தோன்றுகிறது. இந்தத்
திறமையின் பின் னணி என்ன?
எனக்கு தமிழில் அளவு
கடந்த ஈடுபாடு உண்டு. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை 4 வருடங்கள் கற்றுக் கொண்டேன்.
மாணவப் பருவத்திலிருந்தே ‘டிங்டாங்’ ‘கண்ணன்’ போன்ற பத்திரிகைகளில் எழுத
ஆரம்பித்தேன். படம் வரைய ஆரம்பித்து எழுத்து வரை வளர்ந்தேன். கோயில்கள்,
சரித்திரம் இவற்றில் இயற்கையிலேயே ஈடுபாடு. பி.ஏ., பட்டப்படிப்பில் வடமொழியில்
முதல் மாணவனாகத் தேறினேன். பாணபட்டரின் காதம்பரி, காளிதாஸனின் நாடகங்கள்
இவற்றிலும் நல்ல பரிச்சயம். ஆங்கிலத்திலும் பயிற்சி இருந்தது. இந்த மொழிகளின்
வளமான இலக்கியங்களை ஒப்பீடு செய்யும் வாய்ப்பு இருந்ததால் அதை என்னால்
சிறுகதைகளில் பிரதிபலிக்க முடிந்தது.
கவர்ந்த எழுத்தாளர்?
யாருடைய பாணியைப் பின்பற்றுகிறீர்கள்?
கல்கி, ஆர்.வி,
புதுமைப்பித்தன், தி.ஜா. எல்லோரும் பிடிக்கும். எல்லார் மாதிரியும்
எழுதியிருக்கிறேன். ஏன்? சர்ரியலிஸக் கதைகள் கூட எழுதியிருக்கிறேன்.
கவர்ந்த பத்திரிகை
ஆசிரியர்?
கி.வா.ஜ.தான். தமிழ்
மொழியின் பொற்கலசம் அவர். அவரை நான் நேரில் சந்தித்ததில்லை. வண்ணச் சிறுகதையைப்
போட்டியில் நான் எழுதிய ‘கருவளை’ என்கிற சிறுகதையை அவர் தேர்ந்தெடுத்தார். பிரபல
எழுத்தாளர் பலர் கலந்து கொண்ட போட்டியில் அவர் என் சிறுகதையைத் தேர்ந்தெடுத்தன்
காரணம் என் கதையின் தரத்தை அங்கீகரித்த அவருடைய சார்பிலா நோக்குத் தான். அடுத்ததாக
ஆர்.வி. ஆனால் ஆர்.வி எழுத்தாளராக என்னை இன்னம் அதிகம் கவர்கிறார். அட்டகாசமான
எழுத்து நடை அவருடையது.
உங்கள் சிறுகதைகளிலேயே
மிகச் சிறந்த கதை ‘நலம் தரும் சொல்’ என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் - அந்தக்
கதையில் வைணவ சம்பிரதாயத்தின் ‘இல்லறம் இன்றேல் துறவறம் இல்லை’ என்ற கருத்தை
நுட்பமாக வரைந்திருக்கிறீர்கள். இதைப் பற்றி?
உடையவருடன்
யக்ஞமூர்த்தி என்கிற அத்வைதி வாதுக்கு வந்தார். அவருடைய மாயாவாதம் முடியாமல்
விவாதம் நீண்டு கொண்டே போனது. 18ம் நாள் உடையவர் ஆளவந்தார் இயற்றிய ‘மாயாவாத
நிரசனம்’ என்கிற கிரந்தத்தைக் கண்ணுற்று அதில் இருக்கும் மறுக்க முடியாத வாதங்களை
முன் வைத்ததில் யக்ஞமூர்த்தி தோற்கிறார். அவர் வைணவத்தைத் தழுவி அருளாளப் பெருமான்
எம்பெருமானார் என்று பெயர் பெற்றுத் தொண்டு செய்தார். அவர் இயற்றிய கிரந்தம் ‘யதி
தர்ம சமுச்சயம்’ என்பது. அதன் கருத்தை வைத்துத் தான் நலம்தரும் சொல் கதையை
எழுதினேன். இக்கதை எழுதி 18 வருடங்கள் கழித்து ஒரு முதிய ஆங்கிலப் பேராசிரியரைச்
சந்திக்க நேர்ந்தது. அவர் இச்சிறுகதையை நினைவில் வைத்துக்கொண்டு பாராட்டியதை
என்னால் மறக்க முடியாது.
தலவிருட்சம் கதையில்
கசல ஜாதிகளுக்கும் சம நோக்கு என்கிற முற்போக்கான கருத்தை எழுதியிருக்கிறீர்களே?
சகல ஜாதிகளுக்கும் சம
நோக்கு என் கருத்தில்லை ‘எம் பெருமானைச் சரணடைந்தவர்கள் எல்லோருமே வைணவர்கள்,
அவர்களுக்குள் ஏற்றத் தாழ்வு கிடையாது’ என்று அனைவரையும் வைணவர்களாக உயர்த்திய
புரட்சிக்காரரான உடையவரிடம் கடன் வாங்கியதுதான் அக்கருத்து. பிராமணர் அல்லாத
திருக்கச்சி நம்பிகளை குருநாதராக ஏற்றுக் கொண்டது. அவருக்குத் தம் மனைவியிடம்
நேர்ந்த அவமானத்தால் துறவறம் பூண்டது. சகலருக்கும் பூநூல் அணிவித்து ஏற்றத்
தாழ்வை நீக்கப் போராடியது என்று வாழும் காலத்திலேயே புரட்சி செய்தவர் உடையவர்.
தங்கள் கதைகளில் இசைக்
குறிப்பு பற்றியும் கருத்துக்கள் உள்ளன. ‘பிரியவாதினி’ கதையில் ‘குடுமியான்மலை’
குடவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டு பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன.
முறைப்படி கர்நாடக இசை பயின்றீர்களா?
முறைப்படிக் கற்றுக்
கொள்ளவில்லை. எனினும் இசை நுட்பங்களை ஆழ்ந்து பயின்றிருக்கிறேன். இதனால்தான்
இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகளை என்னால் தொகுக்க முடிந்தது. தவிரவும் பாரதநாட்டு
இசை என்று 400 பக்கத்துக்கு நூல் ஒன்றை எழுதி வைத்திருக்கிறேன். அதற்கான தரமான
வெளியீட்டாளருக்காகக் காத்திருக்கிறது அது.
குடுமியான் மலையில்
காணப்படும் கல்வெட்டுக் குறிப்புகள் பாலி மொழியில் இருக்கிறது. 36 வரிகளுடனும் 66
எழுத்துகளுடனும் உள்ள அது மகேந்திரவர்மனால் படைக்கப் பெற்றது என்று
நம்பப்படுகிறது. அதற்கு மூல நூல் ஆதர்சம் மதங்கர் வடமொழியில் எழுதிய ‘ப்ருஹத்தேசி’.
நான் புதுக்கோட்டைக்காரன் என்பதால் அங்குள்ள கல்வெட்டுகளை அடிக்கடிக் கண்ணுறும்
வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்தும் மகேந்திரன் உபயோகித்த பரிவாதினி என்கிற நரம்பு யாழை வைத்தும் அந்தக் கதையைப் படைத்தேன்.
கர்நாடக இசை
தமிழ்நாட்டில் தோன்றியும் கூட பழமையான இசை மரபு நூல் ஒன்றும் நமக்குக்
கிடைக்கவில்லையே, அது ஏன்?
சிலப்பதிகாரத்தின்
வட்டப் பாலையில் இசைக் குறிப்புகள் உள்ளன. பரிபாடலில் இசைக் குறிப்புகள்
இருக்கின்றன. 7ம் நூற்றாண்டில் ‘கல்லாடம்’ என்கிற நாடக நூல் எழுதப்பட்டது. இதிலும்
இசைக் குறிப்பு உண்டு. பரத சேனாபத்யம் என்கிற சங்ககால நூலிலும் இசைக் குறிப்புகள்
உண்டு. 9ம் நூற்றாண்டில் மகாபாரத சூடாமணி என்கிற நிகண்டில் இசைக்குறிப்புகள்
உள்ளன. அந்த நாட்களில் யாருமே தமிழ் இசை என்று கர்நாடக சங்கீதத்தைப்
பாகுபடுத்தவில்லை. உதாரணமாக 11-12ம் நாற்றாண்டில் வெளிவந்த சங்கீத ரத்னாகரம் என்ற
வடமொழி நூலில் வடமொழி ராக சொற்றொடர்களுக்கிணையான தமிழ் நேர்வார்த்தைகள் (பண்
மூர்ச்சனை போன்றவை) குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தனைக்கும் சாரங்க தேவர் காஷ்மீரத்தைச்
சேர்ந்தவர் என்பது வியப்பூட்டும் விஷயம்.
இதே போல் ராம
அமாத்தியர் என்னும் இசை வல்லுநர் - ஷாஜஹான் அவையில் இருந்தவர். ஸ்வர ராக
மேளகர்த்தா நூலைப் படைத்தவர். மேளகர்த்தா ராகங்களை விளக்கும் முதல் நூல் இது. இவர்
ஔரங்கசீப் மன்னரான பிறகு விரட்டியடிக்கப்பட்டார். இதுபோன்ற சரித்திர உண்மைகளை நாம்
புரிந்து கொண்டாலே இசையில் எந்தப் பாகுபாடும் கிடையாது என்பதை உணரமுடியும்.
வேதம் கற்றுக்
கொடுக்கிறீர்களே, வேதத்தை முறையாகக் கற்றுக் கொண்டீர்களா?
என் 30ம் வயதில்
ஆரம்பித்து 4 வருடங்கள் பயின்றேன். கற்பித்தவர் என்மீது பரிவு காட்டிக் கற்பித்தார்.
நான் அதனை 15 பேருக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறேன். என் குருநாதருக்கு நான்
செய்யக்வடிய கைம்மாறு அதுதான்.
4 வருடங்கள் நாலாயிர
திவ்யப் பிரபந்தத்தைக் கற்றுக் கொண்டேன். பிரபந்தம் வேதங்களின் சாரமே என்பதை
இரண்டிலும் எனக்குப் பயிற்சி இருப்பதால் உணர முடிகிறது.
தங்கள் பெயரில் ‘பூரம்
சிறுகதை மன்றம்’ செயல்பட்டு வருகிறது. அது பற்றி?
சிறுகதைகளின் மேல்
எனக்குத் தனிக் காதல். தற்போது பத்திரிகைகளில் சிறுகதைகள் அரிதாகவே
காணப்படுகின்றன. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் விரும்பத்தகாத மாற்றங்கள் தொலைக்
காட்சியின் தாக்கத்தால் படிக்கிற பழக்கம் குறைந்துவிட்டது. ஒரு தலைமுறையே சிறுகதை
படித்து அனுபவிக்கும் இன்பம் பெறாத நிலை. இதை நம்மால் முடிந்த அளவு நிவர்த்தி
செய்ய முடியுமா என்ற முயற்சியின் விளைவுதான் இந்த மன்றம். மாதம் ஒருமுறை கூடி
கதைகளைப் படித்து விவாதம் செய்யும் இந்த அமைப்பு பல கூட்டங்களை நடத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஏதாவது
தெரிவிக்க விரும்புகிறீர்களா?
பென்ஷன் வருகிறது.
வேதம் கற்றுக் கொடுக்கிறேன். இப்போதும் எழுதுவதற்கான உற்சாகம் இருக்கிறது. பார்வை
போனாலும் வாழ்க்கை ரம்மியமாகவே உள்ளது. காத்திருக்கிறேன் வேறென்ன சொல்வது?
அமுதசுரபி, நவம்பர்
2006
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக