வெள்ளி, 18 செப்டம்பர், 2015

அவதார புருஷர்கள்

பெரிய நகரங்கள் கான்க்ரீட் காடுகளாக வளர்ந்திருக்கும் சூழலில் அங்கெல்லாம் இயற்கையாகவும் நாம் இன்னும் விட்டு வைத்திருக்கும் சிறுசிறு வனங்களை ‘நுரையீரல்கள்’ என்பார்கள். நகரங்களில் தொழிற்சாலைகளிலும் வாகனப் போக்குவரத்தாலும் மூச்சு முட்டும் போது சுவாசிக்கத் தூய்மையான காற்றை இவ்வனங்கள் அளிப்பதனாலேயே அவற்றை நாம் நுரையீரல்கள் என்றழைக்கிறோம். இது போன்ற சாதாரண மனிதர்களின் ஜீவிதங்களில் ஏகப்பட்ட ஆசாபாசங்கள், மனக்குறைகள், பணம் சேர்ப்பதால் சேரும் பாவங்களால் ஏற்படும் குற்றவுணர்வு. தீராத வியாதி, பிணக்குகள், இவையெல்லாவற்றினாலும் துன்பப்படும் மனிதகுலம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள எதிர் நோக்குவது ஆன்மீகத் தூதர்களைத்தான். மனித வாழ்வின் அவலங்களுக்கு ஆன்மீகத் தூதர்கள் அரும் மருந்தாக இருக்கிறார்கள் என்று எல்லோரும் நினைப்பதால்தான் இதற்கு ஒரு பெரிய மார்க்கட் இருக்கிறது. இதை உணர்ந்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு போலிகள் உருவாகிறார்கள். மனிதகுலம் பாரத்தை இறக்கி வைக்க சுமை தாங்கிகளாக ஆன்மீகத் தூதுவர்களை நாடக் கடைசியில் இந்தப் போலித் தூதுவர்களே சுமைகளாக மாறிப் போகிறார்கள்.
இதுபோன்ற போலிகளால் சாமியார் கூட்டமே ஏமாற்றுக் கூட்டம் என்கிற வாதம் உரத்துக் கேட்கிறது. இந்த வாதம் உரக்க உரக்க வீம்புடன் மனித குலமும் எங்காவது உண்மையான ஆன்மீக குரு கிடைப்பாரா என்று தேடி அலைவதை மட்டும் விட்டு விடுவதில்லை.
இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் உண்மையான ஆன்மீக குருவின் இலட்சணங்கள் என்ன என்று பார்ப்பதை விட சில உண்மையான ஆன்மீகத் தூதுவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை நாம் நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும்.
ஷீர்டி சாய் பாபாவின் வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளலாம். அவருடைய பிறப்பு பற்றிய உண்மைகள் உலகிற்கு முழுவதும் தெரிந்திருக்கிறதா எப்து சந்தேகமே. ஒரு வயது குழந்தையை பிராமணத் தம்பதிகள் முஸ்லீம் பக்கிரியிடம் வளர்க்கக் கொடுக்கிறார்கள். பதினைந்து வயது வரைக்கும் அவரிடம் வளர்ந்த சாய்பாபா ‘வெங்குசா’ என்கிற பிராமணரிடம் போய்ச் சேருகிறார். இதெல்லாம் அவ்வவ்போது துண்டு துண்டாக பக்தர்கள் சேர்த்து வெட்டியும், ஒட்டியும் சரி பார்த்துக் கொண்டதல்லாமல் முழு உண்மையும் உலகிற்குத் தெரிந்திருந்ததா என்பது சந்தேகமே. ‘என்னிடம் வா. உன் சகல பாவங்களையும், மனக்குறைகளையும் நீக்குகிறேன்.’ என்று சவால் விட்டு பக்தர்களை அரவணைத்தவர். 'நான் சமாதியான பின்பும் இயங்குவேன்' என்று சொன்னதற்கேற்ப இன்று சூக்ஷ்ம ரூபத்தில் அருள் பாலித்து கொண்டிருப்பவர். இவர் நடத்திய அற்புதங்களை நேரில் கண்ட பக்தர்கள் அதை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்கள்.
சாமா என்கிற அணுக்கத் தொண்டரை பாம்பு தீண்டிவிட்டது. விஷம் உடலில் பரவிக் கொண்டிருக்கிறது. சாமா சாயியைச் சரணடைகிறார். பாபா சாமாவைப் பார்த்து மிகவும் கடுமையான குரலில் ‘இங்கே வராதே’ இறங்கிப் போய்விடு’ என்றாராம். சாமா மிகவும் விரக்தி அடைந்து சாவு நிச்சயம் என்று முடிவு கட்டி விட்டாராம். சற்று நேரம் கழித்து பாபா அன்பான குரலில் சாமாவிடம் ‘சாமா வீட்டிற்குப் போய் நன்றாகச் சாப்பிடு. ஆனால் தூங்கி விடாதே’ என்று கூறினராம். விஷம் இறங்கிவிட்டது. பின்னர்தான் புரிந்திருக்கிறது சாமாவிற்கு பாபா கடிந்து கொண்டது தன்னை அல்ல, தன் விரலில் ஏறியிருந்த நஞ்சைத்தான் என்று.
ஒரு முறை பேய் மழை பிடித்துக் கொண்ட போது கிராமத்தில் எல்லோரும் வந்து பாபாவிடம் முறையிட பாபா வெட்ட வெளியில் நின்று வானத்தைப் பார்த்து ‘நிறுத்து’ என்றிருக்கிறார். மழை உடனே நின்றுவிட்டது. இது போன்ற அற்புதங்களை பாபா மற்றவர்களை பிரமிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகச் செய்யவில்லை. அளவற்ற கருணையினாலும் அன்பினாலும் மட்டுமே செய்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை கிழிந்த அங்கிக்கும் பிச்சை எடுத்து உண்ணும் உணவிற்கும் மட்டுமே சொந்தக்காரர். பல சமயங்களில் புதிர் போல் நடந்து கொண்டவர். பார்த்தவுடன் பக்தரின் வாழ்க்கைச் சரித்திரத்தை ஒப்பித்தவர். முரண்படுகிற மனதுடன் வருகிறவர்களை கோபத்துடன் விரட்டியடிப்பார். பின் சரணடையும் அவர்களை அரவணைப்பார்.
நாம் வாழும் காலத்தில் ஜீவித்திருந்து சமாதியான பூண்டி ஆற்று ஸ்வாமிகளை அதிகம் பேர் அறிந்ததில்லை. வடக்கு ஆற்காட்டு மாவட்டத்தின் போரூர் என்கிற ஊரின் அருகில் உள்ள பூண்டி என்கிற கிராமத்தில் வசித்தவர். திடீரென்று அந்த ஊருக்கு வந்தவர். அந்த ஊரில் ஆன்மீகப் பைத்தியம் ஒன்று உண்டு. அது அவ்வவ்போது பாட்டுப்பாடும்.பூண்டி மகான் அவ்வூருக்கு வருவதற்கு முன் அந்தப் பைத்தியம் ஆடிக் கொண்டே “மகான் வரார், மகான் வரார் வழி விடுங்கோ. மழை வருது, மழை வருது. குடை பிடிங்கோ’ என்று பாடிக் கொண்டிருந்ததாம். பேய் மழை;அந்தப் பேய் மழையில் அந்த ஊருக்கு வந்து சேர்ந்திருக்கிறார் மகான்.
அவர் யார் எங்கிருந்து வந்திருக்கிறார் யாருக்கும் தெரியாது. அவரும் சொன்னதில்லை. ஒருமுறை வற்புறுத்திக் கேட்கச் சொன்னாராம். ‘வானத்துல அப்படியே நாலு பேரு பறந்து வந்துக்கிட்டிருந்தோம்பா. நான் வழி புரியாம இங்கே இறங்கிட்டேன்.’ என்று இவர் கூறியது கடந்த காலமா, நிகழ் காலமா. இந்த உலகமா, வேறு உலகமா. நமக்கு புரியப் போவதில்லை. நீர் வற்றிய ஆற்றின் நடுவில் சமாதியில் இவர் உட்கார்ந்திருப்பது வழக்கம். அவ்வாறிருக்கும் போது பெரிய வெள்ளம் ஆற்றில் வந்துவிட்டது. நீர் வடிந்த போது இரண்டு, மூன்று நாட்கள் கழித்து ஊர்க்காரர்கள் இவர் நினைவு வந்து ஆற்றில் போய்ப் பார்த்திருக்கிறார்கள். இலைதழைகளால் மூடப்பட்டு அப்படியே சமாதியில் இருந்தாராம் ஸ்வாமிகள். அதிலிருந்து தான் அவரை ஆற்று ஸ்வாமிகள் என்று அழைக்க ஆரம்பித்தார்களே ஒழிய அவரின் பூர்வோத்திரத்தைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
அதன் பின்னர் இவர் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டார். இருபது வருடங்கள் அந்தத் திண்ணையிலேயே அமர்ந்து அருள் பாலித்துக் கொண்டிருந்தார். இவரைப் பார்க்கப் பலரும் வந்து போவார்கள். திண்பண்டங்கள், பழங்கள் எல்லாவற்றையும் சமர்ப்பிப்பார்கள். சிலவற்றை ஏற்றுக் கொள்வார். சிலவற்றை அப்படியே விட்டுவிடுவார். நாளாவட்டத்தில் அவை சேர்ந்துவிட்டன. ஆச்சர்யம் என்னவென்றால் பரத்தி வைத்திருக்கும் பழங்கள் எவ்வளவு நாளானாலும் கெடாதாம். திண்பண்டங்களும் ஈ மொய்க்காமல் அப்படியே இருக்குமாம். யாராவது அவற்றை எடுத்துக் கொள்ளப்போனால் ‘அதை வெச்சவன் கருமத்தை நீ வாங்கிக்கிறியா?’ என்பாராம் மகான். அதனால் அவற்றை யாரும் தொடுவதில்லை.
கிராமத்து ஆள் போல் கொச்சை மொழியில் பேசிய இவர் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதங்களைச் சர்வ சாதாரணமாகச் செய்திருக்கிறார்.
‘அணிமா மஹிமா’ போன்ற சிறுத்துப் போவது, பிரம்மாண்ட உருவம் எடுப்பது போன்றவற்றைச் செய்து காண்பித்திருக்கிறார். ‘சொரூபச் சித்து’ எனப்படும் கை வேறு கால் வேறாகச் காட்சி தரும் சித்தையும் செய்திருக்கிறார். ஒருமுறை ஒரு பெண்மணியின் நகை தொலைந்து விட்டது என்று அழ ஒருவர் வீட்டில் இரும்புக்கம்பியை வாங்கி வரச் செய்திருக்கிறார். அதை ஒருமுறை உற்று நோக்கியிருக்கிறார். அது தங்கமாகிவிட்டது. அதைப் பெண்மணி ஆனந்தத்துடன் வாங்கிக் கொள்ள, இரும்புக் கம்பியைக் கொடுத்தவர் தனக்கும் அது போல் வேண்டும் என மகானைக் கடத்த முயல, பசித்த புலியைக் கேட்டவர் முன் தோன்றச் செய்து அவரை விரட்டியடித்தாராம்.
‘எட்டாக்கனி’, என்று பால முருகனடிமையால் விவரிக்கப்பட்ட இவர் விரலில் பக்தர் ஒருவர் ஆசையாகத் தங்க மோதிரம் ஒன்றை அணிவித்திருக்கிறார். அந்த மோதிரம் சற்று சிறியது போலிருக்கிறது. விரலைப் பிடித்த பிடியில் புண் வந்து சீழ் கோத்துக் கொண்டுவிட்டது. வரும் பக்தர் யாராவது மோதிரத்தைப் பற்றிக் கேட்டால் “தங்கத்துக்கு ஆசைப்பட்டிச்சில்ல. பங்கப் படட்டும்” என்பாராம். பக்தர் ஒருவர் அதற்கு வைத்தியம் செய்ய முயல அவரையும், “அதான் அதுக்கின்னு நாலு நாளைக்கப்புறம் ஒருத்தன் வராம்பா. அவன் பார்த்துக்குவான்பா” என்றாராம். அவர் சொன்னது போலவே நாலு நாட்கள் கழித்து ஒரு கிளி வந்து அந்த விரல் புண்ணைக் கொத்திக் கொத்தி சீழை வெளியேற்ற புண்ணும் ஆறிற்றாம். அந்தக் கிளி புண் ஆறும் வரை அவர் தோள் மீதே அமர்ந்திருந்தது.
ஒருமுறை ஒரு பெண்மணி பூண்டி மகானிடம் பேச முயன்றிருக்கிறார். மகான் வாயைத் திறக்கவில்லை. மீண்டும், மீண்டும் வற்புறுத்திப் பேசமுயல, மகான் கோபமாக “போம்மா அந்தாண்டை. அங்க ஒத்தி பிரசவ வலியில துடிச்சிட்டிருக்கா. மேலேயிருந்து ஒத்தன் கீள விழுவுரான். லாரி வேற மரத்தில மோதப் போகுது. நான் யாரையின்னு பாக்குறது?” என்றாராம்.
சில மாதங்களுக்குப் பின் அந்தப் பெண்மணி இருக்கும் போதே மூன்று பேர் மகானைப் பார்க்க வந்திருக்கிறார்கள். ஒருவர் இளம் பெண், பிறந்த குழந்தையுடன் வந்திருந்தார். இரண்டாமவர் பந்தல்காரர். மூன்றாமவர் லாரி ஓட்டுனர். இளம் பெண், பிரசவம் சிக்கலாகி விட்டிருக்கிறது. வலி தாங்காமல் ‘சாமி, சாமி’ என்று மகானை நினைத்து அலறியிருக்கிறார். பந்தல்காரர் அதே நேரம் சாரத்தில் ஏற சாரம் வழுக்கிக் கீழே விழுந்து கொண்டிருந்த போது சாமியார் பெயரைச் சொல்லிக் கொண்டே விழுந்திருக்கிறார். அவ்வமயம் ஓட்டிக் கொண்டிருந்த லாரி பிரேக் பிடிக்காமல் டிரைவரும் ‘சாமி, சாமி’ என்று கத்தியிருக்கிறார். பிரசவம் சுகப்பிரசவமாக ஆயிற்று. பந்தல்காரர் அங்கே இங்கே தடுக்கி காயமில்லாமல் பிழைத்துக்கொண்டார். பிரேக் பிடிக்காமல் ஓடிய லாரி ஒரு மரத்தின் மீது மோதி பெரிய சேதமில்லாமல் நிற்க டிரைவரும் பிழைத்துக் கொண்டார்.
மூவரையும் பார்த்த மகான் சொன்னாராம். “ஊருக்குன்னு ஒரு தாசி யாருக்குன்னு ஆடுவா? நீங்கதான் புரிஞ்சுகிட்டு புத்தியோட பிழைச்சுக்கிடணும்” என்று.
மேற்கூறிய சம்பவங்களால் நாம் சித்த புருஷர்களின் குணங்களாகப் பின் வருவனவற்றை உய்த்துணர முடிகிறது.
1.சித்த  புருஷர்களின் சரீதரப் பிரக்ஞையற்று நெடுங்காலம் வையகத்தில் ஒரு முனைப்புடன் இருப்பவர்கள்.
2.பணத்தையோ, பொருளையோ லட்சியம் செய்யாதவர்கள். பூண்டி மகானைப் பார்க்க வந்த பணக்காரக் குடும்பம் பலவிதமான பட்சணங்களையும், பழங்களையும் கொண்டு வந்திருக்கிறது. அவர்களுடன் வந்த வேலைக்காரப் பெண் பெட்டிக் கடையில் மகானிடம் கொடுப்பதற்காக மிட்டாய் ஒன்றை வாங்கி வந்திருக்கிறது. குடும்பத்தினர் கொண்டு வந்திருந்த எல்லாவற்றையும் படைக்க வேலைக்காரப் பெண் கூசசப்பட்டுக் கொண்டு மிட்டாயைக் கொடுக்காமலேயே திரும்ப எத்தனித்திருக்கிறார். மகான் ‘ஏம்மா! அந்தத் தலைப்பில முடிஞ்சிருக்கிற மிட்டாயைக் கொடுத்திட்டு போம்மா’ என்று கேட்டு வாங்கி வாயில் போட்டுச் சுவைத்த பின்னரே அவர்களைத் திரும்ப அனுமதித்திருக்கிறார்.
3.வரும் நபர்களை பார்க்கம் போதே அவர்களின் பிறப்பு, வளர்ப்பு கடந்த காலம், எதிர்காலம், மனவோட்டம் இவற்றைத் துல்லியமாக அறிவது.
4.தன்னுடைய பக்தர்களின் மன அலைவரிசையைத் தனது எல்லைக்குள் வைத்துக் கொண்டு அவர்கள் துயருற்று அல்லது ஆபத்தில் அழைக்கும் போது உடனே உதவியை நிகழ்த்துவது. இது பல சமயங்களில் வேறு மனிதர் மூலமாகவும் நிகழ்த்துவதுண்டு. இதில் ஆசரியமான விஷயம் மகான்கள் ஒரே சமயத்தில் பல இடங்களில் தோன்றுவது.
5.தனக்காக இல்லாவிட்டாலும் தன் பக்தர்களின் அன்பினால் அவர்கள் செய்யும் பூஜைகள் ஆடம்பரங்கள் போன்றவற்றைச் சகித்துக் கொண்டிருபது. இது அளவு கடந்த அன்பினாலும் சகிப்புத் தன்மையாலும் நிகழ்வது. சாய்பாபா ஆரம்பத்தில் வேப்ப மரத்தடியில்தான் அமர்ந்து கொண்டிருந்தார். பின்னர் வற்புறுத்தலின் பேரில் பாழடைந்த மசூதி ஒன்றில் தங்க ஆரம்பித்தார். மகல் சாபதி என்கிற அணுக்கத் தொண்டர் அவருக்குப் பூஜைகள் செய்ய ஆரம்பித்ததைப் பொறுத்துக் கொண்டார். இது பின்னர் பின்னால் ராதாகிருஷ்ண ஆயி என்கிற பக்தையினால் மிகப் பெரிய சடங்காக ஆகிவிட்டது. பல்லக்கு வந்தது. குதிரை வந்தது. ஊர்வலங்கள் ஆரம்பித்தன. இவற்றை அன்பினால் சகிக்கப் பழகிக் கொண்டார்.
6.இயற்கை சக்திகள் மகான்களுக்குக் கட்டுப்படுவது. சேதன/அசேதனப் பொருட்களும் அப்படியே.
மேற்கூரிய அனைத்தும் மகான்களின் யோகத்தால் விளைபவை. பரகாயப் ப்ரவேசம் உள்ளிட்ட அனைத்து சித்திகளும் பதஞ்சலி யோக சூத்திரத்தில் விளக்கப்பட்டுள்ளன. இவற்றை யோகிகள் அந்தந்த நிலையைத் தான் அடைந்து விட்டதைப் புரிந்து கொள்ள உபயோகிப்பது வழக்கமே அன்றி அவற்றால் பலனடைவது அவர்கள் நோக்கமன்று. திருக்கோவிலூர் ஞானானந்தகிரி ஸ்வாமிகள் முந்நூறு வருடங்கள் ஜீவித்தார் என்கிறார்கள். இது பரகாயப் ப்ரவேசம் மூலமாகவே நிகழ்ந்திருக்க முடியும். இந்தக் கூடுவிட்டு கூடும் பாயும் சித்தியை ஸ்வாமி ராமா என்கிற துறவி ‘லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ட்ஸ்’ என்கிற புத்தகத்தில் தாம் நேரில் கண்டவாறே விவரித்திருக்கிறார்.
கட்டுரையை முடிக்கும் முன் நாம் அன்பினால் ஆண்டவரை, தான் உள்பட அனைவரையும் சமமாய் நடத்தியவரை, அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்குக்கப்பாலாய்க் கணமுற்றி நின்ற கரும்புள்ளைக் கண்டவரை, சகல யோகமும் அறிந்தவரை, அனைத்தும் அறிந்தும் ‘சும்மா’ இருந்தவரை, பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் அந்தரங்கத் தோழனாய் இருந்தவரை, கான்ஸர் வந்து அனஸ்தீஷியா கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் ‘எப்படி இருக்கு?’ என்று கேட்டபோது ‘குறுகுறுங்கறது’ என்று சொல்லி உடற்பிரக்ஞை இல்லை என்று நிரூபித்தவரை, நம் போன்ற சாதாரண மனிதர்களும் முயன்றால் உய்வடைய முடியும் என்று உத்தரவாதம் கொடுத்தவரைப் பற்றி நினைவு கூர்ந்து முடிப்பது பொருத்தமாக இருக்கும்.
இவர் சமாதியான போது பெரிய ஒளிப்பிழம்பு ஒன்று வானத்தைக் கிழித்துக் கொண்டு புறப்பட்டு திருவண்ணாமலையில் ஐக்கியமாயிற்றாம்.
இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட பாம்பு விஷத்தை இறக்கும் சித்தியை இவரும் நிகழ்த்தியிருக்கிறார். பக்தை ஒருவரின் குழந்தையைப் பாம்பு கடித்துவிட்டது. வாயில் நுரை தள்ளிவிட்டது. குழந்தையை வேறு வழியில்லாமல் ஸ்வாமிகள் முன் கொண்டு வந்து கிடத்தியிருக்கிறார்கள். குழந்தையைத் தடவிக் கொடுத்துக் கொண்டே ‘ஒண்ணும் ஆகலைம்மா’ என்றாராம். குழந்தை பிழைத்துக் கொண்டது.
சிற்றின்பத்தின் பின் போகும் மனம் உண்மையில் பேரின்பத்தைத்தான் நாடுகிறது. அதை அடைய வழிமுறைகள் அறியாததால்தான் மனம் சிற்றின்பத்தின்பால் செல்கிறது என்று சொன்ன இந்த மகான் உய்வதற்கு ‘நான் யார்?’ மற்றும் ‘எண்ணம் எங்கே உருவாகிறது?” என்கிற கேள்விகளுக்கும் விடை கண்டு பிடித்தால் போதுமானது என்றார். தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு நயனதீட்சை எனப்படும் பார்வை மூலமாகவே ஐயங்களை நீக்கி தெளிவை ஏற்படுத்தி ஆட்கொண்டவர்.
பிராணிகள், விலங்குகள், பறவைகள், உயிரினங்கள் அனைவற்றிடமும் அளவற்ற பரிவும், பற்றும் பாராட்டியவர். இவரின் கருணை அளப்பரியது என்பதை இந்த நிகழ்ச்சி விளக்கும். அவரின் அணுக்க பக்தை ஒருவர், ‘லட்சம் வில்வத் துளிர்களால் அர்ச்சனை செய்ய நேர்ந்து கொண்டிருக்கிறேன். மகான் அநுக்ரகம் செய்ய வேண்டும்.’ என்று வேண்டிக் கொள்ள மகான் மௌனமாய் இருந்திருக்கிறார். அதைச் சம்மதமாய் எடுத்துக் கொண்ட பக்தையும் அர்ச்சனையை ஆரம்பித்திருக்கிறார். கடும் கோடையில் துளிர் வில்வ இலை எங்கு தேடினும் அகப்படவில்லை. பக்தை ஸ்வாமியிடம் சென்று முறையிட மகான், “வில்வ துளிர் இலை கிடைக்கலைன்னா என்ன? உடம்பைக் கிள்ளிப் போட்டு அர்ச்சனை பண்ண வேண்டியதுதானே” என்றிருக்கிறார்.
பக்தை அதிர்ச்சியுற்று “என்ன பகவான்? அப்படிப் பண்ணா உடம்பு வலிக்காதா?” என்று கேட்க பகவானும் “அப்ப வில்வத்தைக் கிள்ளினா அதுக்கு வலிக்காதா?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார். பக்தைக்கு ஆதங்கம் முன் கூட்டியே அனுமதி பெற்றுத்தானே செய்தோம் என்று கேட்டும்விட்டார். அதற்கு பகவான் சொன்னாராம்.
“உடம்பைக் கிள்ளினா வலிக்கும்னு நான் சொல்லியா தெரிஞ்சிண்டே. அது போல இலையைக் கிள்ளினா செடிக்கு வலிக்கும்னு தெரிய வேண்டாமா?" என்று. தாவரங்களின் மீது பரிவு, பக்தைக்கு உபதேசம்!
மனங்களுடன் உரையாடுவது இவர் வழக்கம். நாராயண குரு இவரைப் பார்க்க வந்த போது பகவானை உற்று நோக்கிவிட்டு “அங்ஙனமே ஆகட்டே” என்றாராம். அவர்கள் மனங்களின் உரையாடல் என்ன என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியப் போவதில்லை. இதே போல் இன்னொரு அவதார புருஷராகிய சேஷாத்ரி ஸ்வாமிகள் நம் பகவானை உற்று நோக்கிய பின், “அவ்விடம் என்ன நினைக்கிறது? புரியவில்லையே.” என்றாராம். பகவான் அதற்கு “நினைப்பது யார்?” என்று கேட்டிருக்கிறார்.
இது போன்ற மௌன உபதேசங்களை இவர் பலருக்கும் செய்திருக்கிறார். பால் பிரண்டன் எனும் வெள்ளைக்காரர் இதை விவரமாய்ப் பதிவு செய்திருக்கிறார். எவ்வாறு பகவான் தம்மை மௌனமாய் உபதேசித்து ஆட்கொண்டார் என்று எழுதியிருக்கிறார்.
முடிக்கு முன் பகவானுக்கும் பிராணிகளுக்கும் உள்ள நெருக்கத்தைச் சொல்லி நிறைவு செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
அணில்கள் இவர் மீது ஏறி விளையாடும். இவர் இருக்கும் இடத்தில் மயில் நடமாடிக் கொண்டிருக்கும். நாய்கள் அமர்ந்திருக்கும். குரங்கு ஒன்று மடி மீது ஏறிச் செல்லம் கொஞ்சும். ஆசிரமத்தில் எல்லோரும் சாப்பிடுவதற்கு முன் இந்தப் பிராணிகளுக்கு உணவு படைக்க வேண்டமென்பது எழுதப்படாத நியதி.
குரங்குகள் இவரிடம் வந்தது ஒரு கதை.
ஒரு குரங்கு அடிப்பட்டு நொண்டிக் கொண்டிருந்திருக்கிறது. பகவான் அதன் மீது பரிவு கொண்டு வைத்தியம் பார்த்திருக்கிறார். பொதுவாக இது போன்று கூட்டத்திலிருந்து விலகும் குரங்குகளைக் குரங்குக் கூட்டம் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்துவிடும். மாறாக நொண்டிக் குரங்கு எல்லாக் குரங்குகளையும் பகவானிடம் அழைத்துக் கொண்டு வந்துவிட்டது! அதிலிருந்து குரங்குகள் ஒன்று மாற்றி ஒன்றாக பகவானிடம் வந்து செல்லும். அவைகளை அவன் இவன் என்றுதான் பகவான் அழைப்பார். திண்பண்டங்கள் கொடுப்பார் குரங்குகளும் வாங்கிக் கொண்டு சமர்த்தாகத் திரும்பிவிடும்.
ஆசிரம சமீபம் முஸ்லீம் ஒருவர் தோப்பு ஒன்றைக் குத்தகைக்கு எடுத்திருந்தார். குரங்குத் தொல்லை தாங்க முடியாமல் அவற்றை விரட்டுவதற்காகக் கவண் கல்லை எறிவது அவர் வழக்கம். அவர் நோக்கம் குரங்குகளை விரட்டுவதன்றிக் கொல்வதல்ல. அதையும் மீறி ஒரு முறை அவர் எறிந்த கவண் கல் கபாலத்தில் பட்டு ஒரு குரங்கு இறந்து விட்டது. அக்குரங்கு இறந்தவுடன் குரங்குகள் அனைத்தும் பிணத்தை பகவான் முன் போட்டு விட்டு ஓவென்று அழுதன! பரிவு தாள முடியாமல் பகவானும் கண்ணீர் பெருக்கியிருக்கிறார். பின் சொன்னாராம் “சாவது உலக நியதி. இதை இந்த கதிக்கு ஏற்படுத்தின மனிதனும் ஒரு நாள் சாகத்தான் தானே வேண்டும்.” சற்று நேரத்தில் குரங்குகள் ஆறுதல் அடைந்து பிணத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டன.
முஸ்லீம் திடீரென்று நோய் வாய்ப்பட்டு விட்டார். உறவினர்களுக்கு பகவானின் வார்த்தைகள் எட்டிவிட்டன. பயம் பிடித்துவிட்டது. பகவான் சபித்துவிட்டாரோ என்று பகவானிடம் வந்து ‘திருநீறு’ கொடுக்குமாறு வேண்டியிருக்கிறார்கள். பகவான் ‘நான் சாபம் ஒன்றும் இடவில்லை. உலக நடைமுறையைத்தான் சொன்னேன். தவிரவும் நான் யாருக்கும் விபூதியெல்லாம் கொடுப்பதில்லை’ என்று சொல்ல வந்தவர்கள் மன சமாதானம் அடையவில்லை. மீண்டும் வற்புறுத்தவே பகவான் அடுப்படிக்குச் சென்று சாம்பல் கொஞ்சம் எடுத்து வந்து கொடுத்த பின்னரே அவர்கள் நகர்ந்தார்களாம். இதன் பின்னர் முஸ்லீம் நலம் பெற்றுவிட்டார்.
ஒரு முறை பகவானிடம் ஒரு பக்தர் ‘நான் செய்த கொடும் பாவங்களின் சுமை தாங்க முடியவில்லை’ என்று கதறினார். பகவான் மிகவும் வற்புறுத்தி ‘முதலில் உன் பாவத்தை என்னிடம் தந்தேன் என்று சொல்லுமையா’ என்று சொல்ல பக்தரும் அவ்வாறே சொல்லியிருக்கிறார். பின் பகவான், 'இப்போ புண்ணியம் எல்லாத்தையும் தந்தேன்னு சொல்லும்' என்றாராம். பக்தரும் அவ்வாறே சொல்ல, "உம் பாவம், புண்ணியம் இரண்டையும் நான் வாங்கிக் கொண்டுவிட்டேன். இனிமேல் நீர் சும்மா இருமைய்யா” என்றாராம். விளையாட்டுப் போல் எவ்வளவு பெரிய சுமையை வாங்கிக் கொண்டிருக்கிறார்! எத்துணை பரிவு!
நாம் இதுவரை விவரித்து வந்தவர் பதினைந்தாம் வயதில் ஆத்ம தேடலில் திருவண்ணாமலையில் யோகத்தில் திளைத்து ஞானத்தில் சுடர்விட்ட பகவான் ஸ்ரீரமணர் ஆவார்.
இவர் போன்ற மகான்களுக்கும் நம் போன்ற சாதாரணவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. என்றாலும் மனித குலத் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் வடிகாலாக வாழ்ந்த இவர்களின் சரித்திரங்களை நாம் மீண்டும் மீண்டும் வாசித்து நெஞ்சில் இருத்துவது நாம் நம் ஆத்ம முன்னேற்றத்துக்காக எடுத்து வைக்கும் சிறு அடி என்று கொள்ள வேண்டும்.

லேடீஸ் ஸ்பெஷல், தீபாவளி மலர், 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சவலைப் பிள்ளை

 நம் தேர்தல் கவுண்ட் டவுனில் அடுத்து வருவது மக்கள் நீதி மையம்  இவர் ஏன் அரசியலுக்கு வந்தார் என்பதற்குப் பலரும் பலவிதக் காரணங்களை சொல்கிறார்க...